
அகம்-25

கடிகாரத்தில் மணி அதிகாலை இரண்டைத் தொட்டு நின்றது. தன் அறையிலிருந்து குளித்துக் கிளம்பி, நெற்றியில் விபூதித் தீற்றலுடன் வெளிப்பட்டான் துடிவேல் அழகர்.இன்னும் இருள் பிரியத் துவங்காத காலைப் பொழுது.
அவனுக்கு எப்போதுமே இது பழக்கம் தான். காய்கறிகள், பழங்கள் கீரைகளை இந்த நேரத்தில் ஏற்றி அனுப்பினால் தான், மற்ற கடைகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும். உரமில்லா மருந்தில்லா காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் மவுசு இருக்கத்தான் செய்தது.
அறையிலிருந்து வெளியேறி படியை நோக்கிப் போனவன், சட்டென்று ஏதோ தோன்றியவனாய், நின்று நொடி நேரம் யோசித்தவன், கருவிழியின் அறையை நோக்கி நடந்தான். இரவு நேரத்தில், அவள் உறங்கிய பின் உள்ளே செல்வதற்கு சிறிது தயக்கமாய் இருந்தாலும்,
“மேலுக்கு முடியாமல் கிடந்தா, காய்ச்சல் குறைஞ்சிருச்சான்னு ஒரெட்டு பார்த்துட்டு வந்துடுவோம்..!” என முணுமுணுத்தபடியே அவளறைக் கதவைத் திறந்தவன் அதிர்ந்து நின்றுவிட்டான். கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து இலக்கில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் கருவிழி.
“கரு.. கரு..!” பதற்றத்துடன் அவன் மின் விளக்குகளை ஒளிரவிட, மின் விளக்கின் வெளிச்சம் கூட, அவளிடம் துளி பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
“ஏய் கரு.. கரு..! என்னடி? என்னடி பண்ற?” பதற்றத்துடன் அவளை உலுக்கியவனுக்கு, சில்லிட்டுப் போயிருந்த அவள் உடல், அவள் ஏதோ பயந்திருக்கிறாள் என்பதைச் சொல்லாமல் சொன்னது.
“ஹான்..!” ஏதோ கனவிலிருந்து விழிப்பது போல் விழித்தவளின் கண்கள் எதிரில் நின்றவனைத்தான் பார்த்தது.
கண்ட கனவின் தாக்கம் அவள் கண்களில் இன்னும் மிச்சமிருந்தது. அவனைக் கண்டதும் கண்களில் ஓர் திடீர் பளிச்சிடல். ஜீவனற்று வாடி வதங்கிய செடிக்கு நீர் விட்டது போல், அவள் கண்களில் உயிர்ப்பு.
அவளின் உயிரே அவனாக இருக்கையில், அவனைக் கண்டதும், உயிர்ப்பு வரும் தானே?
“இன்னும் உறங்காமல், என்னத்துக்குடி எங்கேயோ வெறிச்சுட்டு உட்கார்ந்திருக்கிற? காய்ச்சல் குறையலையா டி?” உடல் குளிர்ந்திருந்தது தெரிந்தாலும் கூட, அக்கறையாய் நெற்றித் தொட்டு பரிசோதித்தது அவன் கரம்.
“அழகரு..!” என அவசரமாய்க் கட்டிலிலிருந்து கீழே இறங்கியவளின் மென் கரங்கள், அவன் முகம், கண், மூக்கு எனத் தொட்டுப் பார்த்தது. அவனுக்கு எதுவும் நேர்ந்து விட்டதோ? என்ற பதைபதைப்பு அவளுக்குள்.
அவளின் பூங்கரங்கள் காற்றுக்குத் தள்ளாடும் மலரைப் போல் நடுங்கியது. கண், முக்கு, கன்னம் என தடவியவளின் கரம் அவனின் உதடுகளைத் தொட்டு சட்டென விலக, அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு! முதன் முதலாய் தன் அத்தை மகளின் தொடுகையில், அவன் உணர்ந்த சிலிர்ப்பில், உடலில் ஒட்டுமொத்த ரோமக்கால்களும் குத்திட்டு நின்றது.
“என்னடி பண்ணுற கிறுக்கச்சி?” என அவன் விலக்கி நிறுத்தியதையும் பொருட்படுத்தாது..
