Loading

அகம்-16

“நாயகன் மீண்டும் வர

எட்டு திக்கும் பயம் தானே

ராட்சச ராமன் என

கனவை கொண்டவன் இவன் தானே

இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்

இவன் கலை ஞானம் போர் வினையாகும்

இவன் அடையாளம் அது கடலாகும்

பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்

ஆரம்பிக்கலாங்களா..?”

என்ற ரிங்டோனை ஒன்பதாவது முறையாய் ஒலிக்கவிட்டு மௌனமானது அலைபேசி.

“இம்புட்டு சோலி கிடக்கு! இந்நேரத்தில் யாரு திரும்பத் திரும்ப அழைக்கிறது?”

சட்டைப்பைக்குள்ளிருந்த அலைபேசியைக் கரத்தில் எடுத்துப் பார்த்தான் காத்தவராயன்.

“ஆத்தி! தங்கச்சி! எதுக்கு இத்தனை தடவை கூப்பிட்டிருக்கு?” என முணுமுணுத்தபடியே மீண்டும் கருவிழிக்கு அழைப்பெடுத்து காதுக்குக் கொடுத்தான் அவன்.

“என்னம்மா தங்கச்சி, எனக்கெல்லாம் ஃபோன் போடுறியே.. என்னைக்கும் இல்லாத அதிசயமா இருக்கு?!”

“உனக்கு ஃபோன் போடணும்ன்னு எனக்கு ஆசை பாரு! அழகர் எங்கே?” எனக் கேட்டாள் கருவிழி.

“அழகரா? இப்போத்தான் மூட்டை கட்டி கிலோ ஐம்பது ரூபாய்ன்னு வித்துட்டு வந்தேன். உன் மாமன் மயன் எங்கேன்னு எனக்கு எப்படித் தெரியும்?” பதில் கேள்வி கேட்டான் காத்தவராயன்.

“காக்கா விரட்டி! கடுப்பேத்தாமல் சொல்லிரு! மாமா விடி காலையில் கிளம்பி போச்சு இன்னுமும் காணோம். காலைச் சாப்பாட்டுக்குக் கூட வரவே இல்லை. நீ தானே பொழுதன்னைக்கும் அழகர் கூடவே சுத்தற.? எங்கேன்னு விசாரிச்சு சொல்லு!” கனவின் தாக்கத்தோடு அழகர் இன்னும் வீட்டுக்கு வராததும் சேர்ந்து அவளுக்குக் கொஞ்சம் பதற்றமாய் இருந்தது.

“ஏதோ சோலி இருக்குன்னு காளவாசல் வரையிலும் போயிருக்கான். உனக்கெல்லாம் காலேஜு என்னத்துக்கு லீவு விட்டாய்ங்க? காலையிலே ஃபோனைப் போட்டு உசுரை எடுக்கிறே!”சலித்துக் கொண்டான் காத்தவராயன்.

“என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ! அழகரு எப்போ வரும்ன்னு ஃபோன் போட்டு கேட்டு சொல்லு!”

“ஏன் தங்கச்சி, உங்கிட்டே ஃபோன் இல்லையா? நீங்க கேட்க மாட்டீங்களா?”

“நான் ஃபோன் போட்டால் அழகரு வையும்.”

“என்னை மட்டும் இடுப்பில் தூக்கி வச்சு கொஞ்சுவாய்ங்களா.? நீ தப்பிச்சுக்க என்னைக் கோர்த்து விடப் பார்க்கிறியா? நீ ஃபோன் போட்டுக் கேட்கிறதுன்னா கேளு! இல்லைன்னா பேசாமல் ஃபோனை வச்சிட்டுப் போய்த் தூங்கு!”

“என்னடா வேலையைப் பார்க்கச் சொன்னால், ஃபோனில் கதையடிச்சுட்டு கிடக்க? நேரத்துக்கு லோடு போகலைன்னு வையி.. உன்னை உரிச்சுப்புடுவேன் உரிச்சு!” காத்தவராயன் அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கண்டித்தான் அழகர்.

“ஆமா! நாங்க வாழைப்பழம் அப்படியே தோலை உரிக்கிறதுக்கு. உன் அத்தை மகள் அழகு ரதி தான் ஃபோனைப் போட்டு இம்சையைக் கூட்டிக்கிட்டு கிடக்கு. என்னன்னு கேளு!” அலைபேசியை அழகரிடம் தந்துவிட்டு நகர்ந்துவிட்டான் காத்தவராயன்.

