
அகம்-12
தன் இருசக்கர வாகனத்தில், கருவிழியின் கல்லூரியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் துடிவேல் அழகர்.
எதிர்க்காற்று முகத்தில் மோதி, முன்னுச்சிக் கேசம் காற்றிலாட, கண்களில் குளிர்கண்ணாடி தோரணையாய் வீற்றிருக்க, கருப்பு நிற முழுக்கை சட்டையும், இளநீல நிற ஜீன்ஸூம் அணிந்திருந்தான். அடந்த மீசை தாடிக்கு இடையே பதுங்கிக் கொண்டிருந்த இதழ்கள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
“நேரம் ஆகிருச்சு.! ஏன் லேட்டுன்னு சட்டமா அதிகாரம் பண்ணுவா ராட்சசி! வண்டி ஓட்ட கத்துக்கோடின்னா வீம்புக்குன்னு கத்துக்க மாட்டேங்குறா கிறுக்கச்சி! வீம்பும் திமிரும் ரொம்ப அதிகமாகிருச்சு. அகம் பிடிச்ச கழுதை!” அத்தை மகளை செல்லமாய் வைதாலும் இதற்கடையின் ஓரத்தில் குறுஞ்சிரிப்பு மிச்சமிருந்தது. அவளை நினைத்த மாத்திரத்தில், அவன் மனம் அவனை அறியாமலே நெகிழ்த்தான் செய்கிறது.
அவன் சாப்பாட்டு டப்பாவை அவளிடம் கொடுக்கும் போது, அவள் முகம் கூம்பிப் போன தாமரை மலராய் மொட்டென்று இருந்ததே இவனுக்குக் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது.
அவள் லேசாய் வாடினாலும், முகம் சுருக்கினாலும், இவனுக்குள் வலித்தது. அவளுக்கு ஒன்றென்றால், இவனுக்கு ஏன் வலிக்கிறதென்பதை, யோசிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ அவனுக்கு நேரமில்லை.
அவனைப் பொருத்தவரை அவன் அத்தை பெற்ற ஒற்றை மகள் மீது அவளுக்கு அளவிற்கு அதிகமாகவே பாசம் இருக்கிறது. அவன் அவள் மீது வைத்திருக்கும் பாசம் தான் அத்தனைக்கும் காரணம் என்பது அவன் எண்ணம்.
கல்லூரியை வந்தடைந்து உரிய இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, வழக்கமாக அவள் நின்றிருக்கும் மரத்தடியை நோக்கிப் போனான் அவன். அவளில்லாமல் நின்றிருந்த அந்த மரம் கூட, அவனுக்கு வெறுமையாய் தெரிந்தது.
“எங்கே போயிருப்பா இவ?” வன்மையான உதடுகள் மென்மையாய் முணுமுணுக்க, அவன் கால்கள் வேக நடையிட்டு முன்னேற, கண்களோ அவள் எங்கே? என வலைபோட்டு அவசியது. ஆனால் அவளோ அவன் பார்வைக்குத் தென்படவே இல்லை. தன் கண்களுக்கு அடங்கும் எல்லைவரை தேடிவிட்டான். அவள் தான் அவனின் பார்வை வட்டத்திற்குள் அவள் விழவே இல்லை.
கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாகவே கல்லூரி முழுமைக்கும் அலசிவிட்டான். அவள் எங்கேயும் காணோம் என்றதும், இவனுக்குள் பதற்றம் நிரம்பித் தளும்பியது. படப்பட துடிதுடித்த மனதை, இடக்கையால் அழுத்திப் பிடித்து ஆசுவாசப்படுத்தினான். அந்த நொடி வரையிலுமே அவன் கண்கள், அவளைத் தேடுவதை நிறுத்தவில்லை.