“அழகரு.! உ..னக்கு ஒண்ணும் ஆகலல்ல? நீ.. நீ.. ந.. நல்லா தானே இருக்க? எ.. எனக்கு ரொ..ம்ப பயமா இருக்கு மாமா! எ..எனக்கு நீ மட்டும் போதும் வேற எதுவும் வேணாம். எனக்கு நீ வேணும் மாமா!” என்றவள் அவன் மார்பில் புதைந்து அவனை அணைத்துக் கொள்ள முயன்றாள்.
நல்ல உயரமும், ஆளுமையான உடல் வாகும் உடையவனின் உடல் அவள் கரங்களுக்குள் சிறைபட மறுத்தது. அவனுக்கு மார்பளவே இருந்த பெண்ணின், தலை அவன் மார்பில் மோதியிருக்க, அவள் கண்ணில் வழிந்தக் கண்ணீர், அவன் மார்பை நனைத்தது.
“ம்ப்ச்! என்னத்துக்குடி லூசு மாதிரி அழற? எதையாவது பார்த்து பயந்துட்டியா? எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம் டி! இப்போ பேசாமல் தூங்கு!” அவளை இழுத்து விலக்க முயன்றும்,
அவனிடமிருந்து விலக மறுத்தாள் பெண். தான் விட்டுவிட்டால் தன் கண்ணை விட்டு மறைந்துப் போவானோ எனப் பயமாக இருந்தது.
“மாட்டேன்..! என்னை விட்டுட்டு போவாதே அழகரு!” என்றவள் அவனை முழுதாய் கட்டியணைக்க முயன்றாள் அவள்.
ஆஜானுபாகுவான அவன், சிறு பெண்ணின் பிஞ்சுக் கரங்களுக்குள் முழுதாய் அடங்க மறுத்தான். அவனை இறுக அணைத்து மார்போடு முகம் புதைத்து, அவன் முதுகுச் சட்டையை இரு கரங்களாலும் பற்றிக் கொண்டாள் கருவிழி.
“என்னடி? இப்படி என்னைப் பிடிச்சு வச்சிக்கிட்டா நான் போக வேணாமா? சோலி கிடக்குடி கிறுக்கச்சி!”
‘மாட்டேன்..’ என்பது போல் இடவலமாய் தலையசைத்து மறுத்தாள் கருவிழி. அவளை அறியாமலே கண்ணீர் கொட்டியது.
“ம்ப்ச் என்னடி? ஏன் இப்படி சின்னப்பிள்ளை மாதிரி பண்ணுறே? என்ன ஆச்சு?” பரிவாய் அவள் தலை வருடினான் அழகர்.
“அழகரு! எனக்கு நீ வேணும்! எப்போவும் என் கூடவே..!” அவன் மார்பில் முகம் புதைத்தபடியே அவள் உரைக்க, அவள் சொன்னதன் சாராம்சம் என்னவெனப் புரியாது, அதிர்ந்து நின்றான் துடிவேல் அழகர்.
“என்னடி உளறிக்கிட்டு திரியுற? என்ன ஆச்சு உனக்கு?”
“நான் சொல்றது உனக்குப் புரியலையா மாமா? எனக்கு நீ வேணும்! வாழ்க்கை முழுசுக்கும் என் கூடவே வேணும்! என்னை விட்டுப் பிரியாமல் எப்போவும் நீ வேணும்.!” உறுதியாய்ச் சொன்னாள் கருவிழி. அவள் கண்ட கனவின் தாக்கம், அவளுக்கு அழகர் மீதான நேசத்தை உணர்த்தியிருந்து.
அவனில்லாமல், தன்னால் இருக்க முடியாது என்கிற அத்தியாவசியம் அவளுக்குப் புரிந்தது.
காதலும் கூட ஆக்ஸிஜன் போல் அத்தியாவசியம் தான். அவனில்லாமல் அவளால் வாழ முடியுமா என்ன? ஒருவேளை அவனை மறந்து அவள் வேறு யாரையாவது மணக்கத் துணிந்தால், அது அவளுக்கு வாழ்க்கை முழுக்க செயற்கை சுவாசம் போலத்தான். கருவிழிக்கு மட்டுமல்லை அழகருக்குமே அவள் அத்தியாவசியம் தான்.
