
அகம்-45
குலதெய்வ வழிபாட்டை நிம்மதியாய் முடித்துவிட்டு, கருவேலங்காட்டு வழியே நடந்து வந்துக் கொண்டிருந்தனர் அனைவரும்.
சொக்கேசனை மட்டும் வீட்டில் அந்த ஆண் செவிலியர் துணையுடன் விட்டுவிட்டு வந்திருந்தனர்.
கரத்தினில் அரிவாளேந்தி, கண்களை உருட்டியபடி நின்றிருந்த மதுரை வீரனை வணங்கிய பின், மன சஞ்சலங்கள் தீர்ந்தது போல் இருந்தது அங்கயற்கண்ணிக்கு.
மதுவும் நெடுமாறனும் முன்னால் நடக்க, அதன் பின் அழகரின் கைகோர்த்தபடி நடந்துக் கொண்டிருந்தாள் கருவிழி.
“ஏன்க்கா, எப்படியும் அம்புட்டு பேரும் ஒரே வண்டியில் தான் போவப் போறோம். இவுக ரெண்டு பேரையும் பாருங்க, என்னமோ கோட்டையைப் பிடிக்கப் போற மாதிரி முன்னா..டி போறாங்க!” அனைவருக்கும் முன்னால் தூரமாய் சென்றுக் கொண்டிருந்த சரவணனையும், கதிர்வேலையும் பார்த்து வினவினார் அரசி.
“போவட்டும் விடு அரசி! போய் காத்துக் கிடக்கட்டும்! ரொம்ப வருஷஞ்செண்டு, சாமியை நல்லா கும்பிட்டோம்! இப்படி பொங்கல் வச்சு சாமி கும்பிட்டு, எம்புட்டு வருஷம் ஆச்சு, இல்லை அரசி?”
“அது என்னவோ சரிதான்க்கா! புள்ளைங்க பொறந்து மொட்டைப் போடும் போது வந்தோம்! அதுக்குப் பிறகு வந்த மாதிரி ஞாபகம் இல்லையேக்கா! ஆனால் இந்த வட்டம் (முறை) நல்லா நிம்மதியா, திருப்தியாய் சாமி கும்பிட்டாச்சு. அத்தைக்கிட்டே சொல்லி, இந்த கருவேல மரத்தையெல்லாம் வெட்டி விளாசிப்புட்டு, நல்ல மரக் கண்ணு வாங்கி நடச் சொல்லணும். சின்ன பாதையாய் போக வரச் சிரமமா கிடக்கு. சுத்திலும் நம்ம இடம் தானே, சுற்றி தோட்டம் மாதிரி வச்சிட்டு, போர் போட்டுட்டோம்ன்னா போக வர நல்லா இருக்கும்.!”
“ஆமா அரசி, அத்தைக்கிட்டே சொல்லி, உன் புருஷன் கிட்டேயும், என் புருஷன் கிட்டேயும் சொல்லச் சொல்லணும்! நாம சொன்னோமின்னா, நமக்காகச் சொன்ன மாதிரி நினைப்பாக!” என அரசியும் பூங்கொடியும் பேசிக் கொண்டே வர,
“நீங்க சொன்னதெல்லாம் கேட்டுட்டு தான்டி வர்ரேன். போக்கு வரத்து இல்லாமல் போகவும்தேன் புதர் மண்டிப் போச்சு! எல்லாத்தையும் சீர் பண்ணுவோம். எல்லாம் சரி பண்ணிட்டு, அடிக்கடி வந்து போய் இருக்கணும்.!” எனப் பேசிக் கொண்ட நடந்து வர, காட்டுப் பாதையைக் கடந்து, மணல் பாதையின் திருப்பத்தில் நின்றிருந்த சிறிய பேருந்தைப் போன்ற வாகனத்தின் அருகில் அனைவரும் நின்றிருக்க, தங்க மீனாட்சி மட்டும் மணல் பாதையின் திருப்பத்தில் நின்று எங்கோ வெறித்துக் கொண்டிருந்தார்.
“மீனாட்சி!”
“ஏய் மீனாட்சி!”
“என்னத்தை அங்கிட்டு பார்த்துட்டு நிக்கிறவ? ஏய் மீனாட்சி!”
