
அழகியே 12
அவர்கள் மூவரும் வீட்டுக்கு வர, மீனாட்சி வீட்டு வாசலில் போட்டிருந்த சோபாவில் அமர்ந்திருக்க, செழியனை கண்டதும், “செழியா வந்துட்டியா, அந்த சனியன் ஒளிஞ்சுதா? எனக்கு தெரியும் நீ வருவேன்னு. இனியாச்சும் நான் சொல்றத கேட்டு நடந்துக்கோடா” என்றவாறே அவனை கைபிடித்து அழைக்க, அவரின் கையை உதறியவனோ “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனேன்னு வை சத்தியமா சொல்றேன் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன். என் கையாலையே கொன்னு போட்ருவேன்” என்று கர்ஜித்தான்.
அவனின் குரல் கேட்டு அனைவரும் வந்து விட, வேதநாயகி கண்களில் நீருடன் அவனையே பார்த்துக்கொண்டு இருக்க, அர்ச்சனாவும் தமையனை பார்த்த மகிழ்வில் இருந்தாள். அகரனோ மீண்டும் வீட்டுக்கு வந்துட்டான் என்று மகிழ்வில் தம்பியை பார்த்தான்.
மீனாட்சி, “செழியா என்ன… என்னடா பேசுற.. நான் உன்னை பெத்தவடா.. என்னையே கொன்றுவியா?” என்று கேட்க, “நிஜமாலுமே நீ என்னை பெத்தவ தானானு எனக்கே சந்தேகம் வருது” என்றான் ஆற்றமையுடன்.
அவனின் தந்தை, “டேய் என்ன பேசுற.. உன்னை இங்க யார் கூப்பிட்டா மரியாதையா கெளம்பு. இங்க வந்து என் பொண்டாட்டிய அசிங்கப்படுத்துற” என்று திட்ட, அவனோ, “திட்டதானே செஞ்சேன். இதோ அங்க இருக்குற தொடப்பத்த எடுத்து அது பிஞ்சு போற அளவுக்கு அடிச்சு கீழ தள்ளி மண்டைய ஒடைக்கலல. அதனால நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியா இருங்க. இருக்கனும். புரியுதா” என்று வாய் மேல் விரல் வைத்து கூறியவனின் செயலில் அதிர்ந்தே போனார்.
மீனாட்சி, “ஓ… அந்த பிச்சைக்காரிய நான் அடிச்சதுக்கு என்னை திருப்பி அடிக்க வந்துருக்க அப்படி தானே?” என்று கேட்க, அறிவழகன் அதிர்ந்து போனவராய், “மீனாட்சி என்ன காரியம் பண்ணி வச்சுருக்க நீ” என்று திட்ட, அரவிந்தோ அதுமட்டுமில்லபா என்று அங்கு நடந்த அனைத்தையும் கூற, அறிவழகன் கோவம் தலைக்கேற அவரின் கன்னத்தில் கை வலிக்க மாறி மாறி அறைந்தார்.
“அவன் செஞ்சது எனக்கு பிடிக்கலதான் அதுக்காக இவ்ளோ கீழ்த்தரமான ஒரு காரியத்தை செஞ்சுருக்கியே ச்சே…” என்றவர் நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்பது போல செழியனை பார்த்தவர், அப்படியே அங்கிருந்த சோபாவில் அமந்துவிட்டார்.