“ம்ப்ச்! கரு கரு! விளையாட இது நேரமில்லைடி! என்னை விடு!” வாய் சொன்னாலும் அவன் துளி கூட அவள் பிடியிலிருந்து திமிறி விலக முயலவில்லை. அழகரின் கண்கள் கருவிழியின் மீதே மையம் கொண்டிருக்க, அழுதழுது களைத்துப் போய் தவிப்புடன் தன்னை அண்ணாந்து பார்த்தபடி நின்றைவளின் தோற்றம், அவனை ஏதோ செய்தது. அதீத தவிப்பும், அவன் தன்னை விட்டு விலகி விடுவானோ? என்ற பயமும் ஒருசேர எழ, தன்னையே பார்த்துக் கொண்டு நின்றவனை அண்ணாந்து பார்த்தவள்,
“ஐ.. ஐ.. லவ் யூ அழகரு..!” என்றவள், தன் நுனி விரலில் எக்கி அவன் உயரத்திற்கு நின்று, அவன் வலிமையான தோள்களில் தன் மென் கரம் பதித்தவள், அவன் வன்மையான மீசைக்குள் புதைந்திருந்த உதடுகளில், தன் இதழ்களை அழுத்தமாய் பதித்திருந்தாள்.
முதலில் அவளின் அதிரடியான செய்கையில் திடுக்கிடலும் அதிர்ச்சியுமாய் அதிர்ந்து நின்றான் அழகர். பின் அவசரகதியில் அவன் முகம் கோபத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது.
“கிறுக்கியாடி நீ.? எதாவது பேசிப்புடுவேன்.. விலகிரு! இப்போ என்னத்துக்கு இப்படி கிறுக்குத்தனமா செய்றே? உன் விருப்பப்படி நீ ரோஹனையே கட்டிக்கோ! உன் பைத்தியக்கார விளையாட்டில் என்னை இழுக்காதே..! என் மனசு ஒண்ணும் விளையாட்டு பொம்மை இல்லைடி! உசிரோட நெதமும் செத்து சுண்ணாம்பாகிட்டு இருக்கேன். இது விளையாட்டு இல்லை, வாழ்க்கை!” அழுத்தமாய் அவன் சொல்லிவிட்டு அவளை விட்டு விலகிய அதே நேரம், மீண்டும் அவன் உதடுகளில் தன் இதழ்களை ஒற்றினாள் பெண்.
“என்னடி? இப்படியெல்லாம் பண்ணினால் மயங்கிருவேன்னு நினைக்கிறியா? உனக்கு பைத்தியம் தான் பிடிச்சுக்கிச்சு! ரோஹனை லவ் பண்ணுறேன் லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு எனக்கு வந்து முத்தம் கொடுக்கிற அசிங்கமா இல்லை உனக்கு?!” கோபமாய் அவன் கேட்டதில், கடகடவென கண்களில் வழிந்த கண்ணீர்த்துளி, அவன் கரத்தினில் விழுந்து தெறித்தது.
“நான் பொய் சொல்றேன்னு தோணுதா மாமா உனக்கு? என்னைப் பார்த்தால் எப்படி இருக்கு உனக்கு? அந்த ரோஹனை நினைச்சிக்கிட்டு உன் கிட்டே உருகறேன்னு தோணுதா? நான் பைத்தியக்காரி தான். என் மனசு உன்னைத்தான் நினைக்கிதுன்னு புரியாமல் இருந்திருக்கேனே.., நான் கிறுக்கச்சி தான், பைத்தியம் தான். எனக்கு அந்த ரோஹன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருந்துச்சு தான். நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். அவனோட குணம் தெரிஞ்சு, அவனை விட்டு நானே தான் விலகி வந்தேன்.. அவன் இல்லைன்னு செத்துட்டேனா என்ன? சாகாமல் இந்த நிமிஷம் வரை உயிரோட தானே நிக்கிறேன்.? அவனுக்காக தானே கையை அறுத்துக்கிட்டு சாகப் போனேன்னு நீ கேட்கலாம். யோசிக்காமல் புத்திக்கெட்டுப் போய் பண்ணிட்டேன். அப்போ என் மனசு எனக்கே புரியலையே.. நான் என்ன பண்ணட்டும்? ஆனால் நீ எனக்கு உசுரு அழகரு! உசுரு இல்லாமல் யாராச்சும் வாழ முடியுமா? நீ இல்லாமல் இந்தக் கருவிழி பொணம் தான். நீ இல்லாமல் நான் செத்துருவேனோன்னு பயமா இருக்கு அழகரு! உன்னை என்னோடவே இறுக்கிப் பிடிச்சுக்கணும்ன்னு தோணுது. எம் மனசில் உன்னைத் தவிர வேற எவனும் இல்லை! அதுக்காக அந்த ஆஞ்சநேயர் மாதிரி, நெஞ்சைப் பிளந்து காட்டவெல்லாம் முடியாது. நான் உன்னோட நிறைய வருஷம் வாழணும்.! இப்போவும் நம்பிக்கை வரலைன்னா போ..!” முகம் தூக்கியபடியே விலக முயன்றாள் அவள்.
