Loading

அகம்-29

அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண்ணின் முகத்தைப் பார்த்த சொக்கேசனுக்கு தொண்டை அடைத்தது. கண்ணிலிருந்து சரேலென வழிந்த ஒற்றைத்துளி கண்ணீர், புகைப்படத்தில் விழுந்துப் புகைப்படத்தை நனைத்தது.

‘நான் செய்த துரோகத்திற்கு சாட்சி இல்லை என நினைத்தேனே? என் மனசாட்சியே சாட்சியாய் நிற்கிறதே?’

 

என நினைத்தவரைக் குற்றவுணர்வு கொல்லாமல் கொன்று தின்றது.
நாம் செய்த தவறுகளுக்கும் தப்புகளுக்கும் மிக முக்கியமாய் துரோகங்களுக்கும்,

 

வெளியிலிருந்து ஆதாரத்தோடு யாருமே சாட்சியாய் வரத் தேவையில்லை. உண்மையான மனிதப் பிறவியாய் இருந்தால், மனசாட்சியே சாட்சியாகும். நாம் செய்த வினைகளுக்கு நம் மனமே சாட்சியாகும் போது,

 

குற்றவுணர்வில் செல்லரித்துப் போய்விடுவோம் என்பது தான் நிஜம். நாம் செய்யும் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது மனசாட்சியைத் தான். மனசாட்சி தானே கடவுள். நாம் ஒருவரை நோக்கி ஒரு விரலை நீட்டும் போது, நம்மை நோக்கித் திரும்பியிருக்கும் மூன்று விரல்கள் சுட்டுவது நம் மனசாட்சியைத் தான். மனிதக் கண்களிலிருந்து தப்பி விடலாம் தான்.. மனசாட்சியின் கண்களிலிலிருந்து தப்புவது கொஞ்சம் சிரமம் தான்.
சொக்கேசனின் மனசாட்சியே அவருக்கு எதிராய் அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிற்க வைத்துக் கேள்விக் கேட்டது. தன் மனசாட்சிக்கே பதில் சொல்ல முடியாது அவர் திணறிக் கொண்டிருக்க, செவிக்குள் கேட்கும் குரல், இரஞ்சிதத்தின் குரலாய் கேட்டது அவருக்கு.

“சொக்கரே..!” அந்தக் குரல் இரஞ்சிதமே நேரில் நின்று பேசுவதைப் போலொரு பிரம்மையை ஏன்படுத்தியது.

 

“மனுஷப் பயலுகள் கிட்டே பொய் சொல்லலாம், மன சாட்சிக்கிட்டே முடியுமோ? துரோகத்தின் தண்டனை மரணம் இல்லை சொக்கரே..! மரணம் ஒருவகையில் விடுதலை தான். உயிரோடு நடமாடும் போதே, கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளுக்குள்ள செத்துப் போறது தான் துரோகத்திற்கான தண்டனை. திடமா இருக்கும் போதெல்லாம் என் நினைப்பு வரவே இல்லையோ? இப்போ ஆடி அடங்கிட்டீங்களோ..? உம்ம பேரன் பேத்திக்குப் பிரச்சனைன்னு தெரிஞ்சதும் என் நினைப்பு வருதோ? நானும் இப்படித்தானே துடிச்சேன். என் வேதனை உமக்கு நடிப்பா தானே தெரிஞ்சது? இப்போ உம்ம கண்ணீரும் எனக்கு நடிப்பாத்தேன் தெரியுது சொக்கரே..!” கெக்கரித்துச் சிரித்தது அந்தக் குரல்

இரஞ்சிதத்தின் நிலையிலிருந்து அவர் மனசாட்சியே அவரைக் கேள்வி கேட்க, இரஞ்சிதமே நேரில் நிற்பதைப் போன்ற பிரம்மையை நிஜம் என நம்பினார் சொக்கேசன்.

 

“எ.. என்னை மன்னிச்சுரு இரஞ்சிதம்! நான் செஞ்சது தப்புத்தேன்! அதுக்கா பிள்ளைகளை தண்டிக்கிறது எந்த விதத்தில் நியாயம்? நான் செஞ்ச தப்புக்கு எனக்கு தண்டனை கொடு! மனசார ஏத்துக்கிறேன்.!” யாருமே இல்லாத அறையில் சுவற்றைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தார் சொக்கேசன்.

