Loading

அகம்-22

“எனக்குதேன் நீச்சலே தெரியாதே அழகு.. எனக்கு கடலும் வேணாம். நதியும் வேணாம்! நான் யார்க்கிட்டேயும் மாட்டிக்கிட்டு முழிக்கவும் வேணாம். இந்தா பாரு, பொத்துனாப்ல இருந்து உன் தொம்பி வீரா, நெடுமாறனையும் மதுவையும் கோர்த்து விட்டியான். அதே மாதிரி நிலைமை எனக்கு வேணாஞ்சாமி! நீங்க லவ்விக்கிட்டு திரியறதுக்கே உன் தாத்தன் என்னையத்தேன் கேள்வியா கேட்கிறாரு. இதில் நான் எந்தப் புள்ளையையாவது ஓரக்கண்ணால் பார்த்தாலே அம்புட்டுதேன். சோலியை முடிச்சு விட்டுருவாரு! நான் எங்க ஆத்தா பார்த்து வைக்கிற புள்ளையவே கட்டிக்கிறேன்.!” எனக் காத்தவராயன் யாரோ அழைப்பதையும் பொருட்படுத்தாமல் அழகரிடம் பேசிக்கொண்டே இருந்தான்.

 

“நீச்சல் தெரியலைன்னா என்ன ஒரு கடல்கன்னி வந்து உன்னைக் காப்பாத்தும் பாரு!” என அவன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரம்,

“வீட்டுல யாருங்க! ஒருத்தரும் இல்லைங்களா? என்ன மக்க மனுஷர் ஒருத்தரையும் காணோம்.? இப்படி பப்பரக்கான்னு வீட்டைத் திறந்து போட்டுட்டு எங்கிட்டு போனாங்க? ஏனுங்க யாருமே வீட்டுல இல்லைங்களா? எம்புட்டு நேரமா கூப்பிடுறேன்?” என்ற குரல் வாசல்புறமாய் கேட்டது.

“காக்கா விரட்டி! உன் கடல்கன்னி வந்துருச்சுன்னு நினைக்கிறேன். நீ போய் பாரு! நான் உன் தொங்கச்சிக்கு சாப்பாடு கொடுத்துட்டு வரேன்.!” என்றவன் சொன்னதும் வாசலை நோக்கிப் போனான் காத்தவராயன்.

“யாருங்க? உங்களுக்கு என்ன வேணும்?”

“அங்கயற்கண்ணி அப்பத்தா தான் வரச் சொன்னாங்க! நான் கல்லுப்படியிலிருந்து வாரேனுங்க! என் பேரு கயலு!” மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.

“ஆத்தீ! நெசமாவே கடல்கன்னியா இருக்குமோ? ஆனால் இது சேலை கட்டியிருக்கே? ஒருவேளை சேலை கட்டுன கடல்கன்னியா இருக்குமோ?”என முணுமுணுத்தவன்,

“அந்தக் கிழவி உன்னைய எதுக்கு வரச் சொன்னிச்சு?” எனக் கேட்டான்.

“இப்படி வீட்டுக்கு வந்தவங்களை வாசலிலேயே தான் நிக்கவச்சு தான் பேசுவீங்களா? நல்லா வளர்த்திருக்குறாங்க உங்க ஆத்தா அப்பன்!” துடுக்காய் அவள் சொல்லிவிட,

“நீ ஒருவேளை வீட்டுக்குள்ளே வந்து களவாண்டுட்டு போற களவாணியாய் இருந்தால்? எதை நம்பி உள்ளே விடறது? எதுக்கும் கிழவி வர்ர வரைக்கும் அங்கண போய் உட்காரு!” என வேண்டுமென்றே சொன்னான் காத்தவராயன்.

