
அகம்-35

“பேசிப் பயனில்லை எனும் போது மௌனம் சிறந்தது.
பேசுவதில் அர்த்தம் இல்லை எனும் போது பிரிவும் சிறந்ததே..!”
என்பதற்கேற்ப, கணவனிடத்தில் பிரிவையும், மகன்களிடத்தில் மௌனத்தையும் கடைபிடித்தார் அங்கயற்கண்ணி.
யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காது, மதுவின் பெற்றோர்களை அழைத்து இதோ, இரு ஜோடிகளுக்குமே திருமணம் நிச்சயம் செய்ய முடிவு செய்திருந்தார்.
“அத்தே! நாம நம்ம புள்ளைகளுக்காக நாம செய்யறோம்! இவங்க நம்மளைத் தப்பாவே புரிஞ்சுக்கிறாகளே என்ன செய்யறது அத்தே?”
“தப்பா நினைச்சால், நினைச்சுக்கட்டும் அரசி! எம் மயனுங்களுக்கு, அவங்க அப்பனுக்குப் பிறகு, பொறுப்பை அதாவது முடிவு எடுக்கும் உரிமையை அவனுங்க கையில் ஒப்படைச்சுட்டு நான் ஒதுங்கிடணும்ங்கிற எண்ணம். அவிங்க நினைச்சது நடக்கலைன்னதும் கோபம் வருது. நான் அவிங்களுக்காக, அவிங்க புள்ளைங்களுக்காக செய்யறேன்னு புத்திக்கு உரைக்க மாட்டேங்குது.! விடு, எல்லாம் நல்லதுக்கே..!” என்றவர்,
“எல்லாம் செஞ்சுட்டீக தானே? வாரவங்களுக்கும் ஒரு குறையும் இருந்திடக் கூடாது அரசி. என்னதேன் ஊரைக்கூட்டி செய்யலைன்னாலும், நாம செய்யறதை சரியா செஞ்சுப்புடணும்! மது வீட்டிலிருந்து ஆட்கள் வந்துருவாக, வெரசா எல்லாத்தையும் பார்த்து முடிச்சிருங்க! கயலு புள்ளையை ஒத்தாசைக்கு வச்சிக்கிடுங்க!” என முடித்தார்.
“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிடுவோம்! நீங்க விசனப் படாம இருங்க! எல்லாம் நல்லதே நடக்கும்!” எனச் சொன்ன அரசியைப் பார்த்தவர்,
“நல்லதே நடக்கும்! நடக்கணும்! அந்த மீனாட்சி மேல பாரத்தைப் போட்டு தான் அம்புட்டையும் செய்யறேன். அந்த தாய் தான் பக்கத்தில் நின்னு நடத்திக் கொடுக்கணும்!” எனப் பெருமூச்செறிந்தார்.
“அம்மா! நாங்க சொல்ல சொல்ல கேட்காமல் இதையெல்லாம் செஞ்சு தீருவிகளா? அப்பா அழகருக்கும், விழிக்கும் கல்யாணம் வேணாம்ன்னு தான் எல்லார் முன்னாடியும் சொன்னாரு! எல்லாம் தெரிஞ்சும், ஏற்பாடு பண்ணுறீகன்னா என்ன அர்த்தம்?” என சரவணன் வந்து நிற்க, தமையனின் பின்னால் வந்து நின்றார் கதிர்வேல்.
“இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல? ஏன் அரசி, இவிங்களுக்கெல்லாம் மூளைன்னு ஒண்ணு இருக்கா இல்லையா? முச்சூடும் கத்திக்கிட்டே திரியுதுங்க! முடியலை அரசி. பேசினதையே திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்காங்க!” அரசியின் செவிக்குள் பூங்கொடி சலித்துக் கொள்ள,
“அடுத்த பஞ்சாயத்து தலைவரா உங்க புருஷனையோ, இல்லை என் புருஷனையோ உட்காத்தி வச்சிருந்தோம்ன்னா, இந்தப் பிரச்சனையே வந்திருக்காதுக்கா! அதுக்குத்தேன் ரெண்டும் இந்தக் குதி குதிக்குதுங்க! அதென்ன பொம்பளை முடிவெடுத்து நாம கேட்கிறதுன்னு ஒரு எண்ணம் இவிங்களுக்கு!” எனச் சொன்னார் அரசி.