“எங்கே டி போய்த் தொலைஞ்சே? பைத்தியக்காரி! என்னைப் பைத்தியம் மாதிரி அலைய வைக்கிறே?” தனக்குள் பேசியபடி வாகன நிறுத்தத்தில் இருந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினானன். கல்லூரியின் அந்தப் பெரிய கேட்டின் முன் நின்றிருந்த காவலாளியிடமும் விசாரிக்க மறக்கவில்லை. அவள் எங்கே சென்றிருப்பாள்? எனத் தெரியாமல் மனம் குழம்பி பைத்தியம் பிடிக்கும் போல் இருந்தது அவனுக்கு.
‘எங்கே சென்றிருப்பாள்? சொல்லாமல் எப்படி போவாள்? ஒருவேளை பஸ் பிடிச்சு வீட்டுக்குப் போயிருப்பாளோ?!’ என யோசித்தவன், அவசரமாகவே தன் அன்னைக்கு அழைப்பெடுத்திருந்தான்.
“அழகரு! என்னய்யா இந்நேரத்துக்கு அழைச்சிருக்கிறே? விழியைக் கூப்பிட்டத்தானே போனே?, ரெண்டு பேரையும் இன்னும் காணுமேன்னு வாசலையே பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிறேன். எங்கண இருக்கிறே? கிட்டக்க வந்துட்டீகளா?” அரசி கேட்கவும், கருவிழி அங்கே இல்லை என்பதை அனுமானித்துக் கொண்டவன்,
“ஒண்ணும் இல்லைம்மா! கொஞ்சம் தாமதமாகும். அதுக்குத்ததேன் உங்கிட்டே தகவல் சொல்லிப்புடுவோம்ன்னு ஃபோன் போட்டேன்.!” எனச் சொல்லி சமாளித்தான் அவன்.
“சரிய்யா! பார்த்து பத்திரமா புள்ளையைக் கூட்டிக்கிட்டு வா! காலையிலேயே புள்ளைய பஸ்ஸுல அனுப்பிப்புட்ட, புள்ள எப்படி காலேஜ் போய் சேர்ந்துச்சோ! மூஞ்சி வாடிப்போய் போச்சு. அவ கேட்கிறதை வாங்கிக் கொடுத்து சாப்பிட வச்சு கூட்டிட்டு வா அழகரு!”
“உனக்கு புள்ளையை விட மருமக மேலத்தான் பாசம் அதிகம்மா! மகனா மருமகளான்னு வந்தால், உன் ஓட்டு உன் மருமகளுக்குத்தேன்..!” இதழ் சிரிப்பில் துடிக்கக் கேட்டான் அவன்.
“ஒத்தப் பொம்பளப்பிள்ளை டா! என் குலத்தையே கருவில் தாங்க வந்த சாமி டா. என் ஓட்டு எப்போவும் எம் மருமவளுக்குத்தான். நீ பேசிட்டே இருக்காமல் புள்ளையை பார்த்து பத்திரமா கூட்டியாந்துரு! கவனம் அழகரு..!” சொல்லிவிட்டு அரசி அலைபேசியை அணைத்துவிட, இதழோரம் சிரிப்புடன், வாகனத்தைக் கிளப்பியவனுக்கு, திடீரென ரோஹனின் நினைவுகள் நெஞ்சோரம் வந்து நெருஞ்சி முள்ளாய் உறுத்தித் தொலைத்தது.
‘ஒருவேளை ரோஹனால் ஏதேனும் ஆபத்து வந்திருக்குமோ?’ யோசனைகள் எங்கெங்கோ சென்று, இதயத்தின் அத்தனை அறைகளும் எல்லையில்லா படபடப்பை உணர்ந்தது. அவசரமாய் அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்துப் பார்த்தான். அழைப்பு சென்றுக் கொண்டே இருந்ததே ஒழிய அவள் எடுக்கும் வழியைக் காணோம்.
