Loading

அகம்-8

கணிணி வகுப்பு முடிந்து மது வருவதற்காய் காத்திருந்தாள் கருவிழி. மதுவிடம் பேசுவதற்கும், கேட்பதற்கும், அவளிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. 

மதுவும் கருவிழியும் பள்ளித் தோழிகள். ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். பள்ளிப்படிப்பு முடிந்ததும், இளங்கலைப் படிப்பிற்காக இருவரும் வேறு வேறு கல்லூரியைத் தேர்ந்தெடுத்தாலும், தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியமாய் அவர்களின் நட்பு இப்போது வரை தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது. தன் ஆருயிர் தோழி, தன்னிடம் எதையும் மறைத்ததே இல்லை என கருவிழி நினைத்திருக்க, சோற்றில் மறைத்த முழு பூசணிக்காயாய் தன் காதலையே மறைத்துவிட்டாளே என்ற கோபமும் இருந்தது அவளுக்கு.

“வரட்டும் வச்சுக்கிறேன்! என்கிட்டேயே மறைச்சுட்டியே டி? இந்த நெடுமானஞ்சி கூட சொல்லவே இல்லையே?” முணுமுணுத்தபடியே கணிணி பயிற்சியகத்தின் முன் நின்றிருந்தாள் கருவிழி.

“ஏன்டி வீட்டுக்குப் போகலையா?!” கேள்வியுடனே கருவிழியின் அருகில் வந்தாள் மதுரிமா.

“உன்கிட்டே பேசி ரொம்ப நாள் ஆச்சுல்ல? அப்படியே உன் கூடப் பேசிக்கிட்டே போகலாம்ன்னு தான்..! அன்னைக்கு பாண்டிச்சேரியோட என்னை அத்து விட்டுட்டு போனவ தானே நீ? ஒத்தை வார்த்தை கூட கேட்கணும்ன்னு தோணவே இல்லையா டி உனக்கு?”

“ஏய்! உன் அழகர் மாமாவைப் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கும். எப்போ பார்த்தாலும் மீசையை முறுக்கிக்கிட்டு முறைச்சிக்கிட்டே திரியும். அதுக்கு பயந்து தான் வரலை! இப்போ என்ன கப்பலா கவிழ்ந்து போச்சு? இந்தப் பேச்சு பேசறே.?”

“கப்பல் தான் கவிழ்ந்து போச்சு. வா நடந்துக்கிட்டே பேசுவோம்!” தோழியோடு சேர்ந்து அந்த சாலையோரமாய் நடக்கத் துவங்கினாள் கருவிழி.

“அழகரைப் பார்த்து பயந்து தான் என்னைப் பார்க்க வீட்டுக்கு வரலையாக்கும்? இதுவே நெடு மாமாவாய் இருந்திருந்தால் பயப்படாமல் வந்திருப்பியோ?” தோழியின் முகத்தைப் பார்த்தும் பார்க்காததும் போல் நடந்தாள் கருவிழி. ஆனால், கவனம் முழுதும் மதுவின் முகத்தில் தான் இருந்தது.

“ம்ப்ச்..! போடி லூசு..!” எனச் சொன்ன மதுவின் விழிகளில் தடுமாற்றம். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாதவளோ,

“நீ ஏதோ கப்பல் கவிழ்ந்து போச்சுன்னு சொன்னியே டி?.அது என்னது?” பேச்சை மாற்றினாள் மதுரிமா.

“நல்லா பேச்சை மாத்தறேடி இவளே..!” எனச் சொல்லி சலித்துக் கொண்டாலும், அன்று பாண்டிசேரி போனது முதல் இப்போது வரை நடந்தவற்றை ஒன்று விடாமல் தோழியிடம் ஒப்புவித்தாள் கருவிழி.