 

“மன்னிப்பு கூட, காலம் கடந்து தான் உம்ம வாயில் வருமோ? கெஞ்சினேனே! எம் மனசில் ஆசையை விதைச்சுட்டு வேணாம்ன்னு தூக்கி எறிஞ்சுட்டுப் போனப்போ, இந்த வாயில் மன்னிப்பு வரலையே? நான் வேலைக்காரிதேன்.. உங்கப் பண்ணையில் கூலிக்கு மாரடிக்க வந்தவதேன்.! ஆனால் நான் ஒண்ணும் உம்ம பின்னால வரலையே? நீங்களா வந்தீக, பேசுனீக, பிடிச்சிருக்குன்னு சொன்னீக! அப்போவும் நான் கேட்டேனே, உங்க உயரம் வேற, ஒத்து வருமான்னு கேட்டேனே? எல்லாத்தையுமே நான் பார்த்துக்கிறேன்னு சொன்னியேய்யா, என்னத்தைக் கிழிச்சே?” ஆக்ரோஷமாய் அவரின் கற்பனையில் கேள்விக் கேட்டக் குரலுக்கு அவரால் பதில் சொல்லவே முடியவில்லை.

 

“உன்னால் பதில் சொல்ல முடியாது! ஏன்னா நீ பண்ணினது தப்பு இல்லை துரோகம்! அங்கயற்கண்ணியைப் பார்க்கும் வரை நான் தகுதி தராதரத்தில் குறைஞ்சவள்ன்னு உனக்கு உரைக்கவே இல்லையா? சொத்து பத்தோட, அழகா அம்சமா இருக்கப் பொண்ணைப் பார்த்ததும் நான் இல்லாதவளா ஆகிட்டேன்! உன் குடும்பத்தை நான் விட மாட்டேன் சொக்கரே.. இதுக்கே ஓய்ஞ்சு போய்ட்டா எப்படி? இன்னும் இன்னும் நீ அனுபவிக்கப் போற! வலிக்க வலிக்க அனுபவிக்கப் போற!” எனப் பேசிக் கொண்டிருந்த குரலும் உருவமும் பாதியிலேயே மறைந்துப் போக, புரியாது சில நொடிகள் தடுமாறினார் சொக்கேசன்.

 

அதே நேரம் அறையின் கதவு திறக்கப்பட, அறைகுறை வெளிச்சத்துடன் இருந்த அறையை ஒட்டுமொத்தமாய் வெளிச்சம் ஆக்கிரமித்திருக்க, அறை வாசலில் நின்றிருந்தார் அங்கயற்கண்ணி.

 

“புள்ளைங்க இம்புட்டு ஆசையும், நேசமுமா இருக்கையில் நாம ஒண்ணும் செய்ய முடியாதுங்க! கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு கல்யாணத்தை நடத்தி வச்சிப்புடுவோம்.! பாரத்தை ஆத்தா மீனாட்சி பாதத்தில் வைப்போம்..!” எனப் பேசிக் கொண்டிருந்த அங்கயற்கண்ணி சொக்கேசனின் கண்களுக்கு இரஞ்சிதமாகத்தான் தெரிந்தார்.

 

