Loading

அழகியே 14

 

 

 

 

நாட்கள் வேகமாய் ஓட,பிரிவு இருவரின் காதலையும் வலுப்படுத்தியது.வாரம் ஒரு முறை பார்த்துக்கொண்டவர்கள், மாதம் ஒருமுறை என்றாகி மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்றாக, செழியன் தேர்வை நல்ல முறையில் எழுதி முடித்திருந்தவன், வேலைக்கும் சென்று கொண்டு அவளின் தேவையையும் சரியாகவே கவனித்தான்.அவளுக்கும் அவள் படிப்பிற்கு தேவையான அனைத்தும் அவள் கேட்கும் முன்பே அவளின் தேவையறிந்து நிறைவேற்றினான்.

 

 

இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் அவளை அழைத்து பேசிவிட்டு தான் தூங்கவே செல்வான். சிலநேரம் காரணமில்லாமல் பேசி காலைவரை காதல் பயிரை வளர்ப்பார்கள்.

அவன் படிப்பு முடிந்தததும் அதே வருடம் வந்த ஜூன் மாதத்தில் அவனின் சிறுவயது கனவான ஐ.பி.எஸ்-க்கான முதல் படியை தொடங்கினான். அதன் முதல் படியான பிரிமிலினரி எக்ஸாமில் தேர்ச்சி பெற்றவன், அதான் அடுத்த கட்டமான செப்டம்பர் மாதம் நடந்த ஒன்பது எக்ஸாமிலும் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவன், அடுத்து நடந்த மெயின் இன்டெர்வியூவிலும் நல்ல மதிப்பெண் எடுத்து முதல் நாற்பது ரேங்குக்குள் வர, அவனின் பெயரும் அனைவர்க்கும் தெரிய அவனின் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர் அவனை சேர்ந்தவர்கள்.

 

 

IPS அதிகாரி ஆவதற்கு உடல்தகுதி மிகவும் அவசியம் ஆகின்றது. அதைவிட மனவலிமையும் தேவையானது. இந்திய குடிமையியல் பணியில் மனஅழுத்தம் அதிகமுள்ள வேலையில் IPS தான் முதலிடம். இதற்காக அவனின் முயற்சிகள் அதிகம். இங்கு வெற்றியின் முதல் படியே முயற்சி தான்.

 

 

இரவில் வேலை பார்த்தும் பகலில் தேர்வுக்கு தயார் ஆகி அவனின் உழைப்பு சற்றும் சளைக்கவில்லை. அதன் பலனாய் அவன் இருக்கும் அதே ஊரிலேயே அவனுக்கு பதவி கிடைத்திருந்தது. அவனின் கனவுக்கு சிறிதேனும் உதவி புரிய நினைத்தவளோ முதல் ஆறுமாதம் வீட்டிற்கு சென்றவள், அதன்பின் செல்வதே இல்லை. வீடியோ காலில் அவர்கள் காதல் வளர்ந்தது. வேதா அவனிடம் காதலை அதுவரை கூறவும் இல்லை. ஆனால் அளவுகதிகமாக காதலிக்கிறாள். செழியன் ஒரு முறை ஐ லவ் யூ சொல்லு என்று கேட்டதற்கு கூட கண்டிப்பா சொல்வேன் என்றவள் ஒரு முறை கூட இதுவரை கூறவே இல்லை.

 

 

 

செழியன் வேலையில் சேர, அறிவழகன் மகனை எண்ணி பூரித்து போனார்.மீனாட்சிக்கும் சந்தோசம் தான் மகனின் வளர்ச்சியில். ஆனால் அது வேதாவுக்காகவும் அவளின் காதலுக்காகவும் என்று வருமா போது மகனின் வெற்றி அவருக்கு ரசிக்க வில்லை. அரவிந்தனுக்கும் செழியனை எண்ணி அத்தனை பெருமிதம். காண்போரிடம் எல்லாம் என் தம்பி, என் தம்பி என்று கூறி அத்தனை உவகை அடைந்தான்.அகரன் பல முறை முயற்சி செய்தும் செழியனுக்கு ஏனோ அவனிடம் பேச மனம் வர வில்லை. அவன் கூட தன்னை புரிந்து கொள்ள வில்லையே என்னும் ஆதங்கத்தில் அவனை விலக்கியே வைத்து இருந்தான்.