அங்கிருந்த யாரும் தடுக்கவில்லை. அவர் செய்த காரியத்தை கேட்டதும். அத்தனை அடி வாங்கியும் அப்படியே கல் போல நின்றிருந்தவரிடம் வந்தவன் “அது என்ன சொன்னீங்க, ஆசை தீர்ந்ததும் கழட்டி விட்டுட்டு வந்துருவேனா? அவளோ கேவலமானவனா நான். நீங்க அவளை அசிங்கப்படுத்துறதா நினச்சு என்னையும் என் பிறப்பையும்தான் கேவலப்படுத்திருக்கீங்க? சத்தியமா இதெல்லாம் உங்களுக்கு புரியாது. மூணு மாசம் இல்லை, மூச்சு நிக்கற வரை இனி அவ மட்டும் தான் எனக்கு எல்லாம். அவ என்னை மயக்கி கல்யாணம் பண்ணல. நான்தான் அவகிட்ட மயங்கி கல்யாணம் பண்ணிகிட்டேன். வாழ்க்கை முழுசும் அவகிட்ட மயங்கிதான் கிடக்க போறேன். ஆனால் ஒரு அம்மா பையன் கிட்ட எதை பேச கூடாதோ அதை நீங்க பேசி நான் பெத்தவங்க முன்னாடி என்னலாம் சொல்ல கூடாதோ எல்லாத்தையும் சொல்ல வச்சுட்டிங்க. அவளை பார்த்தா அருவருப்பா இருக்குன்னு சொன்னீங்க இல்லை. உங்களுக்கு மகனா பொறந்தத நினச்சா எனக்கு அருவருப்பா இருக்கு” என்று கூற, அதில் உடைந்து போனவர் அவனை பார்த்தார்.
“அன்னிக்கு நீங்க சொன்னீங்க. இப்போ நான் சொல்றேன் இந்த நிமிசத்துல இருந்து எனக்கு அம்மானு ஒருத்தங்க இல்ல. நீ இல்லனு நினைச்சுக்கிறேன்” என்று ஒருமையில் பேசியவன் வாசலை தாண்டி செல்ல, மீனாட்சிக்கு மகன் பேசியது தாங்க முடியாமல் நெஞ்சை பிடித்து கொண்டு விழ, அரவிந்திடம் திரும்பியவன், “கெட்ட செய்தியா இருந்தா தயவு செஞ்சு என் கிட்ட சொல்லிராதே” என்று கூறி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டான்.
நெஞ்சு வலி என்றால் மகன் தன்னிடம் வந்து விடுவான் என்று நாடகம் செய்ய நினைத்தவருக்கு, அவன் கடைசியாய் கூறிய, வார்த்தை நிஜமாகவே வலியை தோற்றுவித்தது.
நெஞ்சில் கைவைத்து மகன் சென்ற திசையையே பார்த்திருந்த மீனாட்சியின் அருகில் வந்த அரவிந்தனோ, “நடிச்சது போதும். போய்ட்டான் அவளோதான். அவனை நீங்க முழுசா இழந்துட்டீங்க. உங்களுக்கு ஒரு காய்ச்சல் வந்தா கூட துடிச்சு போய் அன்னிக்கு முழுசும் உங்க கூடயே இருக்கறவன், நீங்க செத்தா கூட தகவல் சொல்ல வேணாம்னு சொல்லிட்டு போறான். அவனை இப்படி மாத்துனது நீங்க தானே. அவன் அப்படி என்னமா தப்பு பண்ணான். ஆக்சிடெண்டல்லா ஒரு விஷயம் நடந்துருச்சு. அவன் என்ன பண்ணான்.
இங்க தான முதல்ல கூட்டிட்டு வந்தான். எனக்கு அவளை விட முடியாதுனு சொன்னான். நம்ம ஒரு நல்ல முடிவா எடுத்திருக்கலாம். அந்த பொண்ணு பேரெண்ட்ஸ் கிட்ட பேசி என்னனு டிசைட் பண்ணலாம் நீ பொறுமையா இருன்னு ஒரு வார்த்தை ஆறுதலா சொல்லிருந்தா, அவன் நிச்சயம் கேட்ருப்பான். நீங்க என்ன பண்ணீங்க கொண்டு போய் ஆசிரமத்துல விட்ருலாம் அது இதுனு பேசி அவனை தூண்டி விட்டுட்டீங்க. அவன்தான் ஒரு முடிவு பண்ணிட்டா அதை மாத்திக்க மாட்டான்னு தெரியும்ல, அப்புறமும் நீங்க அந்த பொண்ண தப்பா பேசுனீங்க. அவனை நம்பி வந்தவளை கைவிடக்கூடாதுனு அவனும் கிளம்பிட்டான். சரி அப்போவாச்சு அமைதி ஆனீங்களா நீங்க? எதெல்லாம் பேச கூடாதோ எல்லாம் பேசி நடத்தி ஒரேடியா முடிச்சு விட்டுடீங்க? அவன் சொல்லிட்டு போயிட்டான் செத்தாலும் இந்த வீட்டுக்கு வரமாட்டேன்னு. உங்களுக்கு அவன் தேவையில்லாம இருக்கலாம். எனக்கு வேணும்மா என் தம்பி வேணும்” என்றவனுக்கு குரல் கமறியது.
