
அகம்-26

“ஏனுங்கத்தே! நேத்து ஜாதகம் பார்க்கன்னு போனீக பொறவு ஒண்ணுமே சொல்லலியே? எதுவும் இடக்கு மடக்கா சொல்லிப்புட்டாரா? நீங்களும் மாமாவும் சத்தங்காட்டாமல் இருக்கியளே..?” தேங்காய் துருவிக் கொண்டிருந்த அங்கயற்கண்ணியிடம் வினவினார் அரசி.
“ம்க்கும்! நம்ம கிட்டே என்னத்துக்குச் சொல்லப் போறாக? சொல்லக் கூடிய விஷயமா இருந்தால் சொல்லிருப்பாகளா இருக்கும்! மாமாவும், அத்தையும் இரகசியமா வச்சிருக்காக! எனக்குத் தெரிஞ்சு, எனக்கு வாக்கப்பட்டவரு, உன் புருஷன் கதிரு, நெடுமாறன், அழகரு எல்லாரும் வந்ததும் கூட்டத்தைக் கூட்டுவாருன்னு நினைக்கிறேன் அரசி!” பக்கத்தில் அமர்ந்தபடியே பேசினார் பூங்கொடி.
“இப்போ என்னத்துக்குடி ரெண்டு பேரும் சேர்ந்து என்னைப் பிச்சு திங்கிறீங்க? உங்க மாமன் வருவாரு. அவர்க்கிட்டே இதே போல நீட்டி, முழக்கி கேட்பீகளா? அவரைப் பார்த்தாலே காத தூரம் ஓடுறீங்க! என்கிட்ட மட்டும்தேன் எகனைக்கு மொகனையா நூநாயம் (நூல் நியாயம்) பேசுவீங்க டி!” சடைத்துக் கொண்டார் அங்கயற்கண்ணி.
“சங்கதி என்னன்னு சொல்லிப்புட்டா நாங்க என்னத்துக்குக் கேட்கப் போறோம்?” எனக் கேட்ட அரசி வாய்க்குள் சிரித்துக் கொண்டார்.
“என்னங்கடி என்னைப் பார்த்தால் எகத்தாளமா கிடக்கா? இந்தா தேங்காயைத் துருவிட்டேன். எடுத்துட்டு அங்கிட்டு போங்கடி! எல்லாரும் சாப்பிட வந்துருவாக, போய் சமையலைப் பாருங்க!” மருமக்கள் இருவரையும் விரட்டினார் அங்கயற்கண்ணி.
“அங்கணதேன் கயலு இருக்காளே! கூட மாட உதவறதுக்கு தானே அவளைக் கூட்டியாந்தீங்க! இப்போ என்னத்துக்கு எங்களை விரட்டுறீங்க?!” பூங்கொடி கேட்கவும்,
“என் கிரகம்டி! உங்கக் கிட்டே வந்து மாட்டிக்கிட்டு படாதபாடு படுறேன். இப்போ என்னத்துக்குடி வாயைப் புடுங்குறீங்க? எல்லார் சாதகமும் சாதகமாத்தேன் இருக்கு. விசனப்படாமல் சோலியைப் பாருங்க! புள்ளைங்க சாப்பிட வந்துரும். உப்பு, காரம் பார்த்து பதமா போடுங்க டி! உங்க மாமனுக்கு பிரஷர் தலைக்கு ஏறிப் போய் கிடக்கு!” எனச் சொன்னவர் எழுந்து சென்றுவிட்டார். நேற்று ஜோதிடர் சொன்னதை நினைத்து மனம் படபடவென அடித்துக் கொண்டது அவருக்கு. என்னதான் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாலும், அவர் முகம் காட்டிக் கொடுத்துவிடுமோ? என்ற பயத்துடனே எழுந்து வந்துவிட்டார்.
“ஆத்தா மீனாட்சி! நல்லவழி காட்டுத்தா! உன் பிள்ளைகளுக்கு நீ தானே வழிகாட்டணும்!” என வேண்டுதல் வைத்தார். அதைத் தவிர அவருக்கும் வேறு வழி இல்லையே..
மதிய உணவு நேரம் முடிந்து அனைவரும் ஓய்வாய் அமர்ந்திருக்க, அனைவரையும் பார்த்தபடியே ஒரு தொண்டைச் செருமலோடு கூடத்தில் வந்து நின்றார் சொக்கேசன்.
