
அகம்-7

“மாமா! பயமா இருக்கு மாமா! மெதுவாகத்தான் போயேன்.! வேணும்ன்னே தானே இப்படியெல்லாம் செய்யறே? யார் என்னைத் திட்டினாலும் பரவாயில்லை! ஆனால் நீ திட்டாத அழகரு! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உனக்கு என்னைப் பார்த்தால் பாவமா இல்லையா அழகரு?”
உருகும் குரலில் பேசியவளில் கண்ணில் துளிர்த்த ஒற்றைத் துளி கண்ணீர், அவன் முதுகைச் சுட்டது. அவன் கண்ணீர் பட்டதும், கொஞ்சம் கொஞ்சமாய், அவன் கோபம் பனியாய்க் கரைந்து போக, வாகனத்தின் வேகம் குறைந்தது.
“சரி! உன்னை நான் வையல! (திட்டவில்லை) நிமிர்ந்து நேரா உட்காரு!” உணர்வுகளைக் காட்டாத மரத்துப் போனக் குரலில் சொன்னான் அவன்.
“நெசமாவா அழகரு?”
“நெசமாத்தான்டி லூசு!”இயல்பாகக் காட்டிக்கொள்ள முயன்றான்.
“எங்கே உன் மூஞ்சியைக் காட்டு?” அவன் தோள் பக்கமாய் கைப்போட்டு, அவன் முகத்தைத் திருப்ப முயன்றாள் அவள்.
“கிறுக்கி! பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணாமல் சும்மா உட்காரு டி! வண்டி ஓட்டும் போது, உனக்கு மூஞ்சியைக் காட்டினால் வண்டியை எப்படிடி ஓட்டுறது?”
“ஹி..ஹி.. ஸாரி அழகரு! உன்கிட்டே பேசிப் பேசி தொண்டைத் தண்ணீ வத்திப் போச்சு! ஜிகிர்தண்டா வாங்கித் தர்ரியா?” குழந்தையாய் கொஞ்சினாள் அழகரின் அத்தை மகள்.
“அதானே! காரியம் ஆகணும்ன்னா தானே காலைப் பிடிப்பே?” எனப் பேச்சில் கடுமை காட்டினாலும், அவள் கேட்டதை வாங்கிக் கொடுப்பதற்காக வாகனத்தை ஓரமாய் நிறுத்தினான் அவன்.
“எனக்கு எதுவும் வேண்டாம்! உனக்கு மட்டும் சொல்லிக்கோ!” எனச் சொன்னவன் வாகனத்தை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு, அவன் உள்ளே சொல்வதற்குள், வெண்ணிலா ஐஸ்க்ரீம் மிதக்கும் ஜிகிர்தண்டாவை அவனுக்கும் சேர்த்தே ஆர்டர் செய்திருந்தாள் கருவிழி.
“எனக்கு வேணாம்ன்னு சொன்னேல்ல டி?” பற்களுக்கிடையே வார்த்தைகளை நறநறத்தான் அவன்.
“அழகரு! நீ இல்லாமல் நான் எப்போ சாப்பிட்டுருக்கேன்? நீ இன்னும் என் மேல் கோபமா இருக்கே, அதானே வேணாம்ன்னு சொல்றே?”
“ம்ப்ச்! படுத்தாதே டி! வேலை கெடக்கு டி! உன்னைக் கூப்பிடறதுக்காகத் தான், காக்கா விரட்டியை பார்க்கச் சொல்லிட்டி ஓடி வந்ததேன்.”
“இந்த ஜிகிர்தண்டாவைக் குடிக்க அஞ்சு நிமிஷம் ஆகுமா? அஞ்சு நிமிசத்தில் சொக்கேசன் சாம்ராஜ்ஜியம் ஒண்ணும் சரிஞ்சு போய்டாது.! நான் மட்டும் ஒத்தையில் உட்கார்ந்து தின்னவா உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன்? உன்னைச் சமாதானப் படுத்துறதுக்குத்தான்.!” ஜிகிர்தண்டாவில் மிதந்த ஐஸ்க்ரீமை உண்டபடியே பேசினாள் அவள்.
“ம்ப்ச்! என்னால் எதுவும் முடியாது! நான் முன்னவே சொல்லிடுறேன். தாத்தாவை மீறியோ, தாத்தாவுக்கு எதிராவோ என்னால் எதுவுமே பண்ண முடியாது. இதில் என்னைக் கூட்டு சேர்க்காதே!” நீல நிற சுடிதாரில், லேசாய் வாடிக் களைத்த மலர் போல் எதிரே அமர்ந்திருந்தவளைப் பார்த்து மிகத் தெளிவாகவே சொன்னான் துடிவேல் அழகர்.
“அழகர் மாமா..!” குரல் குழைந்து கெஞ்சலாய் வெளிவந்தது அவளுக்கு.