“ம்க்கும்! இருக்கும்தேன்..! இப்படி பேசுறவிங்க, பொம்பளை வயிற்றில் பிறக்காமல், ஆம்பிள்ளை வயிற்றில் பிறந்திருப்பாய்ங்களோ? இல்லை ஆகாயத்திலிருந்து அத்துக்கிட்டு விழுந்திருப்பாங்களோ?” நக்கலாய் பூங்கொடி கேட்க,
“அட நீங்க வேறக்கா! நீங்களும், நானும், முழுசா ஒரு வருஷம் கூட ஒரு பிள்ளையைச் சுமக்கலையே? பத்து மாதந்தேன் சுமந்தோம். எம் மயன் கடைசி உள்ளவனெல்லாம் எட்டு மாசம் முடியும் முன்னே அவசரக் குடுக்கையாய் வந்துட்டான். இத்தனை வருஷமா தோளிலும் மாரிலும் போட்டுச் சுமந்தவங்க அவங்கதானே? அதனால் அவங்க பேசத்தேன் செய்வாக! முப்பது வருஷமா பிள்ளைகளை வளர்க்கிறவங்களுக்கு முடிவு எடுக்கத் தெரியுமா? பொழுதன்னைக்கும் அடுப்படிக்குள்ளே குப்பைக் கொட்டுற நமக்கு முடிவெடுக்கத் தெரியுமா? நான்தேன் உசத்தி! நான்தேன் ஆம்பிள்ளைங்கிற ஆங்காரத்தில்தேன் ஆடுறாங்க! நாம பேசாமல் வேடிக்கை மட்டும் பார்ப்போம்!” எனச் சொன்னார் அரசி.
“அது சரித்தேன்! வேடிக்கை மட்டும் பார்ப்போம்! நாம எதாச்சும் பேசினா, அதுக்கும் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாங்க! நமக்கேன் வம்பு?” எனப் பூங்கொடி சொல்லவும், இருவரும் அங்கயற்கண்ணியிடம் பார்வையைத் திருப்பினர்.
“ம்மா! அண்ணே கேட்டுட்டே இருக்காரு! பதில் சொல்லாமல் இருந்தீகன்னா என்ன அர்த்தம்? நாங்க இந்த வீட்டில் இருக்கிறதா வேணாமா? உழைச்சுக் கொட்டி குடும்பத்தைப் பார்த்துக்கிற ஆம்பிள்ளைங்களுக்கு தெரியாதா? எது சரி, எது தப்புன்னு? எங்களைக் கலந்து பேசாமல் நீங்க எடுக்கிற முடிவு எதுவும் எங்களுக்கு சரியாப்படலை!” சரவணனுக்கு பரிந்து வந்தார் கதிர்.
“ஓ! அப்போ பொம்பளைன்னா முடிவு எடுக்கத் தெரியாதுன்னு சொல்றீங்க?” என்ற தாயின் கேள்விக்கு,
“ஆமா! வீட்டுக்குள்ளேயே இருக்கிற உங்களுக்கு என்ன தெரியும்?” பதில் கேள்வி கேட்டார் கதிர்.
“எது நல்லது, எது கெட்டதுன்னு, சொல்லிக்கொடுத்து இந்த ரெண்டு ஆம்பிள்ளை பிள்ளைகளையும் வளர்த்து விட்டது, அங்கயற்கண்ணிங்கிற இந்தப் பொம்பளை தான்டா கதிரு. உனக்கு உலகத்தைச் சொல்லிக் கொடுத்த எனக்கே ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றே? சரி, நீங்களே சொல்லுங்க, இந்த விஷயத்தில் உங்க முடிவு என்ன?” எதிரில் நின்ற மகன்கள் இருவரையும் பார்த்து நிதானமாய்க் கேட்டார் அங்கயற்கண்ணி.
