
19
அவரோ, “நான் ஏன்டா உன்னை மன்னிக்கணும். நாங்கதான் அவசரப்பட்டுட்டோம். நீங்க அவசரப்பட்டாலும் நாங்க பொறுமையா பேசி இருக்கனும். அப்போ அந்த பொறுமை இல்லையே. இப்ப எல்லாம் பட்டதுக்கு அப்புறம்தானே புத்தி வருது. உன் நிலமைல இருந்து யோசிச்சுருக்கணும்னு தோணுது. அந்த மனுஷன் அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவு எடுக்கவும் கோபத்துல என்ன எல்லாமோ பேசி உன்னை காயப்படுத்திட்டேன். எத்தனை வருசமா உன்னை பாக்கறதுக்கு தவிச்சு போய் இருந்தேன் தெரியுமா? என் புள்ள என்கிட்டயே வந்துட்டா” என்றவர் உணர்ச்சி வசப்பட்டு பேச, “அப்போ என்னை மன்னிச்சுட்டீங்களா மா” என்று நா தழு தழுக்க வினவினார்.
அவரோ, “எல்லாத்தையும் மறந்துருவோம்டா. இழந்த எதுவும் திரும்ப வராது. திரும்ப கிடைச்ச உன்னை இழக்கிறதுக்கு நான் அவளோ கொடுமகாரியும் இல்ல. சரிவா நாம வீட்டுல போய் பேசிக்கலாம். அறிவு உன்னை பார்த்தா ரொம்ப சந்தோச படுவான்” என்று கூறினார்.
அப்போது தாமரையின் போன் மணி அடிக்க, அதை பார்த்தவர், “உங்க பேரன்தான்மா, நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சில்ல. அதான் கூப்பிடுறான், அம்மா என் கூட வீட்டுக்கு வரிங்களா?” என்று ஏக்கமாக கேட்க, அவரோ, “போலாம் தாமரை. ஆமா பேரன் என்ன செய்றான்” என்று கேட்க, அவரோ, “வாங்கம்மா வீட்டுல போய் நேர்லயே பேசுங்க. அவனுகளும் எந்த சொந்தத்தையும் இதுவரை பார்த்ததில்லை. ரொம்ப சந்தோசப்படுவாங்க. நம்ம நேர்ல போய் சர்ப்ரைஸ் குடுக்கலாம்” என்றவர் போனை எடுக்கவில்லை.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவர்கள் அந்த வழியாய் வந்த ஆட்டோவில் ஏற, தாமரை அட்ரசை கூறினார். அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டு வாசலில் இறங்கி இருந்தனர்.
வேதநாயகி வீட்டை கண்களால் அளவிட்டு கொண்டே வர, வாசலையே பார்த்து கொண்டிருந்த ஆதி அன்னையை கண்டதும், “அம்மா என்னாச்சு, கட்டு போட்ருக்கு. எப்படி ஆச்சு” என்று பதட்டமாக வினவ, அவரோ, “ஒண்ணுமில்ல ஆதி சின்ன அடிதான். பிபி அதிகமாயிருச்சு மயங்கி விழுந்துட்டேன். இவங்கதான் என்னை ஹாஸ்பிடல சேர்த்தாங்க. இவங்க யார் தெரியுமா?” என்று கேட்க, அவனோ, “ரொம்ப நன்றி பாட்டி எங்கம்மாவை காப்பாத்துனதுக்கு. இந்த உதவிய நாங்க வாழ்நாள் புல்லா மறக்கமாட்டோம்” என்று கண்கலங்கி கூற, அவருமே அவனையே கண்கலங்க பாசமாக பார்த்து கொண்டிருந்தார்.
தன் கணவரின் மறு பதிப்பாய் இருந்த பேரனின் தலையை வருடியவர், “உன் பேர் என்ன தங்கம்” என்று கேட்க, அவனோ, “ஆதி மித்ரன் பாட்டி” என்று கூற, நெகிழ்ந்து போனார் கணவரின் பெயர் ஆதிநாராயணன் அல்லவா.
