
அழகியே 10
“வாடா பாரி வள்ளல் பரம்பரைல பொறந்த வள்ளலே உன்னைத் தான் தேடுனேன். நீ தான் தாலியெடுத்து குடுத்து கல்யாணம் பண்ணி வச்சியாமே. நேரம் போறதுக்காக அவன் கூட ஒட்டிக்கிட்டு அவன் பண்றதுக்கெல்லாம் தாளம் போடுற நீ நல்லவன். நான் நல்லவ இல்லையா? என் சாபம் பலிக்காதா?” என்று கேட்டார்.
அவனோ சற்றும் சளைக்காமல், “நீங்க நல்லவங்களா இருந்துருந்தாதான் அவனுக்கு இந்த நிலைமையே வந்துருக்காதே. அவன் சூழ்நிலைய புரிஞ்சுக்கிட்டு அவன் முடிவ ஏத்துகிட்டு இருந்திருந்தா நான் அவனுக்கு தாலியெடுத்து குடுத்து கல்யாணம் பண்ணி வெச்சு நேரம் போகாம அவனோட ஊர் சுத்தப்போறேன்” என்று திருப்பி கொடுத்தான்.
அவனுக்கு விடைக்கூறாமல் செழியனிடம் திரும்பியவர், “எல்லாம் இன்னும் மூணு மாசத்துக்கு தான். அவகிட்ட ஆசை தீர்ந்ததும் அம்மா ஏமாந்துட்டேனு வந்து நிப்ப அப்புறம் பேசிக்கிறேன்” என்றவர் செழியன் “ச்சி” என்றதும் தான் தான் என்ன பேசினோம் என்று உரைத்தது.
செழியனோ, “தேவ் வண்டிய எடு. இதுக்கு மேல நான் இங்கருந்தா என்னால நிச்சயம் பொறுமையா இருக்க முடியாது” என்று கூற, அவரோ, “அடிச்சிருவேன்னு மறைமுகமா சொல்றியோ” என்று மேலும் அவனை கோபப்படுத்த, தன்னை கட்டுப்படுத்தியவன், “நேரிடையாவே சொல்லுறேன், சத்தியமா அடிச்சுருவேன்” என்றவன் வண்டியில் ஏறி சென்று விட்டான்.
மீனாட்சிதான் பேசிய அனைத்தையும் மறந்தவர், அவன் கூறிய அடிச்சுருவேன் என்ற வார்த்தையிலே அதிர்ந்து போனார். காரில் ஏறி வீட்டுக்கு சென்றவர் ஹாலில் அமர்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழ, வீட்டில் அனைவரும் வந்து கேட்க, செழியன் கடைசியாக திட்டியதை மட்டும் கூற, அவரின் கணவரோ, “அவனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு சொல்லியாச்சு இல்ல.. அப்புறம் நீ எதுக்காக அவனை பார்க்க போன. அவனுக்கு எவ்ளோ தைரியம்” என்று திட்ட, வீட்டில் அனைவரும் தாய்க்கு ஒன்று என்றால் துடிக்கும் செழியனா அப்படி கூறியது என அதிர்ந்து நின்றனர்.
அரவிந்தன் அப்போதுதான் தேவ்விடம் போன் பேசியவன், மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன் அன்னையிடம் வந்து, “நீங்க இவ்ளோ கீழ இறங்கி பேசுவீங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுமா. உங்களை அவன் எவ்ளோ மதிக்கிறான். நீங்க சொன்னதுக்காகதான் அவன் இங்க இருந்து போனான். அந்த பொண்ண பத்தி உங்களுக்கு என்னமா தெரியும் அவளோ தரக்குறைவா பேசீருக்கீங்க” என்று கேட்டதில் அதிர்ந்து அவன் முகம் பார்க்க,
அவன் மனைவி லாவண்யாவோ, “உங்கள எவ்ளோ உயர்வா நினைச்சுருந்தேன் தெரியுமா அத்தை. ச்சே.. இவ்ளோ கேவலமா நடந்துருக்கீங்க அசிங்கமா இருக்கு. அதுவும் ரோட்ல அத்தனை பேர் முன்னாடி அப்படி பேசிருக்கீங்க செழியன் பேசுனதோட விட்டான்” என்று கூறியவள் மேற்கொண்டு பேசாமல் உள்ளே சென்று விட,
அவரோ “இப்போ அவ என்னடா சொல்லிட்டு போற, அவன் அடிக்கலனு வருத்தப்படறாளா?” என்று கேட்க, “அது எனக்கு தெரியாது மா.. ஆனா சத்தியமா நீங்க பேசுனத்துக்கு நான் அங்க இருந்துருந்தா அவன் சொன்னதை நான் செஞ்சுருப்பேன்” என்றவன் வேகமாக சென்று விட்டான்.