“இந்தக் கொஞ்சல் எல்லாம் என்கிட்டே வேணாம் டி! என்னை இதில் இழுக்காதே..! அவ்வளவு தான்!” தீர்க்கமாய் வெளி வந்தது அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்.
“அப்போ என்னைக் கட்டிக்க உனக்கு சம்மதமா அழகரு? நான் ரோஹனை லவ் பண்ணுறேன். வேற ஒருத்தனை லவ் பண்ணுற என்னைக் கட்டிக்க உனக்கு சம்மதமா? தாத்தாவுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுக்க கஷ்டப்படப் போறியா?” எனக் கேட்டவளை எரிப்பது போல் பார்த்தவன்,
“எனக்கு அதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை. தாத்தாவுக்காக அவர் சந்தோஷத்துக்காக நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதையும் சேர்த்து தான் சொல்றேன். இதில் எனக்கு விருப்பம் இருக்கா? இல்லையாங்கிறதெல்லாம் ரெண்டாவது தான். தாத்தாவோட விருப்பமும் மரியாதையும் தான் முதலில். அன்னைக்கு அவர் பேசினப்போ, அவர் கண்ணில் தெரிஞ்ச ஏமாற்றத்தை என்னால் உணர முடிஞ்சது. என்மேல் அவர் வச்சிருந்த நம்பிக்கையை நானே உடைச்சுட்டேன். ஆனால், இனிமே அப்படி நடக்க சத்தியமாய் நான் விட மாட்டேன்.!” உணர்ச்சி துடைத்தக் குரலில் சொன்னவன் அந்தப் பனிக்கூழகத்திலிருந்து வெளியேறியிருந்தான்.
‘வாழப் போறது நாம தான் அழகரு! தாத்தா இல்லை. ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறே?’ மனதோடு முணுமுணுத்துக் கொண்டவள், அவன் வாகனத்தின் உறுமல் சத்தம் கேட்கவும், ஓடிச் சென்று வாகனத்தில் ஏறிக் கொண்டாள்.
இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, அழகரின் முகம் கற்பாறையாய் இறுகிக் கிடப்பதைப் பார்த்து அவள் மனம் மருக,
“அழகரு!” மெதுவாய் அவன் தோள் மீது கை வைத்து, அவன் காதோரமாய் விளித்தாள் அவள்.
ஆனால் அவன் முகத்தில் சிறு அசைவு கூட இல்லை. ஏதோ பிறவியிலிருந்து காதே கேட்காத செவிடன் போல் அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தவளுக்கு கோபம் கோபமாய் வந்தது.
“அழகரு! உன்னைத்தானே கூப்புடுறேன்..!” கொஞ்சம் சத்தமாய் அழைத்துப் பார்த்தாள். அப்போதும் கூட அவன் அசைவதாய் இல்லை.
“இப்போ நீ பேசலைன்னா நானும் பேசவே மாட்டேன் மாமா! சும்மா சொல்றேன்னு நினைக்காதே, நெசமாவே பேச மாட்டேன். அப்பறம் நீதான் ரொம்ப வருத்தப்படுவே!” மிரட்டிக் கூடப் பார்த்துவிட்டாள் அவன் துளி அசைந்துக் கொடுப்பதாய் இல்லை.
“ம்ப்ச்! அழகரு! என்கிட்டே பேசு! உன்கிட்டே பேசாமல் பைத்தியம் பிடிச்சிடும். ப்ளீஸ் பேசு அழகரு!”
“பேச முடியாது போடி! அந்த ரோஹனைக் கட்டிக்கிறதுக்காக உன்னை நீயே தரம் தாழ்த்திக்கிற அளவுக்கு போய்ட்டல்லடி? நான் உன் கிட்டே பேசவே மாட்டேன்! நீயும் என்கிட்டே பேசாதே!” வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தி இறக்கி விட்டுவிட்டு விருட்டென வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு சென்றிருந்தான்.
கருவிழியின் மனம் முழுதும் குழப்பம் வியாபித்திருந்தது. அவளுக்கு எல்லா விஷயங்களிலும் துணையாய் இருப்பது அழகர் மட்டுமே. அவனை விட்டால் தாத்தாவிடம் பேசுவதற்கு வேறு யாராலும் முடியாது. திருமணத்தை மூன்று வருடங்கள் தள்ளிப் போடுவதற்காவது தாத்தாவிடம் பேசியே தீர வேண்டும். ஆனால் அவளால் பேச முடியாது. அவர் லேசாய் குரலுயுர்த்தினால் உடல் நடுங்கிவிடும்.
இது ஒருபக்கமென்றால், ரோஹன் இன்னொரு பக்கம். கடையில் பொம்மை வாங்குவதைப் போல், திருமணமற்ற உறவிற்கு அழைக்கிறான். செய்வதறியாது குழப்பமாய் வாசலிலேயே நின்றிருந்தாள் கருவிழி.
