Loading

அகம்-27

கருவிழியின் கரத்தை உதறிவிட்டு, கற்பாறையாய் இறுகிய உணர்ச்சித் துடைத்த முகத்துடன் நகர்ந்த அழகரை தடுத்து நிறுத்தியது அரசியின் குரல்.

 

“கொஞ்சம் நில்லு அழகரு! பேசித் தீர்க்க வேண்டியது இருக்கு!” என்றவர் சொக்கேசனைத் தீர்க்கமாய்ப் பார்த்தார்.

 

“வயசில் பெரியவங்க.. இந்தக் குடும்பத்தோட தலைவருன்னு தான் நீங்க என்ன சொன்னாலும் எதிர்த்து ஒத்தை வார்த்தை பேசாமல் சரின்னு கேட்டுக்கிட்டோம்! அதுக்காக நீங்க கெட்டது செய்தீகன்னு நான் சொல்லலை! நான் வாழ வந்து இத்தனை வருஷத்தில் உங்க பேச்சை மீறி நான் நடந்தது இல்லை. ஆனால் இது என் புள்ளை வாழ்க்கை! என் புள்ளை வாழ்க்கை எப்படியோ போகட்டும்ன்னு என்னால் விட முடியாது. கல்யாணம் வரை போனவங்களை பிரிச்சு வைக்கிறது எந்த விதத்தில் நியாயம்ங்கிறேன்? இல்லை என் புள்ளை உங்கக் கண்ணுக்கு இளிச்சவாயனாய் தெரியுறானா? உசுரோட என் புள்ளையைக் கொல்லணும்ன்னு முடிவு செஞ்சுட்டீகளா? இப்போவும் என் புள்ளை நீங்க சொன்னீங்கன்னு வேற ஒருத்தி கழுத்தில் தாலி கட்டுவான் தான். ஆனால் சந்தோஷமா இருப்பானா? மனசு பொருந்திப் போன பின்னாடி ஜாதகம் என்னத்துக்கு பார்க்கணும்ங்கேறேன்? என்னை விட, என் புள்ளை மனசு உங்களுக்குத் தெரியும். அவன் மனசு அறிஞ்சும் நீங்க செய்றது துரோகம் இல்லையா? நான் உங்களை விட வயசில் சின்னவ தான்.. ஆனால் பெத்த தாயா, என் புள்ளையோட ஆசையை நிறைவேத்தற கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கு!” முகம் செக்கச் செவேலென சிவந்து கிடக்க கோபமும் ஆற்றாமையுமாய் பேசினார் அரசி. 

 

 

‘அரசிக்கு பேசவும் தெரியுமா?’ என மொத்தக் குடும்பமும் வியப்பாய் பார்த்தது.

 

“அரசி..!” கதிர்வேலின் குரல் இடையிட்டு அரசியை நிறுத்த முயன்றது.

“நீங்க பேசாதீக! அழகரு உங்களுக்கும் புள்ளை தானே? அவன் மனசைக் கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தீகளா? உங்க அப்பாரு என்ன சொன்னாலும் என் புள்ளை செஞ்சிடணுமா? அவனுக்குன்னு மனசு, விருப்பம், ஆசையெல்லாம் இருக்கக் கூடாதா என்ன? என் புள்ளையை இந்தக் குடும்பத்துக்குன்னு நேர்ந்து விட்டுட்டீங்களா? நீங்க வேணும்னா உங்களைப் பெத்தவர் பேச்சு தான் பெருசுன்னு கல்லு மாதிரி நிக்கலாம். என்னால் முடியாது! கல்யாணமாகிட்டு வந்ததில் இருந்து இந்தக் குடும்பத்துக்காக எவ்வளவோ பொறுத்து அனுசரிச்சு போய்ட்டேன். என் புள்ளைங்க விஷயத்தில் என்னால் அப்படி இருக்க முடியாது. விழியும், அழகரும் விரும்பறாங்கன்னு தெரிஞ்சே அவங்களைப் பிரிச்சு வைக்க நான் சம்மதிக்க மாட்டேன். இதில் யார் அனுமதியும் எனக்குத் தேவையில்லை! என் புள்ளை சந்தோஷம்தேன் எனக்கு பெருசு. நானே மீனாட்சியம்மன் கோயிலுக்குக் கூட்டிப் போய் கல்யாணம் பண்ணி வச்சிப்புடுவேன் சொல்லிப்புட்டேன்.!” தழுதழுத்து வெளிவர முயன்ற குரலையும், இமை தாண்டி விழத் துடித்தக் கண்ணீரையும் முயன்று கட்டுப்படுத்தியபடி பேசினார் அரசி.