“எடுத்துத் தொலைச்சா தான் என்ன? கிறுக்கச்சி..! எனனைப் போட்டு பாடாய் படுத்தறா!” இதழ்கள் அழுத்தமாய் உச்சரிக்க, இத்தனை நேர இலகு மனநிலை மாறி, மனம் படபடப்பை உணர, வியர்வையில் உடல் நனையத் துவங்கியிருந்தது. அவள் வழக்கமாய் செல்லும், கடைகள், வீதிகள், கோவில் என ஓரிடம் விடாது அலசி ஆராய்ந்துவிட்டான். ஆனால் அவள் எங்கு தேடியும் கிடைக்கவே இல்லை. மாலை மயங்கி கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டத் துவங்கியிருந்த நேரம், அவன் மனம் முழுதும் கலக்கம் சூழ்ந்திருந்தது. மனம் கலக்கம் கொள்ளவும் குழப்பம் நிறைந்து, யோசிக்கக் கூட முடியாது மூளை வேலை நிறுத்தம் செய்தது.
“ஓடிப் போறேன்.. ஓடிப் போறேன்னு சொல்லிட்டு நிஜமாவே போய்ட்டியா டி?” எனத் தனக்குள் பேசியவன், வாகனத்தை ஓரமாய் நிறுத்திவிட்டு, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
திடீரென நிமிர்ந்தவன், ஏதோ யோசனை வந்தவனாய் காத்தவராயனுக்கு அழைப்பெடுத்து காதுக்குக் கொடுத்தான்.
“காத்தவராயா..! நம்ம.. நம்ம.. கருவிழியைக் காணோம்..!” வார்த்தைகள் திக்கித் திக்கி தொண்டைக்குள்ளிருந்து வெளி வர மறுத்தது.
“என்ன அழகு சொல்றே? ஒண்ணும் வெளங்கலை.. நான் மார்கெட்டுக்கு வந்திருக்கேன் அழகு. காய்கறி லோடு ஏத்திட்டு வந்தேன். நீ எங்கண இருக்கே? வண்டி சத்தத்தில் ஒண்ணும் கேட்கலை அழகு.! நான் வந்துட்டு கூப்பிடவா?” அழகர் கேள்வி கேட்கும் முன்னமே இதுவாகத்தான் இருக்கும், என அனுமானித்து பதில் சொன்னான் காத்தவராயன்.
“டேய்! கடுப்பேத்தாமல் சொல்றதைக் கேளு! உன் தொங்கச்சியைக் காணோம் டா! என்னைப் பைத்தியக்காரன் மாதிரி அலைய வைக்கிறா! எங்கே போய்த் தொலைஞ்சாள்ன்னு தெரியலை. சாயங்காலத்தில் இருந்தே தேடி திரிஞ்சுகிட்டு இருக்கேன். பயமா இருக்குடா..! எதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிப் போச்சுன்னா..!?” எனச் சொன்னவனுக்கு, உடலும் மனமும் ஒருசேர தடுமாறியது.
“தங்கச்சி எங்கேயும் போயிருக்காது அழகு! நல்லா தேடிப்பாரு! என் தங்கச்சி மதுரையையே பங்கு போட்டு வித்துப்புடும்.!”
“கண்ணு முன்னாடி இருந்திருந்தேன்னு வையி! உன்னைப் புதைச்ச இடத்தில் புல்லு முளைச்சிருக்கும். நானே அவளைக் காணோம்ன்னு பதறிட்டு இருக்கேன். நீ ஊரை வித்துடுவா, நாட்டை வித்துருவான்னு கதை சொல்லிக்கிட்டு இருக்கே? விடு நானே பார்த்துக்கிறேன். நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.!” என இணைப்பைத் துண்டித்தவன், வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு வேகமாய் விரைந்தான்.
மதுரையின் அத்தனை வீதிகளையும், ஒற்றை ஆளாய் அலசிக் கொண்டு திரிந்தவனுக்கு, மீண்டும் காத்தவராயனிடமிருந்து அழைப்பு வந்தது.