“ஏய் விழி! என்னத்துக்கு இப்படி வெய்யிலில் இங்கண நின்னுட்டு இருக்க? உள்ளே வா! அழகரு உன்னைக் கூப்பிட வந்தனா?” எதற்காகவோ வாசலுக்கு வந்த அரசி கருவிழியைப் பார்த்து வினவினார்.
“மாமா தான் கூட்டிட்டு வந்துச்சு சின்னத்தை!”
“அதுக்கு ஏன்டி மூஞ்சியை இப்படி தூக்கி வச்சுட்டு சொல்றே? எம் மவன் உன்னை எதுவும் வஞ்சுட்டானா? மொகரையெல்லாம் வாடிக் கிடக்கு! எதாச்சும் மேலுக்கு முடியலையா விழி?” அக்கறையாய் கேட்டார் அரசி.
“ஒண்ணும் இல்லத்த! நல்லா தான் இருக்கேன்!” எனச் சொன்னவள் அரசியுடன் உள்ளே நடந்தாள்.
“உங்க பெரிய அத்தை தான் உன்னை தேடிக்கிட்டு திரிஞ்சாக விழி! என்னமோ விஷயம் உன்கிட்டே பேசணுமாம்!”
“என்கிட்டேயா? என்கிட்டே என்ன?” குழப்பமாய் திருதிருத்தபடியே கேட்டாள் கருவிழி.
“நம்ம புள்ளைகளைப் பத்தி தான். வேற யாரைப் பத்தி நாங்க பேசப் போறோம் சொல்லு! உங்களை விட்டால், இந்த வீட்டை விட்டால் எங்களுக்கு வேறெதுவும் தெரியாதே விழி!”
“யாரைப் பத்தி? அழகர் மாமாவைப் பத்தியா? மாமா எதாச்சும் சொல்லிச்சா அத்தை?” ஒருவேளை தன்னைப் பற்றி எதாவது இருக்குமோ? என்றக் குழப்பத்தில் வினவினாள் கருவிழி.
“எம் மவனைப் பத்தி எனக்குத் தெரியாதா.? எம் மவன் பெரியவர் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டானே? தாத்தாவோட வார்த்தைக்காக, தன் மனசை மறைச்சுக்கிட்டு உன் மேல் இருந்தக் காதலைச் சொல்லாமல் இருந்தவன்! பெரியவர் மேல் இருந்த மரியாதையை விட, எம் மவனுக்கு உன் மேல் அன்பு அதிகம். அதனால் தான் உன்னைக் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ண துணிஞ்சிருக்கான்.! என் புள்ளை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் விழி!” பெருமை வழிந்தது அரசியின் குரலில்.
“ம்ப்ச்! போதும் உங்க புள்ளை புராணம்! உங்களுக்கு அந்த பத்து ரூபாய் நாணயமும் ஒரு புள்ளை தான் மறந்துறாதீங்க!” சிரித்துக் கொண்டே சொன்னாள் கருவிழி.
“வீரபத்ரணும் என் புள்ளை தான். யாரு இல்லைன்னு சொன்னது? அக்கா உன்னைக் கூப்பிட்டது நெடுமாறனைப் பத்தி பேசத்தான்.!”
“நெடு மாமாவைப் பத்தியா?” எனக் கேட்டபடியே பூங்கொடியின் அறைக்குள் நுழைந்தாள் கருவிழி.
“விழிம்மா! வா! வா! சாப்பிட்டியாத்தா? எதாச்சும் கொண்டு வரவா?” வாஞ்சையாய் கேட்டார் பூங்கொடி.
“சாப்பிட்டேன் பெரியத்தை! அழகர் மாமா ஜிகிர்தண்டா வாங்கிக் கொடுத்துச்சு.!”எனச் சொன்னவள்,
“என்னை எதுக்குத் தேடினீங்க அத்தை?” எனக் கேட்டாள்.
“அது ஒண்ணுமில்லை விழி, நான் கேட்கிறதுக்கு உண்மையை மட்டும் தான் சொல்லணும்!” பொடி வைத்துப் பேசினார் பூங்கொடி. ரோஹனைப் பற்றி எதுவும் கேட்டு விடுவாரோ? என பதைபதைப்புடன் அவள் நின்றிருக்க,
“நம்ம நெடுமாறனும், உன் ஃப்ரெண்டு ஒருத்தி வருவாளே.. அவளும் விரும்புறாங்களாமே உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டதும், புரியாமல் அவர் முகத்தைப் பார்த்து படி நின்றிருந்தாள் கருவிழி.
“என்னடி! தெரியும்ன்னா தெரியும்ன்னு சொல்லு இல்லை தெரியாதுன்னு சொல்லு! அப்படியே திரு திருன்னு முழிக்கிறே?!”
