Loading

அழகியே என் மழலை நீ 28

 

 

 

தாமரை குடும்பம் அறிவழகனின் வீட்டிற்கு வருகை புரிந்திருந்தனர். தாமரை அண்ணனிடம், “அண்ணா நாங்க ஒரு முடிவெடுத்து இருக்குறோம். வேதாவுக்கு செய்ய வேண்டிய சீர் வரிசை, துணிமணி மத்ததெல்லாம் முறைப்படி செய்யலாம்னு முடிவெடுத்துருக்குறோம். நீங்க எல்லாரும் எங்ககூட வந்தா கையோட அவங்களையும் அழைச்சிட்டு போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துரலாம்” என்று கூறினார்.

 

 

அறிவழகன், “அதெல்லாம் எதுக்கு தாமரை. அது எல்லாம் செழியனுக்கு பிடிக்காது அவன் கோவப்படுவான். என் பையனுக்கு இந்த காசு, பணத்து மேல என்னிக்கும் ஆசை இருந்தது இல்லை. இப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்குன்னு தெரிஞ்சாலே அவன் கோவம் தான் படுவான்.அதுனால இது தேவையில்லாதது” என்று கூறினார்.

 

மீனாட்சி, “அவன் எதுக்கு கோவப்பட போறான். பெண்ணை பெத்தவங்க அவங்க மகளுக்கு செய்ய நினைக்குறாங்க. அதுல அவனுக்கு என்ன வர போகுது” என்று கூற, அகரனோ,தாயின் பேச்சில் கோபம் கொண்டவனாக”ஒரு வேளை இதெல்லாம் அத்தை, மாமா பண்ணாங்கன்னு வைங்க, நீங்க வேதாவை மருமகளா ஏத்துக்கவீங்களா அம்மா” என்று கேட்க, மீனாட்சியோ வெடுக்கென முகத்தை திருப்பி கொண்டார்.

 

 

லாவண்யாவோ, “இவங்க என்ன மன்னிக்கிறது. செழியன் தான் செத்தா கூட வரமாட்டேன் சொல்லிட்டானே, அப்புறம் இவங்க எதுக்காக அவங்களுக்கு செய்ய போற நல்லதுல கலந்துக்கணும், அறிவுரை குடுக்கணும், ” என்று கோபத்துடன் கேட்க,, தாமரையின் கணவரும் மகன்களும் அதிர்ந்து போய் அவர்களை பார்த்தனர்.

 

 

ஆதிதான், “அக்கா நீங்க என்ன சொல்றீங்க? அத்தைக்கு வேதாவை பிடிக்காம போனதுக்கு காரணம் அவ நகை, பணத்தோட வரல யாருமில்லைதவன்னு தானே?” என்று கேட்க,அதிரன் “இப்போ தான் எனக்குமே கொஞ்சம் சந்தேகம் அதிகம் ஆகுது. என்ன தான் நடந்துச்சு அதையாவது சொல்லுங்க, தேவ் என் கிட்ட சொன்னவரைக்கும் நாங்க புரிஞ்சுக்கிட்டது வேதாவுக்கு யாரும் இல்லை, காசு, பணத்தோட வரல அதுக்காக தான் அத்தை கோபமா இருக்காங்கன்னு அப்போ அது உண்மை இல்லையா “என்று புருவம் சுருக்கி கேட்டான்.

 

லாவண்யா “அப்படியா அதி இதென்ன புது கதை. அப்டிலாம் இல்லை. நீங்க வேதாக்கு இப்போ ஐனூறு சவரன் நகை போட்டு கார் கம்பெனியே அவ பேர்ல எழுதி வச்சாலும் அவங்க இப்படி தான் இருப்பாங்க.காரணமே இல்லாம ஒருத்தங்களை பிடிக்காம போகும்னு சொல்வாங்க இல்லை. அந்த குணம் இவங்களுக்கு.இதெல்லாம் பிறப்புல இருந்தே வர வியாதி. இதுக்கு எல்லாம் மருந்தே கிடையாது”என்று முகத்துக்கு நேராக பேசுபவளை அனைவரும் திகைப்பாக பார்க்க, மீனாட்சி அவளை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ள வில்லை.