“ஆத்தி! இந்தா வந்துட்டாருல்ல ஹிட்லர்! மாசத்துக்கு ஒரு கூட்டத்தைக் கூட்டாட்டி இவருக்கு தூக்கமே வராது. சட்டசபையில் பேசுற மாதிரி பேசுவாரு! அழகரு, ஏன் காலேஜுக்கு போகலைன்னு திட்டுவாரோ? அதுக்குத்தான் கூட்டத்தைக் கூட்டியிருக்காரோ?”
“வாயை மூடிக்கிட்டு இரேன்டி! காய்ச்சல்ன்னு போகலைன்னு சொல்லு! ஏன் உனக்கு வாய் இல்லையா?”
“அவர் கேட்டால் நீயே சொல்லிரு அழகரு! எனக்கு பயந்து வருது..!” என அவள் சொல்ல,
“முதலில் பயப்படாமல் பேசிப் பழகு.!” என அழகர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“என்ன மைடப்பி! உன் கல்யாண மேட்டரா? இப்போ என்னத்துக்கு இந்தக் கூட்டம்?” என்றபடியே பின்னால் வந்து நின்றான் வீரபத்ரன்.
“ஹான்! தாத்தா வேலையாய் போற நேரம் வீட்டைப் பார்த்துக்க தலைவரை தேர்ந்தெடுக்கப் போறாங்களாம்! நான் வேணும்ன்னா உனக்கே ஓட்டு போடுறேன் டென் ருப்பீஸ்..!”
“நெசமாவா மைடப்பி? அப்போ உங்காளுக்கு ஓட்டு போட மாட்டியா?”
“அழகருக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு, நெடு மாமாவுக்கு ஒண்ணு! ஆக மொத்தம் மூணு..!”
“பக்கி! பக்கி! அது கள்ள ஓட்டு!”
“என் பத்து விரலிலும் மை வச்சு பத்து ஓட்டு போடுவேன்டா பதிற்றுப்பத்து!”நக்கலாய் அவள் சொல்ல,
“ம்மா! இங்க பாரும்மா! இந்த மைடப்பி என்னை வம்புக்கே இழுக்குறா!” அன்னையிடம் குறை படித்தான் வீரபத்ரன்.
“இருந்தாருங்க! பேசாமல் நில்லுங்க! தாத்தா கோபப்படப் போறாங்க!” அரசி இவர்களை அடக்கிய அதே நேரம்,
“கஞ்சா பூவு கண்ணால..
செப்பு செலை உன்னால..
இடுப்பு வேட்டி அவுருதடி..
நீ சிரிச்சா தன்னால..!” எனப் பாடியபடியே உள்ளே நுழைந்தான் காத்தவராயன்.
“ஆத்தி! இவிங்க பஞ்சாயத்தை கூட்டி இருக்காய்ங்களா? இது தெரியாமல் வந்து சிக்கிட்டேனே? என் கடல் கன்னியைப் பார்க்கலாம்ன்னு வந்தால் இவிங்க கண்ணிவெடி வச்சிருக்காய்ங்களே..? சத்தமில்லாமல் வந்த வழியே ஓடிருவோம்..!” எனப் புலம்பியபடியே பின்னால் நகர,
“காக்கா விரட்டி வா! வா! உன்னைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்!” என அவனை அழைத்திருந்தான் அழகர்.
“அதானே.. எல்லாத்துக்கும் என் தலையில் கை வைக்கணும் அதுக்குத்தானே என்னைக் கூப்பிடுறீங்க? உங்க திட்டமெல்லாம் எனக்குத் தெரியும் டா.!” புலம்பியபடியே அழகரின் அருகில் வந்து நின்றான் காத்தவராயன்.
“டேய் காக்கா விரட்டி! நானும் மதுவும் லவ் பண்ணுறோம்ன்னு தாத்தாகிட்டே சொல்லேன்.!” என காத்தவராயனின் காதுக்குள் கிசுகிசுத்தான் நெடுமாறன்.