“இல்லைத்த, நீங்க யாரைச் சொல்றீங்க? மதுவையா?”
“அவளைத்தான்..!
பொழுதன்னைக்கும் ஃபோன் பேசிக்கிட்டே திரியுறான்! உங்க தாதத்தனுக்கு தெரிஞ்சுதுன்னா என்ன பண்ணப் போறாரோ தெரியலை. நேத்து தான் பழங்காநத்தத்திலிருந்து ஒரு வரன் வந்திருக்கு. நெடுமாறனுக்கு பொருத்தமா இருக்கும்ன்னு பேசிக்கிட்டு இருந்தாரு. இவன் செய்யற வேலையைப் பார்த்தால், வயிற்றில் புளியைக் கரைக்குது டி!” சொக்கேசனை நினைத்துப் பயந்தவராய் பேசினார் பூங்கொடி.
“நீங்களே நெட்டை நெடுமானஞ்சி கிட்டே கேட்க வேண்டியது தானே?”
“அவன் தானே? சொல்லிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அவன் கிட்டே நானே கேட்க முடிஞ்சால், உன்கிட்டே என்னத்துக்கு இம்புட்டு வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்கப் போறேன்.? நீ தான் கேட்டு சொல்லணும்!”
“ம்க்கும்! உங்க கிட்டேயே சொல்ல மாட்டாராம்! என்கிட்டே மட்டும் நெடு மாமா சொல்லுமாக்கும்?”
“அடியேய் கிறுக்கி! இப்படி இருக்குமோன்னு ஒரு சின்ன சந்தேகந்தேன். அதைத் தீர்த்துக்கத்தான் உன்னைக் கேட்க சொன்னேன். அதோட நீ எம் மவன் கிட்டே கேட்க வேணாம். அந்தப் புள்ள மது கிட்டே கேட்டு சொல்லு. உண்மையாய் இருந்தால், பொத்துன்னாப் போல போய், பேசி முடிச்சுப்புடுவோம். இந்த லவ்வு கிவ்வுன்னு சொல்லாமல், அதுவா வரன் வந்த மாதிரி, என்னைக் கட்டினவரை வச்சு தான் பேசச் சொல்லணும்!” என பூங்கொடி சொல்ல,
“போச்சு, இந்த நெடு மாமாவுக்கு கல்யாணம் முடிஞ்சுருசுன்னா அடுத்து நானும் அழகரும் தானே டார்கெட்டு. பயந்து வருதே..!”
எனப் புலம்பியபடி, ஆயிரம் மனக்குழப்பங்களோடு, செய்வதறியாமல், நின்றிருந்தாள் கருவிழி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அழகர் கோபப்பட்டா முகம் சுருக்கினா கவலைப்படற அதே சமயம் அந்த ரோஹனுக்காக அழகர் சொல்வதை காது கொடுத்து கேட்க கூட மாட்டேங்கிறா.
தன் விருப்பதை விட தாத்தா மனசும் நம்பிக்கையும் தான் இனி முக்கியம்னு அழகர் தெளிவா சொல்லிட்டான்.
விழி எதுக்கு மூணு வருஷம் டைம் கேட்க நினைக்கிறா? மூணு வருஷம் இல்லை முன்னூறு வருஷம் ஆனாலும் ரோஹனுக்கு ரோஷம் வராது கரு கரு. அதை யாரு உனக்கு தலையில தட்டி புரியவைக்க போறாங்களோ!
அரசிமா சொன்னதை போல, அவனுக்கு தாத்தா மேல் இருக்கும் மரியாதையை விட, குடும்ப கவுரவத்தை விட, விழியின் மேல் கொண்ட அன்பு அதிகம். அதனால் தான் கல்யாணம் செய்து வைக்கும் அளவுக்கு போனான். இப்பொழுது தான் விழித்து கொண்டான். இனி விழி பாடு தான்.
வீரபத்திரன் எத்தனை வீரமான பெயர் 🤣🤣 பாவம் கரு கரு வாழும் வீட்டில் வைக்கப்பட்டதால் செல்லா காசு ஆகிவிட்டது.
😂😂😂 இன்னும் நிறைய வரும் டியர். விதவிதமாய் வித்தியாசமாய் பேர் வைக்கிற ஆள் நம்ம கரு கரு தான். அழகரோட அன்பு புரியாமல் தான் இவள் இப்படி இருக்கிறாள். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் 💜💛
இந்த அழகரை விட்டுட்டு கருமாந்திரம் பிடிச்ச ரோஹன் எதுக்கு மா கருவிழி …
இந்தப் புள்ளைக்கு புத்தி வர மாட்டேங்குதே, என்ன செய்யக் காத்திருக்காளோ? தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💙💜
செம அழகரு
மிக்க நன்றி டியர் ❤