
அகம்-20

மறுநாள் காலை..
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த சொக்கேசன் ஓய்வில் இருக்க, தன் போக்கில் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் கருவிழி. அவள் மனமோ ஒருநிலையில் இல்லை.
முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. எதையோ தொலைத்துவிட்டவள் போல், ஜீவனின்றி இருந்த முகமும் துறுதுறுப்பை இழந்திருந்த கண்களுமாய், வலம் வந்தவளை ஆராய்ச்சியாய் பார்த்தார் தங்க மீனாட்சி.
“ஏய்! நில்லுடி! என்னத்துக்கு மூஞ்சியை ஒருமாதிரி வச்சிக்கிட்டு திரியறவ? காலேஜுக்குப் போகப் பிடிக்கலையா? உன் தோரணையே சரியில்லையே?” கேள்வியிய் மகளைப் பார்த்தார் மீனாட்சி. ஜீவனில்லாத அவள் முகம் அவருக்குள் பதைபதைப்பைக் கூட்டியது.
“ஒண்ணும் இல்லைம்மா! லேசா தலையை வலிக்குது! நீ போய் உன் சோலியைப் பாரு!” தாயின் கண்களைப் பாராது எங்கோ பார்த்து சொல்லி வைத்தாள் அவள்.
“மேலுக்கு முடியலையாடி?” வேகமாய் மகளின் நெற்றியில் கைவைத்துப் பரிசோதித்துப் பார்த்தார். உடல் அனலாய்க் கொதித்தது.
“காய்ச்சல் அனலாய்க் கொதிக்குதுடி! இப்படியேவா காலேஜுக்குப் போகப் போற? வேணாம்டி இன்னைக்குப் போக வேணாம்! ஆஸ்பத்திரிக்குப் போவோம், நான் கிளம்பிட்டு வாரரேன் இரு!” மகளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சொன்னார் தங்க மீனாட்சி.
“வேணாம்மா! முக்கியமான டெஸ்ட் இருக்கு. நான் போய்த்தான் ஆகனும்!” பிடிவாதமாய் நின்றாள் மகள்.
“ம்ப்ச்! சரி, அப்போ ரெண்டு இட்லியைத் தின்னுட்டு மாத்திரையாவது போட்டுட்டு போ!” அக்கறையாய் சொன்னார் மீனாட்சி.
“பசிக்கலை மா! நான் வந்து சாப்பிட்டுக்கிறேன்.!” எனக் கீழிறங்கி வந்தவள், அழகர் தனக்காக வாகனத்தோடு காத்திருப்பதையும் பொருட்படுத்தாமல், வாசலைத் தாண்டி நடந்துவிட்டாள்.
“ஏய் கரு கரு.. நில்லுடி! நான் காலேஜில் விடறேன். ஒத்தையில் போகதேடி! ஏய் கிறுக்கச்சி, நில்லுன்னு சொல்றேன்ல்ல?”
அவன் குரல் காற்றில் கரைந்து அவள் செவிகளையும் எட்டத்தான் செய்தது. அவளுக்குத்தான் நின்று கேட்க விருப்பமில்லை. ஏகப்பட்ட குழப்பங்கள் அவள் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
‘ஏன் அழகர் மேல் எனக்கு இத்தனை பிடிப்பு? அவனில்லாமல் ஏன் என்னால் எதையுமே யோசிக்க முடியவில்லையே? அந்தளவிற்கு அத்தியாவசியமாகிப் போனானா என்ன? அப்படியென்றால் என் மனதில் அழகருக்கான இடம் என்ன? இன்னொரு பெண் அழகரின் வாழ்க்கையில் வந்தால்..?’ யோசனை மனதிற்குள் ஓட, கண்களில் கண்ணீர் பெருகியது.
“ஏய் மைடப்பி! என்ன ஒத்தையில் போறே? நான் காலேஜில் ட்ராப் பண்ணட்டுமா?” இருசக்கர வாகனத்தின் வேகத்தை அவள் நடைக்கேற்ப நிதானப்படுத்தி, அவளுடன் பேசினான் வீரபத்ரன்.
“இல்லை வீரா! நான் பார்த்துப்பேன் நீ கிளம்பு!” இதழுக்கு எட்டாத புன்னகையைப் பரிசளித்தாள் கருவிழி.
“வீராவா? மழை எதுவும் வருதா? இல்லையே வெயில் பளிச்சுன்னு பல்லைக் காட்டுதே? டென் ருப்பீஸ், பதிற்றூப்பத்துன்னு கூப்பிடுவியே, என்ன அதிசயம் வீரான்னு கூப்பிடுறே? நிலநடுக்கம் எதுவும் வந்துடப் போகுது மைடப்பி!” அவன் புன்னகையுடன் சொல்ல, அவள் இதழ்களிலும் மென் புன்னகை மலர்ந்தது.