“நான் தான் அன்றைக்கே சொன்னேன்ல்ல? பாண்டிசேரிக்கெல்லாம் வேணாம்டி! தாத்தாவுக்குத் தெரிஞ்சால் விவகாரமாய் போய்டும்ன்னு சொன்னேனா இல்லையா? நீதான் கேட்கவே மாட்டேன்னுட்ட? நீ பைத்தியக்காரி தான்டி விழி, அந்த ரோஹனுக்காக கையைக் கிழிச்சுக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர் டி! ஒண்ணு சொல்றேன் நீ கோபப்பட்டாலும் பரவாயில்லை! அந்த ரோஹன் உனக்கு வொர்த்தே இல்லை டி! அவன் மூஞ்சியும் முழியும்..!” கருவிழியின் குழந்தைப் போன்ற குணத்திற்கு ரோஹன் ஒத்தே வர மாட்டான் என்ற புரிதலுடன் பேசினாள் மது.

“ரோஹனைப் பத்தி எதாவது சொன்னேன்னு வச்சுக்கடி, உன்னை கொன்னேபுடுவேன். அவன் எம்புட்டு அழகா வெள்ளையா இருக்கான்.!” கருவிழியின் கண்களில் மயக்கம் தெரிந்தது.

“இப்படி வெள்ளையா இருக்கவனெல்லாம் நல்லவன்னு நம்பிக்கிட்டு திரியாதே! நீயும் வெள்ளையா அழகாகத்தானே இருக்கே? பேசாமல் நீ அழகர் மாமாவையே கட்டிக்கோ! அவருக்கு என்ன குறைச்சல்? நல்லாத்தானே இருக்காரு!”

“என்னைக் கடுப்பேத்தாமல் போயிரு டி! உன்னைப் போய் பார்க்கலாம்ன்னு வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும்!” பொய்க் கோபம் பூசினாள் பெண்.

“ஏய் விழி! ஏன்டி? சரி வா! அந்தப் பார்க்கில் உட்கார்ந்து பேசுவோம்.!”

“நீ மட்டும் போய் தனியா பேசிக்கோ! நான் வரலை போடி!” மெல்லிய கொலுசின் சிணுங்கலைப் போல் இருந்தது அவளின் கோபம்.

“விழி..! இப்போ நீ வர்ரியா இல்லையா? அப்பறம் நான் இப்படியே விட்டுட்டு போயிருவேன்.!” கருவிழியை மிரட்டிப் பார்த்தாள் மது.

“முடியாது! நீ என்னை அழகரைக் கட்டிக்க சொல்றே? நான் வரலை போ!”

“நீ யாரையோ கட்டிக்கோ! என்னை விடு! உன் நல்லதுக்குப் போய் சொன்னேன் பாரு!” மதுவும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஏன்டி மது! நான் வேணும்ன்னா நெடு மாமாவைக் கட்டிக்கவா?” மதுவின் எதிர்வினையைத் தெரிந்துக் கொள்வதற்காய் விளையாட்டாய் சொன்னவள், மதுவின் முகத்தையே கூர்மையாய் ஆராய்ந்தாள்.

கருவிழி கேட்ட மாத்திரத்தில் மதுவின் முகம் முழுதும் சிவந்து, கண்களில் நீர் தேங்கவாரம்பித்திருந்தது. நெஞ்சுக் கூட்டுக்குள்ளிருந்து விம்மி வெடித்த அழுகையை வெகு சிரமப்பட்டு மறைத்தாள் மது.

“உன் மாமா பையன் உனக்கு உரிமை இருக்கு. நீ யாரை வேணும்ன்னாலும் கட்டிக்கோ!” எனச் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவள் மனம் படாதபாடு பட்டது. பேச்சுக்குக் கூட நெடுமாறனோடு கருவிழியை இணைத்துப் பார்க்க அவள் மனம் விரும்பவில்லை.

தோழியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்த கருவிழியே, கைப்பிடித்து இழுத்து பூங்காவை நோக்கி மதுவை அழைத்துப் போனாள்.

“ஏய் என்னைப் பாரு டி!” எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை தன்னை நோக்கித் திருப்பினாள் கருவிழி.