“என்னடி?”

“அழகரு! நீ இன்னும் சாப்பிட வரலை! சின்னத்தைக் கேட்க சொன்னாங்க!”

“நான் தான் நேரஞ்செண்டு தான் வருவேன்னு அம்மாகிட்டே சொல்லிட்டேனே..” யோசனையோடு சொன்னவன்,

“என்ன ஆச்சுடி கரு கரு?” எனக் கேட்டான்.

“தெரியலை மாமா! மனசு என்னவோ படப்படன்னு அடிச்சுக்கிது. உள்ளுக்குள்ளே ஏதோ பயமாவே இருக்கு. நீ வேற விடியும் முன்னவே போய்ட்டு இன்னும் வரலையா, ரொம்ப ஒரு மாதிரி இருக்கு.!” அவள் குரலில் இருந்த பதற்றம் இவனைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.

“ஏய் கிறுக்கச்சி! எதுவும் கெட்ட சொப்பனம் கண்டியா? இப்போ என்ன சாப்பிட வரணும் அம்புட்டுதானே வாரேன். நொய் நொய்ன்னு ஃபோன் அடிக்காமல் இரு. ஒரு அரைமணி நேரத்தில் வந்துருவேன்.!” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தவன், காத்தவராயனையும் அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

******

“நான் என்னத்துக்கு அழகு? நீ போய்ச் சாப்பிட்டு வா!” என மறுத்த காத்தவராயனை,

“சும்மா படம் காட்டாதே டா பக்கி! அப்பத்தா உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு சொன்னுச்சு. வந்து வண்டியில் ஏறு..!” என மறுக்க வாய்ப்பளிக்காமல் அழைத்தான் அழகர்.

“ம்க்கும் அந்தக் கிழவிக்குப் பொழுது போயிருக்காது. என்னை எதாவது சொல்றதில் உங்க அப்பத்தாவுக்கு அப்படியொரு ஆனந்தம். என்கிட்டே ஒரண்டை இழுக்கணும்ன்னே வரச் சொல்லுது கிழவி! இன்னைக்கு நானா அதுவான்னு பார்த்துருவோம்.!” வீர வசனம் பேசியவன் அழகரின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான்.

“உங்க குடும்பத்தில் இருக்கிற அம்புட்டு பேரும் என்னை ஏன் கொலைகாரனைப் பார்க்கிற மாதிரியே பார்த்து வைக்கிறாய்ங்க?!”

“அதுவா காக்கா விரட்டி, உன் முக ராசி அப்படி ராசா.. நான் என்ன பண்ணட்டும்?”

“உங்க குடும்பத்துக் கூடச் சங்காத்தம் வைக்கிறதுக்குப் பேசாமல் குப்பை பொறுக்கப் போகலாம். காலக் கொடுமை டா காக்காவிரட்டி!” தன்னைத் தானே சலித்தபடியே நண்பனோடு பயணித்தான் அவன்.

சில நிமிடப் பயணத்திற்குப் பிறகு, வீட்டை வந்தடையவும், வாகனத்திலிருந்து கீழிறங்கி, அந்தப் பெரிய இரும்பு கேட்டை திறந்துவிட்டான் காத்தவராயன்.

 

வாகனத்தை அதற்கான இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டை நோக்கிப் போனான் துடிவேல் அழகர்.

“சின்னத்தை! மாமா வந்துருச்சு!” கருவிழியின் குரல் வாசல் தாண்டி அவன் செவிகளைத் தீண்டியது.

 

வாகனத்தின் சத்தத்தை வைத்தே தன் வரவை அறிந்த அத்தை மகளை நினைத்து, அவன் உதடுகளில் வசீகரப் புன்னகை வந்தமர்ந்தது.

 

“என்ன தங்கச்சி இப்படிக் கத்திக்கிட்டு கெடக்கு?”

“உன் தொங்கச்சிக்கு அண்ணனைப் பார்க்கணும்ன்னு ஆசையாம்.!”

