
அகம்-37

வானம் எனும் கருநீலப் பட்டாடையில் வைரக் கற்களாய் விண்மீன்கள் மின்னி மின்னி ஒளிர்ந்துக் கொண்டிருக்க, வளர் பிறை நிலா வானில் தண்ணொளி வீசிக் கொண்டிருந்தது. தென்றல் காற்று தேகம் தழுவி நழுவிக் கொண்டிருந்த அந்த இரவுப் பொழுதில், மொட்டை மாடித் திண்டில் அமர்ந்தபடியே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள் கருவிழி. அவள் கார் கூந்தலில் சூடியிருந்தப் பூவின் சுகந்தம் அந்த இடம் முழுதும் நிறைந்திருந்தது.
“அழகரு! இந்நேரத்தில் இங்கே எதுக்கு வரச் சொன்ன? அதுவும் புடவையில்..?” கேள்வியைப் பாதியில் நிறுத்தி, பின்னால் திரும்பி அழகரின் முகம் பார்த்தாள் அவள்.
காற்றுக்கு அவன் முன்னுச்சிக் கேசம், நெற்றி தழுவி நழுவ, மார்பின் குறுக்கே கைக்கட்டியபடி, கண்களில் பளிச்சிடலுடன் அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் அழகர்.
“ம்ப்ச்! அழகரு..! வரச் சொல்லிட்டு இப்படியே பார்த்துட்டு இருந்தால் என்ன அர்த்தம்?” அவனின் புதுவிதமான பார்வையில் உள்ளுக்குள் ஏதோ செய்தது அவளுக்கு.
“மாமா!”
“அழகரு..!” திரும்பத் திரும்ப அவள் அழைக்க,
“என்னடி..!” பொறுமையில்லாத குரலில் கேட்டான் அவன்.
“எதுக்கு இங்கண வரச் சொன்னே? யாராச்சும் பார்த்தால் என்ன நினைப்பாங்க?”
“என்ன நினைப்பாங்கன்னு சொல்லுடி கரு கரு, நானும் தெரிஞ்சுக்கறேன்!”
“ஹான்.. அது வந்து எதாவது தப்பா நினைச்சுட்டா?” குரல் தடுமாறியது அவளுக்கு.
“அது தான்டி கிறுக்கச்சி, என்ன தப்புன்னு கேட்டேன்!” என்றபடியே அவன் இரண்டடிகள் முன்னால் வர, குப்பென வியர்த்துப் போனது நங்கையவள் மதிவதனம்.
“என்னடி பதிலே காணோம்?” அடுத்த அடியை அவளை நோக்கி எடுத்து வைத்தான் அழகர். அவர்களின் இடையேயான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையத் துவங்கியது.
“தப்புன்னா தப்புத்தான்.! அதை எப்படிச் சொல்லன்னு தெரியலை அழகரு!” தலை நிமிர்த்தாது தரையைப் பார்த்தபடி பதில் சொன்னாள் அவள்.
“என்னைப் பார்த்துப் பதில் சொல்லுடி!” தனக்கு வெகு நெருக்கத்தில் புன்னகையோடு நின்றிருந்தவனை நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு, இதயம் பட படவென அடித்துக் கொள்ள,
“தெ.. தெ.. தெரியலை! அழகரு.. நீ பின்னால் தள்ளி நில்லு! ஏன் இவ்வளவு கிட்டே வந்து நிற்கிறே? நான் கீழே போறேன்!” என அவள் விலக முற்பட, அவள் மென்கரம் பிடித்து தடுத்து நிறுத்தியிருந்தான் அழகர்.
“மாமா!” அவளின் செல்லச் சிணுங்கலில்,
“மாமனுனக்கு என்னடி வச்சிருக்க?” எனக் கேட்டவனின் குரலில் கிறக்கம் நிறைந்துக் கிடந்தது.