“என்கிட்டே ஒத்தை வார்த்தை சொல்லலை? என்கிட்டே சொல்லக் கூடாதுன்னு மறைச்சுட்ட தானே? நெடு மாமா கூடச் சேர்ந்து நீயும் மௌனச் சாமியாராய் மாறிட்டே!” என கருவிழி சொல்ல, திரு திருவென விழித்தாள் மது.

“என்ன விழி சொல்றே? எனக்கு ஒண்ணும் புரியலை!” தன் குரலில் வழிந்த பதற்றத்தை மறைக்க முயன்று தோற்றுப் போனாள்.

“களவாணிங்களா! நீயும் நெட்டை நெடுமானஞ்சியும் விரும்பறீங்கன்னு என்கிட்டே ஏன்டி சொல்லவே இல்லை? ஒரு பக்கம் ஹிட்லரை நினைச்சு பயமா இருந்தாலும் இன்னொரு பக்கம் ஜாலியா இருக்கு தெரியுமா? நல்லா ஊர் சுத்தலாம். அன்றைக்கு மாதிரியே திருட்டுத்தனமா பாண்டிசேரி போகலாம்..!”

“ஹான்.. மறுபடியுமா? ஆத்தா நம்மால் முடியாது! நீ வேணும்ன்னா அழகரைக் கூட்டிட்டு போ! என்னை ஆளை விடு! அது சரி, நானும் மாறனும் விரும்பறோம்ன்னு உனக்கு யார் சொன்னது?”

“ஹான்.. அதுவா? பெரியத்தை தான் சொன்னுச்சு! வீட்டில் எல்லாருக்கும் தெரியும்! உனக்கும் நெடுவுக்கும் கல்யாணம் பேசப் போறாகளாம். சின்னத்தை சொன்னாங்க!” என கருவிழி சொன்னதும்,

 

திருமணத்தைப் பற்றிய ஆயிரம் கனவுகள் மதுவின் கண்களுக்குள் கபடி ஆடியது. நெடுமாறனின் வீட்டில் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? என்றெண்ணி அவள் பயந்ததெல்லாம் தேவையில்லாததாய் மாறிப் போக, தானாய் எல்லாம் கை கூடுவதை நினைத்து மதுவிற்கு நிரம்ப சந்தோஷமாய் இருந்தது.

“நிஜமாவா டி? பொய் சொல்றியா? ஆமா அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?” யோசனையாய் முகம் சுருக்கினாள் மது.

“அதெல்லாம் எனக்கு தெரியாது டி! ஆனால் ஒண்ணு நீயும் நெடு மாமாவும் கல்யாணம் பண்ணக் கூடாது..!” சர்வ சாதாரணமாய் கருவிழி சொல்ல, கண்களை அகல விரித்து அதிர்வுடன் விழியைப் பார்த்தாள் மதுரிமா.

“ஏன்டி? ஏன்? நீ மட்டும் ரோஹனை லவ் பண்ணலாம்! நான் மட்டும் என் மாறனை லவ் பண்ணக் கூடாதா?” மூக்கு சிவக்க வினவினாள் மது.

“ஆமா! நீ கல்யாணம் பண்ணக் கூடாது. நீங்க லவ் பண்ணுங்க என்னமோ பண்ணிக்கோங்க! உங்க கல்யாணம் முடிஞ்சுருச்சுன்னா, அந்த ஹிட்லர் அழகர் தலையில் என்னைக் கட்டி வச்சிருவாரு! அப்பறம் நான் ரோஹனை என்ன பண்ணுறது?!”

“ஹான்.. ரோஹனைத் தூக்கி குப்பையில் போடு! இங்கே பாரு விழி! எதுவா இருந்தாலும் முதலில் தெளிவா யோசிச்சு முடிவெடு. கல்யாணம் ஒண்ணும் சாதாரண விஷயமில்லை. ரெண்டு குடும்பங்களும் பேசி தான் முடிவெடுக்கணும்! உங்க அத்தை சொன்னதால் கல்யாணம் உடனே நடக்கப் போறதும் இல்லை. உங்க தாத்தா சம்மதிக்கணும்! அப்பறம் எங்க வீட்டில் இருக்கறவங்க சம்மதிக்கணும். எல்லாம் நடந்து முடிய எனக்குத் தெரிஞ்சு ஒரு வருஷம் ஆகிடும். இன்னைக்கே பேசி, நாளைக்கே கல்யாணம் பண்ணிருவாங்களா என்ன? லூசு மாதிரி பேசாமல் அமைதியாய் இரு..!”