 

அரவிந்தன்”போதும் லாவி நீ போய் அர்ணாவ் கூட்டிட்டு வா”என்று அவளை அதட்டி அடக்கி அனுப்பி வைத்தான்.

 

அரவிந்தனோ, “வேணாம் ஆதி. இப்படியே இருக்கட்டும். நடந்தது நிச்சயம் நல்ல விஷயம் இல்லை. அதுக்கு உங்களுக்கு தெரிஞ்சா வீணான மன கசப்பு மட்டும் தான் மிஞ்சும். இப்போ தான் அப்பாவும் பாட்டியும் நிம்மதியா இருக்காங்க. அதெல்லாம் சொல்லி உறவ கெடுத்துக்க வேணாம். நடந்தது நடந்ததாவே இருக்கட்டும். உங்க ஆசைப்படி அவங்களுக்கு செய்ய வேண்டியதை செய்ங்க. இன்னைக்கு எல்லாருமே இருக்கோம். நாங்களும் அவங்கள பார்த்து நாளாச்சு” என்று எல்லாரும் கிளம்ப, அரவிந்தன் கூறியதை ஒருவாறு ஏற்றுக்கொண்டாலும் மகன் தாய் இறந்தால் கூட வரமாட்டேன் என்று கூறும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்று குழம்பிக் கொண்டேதான் வந்தனர்.

 

 

வேதா பத்து நாட்களாய் வீட்டில் இருந்து விட்டு முந்தைய நாள் சென்றவள், வேலை நள்ளிரவு வரை நீடிக்க முடித்துவிட்டே, செழியனுடன் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

 

 

சிறிது நேரமே உறங்கியவள் சமையலறைக்கு வந்து வேலையை தொடங்க செழியனோ, “என்ன தங்கமே அதுக்குள்ள முழிச்சுட்ட. கொஞ்சநேரம் போய் ரெஸ்ட் எடு. கொஞ்சம் ட்ரெஸ் வாஷ் பண்ண வேண்டியது இருக்கு. அதை பண்ணிட்டு நான் சமைக்கிறேன்” என்று கூற,

 

 

அவளோ, “எனக்கு தூக்கம் வரும் போதுதான் வரும்” என்று வசனம் பேசியவளின் மூக்கை பிடித்து ஆட்டியவனோ, “டான்னு அலாரம் வச்ச மாதிரி 9 மணிக்கு தூங்கி விழுறவ, எதுக்கு இந்த டயலாக்” என்று கேட்க, அவளோ, “நான் என்ன செய்ய. நான் குட்டியா இருக்கும் போது இருந்தே அப்படித்தான். என்ன வேலை பார்த்தாலும் ஒன்பது மணிக்கு மேல எதுவும் பண்ணமாட்டேன் தூங்கிருவேன்” என்று கூற, “அப்புறம் நேத்து மட்டும் எப்படி கண் முழிச்சு வேலை பார்த்தீங்க” என்று கேட்க, “அது அனு அக்காவோட வெட்டிங் ட்ரெஸ் நானே பண்ணி குடுப்பேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்கேன் அதான்” என்று கூறினாள்.

 

 

“உன்னோட இம்சைடி. நீ சொன்னாலும் கேக்க மாட்ட. தூக்கம் வருதுன்னு வந்து அழு அப்பறம் பேசிக்குறேன். நான் போய் என் வேலையை பார்க்குறேன்” என்றவன் வெளியே வாசலில் ஊறிக்கொண்டிருந்த துணியை துவைத்தவன் அலசி காயவைத்து கொண்டு இருக்க, வாசலில் கார் வந்து நிற்க அதில் இருந்து இறங்கினர் அனைவரும்.