 

“அரசி! உங்க மாமன் என்ன செஞ்சாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அதுவுமே அழகர் விஷயத்தில் அவர் தப்பான முடிவு எடுப்பாருன்னு நீ நினைக்கிறியா?” உண்மை நிலை என்னவென அறிந்தவராய் பேசினார் அங்கயற்கண்ணி.

 

“நல்லதாவே இருக்கட்டும்த்த! ஆனால், என் புள்ளைக்குப் பிடிச்சதா இருக்கணும்ன்னு நான் நினைக்கிறது தப்பா? விழி முகத்தைப் பாருங்க! எப்படி உடைஞ்சு போய் நிக்கிறாள்ன்னு பாருங்க! இவளைக் கட்டாயப்படுத்தி இன்னொருத்தனுக்கு கட்ட முடியும்ன்னு நினைக்கிறீங்களா? நெடுமாறனோட கல்யாணம் பேசின அன்றைக்கு இராத்திரியே, தன் உசிரையே விடத் துணிஞ்சாளே.. உங்க யாருக்காச்சும் தெரியுமா? அழகரு அன்றைக்கு இராத்திரி கையில் கட்டோடு அவளைக் கூட்டி வந்ததை நான் பார்த்தேன். இதுவரை மூச்சு விட்டுருப்பேனா? தான் உசுரையே விடத் துணிஞ்சாளேன்னு தான் என் புள்ளை மறுநாளே அவளைக் கல்யாணம் பண்ணிக்கத் துணிஞ்சான்.!” எனச் சொல்லிவிட்டு அரசி அழகரைப் பார்க்க அதிர்வுடன் அன்னையைப் பார்த்திருந்தான் துடிவேல் அழகர்.

 

அரசி பட்டென சபையில் போட்டு உடைத்தது அனைவருக்குமே புது செய்தி. யார் கண்ணிலும் விழவில்லை என அழகர் நினைத்திருக்க, அரசி பார்த்திருப்பார் என அவன் எதிர்பார்க்கவே இல்லை.

 

“ஏய்! என்னத்துக்குடி கல்லு மாதிரி நிக்கிறே? அரசி சொல்றது நெசந்தானா.? கேட்கிறேனே, சொல்லு டி!”
அதிர்வுடன் மகளை உலுக்கினார் தங்க மீனாட்சி.

 

இத்தனை நேரமும், தன் தகப்பன் எது செய்தாலும் சரி என நினைத்திருந்தவருக்கு, முதன் முதலாய் மகளின் மனம் புரிவது போல் தோன்றியது. அவர் மகள் விஷயத்தில் முழுதுமாய் விலகி நிற்பதற்கு தான் பட்ட அனுபவங்களே காரணம். தான் எடுத்த முடிவு தான் தன்னந்தனியாய் வயிற்றுப் பிள்ளையோடு நிறுத்தியது. அதே போல் தன் முடிவால் மகளின் வாழ்வில் எதுவும் நேர்ந்துவிடக் கூடாதென்ற பயமே, அவரை எந்த முடிவும் எடுக்க விடாது பெற்ற மளிடமிருந்தே தள்ளி நிறுத்தியிருந்தது.

 

தங்க மீனாட்சி கேட்டு சில நிமிடங்கள் கடந்தப் பின்பும் கூட, பதிலேதும் சொல்லாமல் அசையாமல் நின்றாள் கருவிழி.

 

‘என்னவென்று சொல்வாள்? நான் தற்கொலைக்கு முயன்றது அழகருக்காக அல்ல.. ரோஹனுக்காக என்று அவளால் சொல்லிவிடத்தான் முடியுமா?’ கண்கள் நீர் கோர்த்து நின்றது கருவிழிக்கு. எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்யத் துணிந்திருக்கிறாள் என்பது வெகு தாமதமாய் உரைத்தது. துளி கூட தகுதியே இல்லாத ஒருவனுக்காக உயிரை விடத் துணிந்ததை நினைத்தாலே அவளுக்கு அசிங்கமாக இருந்தது.