“எம்மா! என்னம்மா செய்றே?”
யாருடைய குரலுமே அவர் செவிகளில் விழாது போக, என்னவோ ஏதோவென பயந்து அழகரும், கருவிழியும் மீனாட்சியை நோக்கி ஓடி வர, அனைவருமே அவர்களின் பின்னோடு வந்து நின்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அத்தே! என்ன ஆச்சு? ஏன் இங்கண இப்படி பித்துப் பிடிச்ச மாதிரி நிக்கிறீக?” என்ற அழகரின் கேள்விக்கும் அவர் பதில் சொல்வதாய் இல்லை. கண்கள் மட்டும் எங்கோ நிலைக்குத்தி வெறித்தபடியே இருந்தது.
“அழகரு அங்கே பாரு!” என அதிர்வுடன் கருவிழி காட்டிய திசையில், அழுக்கு உடையும் சடைப் பிடித்த தலையுமாய், பார்க்கவே பிச்சைக்காரன் போன்ற தோற்றத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார்.
“இவரைப் பார்த்து ஏன் இப்படி நிக்கிறாக?” யோசனையோடு, கொளுத்தும் வெயிலில் தன் போக்கில் புலம்பியபடி அமர்ந்திருந்த அந்த நபரைப் பார்த்திருந்தான் அழகர்.
“எம்மா! கிறுக்கு எதுவும் பிடிச்சுக்கிச்சா? என்னத்துக்கும்மா இப்படி நிக்கிறே?” அன்னையை உலுக்கத் துவங்கியிருந்தாள் கருவிழி.
“எனக்கு சந்தோஷமா இருக்குடி விழி!” கண்ணீர் வழிய சிரித்த முகமும் வெறித்தப் பார்வையுமாய் நின்றிருந்தவரைப் புதிராய்ப் பார்த்தாள் கருவிழி.
“எம்மா எதுக்குமா அழுவுறே? எனக்கு பயமா இருக்குமா!” தடுமாற்றத்துடன், குரல் நடுங்கக் கருவிழி பேச,
“எனக்குத் தெரிஞ்சு அந்த ஆள் அத்தைக்குத் தெரிஞ்சவர் போல!” எனச் சொன்னபடியே மனைவியின் கரத்தினை இறுகப் பற்றிக் கொண்டான் அழகர்.
“ஆமா அழகரு! இந்த ஆளு எனக்குத் தெரிஞ்சவன் தான். என்னை அம்போன்னு, நடுத்தெருவில் விட்டுட்டுப் போனவன் இவன் தான். இவனை இப்படியொரு நிலையில் பார்க்கத்தேன், இங்கண வந்தேன் போல? இவன் மேல புருஷன்ங்கிற பாசமோ, இரக்கமோ கூட வர மாட்டேங்குது. அடுத்தவங்க கஷ்டத்தில் நாம சந்தோஷப் படக் கூடாதுன்னு சொல்லுவாங்க! ஆனால் நான் பட்ட வேதனைக்கு இவன் படுறதெல்லாம கொஞ்சம்தேன் அழகரு. இவன் பேருகூட எம் மவளுக்குத் தெரியக் கூடாதுன்னு வளர்த்தேன் அழகரு. இவனால் நான் பட்ட அவமானம் கொஞ்சம் நஞ்சமில்லை! நம்ப வச்சு ஏமாத்தி இவன் செஞ்சதெல்லாம் நினைச்சால் இப்போவும் வயிறு எரியுது. இவனுக்கு இதெல்லாம் பத்தாது, தூக்கிப் போடக் கூட ஆளில்லாமல், அநாதைப் பொணமா போவனும்! நான் பட்ட வேதனையும், அவமானமும், இவன் செத்தாலும் தீராது.!” ஆத்திரமாய்ப் பேசியவரின் கண்களிலிலிருந்து தன்னால் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.
