
அகம்-5

அந்தப் பெரிய வீட்டின் கூடத்தில் அனைவரும் சுற்றி நின்றிருக்க, நடுவில் தலை கவிழ்ந்தபடி நின்றிருந்தனர் மூவரும். உணர்வுகளைப் பிரதிபலிக்காத அழுத்தமான முகத்துடன் நின்றிருந்தார் சொக்கேசன்.
“அழகரு மாட்டினோம்..! தாத்தா என்ன சொல்லப் போறாரோ?!”
“உன்னால் தான்டி கரு கரு!”
“ஏன்டா, உங்க ரெண்டு பேர் பஞ்சாயத்தில் என்னை ஏன்டா இழுத்து விட்டீங்க? மாலையை வாங்கு தாலியை வாங்குன்னு என்னையும் இழுத்து விட்டீங்களே..?” காத்தவராயன் புலம்பிக் கொண்டிருக்க,
“இப்போ என்னத்துக்கு புள்ளைகளை நடு வீட்டில் இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி வச்சிருக்கீக? ஏய் அழகரு என்னடா நடந்துச்சு?” அங்கே நிலவிக் கொண்டிருந்த நிசப்தத்தைக் கலைத்தார் அங்கயற்கண்ணி.
“அது வந்து அப்பத்தா!” அழகர் இழுத்து நிறுத்த,
“என்னடா, பட்டுச் சேலையும், பட்டு வேட்டியுமா எங்கே போய்ட்டு வாரீக? கோயிலுக்கு போனீகளோ?” மீண்டும் கேட்டார் அங்கயற்கண்ணி.
“சொல்லக் கூடிய விசயமா இருந்தாத்தேன் சொல்லி இருப்பான் உன் பேரன். செய்யக் கூடாததை செஞ்சதனால் தானே தலைக் கவிழ்ந்து நிக்கிறான்.!” உறுமலாய் பேசினார் சொக்கேசன்.
“ஏன்டி சீமை சித்தராங்கி! என்னாடி பண்ணுனீங்க? உன் தாத்தன் இம்புட்டு கோவப்படும்படி என்ன செஞ்சீக?” அழகரிடம் பதில் கிடைக்காது போக , கருவிழியிடம் வினவினார் அங்கயற்கண்ணி.
“அம்மாச்சி! அது.. கல்யாணம்! அழகர் கோயில்..!” உடல் நடுங்கி, வியர்த்துக் கொட்ட, பதற்றத்தில் தொண்டைக்குழி ஏறி இறங்க உளறிக் கொட்டினாள் கருவிழி.
“கல்யாணமா யாருக்கு?” ஒரே குரலில் பதற்றமாய் கேட்டனர் பூங்கொடியும், அரசியும்.
“டேய் கருவாப் பயலே! எங்கேடா போனீக? இவ என்ன கல்யாணம் அது இதுன்னு உளறிக்கிட்டு திரியுறா? ஆமா! இவங்க கூட நீ எங்கே போனே?” கூர்மையாய் காத்தவராயனை துளைத்தது அங்கயற்கண்ணியின் பார்வை.
“இன்னைக்கு நான்தேன் இந்தக் குடும்பத்திற்கு இடியாப்பம். அக்கக்கா பிச்சு போட்டுருவாய்ங்களே?” எனப் புலம்பியபடியே,
“அது… வந்து கோயிலுக்குத்தான்.! அழகரு.. தாலி.. தங்கச்சி..!” குரல் தடுமாற தொடை நடுங்கியது காத்தவராயனுக்கு.