அவரின் கணவரோ, “அதான் அவனோட எந்த உறவும் வேண்டாம்னு முடிவு பண்ணியாச்சே மறுபடியும் போய் ஏன் மீனாட்சி நீ அவமானப்படுற? இதான் கடைசி முறையா இருக்கனும்” என்றவர் எச்சரித்து விட்டு சென்று விட, வேதநாயகி மருமகளை கண்டனப் பார்வை பார்த்து உள்ளே சென்றுவிட்டார்.
செழியன் பின் அமர்ந்திருக்க, தேவ் வண்டியை செலுத்திகொண்டிருந்தான். அவனின் போன் ரிங்காக, அவன் எடுக்கவில்லை. மீண்டும் அடிக்க, செழியன் தான், “போன் அட்டென்ட் பண்ணுடா, இம்போர்ட்டண்ட் ஆஹ் இருக்க போகுது” என்று கூறினான்.
“அம்மாவா இருக்கும். இப்போ உன் அம்மா பேசுனாங்க இல்ல போன பண்ணி அங்க அழுதுருப்பாங்க” என்றவன் கூற, அதற்குள் நான்காவது முறை ஒலிக்க,
அன்னையாக இருந்தாலும் இத்தனை முறை அழைக்க மாட்டாரே என்று யோசனையுடன் வண்டியை நிறுத்தி விட்டு பாண்ட் பாக்கெட்டிலிருந்து போனை எடுக்க அரவிந்த்தான் அழைத்து கொண்டிருந்தான்.
அரவிந் அண்ணன் இவ்ளோ தடவ கால் பண்ணிருக்கிறார். உன் போன் எங்க என்று கேட்க, செழியன் தன் மொபைலை எடுத்து பார்க்க, அதுவோ சார்ஜ் இல்லாமல் உயிர்ப்பை விட்டிருந்தது.
அவன் எடுப்பதற்குள் மறுமுறை போன் அடிக்க, அதை எடுத்தவன் காதில் வைக்க, “டேய் அறிவு கெட்டவனே போன் பண்ணா எடுக்க தெரியாதா உனக்கு? செழியன் எங்க போன அவன்கிட்ட குடு” என்று கூற, செழியன் அதைவாங்கி காதில் வைக்க,
“செழியா அம்மா வீட்டுக்கு வந்தாங்களா? ஏதாச்சும் ஹார்ஷா பேசிட்டாங்களா? சாரிடா.. நான் லாவண்யாகிட்ட நீ எங்க இருக்கன்னு கேட்டா சொல்லிட்டு இருந்தேன் அதை அம்மா கேட்டுட்டாங்க போல. எழில்கிட்ட அங்க கூட்டிட்டு போக சொல்லிருக்காங்க. அவன் நேரமாயிடுச்சு ஈவினிங் பாக்கலாம்னு கிளம்பிட்டான் போல. எனக்கு இப்போதான் கால் பண்ணி சொன்னான். இப்போ லாவண்யா அத்தை கோவமா வெளியே போனாங்கன்னு சொன்னா? அதான் கேட்டேன்” என்று கூற,
செழியன், இல்லடா அவங்க வீட்டுக்கு வரல. என்னைதான் கடைல இருந்து வெளியே வரும்போது பார்த்தாங்க” என்று நடந்த எதையும் கூறாமல் அதை மட்டும் கூற, தேவ் வேகமாக போனை பிடிங்கியவன், “அவங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல. பெத்த பையன ஒரு அம்மா என்னலாம் பேச கூடாதோ எல்லாம் பேசிட்டாங்க” என்றவன் அனைத்தையும் கூறிய பிறகே போனை வைத்தான்.