மகளை பார்க்க அவரோ, “உள்ள போகலாம் வாங்கம்மா” என்று கூற, அவர் பேரனை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைய, ஆதி வழக்கத்திற்கு மாறான அன்னையின் புன்னகையையும் வேதநாயகியின் நெகிழ்ந்த பார்வையையும் கண்டவன், குழம்பியவாறு அவர்களின் பின்னே செல்ல, தாமரையை கண்ட அன்பரசனோ, “என்னம்மா தலையில காயம். எப்படி அடி பட்டுச்சு” என்று பதறியவர் மனைவியின் அருகில் வேகமாய் சக்கர நாற்காலியை உருட்டியவாரு வந்தவர் தவிப்புடன் கேட்க”அதை விடுங்க இங்க பாருங்க. யாரு வந்துருக்காங்கன்னு” என்று கூறினார்.
அன்பரசன் பார்த்ததும் தெரிந்து கொண்டார். தாமரை அவரின் தாயை போல. “உங்கம்மாவா தாமரை” என்றவர் விழி விரிக்க, வேதநாயகி அன்பரசனை சக்கர நாற்காலியில் கண்டு அதிர்ந்து போனார். தாமரையும் அவரும் திருமணம் முடித்த அன்று கண்ட போது நன்றாக இருந்தார் அல்லவா.
“தம்பி எப்படி இது” என்று கேட்க, அவரோ, “எல்லாம் நான் செஞ்ச பாவத்துக்கு பலன் தான் அத்தை. உங்க பொண்ண உங்ககிட்ட இருந்து பிரிச்சு. உங்களுக்கு ஈடில்லாத இழப்பை குடுத்தேனே அந்த பாவத்துக்குதான் இப்போ அதே வேதனையை அனுபவிக்கிறேன்” என்றவர் மகளை நினைத்து கலங்கிபோய் அழுதார்.
ஆதி தந்தையின் அருகில் வந்தவன், “அப்பா ப்ளீஸ் அழாதீங்க. யார் இவங்க நீங்க என்ன பாவம் பண்ணீங்க” என்று கேட்டவாரே அருகில் வந்தவன் தாயை பார்க்க, வேதநாயகி, “வேணாமே மாப்பிள்ளை. முடிஞ்சது முடிஞ்சதா இருக்கட்டும். நினைக்காதீங்க” என்று கூறியவர், ஆதியிடம், “நான் உன் பாட்டி சாமி. உங்கம்மாவை பெத்தவ” என்று கூற, ஆதி மகிழ்ச்சியாய் அவரை பார்த்தான்.
அவரோ, “என்னாச்சு உங்க காலு” என்று கேட்க, ஆதிதான், “அப்பாக்கு பக்கவாதம் வந்து கை சரியாகிடுச்சு. காலும் சீக்கிரமே சரியாகிடும் பாட்டி. டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு” என்று கூற, தாமரை அன்னைக்கு காபி எடுத்து வந்து தர, பேரனிடமும் மருமகனிடமும் நன்றாக பேசினார்.
அவர்கள் பேசும்போதே அதியும் வந்து விட, வேதா அகமகிழ்ந்து போனார். மகள் வாழ்க்கை செழித்து இருப்பதை கண்டு, வேதாவை பற்றி யாரும் பேச்சே எடுக்கவில்லை. வேதநாயகி அவர்கள் நால்வரையும் அழைத்து கொண்டு அவர் வீட்டுக்கு கிளம்ப, தாமரையோ அண்ணனை நினைத்து பயம்கொள்ள, அவரோ அதற்கு அவசியமே இல்லை என்பதுபோல தங்கையிடமும் தங்கை கணவன், பிள்ளை என்று நன்றாக உறவாடினார்.
மகனின் பிரிவில் தவிப்பவருக்கு அன்னையின் மனதை புரிந்துகொள்ள முடிந்தது. அனைத்தையும் இலகுவாகவே ஏற்றுக்கொண்டார். மீனாட்சிக்கு தலை கால் புரியவில்லை. அவரின் பிரியமான நாத்தனார் அல்லவா, அத்தனை மகிழ்வு கொண்டார் அவரின் வரவில். நெடுநாளைக்கு பின் அந்த வீட்டின் சிரிப்பு சத்தம். அறிவழகனுக்கு மகனை நினைவுப்படுத்த யாருக்கும் தெரியாமல் கண்களை துடைத்துக் கொண்டார்.
ஆதி யின் பார்வை அர்ச்சனாவை தொட்டு செல்ல, அவளோ அவனின் பார்வையில் தலைகுனிய, புதிய உறவுக்கான அடுத்த படியும் தொடங்கியது.
