
அகம்-18

இப்படியே கடைசி வரை இருந்துட வேண்டியது தான்.!” என்ற அழகரின் முடிவில் மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்து அமர்ந்துவிட்டான் காத்தவராயன்.
“உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும் அழகு..”
“அவள் இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை! என் மனசில் அவளைத் தவிர வேற எவளுக்கும் இடம் இல்லை.!” இதற்கு என்ன பதில் சொல்வதென நிஜமாகவே காத்தவராயனுக்கு தெரியவில்லை.
“இங்கே பாரு அழகு, தங்கச்சி பொழுதன்னைக்கு உன்னைத்தேன் சுத்தி வருது. ஒரு வளையல் வேணும்ன்னா கூட, அவங்க ஆத்தாவையோ, இல்லை அந்த ரோசம் கெட்டவனையோ போய் கேட்கலை. அது உன்னைத்தான் கேட்குது. அரை நிமிஷம் நீ இல்லாமல் தங்கச்சி இருந்திருக்கா? உன் கிட்டே எதுவும் கேட்கிறதுக்கு தங்கச்சி சங்கடப்பட்டு நான் பார்த்ததே இல்லை. உன்கிட்டே இம்புட்டு உரிமை எடுத்துக்கிடும் போதே உனக்கு தெரியலையா? தங்கச்சிக்கு உன் மேல நேசம் இருக்குன்னு. நீ உன் மனசை உணர்ந்துட்டே. என் தங்கச்சி அது மனசை அதுவே உணராம கிடக்கு. எனக்கு என்னவோ தங்கச்சி மனசில் நீ தான் இருக்கேன்னு தோணுது அழகு!” நண்பனுக்காக ஒரே பக்கமாய் பேசாது, கருவிழியின் பக்கமிருந்தும் பேசிய தன் நண்பனை மெச்சிக் கொண்டான் துடிவேல் அழகர்.
“நீ சொல்றதையெல்லாம் கேட்க நல்லாத்தேன் இருக்கு. மாமன் மவன்ங்கிற உரிமையில் கேட்கிறதையெல்லாம் காதல்ன்னு எடுத்துக்க முடியாது காக்காவிரட்டி..!”
“சரி, நீ சொல்றபடியே வச்சிப்போம்! உன்கிட்டே இருக்க அதே உரிமை தானே, நெடுமாறன் மேலேயும், வீரபத்ரன் மேலேயும் இருக்கணும். ஆனால் எதுவா இருந்தாலும், அவ தேடுறது உன்னைத்தான். நல்லா யோசிச்சு பாரு, நான் சொல்றது உனக்குப் புரியும்.!”
“அது.. சின்ன வயசில் இருந்து தூக்கி வளர்த்ததால் கூட இருக்கலாம்..!” அவளின் செயல்களுக்கு சப்பைக்கட்டு கட்டினான் அழகர்.
“மண்ணாங்கட்டி! கூறுக்கெட்ட தனமா பேசாதே அழகு! அவ ஆத்தாளை விட அவ உன்னை ஏன் தேடணும்? அதை மட்டும் யோசி. தூக்கி வளர்த்தேன், தூக்காமல் வளர்த்தேன்னு லூசு மாதிரி பேசாதே! தங்கச்சி மனசை முழுசா தெரிஞ்சுக்காம எந்தத் தப்பான முடிவும் எடுத்துடாதே! உன் மேல் இருக்கிற நேசம் புரியாமல் தான், தங்கச்சி அந்த ரோசம் கெட்டவன் மேலே வந்த சலனத்தை காதல்ன்னு தப்பா நினைச்சுட்டு இருக்கு. அது உண்மையான நேசமா இருந்திருந்தால், அந்தப் பையனை டக்குன்னு ஃப்ரெண்டுன்னு தங்கச்சி சொல்லியிருக்காது.!”
“அது.. அந்த சூழ்நிலையில் தப்பிச்சுக்கவும், என்னைக் காப்பாத்தவும் உன் தொங்கச்சி சொன்ன பொய்!”
