Loading

அகம்-38

நாட்கள் அதன் போக்கில் அழகாய் நகர்ந்திருந்தது. மது மற்றும் நெடுமாறனின் திருமணத்திற்கு இன்னும் ஒருவாரமே இருக்க, பரபரப்பாய் திருமண வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது.

“அழகரு! சமையலுக்கு என்னென்ன வேணுமின்னு லிஸ்ட் போட்டு கொடுத்துட்டாங்க! நமக்கு தெரிஞ்ச இடத்தில் சொல்லி, நேராய் மண்டபத்திற்கு அனுப்ப சொல்லிருவோம்!”

“சரி அப்பத்தா!”

“அப்பறம், அந்த பூ, மாலை எல்லாம் நம்ம வெள்ளையன் கிட்டே சொல்லியிருக்கேன். கொஞ்சம் உதிரிப் பூவும், வாரவங்க தலைக்கு மல்லி சரமும் சேர்த்து சொல்லிரு! தைக்கக் கொடுத்த கல்யாணத் துணிமணியெல்லாம் சரிபார்த்து நெடுமாறனை வாங்கச் சொல்லிரு!”

 

“பூங்கொடி! உன் மருமவக்கிட்டே உடுப்பு சரியா இருக்கான்னு கேட்டு, எதாச்சும் சரி செய்யணும்ன்னா சரி செஞ்சு வச்சிரு!”

 

“அரசி! நம்ம பக்கமிருந்து மதுவுக்குப் போட, ஆரமும் அட்டிகையும் எடுத்து வச்சோமே! பொறுப்பா நீதேன் மண்டபத்திற்கு கொண்டு வரணும்!”

 

“பிறகு.. வரிசை வைக்கிறது, இருபத்தியோரு தாம்பூலமாவது வைக்கணும். பழம் பூ, சீப்பு, கண்ணாடின்னு அது தனியா லிஸ்ட் எழுதி, அதையும் ஏற்பாடு பண்ணுங்க!” செய்ய வேண்டியவைகளை தோரணையாய் உத்தரவிட்டுக் கொண்டிருந்தார் அங்கயற்கண்ணி. அவர் பார்வை ஓரமாய் கல்லும் மண்ணும் போல், உட்கார வைக்கப்பட்டிருந்த கணவரைத் தொட்டு மீண்டது.

 

‘உடம்பில் வலு இருக்கும் வரை, எப்படி வேணும்னாலும் ஆடலாம்! உடம்பில் இருக்கிற உதிரம் வற்றி ஓரமாய் உட்காரும் போது, உன் உடம்பைக் கழுவவே யாராவது தேவைப்படுவாங்க! கட்டுன பொண்டாட்டிக்கு கண்ணை மூடிக்கிட்டு, துரோகம் பண்ணுறவனையெல்லாம், யாரும் எதுவும் பண்ணத் தேவையில்லை! காலமே கையைக் கட்டி மூலையில் உட்கார வச்சிடும்!’ மனதோடு கணவனிடம் பேசினார் அங்கயற்கண்ணி.

 

அவர் தன்னைப் பார்த்த ஒற்றை பார்வையில் மனைவியின் எண்ணம் சொக்கேசனுக்குப் புரிந்தது. அரை நூற்றாண்டு மனைவியுடன் வாழ்ந்தவருக்கு, மனைவியின் மனம் புரியாதா என்ன? ஆனால், அவரின் உணர்வுகளையோ, கோபத்தையோ வெளியில் காட்ட முடியாமல், கொலுவில் அமர்த்தி வைத்த பொம்மையைப் போல் உட்கார்ந்திருக்கும் நிலையை அறவே வெறுத்தார் சொக்கேசன்.
எதையுமே கண்டுக் கொள்ளாத அங்கயற்கண்ணியோ, தன் போக்கில் உத்தரவிட்டுக் கொண்டிருக்க,

 

“அத்தே! ஏன் இம்புட்டு விசனப்படுறீக? நாங்கதேன் இருக்கோமே.. பார்த்துக்கிடுவோம் விடுங்க! நல்லபடியா பிள்ளைங்க கல்யாணம் நடக்கும்!”

 

“அதெல்லாம் தெரியும் அரசி! நம்ம வீட்டில் ரொம்ப நாளைக்குப் பிறகு, நடக்கப் போற விஷேஷம், எந்தக் குறையும் இல்லாமல் நடக்கணும்.!” என அங்கயற்கண்ணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தயங்கியபடியே குழப்பமான முகத்துடன் உள்ளே வந்தாள் மதுரிமா.