“அப்பா சொன்னது மட்டும்தேன் இந்த வீட்டில் நடக்கணும்! நெடுமாறனுக்கும், மதுவுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம்! அழகருக்கும் விழிக்கும் வேண்டாம் இது தான் எங்க முடிவு!” சரவனணின் குரல் சட்டென உயர்ந்தது.
“ஏன்?” நிதானமாய் அடுத்த கேள்வி அங்கயற்கண்ணியிடமிருந்து.
“ஏன்னா அப்பாவோட முடிவு அது தான்!” பதில் கதிர்வேலிடமிருந்து வந்தது.
“உன் மயன் மனசைப் பத்தி கவலை இல்லையா கதிரு? நான் உங்கப்பன் முடிவு என்னன்னு நான் கேட்கலை. உங்க முடிவு என்னன்னு மட்டும் தான் கேட்டேன். உங்க அப்பா சொன்னதெல்லாம் இருக்கட்டும்! உங்களுக்கு ஏன் விருப்பம் இல்லைன்னு தான் கேட்டேன்.!” என்ற அங்கயற்கண்ணியின் கேள்விக்கு அவர் பெற்ற இரு மகன்களிடமும் பதில் இல்லை. அசாத்தியமான நிசப்தம் மட்டுமே அந்த இடம் முழுவதையும் சில நிமிடங்களுக்கு ஆட்சி செய்தது.
“சுயமா சிந்திக்க புத்தியில்லாமல், அப்பா சொன்னாருன்னு அவர் பின்னால், ஒளிஞ்சுக்கிற உங்களுக்காக, என் பேரன் பேத்திகளோட வாழ்க்கையை கேள்விக்குறியாக்க என்னால் முடியாது. சாயங்காலம் மது வீட்டிலிருந்து வருவாங்க! நம்ம ரெண்டு குடும்பமும் மட்டும்தேன். கல்யாணத்தை உறுதி பண்ணி ஒப்பு தாம்பூலம் மாத்திக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன். உங்க அப்பா சொன்னாருன்னு யோசிக்காமல், உங்க புள்ளைங்களுக்கு நல்ல அப்பனா யோசிங்க! விழியையும் அழகரையும் பிரிச்சு விட்டுட்டு அவங்க வேதனைப் படறதைப் பார்க்கிறது தான் உனக்கு சந்தோஷமா கதிரு? எல்லாம் நம்ம புள்ளைங்க கதிரு! நாம தான் அவங்க மனசைப் புரிஞ்சுக்கிடணும்! நல்லா யோசிச்சு பாரு கதிரு, எதோவொரு கல்யாண வீட்டில் பார்த்துப்புட்டு அரசியத்தேன் கட்டுவேன்னு நீ வந்து நிக்கலை? நீ மட்டும் உனக்குப் பிடிச்சப் பொண்ணைக் கட்டலாம்.. எம் பேரன் ஆசைப்பட்டவளைக் கட்டிக்கக் கூடாதா?” இருவரிடமும் துவங்கி, இறுதியில் கதிரிடம் முடித்தார் அங்கயற்கண்ணி.
“நல்லா கேளுங்கத்தே! இந்த மனுஷனுக்கு எப்படி கேட்டாலும் புத்தியில் உரைக்காது.” என அரசி புலம்ப,
“ஏன் அரசி சொல்லவே இல்லை? கொழுந்தனாரு நீ தான் வேணுமின்னு பிடிச்ச பிடியாய் நின்னு உன்னைக் கட்டினாராக்கும்?” என அரசியைக் கேட்டார் பூங்கொடி.