“அதைத்தான் அழகு நானும் சொல்றேன். உனக்காக ஏன் பொய் சொல்லணும்? கல்யாணம் பண்ணி வாழ்க்கை முழுசும் வரப் போற ரோஹனுக்காக உண்மையை சொல்லியிருக்கலாமே? ஏன் தங்கச்சி பொய் சொன்னிச்சு? தாத்தாவுக்கு தெரியக் கூடாதுன்னு பொய் சொன்னாள்ன்னு முட்டாள்தனமா பேசாதே! நான் தங்கச்சியை கவனிச்ச வரை, அது கண்ணில் தெரியறது நிச்சயமாய் பாசம் மட்டும் இல்லை!” உறுதியாய் காத்தவராயன் சொல்ல, அழகரின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படரத் துவங்கியிருந்தது.
“அழகரு! அழகரு..!” கால் கொலுசின் சிணுங்கலுடன் அவள் குரலும் சேர்ந்தே காற்றில் மோதி அழகரின் செவியைத் தீண்டியது.
“உன் தொங்கச்சி வந்துட்டா!” சொன்ன மாத்திரத்தில் அழகரின் முகத்தில் புன்னகை. கருவிழியுடன் இருந்தால் மட்டும் தான், அழகரின் இதழில் மலர்ந்திருக்கும் புன்னகை வாடாமல் நிரந்தரமாய் இருக்கும் என்பது காத்தவராயனுக்கு தெள்ளத்தெளிவாய் புரிந்தது.
‘ஏதாவது அதிசயம் நடந்து, இதுங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுட்டா நல்லா இருக்கும். இப்போ புரியாததெல்லாம் தன்னால் புரிஞ்சிடப் போவுது!’ மனம் நண்பனின் வாழ்க்கைக்காய் தன்னைப் போல் வேண்டுதல் வைத்தது.
“மாமா! இங்கண என்ன செய்யறே? இன்னைக்கு தோட்டத்துக்குப் போவோமே? மறந்துட்டியா?” தலையை ஆட்டி ஆட்டி அவள் பேசும் தோரணையில் கண்களை அவளை விட்டுத் திருப்ப முடியாது தவித்துப் போனான் அழகர்.
அரக்கு நிறத்தில் கையில்லாத மேல் சட்டையும், சந்தண நிற நீள் பாவாடையும் அணிந்து, அவளின் சுருள் கூந்தல் உச்சந்தலையில் க்ளிப்பில் அடங்கியிருக்க, முகத்தில் சுருள் சுருளாய் நூடுல்ஸ் போல் தொங்கிக் கொண்டிருந்த கருஞ்சிகையின் நுனியில் விரும்பியே சிக்கிக் கொள்ள அவன் மனம் தவியாய் தவித்தது.
“என்ன அழகரு, என்னையே பார்த்துக்கிட்டு இருக்கே? நீ எடுத்துக் கொடுத்த ட்ரெஸ் தான் நல்லா இருக்கா? இம்புட்டு நேரம் நீ தூங்க மாட்டியே? காக்கா விரட்டி கூடச் சேர்ந்து சரக்கடிச்சியா?” காலியாகிக் கிடந்த மதுப்புட்டிகளை ஆராய்ந்தபடியே கேட்டாள் அவள்.
“ஆமா! உன் மாமன் மயன், ஒண்ணும் அறியாத பச்சை மண்ணு! இன்னைக்கு எங்களுக்கு நிறைய சோலி கிடக்கு. நீ நெடுமாறனையோ, இல்லை வீரபத்ரனையோ கூட்டிட்டு போ! வா அழகரு நாம போவோம்..!” நண்பனை கைக் கொடுத்து எழுப்பியவன், மாடியிலிருந்து கீழே இறங்கப் போக,
“அழகரு!” அத்தை மகளின் சிணுங்கல், மந்திரம் போட்டது போல் அவனை இழுத்து நிறுத்தியது.
“நல்லா தெரியுது அழகு! நல்லா தெரியுது.. நீ அவளை விட்டு விலகி அவ விருப்பத்துக்கு வழிவிடப் போறியாக்கும்? தங்கச்சி ஒத்தை சொல்லுக்கு மந்திரம் போட்ட மாதிரி நிக்கிறே, நீயா அவளை விட்டுப் பிரியப் போற? அடேய் உங்க அலப்பறையைத் தாங்க முடியலைடா.. நான் முரட்டு சிங்கிள் டா!” அழகரின் காதுக்குள் புலம்பினான் காத்தவராயன்.