“ஆத்தாடி ஆத்தா..! உங்களையும் உங்க ஆந்தைக் கண்ணையும் பார்த்தால் கூடத்தேன் கள்ளப் பய மாதிரி இருக்கு. உங்களை எப்படி நான் நம்புறது? இருங்க அப்பத்தாவுக்கே ஃபோன் போட்டு கேட்டுப்புடுறேன்.!” என்றவள் அலைப்பேசியை எடுத்து அங்கயற்கண்ணிக்கு அழைத்தாள்.

“அப்பத்தா நான்தேன்.. கயலு! உங்க வீட்டு முன்னே தான் நிக்கிறேன். திரு திருன்னு ஆந்தை முழியோட, கரு கருன்னு ஒருத்தர் இருக்காரு. என்னை உள்ளே விட மாட்டேன்னு சொல்லிப்புட்டாரு. பொழுதடைஞ்சு போச்சு. இனி வீட்டுக்கும் போக முடியாது அப்பத்தா!”

“ஆந்தை முழியோடவா? அந்த காக்காவிரட்டி பயலாத்தேன் இருக்கும். அவன் ஒரு கிறுக்குப்பய, நீ உள்ளே போய் வேலையைப் பாருத்தா! இந்தா நான் இப்போ வந்துருவேன்.” என அந்தப் புதுப் பெண்ணிடம் அங்கயற்கண்ணி பேசியது, காத்தவராயன் செவிகளில் தெளிவாகவே விழுந்தது.

“இந்தாரு கிழவி.. நீ இங்கே தானே வருவே? எங்களையெல்லாம் இந்த ஹிட்லர் வாயையே திறக்க விட மாட்டாரு. உன் வாயை மட்டும் வஞ்சனையில்லாமல் வளர்த்து விட்டுருக்காரு. ஆள் பார்த்து பண்றாரா? வரட்டும் வச்சிக்கிறேன்!” கோபமாய்க் கத்தினான் காத்தவராயன்.

“நீ நேரில் அவர் முன்னாடி வந்து நின்னுருடா.. நான் ஒத்தை லோலாக்கை கழட்டி உனக்கு கொடுத்துப்புடுறேன். தொடை நடுங்கிப் பயலே..! ஆத்தா கயலு.. அந்தக் கிறுக்குப்பயலை விட்டு, நீ போய் வேலையைப் பாருத்தா..!” எனச் சொல்லிவிட்டு அங்கயற்கண்ணி அலைபேசியை அணைத்துவிட, கயலை முறைத்துக் கொண்டு நின்றான் காத்தவராயன்.

“யோவ்.. முறைச்சுக்கிட்டே நிக்காமல் அங்கிட்டு போ! மூஞ்சியும் மொகரையும்.. நைந்து போன தகர டப்பா மாதிரி.!” என அவள் பேச,

“யாரு நீ? நீ என்னத்துக்கு இங்கண வந்திருக்கே? நான் தகரடப்பாவா இருந்துட்டு போறேன். நீ என்ன எலிசபெத் மகாராணியா?” பதிலுக்கு பேசினான் அவன்.

“நான்தேன் சொன்னேனே, என் பேரு கயலு! சமையலுக்கு கூட மாட வேலைச் செய்யச் சொல்லி, அப்பத்தாதேன் வரச் சொன்னாக! நான் ஒண்ணும் எலிசெபெத்து மகாராணியெல்லாம் இல்லை. அப்பன் ஆத்தா இல்லாமல் நடுத்தெருவில் நின்னவளை, அப்பத்தாவும், தாத்தாவும்தேன் விலாசம் கொடுத்து இங்கண வரச் சொன்னாக..! நான் இங்கிட்டு ஓரமா இருந்துட்டுப் போறேனே?” என கயல் சொல்லவும் உருகிப் போயிற்று காத்தவராயனுக்கு.

“ஓரமா என்ன, நடு வீட்டில் கூட உட்கார்ந்துக்கோ கடல்கன்னி! நான் எதையும் கேட்கலை போதுமா.?” வழிவிட்டு நகர்ந்து நின்றவனை கைநீட்டி தடுத்து நிறுத்தியவள்,

“உங்களை ஏன் எல்லாரும் காக்காவிரட்டின்னு கூப்பிடுறாக? காக்காவைப் பார்த்தால் விரட்டிக்கிட்டு திரிவீங்களா?” எனக் கேட்டாள்.