 

‘தேனொழுகப் பேசும் பேச்சுகளின் பின்னாலும், அக்கறையின் பின்னாலும் பாம்பின் விஷமும் ஒளிந்திருக்கலாம். நாகத்தின் நாக்கைப் போல் பிளவுபட்ட நாக்கை மறைத்து வைத்திருக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையான அன்பும், நேசமும் கிடைப்பதற்கரிய வரம். முன் பின் தெரியாத முகங்களிடமிருந்து உண்மையான அன்பையும், நேசத்தையும் எதிர்பார்ப்பது முள்ட்டாள்தனம்’ என்பது மெல்ல விளங்கியது கருவிழிக்கு.

 

தாயின் கேள்விக்கு பதில் சொல்லாது நின்றிருந்தவளின் கண்கள் அழகரைத்தான் பார்த்தது.
அவனும் அவள் பார்வையை உணர்ந்தானோ என்னவோ, அவளைத்தான் விழியகலாது பார்த்திருந்தான்.

 

“கேட்டுக்கிட்டே இருக்கேன்.. வாயைத் திறந்து பேசுடி! எதையாச்சும் சொல்லித் தொலைச்சால் தானே தெரியும்! மரம் மாதிரி நின்னுக்கிட்டே இருக்கிறவ?” கோபத்தில் மகளை அடிப்பதற்காய் மீனாட்சி கரத்தை ஓங்க,

 

“அத்தே! அம்மா சொன்னது அம்புட்டும் நெசந்தேன்.! அதுக்காக அவள் மேலே கை நீட்டுற வேலையெல்லாம் வேண்டாம். அவ ஒண்ணும் கொலைக் குத்தம் பண்ணிடலையே? அவளுக்கும் இருபத்தியோரு வயசு முடியப் போகுது. இதுவரை தான் நினைச்சதை அவள் உங்கக்கிட்டே பேசியிருக்காளா? பேசுறதுக்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கீங்களா? ஒருவேளை நீங்க அந்த வாய்ப்பைக் கொடுத்திருந்தீகன்னா அவள் உங்கக் கிட்டே சொல்லியிருக்கலாம். தப்பையெல்லாம் நீங்க பண்ணிட்டு அவளை கைநீட்டுறது எந்த விதத்தில் நியாயம்?” என அழகர் கேட்ட கேள்வி சுருக்கென தைத்தது தங்க மீனாட்சியை.

 

“நீ சொல்றதும் உண்மைதேன் அழகரு! என் புள்ளைக்கு ஒருநாளும் தாயாய் நடந்துக்கிட்டது இல்லை. மாற்றாந்தாய் மாதிரிதேன் நடந்துக்கிட்டேன். என் மவளோட மனசை நான் கூடப் புரிஞ்சுக்கலை. ஆனால் உனக்கு அவளைத் தெரியும் தானே? என்னை விட நல்லாத் தெரியும் தானே? நீ ஏன் அழகரு அவளை விட்டு விலகி நிக்கிறே? உன் தாத்தனோட ஒத்தை சொல்லுக்காகவா?” என மீனாட்சி பதில் கேள்வி கேட்க, பதில் சொல்லாது அமைதியாய் நின்றான் துடிவேல் அழகர்.

 

“இம்புட்டு நேரமா மூடின வாயைத் திறக்காதவன்.. கருவிழிக்காக பேசுறதிலேயே புரியலையா? அவன் மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு?  இந்தாருங்க மாமா! நீங்க என்னமோ முடிவு பண்ணிட்டு போங்க! எம் மயன் விழியைத்தேன் கட்டுவான். உங்க பேச்சை மீறீ பேசிப்புட்டேன்னு நினைக்காதீக மாமா! வேற யாரோடவும் என் புள்ளை சந்தோஷமா இருக்க மாட்டான்! இன்னொரு பொண்ணோட வாழ்க்கையிலும் விளையாடணும்ன்னு நினைக்கிறீகளா? இல்லை விலக்கி வச்சு அவங்க வேதனைப் படுறதைப் பார்க்கணும்ன்னு நினைக்கிறீகளா? இந்த வீட்டு மருமகளா இந்த நாள் வரைக்கும் நான் எதுவும் உங்கக் கிட்டே கேட்டதே இல்லை. முதல் தடவை கேட்கிறேன், என் மயனை அவன் ஆசைப்படி வாழ விடுங்க!” கண்ணீர் வழிய கைக்கூப்பி நின்றுவிட்டார் அரசி.