“நீ சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனாலும் எனக்கு பயந்து வருதே! ஹிட்லர் எந்த நேரம் என்ன செய்வாரோ தெரியலையே? நான் என்னடி தப்பு பண்ணினேன்? கொஞ்சமே கொஞ்சம் பிங்க் ஓட்கா குடிச்சேன் அது தப்பா? அதுவும் இந்த ரோஹன் கல்யாணமெல்லாம் வேணாம்ன்னு சொன்னதால் தான். நாம லவ் பண்றோம் தான் பேபி! கல்யாணம் பண்ணுற அளவிற்கு டீப் திங்க்கிங் எதுவும் வரலைன்னு அசால்ட்டா சொல்றான்! அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டியான்னு கேட்டா.. தெரியலை! இந்த உறவை லைஃப் லாங் கொண்டு போற ஐடியா எதுவும் இதுவரை இல்லைன்னு சொல்றான்! நான் என்ன தான் பண்ணட்டும்?” ஆற்றாமையும் குழப்பமுமாய் கேட்டாள் கருவிழி.

“யோசி டி! ரோஹன் உனக்கு சரியா இருப்பானான்னு யோசி! உண்மையான காதல் இருந்தால், உன்னால் அவன் மனசில் என்ன இருக்குன்னு உணர முடியும். ஒருவேளை அவன் செய்யற ஏதோ ஒண்ணு உனக்கு உறுத்தலை ஏற்படுத்திச்சுன்னா, இது சரி வராதுன்னு விலகிடுறது நல்லது விழி! முதலில் உன் உள்ளுணர்வை நம்பு! அது உன்னை சரியான இடத்துக்கு கூட்டிப் போகும்! இதெல்லாம் நான் நெடுமாறனுக்காக சொல்லலை! உனக்காக.. நீ என் ஃப்ரெண்ட்.. என் உயிர்த்தோழிங்கிறதுக்காக மட்டும் தான் சொல்றேன்.!” மிகத் தெளிவாகப் பேசினாள் மது.

“ஏன்டி மது, உள்ளுணர்வு என்ன சொல்லுதுன்னு எப்படிடி தெரிஞ்சுக்கிறது? மனசுக்குள்ளே சத்தம் கேட்குமா? இதுவரை நான் அப்படி ஒண்ணை உணர்ந்ததே இல்லையே?” குழப்பத்துடன் தன் கண்களை உருட்டினாள் கருவிழி.

“உனக்கு கருவிழின்னு பேர் வச்சாலும் வச்சாங்க! கண்ணு மட்டும் தான் வேலை செய்யுது. மூளையெல்லாம் மக்கி முந்நூறு வருஷம் ஆகிருச்சு போல? ஏன்டி, உள்ளுணர்வு என்ன அசரீரியா சத்தமா கேட்கிறதுக்கு? லூசு பக்கி! அது ஒரு ஃபீல் டி! நாம ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக்கிட்டோம்ன்னு வையி! அங்கிருந்து தப்பிக்க சொல்லி மனசுக்குள்ளே தோணும் தானே? அந்த உணர்வு தான் உள்ளுணர்வு. இப்போ நீ என் கூட இருக்க தானே? என் கூட இருக்கும் போது உனக்கு என்ன தோணுது சொல்லு?”

“ம்ம்ம்.! நீ என் ஃப்ரெண்ட்! என்னை உனக்கு பிடிக்கும்ன்னு தோணுது!” யோசித்து பதில் சொன்னாள் கருவிழி.

“கரெக்ட்! கரெக்ட்! அதே மாதிரி ரோஹன் கூட இருக்கும் போது உனக்கு என்ன தோணும்ன்னு சொல்லு?!” ஆழ்ந்து அருகில் அமர்ந்திருந்த தோழியை நோக்கினாள் மதுரிமா.