லாவண்யா, “ச்சே நீங்க கேவலமா இருப்பீங்கன்னு நினச்சு கூட பாக்கல அத்தை. நீங்க அந்த பொண்ண அவளோ அடி அடிச்சிருக்கீங்க. ஆனாலும் அவ உங்களை பத்தி எதுவுமே செழியன் கிட்ட சொல்லவே இல்லை. இதே இடத்துல நான் இருந்துருந்தேன் நீங்க செஞ்சத டபுள்ளா திருப்பி குடுத்துருப்பேன்” என்றவள் உள்ளே சென்றுவிட, மீனாட்சியோ அரவிந்திடம் எகிறினார்,
“இப்போ உன் பொண்டாட்டி என்னடா சொல்லிட்டு போறா, அடிச்சுருவாளா அவ என்னைய” என்று கேட்க, “கண்டிப்பா அடிச்சுருப்பா” என்றவன், “அந்த பொண்ணு முகத்தை முதல்ல ஒரு நிமிஷம் பொறுமையா பார்த்தா, நீங்க இவ்ளோ வேலை பண்ணிருக்க மாட்டிங்க. குழந்தை மாதிரி இருக்கா அவளை போய்” என்றவனை இடைமறித்தவர், “நீ எதுக்குடா அங்க போன. ஓ இவ்ளோ பரிஞ்சிகிட்டு வர, உன்னையும் மயக்கிட்டாளா?” என்று கேட்க, அறிவழகன் மனைவியை கேவலமாக பார்த்தார்.
அரவிந்தன் அன்னையின் குற்றச்சாட்டில் கூனி குறுகி நிற்க, வேகமாக வெளியே வந்தா லாவண்யாவோ, “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க, பேசறதுக்கு நாக்கு இருக்காது” என்றவள் கைநீட்டி மிரட்டியவள், “நீ வா மாமா உள்ள. மனுசங்ககிட்டதான் நல்லத எதிர்பார்க்க முடியும். இவங்கள கேடு கெட்டவங்க கிட்ட எதையும் பேசி ஜெயிக்க முடியாது” என்று கூறி உள்ளே அழைத்து சென்றாள்.
எழிலனோ, “அசிங்கமா இருக்குமா. உங்களோட எண்ணங்கள் இவ்ளோ கீழ்த்தரமானதா இருக்கு. இனிமேல் நாங்க அர்ச்சனா கிட்ட பேசுனா கூட நீங்க அப்படி தான் நினைப்பீங்க” என்று வார்த்தையை விட்டுவிட்டான்.
மீனாட்சியோ, “அகரா என்னை மன்னிச்சுடுடா. கோவத்துல பேசிட்டேன். நீயும் என்னை வெறுத்துடாத” என்று அழ, அவனோ, “செழியன் எப்போ உங்களை மன்னிக்கிறானோ, அப்போதான் நான் இனிமேல் உங்ககிட்ட பேசுவேன்” என்றவன் வேகமாக சென்றுவிட்டான்.
மீனாட்சி அறிவழகனின் அருகில் செல்ல, “உன்னோட அவசரத்தனத்தால நீ இன்னிக்கு எத்தனை உறவுகளை இழந்துட்ட தெரியுமா? என் செழியன் அவன் வரமாட்டான் இனிமேல் இங்க வரமாட்டான்” என்றவர் இருந்த இடத்திலேயே அழ, மருமகளின் அருகில் வந்த வேதநாயகியோ, “இதுவரைக்கும் நான் உன்னை மாதிரி ஒரு மருமகள் யாருக்கும் கிடைச்சதில்லன்னு அவளோ பெருமைபட்ருக்கேன். ஆனா இன்னிக்கு உன்னை மாறி ஒரு பொம்பளை பொறக்கவே கூடாதுனு வேண்டிக்குறேன்” என்று கூறிவிட, அப்போதும் அவருக்கு தான் செய்தது புரியவில்லை.