“கேட்டாளே ஒரு கேள்வி, இந்த அசிங்கம் உனக்குத் தேவையா? இந்தாரு கடல்கன்னி, என்னைக் கேள்வி கேட்கிற ரைட்ஸ் எல்லாம் உனக்கு இல்லை. வேலையைப் பார்த்தோமா தின்னோமா தூங்கினோமான்னு இரு! இந்தக் கிழவி நம்மளை வச்சு செய்றதுக்குனே டிசைன் பண்ணி கூட்டிட்டு வரும் போல.. வரட்டும் வச்சிக்கிறேன்!” என அவன் புலம்பிக் கொண்டே நுழைவாயிலை நோக்கி நடக்க,

“காக்காவிரட்டி! சாப்பிடாமல் போறீங்களே?” எனக் கேட்டு நிறுத்தி வைத்தாள் அவள்.

“எம்மா ராசாத்தி.. இப்போ என்னா உன் பிரச்சனை? என் பேரு காத்தவராயன்.. பட்டப் பேரு தான் காக்காவிரட்டி போதுமா விளக்கம்? வேற எதாச்சும் வேணுமா?” கேட்டவனின் பார்வை கண்டாங்கி சேலையில் கண்கள் விரிய நின்றிருந்தவளைத்தான் பார்த்தது. மினுமினுப்பான மாநிறத்தில் வழித்து வாரிய தலையும், மணமில்லா வாடாமல்லிப் பூவுமாய் காட்சி தந்தாள் கயலழகி.

“நெசமாவே நான் உங்களைக் கேலி பண்ணலை! பேரு தெரியாமத்தேன் காக்காவிரட்டின்னு கூப்பிட்டேன்! தப்பா எடுத்துக்கிடாதீக..! பத்து நிமிசம் மட்டும் உட்காருங்க, எதாச்சு செஞ்சுப்புடுவேன். வீட்டுக்கு வந்துப்புட்டு சாப்பிடாமல் போவீகளா?” வெகுளியாய் அவள் கேட்டதில் பதில் பேச முடியாது நின்றான் காத்தவராயன்.

‘அடேய்.. அழகு என்ன வாய்டா உன் வாய்? என் கற்பனை எங்கெல்லாமோ அத்துக்கிட்டு போவுதே..? இந்தக் காத்தவராயன் வலையில் கடல்கன்னி மாட்டுமான்னு தெரியலையே?’ மனதோடு புலம்பியவன்,

“இன்னொருநாள் சாப்பிடுறேன் கடல்கன்னி! அம்மா காத்திருப்பாக.. வாரேன்.!” என அவன் விடைபெற்று சென்றுவிட, காத்தவராயனைப் புன்னகையுடன் பார்த்தபடி நின்றிருந்தாள் கயலழகி.

**-*****
“போதும்.. அழகரு..! வாயெல்லாம் கசக்குது..! சும்மா சாப்பிடு சாப்பிடுன்னு சொன்னால் எப்படி சாப்பிடறதாம்?” முகத்தைச் சுளித்துக் கொண்டாள் கருவிழி.

“இங்கே பாருடி கரு கரு.. ஒழுங்கா சாபிட்டால் தான் சீக்கிரம் சரியாகும்! சீக்கிரம் காலேஜ் போகலாம்.!”

“நான் ஒருவாரம் லீவ் போட்டுக்கலாம்ன்னு இருக்கேன், நீ என்னடான்னா என்னை விரட்டிக்கிட்டே இருக்கே? போ மாமா! எம் மேலே உனக்கு பாசமே கிடையாது.” பொய்யாய் முகம் தூக்கினாள் கருவிழி.