 

 

 

செழியன் வேலை கிடைத்த அன்று அவளுக்கு கால் செய்ய, “மாமா கங்கிராஜுலேஷன்ஸ். நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று கூற, “அப்படியே என் மாமா போலீஸ் ஆகிட்டாங்க. அவங்க கனவு நனவாகிடுச்சு. இனிமேல் நான் போலீஸ்க்காரன் பொண்டாட்டின்னு சொல்லி என்னை மிரட்டி விடியவிடிய தூங்கவிடாம உன் புருஷன் புகழ் பாடி டார்ச்சர் பண்ணதையும் சொல்லு” என்று அவளின் பின்னே செழியனின் தோழியான தன்விகாவின் குரல் கேட்டது.

 

 

வேதாவோ, “அக்கா அப்போ நான் தான் உங்கள தூங்க விடாம செஞ்சேனா” என்று பாவமாய் கேட்க, அவளோ, “அச்சோ அழகி.. நான் சும்மா சொன்னேன்டா ஜஸ்ட் ஃபன்” என்றவள் கையிலிருந்த போனை பிடிங்கி, “காங்க்ரட்ஸ் மச்சி” என்றாள்.

 

அவனோ, “தேங்க்ஸ்டி, அப்புறம் நீ என்ன என் பொண்டாட்டிய மிரட்டி வச்சுருக்கியா? அக்கானு கூப்பிட சொல்லி. புடிச்சு ஜெயில போட்ருவேன் பாத்துக்கோ” என்று கூற, “அடேய் இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா? நானும் நீயும் ப்ளஸ் டூ வரைக்கும் ஒண்ணாதான் படிச்சோம். எனக்கு இதுலதான் இண்ட்ரெஸ்ட். சோ டூ இயர்ஸ் படிப்பை பாதில விட்டுட்டு ஜாயின் பண்ணேன். இப்போ உன் பொண்டாட்டி கூட படிக்கிறேன். அவ என்னை வயசுக்காக அக்கானு கூப்பிடுறா, நானாடா அவளை அக்கானு கூப்பிட சொன்னேன். சோதிக்காதிங்கடா என்னைய என்றவள் தலையில் அடித்து கொண்டு,ஆனா நீ வேற லெவல் ஹஸ்பண்ட் தெரியுமா? உன் பொண்டாட்டி என்ன அக்கானு கூப்பிட்டதுக்கு பிரண்டையே ஜெயில்ல போடற அளவுக்கு” என்றவள் இன்னொன்னு சொல்லவா, “இவ இவ்ளோ அழகா கியூட்டா அக்கானு சொல்லும் போது, எனக்கே அவளை லவ் பண்ண தோணுது. நீ இவ்ளோ காதலிக்கறதுல எந்த டவுட்டும் இல்ல. இந்தா நீ அவகிட்ட பேசு,அப்புறம் கொஞ்சம் சீக்கிரமா உங்க காதல் பயிரை வளர்த்துட்டு அவளை விட்டுடு சாப்பிட லேட் ஆகிடுது” என்றவள், “அழகி நான் உனக்கும் டிபன் வாங்கிட்டு வந்துறேன், நீ அவனோட பேசு” என்றவள் வெளியே சென்றுவிட்டாள்.

 

 

போனை கையில் வாங்கியவள், “மாமா சேஃபா ஆஹ் இருங்க, சாப்பிட்டுட்டு போங்க.” என்று கூற, “சரி தங்கமே” என்றவன், “நீ இந்த வாரமாவது வந்துட்டு போகலாம்ல. என்னையும் வர வேண்டாம்னு சொல்ற எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு” என்றான்.

 

அவளோ, “இன்னும் கொஞ்சநாள்தானே மாமா. சரி தேவ் அண்ணாக்கும் போஸ்டிங் கிடைச்சுடுச்சா. அவரும் இன்னைக்குதான் ஜாயின் பண்றாரா?” என்று கேட்க, அவனோ எப்போதடா தன்னை கேட்பாள் என்பது போல அவனருகில் அமர்ந்து செழினையே பார்த்திருந்தவன், செழியனின் கண் தன்னை நோக்கியதும் தங்கை தன்னைதான் கேட்டிருக்கிறாள் என்று வேகமாக அவனின் கையில் இருந்து போனை பிடிங்கியவன், “குட்டிமா எப்படிடா இருக்க? எப்போ வருவ? சாப்டியா?” என்று இடைவிடாமல் கேள்வி கேட்டவனுக்கு பதில் கூறியவள், “அண்ணா வாழ்த்துக்கள், அப்புறம் மாமாவை பாத்துக்கோங்க, சாப்டிங்களா” என்று கேட்டாள்.