“அழகரு.. இது என்ன புதுசா நடந்துக்கிறே? விலகி நில்லு! அம்மா தேடும்.. நான் கீழே போறேன்!” மூச்சுக் காற்று முகத்தில் மோதுமளவிற்கு நெருங்கி நின்றிருந்தவனின், ஸ்பரிசத்தில், பெண்ணுக்குள் புத்தம் புது உணர்வுகள் கட்டவிழ்ந்தன.
“இத்தனை நாள் என்னை உரசிக்கிட்டே திரிவியே.. இப்போ மட்டும் என்னவாம்?” தனக்குள் சிக்கியிருந்த கரத்தின் மென்மையை அளந்தது அழகரின் வன் கரம். அழகரின் தொடுதலில் இதுநாள் வரையிலும் உணராத புது பரிணாமத்தைக் கண்டாள் கருவிழி.
ஒட்டு மொத்த உடலுமே, மின்சாரம் தாக்கியதைப் போல் கூசிச் சிலிர்க்க, உடலின் கோடான கோட உரோமக் கால்களும், ஒரே நேரத்தில் சிலிர்த்தெழுந்து நின்றது.
இந்த உணர்வுகள் புதிது.. இந்தப் பதற்றமும் தயக்கமும் புதிது.. அவனின் நெருக்கமும் பார்வையும் கூட நிரம்பவும் புதிது தான். அவனின் நெருக்கத்தில் இதயம் படபடக்க, அண்ணாந்து அவனைப் பார்த்தபடி நின்றாள் கருவிழி.
அவள் மெல்லிடையோடு கையிட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன்,
“இப்போ சொல்லு டி!” வசீகரமாய் வழிந்தப் புன்னகையுடன் கேட்டான் அவன்.
“என்ன சொல்லணும்?” புரியாமல் மலங்க விழித்தாள் பெண்.
“நான் அழகா இல்லைன்னு சொல்லுடி!” தன்னோடு சேர்த்து இறுக்கியவனுக்கு, தன் உயிரின் சரிபாதி இவளென்கிற உரிமை உணர்வு கொஞ்சம் அதீதமாகவே இருந்தது.
“ஹான்.. என்ன மாமா! லூசு மாதிரி உளறிட்டு இருக்கே? நான் ஏன் சொல்லணும்! விளையாடாமல் விடு அழகரு!” அவன் மார்பில் முட்டி நின்றவள், அவனைக் கை வைத்துத் தள்ள முயன்றாள்.
“கொன்னுடுவேன்டி கரு கரு! எல்லார் முன்னாடியும் சொல்ல முடியாது, தனியா சொல்றேன்னு சொன்னியே.. இப்போ என் கண்ணைப் பார்த்து சொல்லுடி!” அவனின் உஷ்ண மூச்சுக்காற்று இவள் உச்சந்தலையை மோதியது.
“அ.. அழகரு..!”
“சொல்லாமல் விடவே மாட்டேன்! சொல்லு டி!”
“நீ அழகாவே இல்லை போதுமா! என்னை விடு!” தன்னை இறுகப் பிடித்திருந்தக் கரத்தை விலக்க முயன்றாள். ஆனால் அவன் பிடி இன்னும் கொஞ்சம் இறுக, இன்னும் கொஞ்சம் தவித்து தான் போனாள் பெண். அவனிடமிருந்து விடுபடும் முயற்சிகள் தோல்வியுறவே, பாவமாய் அவனை அண்ணாந்து பார்த்தாள் அவனின் அத்தை மகள்.
“ஒண்ணு என் கண்ணைப் பார்த்து நான் அழகா இல்லைன்னு சொல்லு, இல்லையா, முடிஞ்சால் என் பிடியிலிருந்து நீயே வெளியே வா பார்ப்போம்! ரெண்டில் எது நடந்தாலும் உன்னை விட்டுடுறேன்.!” அவளை விட்டுவிட மனமில்லாமல் விளையாடிப் பார்த்தான் அவளின் அழகன். இப்படியே இறுக்கமாய், நெருக்கமாய் தன் கையணைவில் வைத்து காலம் முழுதும் வாழ்ந்து விடலாம் என்றுக் கூட அவனுக்குத் தோன்றியது.
