Loading

அகம்-6

அழகான மாலைப் பொழுது. மேக மூட்டமாய் மழை வரப் போவதன் அறிகுறி கொஞ்சமாய் தெரிந்தது. கல்லூரி முடிந்து இளைஞர் பட்டாளங்கள் குதூகலமாய் வெளியேறிக் கொண்டிருக்க, அந்த இருபாலர் கல்லூரியை விட்டுத் தள்ளியிருந்த அடர்ந்த மரநிழலில் அமைதியாய் நின்றிருந்தது அந்த மகிழுந்து.

 

மரநிழலில் நின்றிருந்த வாகனத்தின் மேல் வேப்பம் பூக்கள் உதிர்ந்துக் கிடந்தன. மகிழுந்தின் உள்ளிருந்து மெல்லிய முனகல் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. முனகல் சற்று நேரத்திலேயே விம்மலாய் வெளிப்பட்டது. அந்த மெல்லிய விம்மல் ஒலி ஒரு பெண்ணுக்குரியது என்பது சொல்லாமலே புரிந்தது.

“ம்ப்ச்! அழாதே டா பேபி! நான் தான் ஸாரின்னு சொல்றேன்ல்ல!” எனக் குழையக் குழையைக் கொஞ்சிய குரல் ரோஹனுடையது தான். அப்படியானால் விம்மலும் அழுகையுமாய் அமர்ந்திருந்தவள் கருவிழியே தான்.

“நீ என் கிட்டே பேசாதே போ! முதலில் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னே, அப்பறம் சரின்னு தானே சொன்ன? ஆனால் நீ ஏன் கோயிலுக்கு வரவே இல்லை? நான் எவ்வளவு நேரமா உனக்காக காத்திருந்தேன் தெரியுமா?”

“ஸாரி பேபி! அவசர வேலை அதனால் தான் வர முடியலை. இப்போவே கல்யாணத்திற்கு என்ன அவசரம் பேபி? பொறுமையாய் பண்ணிக்கலாம் தானே? இப்போதைக்கு நாம திகட்ட திகட்ட காதலிப்போம்..!” மென்மையான மயக்கும் குரலில் பேசினான் ரோஹன்.

“ம்ப்ச்! உனக்குப் புரியலை ரோஹன்! தாத்தா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா முடிவு பண்ணிட்டார். நான் இப்போ என்ன பண்ணட்டும்.? பேசாமல் கல்யாணம் பண்ணி என்னைக் கூடவே கூட்டிட்டு போய்டு.!” எனச் சொன்னவளின் குரல் உடைந்திருந்தது.

“இந்த இயர் மட்டும் தான்! ஃபைனல் இயர் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்! இப்போ சிரி!” எனச் சொன்னபடியே கன்னத்தை தொட வந்தவனின் கரத்தினை வெடுக்கென தட்டி விட்டாள் கருவிழி.

“ம்ப்ச்! நான் தானே பேபி!”

“நீயா இருந்தாலும் கல்யாணம் வரை நோ டச்சிங்! டச்சிங்!” என அவள் சொன்னதும், முகம் சட்டென சுருங்கி மீண்டு இயல்புக்குத் திரும்பியது.

“சரி! ஓகே.. தொடாமலே பேசறேன் போதுமா? என்னை நம்ப மாட்டேங்குற பேபி, நான் உன்னை ஏமாத்திட்டு ஓடிப் போய்டுவேன்னு நினைக்கிறியா?” கருவிழியை ஆழ்ந்து நோக்கியபடி கேட்டான் ரோஹன்.

“இப்போ நீ செய்யறதெல்லாம் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோணுது. காதலிக்கிறது உனக்கு பிரச்சனை இல்லை, ஆனால் கல்யாணம் தான் உனக்கு பிரச்சனை அப்படித்தானே? அப்போ எதுக்காக என்னை லவ் பண்ணின ரோஹன்.? உனக்காக நான் வீட்டை விட்டு ஓடி வர்ர அளவுக்குப் போயிருக்கேன்! நீ துரும்பைக் கூட அசைக்க மாட்டேங்குற!” கோபத்தில் நுனி நாசி சிவக்கப் பேசினாள் கருவிழி.

“ஹேய் பேபி! நீ என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டே! இப்போ தான் நான் பி.ஜி (Post Graduate) ஃபைனல் இயர் படிக்கிறேன்.இப்போ உன்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனால், எல்லாத்துக்குமே என் டாட் கிட்டே போய் நிற்க வேண்டிய நிலை வரும். எனக்கு வரப் போற வொய்ஃப் யாரையும் நம்பி இருக்கக் கூடாது. என்னை மட்டுமே நம்பி இருக்கணும். படிப்பு முடிஞ்சுடுச்சுன்னா பிஸ்னஸ் நான் பார்த்துக்க ஆரம்பிச்சுடுவேன்! அப்போ எந்தப் ப்ராப்ளமும் இல்லை புரியுதா?” கண்கள் சுருக்கி அவளை மட்டுமே பார்த்துப் பேசினான் ரோஹன்.

அவனின் சிவந்த நிறமும், அழகும், ஆளுமையும், அவன் பேசும் நுனி நாக்கு ஆங்கிலமும் அவன் மீது அவளுக்கு மயக்கத்தைக் கூட்டியது.

“தாத்தா கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாரே நான் என்ன செய்யறது ரோஹன்?”

“அதுக்கு நான் என்ன பேபி பண்ணட்டும்? உன் பிரச்சனைகளை நீ தான் பார்த்துக்கணும்!” என அவன் சொன்னதும் விலுக்கென தலையை நிமிர்த்தி ரோஹனைப் பார்த்தாள் அவள். அவன் பதிலில் மனம் ஒருவித ஏமாற்றத்தை உணர்ந்தது.

‘திருமணம் இருவருக்கும் தானே? திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கையில் சேர்ந்து வாழப் போவதும் இருவரும் தானே? அப்படியிருக்கையில்.. உன் பிரச்சனையை நீயே பார்த்துக் கொள் என்றால் என்ன அர்த்தம்?’ மனதிற்குள் கேள்வி எழுந்தாலும் கண் முன்னே தெரியும் அவன் அழகும் வனப்பும், விளம்பர மாடல் போல் அவன் வலம் வரும் தோரணையும் அவள் கண்ணையும், கருத்தையும் மறைத்தது.

“ரோஹன்! எங்க வீட்டில் வந்து பேசறியா ப்ளீஸ்..! நீ பிஸ்னஸ் பண்ணி செட்டில் ஆகும் வரை, வெய்ட் பண்ணச் சொல்லி பேசுறியா? ப்ளீஸ் எனக்காக!”

“ம்ப்ச்! என் சைட், என்னன்னு நான் க்ளியரா சொல்லிட்டேன் பேபி! டூ ஆர் த்ரீ இயர்ஸ் நீ வெய்ட் பண்ணித்தான் ஆகணும். இல்லையா விட்டுடு! லெட்ஸ் பிரேக் தி ரிலேஷன்ஷிப்..!”

“ரோஹன்! ஒன் இயரில் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னே? இப்போ த்ரீ இயர்ஸ்ன்னு சொல்றே? நான் எவ்வளவு நாள் தான் காத்திருக்கணும்? அதுக்குள்ளேஎங்க வீட்டில் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க ரோஹன்.! என்னையும் என் சூழ்நிலையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ!” தன் நிலையைப் புரியவைக்க முயன்றாள் கருவிழி.

“ஜஸ்ட் ஸ்டாப் இட் கருவிழி! இட்ஸ் இனஃப்! நீ பேசினதெல்லாம் போதும்! எப்போ பார்த்தாலும் கல்யாணம்! கல்யாணம்..! கல்யாணம்..! இதைத் தவிர வேறெதுவும் பேச மாட்டியா? கிட்டத்தட்ட ஆறு மாசமா லவ் பண்ணுறோம்! ஆனால் ஒரு ஹக், கிஸ்.. அவ்வளவு ஏன் உன்னைத் தொடக் கூடக் கூடாது. இதுக்குப் பேர் லவ்வா? நீ எந்தக் காலத்தில் இருக்கே? கிஸ் பண்ணினா கற்பு போயிரும்ன்னு நினைக்கிற பழைய காலத்து ஆளா நீ? நல்லா கேட்டுக்கோ, என்னால் இப்போதைக்கு கல்யாணம் பண்ணவே முடியாது! நீ வெய்ட் பண்ண முடிஞ்சால் வெய்ட் பண்ணு இல்லையா போய்க்கிட்டே இரு..!” அதீத கோபத்துடன் சொன்னின் ரோஹன்.

“ரோஹன்..!” என்றவளின் மலர் போன்ற வதனம், மோப்பக் குழையும் அனிச்சமாய் வாடிப் போனது.

“வேணும்ன்னா இன்னொன்னு பண்ணலாம்.. கல்யாணம் பண்ணிக்காமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம். நீ உன் வீட்டை விட்டு வந்துடு. எனக்கு நோ ப்ராப்ளம்.!” சர்வ சாதாரணமாய் சொன்னான் அவன். குடும்ப அமைப்பிற்குள் கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தவளுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது.

“நீ என்ன சொல்றே?” குரல் நடுங்கியது பெண்ணவளுக்கு.

“உனக்கு உன் வீட்டில் இருக்கிறது தானே பிரச்சனை? என்னோட வந்துடு.. நீ வீட்டிலேயே இல்லாதப்போ எப்படி கல்யாணம் பண்ணி வைப்பாங்க? கல்யாணம் பண்ணாமலே என் மனைவி மாதிரி என் கூட உன் ஆசைப்படியே வாழலாம்..! கல்யாணத்திற்கு பின்னால் கிடைக்க வேண்டியதெல்லாம் கல்யாணம் பண்ணாமலே கிடைச்சுடும்.!” ஆழ்ந்து அவள் காதோரம் ஒலித்தக் குரலில் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

“நா..ன்! நா..ன் கொஞ்சம் யோசிக்கணும்!” அவசரமாய் சொன்னவள் மகிழுந்தின் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே இறங்கியிருந்தாள்.

“மனைவி மாதிரி..!” என்கிற வார்த்தைகள் கொஞ்சம் அதிகமாய் மனதைப் பிசைந்தது.

“இதில் யோசிக்க என்ன இருக்கு பேபி? நம்ம ரெண்டு பேரோட தேவையுமே ஈஸியா தீர்ந்திடுமே..!” ரோஹனின் குரலில் மயக்கம் வழிந்தது.

“சீக்கிரம் யோசிச்சு நல்ல பதிலா சொல்லு! ஐ கான்ட் வெய்ட் பேபி!” அவன் கரம் அவள் கன்னங்களில் அழுத்தமாய்ப் பதிந்தது.

“நா.. நான் தான் யோசிக்கணும்ன்னு சொல்றேன்ல்ல?” சிரமப்பட்டு கரத்தை விலக்கி விலகி நின்றவள், எட்டி தன் உடைமைகளை வாகனத்திலிருந்து எடுத்துக் கொண்டு, தலையசைப்பைக் கூடத் தராது எதிலிருந்தோ தப்பிப்பதைப் போல் விலகி நடக்கத் துவங்கியிருந்தாள். மனம் எதை எதையோ யோசித்தது. நிரம்பவும் குழப்பமாய் இருந்தது அவளுக்கு.

‘இது சரியாய் வருமா?’

‘திருமண உறவில்லாத வாழ்க்கை.. நூலறுந்த காற்றாடிப் போலத்தானே?’

‘திரைப்படங்களிலும், கதைகளிலும் இதைப் பற்றி அறிந்திருக்கிறேன் தான். ஆனாலும் இது எப்படி முறையாகும்? என் மனமே ஒப்ப மறுக்கிறதே..? தாத்தாவிற்கும் என் குடும்பத்திற்கும் தெரிந்தால்..?’ கேள்விகள் மனதில் சரம் தொடுத்தது. மனக் குழப்பத்தில் கால்கள் எட்டி நடை போட்டது. எதிரே என்ன வருகிறது என்று கூடத் தெரியாமல் விறுவிறுவென நடந்து வந்தவள், மிக அருகில் கேட்ட வாகனத்தின் அலறலில் சிந்தை கலைந்து நிமிர்ந்தாள்.
பாவையவளின் பார்வை சென்ற இடத்தில், தன் இருசக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடி கண்களில் சிவப்பேற அவளை முறைத்தபடி நின்றிருந்தான் துடிவேல் அழகர்.

“அழகரு..!” அவன் கண்களில் தெரிந்த கோபத்தில் அவள் உச்சரித்த வார்த்தைகள் அவளுக்கே கேட்கவில்லை.

“வாயை மூடிட்டு வண்டியில் ஏறுடி! உன்னைப் போய் மனசு கேட்காமல், கூப்பிட வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும்! எப்படியோ போய்த் தொலைன்னு விட்டுருக்கணும்!”

“நான் தான் சொல்லிட்டேனே அழகரு! நான் ஒண்ணும் பொய் சொல்லலையே? நான் ரோஹனை லவ் பண்ணுறேன்னு உனக்குத் தெரியும் தானே? இப்போ என்னத்துக்கு இப்படி கோபப்படுற?”