“ஏன்டா! உங்க வீட்டில் எவனுக்குமே நான் இதைத்தான் செய்றேன்னு சொல்றதுக்கு தைரியம் வராதா? என்னைய வச்சு கும்மி அடிக்கிறீங்களே டா? உன் தாத்தன் உனக்கு வாய்ப்பு கொடுப்பாரு! நீயே நல்ல புள்ளையா சொல்லிரு! என்னைக் கோர்த்து விட்டீங்க அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன்.!” என்றவனின் கண்கள் கயலழகியைத் தேடியது.
“அடியே கடல்கன்னி எங்கே இருக்கே? நேத்து பார்த்துட்டுப் போனதிலிருந்து கண்ணுக்குள்ளே நீ தானே வந்து நிக்கிறே! எங்கே என் கடல் கன்னியைக் காணோம்?” என்றபடியே அடுக்களையையே பார்த்திருந்தான் காத்தவராயன்.
“எல்லாரும் வந்தாச்சா?” கம்பீரமாய் அந்தக் கூடம் முழுதும் அதிர்ந்து ஒலித்தது சொக்கேசனின் குரல்.
“வந்தாச்சு! வந்தாச்சு! சீக்கிரம் ஆரம்பிச்சு பஞ்சாயத்தை முடிச்சு விடுங்க! நான் கடல்கன்னியைப் பார்க்கப் போகணும்!” என முணுமுணுப்பாய் காத்தவராயன் சொல்ல, பக்கெனச் சிரித்துவிட்டாள் கருவிழி.
“எம்மா நெய்தோசை பொய் தங்கச்சி! தான் உன்னை எதாவது செஞ்சேனா? இந்தக் கொடுங்கோல் அரசர் கிட்டே என்னை ஏன் கோர்த்து விடற? பாரு கண்ணில் ஃபயர் வர்ர அளவுக்கு என்னை முறைக்கிறார் பார். அந்த சிவனுக்கு நெற்றிக்கண்ணில் இருந்து மட்டும் தான் ஃபயர் வரும். இவருக்கு ரெண்டு கண்ணிலும் வருதே! ஆத்தி முறைக்கிறாரே! முறைக்கிறாரே!”
“காத்தவராயா!” அதட்டலும் அதிர்வுமாய் அவர் அழைக்க, கருவிழியை முறைத்துக் கொண்டே,
“ஐயா!” பாவமாய் சொன்னான் காத்தவராயன்.
“உங்க ஆத்தாளை, நாளைக்கு வந்து என்னைப் பார்க்கச் சொல்லு!” என்றார் பெரியவர்.
“எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா சாமி?” இவர் சாதாரணமாய் தன் வீட்டு ஆட்களை அழைக்க மாட்டாரே என்ற கேள்வி மேலோங்க அவரிடமே கேட்டிருந்தான் காத்தவராயன்.
“எதுக்குன்னு சொன்னாதான் வரச் சொல்லுவீகளோ? அம்புட்டு பெரிய ஆளாய் வளர்ந்துட்டீங்களோ? நீ வரச் சொல்லு என்ன சங்கதின்னு நான் பேசிக்கிடுவேன்.!” இனி நீ கேள்வி கேட்கக் கூடாது என்ற தோரணையில் பதில் சொன்னார் சொக்கேசன்.
“சரிங்கய்யா! வரச் சொல்றேனுங்க!” எனப் பணிவாய் சொன்னவன்,
“ஏய் கிழவி! உன் புருஷன் என்னத்துக்கு எங்க ஆத்தாளை வரச் சொல்றாரு? உனக்குத் தெரியுமா?” என அங்கயற்கண்ணியிடம் கேட்டான் அவன்.
“வாயை மூடிக்கிட்டு நில்லு தம்பி! பெரியவரு உன்னைத்தேன் பார்க்கிறார்!” என அரசி சொல்லவும்,
“ஆத்தி! என்னைத்தேன் பார்க்கிறாரா? நான் என்ன வயசுப் பொண்ணா சும்மா சும்மா என்னையே பார்க்கிறார்? அவர் பார்க்கிறதுக்குத்தான் கிழவி இருக்குதே! இதையெல்லாம் நீ சொல்ல மாட்டியா கிழவி?” அரசியிடம் துவக்கி அங்கயற்கண்ணியிடம் முடித்தான் காத்தவராயன்.