….
மறுநாள்…
இங்கே வேதா சமையல் செய்து கொண்டிருக்க, செழியன் அவளுக்கு உதவி செய்கிறேன் என்னும் பெயரில் அவளை தொந்தரவு செய்துகொண்டிருந்தான்.
“உங்களுக்கு இன்னைக்கு முக்கியமான கேஸ் விசயமா போகணும்னு சொன்னீங்க இல்லை போய் கிளம்புங்க டைம் ஆச்சு” என்றவள், “ரொம்ப டென்ஷனா பேசிட்டு இருந்தீங்க இல்ல. பெரிய பிரச்சனையா” என்று கேட்க, ”ஒரு அக்கியூஸ்ட் ஒரு பொண்ண கடத்துன கேஸ். காலேஜ்ல கூட படிச்ச பொண்ணு லவ் பண்லன்றதுகாக அவளை கடத்தி கொல்ல பார்த்துருக்கான். அவன் அந்த ஏரியா தாதாவோட மகன். அந்த பொண்ண சேவ் பண்ணிட்டோம். இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கா. ஆனால் அவன் தப்பிச்சுட்டான். அவனுக்கு எதிராக இன்னும் ஸ்ட்ரோங்கா எவிடென்ஸ் தேவைப்பட்டுச்சு. இப்போ அது கிடைச்சிருச்சு. அவன் ஏதோ ஃபாரெஸ்ட்ல ஒளிஞ்சுருக்கறத தகவல் கிடைச்சிருக்கு. அங்க போகணும். அவன் எதிர்பாராத நேரத்துல அடிக்கணும். சரி ஓகே உனக்கு இன்னைக்கு ஆபீஸ் போகணும்ல. மாமா வேணா உன்னை ட்ரோப் பண்ணவா” என்று அலைபாய்ந்த அவளின் தலை முடியை காதோரம் செறுகியவாரே கேட்டான்.
“திவ்யா அக்கா வரேன் சொன்னாங்க. நான் அவங்களோட போறேன் இன்னிக்கு மட்டும். நாளைல இருந்து உங்ககூடதான் வருவேன் ஓகேவா” என்று விரல் நீட்டி கூற, அவளின் விரலை மடித்து முத்தமிட்டவனோ, “நாளைக்கு மட்டும் இல்லை.. வாழ்க்கை முழுசும் உன்கூட வர மாமா தயாரா இருக்கேன்” என்று கூறினான்.
அவளுக்கோ தான் சாதாரணமாக கூறிய விஷயத்தை கூட, அவ்வளவு காதலுடனும் ஆதுரத்துடனும் அவனால் மட்டும்தான் கூற முடியும் என்று நினைத்தவள் அவனை அணைத்துக்கொள்ள, அவனோ அவளின் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.
“ஈவினிங் சீக்கிரம் வந்துறேன். வெளியே போகலாம்” என்று கூற, அவளோ, “ஹ்ம்ம் நானும் ஒரு சர்ப்ரைஸ் வச்சுருக்கேன். ஆனால் ஈவினிங்தான் சொல்வேன்” என்று கூறியவள் அறியவில்லை மாலை அவளுக்கு தான் எதிர்பாராத சர்ஃப்ரைஸ் காத்திருக்கிறது என்று…
அவனோ “சர்ப்ரைஸ்ஸா, என்னது.. சொல்லு தங்கமே” என்று கேட்க, அவளோ, “சொல்லமாட்டேன்.. சொல்லவேமாட்டேன் ஈவினிங்தான். போய் கிளம்புங்க” என்று அவனை தள்ளிவிட, கெஞ்சி கொஞ்சி அவனை கிளப்பிவிட்டு அவள் கிளம்புவதற்கும் தன்வி வருவதற்கும் சரியாக இருந்தது. அவளுடன் கிளம்பிவிட்டாள்.
வேதநாயகி குடும்பத்தில் உள்ள அனைவரும் கிளம்பி தாமரை வீட்டுக்கு வந்திருந்தனர் அவர்களின் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக. ஆதி, அன்பரசன், தாமரை மூவரும் கிளம்பியிருக்க, அதிரனுக்காக காத்திருக்க, அவனோ காக்கி பேண்ட், டீ ஷர்ட் என்று வர, தாமரையோ, “அதிரா என்னடா இன்னைக்கு வேற ட்ரெஸ் போட்டு வரலாம்ல” என்று அவனின் உடையை பார்த்து கேட்க,
அவனோ, “சாரிமா, நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க. என்னால இன்னைக்கி லீவு போட முடியாது. பக்கத்துல இருக்க கோவில்தான போய்ட்டு வாங்க. நான் இன்னொரு நாள் வரேன்” என்று கூறினான்.