செழியனோ, “இப்போ அதை எதுக்குடா, அவன்கிட்ட சொன்ன உனக்கு அறிவிருக்கா” என்று திட்ட, அவனோ, “அவங்களுக்கும் தெரியட்டும் உங்க அம்மாவபத்தி. வா வீட்டுக்கு போகலாம். தங்கச்சி முழிச்சுருக்கும். தலை வலிக்குது அவ கையால ஒரு டீ குடிக்கணும்” என்று அன்றைய டீயின் ருசியை நினைத்து கொண்டே செழியனை அழைத்து கொண்டு வண்டியில் ஏறினான்.
செழியன், “அவள் எழுந்திருப்பாளா? எழுதி வைத்ததை படிச்சிருப்பா. நான் வேற வந்து 1 ஹவர்க்கு மேல ஆச்சு” என்று வாட்ச்சை பார்க்க, அதுவோ மாலை மணி ஆறை காட்டியது.
ஆனால் அவனுக்கு தெரியாதது, மீனாட்சி அவனை பார்ப்பதற்கு முன்பே வந்து இங்க ஒரு ஆட்டம் ஆடிவிட்டு சென்றதை அவன் அறியவில்லை.
வீட்டிற்கு செல்ல, அந்த தெருவில் உள்ள வீடுகளில் உள்ள பெண்கள் சிலர் வெளியே கூட்டம் கூட்டமாக நின்றிருக்க அவர்கள் செழியனையும் தேவையும் கண்டவர்கள், “இந்த பையன் தான் போல, பெரிய பணக்கார வீட்டு பையன் தான் அழகாவும் இருக்கான். அதான் அந்த பொண்ணு ஒட்டிக்கிச்சு போல” என்றும், “சில பொண்ணுங்க அப்பிடிதான் இருக்காங்க, பணத்துக்காக நல்ல பணக்கார பசங்களா பாத்து காதலிக்கிறேன்னு ஓடி வந்துடுதுங்க” என்றும், சிலர், “எதுவுமே தெரியாம நாம ஏன் தப்பா பேசணும். அந்த புள்ள பாவம். அந்த பொம்பள அரக்கி மாதிரி போட்டு அந்த அடி அடிக்குறா” என்று சிலர் மீனாட்சியையும் திட்ட… ஒவ்வொன்றாக கேட்டவன் கடைசி வார்த்தையில் அதிர்ந்து போய் வீட்டிற்குள் ஓடினான்.
அங்கோ, வேதாவின் காயத்தில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருக்க, பக்கத்து வீட்டு பெரியவரான சுந்தரம் பஞ்சை வைத்து துடைத்து கொண்டும், அவரின் மனைவி துளசியம்மாள் அழுது கொண்டிருந்த வேதாவை அணைத்து ஆறுதல் கூறி கொண்டும் இருந்தனர்.
செழியனுக்கு அவளை அந்த நிலையில் கண்டதும் உடல் நடுங்கி போனது. வேகமாக அவளருகில் செல்ல, அவளை அணைத்திருந்த துளசியம்மாள் எழுந்துகொள்ள ஓடி சென்று அவளை தாங்கி கொண்டவனோ, “என்னாச்சு தங்கமே… ரத்தம் இவ்ளோ வருது, ஏன் அழற” என்று தான் நினைத்தது உண்மையாக கூடாது என்று நினைத்து கொண்டே கேட்க, அவளின் அழுகை அதிகம் தான் ஆனது.
