
அத்தியாயம் – 4
கேட்ட ரூபனுக்கும் அதிர்ச்சி தான்.. தந்தையின் சொத்து என்று இருந்ததே அந்த ஐந்து ஏக்கர் நிலமும் அவர்களின் வீடும் மட்டுமே.. தந்தை இறந்தும் சித்தப்பா தானே என்று நிலத்தை தன் பேரில் மாற்றாமல் விட்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.
சந்தேகத்துடன் “அப்பாக்கு அப்பறம் அந்த நிலம் எனக்கு தானே வரணும்.. அது எப்படிமா என் கையெழுத்து இல்லாம மாத்த முடியும்.? அப்ப அந்த நிலம் யாரு பேருல இருந்துச்சு.?” என்ற வினாவை முன்வைத்தான்.
“எல்லாம் அந்த பாவி மனுசன் பண்ணுன வேலைபா.. தம்பி மேல இருந்த பாசத்துல உன் கொள்ளுதாத்தா இறந்ததும் மொத்த நிலத்தையும் அவர் பேருக்கே எழுதி வெச்சுருக்காரு.. உன் அப்பா இருந்த வரைக்கும் கமுக்கமா இருந்தவங்க இப்ப அவங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்காங்க..” என்றார் தேம்பலுடன்.
யாரின் மேல் தவறு என்று கூற முடியும்.? அவர்களிடம் சென்று இது நியாயமா.? என்று கேட்கவா இயலும்.? அப்படி கேட்டாலும் அந்த நிலம் என்னுடையது என்று முகத்தில் அடித்தாற்போல் கூற மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்.?
வீடாவது எஞ்சியதே என்று சந்தோசப்பட்டு கொள்ள வேண்டியது தான் என்று தன்னை தேற்றி கொண்டவன் தேம்பிய அன்னையை லேசாக அணைத்து “விடுமா இனி என்ன பண்ண முடியும்.? நடக்கறது நடக்கட்டும்” என்று ஆறுதல் படுத்தினான்.
“எனக்கு மனசே ஆற மாட்டிங்குதுபா.. அந்த நிலம் இருக்குனு அத்தனை நம்பிக்கைல இருந்தேன்..” – மங்கை
“நிலம் இல்லனாலும் நம்ம வாழ்ந்த வீடு இருக்குமா.. அது வரைக்கும் சந்தோசப்படுங்க..” – ரூபன்
“இருந்தாலும்….” – மங்கை
“ப்ச் எல்லாரும் பார்க்கறாங்க அழுகறதை நிறுத்துங்கமா.. முடிஞ்சதை பேசி என்னவாக போகுது.? உங்களுக்கு நான் இருக்கேன்மா..” என்று தாயை அதட்டியவன் “யாருகிட்டயும் இதை பத்தி பேச கூடாதுமா.. இப்பவே சொல்லிட்டேன்..” என்று கட்டளையும் இட்டான்.
சமாதானமாகாத மங்கை “என்னவோ போ..” என்று மூக்கை உறிஞ்சியபடி நகர, மனதிலேறிய பாரம் இறங்குவேனா.? என்று அடம்பிடித்ததில் நொந்து போன ரூபன் மன அமைதியை தேடி கால் போன போக்கில் சென்றான்.
சாத்விக்குடன் விளையாடி கொண்டிருந்த ஆதிராவிடம் “இங்க பாருடி விடியற்காலைல மாவிளக்கு, முளைப்பாரி எல்லாம் எடுத்துட்டு போகணும்.. நேரமே எந்திரிச்சு கிளம்பி இருக்கணும் புரியுதா.? என்ன நான் சொல்றது காதுல விழுகுதா.? இல்லயா.?” என்று கஸ்தூரி கேட்க, ‘இதெல்லாம் நம்மகிட்ட ஏன் சொல்றாங்க.?’ என்று மனதினுள் நினைத்தாலும் பூம்பூம் மாடு போல் சரியென்று தலையாட்டியும் வைத்தாள்.
அலைப்பேசியில் கவனத்தை பதித்து படுத்திருந்த துருவினிக்கு சிரிப்பு மேலிட, ‘இது அப்படியே எந்திரிச்சுட்டாலும்..’ என்று முணுமுணுத்து தமக்கையை கண்டு நகைத்தாள்.