“ஏய் கிறுக்கச்சி! நமக்குப் பிடிச்சவங்க அப்படிங்கிற ஒரே காராணத்துக்காக, அவங்க செய்யறதுக்கெல்லாம் ஆமாஞ்சாமி போடறதுக்குப் பேரு பாசம் கிடையாது. உண்மையான பாசமும், அன்பும் இருக்கிறவங்க, நமக்குப் பிடிச்சவங்க தப்பு பண்ணினா அதைச் சுட்டிக் காட்டுவாங்க! வெற்றி பெற்றால் பாராட்டி ஊக்குவிக்கவும், தோத்துப் போய்ட்டால் ஆறுதல் படுத்தவும் செய்வாங்க! நீ செய்யறதெல்லாம் சரி உனக்கு எவன் ஆமாஞ்சாமி போடுறானோ, அவனுக்கு உன்கிட்டே ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்குன்னு அர்த்தம். அந்தக் காரியம் முடிஞ்சதும், காலை வாரிட்டு நீ யாரோ? நான் யாரோன்னு போய்க்கிட்டே இருப்பான். எனக்கு நீ நல்லா படிக்கணும்டி கரு கரு..! நல்லா பெரிய ஆளாய் வரணும். என் அய்த்த மவள்ன்னு பெருமையா மார்தட்டி சொல்லிக்கணும். அதுதேன் இந்த அழகருக்குப் பெருமை.!” கண்களில் கனவு தேக்கி அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் செதில் செதிலாய் செத்துக் கொண்டிருந்தாள் பெண்.

‘எப்படிப்பட்ட நேசம் அழகருடையது? அதைப் புரிந்துக் கொள்ளாமல் போனேனே? அவன் நேசத்திற்கு கால் தூசிக் கூட நான் பெற மாட்டேனே? அழகை மட்டுமே பிரதானமாய்க் கொண்டு, ரோஹனின் வலையில் விழ இருந்தேனே? நெஞ்சம் முழுதும் பாசத்தைச் சுமந்துக் கொண்டு, இப்போது கூட தாயாய் மாறி எனைத் தாங்கும் அழகர் தான் எனக்குப் பேரழகு.!’

 

மனதோடுப் பேசிக் கொண்டவளுக்கு, கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, உணவை ஊட்டிக் கொண்டிருந்தவனின் கரத்தினில் பட்டுத் தெறித்தது அவளின் கண்ணீர்த்துளி. பட்டுச் சிதறிய கண்ணீர்த்துளி, சட்டென நழுவ திடுக்கிட்டு அத்தை மகளின் முகம் பார்த்தான் துடிவேல் அழகர். அவளின் வாடித் துவண்ட முகம் இவனை நிரம்பவும் பாதித்தது.

“என்னடி, ரொம்ப வாய் கசக்குதா? போதும்ன்னா விடு!” என அவன் சொல்ல,

“அழகரு.. என்னை மன்னிச்சுடு.! நீ எனக்காகத்தான் சொல்றன்னு புரிஞ்சுக்காமல் பேசிட்டேன். ஸாரி அழகரு..! உனக்காக நான் நல்லா படிக்கிறேன். இனி அந்த ரோஹன் பக்கமெல்லாம் போகவே மாட்டேன்.!” தொண்டை அடைக்க அழுகைக் குரலில் சொன்னாள் அவள்.