அவள் தன்னை உயிராக நினைப்பதிலேயே அவள் மனம் புரிந்துவிட, அதற்கு மேல் அவனுக்கு எந்த விளக்கங்களும் தேவைப்படவே இல்லை. அவள் மீதானக் கோபத்தை இழுத்துப் பிடிக்கவும் அவனால் முடியவில்லை. அவன் மீதான நேசம் அவள் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
இவ்வளவு நேரமும் அவள் மூச்சு விடாமல் பேசியதைக் கண்களில் இரசனை தேக்கிப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் விலக முற்பட்டதும், அவள் இடையோடு கையிட்டு தன்னோடு அழுத்தமாய் பிடித்தவன்,
“உன்னை நம்பாமல், நான் யாரை நம்பப் போறேன்.? கொஞ்சம் கோபம் இன்னும் இருக்கு. உனக்கு பிடிச்சிருந்து அவன் நல்லவனாய் இருந்திருந்தால் நான் குறுக்கே நிற்க மாட்டேன்டி! எனக்கு நீ சந்தோஷமா இருந்தால் எனக்கு அதுவே போதும்.!” என மனதாரச் சொன்னான் அவன்.
“என்னால் அப்படியெல்லாம் முடியாது சாமி! எனக்கு நீ மட்டும் தான் வேணும்! ஆயுசுக்கும் வேணும். சும்மா சொல்றேன்னு மட்டும் நினைச்சிடாதே! வெறும் கனவில் கூட நீ இல்லாத நிலையை என்னால் தாங்க முடியலை. நீ இல்லாத உலகத்தை என்னால் நினைச்சு கூடப் பார்க்க முடியலை அழகரு..! என்னை விட்டு போய்ட மாட்டல்ல அழகரு..?” கூட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் குருவிக் குஞ்சைப் போல், அவன் கை வளைவிலிருந்து எட்டிப் பார்த்தாள் பெண்.
“கரு கரு..!” என இரசனை தேக்கி அழைத்தபடியே, இறுக்கி அணைத்து அவளை தன் மார்புக் கூட்டுக்குள் புதைத்துக் கொண்டான். அவன் இதழ்கள் அவளின் உச்சந்தலையில் தன்னையறியாமல் முத்தம் வைத்தது.
“அழகரு.. நீயும்.. நீயும்.. லவ் யூ தானே?” அவன் அணைப்பையும் மீறி, நிமிர்ந்து அவன் முகம் பார்த்துக் கேட்டாள் அவள். இல்லை என சொல்லிவிடாதே.. என்ற ஏக்கம் அவள் கண்களில் நிறைந்து தளும்பி நின்றது.
“இதை நான் கேட்கணும் டி கிறுக்கச்சி! கனா எதுவும் கண்டுட்டு உளறலையே? தெளிவாத்தானே இருக்கே? நெசமாவே என்னைப் புடிக்குமாடி உனக்கு?” எனக் கேட்டவனின் அணைப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாய் இறுகியது.
“நெசந்தேன்..! முன்னே புரியலை! இப்போ புரியுது. அதுக்காக இப்படி இறுக்கிப் பிடிச்சா எலும்பு நொறுங்கிப் போவும் அழகரு!”
“பூனைக்குட்டி போல குட்டியா இருக்கேடி! என்னில் பாதியாச்சும் இருக்க வேணாம்? இதுக்கே இப்படின்னா இன்னும் நிறைய இருக்கே கரு கரு..!” அவனின் குரல் உருகிக் குழைந்து கரைந்தது.