“ம்க்கும்! உன் அத்தை மவ, உன்னைத்தான் சுத்தி சுத்தி வர்ரா! பொழுது விடிஞ்சதிலிருந்து அடையும் வரைக்கும், மாமா மாமான்னு தான் திரியுது. இதில் என் தங்கச்சி அந்த ரோஹனை விரும்புதுன்னா ஆச்சிரியமாகத்தான் இருக்கு.!” எனச் சாதாரணமாய்க் காத்தவராயன் சொல்ல, திடுக்கிட்டு திரும்பி அவனைப் பார்த்தான் அழகர்.

“முட்டாப்பய மாதிரி உளறி வைக்காதே! மாமன் மவன்னு பாசத்தில் தான் அது என்னையே சுத்திட்டு கிடக்கு! மத்தபடி வேற எதுவும் இருக்காது.!” காத்தவராயனிடம் சொல்வது போல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் துடிவேல் அழகர்.

“நம்பிட்டேன் அழகு! நம்பலைன்னா சோறு போட மாட்டீங்களே..!” சின்னச் சிரிப்புடன் சொன்னபடியே நிலை வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்தான் காத்தவராயன். பின்னால் வந்த அழகர் உள்ளே சென்றுவிட, அங்கயற்கண்ணி கண்ணில் தென்படுகிறாரா? என ஆராய்ந்தபடியே மெதுவாய் வந்தான் காத்தவராயன்.

“என்னடா காக்கா விரட்டி! காத்து இந்தப்பக்கமா வீசுது?” கூடத்தில் தூணில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்த அங்கயற்கண்ணி கேட்கவும்,

‘இந்தா ஆரம்பிச்சுருச்சுல்ல கிழவி!’ மனதிற்குள் பேசிக் கொண்டவன்,

“அது.. ஒரு பெரிய புயல் வந்து என்னைத் தூக்கிட்டு வந்து உங்க வீட்டுக்குள்ளே போட்டுருச்சு. காத்து இந்தப்பக்கமா அடிச்சதால் நானும் உங்க வீட்டுக்குள்ளே வந்து விழுந்துட்டேன்.!” சிரிக்காமல் சொன்னான் அவன்.

“விழந்தது தான் விழுந்தே, அந்தக் கிணத்துல விழுந்துருக்கலாம்டா! தப்பிச்சுப் போய் வீட்டுக்குள்ளே விழுந்துட்டே!” தானும் சிரிக்காமலே பதில் சொன்னார் அங்கயற்கண்ணி

.
“இந்தாரு கிழவி! சும்மா என்னை ஏன் வம்புக்கு இழுத்துட்டே கிடக்க?”

“யாருடா கிழவி? மூட்டு செத்த பயலே.. இந்தக் காலத்துப் பயலுக எவனுக்காவது தரையில் கால் நீட்டி உட்கார முடியுதா? எல்லாரும் சொங்கிப் பயலுங்க! இந்தாரு இன்னைக்குச் சனிக்கிழமை, சாமத்தில் வந்து, எவனாவது மெத்தைக்கு (மாடி) போனீங்க கொன்னு பொலி போட்டுப்புடுவேன்.!”

“இன்னைக்குச் சரக்கு சாட்டர்டே.. அப்படித்தான் வருவேன்..என்கிட்டே சொல்றதை உன் பேரன் கிட்டே சொல்ல வேண்டியது தானே? என்னத்துக்கு என்கிட்டே சொல்றே? என் நண்பன் கூப்பிட்டா நான் வருவேன். என் நண்பன் போட்ட சோறு, தினமும் தின்னேன் பாரு..!” எனப் பாட்டுப்பாடி அங்கயற்கண்ணியைக் காத்தவராயன் வம்புக்கு இழுத்த அதே நேரம், மாடிப்படிகளில் தோரணையாய் இறங்கி வந்தார் சொக்கேசன்.

“ஆத்தி ஹிட்லரு! இவரு வரும் போது கரெக்ட்டா கோர்த்து விடுறியா கிழவி?” காத்தவராயன் கலங்க,

“இந்தாரு காக்கா விரட்டி! எம் பேரன் சொக்கத் தங்கமாக்கும்! நீ தான் என் பேரனைக் கெடுக்கிறே! இன்னைக்கு ராத்திரி மட்டும் நீ இந்த வீட்டுப்பக்கம் வந்தே.. அப்பறம் இருக்கு உனக்கு!” என அவனை மிரட்டினார் அங்கயற்கண்ணி.