“ம்ப்ச்.. கிறுக்கச்சி! ஏற்கனவே முடியாமல் கிடக்க, அழுதழுது இன்னும் இழுத்துக்கணுமா? அந்த ரோஷம் கெட்டவனை எல்லாம் விட்டுத்தள்ளு! இப்போதைக்கு படிப்பை மட்டும் பாரு! இன்னும் கொஞ்ச நாளுதேன். காலேஜ் முடிச்சுட்டு வேலைக்குப் போகணும். சும்மா வீட்டில் உட்காரணும்ன்னு நினைக்கக் கூடாது. எனக்கு என் கரு கரு சுயமா அவள் சம்பாத்தியத்தில் நிற்கணும். ஆம்பளைங்களை விட பொண்ணுங்கதேன், தைரியமா உறுதியா இருக்கணும். எந்த சூழலிலும் நம்மளைக் காப்பாத்த எவனாச்சு வருவான்னு எதிர்பார்க்கக் கூடாது. நாமதான் நமக்குத் துணை. ஓவரா அட்வைஸ் பண்ணுறேன்னு நினைக்காதேடி! எனக்கு நீ இப்படி இருக்கணும்ன்னு ஆசை. நம்ம அப்பத்தா, பெரியம்மா, அம்மா, உங்கம்மா மாதிரி உன் வாழ்க்கை வீட்டுக்குள்ளேயே முடிஞ்சுடக் கூடாது. என் அய்த்த மவதேன் தைரியசாலியாச்சே.. அவளை இந்தக் காய்ச்சலெல்லாம் என்ன பண்ணும்? சும்மா அழுதுட்டே கிடக்காதடி! உன்னோடசிரிச்ச முகந்தேன் இந்த அழகருக்குப் பிடிக்கும்.”என்றபடியே அவள் கண்ணீரைத் துடைத்தான் துடிவேல் அழகர்.

“இருந்தாலும் நான் செஞ்சது தப்புத்தானே? என்னால் தான் தாத்தா உன்கிட்டே பேச மாட்டேங்குறார். எதையுமே யோசிக்காமல் விளையாட்டாய் செஞ்சு தொலைச்சுட்டேன்!” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடை நிறுத்தியவன்,

 

“உன்னை எனக்குத் தெரியும் டி கரு கரு! சும்மா மனசைப் போட்டு உழப்பிக்காதே! எப்போவுமே நான் உனக்கு துணையாய் நிற்பேன். அதை மட்டும் மனசில் வச்சிக்கோ! முதலில் உடம்பைப் பாரு! மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்!”காய்ச்சலின் வீரியத்தில் புலம்புகிறாள்  என்றெண்ணியவன்,   அவளின் முகம் பார்த்து சொல்ல,

 

“தேங்க்ஸ் மாமா!” எனத் தொண்டை அடைக்கச் சொன்னபடியே, அனிச்சை செயலாய்

 

அவன் தோள் மீது சாய்ந்தவளோ, ‘ஐ லவ் யூ அழகரு..!’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. ஆஹா அழகர் வாக்கு பளிச்சிடுச்சு! 😍😍

    அங்கயற்கண்ணி அப்பத்தா கடற்கன்னி கயலழகி ய காக்கா விரட்டிக்காகவே அழைச்சிட்டு வந்துட்டாங்க.

    ஹிட்லர் அவரு பொண்டாட்டிய பேசவெச்சு அழகு பார்க்கிறாரு உனக்கேன் பொறாமை காத்து.

    “திரு திரு னு ஆந்த முழியோட கரு கரு னு” என்ன மாதிரியான வர்ணிப்பு அட அட அட 🤣

    காக்கா விரட்டுவீகளா? 🤣🤣🤣🤣 ஏன் கடற்கன்னி அதுகெல்லாமா ஆளு வெச்சுப்பாங்க!

    கருவிழி காதல்ல உருகி பேசிட்டு இருக்கா, அழகர் அவ காய்ச்சல்ல உழறுறதா நினைக்கிறான்.

    1. Author

      😂😂😂 ஆமா டா.. அழகர் வாக்கு பலிச்சுடுச்சு. இன்னும் அழகருக்கு புரியலையே.. சீக்கிரம் புரிய வச்சிடுவோம். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💛💜

  2. சூப்பர் அழகரு … காத்தவராயா உன் கடல்கன்னி வந்திடுச்சே … இனிமே கடல்ல மூழ்க வேண்டியது தான் …

    1. Author

      நாமளே கடலுக்குள்ளே தூக்கி போட்டுருவோம் டா.😅 தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💚💜