“அட நீங்க வேறக்கா, எனக்கே இது தெரியாது. கல்யாணம் முடிஞ்சதும்தேன் என்னை ஆசைப்பட்டு கட்டினேன்னு சொன்னாரு! அதுவும் எப்படி சொன்னாரு தெரியுமா? ‘நீதேன் வேணுன்னு ஆசைப்பட்டு கட்டியிருக்கேன். எங்க வீட்டில் யாரையும் எதிர்த்து ஒத்தை வார்த்தைப் பேசக் கூடாதுன்னு சொன்னாரு.’ அவர் யாரையும்ன்னு சொன்னது அவரையும் சேர்த்துதேன். ஆசைப்பட்டு கட்டிட்டு வந்தாருன்னுதேன் கொஞ்ச வருஷம் நினைச்சுக்கிட்டு இருந்தேன். பிறகு தான் தெரிஞ்சுது வாய் பேச உரிமையில்லாத அடிமையாய் கூட்டியாந்தாருன்னு.” சின்ன புன்னகையுடன் சொன்னார் அரசி.
“விட்டுத்தள்ளு! இதையெல்லாம் நினைச்சுட்டே இருந்தால் சோறு தண்ணி இறங்குமா? இத்தனை வருஷ வாழ்க்கையில் நாமளும் அப்படியே பழகிட்டோம் போ!” எனப் பூங்கொடி சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம், தாயின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், யோசனையோடே வெளியேறியிருந்தார் கதிர்வேல். சரவணனோ, பதில் பேசாது வெளியேறும் தன் தம்பியையே பார்த்திருந்தார்.
“என்ன அமைதியாய் போறாரு? நெசமாவே புத்தி வந்திருச்சோ?” அரசி குழப்பமாய் பார்க்க,
“அப்படியே என்னைக் கட்டினவருக்கும் வந்தால் நல்லா இருக்கும்!” எனப் பூங்கொடி சொல்ல,
“அட போங்கக்கா! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுக்கா! இவங்களுக்கு புத்தி வந்துட்டால் உலகமே தலைகீழாத்தேன் சுத்தும்! ஏதோவொரு காரணத்திற்காக அமைதியாய் போயிருப்பாரு! சாயங்காலம் வந்து ஏழரையைக் கூட்டாமல் இருந்தால் சரித்தேன்.!” கணவனை அறிந்தவராய்ப் பேசினார் அரசி.
“ஆமா! இந்த விழியை எங்கே? ஆளையே காணோம்?”
“அதுவா, போன வாரம் காய்ச்சலுன்னு லீவு போட்டுட்டாளாம்! அதனால் காலேஜ் போயே தீரணும்ன்னு பிடிவாதம் பிடிச்சு நின்னு எம் மயன் கொண்டு போய் விட்டுட்டு வந்திருக்கியான். சாயங்காலம் விஷேஷம் இருக்குடா! புள்ளை மூஞ்சி வாடிப் போய் தெரிவாள்ன்னு சொன்னேன் கேட்டால் தானே? அதுக்குன்னு படிப்பை விடச் சொல்றீகளான்னு கேட்கிறான். என்னமோ பண்ணுங்கடா சாமி! ஒவ்வொருத்தரையும் கட்டி மேய்க்க நம்மால் ஆகாதுன்னு இங்கிட்டு வந்துட்டேன். விஷேஷம் விழிக்கு, அவளே காலேஜ் போய்ட்டா. நான் ரெண்டாவது பெத்த எருமை, லீவு போட்டு சுத்திக்கிட்டு திரியுது. கேட்டால் எனக்கு உதவி பண்ண லீவு போட்டிருக்கானாம். காலக் கொடுமை இவிங்களோட..!”