 

 

செழியன் சரியாய் வேதாவின் உடைகளை கையில் வைத்து கொண்டு இருந்தவன் அவர்களை பார்த்து முகம் மலர்ந்தவன், “ஹேய் அண்ணா, அகரா, அத்தை என்ன எல்லாரும் ஒண்ணா வந்துருக்கீங்க? வாங்க உள்ள வாங்க” என்று அனைவரையும் அழைத்தவன் தாயை கண்டு கொள்ளகூட இல்லை. தாமரையோ அவனின் கையில் இருந்த உடையை பார்த்தவள், “என்ன செழியா இதெல்லாம். நீ பண்ற வேதா எங்க? அதை இங்க குடு” என்று வாங்க வர அவனோ, “பரவாயில்லை அத்தை அவளோதான் முடிச்சிட்டேன்” என்றவள் அவளின் புடவையை லாவகமாக மடித்து காயப் போட்டான்.

 

 

அகரனோ, “அவன் அசால்ட்டா செய்றதுலேயே தெரியல அதெல்லாம் பழக்கப்பட்ட வேலைதான் அத்தை” என்று அவனை வார, செழியன் சிரித்தவன் “நானாச்சும் பரவாயில்ல. உன் நிலைமையை நினச்சா” என்று அவன் முடிப்பதற்கும் முன்பே, “டேய் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். கொஞ்ச நேரம் அமைதியா இருடா” என்று தாயை பார்த்தவாறே பம்ம, செழியன் அவனை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டான்.

 

 

அன்பரசன், “வேதா இல்லையா மாப்ள? என்று கேட்க, அவனோ, “உள்ளதான் இருக்கா மாமா வாங்க எல்லாரும்” என்று அழைக்க, செழியன், “தங்கமே” என்றழைக்க அவளோ, “என்னவாம், இம்சைனு திட்றது. இப்போ தங்கமாம். தங்கம் வைரம்னு பக்கத்துல வந்த கொன்னுடுவேன்” என்றவாறே கத்திக்கொண்டே வந்தவள், வாசலில் நின்றவர்களை பார்த்து கண்களை விரித்தவள் பாவமாக செழியனை பார்க்க, அவனோ நமட்டு சிரிப்புடன் நின்றிருந்தான்.

 

 

அவளோ, “அது.. சாரி.. வாங்க உள்ள” என்று அழைக்க, அரவிந்தன், “என்ன வேதா மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு” என்று கேட்க, அவ்ளோ திருதிருவென விழிக்க, அனைவரும் சிரித்து விட்டனர் அவளின் முகபாவனையில்.

 

 

அனைவரும் உள்ளே செல்ல, செழியன் பின்னால் வந்த வேதாவோ, “என்ன மாமா சொல்லிருக்கலாம்ல எல்லாரும் இருக்காங்கன்னு” என்று சிணுங்க, அவனோ, “விடு தங்கமே யாரும் ஒண்ணுமே நினைக்கமாட்டாங்க போய் டீ போடு” என்று கூற, அவளோ சமையலறைக்கு சென்றுவிட்டாள் டீ போட. அனைவரையும் ஹாலில் அமர வைத்தவன் பத்தாததற்கு பாயை விரிக்க, லாவண்யா, அகரன், ஆதி, அதிரன் அதில் அமர்ந்து கொண்டனர்.

 

 

 

ஹாலில் இருந்து பார்த்தால் கிட்சன் தெளிவாகவே தெரிந்தது. வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. வேதா டீ போட, செழியன் கபோர்ட்டில் இருந்து டம்ளர்களை எடுத்து கழுவி வைக்க, டீயை அதில் ஊத்தி அனைவர்க்கும் கொண்டு வந்து கொடுத்தவள், மீனாட்சிக்கு அருகில் வரும்போது ட்ரெயை லாவண்யாவிடம் கொடுத்து விட, மற்றவர்கள் அதை கண்டும் காணாதது போல் இருந்து கொள்ள, மீனாட்சிக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

 

 

அந்த ஹால் மிகப்பெரியதாகவே இருக்க, அவர்கள் சோபாவில் ஒரு மூலையில் அமர்ந்திருக்க, கிட்சேன் அருகே இருந்த டைனிங் டேபிள் சேரில் செழியன் அமர்ந்திருக்க, வேதா அவனருகே நின்று இருந்தாள்.