“நான் என்னடா பண்ணட்டும், எம் மனசு தன்னால அவ சொன்னப் பேச்சு கேட்குதே.!”
“என்னமோ பண்ணுங்கடா டேய்..! எம்மா தங்கச்சி, அவன் சும்மா இருந்தாலும், நீ அவனை சும்மா இருக்க விட மாட்டே?”
“நான் என்ன செஞ்சேன்? நான் என் மாமாவைக் கூப்பிட்டேன். உனக்கு என்ன வந்துச்சு? நான் கூப்பிட்டா வர்ரேன், வரமாட்டேன்னு அழகர் சொல்லட்டும்!” முகம் சுருக்கினாள் கருவிழி.
“ம்க்கும்.. நீ கூப்பிட்டு அவன் வரமாட்டேன்னு சொல்லுவானா? சொல்ல மாட்டான்ங்கிற தைரியம்..! ஆனால் நல்லா நடத்துறீங்கடா..!” புலம்பியபடிய காத்தவராயன் மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி செல்ல,
“ஏய் கரு கரு.. இங்கண என்னத்துக்குடி வந்தே? நீ கீழே போ! நான் வர்ரேன்.!”
“அழகரு! நான் தோட்டத்துக்குப் போகணும்.!” சிணுங்கிக் கொண்டே நின்றவளை,
“நெசமா வேலை இருக்குடி! இன்னொரு நாளைக்கு கூட்டிட்டு போறேன். நீ வேணும்ன்னா வீரபத்ரனைக் கூட்டிட்டு போறியா?” எனக் கேட்டான் அவன்.
“அந்த டென் ரூப்பீஸெல்லாம் கூட்டிட்டு போக முடியாது. நீ வந்தால் வா.. இல்லைன்னா வேணாம்.!” தீர்மானமாய் நின்றாள் அவள்.
“என்னத்துக்குடி உசிரை எடுக்கிறே? தோட்டத்துக்கு போனால் தண்ணித் தொட்டிக்குள்ளே இறங்கி ஆட்டம் போடுவே, நேரம் ஆகிப் போகும். முக்கியமான சோலியா திருமங்கலம் வரையும் போகணும். புது ஆர்டர் ஒண்ணு வந்துருக்கு. இன்னொரு நாள் கூட்டிப் போறேன்டி..!”
“அப்போ எனக்கு எதாவது வாங்கிட்டு வர்ரியா? லஞ்சம் கொடுத்தால் தான் விடுவேன். இல்லைன்னா என்னை தோட்டத்துக்கு கூட்டிட்டு தான் போகணும். நான் உன்னை விடவே மாட்டேன்!” அவன் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள் கருவிழி.
“கிறுக்கச்சி! என்ன வேணும்ன்னு சொல்லித் தொலை! வாங்கிட்டு வர்ரேன்.!”
“விருதுநகர் பொறிச்ச புரோட்டா வேணும்.!”
“ஏன் மாகாராணி, வீட்டில் இருக்கிற இட்லி, தோசையெல்லாம் திங்க மாட்டீங்களோ?” கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்க,
“மாமா..!” என்ற அவள் சிணுங்கலில்,
“வாங்கிட்டு வர்ரேன்டி கிறுக்கச்சி..! கையை விடு!” எனக் கரத்தை உருவிக் கொண்டான் துடிவேல் அழகர்.
“தேங்க்ஸ் அழகரு..!” என அவன் கன்னம் பிடித்துக் கிள்ளியவள் மான்குட்டியாய் படிகளில் இறங்கி ஓடிப் போனாள்.
“ஆள்மயக்கி..! மாமா, அழகருன்னு சொல்லியே மயக்கிப்புட்டா கிறுக்கச்சி!” என்றவனின் முகத்தில் புன்னகையின் சாயல்.
****
“ஏய் சீமை சித்தராங்கி..! நில்லுடி! எந்நேரமும் காலில் சக்கரம் கட்டிக்கிட்டே திரியுற?” அழகர் கிளம்பியதும், அவனை வழியனுப்பிட்டு வந்தவளை, அவள் அறைக்குள் நுழையும் முன்னமே தடுத்து நிறுத்தினார் அங்கயற்கண்ணி.