“துரு.. துரு.. அத்தை உனக்கு தான் சொல்றாங்க போல.. நீ என்ன பண்ற ரெண்டு மணிக்கே எந்திரிச்சு கிளம்ப ஆரம்பிச்சுரு.. அப்பதான் விடியறதுக்குள்ள கிளம்பியிருக்க முடியும்..” என்று தங்கையை கிண்டலடிக்க, “அது எனக்கும் தெரியும்டி” என்றாள் துருவினி சைகையில்.!!
“தெரிஞ்சா சரிதான்டி” என்று முகவாயை இடித்த ஆதிரா “சாது கண்ணா இங்க ஒரே கொசுத்தொல்லையா இருக்கு நம்ம அப்படிக்கா போய் தூங்குவோம்.. வாங்க..” என்று நகர்ந்தாள்.
மஞ்சளிலே நீராடி
குங்குமத்தால் பொட்டு இட்டு
பூவாடைக் காரியம்மா
அம்மா நீ மருளாடி வந்திடம்மா!
உடுக்கை பம்பை முரசொலிக்க
உருமி மேளம் தான் ஒலிக்க
சித்தாங்கு ஆடை கட்டி
தாயே நீ சீறி எழுந்திடம்மா! என்று ஆலயத்தில் ஒலித்த பாடல் ஊரெங்கும் சத்தம் எழுப்பி அனைவரையும் எழுப்பியது.
இதன் சத்தத்தில் ‘ச்சை’ என்ற கடுப்புடன் போர்வையை ஆதிராவின் விழிகளில் கிளம்பிய துருவினி அகப்பட, ‘அடப்பாவி’ என்று வாய்விட்டு புலம்பியவளுக்கு மொத்த தூக்கமும் சட்டென்று கலைந்தது.
“அடியேய் நேத்து நான் சும்மா தான்டி சொன்னேன்.. நீ என்ன உண்மையாவே எழுந்து கிளம்பிட்ட.?” என்று அதிர்ச்சியில் வாயை பிளக்க, அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் துருவினியோ “நான் அத்தை கூட கோவிலுக்கு போறேன்.. நீ சீக்கிரம் கிளம்பி நிவே அக்கா கூட வந்துரு” என்றாள் கட்டளையுடன்.
ம்ம்ம்ம்க்க்கும் என்று உதட்டை பிதுக்கி தன்னருகில் படுத்திருந்த மாமன் மகனை அணைத்து போர்வையை தலைவரை போர்த்திட, பட்டென்று போர்வையை விலக்கிய துருவினி “எந்திரிடி நேரமாகிருச்சு.. அத்தை திட்டுவாங்க” என்று அதட்டினாள்.
“ஏன் இல்ல ஏன்னு கேட்கறேன்.. இனியும் மனுசன் தூங்க முடியுமா என்ன.? நீங்க கத்தறதை விட அதான் கோவில்ல போட்டு விட்டுருக்க பாட்டு ரொம்ப கத்துதே..” என்று சலிப்புடன் எழுந்தமர்ந்தாள் ஆதிரா.
அதற்குள் நிவேதா குளித்து விட்டு வந்திருக்க, முன்னால் வீரச்சாமியின் அதட்டல் சத்தமும் நன்றாகவே கேட்டது.. “அக்கா சிவா மாம்ஸ் எங்க.?” என்று கேட்ட துருவினிக்கு பதிலாக “அவரு காலைல தான் வீட்டுக்கு வந்தாரு.. வந்ததும் குளிச்சிட்டு அப்பவே கிளம்பியும் போய்ட்டாரு” என்றாள் நிவேதா.
பின்பு “திரா நீ சீக்கிரம் குளிச்சிட்டு வந்துரு.. முன்னாடி அத்தையும் துருவினியும் போகட்டும்.. நம்ம நேரா கோவிலுக்கு போய்ரலாம்” என்று அவசரப்படுத்த, “பொறுமை பொறுமை அக்கா.. நான் இன்னும் பல்லே விலக்கல.. அதுக்குள்ள கோவிலுக்கு போறதை எல்லாம் முடிவு பண்ணிட்டீங்க” என்றவாறு எழுந்து சென்றாள்.
“அவ அப்படிதான் அக்கா.. நீங்க கிளம்புங்க.. அவ சீக்கிரம் கிளம்பிருவா..” என்று துருவினி கூறிய நேரம் வெளியில் கஸ்தூரியோ “நேத்து நைட்டு என்னடி சொன்னேன்.?” என்று ஆதிராவிடம் எகிறினார்.