விரல் விட்டு எண்ணிவிடுமளவிற்கு சில நாட்கள் வாழ்ந்ததன் விளைவாய், வயிற்றுப் பிள்ளையோடு அநாதையாய் நின்றவரின் மனதில் இருபத்தியோரு வருஷமாய் தேங்கிக் கிடந்த கோபமும், ஆற்றாமையும் கண்ணீராய் வழிந்தது. தன்னை வாழ்வை அழித்துவிட்டுப் போனவனை அநாதையாய், இப்படியொரு நிலையில் கண்ட போதும் கூட அவர் கோபம் அடங்க மறுத்தது.
“ஏய் விழி! போடி! இங்கண நிக்காதே! இந்தப் பாவியோட பார்வை மட்டுமில்லை நிழல் கூட உம்மேல் படக் கூடாது. நம்பினேன் விழி! இவனை நம்பி பைத்தியக்காரி மாதிரி நின்னேன் விழி! இதோ இப்போ வந்துடுவான். நம்மளைக் கூட்டிட்டுப் போயிருவான்னு நம்பினேன். ரொம்ப பயமா இருந்துச்சு! பஸ் ஸ்டாண்டில் இருந்த அம்புட்டு பேரோட கண்ணும் என்னை ஒருமாதிரி பார்த்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா இருட்ட ஆரம்பிச்சதும், என் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு போச்சு. அன்னைக்கு மட்டு என் உடம் பொறந்தவன், என் கதிரண்ணே மட்டும் வரலைன்னு வையி.. நானும் நீயும் உசிரோட இந்த நிமிஷம் இங்கண நின்னிருக்க மாட்டோம்! ஆனால் அந்த ஆண்டவன் இருக்கான்டி! எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணினவனோட நிலை என்னன்னு என் கண்ணில் காட்டிட்டான் பார்த்தியா! இனி நான் செத்தாலும் என் கட்டை நிம்மதியா வேகும் டி!” நீண்ட பெருமூச்சோடு ஆசுவாசப்பட்டார் மீனாட்சி. ஏதோ நீண்ட நாளாய் சுமந்துக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்தார்போல் நிம்மதியாய் இருந்தது அவருக்கு.
இது சத்தியமாய் பழிவாங்கல் இல்லை! கோபம்! ஏமாந்துப் போன பெண்ணின் நியாயமானக் கோபம்! தன்னை ஏமாற்றியவனை எதுவும் செய்ய முடியவில்லையே என்றக் கோபம். துரோகத்தால் உண்டான காயங்களும் இரணங்களும் காலம் கடந்தாலும் ஆறுவதில்லை. சில காயங்களுக்கு காலம் கூட மருந்தாவதில்லை. கண்ணில் கண்டவுடன் கல்லானாலும் கணவன் என மன்னிப்பதற்கு அவரொன்றும் ஞானியும் இல்லை. காயப்பட்டவர்களுக்கு மட்டுமே அதன் வலியும், வேதனையும், காயத்தின் ஆழமும் தெரியும். இருபத்தியோரு வருடங்களுக்கு மேலாகவும் அவரின் இரணம் ஆறாதிருக்கிறதென்றால், அவர் மனதால் பட்ட காயமும் பெரிது தானே? என்னதான் வயதுக் கோளாறு, இரு பக்கமும் தவறு இருக்கிறது என வைத்துக் கொண்டாலும், பழியும், பழகியதன் விளைவாய் உண்டான குழந்தையின் சுமையும் பெண்ணிற்கு மட்டுமே! ஏனென்றால் மாதராய் பிறக்கத்தான் மாதவம் செய்திருக்கிறோமே..!
“ம்மா! போதும்மா! வா போகலாம்!” யாரென்று தெரியாத போது கூட, அந்த நபரை நிமிர்ந்துப் பார்த்த விழி, இப்போது நிமிர்ந்துப் பார்க்கவும் தயாராய் இல்லை. தன் அன்னையின் நிலையை நினைத்துக் கண்கள் கலங்கியது அவளுக்கு.
“இருடி! கண்ணு குளிர இந்த ஆளோட நிலமையைப் பார்த்துட்டு வர்ரேன்.!”
“ஏன் மீனாட்சி! பார்க்கவே பாவமா இருக்காரு! இவரை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும்ன்னு தோணலையா?”