“உனக்கெல்லாம் யாரு கிழவி அங்கயற்கண்ணின்னு பேரு வச்சது. முழியாங்கண்ணின்னு வச்சிருக்கலாம். இவுக பேரன் தண்ணி கலக்காத பால், நாங்க தான் காப்பிப் பொடியைக் கலந்து அழுக்காக்கிட்டோம். என்னையும் என் நண்பனையும் பிரிக்க எதாச்சும் சதி பண்ணினன்னு தெரிஞ்சுது, நீ தூங்கும் போது உன் லோலாக்கை அத்துட்டு போய் வித்துட்டு வந்துருவேன். அப்பறம் காதோரம் லோலாக்குன்னு நீ தாத்தாவைப் பார்த்து டூயட் பாட முடியாது!” என அவன் சொல்ல,

“ச்சீ போடா கூறுகெட்ட பயலே..!” நாணத்தோடு சிரித்துவிட்டார் அங்கயற்கண்ணி.

“எங்கே போறேடா? எம் மருவளுங்க ரெண்டு பேரும் நல்லா சமைச்சு வச்சிருக்காளுங்க சாப்பிட்டு போடா!” சொக்கேசனைப் பார்த்துவிட்டு வெளியேற முயன்றவனை நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்டார் அங்கயற்கண்ணி.

“உன் புருஷனுக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு. இந்தச் சிறுத்தை இப்போதைக்குச் சிக்காது.!” என வெளியேற திரும்ப,

“தம்பி! எம்புட்டு நேரம் அங்கணையே நின்னு பேசிக்கிட்டு இருப்ப? வா சாப்பிடுவோம். அழகரு! நீயும் வந்து உட்காருய்யா!” என அரசி அழைக்க,

“சாப்பாட்டு டேபிளில் சாப்பிட விடாமல் விசாரணை பண்ணுவாய்ங்களே..! ஆத்தி பயந்து வருதே.! அம்புட்டு பக்கியும் என்னை மாட்டிவிட்டு ஓடிருங்களே..!” புலம்பியபடியே உணவருந்தும் மேஜையில் அழகரின் அருகே அமர்ந்தான் காத்தவராயன்.

“பூங்கொடி அக்கா! எல்லாருக்கும் இட்லி வைங்க! நான் சட்னியை ஊத்தறேன்.!” என அரசி அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருக்க,

“என்னதுக்குடி ஃபோன் போட்டு நொய் நொய்ங்கிறே? உனக்குப் பசிக்குதுன்னா நீ சாப்பிட வேண்டியது தானே?” கிசுகிசுப்பாய் கருவிழியின் காதுக்குள் கேட்டான் துடிவேல் அழகர்.

“என்ன அழகரு! மத்த நாளெல்லாம் காலேஜுன்னு எஸ்கேப் ஆகிருவேன். இன்னைக்குச் சனிக்கிழமை, தாத்தா கூடச் சேர்ந்து சாப்பிடும் போது, எதாவது கேட்டால் நான் எப்படி ஒத்தையா சமாளிப்பேன்.?”குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள் கருவிழி.

அந்தக் கனவின் தாக்கம் அழகரை நேரில் கண்டதும் காணாமல் போயிருந்தது. அழகர் வருவதற்கு முன்பு வரை, அவன் வரும் வழியில் விபத்து எதுவும் நேர்ந்துவிடுமோ? எனப் பயந்து கொண்டு தான் இருந்தாள். ஆனால் அவனைக் கண்டதும்,’வெறும் கனவிற்கா இப்படிப் பயந்தோம்.? தேவையில்லாமல் பயப்படுகிறோம்!’ எனத் தோன்ற ஆரம்பித்திருந்தது.

 

ஆனால் அப்போதும் கூட அவளுக்குப் புரியவில்லை. அவளின் பயமும் அவனே..! அவளின் தைரியமும் அவனே..!

“கரு கரு! உன்னைக் கொன்னுருவேன்டி! இப்போ சாப்பிட வரச்சொல்லி என்னையும் கோர்த்து விட்டுட்டே!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“படிப்பெல்லாம் எப்படிப் போகுது விழி? காலேஜில் எதோ தகராறுன்னு கேள்விபட்டேன்!” சொக்கேசரின் கவனம் சாப்பாட்டில் இருந்தாலும் கேள்வி கருவிழிக்கு தான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை தாத்தா! யாரோ தப்பா சொல்லிட்டாங்க!”