 

“கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரந்தேன் கிடக்கு, எதுவா இருந்தாலும் ஃபோன் போட்டிருக்கலாமே மதும்மா! இங்கேயும் அங்கேயும் அலைஞ்சு மூஞ்சி வாடிப் போவுமே!” நிஜமான அக்கறையுடன், சொன்னார் பூங்கொடி.

 

“இல்லை அது.. வந்து..!” தயக்கமாய் அனைவரையும் பார்தாள் மது.

 

“என்னாச்சுடி மது? ஏன் மூஞ்சியெல்லாம் ஒரு மாதிரி கிடக்கு.!” தோழியின் கரம் பிடித்து, வினவினாள் கருவிழி.

 

“பாட்டி! நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, இந்தக் க.. கல்யாணத்தை நிறுத்திடலாமா?” என அவள் கேட்க, அதிர்வு தாங்கிய முகத்துடன், அனைவரின் பார்வையும் மதுவை நோக்கித் திரும்பியது.

 

“நான்தேன் சொன்னேனுல்ல, இதெல்லாம் சரி வராதுன்னு.. பொம்பளைகளா எடுத்து செய்றீகளாக்கும், விளங்குன மாதிரி தான்.! எல்லா ஏற்பாடும் செஞ்சு, இன்னும் ஒரு வாரந்தேன் கல்யாணத்துக்கு இருக்கு. இந்தப் புள்ள சட்டமா நிறுத்திப்புடுவோம்ன்னு சொல்லுது. விளையாட்டு விசயமா இது?” மெத்திருக்கையில் அமர்ந்திருந்த சரவணனின் குரல் உயர்ந்தது.

 

“என்ன சங்கதி மதும்மா? நெடுமாறன் ஏதாச்சும் வஞ்சுட்டானா? பொசுக்குன்னு கல்யாணம் வேண்டாமின்னு சொல்லுமளவிற்கு என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கிடுவோம் மதும்மா!” பொறுமையும் நிதானமாகவும் பேசினார் அங்கயற்கண்ணி.

 

“ஆமா! மடியில் தூக்கி வச்சு கொஞ்சுங்க! என் பேரனுகளுக்கு பிடிக்கிறதைத்தேன் செய்வேன்னு, செஞ்சால் இப்படித்தேன். எம் மயனோட கல்யாணமே இப்படின்னா, அப்பா வேணாம்ன்னு சொன்ன அழகரு, விழி கல்யாணத்தில் என்னென்ன நடக்கப் போகுதோ?”நக்கலாய் சரவணன் சொல்ல,

 

“பெரியப்பா! நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்கிடாதீங்க, யார் சம்மதிச்சாலும், சம்மதிக்கலைன்னாலும், கருவிழியைத் தவிர வேற எவளையும் கட்ட முடியாது. பாட்டியோ, தாத்தாவோ, யார் வேணாம்ன்னு சொன்னாலும், என் முடிவு மாறாது. இனிமே இப்படியெரு பேச்சு வேணாம்!” அழுத்தமான குரலில் அழகர் சொல்ல, கோபத்துடன் அழகரை முறைத்தவர் விறுவிறுவென வெளியேறியிருந்தார்.

 

“ஏங்க, இப்போவெல்லாம் பூங்கொடி அக்கா கோவிச்சுட்டு போனதை விட, உங்க அண்ணன்தேன் பொழுதன்னைக்கும் கோவிச்சுட்டு போறாரு! எப்போவும் பின்னாடியே தானே போவிக! போங்க!” அரசி கதிர்வேலிடம் முணுமுணுக்க,

 

“என்னடி லந்தா? வர வர வாய்க்கொழுப்பு கூடிப் போச்சுடி! நாங்களும், பார்க்கிறோம்.. இந்தா கல்யாணம் வேணாம்னு வந்து நிக்கிதுல்ல எப்படி நடத்துறீகன்னு பார்க்கிறோம்.!” என வேண்டுமென்றே சொன்னார் கதிர்வேல்.

 

“பாருங்க! நல்லா கண்ணைத் திறந்து வச்சு பாருங்க! ஊரு மெச்ச இந்தக் கல்யாணத்தை நடத்திக் காட்டுறோம்.!”

 

“பார்க்கிறேன்டி! பொட்டைக் கோழி கூவி பொழுது விடியாது தெரிஞ்சுக்கோ!”