ஆனால் அங்கயற்கண்ணியோ, ‘கணவரின் முடிவு, இங்கே என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறதோ?’ என்ற பதற்றத்துடன் நின்றிருந்தார். திரும்பத் திரும்ப காத்தவராயன் பேசியதில் கோபம் வர,
“பேசாமல் நிக்கிறியா இல்லையாடா கிறுக்குப் பயலே..! ஈயத்தைக் காய்ச்சி வாய்க்குள்ளே ஊத்திப்புடுவேன். நிலைமை தெரியாமல் பேசிக்கிட்டு!” எனச் சலித்துக் கொண்டார் அவர்.
“ஆத்தி கிழவி கண்ணிலேயும் அனல் பறக்குது!” என்றவன்,
“ஏன் அய்த்தைங்களா, இன்னைக்கு என்ன எல்லார் கண்ணிலும் அனல் பறக்குது.. காரமா சாப்பாடு போட்டுட்டீகளோ?” என அரசியிடமும் பூங்கொடியிடமும் அவன் வினவினான்.
“கொஞ்ச நேரம் பேசாமத்தேன் இரேன்டா! வாய் மட்டும் இல்லைன்னா அம்புட்டுதேன். அவரே எதோ முக்கியமான விஷயம்ன்னு கூப்பிட்டுப்புட்டு திணறிக்கிட்டு நிக்கிறாரு! எங்களுக்கு உள்ளே பதறிக்கிட்டு இருக்கு. நீங்க விளையாடிக்கிட்டு திரியிறீறீகளா? அவர் பேசி முடிக்கும் மட்டும் அமைதியாய் இரு!” என காத்தவராயனிடம் சொன்ன அரசிக்கு, தன் மாமனாரின் தயக்கமும் தடுமாற்றமும் புரியத்தான் செய்தது.
“நம்ம நெடுமாறனுக்கு ஒரு பொண்ணு ஜாதகம் வந்துருக்கு. படிக்கிற பொண்ணு தான். பொண்ணு பேரு மதுரிமா! நம்ம விழியோட சினேகிதி தான். அந்தப் புள்ளையவே பேசி முடிச்சுடலாம்ன்னு முடிவெடுத்திருக்கேன்!” சொக்கேசன் சொல்லிவிட்டு நிறுத்தவும், அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி நிரம்பியது.
“பார்த்தீங்களாக்கா! நாம போய் பேசும் போது, பொண்ணு தர மாட்டோம்ன்னு சொல்லிப்புட்டு தரகர்கிட்டே ஜாதகத்தைக் கொடுத்து அனுப்பியிருக்காங்க போல! நான்தேன் சொன்னேனே, நல்லதே நடக்கும்ன்னு.. நீங்க தான் கேட்கல!” அரசி பூங்கொடியின் காதில் முணுமுணுக்க,
“ஆமா அரசி, எப்படி வேணும்ன்னா இருக்கட்டும், புள்ளைங்க சந்தோமா இருந்தால் போதும்!” என சந்தோஷமாய்ச் சொன்னார் பூங்கொடி.
அதே நேரம், ‘அனைவரின் முகத்திலிருக்கும் மகிழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் வடியப் போகிறதே! எப்படி நானே என் பிள்ளைகளைப் பிரிப்பேன்?’ என மனதிற்குள் குமைந்தவரின் கண்கள் கருவிழியையும் அழகரையும் தான் பார்த்தது.
மீண்டும் தன் தொண்டையைச் செருமி, சரிபடுத்திக் கொண்டவர்,
“அழகரு! இந்த ஐய்யன் சொன்னா நீங்க கேட்பீங்கன்னு நம்பறேன். நீங்களும் விழியும் விரும்பறீங்கன்னு தெரியும்! ஆனால், சாதகத்தில் உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் இல்லை! அதனால்.. உங்களுக்கும் வேற பொண்ணு பார்த்து வச்சிருக்கிறேன். இந்தத் தாத்தன் சொல்லைத் தட்டாமல் அந்தப் பொண்ணு கழுத்தில் தாலி கட்டணும்! தட்டாமல் செய்வீகன்னு நம்புறேன். விழிக்கு படிப்பு முடியவும் வேற மாப்பிள்ளை பார்ப்போம்!” என அவர் சொல்லி முடிந்ததும், ஊசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு நிசப்தமாய் மாறிப் போனது அந்தச் சூழல்.