“என்ன அம்மாச்சி, எதுக்கு கூப்பிட்டீங்க?”
“இங்கே வா! இங்கண வந்து உட்காரு..!”
“நீங்க என்னத்துக்கு மேலே ஏறி வந்தீங்க, என்னை அழைச்சா நான் வர மாட்டேனா?”
“உன்கிட்டே ஒரு சங்கதி கேட்கணும் அதுக்குத்தான் நானே வந்தேன்!” மாடி அறைகளுக்கு முன்னே இருந்த கூடத்தில், தரையில் கால்நீட்டி அமர்ந்திருந்தார். அவர் பொடி வைத்து பேசுவதிலேயே விஷயம் சிறியதல்ல என்பதை உணர்ந்துக் கொண்டவள், தயக்கதுடனே அவர் அருகில் அமர்ந்தாள்.
“இந்தாரு விழி, அம்மாச்சி கேட்கிறதுக்கு பொய் சொல்லாமல், நெசத்ததேன் சொல்லணும். நீ எங்க வீட்டு இளவரசி டி. எங்க விருப்பத்துக்கு முடிவெடுத்து நாங்க எதையும் செஞ்சுப்புட மாட்டோம். உன் விருப்பம்தேன் எங்களுக்கு முக்கியம்!” பீடிகையுடன் அவள் முகத்தை அங்கயற்கண்ணி பார்க்க, புரியாமல் அவரைப் பார்த்தாள் கருவிழி.
“என்னத்துக்குடி இந்த முழி முழிக்கிறவ?”
“இல்லை, நீங்க என்ன சொல்ல வாரீங்கன்னு எனக்கு ஒண்ணும் விளங்கலையே?”
“உன் தாத்தன் நீ சொல்லமல், கொள்ளாமல் பாண்டிச்சேரி வரை போய்ட்டியேன்னு கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டாங்கதான்.. முதல்ல நெடுமாறனுக்குத்தேன் உன்னைக் கட்டணும்னு தாத்தா முடிவு பண்ணினாங்க, ஆனால் நீயும் அழகரும் கல்யாணம் வரைப் போன பிறகு என்ன செய்ய முடியும்? வாழப்போறவுக நீங்க தானே? உனக்கு பிடிச்ச மாதிரியே இருக்கட்டும்ன்னு அழகருக்கே உன்னைக் கட்டுவோம்ன்னு முடிவு செஞ்சாச்சு. ஏன் விழி, நெசமாவே உனக்கு அழகர் மேல விருப்பம் தானே?” அவள் முகத்தை கூர்மையாய் ஆராய்ந்தார் அங்கயற்கண்ணி.
‘ஆத்தி! அம்மாச்சி என்ன இப்படி கேட்குறாக.? இப்போ நான் என்ன சொல்ல? அழகரு என்னை ஒத்தையில் சிக்க வச்சிட்டு போய்ட்டியே..!’ என மனதிற்குள் புலம்பியவள்,
“அம்மாச்சி..!” பதில் சொல்ல முடியாது திருதிருத்தாள்.
“சொல்லுடி! ஊரு வாய் பேசுவே? வாயைத் திறந்து பேசுடி. ஊரு முழுக்க கண்டதையும் பேசுறாய்ங்க! பத்தாக்குறைக்கு படிக்கிற இடத்திலும் என்னைத்தையோ இழுத்து வச்சிட்டு வந்திருக்க! என்னன்னு சொல்லேன்டி!” அவள் அப்போதும் கூட பதில் சொல்லாது விழிக்க,
“அகம் பிடிச்சக் கழுதை! நெசமாவே உனக்கு அழகர் மேலே விருப்பம் தானா? இல்லை படிக்கிற இடத்தில் எதாவது பரதேசி பயலை விரும்புறியா?” கொஞ்சம் கடினக் குரலில் அவர் கேட்க,
“இல்லை! இல்லை அம்மாச்சி! நான் யாரையும் விரும்பவே இல்லை! அழகரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அம்மாச்சி! ஆனால் கல்யாணம் பண்ணுற அளவுக்கு பிடிக்குமான்னு எனக்கே தெரியலை..!” அவசரமாய் அவள் மறுப்பு சொன்னதிலேயே அவள் மனதில் வேறு யாரும் இல்லை என்பதை அறிந்துக் கொண்டார் அங்கயற்கண்ணி. அவளுக்குமே ரோஹனை விரும்புவதாய்ச் சொல்ல முடியவில்லை. கிட்டதட்ட ரோஹன் அவளின் ஞாபகமறதியாய் மாறிப்போயிருந்தான்.