வேதநாயகி, “என்ன சாமி எல்லாரும் போகணும் நேத்தே சொன்னேன்ல. நீ போன் போட்டு இன்னிக்கு வர முடியாதுனு சொல்லுற. உங்க தாத்தா இறந்ததுக்கு அப்புறம் போகவேயில்ல” என்று கூற, அவனோ, “பாட்டி நானும் வரணும்னு தான் நெனச்சேன். இன்னிக்கு ஒரு முக்கியமான குற்றவாளி இவ்ளோ நாள் எங்க இருக்கான்னே தெரியாம இருந்துச்சு. இப்போதான் அவன் எங்க இருக்கானு தகவல் கிடைச்சிருக்கு. அவங்கப்பா வேற பெரிய ரவுடி. நானும் என் மேலதிகாரியும் அங்க போகணும். அவர் வேற டென்ஷன்ல இருக்காரு. நான் முன்னாடியே போய் அங்க பக்கத்துல ஏதோ கடை, கோவில் எல்லாம் இருக்கு போல, அங்க இருக்கவங்களை எல்லாம் க்ளியர் பண்ணனும். இல்லனா அவளோதான் அவர் என்னை கடிச்சு கொதறிடுவாரு, நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க” என்று கூறினான்.
அறிவழகன் தான், “அம்மா போய்ட்டு வரட்டுமே. தாமரைக்காகதானே பொங்கல் வைக்குறோம். அவளும் மாப்பிளையும் இருக்காங்கல்ல. அதிரன் போகட்டும், நீங்க பாத்து போங்க மாப்பிள்ளை. பத்திரம்” என்று கூற, அவன் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பியவன் அந்த இடத்திற்கு செல்ல, கடை எல்லாம் முன்பே பூட்டி தான் இருந்தது.
அந்த வழியே கொஞ்சம் உள்ளே செல்ல, அத்தனை பயங்கரமாய் இருந்தது அந்த காடு. அவனுக்கே சற்று உதறல் எடுக்க, அவன் எதிரில் சுற்றிலும் சுவர் வைத்த ஒரு கோவில் தென்பட, அதை நோக்கி நடக்க அங்கு ஒரு பூசாரி மட்டும் சாமிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்.
அதிரன் அவரிடம் சென்றவன், “சாமி” என்றழைக்க, அவரோ, “என்ன தம்பி வேதநாயகி அம்மா வீட்டு பையனா.. அவளோதான் ஆயிருச்சு வாங்க பொங்கல் வச்சுறலாம். எல்லாரையும் வர சொல்லுங்க” என்று அவர் கூற, அதிர்ந்து போனவனோ, “என்ன சாமி” என்று ஏதோ சொல்ல வர, அவனுக்கு பின்புறம் சத்தம் கேட்க, திரும்பியவன் அதிர்ந்து போனான். அவனின் மொத்த குடும்பமும் அங்கே இருந்தனர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


முன்னர் சிறியவர்கள் அவசரப்பட்டு எடுத்த முடிவினால் பெரியவர்கள் ஆத்திரப்பட்டு உறவுகளை பிரிந்தாயிற்று.
இப்பொழுது பொறுமையாக யோசித்து, தெளிவு பிறந்து, ஏக்கம் அதிகரித்து பிரிந்த உறவுகளை அரவணைத்து கொள்கின்றனர்.
வேதாவின் புகைப்படத்தை இவர்கள் உள்வைத்த பின் நாயகி அம்மாவுடனான சந்திப்பு அமைவது விதியின் செயல்.
அதிரனும், செழியனும் குற்றவாளியை பிடிக்க வந்த இடத்தினில், இவர்களது மொத்த குடும்பமும் இருக்கின்றனரே!
இதென்ன ட்விஸ்ட் … குடும்பத்தோட போய் வில்லன் கிட்ட மாட்ட போறாங்களோ … ஒரே சஸ்பென்ஸ் தான் … ஆதிக்கு அர்ச்சனா வா ?? சூப்பர்