 

 

வெளியே நின்று பார்த்தால் அவர்கள் இருப்பதே தெரியாது. அப்போது தான் உள்ளே வந்தனர் சுந்தரம் தாத்தாவும் துளசி பாட்டியும். வேதா அவர்களை கண்டதும் முகம் மலர்ந்தவள் ஓடிச்சென்று அவரை அணைத்து கொண்டாள்.

 

 

“பாட்டிமா எப்படி இருக்கீங்க? நான் ஊர்ல இருந்து வந்ததும் உங்களை ரொம்ப தேடினேன் தெரியுமா. அப்புறம்தான் சொன்னாங்க நீங்க கோவிலுக்கு போயிருக்கிறதா? நல்லா இருக்கீங்களா?” என்று கேட்க, அவரோ அவளின் கன்னம் வழித்து சிரித்தவர், “நான் இருக்கறது இருக்கட்டும். உனக்கு உடம்பு எப்படியிருக்கு பரவாயில்லையா? அய்யா செழியா உனக்கு எப்படி ராசா இருக்குது அந்த தேவு பைய கூப்பிட்டு நேத்துதான் சொன்னான் கொலை நடுங்கி போச்சுயா?” என்றவர் இருவரின் கன்னங்களையும் பற்றி கேட்டார்.

 

செழியனோ, “நாங்க நல்லாருக்கோம் பாட்டி. இப்போ ஓகே. அவளுக்கு கூட சரி ஆகிடுச்சு” என்று கூற சுந்தரமோ, “எப்படியோ தலைக்கு வந்தது தலபாகையோட போச்சுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் நல்லா இருக்கனும்யா” என்றவர் செழியனின் கைப்பற்றி கூறினார்.

 

 

குடும்பத்தினர் அது யார் என்று புரியாமல் அவர்களையே நெகிழ்வாய் பார்த்திருக்க, அரவிந்தன் தான் இந்த வீட்டு ஹவுஸ் ஓனர் என்று கூறினான். துளசி பாட்டியோ அவர் கொண்டு வந்த பையில் இருந்து குங்குமத்தை எடுத்தவர், இருவரையும் பூஜை அறையின் முன் வந்து நிற்க வைத்தவர், “உங்களுக்காக வேண்டிகிட்டு கொண்டு வந்த குங்குமம்யா எடுத்து மாங்கல்யத்துல வச்சு விட்டு நெத்தில வச்சு விடு” என்று கூறினார்.

 

 

செழியனோ குங்குமத்தை எடுத்தவன் வேதாவின் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்தவன், அதில் வைத்து விட்டு அவளின் நெற்றி வகிட்டிலும் நெற்றியிலும் வைத்து விட, வேதா அவனுக்கு வைத்தாள். கையோடு வாங்கி வந்திருந்த பூவையும் எடுத்து செழியனின் கையில் கொடுத்தவர், “வச்சு விடுய்யா” என்று கூற, அந்த பூச்சரத்தை அவளின் நீண்ட கூந்தலில் வைத்தவனோ வேதாவின் கைப்பற்றி அவர்கள் இருவரின் காலிலும் விழுந்து விட, அவர்களோ, “நீங்க எந்த நோய் நொடியும் இல்லாம எல்லா செல்வமும் கிடைச்சு சந்தோசமா இருக்கனும். என் தாயி மனசுல இருக்க குறை எல்லாம் தீர்ந்துரும், அடுத்த வருஷம் கையில புள்ளையோட ஆசிர்வாதம் வாங்குவீங்க” என்றப் படியே, வாழ்த்தியவர்கள், “சரிப்பா நாங்க அப்பறமா வரோம். நேரா இங்க தான் வந்தோம்” என்றவர்கள் கிளம்பி விட, வேதாவின் கண்களில் நீர் தழும்ப செழியனோ அவளை தோளோடு சேர்த்தனைத்தான்.

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. குழந்தை விஷயத்துல தான் ஏதோ பிரச்சனை போல .. ஆமா அவங்க செல்ல மக வேதாவை அடிச்சது மட்டும் தெரியணும் .. அப்புறம் இருக்கு மீனாட்சிக்கு ..