 

“ம்மா! என்ன பண்ணுறீங்க.? கையை இறக்குங்க!” தாயின் அருகில் வந்து ஆதரவாய் தாங்கினான் அழகர்.

 

“அழகரு! விழியை விட்டுப்புடாதய்யா! அவ முகத்தைப் பாருய்யா! உன்னைத் தவிர வேற யாரையும் அவ கண்ணு பார்க்கவே மாட்டேங்குது. இம்புட்டு நேசத்தை நெஞ்சு மத்தியில் வச்சிட்டு நிக்கிறவளை, கைவிடறது பாவம்ய்யா! நம்ம பரம்பரையே விளங்காம போயிரும்.!” அழகரிடமும் விழிக்காகவே பேசினார் அரசி.

 

“பொறுமையாய் இருங்கம்மா! பேசி முடிவு பண்ணுவோம்!” என்றவனின் கண்கள் தீர்க்கமாய் சொக்கேசனைத்தான் வெறித்தது.

 

“எனக்கும் அரசி சொல்றதுதேன் சரின்னு படுது. அழகருக்கும் விழிக்கும் விருப்பம் இல்லைன்னா பரவாயில்லை. அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கும் போது என்னத்துக்கு வெளியில் தேடணும்? ஜாதகத்தை மட்டும் காரணமா வச்சு அவங்களைப் பிரிக்கிறது சரியா படலை. நேசிக்கிற புள்ளைகளை சேர்த்து வைக்குறதேன் நியாயம்.!” அரசிக்குப் பரிந்து பேசினார் பூங்கொடி.

 

“பொம்பளைங்க முடிவு பண்ணினால் போதுமா? குடும்பத்தில் பெரியவருன்னு எங்கப்பா இருக்கும் போதே, உங்க இஷ்டத்துக்குப் பேசுறீக? அவர் எடுக்கிறதுதேன் முடிவு. கல்யாணம்ங்கிறது சின்ன விஷயம் இல்லை.. ஆளாளுக்கு முடிவெடுக்க! யாருக்கு எது நல்லதுன்னு எங்க அப்பாவுக்குத் தெரியும்.!” இதுவரை நிமிர்ந்து நின்று பதில் கூடப் பேசத் தயங்குபவர்கள், எதிர்த்து பேசுகிறார்களே, என்ற கோபத்தில் கத்தினார் சரவணன்.

 

“மச்சினரே..! பொம்பளைங்கன்னு சாதாரணமா சொல்லிடாதீங்க! அந்தப் பொம்பளை மட்டும் மனசு வைக்கலைன்னா இந்த பூமிக்கு வந்திருக்கவே மாட்டீக! நீங்க கேட்கலாம் ஆம்பிள்ளை இல்லாமல் புள்ளை பெத்துட முடியுமான்னு? இப்போ இருக்கிற காலத்தில் அதுவுமே சாத்தியம்தேன்..! ஆனால்.. புள்ளையைக் கொடுத்ததோட உங்கக் கடமை முடிஞ்சு போச்சுங்களே.. பத்து மாசம் சுமந்து பெத்தது நாங்க தானே? உங்களை விட, எங்கப் புள்ளைங்க மனசு எங்களுக்குத்தேன் நல்லா தெரியும்ங்கிறேன். மத்தபடி நான் யாரும் உயர்வு தாழ்வுன்னு பேசலை. ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருத்தரும் உயர்வுதேன்.!” பதிலடி கொடுப்பது போல் பேசினார் அரசி.

 

“அரசி! அவரு எனக்கு மூத்தவரு! கொஞ்சமாவது நினைப்பில் இருக்கட்டும்! நீ பேசுற பேச்சு ஒண்ணும் சரியில்லை சொல்லிப்புட்டேன்!” உக்கிரமாய் வெளிவந்தது வெற்றிவேலின் குரல்.