 

“பொழுது விடியறது, அடையறது எல்லாம் இயற்கையா நடக்கறது. சேவல் கூவலைன்னாலும் நெதமும் பொழுது விடியத்தானே செய்யுது. இப்போவெல்லாம் சேவல் கூவறதே இல்லை! வீட்டுக்கு வீடு அலாரம்தேன் கூவுது. அதுக்காக அலாரம் அடிக்காமல் பொழுது விடியாதுன்னு சொல்லுவீகளோ? இன்னமும் பொம்பளை சிரிச்சா போச்சு, புகையிலை விரிச்சா போச்சுன்னு பழங்கதை பேசாமல் சோலியைப் போய் பாருங்க!”

 

“எல்லாம் எங்க ஆத்தா கொடுக்கிற இடம்! யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்! அப்போ பார்த்துக்கிறேன். இந்தக் கல்யாணத்தை நடத்த முடியலைன்னு வந்து நிக்கிறீகளா இல்லையான்னு பாரு!” கோபத்தில் முகம் சிவக்க மூக்கு விடைத்தது கதிர்வேலிற்கு.

 

“இந்தப் பழமொழியும் தப்புங்க! அது எப்படின்னா ஆ நெய்க்கு..!” என அரசி சொல்ல,

 

“போதும்!” கைநீட்டி இடை நிறுத்தியவர், தமையன் சென்ற வழியிலேயே வெளியேறியிருந்தார்.

 

“ரெண்டு சர்வாதிகாரிகளும் கிளம்பியாச்சு! இந்தாரு மது, என்ன பிரச்சனையாய் இருந்தாலும், நிதானமா பேசி தீர்த்துக்கிடுவோம்! சின்ன சின்ன சண்டைக்கெல்லாம் கல்யாணம் வேணாம்ன்னு சொல்லக் கூடாது மது!” என்ற அரசி,

 

“வீரா! நம்ம நெடுமாறனை அழைச்சுட்டு வா! புள்ளையை என்ன சொன்னான்னு கேட்போம்!” என தன் இளைய மகனை அனுப்பினார்.

 

“ஏய் மைடப்பி! நீ சும்மா தானே நிக்கிறே? நீ போய் கூட்டிட்டு வர வேண்டியது தானே? கடைக்குப் போறதிலிருந்து கால் டாக்ஸி புக் பண்ணுற வரைக்கும் நான்தேன் செய்யணும்!” கருவிழியிடம் சலித்துக் கொண்டான் வீரபத்ரன்.

 

“டேய்! பதிற்றுப்பத்து, உன்னை யார் கடைசியில் வந்து பிறக்கச் சொன்னது? அதோட, இனிமே என்னை மைடப்பின்னு கூப்பிடாதே! நான் உனக்கு அண்ணி!”

 

“வேணும்னா அஞ்சரை அடி பன்னின்னு கூப்பிடுறேன்..!” என்றவன் அவள் கரத்தினில் சிக்காமல் ஓடிப் போனான்.

 

“டேய் டென் ருப்பீஸ்..! வா மண்டையிலேயே கொட்டு வைக்கிறேன்.!” அவனைக் குட்டுவதற்கு தயாராய் கை முஷ்டியை மடக்கி நின்றாள் கருவிழி.

 

“எவ்வளவு பெரிய விஷயம் பேசிட்டு இருக்காங்க! சின்னப்புள்ளைத் தனமா விளையாடிக்கிட்டு திரியாதே டி! உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணி எப்படித்தான் கட்டி மேய்க்கப் போறேனோ?” அழகரின் குரலில் கண்டிப்பு தெரிந்தது.

 

“அம்புட்டு கஷ்டப்பட்டெல்லாம் நீங்க கட்ட வேண்டாம் சாமி! பேசாமல் நான் உன் கழுத்தில் தாலி கட்டவா அழகரு? எல்லார் மாதிரியும் இல்லாமல் புதுசா இருக்கும்ல்ல?” சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டு சிரித்தாள் கருவிழி.

 

“கொன்னுப்புடுவேன்டி! கற்பனை செஞ்சு பார்த்து பல்லைக் காட்டறியா? உன் ஃப்ரெண்ட் இந்த மரமண்டைக்கு அறிவே இல்லையா? இம்புட்டு ஏற்பாடும் செஞ்ச பிறகு, கல்யாணம் வேணாம்ன்னு வந்து நிக்கிறா?”

 

“ம்க்கும்! நெடுமாமா எதாச்சும் ஏடாகூடமா பேசி வச்சிருக்கும்! அவங்களுக்குள்ளே என்ன நடந்துச்சோ யாருக்குத் தெரியும்?” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நெடுமாறன் பபடிகளில் இறங்கி கீழே வந்தான். அவன் பார்வையோ மதுவிடம் மட்டுமே நிலைத்திருந்தது.