“வீரா காலேஜ் போகலையா? அப்போ வரச் சொல்லு அரசி, சமைக்கிறதுக்கு என்னென்ன வேணும்ன்னு வாங்கிட்டு வரச் சொல்லிருவோம்! கூட நம்ம காத்தவராயனைத் துணைக்கு அனுப்பி விடுவோம். தாம்பூலம் மாத்திப்புட்டு, சாப்பிடாமல் அனுப்பக் கூடாது. நியாயப்படி மது வீட்டில் தான் வைக்கணும். வீடு சின்னதா இருக்குன்னு சொல்லிட்டாக! எங்கண வச்சால் என்ன? நம்ம வீட்டுக்கு வரப் போற பொண்ணு தானே?”
“நீங்க சும்மா சங்கடப் படாதீகக்கா! எல்லாம் நம்ம பிள்ளைகள் தானேக்கா! நான் வீராவை வரச் சொல்றேன். நீங்க லிஸ்ட் எழுதி வைங்க!” எனச் சொல்லிவிட்டு வெளியேறினார் அரசி.
*******
படபடப்பும் பதற்றமுமாய் கையில் புடவையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கருவிழி. தங்க இழைகளோடிய, அந்தப் பொன் மஞ்சள் நிறப் புடவையின் தகதகப்பு அவளின் சந்தண நிற முகத்தில் பட்டுத் தெறித்தது.
“பிடிச்சுருக்காடி கரு கரு..!” ஆசையாய் முகம் பார்த்தான் துடிவேல் அழகர்.
“ம்ம்ம்!”
“என்னடி.. பிடிக்கலையா? ம்ம்ன்னு ஒரெழுத்தில் பதில் சொல்ற?”
“ரொம்பப் பிடிச்சிருக்கு அழகரு..! நான் பெரிய பொண்ணானப்போ கூட, நீ தானே எனக்கு எந்தக் கலர் நல்லா இருக்கும்ன்னு செலெக்ட் பண்ணின.? சின்னத்தை ஒருவாட்டி சொன்னாங்க! அந்த ஞாபகம் வந்துடுச்சு.!” அவன் முகம் பார்க்கத் தயங்கியவளாய் பதில் சொன்னாள் கருவிழி.
“அப்போவும் குட்டியா தான் இருந்தே.. இப்போவும் அப்படித்தான் இருக்கே!” அவன் கண்களில் இரசனை வந்து போனது.
“சும்மா ஒப்பு தாம்பூலம் தானே அழகரு! அதுக்கும் புடவை எடுத்துக் கொடுக்கணுமா? நா.. நான் உனக்கு எதுவுமே செய்யலையே? எனக்கு ஒரு மாதிரி இருக்கு!”
“ஒப்புத் தாம்பூலமோ, கல்யாணமோ, எதுவா இருந்தாலும், நீ கட்டும் சேலை நான்தேன் எடுத்துத் தருவேன். எனக்கு செய்யணும்ன்னு நினைச்சால் நீ சம்பாதிச்சு செய்டி கரு கரு! இப்போ தானே படிக்கறே? எனக்குச் செய்ய முடியலைன்னு தயக்கமோ சங்கடமோ தேவையில்லை. எம் பொண்டாட்டி அவ சம்பாதிச்ச காசில், சின்ன மிட்டாய் வாங்கிக் கொடுத்தால் கூட எனக்கு சந்தோஷம்தேன். நான் உன்னை வேலைக்குப் போகாதே! கல்யாணம் முடிஞ்சதும் புள்ளை பெத்துக்கோன்னெல்லாம் சொல்ல மாட்டேன். அத்தையோட வாழ்க்கையை என் கண்ணால் பார்த்திருக்கேன். அத்தை உன்னைச் சுமந்துக்கிட்டு இங்கண வந்து நிக்கும் போது, எனக்கு எட்டு வயசு. இப்போ தாத்தாவும் பாட்டியும் அமைதியா இருக்காக! அப்போவெல்லாம் எப்படி வைவாங்க தெரியுமா? அத்தை ஒத்தை வார்த்தைப் பேசாமல் கண்ணீரோட நிக்கும். எப்போவுமே ஒரு பொண்ணு தலை நிமிர்ந்து நிக்க சுய சம்பாத்தியம் ரொம்ப அவசியம். நீ எனக்காக, குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டாம். உனக்காக, உனக்காக சம்பாதிக்கணும்! உனக்கு இந்த உலகம் தெரியணும் புரியணும்! நாலு மனுஷங்கக் கூட பழகினா தான், மனுஷங்களையும் படிக்க முடியும். மனுஷங்களைப் படிக்கத் தெரிஞ்சால் தான், ரோஹன் மாதிரி ஆட்களை இனம் காண முடியும்.” என அவன் சொல்ல நெகிழ்ந்து போனது விழியின் மனம்.
