
அழகியே என் மழலை நீ 38
வேதா, “அப்படியெல்லாம் எதுவும் இல்லை அண்ணா. நான் ஒன்னும் அவங்களை மாதிரி மனச்சாட்சி இல்லாத மிருகம் இல்லை. அவங்க நிலமையை நெனச்சா நிஜமாவே எனக்கு பாவமாதான் இருந்துச்சு. அதான் சொன்னேன், அவங்க செஞ்சது தப்பு தான் அதுக்காக அவங்க வேதனைய பார்த்து சந்தோச படற அளவுக்கு நான் அவளோ கேவலமான பொண்ணு இல்லை. எனக்கு தோணுச்சு சொன்னேன்” என்றவள் தலை குனிய ,செழியனுக்கு வேதாவின் குணம் தெரியும் என்பதால் இது அவனை எந்த விதத்திலும் ஆச்சரிய படுத்த வில்லை.
அதை கேட்டுக் கொண்டு இருந்த அகரனும் அரவிந்தனும் அவளின் பதிலில் பேச்சற்று தான் போயினர்.
தேவ்வோ அவளின் அருகில் வந்தவன் அவளின் தலையில் கை வைத்து தடவியவன்,
“நானும் கோவத்துல பேசிட்டேன். உன் மனசு யாருக்கும் வராதுடா, இதுக்கே நீ அவங்கள பாவம்னு சொல்ற, ஆனால் உன்னை கடத்துனதுல இருந்து எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்ணி இப்போ உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்காங்க. அவங்களுக்கு இப்போ கூட உங்கிட்ட மன்னிப்பு கேக்க தோணல பாரு” என்று கூறி கொண்டிருக்க, வேதாவின் பார்வை ஓரிடத்தில் நிலைக் குத்தி இருக்க,அவளின் முகம் பலவித உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது.செழியன் அதை கவனித்தவன் திரும்பி பார்க்க, அரவிந்தனுக்கும் அகரனுக்கும் பின்னால் கண்ணில் கண்ணீர் வடிய அறிவழகனுடன் நின்றிருந்தார் மீனாட்சி.
மருத்துவமனையில் இருந்து வேதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவழகனை நச்சரித்து அங்கே வந்து இருந்தார்.
செழியனோ தந்தையிடம் திரும்பியவன், “இப்போ எதுக்கு இந்த பொம்பளைய இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? ஒழுங்கா அவங்களை வெளியே போக சொல்லுங்க. சத்தியமா நான் அடிச்சுருவேன்.எனக்கு உயிர் குடுத்த பாவத்துக்காக தான் போனா போகுதுனு விட்டு வச்சு இருக்கேன். இப்படி இங்க வந்து என் கோவத்தை தூண்டுனீங்கன்னா முடிச்ச கேஸ் மறுபடியும் எடுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. மரியாதையா நான் சொல்லும் போதே இங்க இருந்து போய்டுங்க” என்று சரியான கோவத்தில் கத்த, அறிவழகன் எதுவும் பேசாமல் மீனாட்சியை பார்த்தவர், வேதாவின் அருகில் வர அவளோ தமையனுக்கும் கணவனுக்கும் இடையில் அமர்ந்திருந்திருக்க, அவளருகில் வந்தவர், “எப்படிம்மா இருக்க?” என்று கேட்க,
தேவ்தான், “அப்படி கேக்க கூடாது மாமா. உங்க பொண்டாட்டி பண்ண வேலைக்கு இன்னும் உயிரோட இருக்கியான்னு கேளுங்க?ஓ ஒரு வேலை அதையும் மொத்தமா எடுத்துட்டு போகலாம்னு வந்து இருக்கீங்களா? இந்த பொம்பிளைய இங்க இருந்து கூட்டிட்டு போய்டுங்க, நான் செழியன் மாதிரி பொறுமை எல்லாம் கிடையாது. அப்புறம் இவங்களுக்கு என் கிட்ட மரியாதையும் இல்லை. எனக்கு அடிக்க ரொம்ப நேரம் ஆகாது” என்று சத்தம் போட்டவனை யாராலும் அடக்கவும் முடிய வில்லை. திட்ட கூடாது என்று சொல்லவும் அவர்களுக்கு உரிமை இல்லாமல் போனது.