“கல்யாணம் பண்ணுற அளவுக்குப் பிடிக்காமல் தான், கல்யாணம் வரைக்கும் போனீகளாக்கும்? என்ன பேசுறோம்ன்னு தெரியாமலே பேசிக்கிட்டு திரி. அழகரு உம் மேல அம்புட்டு ஆசையா இருக்கான்டி! எம் பேரன் மனசை எதையாச்சும் சொல்லி உடைச்சுப்புடாதே..!”
“அதான் எனக்குத் தெரியுமே..! மாமாவுக்கு என்னைப் பிடிக்கும்ன்னு தெரியுமே.!”
“தெரிஞ்சா சரித்தேன். உம் மாமன் அந்த காக்காவிரட்டி பயலோட சேர்ந்து என்னமோ புலம்பிக்கிட்டு திரிஞ்சான். நான் கூட என்னமோ ஏதோன்னு பதறிப் போய்ட்டேன். உன் தாத்தன் கிட்டே சொல்லி உங்க கல்யாணத்தை முதலில் பண்ண சொல்லணும். கிறுக்குப் பிடிச்சு புலம்பிக்கிட்டு திரியுறான். நெடுமாறன் கதை என்னன்னு அவனை வேற பார்க்கணும்.!” தன்போக்கில் அவர் பேசிக் கொண்டிருக்க,
“மாமா என்னத்துக்கு புலம்பிச்சு? அம்மாச்சி என்ன சொல்லுது? ஒண்ணும் விளங்கலையே?” என முனகியவள்,
“அம்மாச்சி அழகரு என்ன புலம்பிச்சு? நீங்க என்கிட்டே என்னத்துக்கு இதையெல்லாம் கேட்குறீங்க?” எனக் கேட்டாள்.
“உன்னை நினைச்சு தான் புலம்பிக்கிட்டு திரிஞ்சான்.! நீ பிறந்ததிலிருந்து உன்னைச் சுமாந்துக்கிட்டு திரியிறேன்னு சொன்னான். அவன் மனசை நீ புரிஞ்சுக்கலைன்னு சொன்னான். நீ என்னன்னா அவனைப் பிடிக்கும்ன்னு சொல்றே, இந்தக் காலத்துப் பிள்ளைகள் பேச்சும் விளங்கல, ஒண்ணும் விளங்கலை!” என்றவர் எழுந்து சென்றுவிட,
‘அழகரு வரட்டும் என்னன்னு கேட்கணும்’ என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் கருவிழி.
நேற்று இரவு வீட்டின் இரும்பு கேட் திறந்திருக்கவும், காத்தவராயன் தான் வந்திருக்கிறான் என்றெண்ணி, மொட்டை மாடியை நோக்கிப் போனவர், அழகரின்பேச்சை அரையும் குறையுமாய் கேட்டிருந்தார்.
அவனின் குரலில் தெரிந்த ஆதங்கத்தில் தான், தவறாக எதுவும் நடந்துவிடக் கூடாதென எண்ணி, கருவிழியிடம் விசாரித்தார். ஆனால் நடந்த விஷயங்கள், எதுவும் யாருக்கும் முழுமையாய் தெரியாதக் காரணத்தால் அவன் பேசியதன் சாராம்சமும் முழுதாய் விளங்கவில்லை
அங்கயற்கண்ணிக்கு. கருவிழியும் அவனைப் பிடித்திருப்பதாய் சொல்லவும், வேறெந்த பிரச்சனையும் இல்லை என முடிவு செய்துக் கொண்டவர் நிம்மதியாய் எழுந்து சென்றுவிட்டார்.