“அடேய் பக்கிங்களா! அநியாயமா என்னை இடையில் கோர்த்து விட்டிங்களேடா! குடும்பமே கொலைகாரன் மாதிரி பார்க்குது. உன் தாத்தன் என்னை பார்வையாலே எரிச்சுடுவார் போல.. எதையாவது சொல்லித் தொலைங்களேன்டா!” முணுமுணுப்பாய் காத்தவராயன் புலம்ப,
“இந்தக் கருவாப்பயல் தான் நம்ம பிள்ளகளை எங்கேயோ கூட்டிட்டு போயிருப்பான். என்னன்னு விசாரிங்க மாமா! யாருக்கு கல்யாணம்? எங்கே கூட்டிட்டு போன? சொல்லித் தொலையேன்டா!” பூங்கொடி இடையிட,
“ஆமா, உங்க வீட்டுப் பிள்ளைகளுக்கு ஒண்ணும் தெரியாது! நான் தான் பஞ்சு முட்டாய் வாங்கிக் கொடுத்து பத்திகிட்டு (கூட்டிக்கொண்டு) போய்ட்டேன். இப்போவும் வாயைத் திறக்காதீங்க டா! நானே அடிபட்டு சாகறேன். எம்மா தங்கச்சி ஊரு வாய் பேசுவ? இப்போ பேசேன்.!” எனப் புலம்பித் தள்ளினான் காத்தவராயன்.
“இந்த ஊருக்குள்ள நம்ம கௌரவம் என்ன? மதிப்பு மரியாதை என்னன்னு ரெண்டு பேருக்கும் தெரியும் தானே? இருந்தும் இப்படி செஞ்சுருக்கீங்கன்னா என்ன அர்த்தம்? இந்த மதிப்பும், மரியாதையும் பணம் காசால் வந்தது இல்ல. நேர்மையாவும் உண்மையாவும் வாழுற வாழ்க்கைக்கு கிடைச்ச பரிசு இது. ஏன் அழகரு, உனக்குக் கூட நம்ம குடும்பத்தைப் பத்தி, எந்த கவலையும் இல்லையா? நான் செத்துப் போய்ட்டேன்னு நினைச்சிங்களோ?” எனத் தடித்தக் குரலில் கேட்டார் சொக்கேசன்.
“அய்யா! என்ன வார்த்தை பேசுறீங்க?” பதற்றமாய் இடைமறித்தான் துடிவேல் அழகர்.
“மாமா!”
“அப்பா!”
“தாத்தா!” பதற்றமாய் குரல்கள் இடையிட்டன.
“என்ன வார்த்தை பேசுறீக? அழகர் எந்தத் தப்பும் பண்ணியிருக்க மாட்டான்.! அப்படி என்ன பண்ணிட்டான்? நம்ம விழியைக் கோயிலுக்குக் கூட்டிட்டு போயிருக்கான்.இது என்ன புதுசாவா நடக்குது?” பேரனுக்கு பரிந்து வந்தார் அங்கயற்கண்ணி. தன் பேரன் தவறு செய்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கை அவர் பேச்சில் மிளிர்ந்தது.
“அப்படி நம்பி அனுப்பினதுக்குத்தான், நான் அவன் மேல் வச்சிருந்த அத்தனை நம்பிக்கையையும் மிச்சமில்லாமல் சுக்கல் சுக்கலாக உடைச்சுட்டானே உன் பேரன். எம்புட்டு நம்பிக்கை வச்சிருந்தேன்? என்னை விட நான் அவனை அதிகமா நம்பினேனே? என்னைப் பெத்தவருக்கு சமமா தானே அவனைப் பார்த்தேன். உடைச்சுட்டான்! உடைச்சுட்டான் ஒண்ணுமில்லாமல் உடைச்சுட்டான். எல்லா பிள்ளைகளும் கம்ப்யூட்டரு, கேமிரான்னு தூக்கிட்டு சுத்தும் போது, என் கூட வயக்காட்டுக்கு வந்தவனை என் குலத்தைக் காக்க வந்த சாமின்னு நினைச்சேனே? மொத்தமா கரியைப் பூசிட்டான் உன் பேரன். என்னை மீறிப் போய்ட்டான் தானே? அவனைப் பொருத்தவரை நான் செத்துட்டேன்னு நினைச்சுக்க சொல்லு!” அழகரின் மேல் வைத்திருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையும் ஒரே நொடியில் உடைந்துப் போனதை ஏற்க முடியாமல் கோபமாய் கத்தினார் சொக்கேசன்.
“அப்படி என்ன பண்ணிட்டான்னு இப்படி கத்துறீக? உங்கக் கையை மீறிப் போகாமல் காலடியிலேயே கிடக்கிறாங்கிற இளக்காரம் தானே உங்களுக்கு?” அங்கயற்கண்ணி சொக்கேசனிடம் கேட்க, சுற்றி நின்றிருந்த அனைவரும் விழியசையாமல் ‘என்ன நடந்திருக்கும்?’ என்ற யோசனையோடு பார்த்துக் கொண்டிருக்க,
“உன் பேரன் நம்ம யாருக்கிட்டேயும் ஒத்தை வார்த்தை கூடச் சொல்லாமல் கல்யாணம் பண்ணுற வரை போயிருக்கான். நான் உயிரோடு இருக்கிறது அவனுக்குத் தெரியலை போல? இல்லை இந்தக் கிழவன் கிட்டே எதுக்கு சொல்லணும்ன்னு நினைச்சுட்டானோ என்னவோ? அலட்சியமாய் பேரனைப் பார்த்தார் அவர். ‘நீ இவ்வளவு தானா?’ எனக் குத்திக் காட்டுவது போன்ற அவர் பார்வை அவனைக் கொன்று கூறுபோட்டது.
“அய்யா நான்..!”
“என்ன பொய் சொல்லப் போறீக? இப்போவும் அயித்த மவளைக் காப்பாத்த தான் கல்யாணம் வரைக்கும் போனீகளாக்கும்.? ஏன் நாங்க பண்ணி வைக்க மாட்டோமா? அம்புட்டு நம்பிக்கை கூட எம்மேல இல்லையா? பதில் பேசு அழகரு..!” கூர்மையாய் பேரனைப் பார்த்திருந்தார் சொக்கேசன்.
“அய்யா!” அவன் தயக்கமாய் நிறுத்த,
“என்ன அழகரு! எங்களுக்குத் தெரியாமல் கல்யாணம் வரைக்கும் போய்ட்டியா? வீட்டில் பெரியவங்க இருக்காங்கன்னு ஒரு மட்டு மரியாதை இல்லை?” தன்னிடம் கூட சொல்லவில்லையே என்ற ஆற்றாமையில் மகனை சத்தம் போட்டார் கதிர் வேலன்.
“இல்லைப்பா! நம்ம கருவிழிக்கு நெடுமாறனைக் கட்டுறதில் விருப்பம் இல்லை!” என அவன் சொல்ல,
இங்கே கருவிழிக்கு வியர்த்துக் கொட்டியது. பயத்தில் தொண்டை அடைத்தது. வீட்டிலிருப்பவர்களின் முகத்தை நிமிர்ந்துப் பார்க்கவே தயக்கமாய் இருந்தது.
திருமணம் என யோசித்து வீட்டை விட்டு சென்ற போது வராத தயக்கம், இப்போது அவளறியாமலே அவளிடம் ஒட்டிக் கொண்டது. முதன்முறையாய் அவள் அறியாத நிதர்சனம் அவள் முன் விஸ்வரூபமெடுத்து நின்று அவளை மிரட்டியது. கோழிக்குஞ்சாய் கூட்டுக்குள்ளே பாதுகாத்து, நிராகரிப்பிற்கு இடமே இல்லாமல் வளர்க்கப்பட்டவளுக்கு, நிஜமான நிதர்சனங்கள் அச்சத்தை மட்டும் தான் தந்து தொலைத்தது.
“ஏன் அழகரு! நீயும் கருவிழியும் விருப்பப்படுறீங்கன்னு ஒத்தை வார்த்தை சொல்லியிருந்தால், நானே முன்ன நின்னு நடத்தி வைக்க மாட்டேனா? என் மேல் நீ வச்ச நம்பிக்கை அம்புட்டு தானா? துணைக்கு இந்த வெளங்காத பயலை வேற கூட்டிட்டு போய்க்கிட்டு, மாலையும் தாலியும் வாங்கிக்கிட்டு.. என்னை ரொம்ப சங்கடப்படுத்திப்புட்ட அழகரு..!” சொக்கேசன் சொல்ல, விலுக்கென நிமிர்ந்து தன் தாத்தாவைப் பார்த்தான் துடிவேல் அழகர்.
“அய்யா..! அது வந்து..!” என அவன் நடந்ததைச் சொல்ல முயன்றான் துடிவேல் அழகர். தன் அத்தை மகளுக்காக தானே சொல்லிவிடலாம் என்பது தான் அவனின் எண்ணமாகவும் இருந்தது. ஆனால் அதற்கான வாய்பு தான் அவனுக்குக் கிடைக்கவில்லை.
“நீ ஒண்ணும் சொல்ல வேணாம். கருவிழி நம்ம வீட்டுப் பொண்ணு, நம்ம வீட்டை விட்டு போக வேணாம்ன்னு நினைச்சேனே ஒழிய, அவளும் நீயும் விரும்பியிருப்பீங்ன்னு யோசிக்கவே இல்லை. என் மேலேயும் தப்பு இருக்கு தான். ஆனால் நீங்க நேரடியா என் கிட்டேயே சொல்லி இருக்கலாமேங்கிற வருத்தமும் இருக்கு. இந்த தாத்தன் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டான்னு தானே நீங்களா இப்படியொரு முடிவு எடுத்தீங்க?!” அவர் வருத்தத்தோடு சொல்ல,
“அய்யா! மன்னிச்சுடுங்க! உங்கக் கிட்டே சொல்லாமல் போனது தப்புத்தான். கருவிழியோட ஆசையை மட்டும் யோசிச்சு இப்படி பண்ணிட்டேன். இனி உங்கக் கிட்டே எதையும் மறைக்கப் போறதில்லை. எல்லாத்தையும் சொல்லிடுறேன்..!” என்றவன் மீண்டும் சொல்ல முயன்றான். ஆனால் அவனின் முயற்சியை சொக்கேசனின் கோபம் வென்றிருந்தது.
“நானே கண்ணால் பார்த்தப் பிறகு, எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை! நீயும் கருவிழியும் கல்யாணம் பண்ண போறதுக்கு நான் தடையாய் நிற்கப் போறதுமில்லை. கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கிடுங்க! நெடுமாறனுக்கு ஒரு நல்லதைப் பண்ணிப்புட்டு, உங்களுக்கு பண்ணிடலாம்! அதுவரை பொறுப்பீங்க தானே?” தடுமாறிய குரலுடன் அவர் கேட்க, அவர் தன் மேல் நம்பிக்கை தூள் தூளாய் உடைந்துவிட்டதென்று அழகருக்குப் புரிந்தது.
வார்த்தைகள் வராமல் வெறுமனே அவன் சம்மதமாய் தலையசைக்க, அதற்கு மேல் பேச எதுவுமே இல்லை என்பதைப் போல், தளர்ந்த நடையுடன் தன் அறையை நோக்கி நடந்த சொக்கேசனின் மனதிற்குள் ஏதோவொன்று உறுத்திக்கொண்டே இருந்தது.
“அழகரு! தாத்தா கிட்டே உண்மையைச் சொல்லு! அவர் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண போனோம்ன்னு நினைச்சுக்கிட்டார்.!” அவன் செவிகளுக்குள் கிசுகிசுத்தாள் கருவிழி.
“உன்னால் தான்டி எல்லாமே..! தைரியமா நிமிர்ந்து நிக்கிற மனுஷன் ஒரு நொடியில் உடைஞ்சு போய்ட்டார்.!” அழுத்தமானக் குரலில் பேசினான் துடிவேல் அழகர்.
“சொல்லு அழகரு, தாத்தா போறாரு..!” என அவள் சொன்னதை அவன் கண்டுக் கொள்ளவே இல்லை.
“தைரியம் இருந்தால் நீ போய் சொல்லு டி!”
“அழகரு!” என்ற அவளின் விளிப்பு கூட அவனைத் துளியும் அசைக்கவில்லை.
“என்னடி அழகரு? உனக்கு வேணும்ன்னா நீ தான் போராடணும். நீ ரோஹனை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா நீ தான் பேசணும்! இதில் என்னை இழுக்காதே!” கண்டிப்பான குரலில் சொன்னான் அழகர்.
“எனக்காக பேச மாட்டியா மாமா நீ?” நீர் தளும்பி நின்றது கருவிழியின் கண்களில்.