வேதா தான் , “அண்ணா போதும் விடு ப்ளீஸ்” என்று கூற, அவனோ அந்த புறம் முகத்தை திருப்பிக் கொள்ள, வேதாவோ அவருக்கு தலையசைப்பை மட்டுமே கொடுக்க, அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது. அவர் மேற்கொண்டு எதுவும் பேசவும் இல்லை. மனைவியின் செயலுக்கு மன்னிப்பும் வேண்டவில்லை.வேதாவின் முகத்தை பார்க்கவே அவருக்கு அவமானமாக இருந்தது.
அறிவழகன் மீனாட்சியிடம் திரும்பி பார்க்க, அவர் மெதுவாய் முன்னேறி வர, வேதாவின் உடலோ நடுங்க தொடங்கியது.தேவ்வும் செழியனும் இரண்டு புறமும் நின்றிருப்பவர்களுக்கு அவளின் நடுக்கம் நன்கு தெரிய, இருவரும் அரனாய் அவளுடன் நிற்க, மீனாட்சி வந்தவர் வேகமாய் செழியனின் அருகே வர, அவனோ இரண்டடி தள்ளிப் போய் நின்றான்.அவனின் உதாசீனம்அவனின் உயிர் வரை வலித்தது.
கண்களை துடைத்து கொண்டு வேகமாய் வேதாவின் புறம் வந்தவர் அவளின் காலை தொட்டு மன்னிப்பு கேக்க கையை எடுத்து காலை தொடப் போக, வேதா ஒரே நொடியில் காலை வேகமாக உள்ளே இழுக்க விட்டால். அந்த வேகத்தில் வயிற்றில் சுரீர் என்ற வலி வந்தது. செழியன் பதறி போய் அவளின் அருகில் ஓடி வர…
“ஆஹ் அம்மா” என்று கத்தியிருந்தவளின் கண்ணில் கண்ணீர் துளிகள் நிறைந்து போனது வலியால்… செழியன் அவளின் கண்ணீர் கண்டு துடித்து போக தேவ், “குட்டிமா வலிக்குதா? டாக்டர் கூட்டிட்டு வரவா?என்னடா என்ன பண்ணுது? அகரா டாக்டர் கூப்பிடு” என்று பதறி போனவனாக கூறினான்.
அவளோ, “வேணாம் அண்ணா பெருசா வலிக்கல. இதெல்லாம் பழகிருச்சு” என்று கூற, செழியனுக்கு உடம்பே ஆடி அடங்கியது அவளின் பதிலில்…
மீனாட்சியை பார்த்தவள் அறிவழகனிடம் திரும்பி, “ப்ளீஸ் அங்கிள் அவங்களை கூட்டிட்டு போய்டுங்க, அவங்க என் கால தொட்டு நான் ஒரு வேளை அவங்களை மன்னிச்சுட்டேன்னா… அப்புறம் நான் வாழப் போற வாழ்க்கை முழுசும் இந்த நாலு மாசத்தோட நினைவுகளும் வலியும் எனக்கு நினைவிருக்கும், அதை நான் மறக்கணும்னு நினைக்குறேன். அதோட மிச்சமா இந்த மன்னிப்பு இருந்துற கூடாது.கூட்டிட்டு போய்டுங்க, இவங்களை திரும்பி பார்க்க கூட விரும்பல நான்…
இந்த உலகத்துல மன்னிப்ப விட கொடுமையான தண்டனை வேறெதுவும் இல்லை. அதை கூட அவங்களுக்கு நான் குடுக்க விரும்பல. அவங்களை கூட்டிட்டு போங்க ப்ளீஸ். என்னால முடியல ரொம்ப வலிக்குது” என்றவள் காலை குறுக்கி வைத்தபடி வலியை அடக்கி கொண்டு கூற, மீனாட்சி தான் அவளை அதிர்ச்சியாக பார்த்திருந்தாள்.செழியனும் தேவ்வும் அவளை ஒரே சமயத்தில் அணைத்து ஆறுதல் கூறி கொண்டிருந்தனர்.
