Loading

அகம்-31


சொக்கேசன் வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருந்தது. அவர் அறைக்குக் கூடச் செல்வதைத் தவிர்த்து தனியறைக்கு மாறியிருந்தார் அங்கயற்கண்ணி.

 

ஏனோ கணவரின் செயலை மறந்து மன்னித்து ஏற்றுக்கொள்ளவே அவரால் முடியவில்லை. அந்தளவிற்கு பெரிய மனது இல்லையோ என்று கூடத் தோன்றியது.

 

பூஜையறையில் விளக்கேற்றிவிட்டு, நின்ற கோலத்திலிருந்த மீனாட்சியம்மன் படத்தில் பார்வையைப் பதித்திருந்தார் அங்கயற்கண்ணி.

 

கண்களில் நீர் தேங்கி, மதுரையாளும் நாயகியின் படத்தை மறைத்தது.

 

“நான் ஒண்ணும் கேட்கலை உன்கிட்டே.. எல்லா சூழலையும் சமாளிச்சு வர்ர தைரியத்தை மட்டும் கொடு.! எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை! என் புள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் எதுவும் நேரக் கூடாது. உன்னை மட்டும்தேன் நம்பி இருக்கேன்.!”

 

திக்கற்றோருக்கு தெய்வமே துணை.. வேறு வழியின்றி தெய்வத்தையே துணைக்கழைத்தார் அவர்.

 

“அத்தே! பூவை மறந்து வச்சிப்புட்டு வந்துட்டீக!”

 

என்றபடியே உள்ளே வந்த அரசி, தன் மாமியாரின் கண்ணீரையும், சுணங்கிய முகத்தையும் பார்த்து அசையாமல் நின்றார். சில நிமிடங்களுக்கு என்ன செய்வதென்றே அரசிக்குப் புரியவில்லை! இந்த வீட்டிற்கு வாழ வந்த இத்தனை வருடங்களில், அங்கயற்கண்ணி உடைந்து முதன்முதலாய் பார்க்கிறார் அரசி. எந்த நிலையிலும் தைரியமாய் நிற்பவர் உடைந்து போய் நிற்பதைப் பார்த்ததும் மனம் வலித்தது அவருக்கு.

 

“என்ன ஆச்சு அத்தே.? மாமாவுக்கு இப்படி இருக்குன்னு சங்கடப்படுறீகளோ?” தோளில் கரம் பதித்து, வினவிய அரசியை திரும்பிப் பார்த்த அங்கயற்கண்ணியின் விழிகளில் ஒரு நொடிக்கும் குறைவாய் வந்து போனக் கோபத்தை இனம் கண்டுக் கொண்டார் அரசி.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அரசி! இந்த வீட்டில் நடக்கறதையெல்லாம் பார்த்தால் மனசு சங்கடமா இருக்கு. என் பேரப் பிள்ளைகள் கல்யாணத்தைப் பார்க்காமல் போய்ச் சேர்ந்துருவேனோன்னு பயமா இருக்கு. மூத்தவனையும், சரவணனையும் வரச் சொல்லு.. பேசணும்!” யோசனையோடே பதில் தந்தார் அங்கயற்கண்ணி.

 

“என்ன இருந்தாலும், மாமாகிட்டே ஒருவார்த்தை கேட்டுட்டு பண்ணலாமே அத்தே! உங்களுக்கும் மாமாவுக்கும் ஆயிரம் மனஸ்தாபம் இருக்கலாம்! அதுக்காக அவருக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில், நீங்க இப்படி விலகி நிற்கிறது நல்ல இல்லைத்தே! நடக்கறது வைக்கிறதுதேன் மாமாவுக்குக் கொஞ்சம் சிரமமா இருக்கு. நீங்க பக்கத்தில் இருந்து பார்த்துக்கிட்டீங்கன்னா.. கொஞ்சம் சீக்கிரம் தேறி வருவாகளே..?” தயக்கமும் கேள்வியுமாய் முகம் பார்த்தார் அரசி.

 

“நாம செஞ்ச வினையை நாமதேன் அனுபவிச்சு தீர்க்கணும் அரசி. உன் மாமன் விஷயமா என்கிட்டே எதுவும் பேசாதே! என்னை எம் போக்கில் விட்டுருங்க! புள்ளைங்க காலேஜ் கிளம்பிட்டாங்களான்னு பாரு!” அரசியின் கரத்திலிருந்த பூவை வாங்கிக் கொண்டு, பதில் சொல்லாது விரட்டினார் அங்கயற்கண்ணி.

 

“இவுகளுக்கு என்ன தான் ஆச்சு? ஒண்ணும் பிடிபடலையே? கொஞ்சமும் பெரியவரை விட்டுக் கொடுக்கவே மாட்டாங்க.. இப்போ என்னடான்னா அவர் அறைப்பக்கமே போக மாட்டேங்குறாங்க! ஒண்ணுமே புரியலை. இம்புட்டு வயசானப் பிறகுமா சண்டை வரும்? நாமக்கு வாய்ச்சதுங்கதேன்.. உப்பு பெறாததுக்கெல்லாம் சண்டை போடுதுங்கன்னு பார்த்தால்.. ஆதர்ஷ தம்பதிகளா இம்புட்டு வருஷம் வாழ்ந்தவங்களும் சண்டைதேன் போடுறாங்க!” வாய்விட்டுப் புலம்பியபடியே வெளியே வந்தார் அரசி.
“என்ன அரசி.. புலம்பிட்டே வர்ர? பூவைத் தானே கொடுத்துட்டு வான்னு சொன்னேன்.. அதுக்கு ஏன் புலம்பிட்டே வாரவ?” அடுக்களைக்குள் நுழைந்த அரசியைப் பார்த்து வினவினார் பூங்கொடி.

 

“புலம்பாமல் என்ன செய்யறது? மாமாவும் அத்தையும் ஆளுக்கொரு பக்கமா நிக்கிறாக! என்ன நடந்துச்சோ, ஏது நடந்துச்சே.. அத்தை, மாமா அறைப்பக்கம் எட்டி கூடப் பார்க்க மாட்டேங்குறாக! வெறும் ஏழுநாளில், அவர் ஓடாய் ஒண்ணுமில்லாமல் போய்ட்டாருக்கா! என்ன பிரச்சனை வேணும்ன்னாலும் இருக்கட்டுமே.. அதை இப்படி முடியாமல் கிடக்கிறவர்கிட்டே தான் காட்டணுமா? ரொம்ப சங்கடமா இருக்குக்கா! அத்தைக்கிட்டே இதைப் பத்தி கேட்டால், உன் மாமனைப் பத்தி பேசறதுன்னா என்கிட்டே பேசாதேங்கிறாக! என்னவோ போங்க.. இங்கே நடக்கிறது ஒண்ணுமே விளங்கலை!” ஒருவித சலித்த மனநிலையிலேயே பேசினார் அரசி.

 

“விடு அரசி..! இதில் நம்ம பேசறதுக்கு என்ன இருக்கு? முன்னால் பெரியவர் தான் வீராப்பாய் முறுக்கிக்கிட்டு நிப்பார். இப்போ என்னன்னா அத்தை நிக்கிறாக! எந்த நேரமும் சிந்தனையோட அலையறதைப் பார்த்தால், என்னமோ மனசில் வச்சிருக்காங்கன்னு தான் தோணுது. ஆனால், இந்த வயசில் இப்படி விலகி நிக்கிற அளவுக்கு என்ன சங்கதின்னுதேன் புரியலை! இதையெல்லாம் யோசிச்சு நாம என்ன செய்யப் போறோம்! சோலியைப் பார்ப்போம் வா! நாம கேட்டாலும் சொல்லவா போறாக! உனக்கெதுக்குடி வேண்டாத வேலைன்னு கேட்பாக, அதுக்கு பேசாமல் அமைதியாய் இருப்பது தான் நல்லது.!” எனப் பேசி முடித்து அரசியின் முகம் பார்த்தார் பூங்கொடி.

 

பேச்சு இந்தப் பக்கமிருந்தாலும் கரம் வழக்கம் போல், சட்டினியைத் தாளிதம் செய்தது.

 

“அக்கா! இதெல்லாம் பிறகு பார்த்துப்போம்! என்னவோ முக்கியமான சங்கதி பேசணுமாம்.. என்னையக் கட்டினவரையும், உங்களைக் கட்டினவரையும் அத்தை வரச் சொன்னாங்க! இத்தனை நாள் பெரியவர் பஞ்சாயத்தைக் கூட்டினார். இனிமே மீனாட்சி ஆட்சிதேன் நம்ம வீட்டிலேயும்! பிள்ளைங்க கல்யாணத்தைப் பத்தி பேசப் போறாகன்னு நினைக்கிறேன். கயலுகிட்டே அடுப்பைப் பார்த்துக்கச் சொல்லிட்டு வாங்க! சிவப்பு கம்பளம் விரிச்சு அழைச்சுட்டு வருவோம்.! இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ?!” எனச் சொன்னபடியே அரசி, தன்னறையை நோக்கிச் செல்ல, பூங்கொடி தன் கணவரான சரவணனை அழைப்பதற்காய் தன் அறையை நோக்கிச் சென்றார்.

 

“என்னங்க! உங்க அம்மா, உங்கக் கிட்டே முக்கியமான சங்கதி பேசணுமாம் உங்களை வரச் சொன்னாக!” எந்தவித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது தகவலாய் மட்டுமே சொன்னார் அரசி.

 

“என்ன விஷயம்?” கண்ணாடியில் முகம் பார்த்து தலையை வாரிக் கொண்டிருந்தவரிடமிருந்து கேள்வி மட்டும் வந்தது.

 

“எனக்கென்னங்க தெரியும்? நீங்களே போய் உங்கம்மா கிட்டே கேளுங்க!” என அரசி சொல்லவும், கோபத்தோடு மனைவியை முறைத்தவர்,

 

“அவங்களுக்கு வேற வேலை இல்லை! அப்பா இப்படி இருக்கும் போது, கல்யாணம் அது இதுன்னு பேசிக்கிட்டு கிடக்காங்க! இதெல்லாம் சரி வராது! அப்பா சரியான பிறகு பார்த்துக்கலாம்ன்னு சொல்லு!” எனச் சொன்னார்.

 

“இந்தாருங்க! அத்தை உங்களை வரச் சொன்னாங்க, உங்கக் கிட்டே சொல்லிட்டேன்! அம்புட்டுதேன் என் வேலை! எதுவா இருந்தாலும் நீங்களே அத்தைக்கிட்டே போய் நேரடியா பேசிக்கோங்க!”

 

“ஆமாடி! நீ வாய்ப் பேசத் தெரியாத பாப்பா, இதை நான் நம்பணும்! உன்னைப் பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா? வாய்க்கு வந்ததெல்லாம் பேசி, எங்கப்பனை நடமாட விடாமல் உட்கார வச்சிட்டீல்ல.. நீ இதுவும் பேசுவ, இன்னுமும் பேசுவ டி! நீ பேசின அன்றைக்கே உன்னை உங்க அப்பன் வீட்டுக்கு விரட்டி விட்டுருக்கணும்!” எரிச்சலுடன் கத்தினார் கதிர்வேல்.

 

“ம்க்கும்! இருந்தாத்தானே விரட்டுவீக! உங்க பேச்செல்லாம் கேட்க வேணாம்ன்னுதேன் போய்ச் சேர்ந்துட்டாக!” என வாய்க்குள் முனகியவர்,

 

“ஐயா சாமி! என் புள்ளை வாழ்க்கை நல்லா இருக்கணும், அவனுக்குப் பிடிச்ச வாழ்க்கை அமையணும்ன்னு பெத்த தாயா பேசறதுக்குக் கூட எனக்கு உரிமை இல்லை அப்படித்தானே? நான் எனக்குன்னு இதுவரை எதாவது கேட்டிருப்பேனா? பெத்தவரா நம்ம பிள்ளைகளைப் பத்தி உங்களுக்குக் கவலை இல்லைன்னா நானும் அப்படியே இருக்க முடியாது. என் புள்ளைக்காக நான் பேசத்தேன் செய்வேன். நியாயமா புள்ளையைப் பெத்த அப்பனா நீங்கதேன் பேசியிருக்கணும்.! நீங்க உங்களைப் பெத்தவங்களை எதிர்த்து ஒத்தை வார்த்தை பேச மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதனால் தான் பேசினேன்.!” நியாயமாகத்தான் பேசினார் அரசி.

 

“அதானே.! உனக்கெல்லாம் செஞ்ச தப்பு ஒருநாளும் புரியாது டி! வயசில் அம்புட்டு பெரியவர், எடுத்தெறிஞ்சு பேசிட்டோமேன்னு மன்னிப்பு கேட்க தோணுதா உனக்கு?”

 

“மன்னிப்பா? நான் என்ன தப்பா பண்ணினேன்? நான் கல்யாணம் பண்ணி, உங்கப் பொண்டாட்டியா, இந்த வீட்டுக்கு மருமகளா வந்தேனே ஒழிய, பேசக் கூட உரிமையில்லாத அடிமையாய் வரலை! உங்க அகராதியில் நான் பண்ணினது தப்பா இருக்கலாம்! என் அகராதியில் நான் செஞ்சது தான் ரொம்ப சரி! நான் உங்க அப்பாவை எதிர்த்துப் பேசலை! என் மயனுக்காக பேசினேன் அம்புட்டுதேன்!” என்றவர், கதவு வரை சென்று விட்டு திரும்பி நின்று,

 

“அத்தை உடனே கூப்பிட்டாக வந்து சேருங்க!” எனச் சொன்னவர் நிற்காமல் வெளியேறிவிட்டார்.

 

“என்ன ஆச்சு அரசி, அங்கேயும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதை தானா? ரொம்பத்தேன் சடைச்சுக்கிறாங்க! இதுவே பெரியவர் கூப்பிட்டுருந்தால்.. கூப்பிட்டாருன்னு சொல்லும் முன்னமே ஓடிப் போயிருப்பாங்க! என்னவோ போ!” எனச் சொல்லிவிட்டு உணவு மேஜையில் உணவு பதார்த்தங்களை எடுத்து வைக்கத் துவங்கினர் இருவரும்.

 

“கயலு! அந்த சட்டினியையும், சாம்பாரையும் எடுத்துட்டு வந்து வை! எல்லாரும் சாப்பிட வந்துட்டாக பாரு!”

 

“அழகரு! வந்து உட்காருய்யா! விழி நீயும் வா!”

 

“நெடுமாறனையும், வீரபத்ரனையும் கூப்பிடுங்க!”

 

“அத்தே! மாமாவுக்கு சாப்பாடு?” அனைவரையும் சாப்பிட அழைத்துவிட்டு, கேள்வியாய் அங்கயற்கண்ணியின் முகம் பார்த்தார் பூங்கொடி.

 

“என்னடி புதுசா கேட்கிறவ? அது தான் அந்த நர்ஸ் பையன் வருவானே.. சாப்பாடு கொண்டு போய் கொடுத்துரு! அந்தப் பையன் பார்த்துப்பான்!” உணர்வற்ற மரத்தக் குரலில் பதில் சொன்னார் அங்கயற்கண்ணி.

 

“இல்லைத்தே! மாமா சரியா சாப்பிடறதே இல்லை! நீங்க கொடுத்தீங்கன்னா..?” தயக்கமாய் இடை நிறுத்தினார் அரசி.

 

“ஒருவேளை எனக்கு இதே மாதிரி ஒருநிலை வந்திருந்தால்.. உன் மாமா எனக்கு இதையெல்லாம் செஞ்சுருப்பாகளா அரசி? என்னையும் இப்படித்தானே செவிலி வச்சு பார்த்திருப்பீக.. இத்தனை வருஷம் வாழ்ந்த கடமைக்கு அவுகளுக்கு இதுவே பெருசு! மனுஷ வாழ்க்கை நிலையில்லாதது. இந்த உலகமே நிலையில்லாததா இருக்கும் போது.. மனுஷனுக்கு பணம், புகழ், சொத்து பத்தெல்லாம் கூடவே வராது.. கடைசி காலத்தில் துணையாய் ஒரு மனுஷனோ, மனுஷியோ தான் இருக்க முடியும்ங்கிற புரிதல் உங்க மாமனுக்கு வரணும். நான் செய்றது தப்புத்தேன். என் மனசு எம்புட்டு வேதனைப் படுதுன்னு எனக்கு மட்டும்தேன் தெரியும். அப்படியும் நான் இப்படி செய்றேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும்ன்னு புரிஞ்சுக்கோங்க!” பட்டும் படாமலும் சொல்லி புரிய வைக்க முயன்றார் அங்கயற்கண்ணி.

 

“நீங்க செய்யறது ஒண்ணுமே சரியில்லைம்மா! இத்தனை வருஷமும் அவர் நிழலில் தானே இருந்தீங்க? அவர் இப்படி உடம்புக்கு முடியாமல் இருக்கிறப்போ இப்படி இருக்கிறது சரியா? கட்டின பொண்டாட்டியா நீங்க செய்யறது ரொம்பத் தப்பும்மா!” சரவணனின் குரல் உயர்ந்தது.

 

“ஓ! நான் அவர் நிழலில் இருந்தேனா? பதிமூணு வயசில் கல்யாணமாகி வந்து கிட்டத்தட்ட ஐம்பது வருஷமாய், உங்க அப்பனுக்கு வேலைக்காரியாய், பொண்டாட்டியாய், சமையல்காரியாய், உங்க மூணு பேருக்கும் ஆத்தாளாய், எம் மாமியார் மாமனாருக்கு, மருமவளாய் எல்லாமுமாய் இருந்திருக்கேன். எல்லாத்துக்கும் சேர்த்து நான் கணக்கு போட்டேன்னா உங்க அப்பன் சொத்து மொத்தத்தையும் எழுதி வைக்கணும்!”

 

“எல்லாத்துக்கும் மேலே நான் வரும்போது சும்மா ஒண்ணும் வரலைடா மகனே.. வண்டி வண்டியா சீரோடத்தேன் வந்து இறங்கினேன். என்னைப் பெத்தவர் உங்க அப்பனுக்கு மேலே தனக்காரர்தேன். இந்த நிமிஷம் நீ தோரணையாய் நின்னு பேசிட்டு இருக்க இந்த வீடு கூட, எனக்கு தந்த சீதனம்தேன்.! எந்தக் காலத்திலும் ஒரு பொம்பளை ஆம்பிள்ளையோட நிழலில் வாழறது இல்லை. அவன் சம்பாதிச்சு குடும்பத்தைக் காப்பாத்துறான்தேன். ஆனால், அவன் செய்யறதுக்கு மேலேயும் பொம்பிள்ளை செய்றா! எப்படி கணவன் மனைவிக்கு இடையில் இருக்கிற தாம்பத்தியத்திற்கு விலை வைக்க முடியாதோ, அதே போல் தான்.. ஒரு குடும்பத்தில் மருமகளா, மனைவியா, அம்மாவா அவள் செய்யற எதுக்கும் விலை வைக்க முடியாது. அதுக்காக ஆண் எதுவுமே செய்யலைன்னு நான் சொல்லலை.. ஆணை விட பெண்ணோட பங்கு அதிகம்ன்னு சொல்றேன்.!”

 

“இந்த வெட்டி வியாக்கியானமெல்லாம் வேணாம்மா! என்னையும் சரவணனையும் பொருத்தவரை, அப்பா சொல்லறது தான் எல்லாம். அவர் இந்தக் கல்யாணம் வேணாம்ன்னு தானே சொன்னார்.?”

 

“உன்கிட்டே வந்து சொன்னாரா கதிரு? உங்க அப்பன் மனசு எனக்குத் தெரியும்! நீ வேணும்ன்னா அவர் கிட்டேயே போய் கேட்டுக்கோ! உங்க யாருக்கிட்டேயுமே நான் ஆலோசனை கேட்கலை! நல்ல நாள் பார்த்து கல்யாணத்தை நடத்ததேன் போறேன்.! நெடுமாறன் கல்யாணம் முடிஞ்சு, மறு மாசத்திலேயே அழகர் கல்யாணத்தை நடத்தணும்னு முடிவு பண்ணியாச்சு! இதை உங்களுக்கு தகவலாகத்தேன் சொல்றேன்.!” எனச் சொல்லிவிட்டு அங்கயற்கண்ணி எழுந்து சென்றுவிட, சரவணணும், கதிரும் சாப்பிடாமலே வெளியேறியிருந்தனர்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அங்கயற்கண்ணி பாட்டி பேசியது எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது.

    ஆம்பளைங்க சம்பாதிச்சு கொடுக்கறாங்க தான், ஆனா அதை சரியா நிர்வாகம் செஞ்சு குடும்பத்தை நடத்தறது மனைவி.

    கடைசி காலத்தில் வாழ்க்கைத்துணை மட்டுமே துணை நிற்கும். இங்கோ சொக்கேசன் செய்த தவறு அவரது இறுதி நேரங்களில் துணைவி இருந்தும் இல்லாமல் தவிக்கும் நிலை.

    மகனுக்காக பேசியதற்கு இன்னும் எத்தனை வசவுகளை வாங்குவாரோ அரசி.

    சொக்கேசன் மட்டும் இல்லாமல் அவரது மகன்கள் இருவரும் மனைவி என்பவள் அவர்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்றே நினைக்கின்றனர்.