தேவ் வண்டியை நிறுத்தி விட்டு அப்போதுதான் உள்ளே வந்தவன் செழியனின் பதட்டமான முகத்தையும் வேதாவின் அழுகையையும் கண்டவன், ஓடி வந்து பெரியவரின் கையில் இருந்த பஞ்சை வாங்கி சுத்தம் செய்து, பேண்டேஜ் ஒட்டியவன். “என்னாச்சு டா கீழ எதுவும் விழுந்துட்டியா” என்று கேட்க, அவளோ கண்களை துடைத்து கொண்டு, “கால் ஸ்லிப்பாகி விழுந்துட்டேன், ரொம்ப வலிக்குது” என்று கூறினாள்.
துளசியம்மாளோ, “ஏன் ஆத்தா அந்த பொம்பள உன்னய அத்தனை பேச்சு பேசி என்ன அடி அடிச்சு கீழ தள்ளி விட்டுச்சு. அத்தனை அராஜகம் பண்ணி தெருவுல நின்னு அவ்வளோ சாபம் குடுத்துருக்குறா அவளை காப்பாத்த போய் இப்படி பொய் சொல்லுறியே நல்ல மனுசங்களை காக்குறதுக்கு பொய் சொல்லலாம். ஆனா அவளை மாதிரி அசிங்கம்பிடிச்ச பொம்பளைய காப்பாத்த நினைக்காத தாயி. அதெல்லாம் சாமிக்கே அடுக்காது” என்றவர் செழியனின் புருவம் உயர்த்திய பார்வையில் நடந்ததை கூற தொடங்கினார்.
செழியன் சென்று அரைமணி நேரம் கழித்து உறக்கத்தில் இருந்து விழித்தவள் அருகே இருந்த நோட்டில், “தங்கமே, நான் வெளியே போய்ட்டு வரேன். சீக்கிரம் வந்துருவேன். பசிச்சா ப்ரூட்ஸ் இருக்கு பிரிட்ஜ்ல சாப்பிடு” என்றிருக்க, அதை வருடியவள் வெளியே வந்து ஹால், கிட்சன் என அனைத்தையும் பெருக்கியவள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விரைவில் சோர்ந்து போக, நீர் அருந்தலாம் என்று பிரிட்ஜ்யில் இருந்து தண்ணீரை எடுத்து குடிக்க, வேகமாக ஒரு கரம் அவளின் தலை முடியை பற்றி இழுத்தது.
வலியில் கண்களில் நீர் கோர்க்க திரும்பியவளிடம், “ஏண்டி நாசமா போனவளே, உனக்கு விழுந்து சாகறதுக்கு வேற எவன் வண்டியும் கிடைக்கலையா? விழுந்தது தான் விழுந்தியே அப்படியே செத்து தொலையறது தான. பொழைச்சவ அப்படியே என் புள்ளைகிட்ட ஒட்டிக்கிட்ட எப்படிடி பணக்காரங்களா எப்ப வருவாங்க அவங்கள பிடிச்சுக்கலாம்னு நேரம் பாத்து இருந்தியோ. உன் மொகரைக்கு என் புள்ள கேக்குதா. உன் மூஞ்சிய கண்ணாடில பாத்துருக்கியா. உடம்புல இத்தன புண்ண வச்சுக்கிட்டு எதை காட்டி என் பையன மயக்குன. உன்ன பாக்கவே அருவருப்பா இருக்குது. அதெப்படிடி இருபது வருசமா நாங்க புள்ளைய பெத்து அருமை பெருமையா வளர்ப்போம் வந்த ஒரே நாள்ள பிரிச்சுட்டு போய்டுறிங்க. விடமாட்டேண்டி உன்ன,” என்றவர் முடியை பிடித்து இழுத்து வந்து வாசலில் இருந்த தூணில் தள்ள தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.
ரத்தம் சொட்ட அவளின் முடியை பிடித்து இழுத்த மீனாட்சி அவளின் கண்ணங்களில் மாறி மாறி அறைந்தவருக்கு அப்போதும் ஆத்திரம் தீராமல் இருக்க அப்போது அவரின் கண்ணில் பட்டது வாசலை சுத்தம் செய்யும் வாரியல்…