“மாமா!” செல்லமாய் சிணுங்கினாள் பெண். அவளின் செல்லச் சிணுங்கல் மெல்லமாய் இவன் மனதைக் கரைக்கத்தான் செய்தது. ஆனாலும் விட்டால் விலகி விடுவாளே? என்ற எண்ணம் தோன்ற, அசையாது கற்சிலையாய் நின்றான் அழகர்.
“ம்ப்ச்!” மென்மையாய் சலித்துக் கொண்டவள்,
“நிஜமாவே விட மாட்டியா அழகரு?” எனக் கேட்டாள்.
“நான் என்ன பொய்யா சொல்றேன்?” கள்ளப் புன்னகையை கள்ளத்தனமாய்ப் பதுக்கினான் அவன்.
அண்ணாந்து நிமிர்ந்து அவன் அகன்ற லேசர் விழிகளை சில நொடிகள் உற்று நோக்கியவளுக்கு, ஏதோ இன்னொரு பரிணாமத்தில் மாட்டிக் கொண்டதைப் போலெரு உணர்வு.
‘அத்தீ..! இதென்ன கண்ணைப் பார்க்கிறது இம்புட்டு கஷ்டமா இருக்கு? அழகரு விவகாரமாத்தேன் எதையோ சொல்லியிருக்கு போல?’ எனத் தனக்குள் யோசித்தவள், எதையோ முடிவு செய்தவளாய்,
“நான் ஜெய்ச்சுப்புட்டா என்ன தருவே அழகரு?”
“முதலில் ஜெய்ச்சுக் காட்டுடி! வாய்ச் சொல் மட்டுந்தேன்.! வருஷா வருஷம் வாடி வாசல் முன்னே நின்னு காளையை அடக்குறவன்டி நான். பூனைக் குட்டி மாதிரி இருந்துட்டு என் பிடியிலிருந்து தப்பிச்சுருவியா? அதையும்தேன் பார்த்துடுவோம்! நீயா? நானா?”
“ஒருவேளை தப்பிச்சுட்டா!” அவன் துவங்கி வைத்த விளையாட்டு இவளுக்கும் பிடிக்கத் துவங்கியிருந்தது.
“நான்தேன், நீ என்ன கேட்டாலும் செய்யறேன்னு சொல்லிட்டேன்! பிறகு என்ன டி? என் கண்ணைப் பார்த்துப் பேச தைரியமில்லை, வாயை மட்டும் கேளு, வடக்கு மாசி வீதி வரை போகுது!”
“உன் கண்ணு என்னை என்னமோ பண்ணுது அழகரு! கண்ணெல்லாம் பார்க்க முடியாது போ! அண்ணாந்து பார்த்து பார்த்துக் கழுத்து வலிக்குது! நீ கொஞ்சம் வளர்த்தி கம்மியாய் இருந்திருக்கலாம் ம்ப்ச்!” அவள் சலித்துக் கொள்ள,
“நீ வளர்ந்திருக்கலாம் டி கிறுக்கச்சி!” என்றவன் கலகலவென நகைக்க, அவன் வன்மையான உதடுகளை தன் மென் கரம் கொண்டு மூடியவள்,
“பேய் மாதிரி நடுச் சாமத்தில் சிரிக்கிறே? யாராவது வந்துடுவாங்க அழகரு!” சுதாரிப்பாய் சுற்றிலும், விழிகளை ஓட்டியபடியே சொன்னாள் கருவிழி.
“அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க! உன்னை மாடிக்குக் கடத்தும் போதே, எல்லாத்தையும் பக்காவா செக் பண்ணிட்டேன்!” சுற்றத்தை ஆராய்ந்தபடியே அவன் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், அவன் கவனம் சிதறியதை தனக்குச் சாதகமாய் பயன்படுத்திக் கொண்டு, நுனி விரலில் எம்பி நின்றவள், ‘இவள் என்ன செய்கிறாள்?’ என்றவன் சுதாரித்து தன் பக்கம் பார்வையைத் திருப்பும் முன்னமே, அவன் வன்மையான உதடுகளில் தன் மெல்லிதழ்களைப் பதித்திருந்தாள்.
எதிர்பாரா தருணத்தில், தன் உதடுகளில் பதிந்த மென்மையும், ஸ்ட்ராபெர்ரி லிப் கிளாஸின் மணமும், அவன் நாசியை நிரடி, அவன் சித்தத்தை மயக்க, அவள் தந்த இதழொற்றலின் கிறக்கத்தில் இத்தனை நேரமாய் இறுகியிருந்த அவன் பிடி, சற்றே தளர, சாமர்த்தியமாய் விலக்கி வெளியே வந்து அவனை விட்டு விலகி நின்றவள்,
“ஜெய்ச்சு காட்டிப்புட்டோம்ல? நாங்களெல்லாம் யாரு? மதுரையாளும் மீனாட்சி வம்சம்!” அணிந்திருந்த பட்டுப்புடவையில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாள் கருவிழி.
“அழகரு! நான்தேன் ஜெய்ச்சேன்! நான் கேட்கிறதை நீ செஞ்சு தான் ஆகணும்!” சிறுபிள்ளையாய் குதித்துக் கொண்டு நின்றவளை நெருங்கி, இழுத்துப் பிடித்து தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டவன்,
“இது கள்ளாட்டம் டி கரு கரு! உண்மையான ஆட்டம் நான் காட்டுறேன் பாரு, சின்னப் புள்ளைன்னு விலகி நின்னால், விளையாட்டு காட்டுற..” என்றவன், அவள் இதழ்களைத் தனக்குள் புதைத்திருந்தான். கண்கள் பெரிதாய் விரிய, அவன் தோளை அழுத்திப் பிடித்து எம்பி நின்றவளை, அவள் மலர்ப் பாதங்கள் அந்தரத்தில் மிதக்க, தூக்கிப் பிடித்துக் கொண்டான் அழகர்.
“மா..மா..!”
“அழக..ரு!” என்ற முனகல்கள் அவன் இதழ்களுக்குள்ளே கணாமல் போக, திருமணத்திற்கு முன்னே இதெல்லாம் சரியா? தவறா? என்ற எண்ணமெல்லாம் அவனுக்குத் தோன்றவே இல்லை. அவனைப் பொருத்தவரை அவள் அவனில் சரிபாதி. மனதில் மனைவியாய் வரித்துக் கொண்ட நொடி முதலாய் அவள் அவனில் சரிபாதி தான்.
முதலில் அதிர்வில் விரிந்த அவள் விழிகள், பயந்து மருண்டு, திணறி, பின் நாணம் கொண்டு இறுக முடியிருக்க, உச்சாதி பாதம் வரை ஓடிப் பரவிய சிலிர்ப்பில் அவன் கழுத்தில் தன்னையறியாமல் கரம் கோர்த்திருந்தாள் பெண். நொடிகள் நிமிடங்களாய் நீண்டு, அவள் மூச்சுக்குத் தவித்த நொடியில், அவளை விடுவித்து கீழே நிறுத்தினான். அவன் முகம் பார்க்க நாணம் கொண்டு, தலை கவிழ்ந்து அவன் மார்பில் மோதி நின்றாள் பெண்.