“அழகரு..!” அவளின் கொஞ்சல் குரலில் அவனின் சிரிப்பு சத்தம் அந்த அறை முழுதும் எதிரொலித்தது.
“ம்ப்ச் மாமா! சிரிக்காதே! நீ தான் ஹல்க் மாதிரி பெருசா இருக்கே, அதனால் தான் நான் குட்டியா தெரியறேன். உன்னைக் கட்டிப் பிடிக்க என் கையே பத்த மாட்டேங்குது.!” குறைபட்டுக் கொண்டாள் கருவிழி.
“நான் ஹல்க்கா டி உனக்கு? நீ தான்டி ஆள் மயக்கி! ஒத்தைக் கண்ணு பார்வையில் ஆளை மயக்கிப்புடுறா! இப்படியே இங்கண நின்னுட்டு இருந்தால், சோலியைப் பார்க்கப் போக வேணாமா? நீ படுத்து உறங்கு டி! நான் கிளம்புறேன்.!” அவளைப் படுக்க வைத்துப் போர்த்தி விட்டவன், அறையிலிருந்து வெளியேறினான். வெளியேறும் முன் அவளைக் கண்ணுக்குள் நிரப்பிக் கொள்ளவும் தவறவில்லை.
மனம் முழுதும் உற்சாகத்தில் நிரம்பித் தளும்பியது அழகருக்கு. தன் ஆசை அத்தை மகள் மனதில் தான் இருக்கிறோம் என்கிற உணர்வே அவனுக்கு உற்சாகமாய் இருந்தது. அதைவிட, ரோஹனை விட்டு அவளாய் விலகி வந்திருக்கிறாளென்றால், அவளுக்கும் அவனைப் பற்றி தெரிந்திருக்கிறது. சிறு பிள்ளை என நினைத்துக் கொண்டிருந்தவள், தானாய் யோசித்து சரியான முடிவை எடுத்திருக்கிறாள் என்பதிலேயே அவளின் மனநிலை அவனுக்குப் புரிந்தது.
‘ஒருவேளை தன்னிடம் விளையாடுகிறாளோ?’ என ஒரு ஓரமாய் அவனுக்குத் தோன்றினாலும், இத்தனைநாள் அவன் சுமந்துக் கொண்டிருக்கும் நேசம் அவளைச் சந்தேகப்படவும் விடவில்லை.
அவள் மனதில் ஏதோ குழப்பம் இருப்பதையும் கூட அவனால் உணர முடிந்தது. ஒருவித சலனமான மனநிலையிலும் அவனுக்குள் ஓர் நிம்மதி. தன் அத்தை மகளுக்கு ஏதும் நேர்ந்துவிடாது. தன் அரவணைப்பில், தன் கரங்களுக்குள் அவள் பாதுகாப்பாய் இருக்கிறாள் என்கிற நிம்மதி. ஆனால் அந்த நிம்மதிக்கு ஆயுள் குறைவென்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அழகர் மீதான நேசத்தினை அழகாய் வெளிப்படுத்திவிட்டால் பெண்ணவள்.
நேசத்தையும் தாண்டிய ஏதோ ஒரு குழப்பம், பயம் அவளிடம் இருப்பதை கண்டுகொண்டு அது என்னவென்று தெரியாமல் ஒரு வேளை தன்னிடம் விளையாடுகிறாளோ என்ற எண்ணத்தில், தன் உணர்வுகளை மதிப்பதே இல்லை என்று தன் மீதே எழுந்த கழிவிரக்கத்தினில் அவளிடம் சிறிது கோப முகம் காட்டிவிட்டான்.
அதுவும் நல்லதுக்குதான் அதனால் தான் அவள் மனதை இன்னும் தெளிவாய் அவனால் அறிந்து கொள்ள முடிந்தது. அவளாகவே அறிந்து தெளிந்து வந்து விட்டால் என்று புரிந்து கொண்டான்.
நேசம் முகிழ்ந்த மனதுடன் இருக்கும் இவர்களுக்காக விதி என்ன விபரீதத்தோடு காத்திருக்கின்றதோ.
Thanks a lot dear. Sorry for the late reply
அச்சோ பரவாயில்லை sis. ❤️எல்லா நாளும் ஒரே போல இருக்காதே. எனக்கு 2 days fever so இப்போ தான் சைட் பக்கம் வரேன்.