” பேச மாட்டேன் டி! உனக்கு வேணும்ன்னா நீயே போய் பேசு. அவர் நம்பிக்கையை நான் மறுபடி மறுபடி உடைக்கத் தயாராய் இல்லை!” மெதுவாய் சொன்னாலும் அவன் குரலில் அழுத்தம் தெறித்தது.
“அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா? இத்தனை வருஷத்தில் ஒருநாள் கூட நான் உன்னை அப்படியொரு கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை மாமா!”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. தாத்தாவுக்காக நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன். முடிஞ்சால் அதுக்கு முன்னால் உன் ரோஹனைக் கூட்டிட்டு ஓடிப் போயிரு! ஆனால் எதுக்கும் என்னைக் கூப்பிடாதே..! உனக்காக நான் பட்டதெல்லாம் போதும்.!” எனச் சொன்னவன் விருட்டென விலகி வெளியேறிருந்தான். அவனின் வார்த்தைகளும் விலகலும் நிரம்பவும் வலித்தது கருவிழிக்கு.
“அடி என் ராசாத்தி, என்னத்துக்கு இப்படி மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு இருக்கே? எப்படி இருந்தாலும் எங்க வீட்டு மருமக தான்டி! தாத்தா திட்டிப்புட்டாகன்னு விசனப்படுறியாக்கும்? அதெல்லாம் கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியாப் போகும்!” அரசி கருவிழியை உச்சி முகர்ந்து நெட்டி முறித்தார்.
“ஏன்டா நெடுமாறா! உனக்கு எதுவும் விழியைக் கட்டலைன்னு வருத்தமா?” மகனின் மனதை அறிய பூங்கொடி கேட்கவும்,
“எனக்கெல்லாம் எந்த வருத்தமும் இல்லை மா! சொல்லப் போனால் நான் கிரேட் எஸ்கேப்! நேத்து ராத்திரி பதினொரு மணிக்கு கருவிழி அறையில் அழகரைப் பார்த்தப்போவே இவங்களுக்குள்ளே ஏதோ இருக்குன்னு நினைச்சேன்!” தன் பங்குக்கு நெடுமாறனும் சொல்லிவிட,
‘இது எங்கே போய் முடியப் போகிறதோ?’ எனப் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் கருவிழி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சொக்கேசன் முற்றத்து பஞ்சாயத்து.
பாவம் காத்து அவங்க ஒண்ணு செய்ய இவங்க ஒண்ணு நினைக்க இடையில் மாட்டிக்கொண்டு அரைபடரான்.
கருகரு காக்கா விரட்டி இருவரும் அவர்கள் பங்குக்கு உளறி கொட்டிவிட்டார்கள் “ஒருவார்தை ஒருசொல்” போட்டிக்கு வந்தது போல. 🤣🤣
விழி மீது இருக்கும் ஆசையில் குடும்ப கவுரவத்தை யோசிக்காமல் விட்டு விட்டானே என்ற ஆதங்கம் தாத்தாவிற்கு.
இத்தனை நாட்கள் விழிக்காக என்றே எல்லாம் செய்தவன் இன்று செய்த செயலின் வீரியம் அறிந்து வருந்துகின்றான் அழகர்.
தாத்தாவின் நம்பிக்கை அற்ற தன்மையில் தன்னை கைவிட்டு விலகி செல்லும் அழகரின் செயலில் வலிக்கொண்டு நிற்கிறாள் விழி.
வாழ்வின் நிதர்சனம் கண்முன் தெரிய ஆரம்பிக்கும் போதே இப்படி என்றால் அது வலிக்க வலிக்க பாடம் கற்றுக்கொடுக்கும் போது என்ன செய்வாளோ? பார்ப்போம். ❤️
ஆமா! ஆமா! அழகர் தான் ரொம்ப பாவம். இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கோ இந்தப்புள்ளை. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💜💚💙💛
பாவம் சும்மா இருந்த அழகரை இழுத்து தெருவுல விட்டுட்டாங்க … விழிக்காக இன்னும் எவ்ளோ கெட்ட பெயர் வாங்க போறானோ…
அதானே.. சிவனேன்னு இருந்தவனை பஞ்சாயத்தில் நிறுத்தியாச்சு. இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ! தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💛💙💚