“இப்படி முத்தம் கொடுக்கணும்! சும்மா சின்னப் புள்ளைக்கு மிட்டாய் காமிச்சு ஏமாத்தற மாதிரி ஏமாத்தக் கூடாது. எங்கே மறுபடியும் கொடு பார்ப்போம்!” சாதாரணமாய் அவன் சொல்ல, விலுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், அவன் விழிகளைச் சந்திக்கத் தயங்கி, மீண்டும் குனிந்துக் கொண்டாள்.
“ஏய் கரு கரு..!” மீண்டும் அவன் கரத்தின் அரவணைப்பில் அவள். அவனை நிமிர்ந்துப் பார்க்கவே அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. தன் முன் மருதாணியாய் முகம் சிவக்க நின்றவளை, இரசனைப் பொங்கப் பார்த்தான் அவன்.
“இதுக்குத்தான், இல்லாத பொறுமையை இழுத்துப் பிடிச்சு விலகி நின்னேன்டி கிறுக்கச்சி! உன்னை விட்டு விலகி நிற்குமளவிற்கு பொறுமையெல்லாம் இல்லை டி! சீக்கிரம் கழுத்தில் தாலிகட்டி என் கண்ணுக்குள்ளே பொத்தி வச்சிக்கணும்ன்னு ஆசையா இருக்குடி! இந்தக் கொஞ்ச நாள் இடைவெளி கூட, ஜென்மம் போல் நீண்டு தெரியுது. ரொம்ப என்னை மயக்குற டி! ஆள் மயக்கி!” கிசு கிசுப்பாய் அவள் செவியோரம் ஒலித்த குரலில், ஜென்மங்கள் தாண்டியும் அவளோடு வாழ்ந்துவிடும் ஆசை மட்டுமே தெரிந்தது.
“அழகரு..!” புன்னகையின் பின் நாணச் சிவப்பை மறைக்க முயன்று தோற்றாள் கருவிழி.
“போதும் டி! உன் பார்வை, மூச்சு, வார்த்தை எல்லாம் சேர்ந்து என்னை ரொம்ப உசுப்பேத்துது! இனி இங்கே நின்னால், ஆகப் போறதை என்னாலேயே தடுக்க முடியாது! அதுவும் இந்தச் சேலையில் சிலையாட்டம் தகதகன்னு இருக்கேடி! போய்த் தூங்கு போ!” நெற்றியில் முத்தமிட்டு விலகி நின்றான் அவன்.
“அப்போ.. முத்தம் வேணாமா அழகரு..?” குறும்பாய் கண் சிமிட்டி சிரித்தவளைப் பார்த்தவன்,
“இம்சையைக் கூட்டாமல் போடி அங்கிட்டு.. என் அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்கா? கல்யாணம் மட்டும் முடியட்டும். கைகட்டி இப்போ மாதிரி வேடிக்கைப் பார்த்துட்டு நிக்க மாட்டேன்டி!” கரகரப்பானக் குரலில் சொன்னான் அவன்.
“ஐ லவ் யூ அழகரு..! நான்தேன் ஜெய்ச்சேன் நான் என்ன கேட்டாலும் செய்வேன்னு சொல்லியிருக்க! ஞாபகம் வச்சிக்கோ!” என்றவள் புள்ளி மானாய் துள்ளியபடியே கீழிறங்கிப் போனாள்.
“லவ் யூ டி ஆள் மயக்கி..!” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவனுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாகிப் போனது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Wowwww Wonderful Episode 😍
Love and Love only ya 💛✨✨
அழகர் மற்றும் விழியின் தவிப்பு, காதல், நேசம், ஆசை அனைத்தும் அருமை.
காளையை அடக்கி என்ன பிரயோஜனம் கரு கரு சாமர்த்தியத்துக்கு முன்ன அடங்கியாச்சு mr. துடிவேல் அழகர்.
அடுத்து ஏதோ பெருசா வரும் போல. 😁 இந்த அத்தியாயம் சிரிச்சிட்டே படிக்கும் போதே மண்டைக்குள்ள அதான் ஓடிச்சு.