“சரி வா! வா! நேரம் ஆகிருச்சு கிளம்புவோம்!” என அவன் சொன்னதும், வாகனத்தில் ஏறி அமர்ந்தவள்,
“அழகரு தானே, என்னைக் கூட்டிப் போய் விடச் சொல்லிச்சு.?” அழகரின் மனதை அறிந்தவளாய்க் கேட்டாள்.
“இல்லையே, உனக்கு யாரு இந்த மாதிரி தப்பான தகவல் எல்லாம் கொடுக்கிறது?” என்றபடியே வாகனத்தைச் செலுத்தினான் அவன்.
“இதையெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க, இது என்னோட இன்ஸ்ட்டிங்க்ட் (Instinct)”
“இன்டஸ்டைன்னா குடல் தானே? அதுவா உன்கிட்டே வந்து சொல்லிச்சு?” என அவன் கேட்கவும், கலகலவெனச் சிரித்தவள்,
“டேய் டென்ருப்பீஸ்..! அது இன்ஸ்ட்டிங்க்ட்ன்னா உள்ளுணர்வுன்னு அர்த்தம்.” எனச் சொன்னாள்.
“படிக்கிறதெல்லாம் நமக்குப் பிடிக்காது மைடப்பி! நமக்குப் பிடிச்சதெல்லாம், கேமிரா வழியா பார்த்துப் படமெடுக்கிறது தான். நானே படிக்கிறதுக்குப் பயந்து தானே கேமிராவைத் தூக்கிக்கிட்டு சுத்தறேன்.!” எனச் சொன்னவன், அவளைக் கல்லூரியின் முன் இறக்கிவிட்டான்.
“நான் கிளம்புறேன் டென்ருப்பீஸ்.. நான் பார்த்து போ.! ஈவ்னிங் நீ வராதே.. நானே போய்டுவேன்.!” எனச் சொன்னாள் அவள்.
“இந்தா இது சாப்பாடு, இது மாத்திரை.. சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு தான் கிளாஸ்க்குப் போகணுமாம் அண்ணன் ஆர்டர். அப்பறம் ஈவ்னிங் பஸ்ஸில் போறேன்னு பகுமானம் பண்ணக் கூடாதாம். அண்ணே வருவாராம்.. இதுவும் ஆர்டர்தான். என் கிரகம் உன்னையெல்லாம் அண்ணின்னு கூப்பிடணுமாம் மைடப்பி! புள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு கனவா கண்டேன். எல்லாம் விதி..!” போலியாய் வீரபத்ரன் சலித்துக் கொள்ள, கண்களில் மின்னலோடு அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,
“என்னடா சொல்றே?” எனக் கேட்டாள்.
“ஆமா, தாத்தா உனக்கும் அழகருக்கும் தானே கல்யாணம் முடிவு பண்ணியிருக்காரு. நீயும் அந்த மதுவும் எனக்கு அண்ணி தானே? உங்களையெல்லாம் அண்ணின்னு கூப்பிடணும்ன்னு நினைச்சாலே.. வேதனையா இருக்கு. அந்த வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது மைடப்பி. நீ அழகருக்கு மனைவியாகி அண்ணியா மாறும் வரை எனக்கு மைடப்பித் தான். நான் கிளம்பறேன். உடம்பைப் பார்த்துக்கோ!” எனச் சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட, அவன் கண்ணிலிருந்து மறைந்துப் புள்ளியாய் மாறும் வரை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் கருவிழி.
அழகரின் அக்கறை அவள் நெஞ்சின் அடியாழம் சக்கரையாய் இனித்தது. அவனின் அக்கறையும் நேசமும் தனக்கு மட்டுமே நிரந்தரமாய் வேண்டுமென அவள் மனம் அடம் பிடித்துத் தொலைத்தது.
தன் மனம் போகும் போக்கில் அதிர்ந்து திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் கண் முன், கைக்கட்டிய படி தோரணையாய் நின்றிருந்தான் ரோஹன்.
ரோஹனைப் பார்த்ததும் அவள் முகம் பிடித்தமின்மையை அப்பட்டமாய்ப் பிரதிபலித்தது.
“பேபி..! ஒரு கால் இல்லை, மெஸேஜ் இல்லை. என்னை மறந்துட்ட தானே நீ?”
