
அகம்-28

அந்தச் சூழல் மொத்தத்தையும் அமைதி அழுத்தமாய் ஆக்கிரமித்திருந்தது. அரசி பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கவே நேரம் தேவைப்பட்டது சொக்கேசனுக்கு.
அங்கயற்கண்ணிக்கோ தன் கணவனை விரல் நீட்டி குறை சொன்ன அரசியின் செய்கை எரிச்சலைத் தான் தந்தது. மற்றவர்களெல்லாம் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த மனநிலையில் இருந்தனர். அழகரும் கருவிழியும் வேதனையில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். கருவிழியின் முகச் சுணக்கத்தைக் கண்ட அழகரின் கண்களில் ஒருவித உறுதி தெரிந்தது.
இத்தனை நேரமும் அரசி பேசிய போதும், கண்டிப்பேதும் காட்டாத அங்கயற்கண்ணியின் குரல் கனீரென அந்தக் கூடத்தை நிறைத்து நிசப்தத்தைக் கலைத்தது.
“இம்புட்டு கஷ்டப்பட்டு தான் இங்கண இருக்கியா அரசி? எம் மயனைக் கட்டி வந்த நாள் முதலாய் உனக்கு என்ன குறை? பணத்துக்கு குறையா? துணி மணிக்குக் குறையா? திங்கிற சோத்துக்கு குறையா? உங்க வீட்டில் இருந்ததை விட நல்லாத்தானே எம் மயன் வச்சிருக்கான். இம்புட்டு பேச்சு பேசுறவ? இம்புட்டு சிரமப்பட்டு நீ இங்கண இருக்க வேணாம்த்தா! உங்க அப்பன் ஆத்தா வீட்டுக்கு போயிரு! நீ ஒருத்தி இம்புட்டு பேச்சு பேசி, ஒட்டு மொத்தக் குடும்பத்தையுமே அவருக்கு எதிராக திருப்பிபுட்டியே..? இம்புட்டு சடைச்சுக்கிட்டு நீ இங்கண இருக்க வேணாம்த்தா!” கணவரைக் கேள்வி கேட்பதில் கோபம் கூடிப் போய் பேசினார் அங்கயற்கண்ணி.
“உசிரோட இருந்தவரை ஒரு நாள் கிழமைக்கு அனுப்பியிருப்பீகளா? செத்து மண்ணாய்ப் போன பிறகு, இவளுக்கு போக்கிடம் இல்லைன்னு தானே விரட்டுறீக? இனி நான் எங்க அப்பன் ஆத்தாளைப் பார்க்கணும் செத்து பொணமாத்தேன் சுடுகாட்டுக்குப் போகணும்! பேசாமல் என்னைக் கொன்னு போட்டுருக.. போய்த் தொலைஞ்சுறேன்!” தொண்டை அடைக்க அரசி பேச,
“ம்மா!” என அரற்றிய, அழகரையும் வீரபத்ரனையும் கண்டுக்கொள்ளாது, சொக்கேசனின் குரல் இடையிட்டு அரசியை நிறுத்தியது.
“போதும்! நீங்க என்ன வேணும்னாலும் பேசிக்கோங்க! யாருக்கு விருப்பம் இருக்கு இல்லைங்கிறது எனக்கு அவசியமில்லை. நான் முடிவெடுத்தது தான் நடக்கும். அழகர் கல்யாணம், நான் பார்க்கிற பொண்ணோட தான் நடக்கும். நான் வளர்த்த புள்ளை அழகரு, ஒருநாளும் அவன் என் பேச்சை மீறவே மாட்டான். இந்த ஐய்யன் பேச்சைக் கேட்டு அவன் நான் சொல்ற பொண்ணு கழுத்தில் தாலி கட்டறதை நீங்க எல்லாரும் பார்க்கத்தான் போறீக! என்ன அழகரு, நான் சொல்றது சரிதானே? உனக்கு உன் விருப்பம் முக்கியமா? இல்லை இந்த தாத்தனோட வார்த்தை முக்கியமா?” அழகரை ஆழமாய்த் துளைத்தது சொக்கேசனின் பார்வை.
தனக்குச் சாதகமாகத்தான் அவன் பதில் சொல்வான் என்ற நம்பிக்கை அவர் முகத்தில் மிளிர்ந்தது. இத்தனை நாளும் அவன் அப்படித்தானே இருந்திருக்கிறான், இனியும் தன் பேச்சை தட்ட மாட்டான் என்ற அதீத நம்பிக்கையோடு இருந்தார் அவர்.
ஆனால், அவருக்கு எந்த பதிலும் சொல்லாது அமைதியாய் நின்றான். அந்தச் சூழல் முழுதும், அவஸ்தையான நிசப்தம். ‘அழகர் என்ன சொல்லப் போகிறானே?’ என்றக் கேள்வியுடன் அனைவரின் பார்வையும் அழகரின் மீதே இருந்தது. அழகரோ உணர்ச்சிகளைத் துடைத்த முகத்துடன் அமைதியாய் நின்றான். அழகர் வாயைத் திறக்கும் வரை, நிமிடங்களாய் கடந்தன நொடிகள்.
‘இது உன் வாழ்க்கை அழகரு! அவசரப்பட்டு முடிவெடுத்துடாதே! விழியை யோசிச்சு பாரு! அவள் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா? நீ இல்லாமல் தான் அவளால் வாழ முடியுமா? உன் தலையில் நீயே மண்ணள்ளிப் போட்டுக்காதே!’ கண்களால் கேள்வி கேட்டபடி அரசியின் மனம் தவியாய் தவித்தது. தன் மகனின் வாழ்க்கை குறித்து துளியும் கவலையில்லாது அமைதியாய் நிற்கும் தன் கணவரைப் பார்த்துக் கோபமாய் வந்தது அரசிக்கு. ஆனால், அரசியின் தவிப்பும்,அலைப்புறுதலும் அழகருக்கு நன்றாகப் புரிந்தது.
நிதானமாய் யோசித்து, தன் மனதிற்குள் முடிவெடுத்தவனாய் நிமிர்ந்தான் துடிவேல் அழகர். அவனின் கண்கள் கருவிழியை அழுத்தமாய்ப் பார்த்தது.
“உங்கப் பேச்சை மீறி பேசுறேன்னு நினைச்சுடாதீங்கய்யா! இந்தக் கிறுக்கச்சியை ஏற்கனவே என் மனசில் பொண்டாட்டியா நினைச்சுட்டேன். இனி நான் செத்தாலும் இன்னொருத்திக்கு எம் மனசில் இடம் இல்லைங்கய்யா! ஜாதகப் பொருத்தம் இல்லைன்னா போகுது.. ஒருநாள் வாழ்ந்தாலும் அவளோட வாழ்ந்துட்டு செத்துப் போறேன்.!”
என அழகர் சொல்ல திடுக்கிடலுடன் நிமிர்ந்தார் சொக்கேசன். அவர் சத்தியமாய் இப்படியொரு பதிலை அவனிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. அவன் சொன்ன வார்த்தைகளிலேயே அவன் கொண்ட நேசத்தின் ஆழம் அவருக்குப் புரிந்தது.
அவள் மீதான நேசத்தின் அளவை எப்படிச் சொல்வதென அவனுக்குத் தெரியவில்லை. மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டான். நிஜமாகவே அவளில்லாமல், அவனால் ஒருநாளைக் கூடத் தாண்ட முடியாதென்பது தான், அவன் மனம் மறுக்க முடியா நிஜம்.
“அழகரு..!” அனைவரும் ஒருசேர குரலெழுப்ப, கருவிழியோ ஓடி வந்து மாமன் மகனின் மார்பில் தஞ்சம் புகுந்திருந்தாள். அவன் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்தில், கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது. வார்த்தைகளை உச்சரிக்க முடியாது தொண்டை அடைக்க, அழுகையை அடக்க முயன்றவளையும் மீறி கேவல் வெளிப்பட்டது.
“எப்போ பார்த்தாலும் இப்படியே தான் பேசுவியா? என்னோட வாழறதை விட சாகறது தான் உனக்கு பெருசா? இன்னொரு வட்டம் இப்படி பேசினே..” பேச முடியாமல் வார்த்தைகள் தடுமாற,
“செத்துருவேன்ங்கிற வார்த்தை உன் வாயில் வந்துச்சு.. அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன். பேசாமல், நீ சாகும் போது என்னையும் கூட்டிட்டுப் போயிரு அழகரு!” எனச் சொல்லிவிட்டு, இடம் பொருள், ஏவல் எல்லாம் மறந்து அவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள்.
கண்ணீர் அவன் மார்புச்சட்டையை நனைக்க, குடும்ப உறுப்பினராக இருந்தாலும் அத்தனை பேரின் மத்தியிலும் அவனிடம் உரிமையாய்க் கோபம் கொண்டு முகம் தூக்கினாள் கருவிழி. அவளின் கண்ணீர் கண்ணாடியாய் மாறி அழகரின் மீதான நேசத்தை அனைவருக்கும் பறைசாற்றியது.
“ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னோட வாழணும்ன்னு சொன்னேன்டி கிறுக்கி! உன்னைத் தவிர எவளோடையும் வாழ முடியாதுன்னுதேன் சொல்றேன்.” அட்டையாய் அவன் மார்பில் ஒட்டியிருந்தவளை இழுத்து விலக்கி நிறுத்தினான் அவன். தன்னோடு ஒட்டிக்கொண்டு நிற்பதில், லேசான நாணம் இழையோடியது அவன் முகத்தில்.
“சரியான கஞ்சன் அழகரு நீ..! ஏன் ஒரு இருநூறு வருஷம், அட்லீஸ்ட் நூறு வருஷம் வாழணும்ன்னு சொல்ல மாட்டியா? என்னை விட்டுப் போகணும்ன்னு நினைச்சே நானே உன்னைக் கொன்னுடுவேன்.!” விரல் நீட்டி அவனை மிரட்டியவள், நேராய் சொக்கேசனிடம் திரும்பினாள்.
“நாங்க சந்தோஷமா இருக்கணும்ன்னு தானே ஆசைப்படுவீங்க தாத்தா! நான் இதுவரை உங்கக் கிட்டே எதுவுமே கேட்டதில்லை.. முதல் முறையாய் கேட்கிறேன்.. என் அழகரை என்கிட்டேயே கொடுத்துடுங்க ப்ளீஸ்..! அழகரு எனக்கு மட்டுந்தேன். அழகர் என்னை உங்களுக்காக விட்டுக் கொடுத்தாலும், நான் யாருக்காகவும் அழகரை விட்டுக் கொடுக்க மாட்டேன். எங்களை வாழ விடுங்க தாத்தா ப்ளீஸ்..!”
கெஞ்சலாய் அவள் கேட்டதில் சொக்கேசனின் உறுதி கொஞ்சம் கொஞ்சமாய் உடையத் துவங்கியது.
மனம் அழகரையும் விழியையும் நினைத்து பதைபதைக்க, விழியின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமலே எதிலிருந்தோ தப்பித்து ஓடுவதைப் போல் அறைக்குள் நுழைந்துக் கொண்டார் சொக்கேசன். அவர் முகம் வேதனையில் கசங்கிப் போனது.
அறைக்கதவை அவர் அறைந்து சாற்றிய சத்தத்தில் அந்த வீடு மொத்தமும் அதிர்ந்து ஆட்டம் கண்டது.
*********
கதவைச் சாற்றிவிட்டு அறைக்குள் வந்தவரின் இதயம் படபடப்பை உணர்ந்தது. நடை தளர்ந்தது. இனி என்ன நடக்குமோ? என்ற பயம் அவருக்குள் படர்ந்துப் பரவியது. தொய்ந்து போய் ஒருவித கையாலாகாதனத்துடன் சாய்வு நாற்காலியில் தொப்பென அமர்ந்தார்.
இது நடக்கக் கூடாதென்பதற்காகத்தானே அவர் இப்படியொரு முடிவை எடுத்தார். ஆனால், அவர் என்ன முயற்சி செய்தும், அவரால் எதையும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே வேதனையாய் இருந்தது. என்னதான் முயற்சி செய்தாலும் விதி வலியது தானே? விதியின் விளையாட்டில் நாம் அனைவரும் கைப்பாவைகள் தானே? அவர் செய்த வினை அவரை மட்டுமின்றி அவர் நேசிப்பவர்களையும் சுட்டுப் பொசுக்கக் காத்திருந்தது.
“நான் செஞ்ச பாவத்துக்கு நீங்க என்னத்துக்கு தண்டனையை அனுபவிக்கணும்? இந்த வீட்டில் உள்ள ஒவ்வொருத்தரும் எனக்கு முக்கியம்! என் உசிரைக் கொடுத்தாச்சும் உன்னைக் காப்பாத்தணும்ன்னு தான் இப்படியொரு முடிவை எடுத்தேன். ஆனால் நான் ஒண்ணும் கடவுள் இல்லையே? இம்புட்டு நேசத்தோடு திரியறவங்களைப் பிரிச்சு வைக்கிற உரிமை எனக்கு இல்லை! பிரிச்சு வைக்க தைரியமும் இல்லை! என்ன நடக்குதோ நடக்கட்டும்! ஆத்தா மீனாட்சி நான் செஞ்சது தப்புத்தேன்.! என் உசுரை எடுத்துக்கோ! என் உசிரானவங்களை காப்பாத்து ஆத்தா!” அண்ணாந்து பார்த்து வேண்டிக் கொண்டார் சொக்கேசன். தன் உயிரையே பணயமாக வைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவும் இல்லை.
‘என்ன சொக்கேசா! ஓஞ்சு போய் உட்கார்ந்துட்டியா? உன்னால் முடியாது..! உன்னால் முடியவே முடியாது. விதியை மாத்த யாரால் முடியும்.? நீ செஞ்ச பாவத்துக்கான தண்டனையை நீ அனுபவிச்சு தானே ஆகணும்! காலம் கொடுக்க வேண்டியதை சரியான நேரம் பார்த்துக் கொடுத்தே தீரும்! மனுஷங்களை ஏமாத்திடலாம்! கடவுளையும் காலத்தையும் ஏமாற்ற முடியாதே! நீ ஏமாற்ற முயற்சி பண்ணினால் நிச்சயம் அது உன்னை நோக்கித்தான் திரும்பும். மனுஷ வாழ்க்கையே பாவம் நிறைஞ்சது தான். பண்ணின பாவத்திற்கான பலனை அனுபவிச்சு தான் தீர்க்கணும்! கடைசி வரை தீராத வேதனையோடும் குற்றவுணர்ச்சியோடும் வாழணும்ங்கிறது தான் உன்னோட விதி! மாத்த முயற்சி பண்ணாதே சொக்கேசா!’ மீண்டும் மீண்டும் அசரீரியாய் மனதிற்குள் குரல் கேட்டது அவருக்கு.
‘வேணாம்! பேசாதே! நான் செஞ்சது தப்புத்தேன். வேணாம்!’ தன்னையும் மீறி சத்தமாய் குரலெழுப்பிய அவருக்கு, தன் செவிக்குள் கேட்பது தன் மனசாட்சியின் குரலென்பது தெரியவே இல்லை.
மீண்டும் மீண்டும் மனதிற்குள் கேட்ட குரலில் ஓய்ந்து போய் மூச்சு விடவும் சிரமப்பட்டார் சொக்கேசன். திரும்பத் திரும்ப அந்தக் குரல் கேட்க காதுகளை இறுகப் பொத்திக் கொண்டார் அவர். மூடிய செவிகளுக்குள்ளும் அந்தக் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறை அவர் செவிக்குள் அந்தக் குரல் கேட்கும் போதெல்லாம், செத்து செத்துப் பிழைப்பதாய் உணர்ந்தார் சொக்கேசன்.
அதே நேரம், அவரை இன்னும் கொஞ்சம் அதிகமாய் சோதிக்க காலமும் முடிவு செய்யததோ என்னவோ, மின்விசிறியின் காற்றிலாடி புத்தக அலமாரியின் இடுக்கிலிருந்து எதேச்சையாய் விழுவதைப் போல், அவர் காலடியில் வந்து விழுந்தது அந்தப் புகைப்படம்.
தரையை நோக்கிக் கவிழ்ந்துக் கிடந்து அந்தப் புகைப்படத்தை கைநடுங்க எடுத்தார் சொக்கேசன். கரம் தீண்டிய மாத்திரத்திலேயே அது என்னப் புகைப்படம் என்பது திருப்பிப் பார்க்காமலே தெரிந்தது அவருக்கு.
கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் கள்ளமில்லா சிரிப்புடன் நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும், சொக்கேசனின் இடக்கண்ணிலிருந்து ஒற்றை துளி கண்ணீர் சரசரவென வழிய, தோல் சுருங்கிய கன்னம் தொட்டு வழிந்தக் கண்ணீர் துளியைப் பொருட்படுத்தாது, அவர் வறண்ட உதடுகள் மென்மையாய், அதோடு இரகசியமாய் உச்சரித்தது அந்தப் பெயரை..
“இரஞ்சிதம்..!”
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


யார் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் தன் பேரன் தன் பேச்சை தட்ட மாட்டான் என்ற அதீத நம்பிக்கை சொக்கேசனுக்கு.
ஆனால் அழகர் அவரைப்பற்றி மட்டும் அல்லாது குடும்ப கவுரவம், மரியாதை என்று எதனையும் கருத்தில் கொள்ளாது, அவளது சிறுபிள்ளைத்தனமான ஆசையை அதிலும் அது தன் மனதை அறுக்கும் என்று தெரிந்ததே செய்ய துணிந்தவன் ஆயிற்றே.
இருவரது ஆழமான நேசமும் குடும்பத்தினர் முன்னிலையில் பட்டவர்த்தனம் ஆகிற்று.
காலம் அதன் கணக்குகளை சரியாக தீர்த்துக்கொள்ளும்.
🏃🏼♀️யார் இந்த ரஞ்சிதமே!