“நான் தான் ஒண்ணும் புடுங்க வேணாம்ன்னு சொல்லிட்டேன்ல்ல? இப்போ எதுக்கு ஃபோன் போட்டு சாவடிக்கிறே.? நானே பார்த்துக்கிறேன்.!” கருவிழியைக் காணாதக் கோபத்தை நண்பனின் தலையில் இறக்கினான் துடிவேல் அழகர்.
“அழகு! அழகு..! பொறுமை..!”
“நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு!”
“அடேய்! அறிவுகெட்ட அழகரு சொல்றதைக் கேளேன்டா!”
“செத்து செத்து விளையாடற மாதிரி, நாம திட்டி திட்டி அப்பறம் விளையாடுவோம். இப்போ சொல்றதைக் கேளு!” என காத்தவராயன் சொல்ல வருவதைக் கேட்காமல் அவன்பாட்டிற்கு பேசிக் கொண்டே இருந்தான் அழகர்.
“உயிர்க் கொடுப்பான் தோழன்னு நம்பி தானே உனக்கு ஃபோன் போட்டேன். நீ உன் உசுரைக் கொடுக்க வேணாம். உன் தொங்கச்சியைத் தேடவாவது செய்யலாம்ல? உன்னைப் போய் கேட்டேன் பாரு என்னைச் சொல்லணும்!”
“இந்த அரைக்கிறுக்கன் கிட்டே கிடந்து நான் படுற பாடு..! அடேய்.. இருடா! உன் அத்தை மவ இரத்தினத்தை பார்க்கணுமா வேணாமா? வேணாம்ன்னா சொல்லு நான் ஃபோனை வைக்கிறேன்.!” எனக் காத்தவராயன் குரலுயர்த்திய பின்னரே கொஞ்சம் நிதானித்தான் அழகர். அந்த அளவிற்கு கருவிழியைக் காணாத பித்து அவன் கண்ணை மறைத்திருந்தது.
“மன்னிச்சுரு! மன்னிச்சுரு! அவளைக் காணோம்ன்னு பதற்றத்தில் பேசிப்புட்டேன். எங்கே இருக்கா உன் தொங்கச்சி?” என்ன மறைக்க முயன்றும் பதற்றம் ஒட்டியிருந்தது அவன் குரலில்.
நண்பனின் பதற்றத்தை உணர்ந்தவனாய், மேலும் தாமதிக்காது, சொல்ல வந்ததைச் சுருக்கமாய் சொல்லிவிட்டு அலைபேசியைக் காத்தவராயன் அணைத்திருக்க, அழகரின் நரம்போடிய முரட்டுக்கரம் தன் இருசக்கர வாகனத்தை முறுக்கிக் கிளப்பியது.
*********
மதுரையின் மேற்குமாசி வீதியில் அமைந்திருந்த அந்தப் பெரிய துணிக்கடையின் முன்னால் நின்று, மதுவுடன் பேசியபடியே பனிக்கூழை தன் பூவிதழ்களால் சுவைத்து உண்டுக் கொண்டிருந்தாள் கருவிழி.
“அழகு! தங்கச்சி மது கூட, நம்ம மேற்குமாசி வீதி போத்தீஸ்க்கு தான் போயிருக்கு. நீ பயப்படாமல் வீட்டுக்குப் போ! தங்கச்சி வந்துரும்!” எனக் காத்தவராயன் சொன்னது அவன் செவிக்குள் ஒலித்தது.
இத்தனை நேரம் அவளைக் காணோம் என்றதும், இதயத்தை இறுக்கிப் பிடித்திருந்த அழுத்தமும் பயமும், இன்னும் வடியாமல் அப்படியே இருந்தது. கோபத்தில் கண்கள் சிவக்க, கோபத்தில் அவளை அடிக்கப் பரபரத்தக் கரத்தை முயன்று அடக்கியவன், அவள் முன்னே சென்று நின்றான்.
திடீரென அவனை அங்கே எதிர்பார்க்காதவளோ,
“அழகரு..! நீ எப்போ வந்தே? உன்கிட்டே சொல்லணும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்.!” நெற்றியில் அறைந்தபடியே சொன்னாள் கருவிழி.