அவளுக்காக குடும்பம் மொத்தமும் என்னை திட்டுது. விடமாட்டேன்டி என்று நெஞ்சில் வஞ்சம் சேர்த்து வைத்தார்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. செழியனும் டிரைவர் வேலைக்கு சென்றான். தேவ் அதற்கும் சண்டையிட, நண்பனை சமாதானபடுத்தியும் இருந்தான். வேதாவிற்கு மொபைலை கொடுத்தவன் எந்த அவசர தேவை இருந்தாலும் அவனுக்கு அழைப்பு விடுக்கவும் கூறி இருந்தான்.
அன்று வாடகை ஊர்தியை அவன் ஓட்டிக்கொண்டு இருக்க, அதில் ஏறிய கல்லூரி பெண்கள் இருவரோ இந்த காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சிடுமாடி, ஒன் மந்த் கிளாஸ் போயிருக்கும் வேற” என்று பேசிக்கொண்டே வர, அதுவரையிலும் அவனுக்கு உரைக்காத வேதாவின் படிப்பு அப்போதுதான் உரைத்தது.
இவ்வளவு நாட்கள் அவள் வீட்டை சுத்தமாக அழகாக பார்த்துக்கொள்ள, அவனும் தைரியமாக வேலை பார்த்தான். அவர்களை இறக்கி விட்டவன் நேராக வீட்டிற்கு செல்ல, வேதாவோ அப்போதுதான் வேலையை முடித்து வந்தவள், கண்ணாடியின் முன் அமர்ந்திருக்க, நெற்றி காயம் நன்றாக ஆறியிருந்தது.
அப்போதுதான் தலை குளித்து வந்தவள் தலையை உலர்த்தி கொண்டு இருக்க, செழியன் அவளை பார்த்துக்கொண்டே உள்ளே வந்தவன், அவளின் கையில் இருந்த டவலை வாங்கி தலையை துவட்டியவாறே, அவளின் பின்கழுத்தில் முகம் புதைத்து, குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்தவன், “ரொம்ப அழகா இருக்க தங்கமே” என்று கூற, அவள் இதழ் வளைத்து சிரிக்க, கண்ணாடியில் இருவரின் பிம்பமும் பேரழகாய் தெரிந்தது.
அவளை கைபிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவன், “நீ என்ன படிச்சுட்டு இருந்த தங்கமே” என்று கேட்க, இதழ் சிரிப்பு விலகாமலே பி.எஸ்சி பேஷன் டிசைனிங் அண்ட் காஸ்ட்யும் டிசைனிங் என்று கூறியவள் விழுப்புரத்தில் ஒரு பெரிய கல்லூரியின் பெயரை சொன்னாள்.
அவனோ நீ ஏன் மறுபடியும் படிக்கக்கூடாது என்று கேட்க, அவளோ, “இப்போ எப்படி” என்று கேட்க, “ஏன் இப்போ என்ன? நீ தாராளமா படி. நான் படிக்க வைக்குறேன், உனக்கு படிக்க இஷ்டம் இல்லையா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் இல்ல. எனக்கு ரொம்ப பிடிக்கும். பெரிய டிசைனர் ஆகணும் அதான் என்னோட அம்பிஷன். என்னோட காலேஜ் எங்க வீட்டுல இருந்து ரொம்ப தூரத்துல இருக்கு. நான் ஹாஸ்டல் இருந்து படிச்சேன். சரி இப்போ இதெல்லாம் ஏன் கேக்குறீங்க, நான் மறுபடியும் படிக்க போறேனா”என்றவளின் கண்கள் ஒரு நிமிடம் மின்னி மீண்டும் சோகமானாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வீட்ல எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க … இந்த அம்மா மட்டும் இப்படி இருக்கு … இந்த அம்மா பெத்த பிள்ளைகள் எல்லாம் தங்கமா இருக்கு … சூப்பர் செழியா நல்லா பேசுன … செழியன் கதாபாத்திரம் சூப்பர் … இந்த வயசுல ரொம்ப பக்குவம் … எடுத்ததை செய்து முடிக்கிற தைரியம் … பொண்டாட்டி பத்தி யோசிக்கிறது எல்லாம் சூப்பர் …
Thanks sis