“ஓ! உங்க ப்ரின்ஸிபல் கூடத் தப்பாத்தான் சொல்லுவாங்களோ?” அழுத்தமாய் அடுத்தக் கேள்வி அவர் கேட்டதும் பாவமாய் அழகரைப் பார்த்தாள் விழி.

“அது ஒண்ணுமில்லைங்க மாமா! நம்ம புள்ள நட்பாகத்தான் பழயிருக்கா. அந்தப் பய தான் தப்பா புரிஞ்சுக்கிட்டான் போல..! நம்ம விழி மேல எந்தத் தப்பும் இல்லை!” மருமகளுக்குப் பரிந்து வந்தார் அரசி.

“நானும், கதிரும் காலேஜில் போய் விசாரிச்சுட்டோம் பா! நம்ம விழி ஃப்ரெண்ட்டுன்னு தான் சொல்லியிருக்கா!” வீட்டின் மூத்த மகனாய் தான் விசாரித்து வந்தவற்றைச் சொன்னார் சரவணன்.

“அழகரு! நான் யார் பேச்சையும் நம்பலை. உன்னைத்தேன் நம்புறேன். நீ சொல்லு! விழி சொல்றது உண்மையா? அவ நெசமாவே அந்தப் பய கூட நட்பாகத்தான் பழகினாளா?” சொக்கேசனின் பார்வை அழகரை ஆழமாய்த் துளைத்தது.

“அய்யா..!” தடுமாற்றத்துடன், தயக்கமாய்க் கருவிழியை ஏறிட்டுப் பார்த்தான் அவன்.

“சொல்லு அழகரு!” என மீண்டும் கேட்ட போதும் அழகரிடம் அசாத்திய மௌனம்.

“அய்த்த மவளுக்காக மௌனம் சாதிக்கிறிகளாக்கும்?” சொல்லாமல் விடப் போவதில்லை என்ற தீர்மானம் தெரிந்தது சொக்கேசனின் குரலில்.

“காலேஜில் நடந்ததைப் பத்தி எனக்குத் தெரியாது! விழி பின்னால் ஒருத்தன் வந்தான் நான் அவனை அடிச்சேன். அம்புட்டுதான்ய்யா! கருவிழியும் நானும் தான் விரும்பறோம். வீட்டில் சொல்ல சங்கடப்பட்டுக்கிட்டு தான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு அழகர் கோயில் வரை போனோம். இதில் வேற எதுவும் இல்லை.!” உண்மையும் முழுதாய் சொல்லாது, பொய்யையும் முழுதாய் சொல்லாது பேசினான் அழகர்.

“மாமா என்னத்துக்குப் பொய் சொல்றே? நாம எப்போ விரும்பினோம்.? நான் ரோஹனைத் தானே விரும்பினேன்!” காதுக்குள் முணுமுணுத்தாள் கருவிழி.

“நீ வேற வாயை மூடிக்கிட்டு இருடி கிறுக்கச்சி!” என அவளை ஏசியவன் தாத்தாவின் முகத்தில் பார்வையை நிலைக்கவிட்டான்.

“ஏய்! காத்தவராயா, அழகர் சொல்றது உண்மையா? ஏன்னா எல்லாப் பஞ்சாயத்திலேயும் நீதானே இருந்திருக்கே? உன்கிட்டே கேட்டால் தானே முழுசா தெரியும்?”

 

அழகரிடமிருந்து காத்தவராயனிடம் இடம் பெயர்ந்தது தாத்தாவின் பார்வை.

‘ஆத்தி! நான் இப்போ என்ன சொல்றது? கடைசியில் என்கிட்டே தான் வருவாய்ங்க! இந்த இடியாப்பத்தில் எத்தனை சிக்கல் இருக்குன்னு எண்ணிக்கிட்டு சிவனேன்னு தானே இருந்தேன். என்னை ஊடால இழுக்கலைன்னா ஒருத்தருக்கும் தூக்கம் வராது.! மனதுக்குள் சத்தமில்லாமல் புலம்பியவன், அழகரைப் பார்க்க,

‘உண்மையைச் சொன்னே கொன்னுடுவேன்!’ எனும் விதமாய்ப் பார்த்து வைத்தான் அழகர்.

“அது.. வந்து.. அழகர் சொன்னது அம்புட்டும் உண்மைதேன். நூற்றுக்கு நூறு உண்மை!” தட்டுத் தடுமாறி சொன்னவனை,

“என்ன உண்மை?” என மீண்டும் கேட்டார் சொக்கேசன்.