இத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி சட்டென வடிய அனைவரின் முகத்திலும் அதிர்வின் ரேகைகள் கிளை பரப்பியது.
“அழகரு!” அழுத்தமாய் தன் மாமன் மகனின் கரம் பற்றினாள் கருவிழி. அழகரின் மனதிலோ இடி விழுந்ததைப் போல் ஓருணர்வு. கண்கள் தன்னைப் போல் கலங்கியது அவனுக்கு. இருள் கூடப் பிரியாத இளங்காலைப் பொழுதில் தானே தன் காதலைச் சொன்னாள். வெறும் ஒருநாள் கூட அவன் மகிழ்ச்சி நிலைக்கவில்லையே? அவள் அழுத்தமாய் இட்ட முத்தத்தை இப்போது கூட தன் இதழ்களில் உணர்ந்தான் அவன்.
தன் தாத்தனின் முகத்தைப் பார்த்தபடியே தன் கரத்தை அழுத்தமாய் பற்றியிருந்த கருவிழியின் கரத்தை விலக்கி, அவள் பிடியிலிருந்து தன் கரத்தை உருவினான்.
மனம் முழுதும் வலி.. வலி.. வலி மட்டுமே! வேதனையில் விம்மித் தவித்தது நெஞ்சம். சிறுகச் சிறுக சிறுவாட்டுப் பணம் போல் அவன் சேர்த்த அவள் மீதான நேசம் ஊமையாய் கதறி அழுதது. அவள் வேண்டும் வேண்டுமென அடம்பிடித்த மனதை வலிக்க வலிக்கக் குத்திக் காயப்படுத்தி அடக்கினான் துடிவேல் அழகர். தன் கரத்தை விலக்கி தன்னை விட்டு விலகி நின்ற மாமன் மகனையே அண்ணாந்து பார்ந்து நின்றாள் கருவிழி! அவளின் ஒற்றை பார்வையே அவன் இதயத்தில் ஊசியால் குத்தியதைப் போல் வலிக்கச் செய்தது.
‘என்னை விட்டுப் போக மாட்டேன்னு சொன்னியே அழகரு! என்னை விட்டுட்டியே? என்னை விட்டுட்டியே அழகரு! நான் உனக்கு வேணாமா? எனக்கு நீ வேணும் அழகரு!’ மௌனமாய் அவனிடம் கேள்வி கேட்டது அவள் விழிகள். அவள் கேட்ட கேள்விகளும் பார்வையும் புரிந்தாலும், பதில் சொல்லவோ, அவளை அணைத்து ஆறுதல் படுத்தவோ திராணியற்று அங்கிருந்து நகர்ந்தான் துடிவேல் அழகர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆமா ஆமா கரு கரு சொல்ற மாதிரி மாசத்துக்கு ஒரு கூட்டத்த கூட்டிடராறு சொக்கேசன். அவரு சும்மா இருந்தாலும் ஒன்னு மாத்தி ஒன்னு பிரச்சினை wanted டா வருதே.
விழி நீ காலேஜ் போகாதது எல்லாம் ஒரு பிரச்சினையாமா? அதுகெல்லாமா பஞ்சாயத்து வைப்பாங்க? 🤣🤣
பத்து விரல்ல மை வெச்சு பத்து ஓட்டும் கள்ள ஓட்டா போட போறியா விழி. 🤣
காக்கா விரட்டி கடல் கன்னிய தேடி ஓடோடி வந்த பயணம் கண்ணிவெடி களம்மால இருக்கு.
“நெய் தோசை பொய் தங்கச்சி” யா கரு கரு புது பெயர் நல்லா இருக்கே. 🤣
எப்படியோ நெடு மது கல்யாணம் உறுதி ஆகிட்டு.
இப்போவே இந்த குண்ட போடணுமா? கொஞ்சம் காலம் கடத்த கூடாது!
காலையில் தான் கரம் விட மாட்டேன்னு டயலாக் எல்லாம் சொல்லிட்டு போனான். இப்போ தாத்தா சொல்லுக்கு மரியாதை கொடுத்து கைய விட்டு விலகி நிற்கிறான்.
ரோஷம் கெட்டவன் விசயத்துல தாத்தா மரியாதையை யோசிக்காம செய்தது அவரை காயப்படுத்தவும் இப்போ மறுபடி அதேபோல தவறை செய்ய முடியல அழகரால.