மீனாட்சிக்கு அவளின் எண்ணங்கள் புரிய, அவருக்கு அப்போது தான் புரிந்தது .
தான் எப்பேர்ப்பட்ட பெண்ணை இழந்திருகிறோம் என்று. வரமாய் கேட்டாலும் இப்படிபட்ட மருமகள் கிடைக்க மாட்டாளே.
முன்பிருந்த மீனாட்சியாய் இருந்தால் இவர்களின் அணைப்பை கண்டு தவறாய் பேசியிருப்பார். இப்போது அவரின் கண்களுக்கு செழியனும் தேவ்வும் குழந்தையை சமாதானப்படுத்தும் தந்தைகளாக மட்டுமே தெரிந்தது.
காலம் கடந்து வரும் அறிவு எதற்கும் உபயோகம் இல்லையே. இனி அவர் திருந்தி விட்டேன் என்று கூறினாலும் அதை நம்ப அவரின் அருகில் யாரும் இல்லை. தன் மோசமான எண்ணங்களாலும் செயல்களாலும் அவர் இழந்த உறவுகளின் அருமை இனி புரிந்தாலும் அது உபயோகமற்றது தானே.
அறிவழகன் தான் அதற்கு மேல் அவளின் வேதனையை அதிக படுத்த விரும்பாமல் வேகமாக மீனாட்சியின் கைகளை பிடித்து இழுத்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவர், “இப்போ புரியுதா உனக்கு? இனி உனக்கு புரிஞ்சா என்ன புரியலைன்னா என்ன. இதுக்கு மேல யாரும் இல்லை உனக்கு.இனி வாழ போற ஒவ்வொரு நிமிஷமும் நரகமா தான் இருக்கும். பெத்த புள்ளைங்க கூட இருந்தும் அவங்க ஆதரவு இல்லாம இருக்கறதுக்கு நாம இல்லாமையே போயிருக்கலாம்னு நீ நினைக்கற நாள் கூடிய சீக்கிரம் வரும். இதை நான் உனக்கு விடுற சாபமா கூட நீ கண்டிப்பா எடுத்துக்கோ
தாலி கட்டுன பாவத்துக்கு இனி வாழுற வரைக்கும் உன் கூட விதியேனு இருக்கப் போறேன்” என்றவர் முன்னேறி செல்ல, மீனாட்சி தன்னையே நொந்து கொண்டவராய் அவரின் பின்னே சென்றார்.
அர்ச்சனா ஊருக்கு வந்தவள் ஆதியின் மூலம் விஷயம் அறிந்து அன்னையை காண வந்தவளுக்கு லாவண்யாவின் மூலம் அவர் செய்த அனைத்து வேலைகளும் தெரிந்து போக அருவருத்து போனாள் தாயை எண்ணி…
அவளுக்கு ஆதியை நினைத்து ஒரு புறம் பயமாக இருந்தது. அவன் அலைபேசியில் பேசும் போதே அவனின் ஒதுக்கம் நன்றாக தெரிய, அதன் காரணம் சரியாக தெரியாமல் போனதால் யோசித்து கொண்டே இருந்தாள் ஏதேதோ.இப்போது அவளுக்கு அவனின் ஒதுக்கத்தின் காரணம் தெளிவாக தெரிந்து போனது.