 

 

“நான் பாத்துக்கிறேன்டா. அவனுக்காகதான் கஷ்டப்பட்டு நானும் இந்த வேலைல சேர்ந்துருக்குறேன். அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டோம். அம்மா ரெண்டு பேருக்கும் சமைச்சு குடுத்துட்டு இப்போதான் கிளம்பினாங்க. உன்னை கேட்டாங்க நீ கால் பண்ணி பேசு” என்று கூறியவன், “இந்தா அவன்கிட்ட தரேன் பேசு” என்றவாறே மொபைலை அவனிடம் தந்துவிட்டு தன் அலைபேசியை எடுத்து கொண்டு அவனுக்கு முக்கியமானவளிடம் பேச சென்று விட்டான்.

 

 

செழியனோ, “சரி தங்கமே. நான் வச்சிடுறேன். சீக்கிரம் பார்ப்போம் லவ் யூ மிஸ் யூ சோ மச்” என்று கூற, அவளுக்குமே கண்கள் கலங்க, “மிஸ் யூ டு மாமா, கவனமா இருங்க” என்று கூறியவள் மனமே இல்லாமல் அலை பேசியை அணைத்திருந்தாள்.

 

 

இந்த இரண்டு வருடத்தில் நிறைய மாற்றங்கள், தேவின் பெற்றோர் செழியனிடம் நன்றாக பேச தொடங்கி இருந்தனர்.அவர்களிடம் வேதாவை அறிமுகபடுத்தி வைக்க, பெண்பிள்ளை இல்லாத அவர்களுக்கு குழந்தை போல் கள்ளமில்லாமல் பழகும் அவளை பிடித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.பெண்குழந்தை வேண்டி தவம் இருந்தவர்களுக்கு அது கிடைக்காமல் போயிருக்க, இப்போது கடவுள் தந்த வரமாய் அவளை ஏற்றுக்கொண்டனர்.

 

 

காலத்தின் வலிமை காதலின் வலி. அந்த காத்திருப்பின் வலி கூட காதலில் சுகமல்லவா. அதை இருவருமே நன்றாக உணர்ந்திருந்தனர் இந்த மூன்று வருடத்தில்.

 

 

அவனின் முழு நேரத்தையும் வேலை இழுத்து விட, அவளுக்கும் கல்லூரி முடிந்ததும் ஒரு பிரபலமான நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை கிடைக்க, ஒரு வருடம் மட்டுமே இங்கு பணி. வருடத்தின் முடிவில் சென்னையிலேயே மாற்றி தருவதாகவும் கூற, செழியனின் அனுமதியுடன் சேர்ந்துவிட்டாள்.

 

 

அவ்வளவு பெரிய நிறுவனம் அவளின் திறமைக்காகவும் ப்ராஜெக்ட் டிசைனுக்காகவும் அந்த பெரிய வாய்ப்பை வழங்க, வேதா முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் செழியனின் வற்புறுத்தலில் அங்கு சேர்ந்திருந்தாள்.

 

 

அவனுக்கு அவள் இல்லாமல் இருக்க முடியாவிட்டாலும், அவளின் கனவை பற்றி அறிந்தவன் அல்லவா, லட்சியத்தின் நிறைவை அனுபவித்துக் கொண்டிருப்பவன் தன்னவளின் கனவை நனவாக்க அவளுக்கு ஒத்துழைப்பு அளித்திருந்தான்.

 

 

இருவரும் பார்த்தே இரண்டு வருடங்கள் இருக்க, வீடியோக்களில் இரண்டு நிமிடம் பார்த்துக்கொள்பவர்களுக்கு பேச்சே இருக்காது. ஒரு வருடம் என்றது ஒன்றரை வருடங்கள் தாண்டியும் நீடித்தது.