“யாரு இவன் பாவமா? அன்றைக்கு அநாதை மாதிரி நின்னேனே? மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், கையில் பத்துப் பைசா காசில்லாமல், போக வழியும் தெரியாமல் நின்னேனே? நான் பாவம் இல்லையா அரசி.? இவனே வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் இவன் கட்டின தாலி எதுக்குன்னு கழற்றி துக்கி எறிஞ்சவ நானு.. இவனைக் கூட்டிப் போய் நடு வீட்டில் வைப்பேனா? நான் இப்போதான் நிம்மதியாய் இருக்கேன். பண்ணின பாவம், சும்மா விடுமா? செஞ்ச பாவத்துக்கெல்லாம் பட்டுத்தானே தீர்க்கணும்! வாங்க போவோம்!” மண்ணை அள்ளி தன் தலையில் தானே போட்டுக் கொண்டு, சிரித்தபடியே அமர்ந்திருந்த அந்த நபரைப் பார்த்தபடியே அங்கிருந்து நடக்கத் துவங்கினார் தங்க மீனாட்சி.
அனைவரின் முகத்திலும் அசாத்திய மௌனம். இதுவரை தங்க மீனாட்சி காதலித்த நபர் யாரென்று யாருக்குமே தெரியாது. சொக்கேசனைத் தவிர. அவர் மட்டும் மகளை மிரட்டி உண்மையை வாங்கியிருந்தார்.
“உன்னை ஏமாத்திட்டுப் போனவனைக் உன் கண்ணு முன்னால் வந்து நிறுத்தறேன். அவங்க வீட்டில் பேசட்டுமா மீனாட்சி!” என சொக்கேசன் கேட்ட போது கூட,
“இனிமே நான் அவனோடு வாழத் தயாராய் இல்லைப்பா! என்னை வேணாமின்னு சொன்னவன் எனக்கு வேணாம்ப்பா!” என உறுதியாய் மறுத்திருந்தார்.
அப்படியிருக்கையில் முதன்முறையாய் மீனாட்சியின் கணவனாய் சில காலம் வாழ்ந்தவனை இப்படியொரு நிலையில் காண்போம்.. என யாரும் கனவில் கூட நினைத்ததில்லை. அனைவரின் மனமும் ஒருவித கனமான மனநிலையில் இருக்க, பேசுவதற்குக் கூட மனமின்றி அனைவரும் அமைதியாய் வாகனத்தில் ஏறி அமர்ந்திருந்தனர்.
“எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு அழகரு! இந்த ஆளை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம்! எனக்கு அப்பா இல்லையேன்னு ரொம்ப ஏங்கியிருக்கேன் அழகரு! ஆனால் இப்படியொரு நிலையில் பார்ப்பேன்னு சத்தியமா எதிர்பார்க்கலை. இப்படி கீழ்த்தரமான புத்தி படைச்சவரு என் கண்ணில் படாமலே இருந்திருக்கலாம்! நானும் ரோஹனை நம்பிப் போயிருந்தால் என் அம்மா மாதிரி ஏமாந்து தானே நின்னிருப்பேன்?” தொண்டை அடைக்கக் கேட்டாள் கருவிழி.
“ம்ப்ச்! லூசாடி நீ? இப்போ நீ என் பொண்டாட்டி டி! இன்னும் பழசையே பேசிட்டு கிடக்காதே! ரோஹனுக்கு எதிரான ஆதாரங்களை, நாம தானே அந்த ஆப்போஸிட் பார்ட்டி மாரிமுத்துக்கிட்டே கொடுத்தோம். அவன் செஞ்சதுக்கு அவனுக்கு தண்டனைக் கிடைக்கும். இன்னொரு தடவை அவனைப் பத்தி பேசினே உன்னைக் கொன்னுடுவேன்டி கரு கரு! நீ மட்டும் அன்றைக்கு அந்த ஐ பேட்-ஐ தவறுதலாய் எடுத்துட்டு வராமலிருந்திருந்தால், ரோஹனோட உண்மையான முகம் தெரிஞ்சிருக்காது. சில விஷயங்களை நாம அனுபவப்பட்டுதான் தெரிஞ்சுக்கணும் டி! அதில் இதுவும் ஒண்ணு! சும்மா மனசைப் போட்டுக் குழப்பாதே டி!” என அழகர் சொல்லவும் சம்மதமாய் தலையசைத்தவள், தன்னை யாரோ உற்றுப் பார்க்கும் உணர்வில், சில நிமிடங்கள் ஜன்னலின் வழியே அங்கும் இங்கும் தேடியவளின் விழிகளில் ரோஹனின் பிம்பம் தெரிந்தது.