மீனாட்சி அறிவழகன் வரும் போதே அவர்கள் பின்னோடே அரவிந்தனும், அகரனும் வந்திருக்க, அப்போது மீனாட்சி வந்ததை அறிந்த அவர் பக்கத்து வீட்டு பெண்கள் எட்டி பார்த்தவர்கள்”என்ன மீனாட்சி உடம்பு. பரவாயில்லையா? “என்று விசாரிக்க அதில் ஒரு பெண் “அப்புறம் ஒரு விஷயம் கேள்வி பட்டோம் உண்மையா செழியன் பொண்டாட்டிய நீ தான் கொல்ல பாத்தேன்னு பேசிக்கிறாங்க உண்மையா மீனாட்சி” என்று ஒருவர் கேட்க, இன்னொருவர் “ஆத்தாடி என்ன சொல்ற விஜயா உண்மையாவா” என்றவர் திகைப்புடன் மீனாட்சியை பார்த்தவர் அந்த பெண்ணிடம். “மீனாட்சி அக்கா கோவிலுக்கு போய்ட்டு வரும் போது எதிர்ல வந்த லாரி அடிச்சுடுச்சுனு சொன்னாங்க நீ என்னடி என்னென்னவோ சொல்ற” என்று கேட்க, அட ஆமாக்கா இந்த லாவண்யாவோட அம்மா தான் இங்க வந்து அந்த புள்ளைகிட்ட கத்தி கிட்டு கிடந்துச்சு.அப்போ காதுல காத்து வாக்குல வந்து விழுந்துச்சு”என்று அவளுக்கு கூறியவரை காட்டி கொடுக்காமல் கூறினார்.
லாவண்யாவின் தாய் ஊருக்கு செல்லும் முன் அவளிடம் நல்லா இருந்த பொண்ணு கிட்ட மகனை கட்டி வைக்கிறேன்னு ஆசை வார்த்தை சொல்லி சின்ன புள்ளை மனச கெடுத்து இப்படி ஒரு பாவத்தை பண்ணி என் மகளை இப்படி நாசம் பண்ணிட்டாளே உன் மாமியாக்காரி அவ வந்ததும் ரெண்டுல ஒண்ணு கேக்காம விட மாட்டேன் என்று சண்டை பிடித்ததும் லாவண்யா நடந்த அனைத்தையும் கூறி சவிதாவின் மேலும் உள்ள தவறை எடுத்து கூறி அவரை சமாதான படுத்தி அனுப்பியதும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மரகதம் மூலம் அந்த பெண்மணிக்கு தெரிய வந்திருந்தது.
லாவண்யா ஆரத்தி தட்டுடன் நின்று இருந்த மரகதத்தை முறைக்க, அவரோ லாவண்யாவின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தலை குனிந்தார்.
லாவண்யா தான் “உங்க கற்பனைக்கு நாங்க உருவம் குடுக்க முடியாது விஜயா அக்கா.அடுத்த வீட்டு கதைனா முதல் ஆளா வந்துருவிங்களா? வந்தமா நலம் விசாரிச்சமா போனோமான்னு இருங்க தேவையில்லாததை எல்லாம் பேசி வாங்கி கட்டிக்காதிங்க”என்று சதா போட அந்த பெண்ணோ “க்கும் எத்தனை நாளைக்கு மூடி வைக்க முடியும். கத்திரிக்கா முத்துனா கடை தெருவுக்கு வந்து தானே ஆகணும். பாக்காமலா போயிடுவோம் உங்க பவுசா, வீட்டுக்குள்ளயே கொலைகாரிய வச்சுக்கிட்டு நல்லாருக்கியான்னு கேட்ட நம்மளை குறை சொல்ல வந்துட்டாளுக, யாருக்கு தெரியும் தங்கச்சி கூட அக்கா காரியும் கூட்டோ என்னவோ வாக்கா நாம போகலாம்”என்று விட்டு அவர்கள் சென்று விட, லாவண்யாவுக்கு அவர்கள் கூறிய கடைசி வார்த்தை சுருக்கென தைத்தது. ஒரு வேளை வேதாவும் செழியனும் கூட தன்னை அவ்வாறு நினைத்திருப்பார்களோ என்று நினைத்தவளுக்கு தொண்டை அடைத்து போனது.