“தெரியலையே..?” எனச் சொன்னவளின் முகத்தில் குழப்ப ரேகைகள் கிளை பரப்பியிருந்தது.

“இனிமே ரோஹன் பக்கத்தில் இருந்தால் உனக்கு என்ன தோணுதுன்னு உனக்குள்ளே நீயே கேட்டுக்கோ! அவன் பக்கத்தில் இருக்கும் போது பாதுகாப்பாய் உணர்ந்தால், இட்ஸ் குட்..! உங்களோட காதல் உண்மையானது தான்னு நீ புரிஞ்சுகலாம்.!” எனத் தோழியை அறிந்தவளாய்ப் பேசினாள் மது.

கருவிழியைப் பற்றி மதுவிற்கு நன்றாகவே தெரியும். சின்னக் குழந்தையிலிருந்தே பொத்தி பொத்தி பாதுகாப்பாய் வளர்க்கப்பட்டவள் தான் கருவிழி. பள்ளியிலிருந்து இப்போது கல்லூரி படிக்கும் வரையிலுமே அவளை எங்கும் தனியே அனுப்பியதே இல்லை. கருவிழியின் நட்பு வட்டமும் கூட மிகச் சுருங்கியது தான். தன் பார்க்கும் வட்டத்தைத் தாண்டியுமே உலகம் விரிந்துக் கிடக்கிறது. நல்லவர்கள் மட்டுமல்ல கெட்டவர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை அறியாத யாரையும் எளிதில் நம்பிவிடும் ரகம் தான் கருவிழி.

காய்ச்சிய பாலின் மீது படிந்த ஏடு போல, குழப்பம் படிந்த முகத்துடன் அமர்ந்திருந்த கருவிழியைப் பார்த்த மதுவின் மனமோ,

‘கருவிழியின் உள்ளமெனும் குளத்தில் கல்லெறிந்தாயிற்று! அதில் ஏற்படும் சலனமும், கலக்கமும் தெளிவிற்கு வழி வகுக்க வேண்டும்.!” என தோழிக்காய் வேண்டுதல் வைத்தது.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
16
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. மதுரிமா பெயர் அழகா இருக்கு.

    மது விழி நட்பு தொட்டு தொடரும் பட்டு பாரம்பரியமா? 🤣🤣 So nice

    மது நெடு காதல் இரண்டு பேருமே எந்த முயற்சியும் செய்யாமலே தானா கல்யாண பேச்சு வரை வந்திருச்சு.

    கூண்டு பறவை மாதிரி வெளி உலகம் தெரியாமலே இருக்காளே. ரோஹன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று தப்பர்த்தம் செய்து உளறிட்டு இருக்கா.

    விழி விழி மட்டும் தான் வேலை செய்யிது மூளை மக்கி முந்நூறு வருஷம் ஆகுதா? 🤣🤣

    எப்படியோ குளத்தில் கல்லை போட்டாச்சு பார்ப்போம் அந்த முளைய உபயோகிச்சி யோசிக்கிறாளானு.

    1. Author

      Thank you so much for your support & love dear. சீக்கிரமே மூளை வேலை செய்யும். விழி அவளை மட்டுமில்லை அழகரையும் சேர்த்து புரிஞ்சுப்பா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💛💙

      1. 🥰🥰 most welcome sis. Ur writing deserves more 💕.
        Art pic s too cute sis.

        1. Author

          Thanks a lot da. Thank you so much dear 💛💜💙💚

    1. Author

      நன்றி! நன்றி கலைமா 💛💙

  2. நல்லதை சொல்லி திருத்தும் நல்ல நண்பர்கள் கிடைப்பது வரம் … கருவிழிக்கு குடும்பம் நட்பு எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது … இருந்தாலும் தேவையில்லாமல் இந்த ரோஹன் சகவாசம் …

    1. Author

      உண்மை தான் டியர். வீட்டைத் தாண்டி யாரிடமும் பழகாததால் வந்த வினை தான் இது. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