 

“நெடுமாறா! மது கல்யாணம் வேணாம்ன்னு வந்து நிக்கிறா! நீ எதாச்சும் சொன்னியா?” பூங்கொடி தான் கேள்வியோடு மகனின் முன் வந்து நின்றார்.

 

“கல்யாணம் வேணாம்ன்னா, போகச் சொல்லுங்க! அதுக்காக இவ காலில் எல்லாம் விழ முடியாது!”

 

“டேய்! என்ன பிரச்சனை டா, உங்க ரெண்டு பேருக்கும்? விஷயத்தை சொல்லாமல் ஆளுக்கொரு பக்கம் மூஞ்சியைத் தூக்கிட்டு நின்னால் நாங்க என்ன செய்ய முடியும்?”

 

“ம்மா! கல்யாணத்திற்கு பிறகு அவ எந்த அட்ஜஸ்ட்மெண்ட்டும் பண்ண மாட்டேன்னு சொல்றா! இதெல்லாம் செட் ஆகாதும்மா! பேசாமல் கல்யாணத்தை நிறுத்திடலாம்!” எங்கோ பார்த்துக் கொண்டே பதில் சொன்னான் நெடுமாறன்.

 

“ம்ப்ச்! இது ஒண்ணும் விளையாட்டு காரியமில்லை! பொசுக்கு பொசுக்குன்னு கல்யாணத்தை நிறுத்தச் சொன்னீங்கன்னா, என்ன செய்யட்டும் பிரச்சனை என்னன்னு சொன்னால் தானே தெரியும்?” பொறுமையின் விளிம்பிலிருந்து வந்தது அரசியின் குரல்.

 

“நெடுமாறா! என்ன பிரச்சனைடா? உங்க விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து, நீங்க நல்லா இருக்கணும்ன்னு நினைச்சுதேன் உங்க அப்பன், சித்தப்பன் எதிர்ப்பையும் மீறி செஞ்சுட்டு இருக்கேன். என்ன சங்கதின்னு சொல்லாமல், இங்கே யாராலையும் எதுவும் பண்ண முடியாது.!” உறுதியாய் பேரனின் முகம் பார்த்துச் சொன்னார் அங்கயற்கண்ணி.

 

“மது மேடம்! கேம்பஸில் செலெக்ட் ஆகியிருக்காங்க! எக்ஸாம் முடிஞ்சதும் வந்து ஜாய்ன் பண்ண சொல்லியிருக்காங்க! அது தான் இப்போ பிரச்சனை அப்பத்தா!” ஒருவழியாய் வாய் திறந்து பதில் சொல்லியிருந்தான் நெடுமாறன்.

 

“நல்ல விஷயம் தானேடா! இதில் என்ன பிரச்சனை? கேம்ப்பஸில் செலெக்ட் ஆகி, வேலைக்கு போகப் போறாள்ன்னா, அது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லையே? இதுக்கு ஏன் கோபப்படுற?” எனப் புரியாமல் வினவினான் அழகர்.

 

“அவளுக்கு வேலை கிடைச்சதெல்லாம் எனக்கு ப்ராப்ளம் இல்லை அழகர். அவள் ஜாய்ன் பண்ணப் போறது மதுரையில் இல்லை! சென்னையில். சென்னையில் நீ ஜாய்ன் பண்ண வேணாம், அந்த வேலை தேவையில்லைன்னு சொன்னேன். அப்போ கல்யாணமே வேணாம்ன்னு சொல்றா! இப்போ சொல்லுங்க தப்பு யார் மேலேன்னு!” தான் சொல்வது சரி என்ற எண்ணத்தில் குரலுயர்த்தினான் நெடுமாறன்.

 

“உன் மேலத்தேன் தப்பு நெடுமாறா! அவளை வேலைக்குப் போக வேணாம்ன்னு சொல்ற உரிமை உனக்கு யார் கொடுத்தது?” எனக் கேட்டது அங்கயற்கண்ணியே தான். பூங்கொடியும் அரசியும் அதிர்வாய் தன் மாமியாரைத் திரும்பிப் பார்த்தனர்.

 

“அப்பத்தா! என்ன பேசுறீங்க? அடுத்தவாரம் இந்நேரம் அவ என் பொண்டாட்டி! அவப் போகக் கூடாதுன்னு சொல்றதுக்கு எனக்கு முழு உரிமை இருக்கு. புருஷன்ங்கிற உரிமை பத்தாதா என்ன?”