“ஆமா டி! பெரிய லவ்வு! குடும்பத்தையும் அவங்க காட்டுற அன்பையும் விட, உனக்கு உன் காதல் தானே பெருசு. ஆனால் ஒண்ணு மட்டும் மனசில் வச்சுக்க டி! ஒருத்தன் கொடுக்கிற அன்புக்காக ஒட்டுமொத்த குடும்பத்தோட பாசத்தையும் இழந்துடுடாதே..!” கோபமும் ஆற்றாமையும் மேலோங்கியிருந்தது அவன் குரலில். 

“அழகரு..!” குரல் தழுதழுத்திருந்தது.

“சும்மா நடிக்காதே டி! உன்னை இத்தனை வருஷம் வளர்த்து ஆளாக்கின குடும்பத்தை விட, உனக்கு உன் காதல் தான் பெருசு இல்ல? அதுவும் நடுரோட்டில் நின்னுக்கிட்டு அவன் தொட்டுத் தொட்டு பேசறான்! நீயும் பார்த்துக்கிட்டு சிலையாட்டம் நிக்கிறே? எனக்கு இது காதல்ன்னு தோணவே இல்லைடி! இது உன் வாழ்க்கை தலையிடறதுக்கு நானெல்லாம் யாரு? பேசாமல் தாத்தாகிட்டே எல்லாத்தையும் சொல்லிடலாம்! எத்தனை நாள் இதையெல்லாம் மறைக்க முடியும்? நீ உன் வாழ்க்கை இது தான்னு முடிவு பண்ணிட்டே, நான் சொல்றதெல்லாம் கேட்பியா?!” எரிச்சலோடு திட்டிக் கொண்டே வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் அழகர்.

“நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல்ல மாமா, தாத்தாகிட்டே சொல்லுன்னு சொன்னேன் தானே? நீ தான் சொல்லவே மாட்டேன்னுட்ட!” அவனின் வார்த்தைகளில் முகம் சுருங்கப் பேசினாள் கருவிழி.

“இந்தாருடி! இது உன் வாழ்க்கை! உனக்கு அந்த ரோசம் கெட்டவனைத்தான் கட்டணும்ன்னா, நீயே தாத்தா கிட்டே பேசு. திரும்பத் திரும்ப அவர் மனசையும், நம்பிக்கையையும் உடைக்கிற அளவிற்கு எனக்குத் தைரியம் இல்லைம்மா!”

“என்ன மாமா உனக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி பேசறே?!”

“சம்மந்தம் இல்லை தான்..! எப்போ இது என் வாழ்க்கை இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லைன்னு சொன்னியோ, அப்போவே உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை தான்.!” எனச் சொன்னவனின் கோபம் வாகனத்தின் வேகத்தில் தெரிந்தது. அதீத வேகத்தோடு அவன் வாகனத்தைச் செலுத்த பின்னால் அமர முடியாமல் பயத்தோடு அவன் சட்டையைத் தன் நடுங்கும் தளிர் விரல்களால் இறுகப் பற்றியவள், அவன் பரந்த முதுகில் முகம் புதைத்திருந்தாள்.

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. அடடா! ரோஷம் கெட்ட ரோஹன் விழி சந்திப்பா!!

    அவனே இவ்ளோ தெளிவா சொல்றான் லிவ் இன் கூப்பிடரான் அப்பவும் கூட இந்த கருகரு புரிஞ்சுக்காம இருக்காளே.

    ஒருத்தனோட கானல் நீரான அன்புக்கு ஆசைப்பட்டு ஒட்டுமொத்த குடும்பத்தோட பாசத்தையும் இழக்க பார்க்கிறா.

    என் வாழ்க்கை என் உரிமை என் விருப்பம் என் தேர்வுனு விழி தானே முதலில் விலக்கி வெச்சு பேசினா இப்போ அதையே அழகர் சொல்லும் போது மட்டும் வலிக்குது அவளுக்கு.

    என்ன இன்னைக்கு அத்தியாயம் சீக்கிரம் முடிஞ்சிட்டு. 🤔

    1. Author

      உண்மை தான் டியர்.. இன்னுமும் வாழ்க்கையைப் பத்தின புரிதல் அவளுக்கு இல்லை. 40 அத்தியாயம் போடணுமே டியர். ஒரு அத்தியாயம் இரண்டா பிரிச்சு போடும் போது சின்னதாகிடுது டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💚💜💛

  2. கருவிழிக்கு வயசு கோளாறு … அழகர் பொறுமையாய் பேசுவதே பெரிய விஷயம் தான் …

    1. Author

      அது தான் டியர் உண்மை. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💙💛💚