இமைக்கக் கூட மறந்து அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். தனக்காக மட்டுமே யோசிக்கும் அவன் செயலில் உள்ளம் நெகிழ்ந்து உருகி, அவன் மீதான நேசம் இன்னும் கொஞ்சம் பெருகியது. இத்தனை நேசமும் பாசமும் வைத்திருக்கும் இந்தக் குடும்பத்தையும், அழகரையும் விட்டுவிட்டு ரோஹனைத் திருமணம் செய்யப் போனதை நினைத்தாலே அவளுக்கு அவள்மீதே கோபமாக வந்தது. எவ்வளவு பெரிய தவறு செய்யத் துணிந்திருக்கிறாள்.? விவரம் தெரியாது உலகம் புரியாமல் இருந்திருக்கிறோமே என நினைக்கையில் நிரம்பவும் அவமானமாய் உணர்ந்தாள் கருவிழி.
“அ.. அழகரு! எ.. என்னை மன்னிச்சிடு! என் மனசு புரியாமல், உன் மனசு புரியாமல், உண்மையான நேசம் எதுன்னு தெரியாமல் லூசுத்தனமா என்னென்னமோ பண்ணிட்டேன். நான் செஞ்சதெல்லாம் உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கும்? ஆனாலும் எனக்காக எல்லாம் செஞ்சியே..!” வார்த்தைகள் தடுமாறி தடமாறியது அவளுக்கு.
“ம்ப்ச்! சும்மா அதையே பேசிட்டு இருக்காதே! கடந்து போனது போனதாவே இருக்கட்டும்! சில விஷயங்களை அப்படியே மறந்துடுறது நல்லது. ஆனால், அதனால் பெற்ற அனுபவங்களையும், படிப்பினைகளையும் எப்போவும் மறந்துடக் கூடாது.!” எனச் சொன்னவன்,
“கிறுக்கச்சி மாதிரி எதையும் யோசிக்காமல், கிளம்பி வா. உன்னைச் சேலையில் பார்த்து ரொம்ப நாள் இல்லை.. இல்லை… வருஷமாச்சு!” ஏக்கப் பெருமூச்சோடு அவன் சொல்ல, அவனைப் பார்க்கத் தயங்கி பார்வையைத் தழைத்தாள் பெண்.
“மா..மா!” அவளின் செல்லச் சிணுங்கல் கூட, அவனுக்கு சங்கீதமாகிப் போக, புன்னகை முகத்துடனே அறையிலிருந்து வெளியேறினான் அழகர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடுப்படியில் இருக்கும் பெண்கள் கூறுவது சபை ஏறுவதா என்ற ஏளனம்.
அம்மாவே ஆனாலும் அதிகாரம் முழுவதும் ஆண்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சிறுமை எண்ணம்.
உயிர் இல்லாத எதை எதையோ பற்றி யோசிக்கிறார்கள் ஆனால் உயிரான மகனை அவன் நலனை பற்றி யோசிக்க மறந்துவிட்டனர்.
அரசியை மனதுக்கு பிடித்து கூட்டிவந்து அடிமையாய் உறவெனும் சங்கிலியில் பிணைத்து வைத்துள்ளார்.
யாராய் இருந்தாலும் படிப்பும் வேலையும் வாழ்வின் அத்தியாவசியம்.