“முதலில் நீ இங்கிருந்து போ! என்னத்துக்கு இங்கண வந்து நிக்கிறே? இந்த இடத்திலிருந்து மட்டுமல்ல என் வாழ்க்கையிலிருந்தே போயிரு! நான் உன்னை விரும்பினேன் தான். உன் அழகு மேல் எனக்கு ஆசை இருந்துச்சு! எந்த ஆம்பிள்ளையும் பார்க்காத கண்ணு என்னைப் பார்த்ததில் எனக்குள்ள ஒரு திமிரு! என் கூடச் சுத்துற பயலுக என்னைக் கெத்தா பார்த்தது எனக்குப் பிடிச்சது. மீசையை முறுக்கிக்கிட்டு சட்டைக் காலரைத் தூக்கிட்டு திமிரா திரிஞ்சது அந்த வயசுக்கு சரின்னு தான் தோணிச்சு. நீ எனக்கு மட்டும் தான் வேணும்ன்னு தோணிச்சு இரஞ்சிதம். அது தான் உன்கிட்டே எல்லை மீற தைரியத்தையும் கொடுத்துச்சு. ஆனால் கல்யாணம்ன்னு வரயில என்னைப் பெத்தவர் பேச்சை என்னால் மீற முடியலை! அதோட, வசதி வாய்ப்போட வந்த அங்கயற்கண்ணியை விடவும் எனக்கு மனசு இல்லை! ஊரு முன்னே கிடைக்கிற மரியாதையும் எனக்கு வேணும்ன்னு நான் நினைச்சது எனக்கு தப்பா தெரியலை இரஞ்சிதம்..!” என அவர் சொன்ன நொடி, இரஞ்சிதத்தின் முகம் மறைந்து அங்கயற்கண்ணியின் முகம் அவருக்குத் தெளிவாய்த் தெரிந்தது.

 

“நீ.. நீ.. எப்போ வந்த?” மனைவியைப் பார்த்துக் கேட்டவரின் குரல் உடைந்து பேச்சுக் குழறியது. அங்கயற்கண்ணி தன் கணவனின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு உறைந்து போய் நின்றதெல்லாம் சில விநாடிகள் தான்.

 

“பாவி மனுஷா! ஒரு பொண்ணுக்கு பாவம் பண்ணின உன் கூடத்தான் இத்தனை வருஷம் வாழ்ந்தேனா? அந்தப் புள்ளை செத்துப் போனதுக்கு நீ தான் காரணமாய்யா? வாயைத் திறந்து சொல்லு! கல்லு கணக்கா நிக்காமல் வாயைத் திறந்து பேசுய்யா!” சட்டையைப் பிடித்து உலுக்கினார் அங்கயற்கண்ணி. சொக்கேசனோ, இரஞ்சிதமாய்த் தெரிந்த உருவம் எப்படி அங்கயற்கண்ணியாய் மாறியது என்றக் குழப்பத்தில் இருந்தார்.

 

“உண்மையைச் சொல்லுவீகளா? இல்லை நீங்க கூட்டும் கூட்டத்தை நான் கூட்டட்டுமா? கதிரு! சரவணா..!” தன் மகன்களை அவர் அழைக்க முற்பட்டார்.

 

“நான் செஞ்சது அம்புட்டும் தப்புத்தேன் மன்னிச்சுரு ராசாத்தி! நான் செஞ்சது தப்புத்தேன், துரோகம்தேன்.. எப்போ நம்ம புள்ளை வயித்துப் புள்ளையோட நம்ம வீட்டு வாசலில் வந்து நின்னுச்சோ, அப்போ இருந்து குற்றவுணர்வில் செத்துக்கிட்டு இருக்கேன்டி! ஏற்கனவே செத்துக்கிட்டு இருக்கவனைக் கொன்னுடாத டி!”

 

“செத்துருய்யா! செத்துருங்கிறேன்! எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான், இரஞ்சிதம் எப்படி செத்தாள்? அவக் கூட எனக்குப் பழக்கம் இல்லைதேன். ஆனால் அவள் முகத்தில் இருந்த சோகத்தை நான் பார்த்திருக்கேன். அந்தச் சோகத்துக்குக் காரணம் நான்தேன்.. அவ வாழ்க்கையைத்தேன் நான் வாழ்ந்துட்டு இருந்திருக்கேன்னு தெரியாத முட்டாச் சிறுக்கியா இருந்திருக்கேனே?” தன் தலையிலேயேஅடித்துக் கொண்டு அழுதார் அங்கயற்கண்ணி.

 

அவர் இத்தனை வருடங்களாய்.. கிட்டத்தட்ட ஐம்பது வருடத்திற்கு மேலாய் கணவன் மீது வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும், உடைந்தக் கண்ணாடி துகள்களாய் உடைந்து சில்லு சில்லாய் சிதறியது.

 

“சொல்லுய்யா! இரஞ்சிதம் எப்படிச் செத்தாள்?” சட்டையைப் பிடித்து விடாமல் உலுக்கினார் அவர்.

 

“வயிற்றுப் பிள்ளையோட வந்து நம்பிக்கையோடு நின்னவளை, அவள் வயிற்றில் வளர்வது எம் பிள்ளை இல்லைன்னு விரட்டினேன். போய்ச் சேர்ந்துட்டா!” நீண்டப் பெருமூச்செறிந்தார் சொக்கேசன்.

 

கண்கள் தெறித்து விழுமளவிற்கு அதிர்வுடன், கணவனைப் பார்த்தவர், பட்டென சட்டையைப் பிடித்திருந்த கரத்தை எடுத்துவிட்டு பின்னால் தள்ளி விலகி நின்றார். சொல்ல முடியாத அளவிற்கு, கலக்கமும், பயமும், அதிர்வும் அங்கயற்கண்ணியின் விழிகளில் தெரிந்தது. இத்தனை நாள் கணவனாய் தெரிந்தவர் ரொம்பவே அந்நியமாய்த் தெரிந்தார்.

 

“இரஞ்சிதம்.. இரஞ்சிதம்.. தீக்குளிச்சு செத்துப் போச்சு..! எம்புட்டு வேதனை இருந்திருந்தால், அந்தப் புள்ளை இப்பபடியொரு முடிவு எடுத்திருக்கும்? நீ செஞ்ச பாவம் தான் எம் மவ வயித்துப் புள்ளையோட வந்து நின்னா. ஆதரவா நாம இருக்கப் போய் அவள் உசிரோட இருக்கா! மீனாட்சியும் இரஞ்சிதம் மாதிரி முடிவை எடுத்திருந்தால்..?” வெறும் வாய் வார்த்தைக்கு சொல்வதற்குள்ளேயே உயிர் நடுங்கியது அங்கயற்கண்ணிக்கு.

 

“நீயெல்லாம் மனுஷனே இல்லை! உன் கூட வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்குய்யா! அன்றைக்கு ஜாதகம் பார்த்தப்போ அவர் சொன்னாரே.. பொண்ணோட சாபம் இருக்குன்னு.. அது இது தானா? இந்தாருய்யா.. அழகருக்கும், விழிக்கும் எதாச்சும் ஆச்சு.. தாலி கட்டின புருஷன்னு பார்க்க மாட்டேன். கழுத்தை அறுத்து வீசிப்புட்டு போய்ட்டே இருப்பேன். நானும் இந்த மருதையில் பிறந்து வளர்ந்தவதேன்.. புருஷனாச்சும் மண்ணாச்சும்ன்னு போய்க்கிட்டே இருப்பேன்.!”

 

“ராசாத்தி!” குரல் தழுதழுக்க மனைவியை விளித்தார் சொக்கேசன். சொக்கேசன் இத்தனை வருடங்களில் அங்கயற்கண்ணியைப் பெயர் சொல்லி ஒருமுறைக் கூட விளித்ததே இல்லை. அவர் தங்களின் தனிமையான தருணங்களில் விளிக்கும் பிரத்யோக அழைப்பு கூட, அவர் மனதை இளக்காமல் இறுக்கத்தான் செய்தது.

 

“என்னை அப்படி அழைக்காதீங்க! என்னை அப்படி அழைக்கிற  அருகதையும், தகுதியும் உங்களுக்கு இல்லை. நான் செத்தால் கூட நீங்க எனக்கு வாய்க்கரிசி போடக் கூடாது. ஒரு பொம்பளப் புள்ளையை ஏமாத்தி வயிற்றில் புள்ளையையும் கொடுத்துட்டு, பொறுப்புன்னு வரும்போது தட்டிக் கழிச்சுட்டு, கொஞ்சமும் மனசு உறுத்தாமல், என்னோட வாழ்ந்து புள்ளையும் பெத்திருக்கீங்களே அசிங்கமா இல்லை.? பெரிய மனுஷன்னு பேரு மட்டுந்தேன்.. இந்தப் பொழப்புக்கு நாண்டுக்கிட்டு தொங்கலாம்!” காறி உமிழாதக் குறையாய் அங்கயற்கண்ணி சொல்லிவிட, மனவியின் வாயிலிருந்து வெளி வந்த ஒவ்வொரு வார்த்தையிலும் உயிரோடு செத்துக் கொண்டிருந்தார் சொக்கேசன்.

 

இளமையில் ஒன்றுமே இல்லாததாய் தோன்றியதெல்லாம், தனக்கு தன் குடுபத்திற்கென்று வரும் போது தான் பூதாகரமாய் மாறி மிரட்டியது. அநாதையாய் கேட்க ஆளில்லாமல் கூலி வேலைக்காக வந்த இரஞ்சிதத்திற்கு செய்த துரோகம் தன் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் பாதிக்கிறது என்பதை அவர் உணர்வதற்குள்ளாகவே காலம் கடந்திருந்தது.

 

தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்ள துணியுமளவிற்கு இரஞ்சிதம் துணிந்ததன் காரணம், சொக்கேசன் செய்த துரோகம் தான். தன் வயிற்றுப் பிள்ளையைப் பற்றிக் கூட அவர் யோசிக்கத் துணியவில்லையெனில் எத்தனை வேதனையில் அவர் நெஞ்சம் விம்மித் துடிதுடித்திருக்கும். இறுதி நொடியில் இரஞ்சிதம் அனுபவித்த வலியும், வேதனையும், அந்த உயிரின் துடிதுடிப்பும் சாபம் தானே? அதுவும் பெண்ணின் சாபம் தலைமுறைகளையே அழிக்க வல்லது அல்லவா? வினையை விதைத்தால் வினையை அறுத்து தானே ஆக வேண்டும். காலம் எப்போதுமே ஒரு கண்டிப்பான ஆசிரியர் தான்.. செய்தவற்றின் பலனை நிச்சயம் அனுபவித்து தான் தீர்க்க வேண்டும்.

 

மனைவியின் வார்த்தைகளும் விலகலும் நிரம்பவே சொக்கேசனைப் பாதித்தது. கண்கள் கலங்க, தொண்டை அடைக்க, வார்த்தைகள் குழற, மனைவியை நோக்கி மெதுவாய் அடியெடுத்து வைத்து வந்தவர், தடுமாறி கீழே விழுந்தார். கண்கள் மனைவியிடம் மட்டுமே மையம் கொண்டிருந்தது.

 

அங்கயற்கண்ணியும் கூட சொக்கேசனை மட்டுமே பார்த்திருந்தாரே ஒழிய, அவரைத் தூக்கி விடவோ, அவருக்கு உதவி செய்யவோ முயற்சிக்கவே இல்லை.
ஏதோ பேச முயற்சித்தார் வார்த்தைகள் பிடி பட மறுத்தது. கரத்தினை ஊன்றி எழ முயன்றார் கைகளும், கால்களும் கூட ஒத்துழைக்க மறுத்தது. கண்கள் மேல் நோக்கி சொருகத் துவங்க, கண்களுக்குள் இரஞ்திதத்தின் உருவம் கெக்கொலிக் கொட்டிச் சிரித்தது.

 

திடீரென மனோரஞ்சித மலரின் வாசனையை அவர் நாசி உணர, சொருகிய கண்களின் இடைவெளியில், கல்போல் அசையாமல் நின்றிருந்த மனைவியைப் பார்த்தபடியே கண்களை மூடியவரின் விழிகளுக்குள் இருள் நிரம்பியிருந்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
14
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இளமையில் செய்யும் தவறின் வீரியம் புரிவதில்லை. அதனை உணரும் பக்குவம் வரும் நேரம் தவறை திருத்திக்கொள்ள எல்லோருக்கும் வாய்ப்புகள் அமைவதில்லை.

    சொக்கேசன் ஆதரவற்ற பெண்ணிற்கு செய்த துரோகம் மிக கொடியது. மனதால் வருந்தி மன்னிப்பு யாசிக்க கூட இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டனவோ!

    அங்கயற்கண்ணியின் வார்த்தைகள் மிகச்சரி. இத்தனை ஆண்டுகள் அவருடன் வாழ்ந்த வாழ்வையும் பொய்யாக்கிவிட்டாரே.

    1. Author

      முற்றிலும் உண்மை டியர். நமக்கு கிடைக்கிற நடக்கிற எல்லாவற்றிற்கும் நம் செய்த வினைகள் தான் காரணம். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா 💜