“அடேய் அழகரு! மொட்டையா என்ன உண்மைன்னு கேட்டால் என்னதைச் சொல்லுவேன்? எதையாவது பேசி காப்பாத்தி விடுங்கடா! கல்லு மாதிரி உட்கார்ந்து இட்லியும், இடியாப்பமும் திங்கிறாய்ங்க! எம்மா தங்கச்சி நல்லா நெய் தோசையா தின்னுப்புட்டு பொய் பொய்யா பேசு!” அழகரிடமும் கருவிழியிடமும் முணுமுணுத்தவன்,

“உங்க பேரன் சொன்னது அம்புட்டு உண்மைதேன்! வேற எதுவும் எனக்குத் தெரியாதுங்க சாமி! உங்க பேத்தி வேணும்ன்னா பொய்யா சொல்லும்! என் நண்பன் பொய் பேசவே மாட்டான்!” என அவன் சொல்ல, சிரித்துக் கொண்டே எழுந்துவிட்டார் சொக்கேசன்.

தன் அத்தை மகளை யாரும் தவறாகப் பேசிவிடக் கூடாதென நினைத்த அழகரின் செயலில் அவருக்கு மனம் நிறைந்திருந்தது.

 

அழகருக்கும் கருவிழிக்கும் அவர்களுக்கு இடையேயான நேசம் புரிந்ததோ இல்லையோ, ஆனால் சொக்கேசனுக்கு நன்றாகவே புரிந்தது. இருவரின் அன்பில் அவருக்கு மனம் நிறைந்தாலும், மனதின் ஏதோவொரு மூலையில் சின்னச் சலனம் இருக்கத்தான் செய்தது. ஆனால் எதையுமே குடும்பத்தினரிடம் காட்டப் பிரியப்படாதவர், கை கழுவிவிட்டு புன்னகையுடனே அறைக்குள் சென்றிருந்தார்.

 

“ஆத்தி! சிங்கம் சிரிச்சுருச்சு..! அழகு சிங்கம் சிரிக்குது பாரு!” உற்சாகமாய்க் காத்தவராயன் சொல்ல, அனைவரின் முகங்களிலும் அந்தப் புன்னகை அழகாய் தொற்றிக் கொண்டது.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
24
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. இன்னைக்கு அத்தியாயத்தோட ஹீரோ காத்தவராயன் தான் … அருமையான நகைச்சுவை உரையாடல்கள் …

    ரெண்டு பேர் மனசுலயும் காதல் இருக்கு … அவங்களுக்கே அது காதல்னு தெரியல … அவ்ளோதான் …

    1. Author

      நன்றிகள் டியர் 💛 உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💚

  2. கரு கருவோட அழகரை கிலோ அம்பதுனு மூட்டைக் கட்டி வித்திட்டியா காத்து! 🤣🤣

    விழியோட பதற்றம் புரிந்து உடனே கிளம்பிட்டானே அழகர். அம்புட்டு பாசம் அத்தை மக மேல.

    இன்னைக்கு அத்தியாயம் முழுவதும் கலகலப்பா இருந்தது.

    “காத்து அடிச்சு வீட்டுக்குள்ள விழுந்துட்டேன்”. 🤣🤣

    “அவன் தண்ணி கலக்காத பால். நான் தான் காப்பி பொடி கொட்டி அழுக்காக்கிட்டேன்” 🤣

    கம்முனு இடியாப்ப சிக்கலை எண்ணிக்கிட்டு கிடந்தவன கூப்பிட்டு, இடியாப்ப சிக்கலுக்குள்ள இழுத்து போடறாங்க சொக்கேசன் family’.

    நெய் தோசையா தின்னு பொய் பொய்யா பேசும் விழியோட பேச்சையும், அத்தை மகளை விட்டு கொடுக்காமல் காப்பாற்றும் அழகரின் பேச்சையும் முழுதாக நம்பவில்லை என்றாலும் அவர்களுக்குள் இழையோடும் அன்பை நன்கு அறிந்து கொண்டார் சொக்கேசன்.

    1. Author

      😂😂😂 திரும்ப எடிட் செய்யும் போது எனக்கும் சிரிப்பு தான்டா வந்துச்சு. உங்களுக்குப் பிடிச்சதில் மிக்க மகிழ்ச்சி. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💛💙💜