அதே நேரம்,
தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடை பயின்றுக் கொண்டிருந்தார் சொக்கேசன். மனதிற்குள் ஏதேதோ ஓடிக் கொண்டே இருந்தது. நெடுமாறனுக்கு வரன் பார்க்கும் ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துக் கொண்டிருந்தாலும், அவரின் கவலை முழுவதும் அழகரைப் பற்றித்தான் இருந்தது. கருவிழியின் மீது அழகர் வைத்திருக்கும் நேசம் அவன் விழிகளிலேயே அவருக்குத் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது. ஆனால் அந்த நேசமே அவன் உயிருக்கு ஆபத்தாய் முடிந்துவிடுமோ? என்ற எண்ணம் மனதை ஆட்டிப் படைக்க,
‘உனக்கு பெண் வாரிசுக்கு விதியே இல்லை சொக்கேசா..! எப்போவோ நீ செஞ்ச புண்ணியம் உனக்கு பெண் வாரிசை கொடுத்திருக்கு. ஆனால் நீ செஞ்ச பாவம் அவ வாழ்க்கையைப் பறிச்சுருச்சே? இன்னும் தொடரும்.. நீ செஞ்ச பாவம் உன் தலைமுறையைத் தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கும். நீ செஞ்ச பாவம் தானே எல்லாத்துக்கும் காரணம்? அந்தப் பாவம் தான் கருவிழி உருவத்தில் அழகரின் உயிரைப் பறிக்கப் போவுது! நீ வேடிக்கைப் பார்க்கப் போற சொக்கேசா! வேடிக்கைப் பார்க்கப் போறே!’ மனதிற்குள் திரும்பத் திரும்ப கேட்டக் குரலில் தொய்ந்து போய் நாற்காலியில் அமர்ந்த சொக்கேசனின் கண்கள் கலங்கியிருக்க, உடல் முழுதும் வியர்வையில் குளித்திருந்தது. தன் மனதிற்குள் அடிக்கடி கேட்கும் இந்தக் குரலில், ஏதோ ஒன்று விபரீதமாய் நடக்கப் போகிறதென்பதை உணர்ந்தவருக்கு நெஞ்சுக்கூடு சில்லிட்டுப் போக, உயிர் நடுங்கியது. படபடவென துடிக்கும் இதயத்தை அழுத்திப் பிடித்தவர், அமர்ந்திருந்தவாக்கிலேயே அப்படியே மயங்கி சரிந்திருந்தார்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


“என் வாழ்க்கையே அவள் தான்” இவ்ளோ அன்பையும், ஆசையையும் வெச்சிட்டு இத்தனை நாள் எப்படி அதன வெளிக்காட்டாம இருந்தானோ அழகர்!
காக்கா விரட்டி நல்ல நண்பனா அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வெச்சிட்டான்.
“வாழ்க்கை முழுக்க வர போறவனுக்காக உண்மையை சொல்லாம, எதுக்கு உன்னையை காப்பாத்த பொய் சொல்லணும்” 👏🏼👏🏼
கரு கருவோட ஒத்த சொல்லுக்கு கட்டுப்பட்டு நிக்கிறவன் தான் அவள விட்டுக்கொடுத்துட்டு போகப்போறானக்கும்!
“உன் மேல கிறுக்கு பிடிச்சு சுத்துறானு”, அம்மாட்சி சொல்லியும் கூட இவ அவன் கிட்ட விசாரிக்க போறாராலாம்.🙆🏼♀️
சொக்கேசன் தாத்தா என்ன விபரீதமான கடந்தகால கதை வெச்சிருக்காரோ தெரியலையே!
பேச்சு மொழி அழகா இருக்கு 😍
அம்மாட்சி சொல்றது ரொம்ப நல்லாயிருக்கு. ❤️ எங்க ஊர்ல நாங்க அப்படி தான் கூப்பிடுவோம்.
மிக்க நன்றி டா. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டா 💜 மதுரை பேச்சு வழக்கு நமக்கு கொஞ்சம் நெருக்கம் தான் டா. 😍 தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் 😍💜
அய்யோ தாத்தாவுக்கு என்னாச்சு … எதும் முன் ஜென்ம கதை இருக்கா அழகருக்கும் விழிக்கும் … அழகரின் நண்பன் சூப்பர் … நல்ல அறிவுரைகள் சொல்றான் … கரெக்ட்டா பேசுறான் …
புத்தாண்டு வாழ்த்துக்கள் டியர்.😍
நிஜமாவே நல்ல நண்பன் கிடைப்பது வரம் தான் டா ❤ முன் ஜென்மமெல்லாம் இல்லை டா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤💜