
அகம்-30

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார் சொக்கேசன்.
ஒட்டுமொத்தக் குடும்பமும் வெளியே உட்கார்ந்து கண்ணீரில் கரைந்துக் கொண்டிருந்தது. ஆனால் அங்கயற்கண்ணியின் விழிகளிலோ துளிக் கண்ணீர் வரவில்லை.
கணவனின் செயல்களுக்கு இந்தத் தண்டனை பத்தாது என்றே தோன்றியது. அந்த அளவிற்கு மனம் வெறுத்துப் போயிருந்தது. நீர்வற்றிய பாலைவனம் போல், அவர் கண்களிலும், மனதிலும் மொத்தமாய் ஈரம் வற்றியிருந்தது.
“அழகரு..! தாத்தா எடுத்த முடிவை எதிர்த்துப் பேசினதால் தான் தாத்தாவுக்கு இப்படி ஆகிருச்சா.? எனக்கு பயமா இருக்கு. இத்தனை நாள் தாத்தாவைப் பார்த்து யாரும் ஒருவார்த்தைப் பேசினதில்லை. நாம தப்பு பண்ணிட்டோமா அழகரு!” கண்களில் தேங்கி நின்ற நீரோடு வினவியவளின் தலை எப்போதும் போல், அழகரின் தோளில் தான் சாய்ந்திருந்தது.
கருவிழி கேட்டதும், இன்று நடந்த விஷயங்கள் தான் தாத்தாவின் திடீர் உடல் நலக் குறைவிற்குக் காரணமோ? எனத் தோன்றத்தான் செய்தது.
“வயசான காலத்தில், ரொம்பச் சந்தோஷப் படவும் கூடாது. ரொம்ப வருத்தப்படவும் கூடாது. சீக்கிரம் உங்கக் கல்யாணத்தை நடத்தணும்ன்னு சந்தோஷமா இருந்தாக. என்ன தான் கோவமா உங்கக் கிட்டே பேசிப்புட்டாலும், ரோசனை பண்ணிப் பார்த்து, விரும்புற பிள்ளைகளைப் பிரிச்சு வைக்க வேணாம்ன்னு தான் சொன்னாக! அந்தச் சந்தோசம்தேன், அவுங்களுக்கே வினையாய் வந்துருச்சு. யார் பேசினதிலேயும் அவுகளுக்கு வருத்தம் இல்லை! எல்லார் பேச்சிலேயும் நியாயம் இருந்துச்சே!” எனச் சொன்ன அங்கயற்கண்ணியின் பார்வை அரசியைத்தான் தொட்டு மீண்டது.
அழுதழுது வீங்கிப் போனக் கண்ணிமைகளுடன், முகம் சிவக்க, தன்னால் தான் இப்படி நடந்துவிட்டதோ? என்றக் குற்றவுணர்வுடன், அவசர சிகிச்சை பிரிவின் கதவை வெறித்தபடியே அமர்ந்திருந்தார் அரசி.
“அரசி! என்னத்துக்கு இப்போ இப்படி சஞ்சலப்பட்டுக்கிட்டு கிடக்க? உன் மாமனுக்கு ஒண்ணும் இல்லை. சீக்கிரமே வீட்டுக்கு வந்துருவாக! வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாய் பிள்ளைங்க கல்யாணத்தைப் பேசி முடிவு செய்யணும்!” நிலமையறிந்து பேசினார் அங்கயற்கண்ணி.
“மாமா சரியாகட்டும்த்தே! என்னத்துக்கு அவசரம்? மாமா நல்லபடியா எழுந்து நடந்த பிறகு எதுவா இருந்தாலும் பேசிப்போம்!” என்ற அரசியின் பதிலுக்கு..