 

“நான் ஒண்ணும் தப்பா பேசிடலியேங்க! புள்ளைங்களை பெத்த அப்பனா நீங்க பேச மாட்டீங்க! நானும் பேசக் கூடாதுன்னா என்ன அர்த்தம்? உங்களைப் பொருத்தவரை, உங்களைப் பெத்தவர் பேச்சு உங்களுக்கு பெருசா இருக்கலாம்! எனக்கு என் மயன் வாழ்க்கை தான் பெருசு!” அவ்வளவு தான் என்பது போல் முடித்துவிட்டார் அரசி.

 

“தாத்தா! நான் இடையில் பேசறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க! சித்தி சொல்றது சரி தான். அழகருக்கும் விழிக்கும் உள்ள பிடித்தம் தான் வீட்டில் எல்லாருக்கும் தெரியுமே? தெரிஞ்சிருந்தும் என் இப்படியொரு முடிவு எடுக்கணும்? இந்தக் காலத்திலுமா, ஜாதகம் அது இதுன்னு நம்பிக்கிட்டு இருக்கீங்க? ஜாதகப் பொருத்தத்தை விட, மனப் பொருத்தம் தானே முக்கியம்? விழிக்கும் அழகருக்கும் நீங்க கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா நானும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.!” உடன் பிறவா சகோதரனுக்குப் பரிந்து வந்தான் நெடுமாறன்.

 

“ஆமா தாத்தா! நானும் மைடப்பி தான் என் அண்ணின்னு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். புதுசா ஒரு மூஞ்சியெல்லாம் ஃபிக்ஸ் பண்ண முடியாது. நான் என் அண்ணணுக்காக பேசலை. மைடப்பிக்காக தான் பேசுறேன். நான் சொல்றதில் தப்பு தவறு எதாவது இருந்தால் மன்னிச்சுடுங்க!”என வீரபத்ரன் சொல்ல, நெகிழ்வுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள் கருவிழி.

 

“ம்ப்ச்! இந்தாரு மைடப்பி! உனக்கு சப்போர்ட் பண்ணினேன்னு காலில் எதுவும் விழுந்துடாதே! நான் உன்னை விட ரெண்டு மாசம் சின்னப் பையன்தான்.! நோ..! டோன்ட் க்ரை..! டேப்பை (Tap) க்ளோஸ் பண்ணு மைடப்பி! சும்மாவே பார்க்க சகிக்காது. நீ அழுதால் கண்ணராவியா இருக்கு!”

 

“போடா லூசு பயலே..!” மெல்லிய புன்னகையுடன் அவள் சொல்ல, அந்த இக்கட்டான இறுக்கமான சூழ்நிலையிலும் அவளை சிரிக்க வைத்திருந்தான் வீரபத்ரன்.

 

“நான் இந்தக் குடும்பத்தில் பிறந்தவன் இல்லை தான். ஆனால் இப்போ, இந்த நிமிஷம் வரை, என்னை உங்கக் குடும்பத்தில் ஒருத்தனாகத்தேன் பார்க்குறீகன்னு எனக்குத் தெரியும். அந்த உரிமையில் தான் சொல்றேன்.. தங்கச்சி இல்லாமல், அழகர் வாழ்க்கையில் சந்தோஷத்துக்கு இடம் இல்லை! கடைசி வரை கட்ட பிரம்மச்சாரியா தனிமரமா நிற்பானே ஒழிய, இன்னொரு பொண்ணு கழுத்தில் தாலி கட்ட மாட்டான். என் நண்பனோட மனசை அறிஞ்சவனா சொல்றேன். பிறகு உங்க விருப்பமுங்க சாமி!” தன் பங்கிற்கு சொன்னான் காத்தவராயன்.

 

அழகரின் நிலை குறித்து அவனுக்கு ரொம்பவே வேதனையாய் இருந்தது. காலையில் தான் விழி ரோஹனை விட்டு விலகியதைப் பற்றியும், அவள் மனம் பற்றிம் சொல்லியிருந்தான். அவனின் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் ஒருநாள் கூட நிலைக்கவில்லையே? என வேதனையாக இருந்தது அவனுக்கு.

 

“ஆகமொத்தம் அம்புட்டு பேரும் எனக்கு எதிராகத்தான் நிக்கிறீக.. நான் பெத்த கடனுக்கு என் மயனுங்க ரெண்டு பேரும்தேன் என் பக்கம் நிக்கிறாங்க! இப்போ எடுக்கிற இந்த முடிவு மட்டும் தானா? இல்லை இதுக்கு முன்னே எடுத்த முடிவுகளும் பிடிக்கலையா?” சொக்கேசனின் கரகரப்பான குரல் கூடத்தை நிறைத்தது.

 

“அப்படி இல்லைங்க மாமா! நம்ம எடுக்கிற முடிவை விட, பிள்ளைங்க விருப்பம் பெருசு இல்லையா? வாழப் போறவங்க அவங்கதேன். வயசு வந்தப் பிள்ளைகளை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்த முடியாதுங்க மாமா! சட்டம் கூட அவங்களுக்குதேன் சாதகமா இருக்கு.!” இப்போது மட்டும் விட்டுவிட்டால், அழகரின் வாழ்க்கையும் விழியின் வாழ்க்கையும் சின்னாபின்னமாகிவிடும் என உணர்ந்தவராய் தைரியமும் நிமிர்வுமாய் பேசினார் அரசி.

 

“ஓஹோ..! சட்டம் பேசுறீகளாக்கும்? இத்தனை காலமும் வளைஞ்சிருந்த முதுகெலும்பு புள்ளைக்காக பேசும்போது மட்டும் நிமிர்ந்திருச்சோ? காலம் போகப் போக கரையானுக்கும் கொடுக்கு முளைக்கிது! எனக்கும் இந்தக் குடும்பத்து மேலே அக்கறை இருக்கு மருமவளே..! உம் மயனுக்கு ஒருநாளும் கெட்டது நினைக்க மாட்டேன்.” நக்கலாய் பேசினார் சொக்கேசன்.

 

“சட்டம் எனக்காக பேசலீங்க மாமா! பெத்தவளா என் புள்ளைக்காகவாவது பேசித்தானே ஆகணும்? முதுகெலும்பு வளைஞ்சு போய் பேசாமல் நிற்கலிங்க மாமா! நாங்க பேசாமல் இருக்கிறதால் தான் நீங்க கௌரவமா நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நிக்கிறீக! இப்போவும் நான் உங்களைத் தப்பு சொல்லலீங்க! நானும் பூங்கொடி அக்காவும் இதுவரை எதுவுமே பேசினது இல்லை. பேசுறதுக்கு வாய்ப்பு யாரும் கொடுக்கலை. எடுத்த முடிவில் விருப்பமா இல்லையான்னு யாரும் கேட்டது இல்லை. வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தா செத்துடலாம்ன்னு நான் இருந்துருவேனுங்க மாமா! ஆனால் எங்கப் புள்ளைகளுக்கும் இதே நிலைமைன்னா பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியலைங்க!”

 

இதுவரை வாயே திறந்து பேசியிராத அரசி பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியே! பெற்ற தாயாய் தன் மகனின் வாழ்க்கை மற்றவர்களால் கேள்விக்குறியாவதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. வருவது வரட்டும் என மனதிலிருப்பதை ஒட்டுமொத்தமாய் கொட்டிவிட்டார். அவர் மனதில் இருந்தது எல்லாம் அழகரின் வாழ்க்கைக் குறித்த கவலை மட்டுமே.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இத்தனை நாட்களில் தனக்காக கூட யோசித்து பேசியிராதவர் மகனின் நல்வாழ்க்கை என்றதும் பொங்கிவிட்டார்.

    மகனுக்கு நல்லதாகவே இருக்கட்டும் ஆனால் நிம்மதி சந்தோசம் தருவதாக இருக்குமா? என்ற எண்ணம் அரசிக்கு.

    விழி பாவம் தகுதி இல்லா ஒருவனுக்காக உயிரை விட துணிந்ததை எண்ணி வருந்துகிறாள்.

    உடன்பிறவா தம்பிக்கு நல்வாழ்வு அமையவில்லை என்றால் எனக்கும் எதுவும் வேண்டாம் என்றுவிட்டான் நெடு.

    மை டப்பிய அண்ணினு fix பண்ணிட்டேன் வேற மூஞ்சிய மாத்த முடியாதுனு கலகலப்பா சொல்லிட்டான் வீரு.

    சகோதரர்கள் அன்பு அழகு 😍.

    கால்ல எல்லாம் விழுக வேணாம் 🤣🤣 என்ன மாதிரி scene போயிட்டு இருக்கு பத்துக்கு நகைச்சுவை கேட்குது.