“நா.. நான் தான் உன்னை ப்ரேக்-அப் பண்ணிட்டேனே ரோஹன். திரும்பத் திரும்ப என் முன்னால் வந்து நிக்காதே..! எனக்குப் பிடிக்கலை!” எனத் தன்னைத் தாண்டிச் செல்ல முயன்றவளைக் கைப்பிடித்துத் தடுத்திருந்தான் ரோஹன். அவன் தீண்டிய இடம் மொத்தமும் தீயாய் தகிக்க, கரத்தினை முயன்று உதறியவள்,
“எனக்கு உன்னைப் பிடிக்கலை ரோஹன். ப்ளீஸ் இது வேண்டாம். முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். இனி என் வாழ்க்கையில் நீ இல்லை.! அவ்வளவு தான். நீ உன் வேலையைப் பாரு, நான் என் வேலையைப் பார்க்கிறேன்.!” பட்டுக் கத்தரித்தாற் போல் பேசினாள் கருவிழி.
“ஓ! இத்தனை நாளாய் என்னோட பழகி ஊர் சுத்திட்டு நீ வேணாம்ன்னு சொன்னதும் நான் போய்டணும். உனக்காக ஆறுமாசம் வெய்ட் பண்ணியிருக்கேன்டி! சட்டுன்னு போன்னு சொல்லிட்டா, நான் போய்டுவேனா? எனக்கான ஆதாயம் இல்லாமல் நான் போகவே மாட்டேன். எனக்கு நீ வேணும் கருவிழி.!” அழுத்தமாய் அவளைப் பார்வையால் துளைத்தபடியே பேசினான் அவன். அவன் பார்வையில் உள்ளுக்குள் நடுக்கம் பிறக்க, தன்னை அறியாமல் இரண்டடிகள் பின்னால் நகர்ந்தாள் அவள்.
“எனக்கு என்னடி குறைச்சல்? நீயெல்லாம் வேணாம்ன்னு சொல்ற அளவுக்கா நான் இருக்கேன்? என் கூட நின்னு பேசறதுக்குக் கூடத் தகுதியும் தராதரமும் வேணும். ஃப்ரெண்ட்ஷிப்பில் கூடத் தராதரம் பார்க்கிற ஆள் நான். என் உயரம் தெரியாமல் பேசுறியே பேபி! ஒருவேளை என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சால் இப்படியெல்லாம் பேச மாட்டியோ? நான் யார் தெரியுமா?” என அவன் சொல்ல வர, அவன் முகத்தின் முன் கை நீட்டி, அவன் பேச்சை தடை செய்தவள்,
“காதலும் நட்பும், தகுதி, தராதரம், ஸ்டேட்டஸ், ஆள்பலம் இதையெல்லாம் பார்த்து வர்ரது இல்லை. அப்படி இதையெல்லாம் பார்த்து வந்தால் அது நட்பும் இல்லை, காதலும் இல்லை. நீ சொல்ற மாதிரி வர்ர நட்பு தனக்கு ஆதாயம் இல்லைன்னு தெரிஞ்சதும் தன்னால் விலகிப் போய்டும். நட்போ, காதலோ ஆத்மார்த்தமான அன்பு இருக்கணும். அந்த அன்பு உன்கிட்டே இல்லை. உன் கண்ணில் இருக்கிறது அன்பு இல்லை. உன் கண்ணு என்னை அசிங்கமாத்தான் பார்க்குது. அதை என்னால் உணர முடியுது. நீ யாராக வேணும்னாலும் இருந்துட்டு போ! எனக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. எனக்கு நீ வேணாம்.!” நிமிர்வாய் சொல்லிவிட்டு துளி தயக்கமில்லாமல் நின்றாள் பெண்.
ரோஹனுக்கோ, தன்னை ஒரு சிறு பெண் நிராகரிக்கிறாள் என்பதே ஆத்திரமாய் வந்தது. இதுவரை அவன் கடைக்கண் பார்வைக்குக் கட்டுப்படாத பெண்ணே இந்த உலகத்தில் இல்லை என்ற கர்வத்தோடு இருந்தவனுக்கு, கருவிழியின் நிராகரிப்பு ரொம்பவே அவமானமாக இருந்தது. அந்த அவமானமே அவள் மீது பழிவெறியாய் உருமாறி இருக்க,
“அது எப்படி நீ என்னை வேணாம்ன்னு சொல்லலாம்? கேவலம் ஒரு பொண்ணு உனக்கெல்லாம் வேணாம்ன்னு சொல்றதுக்குத் தகுதியே கிடையாது. நீ வேணாம்ன்னு சொன்னால் உன்னைச் சும்மா விட்டுடுவேனா.? உன்னைக் கொன்னு புதைச்சால் கூட, இந்தக் காலேஜில் என்னைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. நான் உன்னை விடப் போறதும் இல்லை!” என்றவன் அவளின் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையை இழுத்து வாகனத்திற்குள் எறிந்தவன், அவளையும் தன் தன் வாகனத்திற்குள் ஏற்ற முயன்றான். தீடீரென அவன் இழுப்பான் என எதிர்பாரதவள் தடுமாறி அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றவள், சட்டென நிதானித்து, அவனின் இறுக்கமானப் பிடியிலிருந்து வெளி வந்து, அழுத்தமாய்க் காலூன்றி நின்று, அவன் சட்டையைக் கொத்தாய் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்திருந்தாள். ஏதோவொரு வேகத்தில் அவனை அறைந்துவிட்டாலும், மனம் படபடப்பை உணரத்தான் செய்தது.