“நாங்க ஒண்ணும் இளந்தாரிங்க இல்லை அரசி! வயசு போகுதுல்ல, நாளைக்கே நானும் உன் மாமன் மாதிரி படுத்துட்டா என்ன செய்ய? நாங்கப் போய்ச் சேருவதற்குள்ளே பேரப்புள்ளைங்க கல்யாணத்தைப் பார்த்துடணும்! உங்க மாமனோட ஆசையும் அதுதேன்.!” எனச் சொல்லி முடித்திருந்தார் அங்கயற்கண்ணி.
‘ஆத்தா இரஞ்சிதம்! இந்த மனுஷன் உனக்கு மட்டுமில்லை! எனக்கும்தேன் துரோகத்தைப் பண்ணியிருக்காரு. அதுக்காக நான் அவரை மன்னிக்கச் சொல்லி உன்கிட்டே கேட்க மாட்டேன். எங்களைத் தண்டிச்சிக்கோ! எம் புள்ளைகளையும் பேரப் புள்ளைகளையும் தண்டிச்சுறாதே! உன்னையும், இந்த மதுரையை ஆளும் மீனாட்சியையும் நம்பித்தேன் கல்யாணத்தை நடத்தப் போறேன். நீயும் அந்த ஆத்தா மீனாட்சி மாதிரி தெய்வமா நின்னு எம் புள்ளைங்க கல்யாணத்தை நடத்திக் கொடுக்கணும்!’ மனதிற்குள்ளேயே வேண்டுதல் வைத்துக் கொண்டார். நேசத்தோடு இருப்பவர்களைப் பிரித்து வைத்து இன்னொரு பாவத்தைச் சம்பாதித்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.
“அம்மாச்சி! தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை! இப்போ போய் கல்யாணம் அது இதுன்னு பேசிக்கிட்டு.. என்ன ஆச்சு உங்களுக்கு? தாத்தா கண்ணில் தூசி விழுந்தால் கூட தாங்க மாட்டீங்க! என்னமோ உங்கக் கிட்டே சரியில்லை!”அங்கயற்கண்ணியைப் பார்த்தபடியே வினவினாள் கருவிழி.
‘அம்புட்டு உண்மையாய் இருந்ததுக்குத்தேன் அனுபவிக்கிறேனே? ஒவ்வொரு நிமிஷமும் திக்கு திக்குன்னு என் பிள்ளைகளுக்கு என்னாகுமோ ஏதாகுமோன்னு திணறிக்கிட்டு நிக்கிறேன். உன் தாத்தன் செத்தால் கூட எனக்கு கவலை இல்லைடி! அவர் வாழ்ந்து முடிச்சுட்டாரு..! வாழப் போற நீங்க நல்லா இருக்கணும்.’ மனதில் நினைத்தவரின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.
எதையுமே கருவிழியிடம் காட்டிக் கொள்ளப் பிரியப்படாதவர்,
“என் நிலையிலிருந்து பார்த்தால் மட்டுந்தேன் என் நிலைமை உனக்குப் புரியும்டி! உன் தாத்தன் என்ன நினைப்பாருன்னு என்னை விட யாருக்குத் தெரிஞ்சுரும்? அவர் மனசு எனக்குப் புரியும்டி! உங்கக் கல்யாணத்தைக் கண்ணாரப் பார்க்கணும்ங்கிறது தான்.. இப்போதைக்கு அவருடைய ஆசை.!” எனச் சொன்னவர், உணர்ச்சி வசத்தில் தொண்டை வரை வந்துவிட்ட வார்த்தைகளை கடினப்பட்டு விழுங்கினார்.
ஆனால், கருவிழிக்கும் சரி, உடன் இருந்தவர்களுக்கும் சரி, அங்கயற்கண்ணியின் செயல் ரொம்பவே வித்தியாசமாய்ப் பட்டது. சொக்கேசனைத் தவிர அவருக்கு உலகில் வேறெதுவுமே முக்கியம் கிடையாது. அந்தளவிற்கு அன்யோன்யம் அதிகம் இருவருக்கும். யாரையும் தன் கணவரை ஒரு சொல் சொல்ல விடமாட்டார். அப்படிப்பட்டவர், கணவர் மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையில் இப்படியெல்லாம் பேசுவது நிரம்பவும் புதிராக இருந்தது.
ஆனால் இதற்கு நேர்மாறாய் அங்கயற்கண்ணி மனதளவில் உடைந்துப் போயிருந்தார். துரோகம் செய்தது தன் கணவராய், தன் உயிருக்கு உயிரான உறவாய் இருந்தாலும் கூட, கணவர் என்ற காரணத்திற்காக அவரால் மன்னிக்க முடியவில்லை. மனம் நிறைய வேதனைகளும், துரோகத்தின் பச்சை இரணங்களும் இருக்கையில், மன்னிப்பு என்பது வெறும் வாய் வார்தையாகவோ பெயரளவிலோ மட்டுமே இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அவர் கணவருடன் வாழ்ந்த இத்தனை வருட வாழ்க்கையே துரோகத்தை அஸ்திவாரமாய் போட்டு கட்டமைக்கப்பட்டிருக்கையில்.. அஸ்திவாரம் ஆட்டம் காணத்தானே செய்யும். கட்டிய கணவனே இப்படி இருக்கையில், யாருக்காக எதற்காக வாழ வேண்டும்? என்ற எண்ணம் வந்து விட்டிருந்தது அவரிடம். தன் காலம் முடிவதற்குள், தன் பேரப்பிள்ளைகள் நல்லபடியாய் வாழ்வதைப் பார்த்துவிட வேண்டும்.. என்கிற எண்ணம் ஆழ் மனதில் அழுத்தமாய் வந்திருந்தது.
எந்தவொரு, சூழ்நிலையிலும், பிரச்சனையிலும், அந்தச் சூழ்நிலையை எதிர் கொண்டு சமாளிப்பவர்களுக்கும், அந்தப் பிரச்சனையின் பார்வையாளர்களாக, வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கண்ணோட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. வெளியிலிருந்து வெறும் பார்வையாளர்களாய் இருப்பவர்களால், சூழ்நிலையின் தீவிரத்தையும், அச் சூழ்நிலையால், அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையையும் வேடிக்கைப் பார்ப்பவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது. இங்கும் அதே சூழ்நிலை தான், அங்கயற்கண்ணியின் மனநிலையும், அவரின் மன வேதனையும் யாருக்குமே தெரியாமல் தான் போனது.
“எக்ஸ்க்யூஸ் மீ.. பேஷண்ட்டோட வந்தவங்க யாரு? டாக்டர் வரச் சொன்னாங்க!” தகவலாய் சொல்லிவிட்டுச் சென்ற செவிலிப் பெண், அந்தச் சூழ்நிலையின் நிசப்தத்தைக் கலைக்க, சரவணனும், கதிர்வேலும் செவிலிப் பெண்ணைப் பின் தொடர்ந்து மருத்துவரின் அறையை நோக்கிச் சென்றனர்.
ஒரு சிறிய தயக்கத்துடனே, அந்த மருத்துவர் முன் அமர்ந்தனர் கதிர்வேலும், சரவணனும்.
“சார்.. அப்பாவுக்கு..?” தயக்கமாய் நிறுத்தி மருத்துவரின் முகம் பார்த்தார் சரவணன். கதிர்வேலின் மனமோ பயத்திலும், பதற்றத்திலும் நடுங்கிக் கொண்டிருந்தது.
“வயசானால் வர்ர பிரச்சனை தான் உங்க அப்பாவுக்கும்! இதை நாங்க ஸ்ட்ரோக்ன்னு சொல்லுவோம். உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்ன்னா பக்க வாதம்ன்னு சொல்லலாம். மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களின், இரத்த ஓட்டம் குறைதல், தடைபடுத்தல் காரணமாகத்தான் ஸ்ட்ரோக் ஏற்படும். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் தடைபடும் காரணத்தால் உடலின் ஒரு பகுதி செயலிழந்து போகவும் வாய்ப்பு இருக்கு! உங்க அப்பாவோட ப்ளட் ப்ரஷர் அதிகமாகி, மூளைக்குப் போகிற இரத்த ஓட்டம் தடைபட்டதால் தான் இதெல்லாம் நடந்துருக்கு.!” என மருத்துவர் சொன்னதும், அதிர்வுடன் பேச வார்த்தைகளின்றி அமர்ந்திருந்தனர் இருவரும்.
இதைக் குடும்பத்தினரிடம் எப்படிச் சொல்ல? மனம் நடுங்கத்தான் செய்தது.
“ஆனால், உங்க அப்பா கேஸில், தற்காலிகமான பாதிப்பு தான் வந்திருக்கு. இந்த வயதிலும், உடல் உழைப்பும் நல்ல உணவுப் பழக்கமும் இருக்கிறதால் கூட பாதிப்பு தீவிரமாகாமல் இருந்திருக்கலாம். அதைவிட முக்கியம் அவர் அஃபெக்ட் ஆனதும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துட்டீங்க! முக்கியமா ஸ்ட்ரோக் வரும்போது, முதல் மூன்று மணி நேரங்கள் தான் பொன்னான நேரங்கள். நீங்க சீக்கிரமே கூட்டிட்டு வந்ததால் தான் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாமல் காப்பத்த முடிஞ்சது. அதற்காக பாதிப்பு எதுவுமே இல்லைன்னு அர்த்தம் இல்லை. ஒரு பக்க கை, கால் மரத்துப் போறது, வேகமா நடக்கிறதில் சிரமம். மூச்சு விடறதில் சிரமம் இருக்லாம். உங்க அப்பாவோட வலது பக்கம் எப்போவும் விட மெதுவாகத்தான் செயல்படும். தொடந்து மருந்துகள் எடுத்துக்கணும். இந்த நிலை தீவிரமாகி, உடலின் ஒற்றைப் பக்கம் முழுசா செயல்படாமல் போறதுக்கும் வாய்ப்பு இருக்கு. கூடவே இருந்து கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கோங்க!” சொல்ல வந்தது அவ்வளவு தான் என்பது போல், மருத்துவர் அமைதியாகிவிட,
கனத்துப் போன மனதைச் சுமக்க முடியாமல் வெளியே வந்தனர் சரவணனும் கதிர்வேலும்.
முகம் ஒருமாதிரியாய் மாறிப் போய், கண்கள் கலங்க மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்தக் கணவரைப் பார்த்து எழுந்து அருகே சென்றார் அரசி.
“என்ன ஆச்சுங்க? மூஞ்சியெல்லாம் ஒருமாதிரி இருக்கு?” கணவரின் கரம் பிடித்து அரசி வினவவும் உடைந்து மனைவியின் தோளில் சாய்ந்திருந்தார் கதிர்வேல்.
“அப்பாவுக்கு பக்கவாதம்ன்னு சொல்லிப்புட்டாங்க அரசி! கம்பீரமா நடந்த மனுஷனை, கை, கால் விளங்காமல் என் கண்கொண்டு எப்படிப் பார்ப்பேன்? அவரு உடைஞ்சு போயிருவாரு அரசி!” குரல் கமறச் சொன்னவர் அழுகையை அடக்குவது அரசிக்குப் புரிந்தது. சரவணன் ஒருபுறம் உடைந்து போய் உலுத்துப் போன மரமாய் நிற்க, தன் மாமனாரின் நிலையில் மனம் வேதனைப் பட்டாலும், தன்னை மீறி வழிந்தக் கண்ணீரைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தவர்,
“இந்தாருங்க! தைரியம் சொல்ல வேண்டிய ஆம்பிள்ளைகளே இப்படி உடைஞ்சு போய்ட்டா, அத்தை, நம்ம புள்ளைகளுக்கெல்லாம் எப்படி தைரியம் சொல்லுறது? முதலில் நீங்களும் உங்க அண்ணனும்தேன் திடமா நிக்கணும். நாமெல்லாம் என்னத்துக்கு இருக்கோம்? பார்த்துக்கிடுவோம்ங்க! வயசான எல்லாம் வர்ரதுதேன்.. இதை சமாளிச்சு மீண்டு வருவோம்ங்கிற நம்பிக்கையை நாம தான் கொடுக்கணும்! அங்கே பாருங்க அத்தை எம்புட்டு உடைஞ்சு போய் நிக்கிறாக!” கவனத்தை அங்கயற்கண்ணியின் புறமாய் சாமர்த்தியமாய் திருப்பினார் அரசி.