 

“பத்தாது டா! புருஷன்ங்கிற உரிமை மட்டும் எல்லாத்துக்கும் பத்தாது நெடுமாறா! வேலைக்குப் போறது அவ விருப்பம். அவ விருப்பத்தில் தலையிட உனக்கு மட்டுமில்லை யாருக்குமே உரிமை இல்லை. உன்னோட பழைய அப்பத்தாவா இருந்திருந்தால் நிச்சயம் உனக்கு ஆதரவாகத்தேன் பேசியிருப்பேன். ஒரே விஷயத்தில் ஒட்டுமொத்தமா பட்டுட்டேன். அவ வேலைக்குப் போகட்டும்!” இறுதியான, உறுதியான முடிவாய் சொன்னார் அங்கயற்கண்ணி.

 

“ஆத்தீ! நெசமாவே நம்ம மாமியார் தானாக்கா இது? படிச்ச பொண்ணா இருந்தாலும் வீட்டை மட்டும் பார்த்துக்கிட்டா போதும்ன்னு சொல்லித்தானே நம்மளையெல்லாம் பொண்ணு கேட்டாக? இது என்ன இம்புட்டு பெரிய மாற்றமா இருக்கு? எனக்கு தலையை சுத்துதுக்கா! இது ஒண்ணும் கனவில்லையே?” அரசி பூங்கொடியிடம் வினவ,

 

“கனவில்லை அரசி! உன்னைக் கிள்ளுறேன் பாரேன்!” பூங்கொடி அரசியின் கரத்தில் கிள்ள,

 

“நெசந்தேன்க்கா!” நம்ப முடியாமல் சொன்னார் அரசி.

 

“அவ போய் சென்னையில் உட்கார்ந்துக்கிறதுக்கா கல்யாணம் பண்ணி வைக்குறீங்க? அப்போ என்னை யார் பார்த்துக்கிறது?” என்ற நெடுமாறனின் கேள்விக்கு,

 

“நீ என்னடா குழந்தையா? இப்போ உன்னை யார் பார்த்துக்கிறா? அது ஏன் பொண்டாட்டி வந்ததும், நம்மளை அவ குழந்தை மாதிரி பார்த்துக்கணும்ன்னு நினைக்கிறீங்க? இதே மாதிரி ஆசைகள் பொண்ணுக்குள்ளேயும் இருக்கும் நெடுமாறா! அவளைக் குழந்தை போல பார்த்துக்கணும்ன்னு ஏன் உங்களுக்கு தோணவே மாட்டேங்குது? இன்னும் அவளுக்குப் பரிட்சையே முடியலையே? அதுக்குப் பிறகு தானே சேர சொல்லியிருக்காக! கொஞ்ச நாளைக்கு அங்கண வேலை செய்யட்டும்! பிறகு மதுரைக்கு மாத்தி வாங்கிப்போம்!” எனச் சொன்னார் அங்கயற்கண்ணி.

 

“வேலைக்கு சேர்ந்த உடனே மாற்றியெல்லாம் வாங்க முடியாது.!”

“அப்போ நீ சென்னைக்கு மாத்தி வாங்கிட்டு போ! பொண்டாட்டிக்காக போக மாட்டியா? பொண்டாட்டி கூட இருந்த மாதிரியும் ஆச்சு! வேலையும் பார்த்த மாதிரியும் ஆச்சு. இதுவொரு பிரச்சனைன்னு கண்ணைக் கசக்கிக்கிட்டு, கல்யாணம் வேணாமின்னு சொல்லிக்கிட்டு.. போங்க போய் சோலியைப் பாருங்க!” இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார் அங்கயற்கண்ணி.

 

“பாட்டி! தேங்க்ஸ் பாட்டி!” என ஓடிப் போய் அங்கயற்கண்ணியை அணைத்திருந்தாள் மது.

 

“மதும்மா! எதுவா இருந்தாலும், தயக்கமில்லாமல் வெளிப்படையாய் இங்கே சொல்லலாம்! இது உன் வீடு மதும்மா! நீ வேலைக்குப் போய், உங்க வீட்டைப் பார்த்துக்கணும்ன்னு நினைக்கிறதை என்னால் புரிஞ்சுக்க முடியுது ராசாத்தி!” என மதுவின் நெற்றியில் முத்தமிட்டவர்,

 

“நெடுமாறா! புள்ளையைக் கூட்டிப் போய் சமாதானப்படுத்து! மறக்காமல் மாற்றலுக்கு எழுதிக் கொடுத்துரு!” எனச் சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்றுவிட, முகம் தூக்கியபடி வெளியேறிய மதுவை அழைத்தபடியே பின்னால் ஓடினான் நெடுமாறன்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்