“ஃபோன் பண்ணியிருக்கலாம்ல்ல?” எனச் சொன்னவள் அவன் முறைத்த முறைப்பில், அமைதியாகிப் போனாள்.
“ஃபோன் பண்ணி நான் தான் எடுக்கலையா? ஸாரி அழகரு!” என அவள் சொல்வதைக் கண்டுக் கொள்ளாது, மதுவை முறைத்தான் துடிவேல் அழகர்.
“ஆத்தி! நான் இல்லை! சும்மா தான் ஷாப்பிங் வந்தோம். இவள் சொல்லாமல் வந்திருப்பாள்ன்னு எனக்குத் தெரியாது..!” பயத்தில் அவசரமாய் பதில் சொன்னாள் மது.
“இப்படியெல்லாம் முறைக்கக் கூடாது. மது உனக்கு அண்ணியா வரப் போறவ.. அண்ணின்னு தான் கூப்பிடணும்.!” கையிலிருந்த பனிக்கூழில் கவனம் வைத்துப் பதில் சொன்னாள் கருவிழி.
“யாரு.. இந்தப் பக்கியா? இந்தப் பக்கி எனக்கு அண்ணியா? மண்டையில் கொட்டினேன் ரெண்டுபேரும் பூமிக்குள்ளே புதைஞ்சு போயிருவீங்க!” எனத் திட்டியவன், கருவிழியின் கரத்திலிருந்து பனிக்கூழை பிடுங்கி, தூர எறிந்துவிட்டு,
“கிளம்பு டி!” என உறுமியவன்,
“நீ ஸ்கூட்டியில் தானே வந்தே? வண்டியை எடுத்துட்டு கிளம்பு. சொல்லாமல் கொள்ளாமல் ஊர் சுத்திட்டே திரியறது..!” என கருவிழியைக் கூட்டிக் கொண்டு கிளம்பினான். மனம் முழுதும் அவள் மீதான கோபம் குறையாமல் அப்படியே இருந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கருவிழியை ஒரு அறை அறைஞ்சிருந்தா சந்தோஷமா இருந்திருக்கும் அழகரு … ஏற்கனவே பிரச்சனை … அப்போ டென்ஷன் தான ஆகும் … ஏய் கருகரு சும்மாவே இருக்க மாட்டியா … எப்போ பார்த்தாலும் அழகரை டென்ஷன் பண்ணிக்கிட்டு …
என் குலத்தையே கருவுல தாங்க வந்த குலசாமி … அடடா ஊர் பாஷை எவ்ளோ அழகு … அப்படியே புல்லரிக்குது
நன்றி! நன்றி! டியர். உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ப மகிழ்ச்சி. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டியர் 💜💚
அட பாதகத்தி! அழகர் எம்புட்டு பதட்டப்பட்டு ஊரை சுற்றி தேடிட்டு கிடக்கான் இவங்க ரெண்டு பேரும் பனிக்கூழ் சாப்பிடராங்கலாம் பனிக்கூழ்.
இத்தனை நாளா கரு கருவை பாசத்தோடும், அக்கறையோடும் பார்த்த அழகரின் பார்வை இப்போ காதலோடு கூடிய ரசனையான பார்வையா மாற ஆரம்பிச்சிடுச்சு. 😍😍
எவ்ளோ தவிப்பு, எவ்ளோ பதட்டம். அவளுக்கு ஒரு பிரச்சினைனா தனக்கு உயிர் போக வலிக்கும் என்டு புரிஞ்சுகிட்டான்.
அத்தை மகள் மீது பித்து பிடித்து அலைகிறான் அழகு 😍😍 அண்ணி பாவம், அண்ணி பாவம் அப்படியெல்லாம் திட்டக்கூடாது. 🤭
அதானே.. இந்தப் பொண்ணுக்கு கொஞ்சமும் பொறுப்பே இல்லை. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போறாளோ? தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா 💜💛