 

 

இங்கே அரவிந்தனுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்க, செழியன் மருத்துவமனையில் சென்று பார்த்து உறவாடி வர, மீனாட்சியோ, “ஏன் நீ கட்டுன மகராசி புள்ளைய பாக்கக்கூட வர மாட்டாளோ? அப்படி என்ன படிப்போ” என்று வாயை திறக்க, “அத்தை நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா? உங்களுக்குதான் அவங்களை பிடிக்கலையே.. அப்பறமும் ஏன் அவங்களை குத்திட்டே இருக்கீங்க” என்று திட்டியது லாவண்யாவின் தங்கை சவிதா.

 

 

செழியனை ஒரு தலையாக காதலிப்பவள், அவனின் திருமணம் பற்றி அறிந்தாலும் அவளின் மனதை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அதுவும் இப்போது இந்த நான்கு வருடத்தில் இன்னும் திடமாக கம்பீரத்துடன் வலம் வருமா செழியனை அவள் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

 

 

செழியன் வீட்டுக்கு அடிக்கடி வருபவள், பாட்டி உங்களை பாத்துட்டு வர சொன்னாங்க அத்தான், இங்க பிரண்ட் வீட்டுக்கு வந்தேன் அப்படியே பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று அவனையே வலம் வர, அவனுக்கு எதிரில் இருப்பவரின் கண்களை பார்த்தே அறிந்து கொள்பவனுக்கு அவளின் எண்ணம் தெளிவாய் புரிந்துபோனது.

 

ஒரு நாள் அவளை அருகில் இருத்தியவன் வேதாவிற்கு போன் செய்து ஸ்பீக்கரில் போட்டவன் பேசும் முன்பே, “உம்மா ம்மா” என்று முத்த மழையை தொடங்கி இருந்த அவனின் செல்ல ராட்சசியோ, “மாமா நான் இப்போதான் உங்களுக்கு கால் பண்ணனும் நினச்சேன். நீங்களே கால் பண்ணிட்டீங்க. சாரி மாமா.. டூ டேஸ் கொஞ்சம் ஒர்க் அதிகம் ஆகிடுச்சு கால் பண்ணவே இல்ல. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்” என்று கூற, அதில் அழகாய் சிரித்தவன், “ஐ மிஸ் யூ டு தங்கமே… நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். அப்புறம் உனக்கு ஒருத்தங்களை இன்ட்ரோ குடுக்கணும்” என்றவன் சவிதாவின் புறம் மொபைலை திருப்பியவன், “நான் உங்கிட்ட சொல்லிருக்கேன்ல லாவண்யா அண்ணி தங்கச்சி சவிதா. இதோ மேடம்தான். அவங்க பிரண்ட் இங்க பக்கத்து தெருவுலதான் இருக்காங்க, அப்படியே என்ன பாக்க வந்துருக்கா நீ கூட பாக்கணும் சொன்னியே” என்று கூறியவன்போனை அவளிடம் கொடுத்தான்.

 

வேதாவோ, “ஹாய் சவிதா. ஐ ம் வேதா” என்று கூற, சவிதாவோ அவர்களின் கொஞ்சலிலே முகம் விழுந்து போனவள் அவளிடம், “ஹாய் நல்லாருக்கீங்களா?” என்று கேட்டவள், “மாமா சொல்லிருக்காங்க தெரியும். சரி நான் இன்னொரு நாள் பேசுறேன். டைம் ஆகிடுச்சு அக்கா தேடுவா நான் போய்ட்டு வரேன் மாமா” என்றவள் வேகமாக வெளியே சென்றுவிட்டாள்.

 

சவிதாவின் வரவு வேதா செழியனின் வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்துமா என்பதை அடுத்தடுத்த அத்யாயங்களில் காணலாம்.

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. பிரிவு இருவருக்கும் வலி தந்தாலும் கூட லட்சியத்தை நோக்கிய அவர்களது வெற்றி பயணமாக அது.

    வெற்றியின் முதல் படி முயற்சி. 👏🏼 இங்கு செழியனது வைராக்கியம் அவனை அயராது உழைக்க வைத்து மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்துள்ளது.

    அவன் தனது லட்சியத்தின் வெற்றியை சுவைத்ததை போல், அவளும் அவளது லட்சியத்தின் வெற்றி சுவையை சுவைக்க உறுதுணையாக இருக்கின்றான்.

    இருவரது காதலையும் கண்கூடாக கண்ட பின்பும் கூட சவிதாவின் எண்ணம் அருவருக்கதக்கதாய்.