அவளோ பதில் கூறாமல் குளியலறையை நோக்கி செல்ல, “அத்தை எல்லாம் எடுத்து வெச்சுட்டீங்களா.?” என்று கேட்டு அவரிடம் இருந்து தமக்கையை துருவினி காப்பாற்ற, “ம்ம்ம்ம் நம்ம போலாம்டா.. அவங்க வந்தா வரட்டும் இல்ல இப்படியே இருக்கட்டும்..” என்றவர் மாவிளக்கை எடுத்து கொண்டார்.
ஒருவழியாக ஆதிராவையும் கிளம்ப கூறி தூக்க கலக்கத்தில் எந்திரிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த மகனையும் அதட்டி உருட்டி கிளம்ப வைத்த நிவேதா இருவரையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு வந்தார்.
இவர்கள் வந்து நேரம் சரியாக மாவிளக்கும் முளப்பாரியும் வந்து சேர, “வாவ் என்ன ஒரு டைமிங்ல வந்துருக்கோம்.. நீங்க கிரேட் அக்கா..” என்று நிவேதாவிற்கு புகழாரம் சூட்டுவதை போல் கிண்டல் செய்தாள் ஆதிரா.
‘என்ன நம்ம ஆளை காணோம்.?’ என்று ரூபனை தேடியவளுக்கு அவன் அகப்படவில்லை. ஏனென்றால் இப்போது தான் அவன் கிளம்பவே வீட்டிற்கு சென்றிருந்தான். நேற்றிரவு யாரையும் பார்க்க விருப்பமில்லாமல் ஏரியின் கரையில் படுத்திருந்தவன் கண்ணயர்ந்தது என்னவோ இரண்டு மணியளவில் தான்.
கோவிலில் ஒலித்த பாட்டு சத்தத்தில் தான் எழுந்தவன் சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு பின்பு தன்னை அன்னை தேடுவார் என்ற ஒரே காரணத்திற்காகவே வீட்டிற்கு சென்றிருந்தான். அவன் கிளம்பி வருவதற்குள் பூஜையே முடிந்திருந்தது.
அவனை கண்டதும் “உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்காடா.? இங்க இத்தனை வேலை கிடக்கு நீ எங்க போய் தொலைஞ்ச.?” என்று பொரிந்து தள்ளினார் வேலுச்சாமி.
அவரை வெற்று பார்வையில் நோக்கிய ரூபன் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்திட, நேற்றிரவில் இருந்து அவனை தேடி கொண்டிருந்த சிவா “டேய் உன் மூஞ்சி ஏன் ஒரு மாதிரி இருக்கு.? ஏதாவது பிரச்சனையா.?” என்று கேட்டான்.
“அதெல்லாம் இல்ல அண்ணே..” என்று சமாளிப்பாக ரூபன் கூற, சிவா அவனை நம்பாமல் போனாலும் வற்புறுத்தி கேட்க விருப்பமின்றி “சரி வாடா.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.. எத்தனையோ பார்த்துட்டோம்..” என்று அழைத்து சென்றான்.
நேற்றிருந்த உற்சாகம் முழுவதும் வடிந்திருந்தது ரூபனுக்கு. கோவில் என்றாலும் பிடிக்காத இடத்தில் இருப்பது போன்ற ஒவ்வாமை அவனுக்கு.. இங்கிருந்து கிளம்பி விட்டால் போதுமென்று இருந்தது.
ரூபனின முகப்பாவனைகளை வைத்தே ஏதோ சரியில்லை என்றுணர்ந்த சிவாவும் அவனை தனியே விடாமல் தன்னுடன் அழைத்து கொண்டே சுற்றினான்.
“ஏன்டி இன்னைக்கு இருந்துட்டு போனா தான் என்னவாமா.?” – கஸ்தூரி
“எனக்கு வேலை இருக்கு அத்தை..” – ஆதிரா
“ம்ம்ம்க்க்க்கும் பெரிய வேலை.. ஒருநாள் இருந்தா ஒண்ணுமாகாது..” – கஸ்தூரி
“ப்ச் மதியம் இங்கிருந்து கிளம்புனா தான் நைட்டு சென்னைக்கு கிளம்ப சரியா இருக்கும் அத்தை.. டிக்கெட் எல்லாம் போட்டுட்டேன்..” – ஆதிரா
“என்ன சொன்னாலும் சரினு ஒரு வார்த்தை மட்டும் உன் வாய்ல இருந்து வரவே வராதா.?” என்று கஸ்தூரி நொடித்து கொள்ள, ஆதிராவுக்கும் இருக்க விருப்பம் தான்.. ஆனால் அவளே அன்னையின் வற்புறுத்தலுங்கிணங்கவே இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து கொண்டு வந்தது.
இதற்கு மேல் லீவு போட்டால் அவ்வளவுதான் என்று திட்டமிட்டதை போலவே இன்றிரவு சென்னைக்கு கிளம்ப இருக்கிறாள். வேலை இருக்கு என்றால் இவளுக்கு மட்டும் தான் வேலை இருக்கு பாரு என்பவரிடம் சரிசமமாக பேசி வாங்கி கட்டி கொள்ள இவள் ஒன்றும் முட்டாள் இல்லயே.. அதான் ஒரே வார்த்தையில் நான் கிளம்புவேன் அதுதான் என் முடிவும் என்று விட்டாள்.
“சாப்பாடு வாங்கிட்டு வீட்டுக்கு போலாம் திரா.. மதியம் டவுனுக்கு போகணும்னு உன் மாமா சொல்லிட்டு இருந்தாங்க அவங்க கூடயே நீங்களும் கிளம்பிருங்க..” என்றாள் நிவேதா.
அன்னதானம் நடக்கும் இடத்திற்கு இவர்கள் செல்ல, முதலிலே இரண்டு வரிசைகளில் மக்கள் கூட்டம் திரளாக நின்றிருந்தது. ‘ஸ்ஸ்ஸ்ப்ப்பா’ என்று பெருமூச்சு விட்டு இவர்களும் வரிசையில் நின்றனர்.
‘அய்யய்யோ நம்ம ஆளு வேற அங்க இருக்கான்..’ என்று நினைத்து நிவேதாவின் பின்னால் மறைந்து கொண்ட ஆதிரா மெதுவாக எட்டி பார்த்தாள் ரூபனை. அவனோ வேறெங்கும் பார்வையை பதிக்காமல் உணவை குடுப்பதில் மட்டும் கவனமாக இருக்க, அவனிடம் சிவா ஏதோ கூறியதற்கு சரியென்று தலையசைத்தானே தவிர வாயை திறக்கவில்லை.
‘என்ன நம்ம ஆளு முகம் ஒரு மாதிரி இருக்கு.? அப்படி என்ன நடந்துருக்கும்.?’ என்று தீவிர சிந்தனையை தத்தெடுத்த ஆதிராவின் மனமோ அங்க போறதா.? வேணாமா.? என்ற கேள்வியை எழுப்பியது.
ஆளா.? இல்ல சாப்பாடா.? என்று யோசிக்கையில் சாப்பாடே முன்னால் வந்ததில் ‘என் ஆளா இருந்தாலும் பரவால்ல.. கோவில்
சாப்பாடு வாங்காம போக மாட்டேன்..’ என்று கெத்துடன் நின்றாள்.
கோவில் சாப்பாடு என்றால் என்ன சும்மாவா.? விதவிதமான உணவுகள் பலரின் வயிற்றை வஞ்சனையின்றி நிறைக்கும்.. எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புளி சாதம் என்று ஒருபுறம் பலவகையான உணவு வகைகள் இருக்க, மறுபுறம் பொங்கல், சுண்டல், பாசிப்பயிறு, பால் பாயாசம் என்று விதவிதமான உணவு பதங்கள்.
வறுமையில் இருப்போருக்கு கணக்கின்றி உணவுகளை அள்ளி வழங்குவதால் வருடத்தில் ஒருமுறை வரும் இத்திருவிழா பொக்கிஷம் தான் அவர்களுக்கு. பாகுபாடின்றி வரிசையில் நின்றிருந்தனர் அனைவரும்.
வேணுமென்றே ஆதிராவுக்கு மட்டும் அதிகமாக எலுமிச்சை சாதத்தை வைத்த சிவா “சாப்புடுமா நல்லா சாப்புடு” என்று கேலி செய்ய, “மாமா” என்று பல்லை கடித்தவளுக்கு அத்தனை கடுப்பு.
ஏனென்றால் எலுமிச்சை சாதம் என்றாலே பத்தடி தள்ளி ஓடும் ரகம் இவள்.. “நக்கலா பண்ணிட்டு இருக்கீங்க.? வீட்டுக்கு வாங்க மீசைக்கார மாமா கிட்ட போட்டு குடுக்கறேன்..” என்றாள் முறைப்புடன்.
“அத்தை பொண்ணாச்சேனு உனக்கு மட்டும் ஸ்பெஷலா குடுத்தது என் தப்புதான்..” – சிவா
“ம்ம்ம்க்க்க்கும் ரொம்ப தான் பாசம் பொங்குது..” – ஆதிரா
“ஏன் பால் மட்டும் தான் பொங்குமா.? பாசமும் பொங்கும் அத்தை மகளே..” – சிவா
“ஓஹோ பாசமா.? பாருடா.. அப்ப எனக்கு பிடிச்ச தயிர் சாதம் இன்னும் கொஞ்சம் வாங்கி குடுங்க பார்க்கலாம்..” – ஆதிரா
இவர்களின் பேச்சை கேட்டும் கேட்தாததுமாக தன் வேலையில் மட்டும் ரூபன் கவனமாக இருக்க, “உனக்கு வேணும்னா நீயே தான் கேட்டு வாங்கணும் திரா” என்று சிவா கூறிய நேரம் “பின்னாடி வர்றவங்களுக்கு வழி விட்டுட்டு உன் மாமன்காரன் கூட பேசுடி” என்று அதட்டினார் கஸ்தூரி.
“நான் எங்குட்டு இவர் கூட பேசுனேன்.. எங்க இருந்தாலும் என்னைய கடுப்பேத்தறதை மட்டுமே பொழைப்பா வெச்சிட்டு திரியறாரு நீங்க பெத்த அருமை மகன்” என்று முணுமுணுத்தவள் சற்று விலகி நின்று “வாங்கி தர முடியுமா.? முடியாதா.?” என்று அதிலே நின்றாள்.
“உனக்கு வேணும்னா நீயே கேளு” என்று கூறி சிவா நகைக்க, “மாம்ஸ்” என்று கைவிரலை மடக்கிய ஆதிரா பல்லை கடிக்க, “என்னமா என்ன வேணும்.?” என்று ரூபனே கேட்டு விட்டான்.
‘அய்யய்யோ’ என்று பதறியவள் “ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை” என்றாலும் அவளின் பார்வை சிவாவை பொசுக்கி விடும் முனைப்பிலே நின்றது.
அதை கண்டு சிவா சிரிப்பை அடக்க முயல, “என்ன அண்ணே என்ன தான் வேணும்.? எனக்கு ஒண்ணும் புரில” என்று சிவாவிடமும் கேட்டான் ரூபன்.
“சும்ம்மாடா.. திராக்கு எலுமிச்சை சாப்பாடு பிடிக்காது.. நான் வேணும்னே வெச்சனா அதான் மேடம் கடுப்பாகி முறைக்கறாங்க” என்று ஆதிராவின் முறைப்பிற்கான காரணத்தை உரைத்தான் சிவா.
இதற்கும் ஆதிரா உம்மென்று சிவாவை முறைத்திட, அவள் முறைப்பை கண்டு ரூபனுக்கு சிரிப்பு எழுந்தாலும் இதழுக்குள் அடக்கி பதில் கூறும் முன்பே பெண்மணி ஒருவர் “ஏன்பா சிவா இந்த பொண்ணு யாரு.? எங்கையோ பார்த்த ஜாடை தெரியுதே.?” என்று அவனின் பின்னே நின்றிருந்த ஆதிராவை கைகாட்டி கேட்டார்.
“கல்யாணி அத்தையோட பெரிய பொண்ணு சித்தி.. பேரு ஆதிரா..” என்று சிவா கூறிட, அவளின் பெயரை கேட்டதும் ‘ஆதிரா.. ஆதி’ என்று தனக்குள்ளே கூறி கொண்டான் பெண்ணவளின் திருநாமத்தை.!!
“யோவ் மாமா நீ வீட்டுக்கு வாயா.. உப்புலயே காப்பி போட்டு தர்றேன்..” என்று மாமனை கருவி கொண்டு அகன்றவளை பார்த்து துருவினி நகைத்தாள் உனக்கு இதெல்லாம் தேவையாடி என்ற ரீதியில்.!
அன்னதானம் முடிந்ததும் தாயை தேடி சென்ற ரூபன் “அம்மா நாளைக்கு காலைலயே கிளம்பிரலாம்” என்றிட, ‘ஏன்பா.?’ என்று வாய் வரைக்கும் கேள்வி வந்தாலும் மகனின் மனமறிந்து “இப்பவே கிளம்புனாலும் எனக்கு சரிதான்பா” என்று விட்டார்.
அழகிய பூகம்பம் தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