“அழகரு.. தாத்தா..! ஏன் இப்படியெல்லாம் நடக்குது.? தாத்தா சரியாகிடுவார் தானே? எனக்கு பயமா இருக்கு!”
அழகரின் தோளில் புதைந்து அழுதுக் கொண்டிருந்தாள் கருவிழி.
என்னதான் சொக்கேசன் கண்டிப்பானவராய் இருந்தாலும், அவர் மீது அனைவரும் வைத்திருக்கும் பாசம் தூய்மையானது. உண்மையான மனித மனம் என்பது, எதிரிகளுக்கு ஒன்றென்றால் கூட, அவனின் துன்பத்தில் மகிழாது, ஒரேயொரு நொடியாவது வருத்தப்படும். அப்படி இருக்கையில், இத்தனை ஆண்டுகளாய் இந்தக் குடும்ம்பத்தைத் தாங்கி ஆணிவேராய் நின்றவருக்கு ஒன்றென்றது குடும்பம் மொத்தமுமே உடைந்து போனது.
அனைவரின் கண்களிலும் கண்ணீரின் தடம். நீர் வழியும் விழிகளுடன், ஒட்டுமொத்தக் குடும்பம், எங்கோ வெறித்துக் கொண்டு நின்ற, அங்கயற்கண்ணியைப் பார்க்க, உணர்ச்சியே இல்லாத பார்வையோடு அனைவரையும் பார்த்தவர்,
“காசு கொடுத்தா, அவரைப் பார்த்துக்க ஆள் வருவாங்க தானே.? ஆம்பிள்ளை நர்ஸா பார்த்து ஏற்பாடு பண்ணு சரவணா! என்னால் அவரைப் பார்க்க இயலாது!”
உறுதியாய் உணர்ச்சியே இல்லாதக் குரலில் அங்கயற்கண்ணி சொல்ல, அங்கயற்கண்ணியின் புதிரான செயலில் குடும்பம் மொத்தமுமே அதிர்ந்து நின்றிருந்தது.
“கத்திக் குத்திய காயங்கள் ஆறிவிடும்..!
வார்த்தைகளின் ரணங்கள் கூட, ஆறிவிடும்..!
துரோகத்தின் காயங்கள் ஒருபோதும் ஆறுவதே இல்லை..
முன் பின் தெரியாதவர்களை விட..
நாம் நன்றாய் அறிந்த உறவுகள் தானே முதுகில் குத்துகிறார்கள்.!
மண்ணுக்குள் போய் மக்கிப் போனாலும், இந்தக் காயங்களின் இரணங்களில்..
ஓயாமல் உதிரம் வழிந்துக் கொண்டுதான் இருக்கிறது.
மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையின் பின் ஏனோ
துரோகங்களை மறைக்கவோ மறக்கவோ முடிவதில்லை.!”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வேதனையை தனக்குள் வைத்துக்கொண்டு மற்றவர்களை தேற்ற முயல்கிறார் அங்கயற்கண்ணி.
அழகர் விழி திருமணம் விரைந்து நடத்த கூறியது, அரசியிடம் வயசானால் வருவது தான் என்று ஆறுதல் கூறியது எல்லாம் அருமை.
அவரின் மன வேண்டுதல் பழிக்கட்டும்.
உண்மை தான் துரோகத்தின் காயங்கள் என்றும் ஆறாது.
உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💙