“அழகரு.. ரோ..!” எனச் சொல்ல வந்தவள், சட்டென நிறுத்திவிட்டு, ஏற்கனவே ரோஹனைக் கண்ட இடத்தில் மீண்டும் தேட, அங்கு யாருமே இல்லை.
“ஒருவேளை கனவோ?” என முணுமுணுத்தவள் அழகரின் தோளில் சாய்ந்துக் கொள்ள, அதே நேரம் அழகரின் அலைபேசியும் அலறியது.
“ஹலோ!”
“ஹான் தம்பி நான் மாரிமுத்து பேசறேன் பா! நீங்கக் கொடுத்த ஆதாரத்தை கஷ்டப்பட்டு, மேலிடத்தில் சேர்த்துட்டேன். அந்த தர்மேந்தரோட பையனையும் கைது பண்ணிட்டாங்க!”
“ஆமாண்ணே! எங்களுக்கும் தெரியும்! ரொம்ப சந்தோஷம்ண்ணே! நீங்க இல்லாமல் இதைச் செஞ்சிருக்க முடியாதுதேன். ரொம்ப நன்றிண்ணே!”
“இருங்க தம்பி! முழுசா கேளுங்க! ஜெயிலிலிருந்து அந்த ரோஹனைக் கூட்டிப் போன வண்டி ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சுன்னு பொய்யா ஒரு செட்-அப் பண்ணி, அவன் மகனைத் தப்பிக்க வச்சிட்டான் அந்த மினிஸ்டர். எப்படியும் ஆதாரம் கொடுத்தது நீங்கன்னு தகவல் போயிருக்கும். கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன் தம்பி!” என அவர் சொல்லிவிட்டு அவர் அலைபேசியை வைத்துவிட, அழகரின் கண்கள் தன் தோள் மீது சாய்ந்திருந்த விழியைத்தான் பார்த்தது.
‘இவளுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது!’ என இதயம் படபடக்க, அவள் கரத்தோடு தன் கரம் கோர்த்துக் கொண்டான் அழகர்.
அதே நேரம், கருவேலங்காட்டின் அடர்ந்துக் கிடந்த புதர்களின் நடுவே நின்றிருந்த ரோஹனின் கண்களும் கருவிழியைத்தான் பார்த்திருந்தது. ரோஹனின் கண்களில், எல்லையில்லா கோபமும், வன்மமும், ஆத்திரமும் ஒருசேர பிரதிபலித்தது.
“நான் உனக்காக வந்துட்டேன் பேபி! என் கையால் சாகறதுக்கு தயாராய் இருடி! வட்டியும் முதலுமாய் சேர்த்து தரப் போறேன்டி!” என அழுத்தமாய் உச்சரித்தபடியே கண்களில் கொலைவெறியுடன் கருவிழியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


மீனாட்சியின் கோவம் இன்றளவும் குறையாமல் அப்படியே இருக்கிறதென்றால் எத்தனை பெரிய வலியை சுமந்திருப்பார் அவர்.
நினைத்து பார்த்தாலும் வேதனையை மட்டுமே பரிசளிக்க கூடிய கானல் நீர் போன்றதொரு திருமண வாழ்வு.
இருவருக்கும் தவறில் பங்கிருந்தாலும் பழியும், பழகியதன் பலனாய் குழந்தையின் சுமையும் பெண்ணிற்கு மட்டுமே.
என்ன செய்ய இயற்கை கூட பெண்ணிற்கு எதிராய் தான் அமையப்பெற்றிருக்கின்றது.
விழியின் வேதனை தாங்கிய வார்த்தைகள், “இவரை பார்க்காமலே இருந்திருக்கலாம்”.
ரோஹன் மூலமாக என்ன பிரச்சனை வரவிருக்கின்றதோ?
உண்மை தான் டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 💜💚