எங்கிருந்து இப்படியொரு தைரியம் வந்ததென அவளுக்கே தெரியவில்லை. அவனை அறைந்ததில், ரோஹனுக்கு வலித்ததோ என்னவோ, கருவிழியின் கரங்கள் தீயாய்க் காந்தியது. சில நொடிகளில் நடிந்து முடிந்தவை எல்லாம், கொடுமையான கனவைப் போலத்தான் தோன்றியது.
“பரதேசி நாயே..! நீ என்ன செஞ்சாலும் வாயை மூடிக்கிட்டு போவேன்னு நினைச்சியா? இன்னொரு முறை என்னைத் தொட்டே, கொன்னுடுவேன்.!” என நிமிர்வுடன் சொன்னவள், மகிழுந்தின் இருக்கையில் கிடந்த தன் பையை எடுத்துக் கொண்டு விறுவிறுவென அவனைத் தாண்டிச் சென்றிருந்தாள்.
‘சிலநொடிகள் சுதாரிக்காமல் மட்டும் இருந்திருந்தால், என்னென்ன நிகழ்ந்திருக்கும்?’யோசித்த மாத்திரத்திலே அவளுக்கு ரோஹனை நினைத்து பயமாக இருந்தது. ரோஹனைத் திரும்பிப் பார்த்தபடியே அவள் வகுப்பறையை நோக்கிச் சென்றாள்.
அதற்குள் மாணவர்கள் கூட்டம் ஆங்காங்கே கூடியிருக்க, அவனைவரின் முன்னாலும் அவளிடம் அறைவாங்கியதை நினைத்தவனுக்கு, முகம் கோபத்தில் சிவக்க, கண்கள் எல்லையில்லா பழிவெறியில் பளபளப்பாய் மின்னியது. பழிவெறியில் பளபளத்த அவனின் கண்கள் கருவிழி சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தது.
அதே நேரம், பயமும் பதற்றமுமாய் நடந்து கொண்டிருந்த கருவிழியின் மனமோ, வழக்கம் போல், அழகரைத்தான் தேடியது. ஆனால் இந்த முறை அவள் தேடலின் பரிணாமம் வேறாகத் தான் இருந்தது. ரோஹன் மீதான வெற்று சலனத்தைக் காதல் என நினைத்தவளின் மனம், அழகரின் நேசத்தில் தடுமாறி தடம் மாறியது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் மனமும் அழகரின் மீதான நேசத்தை உணரத் துவங்கியிருந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அழகரை எந்தளவு எதிர்பார்க்கின்றோம்? அவன் மேல் எந்தளவு உரிமை கொண்டுள்ளோம் என்ற யோசனையிலேயே சுற்றுகிறாள் விழி.
இயல்பை மீறி அமைதியாய் இருக்கும் அவள் மேல் யோசனையாக வலம் வருகிறது வீட்டினரின் கண்கள்.
ரோஹன் மேல் இருந்த பித்து தெளிந்து அழகர் மேல் உள்ள பாசம் இப்பொழுது தான் புரிகின்றது.
அவளுக்கு நேரம் கொடுக்காமல் எல்லாம் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.
ரோஹன் லேசில் விட மாட்டான் போலவே! விழி தைரியமாக செயல்பட்டாலே அது வரை நல்லது.
தெரிஞ்சு தெளிந்து வந்துவிட்டால் சரிதான். ஆனால் இந்த கரு கரு என்ன செய்யக் காத்திருக்காளோ? தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💚💜
இந்த ரோஷம் கெட்டவன் என்ன பண்ண காத்திருக்கானோ… எப்படியோ விழிக்கும் காதல் வந்திடுச்சு …
ஆமா டா! ஆமா! அழகர் இருக்க பயமேன்? தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💛💜