
அகம்-11

அவள் வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்த உணவை அவள் கரத்தில் தந்து அனுப்பிவிட்டு யோசனை தாங்கிய முகத்துடன் வெளியே வந்தான் துடிவேல் அழகர். அவன் மனம் முழுதும் கருமேகங்களாய் குழப்பம் சூழ்ந்திருந்தது.
‘அவள் ஏன் அப்படிச் சொன்னாள்?’
‘என்ன காரணம்?’
‘அவள் மனதில் என்னதான் இருக்கிறது?’
‘ஒருவேளை என்னைக் காப்பாற்ற பொய் சொன்னாளோ? இது அவளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அவள் வாயைத் திறக்காமலே தாத்தாவிற்கு அவள் காதலைத் தெரியாப்படுத்துவதற்கான வாய்ப்பு.. அப்படியிருக்கையில் ஏன் இப்படிச் சொன்னாள்?’ குழம்பித் தவித்தது அழகரின் மனம்.
“என்ன ஆச்சு அழகு? அந்த அம்மா ரொம்பவும் வஞ்சுட்டாங்களோ? மூஞ்சியே சரியில்லை!” என்றபடி இருசக்கர வாகன நிறுத்தத்தில் நின்றிருந்தான் காத்தவராயன்.
“இம்புட்டு நாளும் ரோஹன் ரோஹன்னு திரிஞ்சவ பட்டுன்னு மாத்தி பேசுறாடா! ஒரு எழவும் விளங்க மாட்டேங்குது. என்னத்துக்கு இப்படி பேசினாள்ன்னு தெரியலை!” அப்போதும் கூட அழகரின் முகம் தெளியவில்லை.
“அப்படி என்ன பேசிச்சு என் தங்கச்சி? எப்போ பார்த்தாலும் என் தங்கச்சியை வஞ்சுட்டே இருக்கே! இது சரியில்லை சொல்லிப்புட்டேன்.!” உடன் பிறவாத அண்ணனாய் கருவிழிக்குப் பரிந்து வந்தான் காத்தவராயன்.
“ஆமா உன் தொங்கச்சியை நீ தான் மெச்சிக்கணும்! அவ அந்த ரோஹனை லவ் பண்ணவே இல்லையாம். வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொல்றா! பைத்தியக்காரி என்ன நினைச்சுட்டு இருக்காளோ தெரியல. ஒத்தைப் பொம்பளைப்புள்ளைன்னு கேட்டதெல்லாம் செஞ்சது தான் தப்பா போச்சு.!” சொல்லிக் கொண்டே அழகர் முன்னால் நடக்க, இருசக்கர வாகனத்தை தள்ளியபடியே பின்னால் வந்தான் காத்தவராயன்.
“ஆத்தி! பெரிய அணுகுண்டா இருக்கே?” எனப் புலம்பியவன்,
“ஆமா! ஏன் தங்கச்சி அப்படி சொல்லிச்சு? ஒருவேளை உன்னைப் பிடிச்சிருச்சோ தங்கச்சிக்கு!” அறிவாளித்தனமாய கேள்வி கேட்பதாய் நினைத்துக்கொண்டு கேட்டவன், அழகரின் முறைப்பில் அமைதியாகிப் போனான்.
“இல்லை அழகு.. ஒருவேளை உன்னைப் பிடிச்சிருக்குமோன்னு தான் கேட்டேன்.! அதுக்கு என்னத்துக்கு இப்படி முறைக்கிறே?” நண்பனின் முறைப்பை தாளாமல் கேள்விகேட்டான்.
“இந்தாரு காக்கா விரட்டி, வாயை மூடிக்கிட்டு வா! அண்ணணையும் தொங்கச்சியையும் ஜோடியா ஏர்வாடிக்கு பார்சல் பண்ணி விட்டுருவேன்.! மூளை கழண்ட உங்களையெல்லாம் கூட வச்சிக்கிட்டு முடியலை..” கடுப்புடன் சொன்னான் அழகர்.
“உனக்கு தான் புரியலை அழகு! அந்தப் புள்ளை ரோஹனை வேணாம்ன்னு சொல்லிருச்சு. நியாயப்படி நாம அதுக்கு சந்தோஷம் தான் படணும். இப்போ உன் ரூட்டு கிளியர் ஆகிருச்சு தானே?! உனக்கு நம்ம விழி தங்கச்சி, அந்த நெடுமாறனுக்கு மரமண்டை மது. இன்னும் இந்த வீரபத்ரன் என்ன செய்யறான்னு தெரியலை. ஆக மொத்ததில் உங்க கூட்டத்தில் நான் மட்டுந்தேன் சிங்கிள் சிங்கமா திரியறேன். நமக்கு மட்டும் ஒண்ணும் மாட்ட மாட்டேங்குது..!” மீண்டும் அழகரின் முறைப்பில் அமைதியானவன்,
“எப்பா ராசா! எம்புட்டு தூரம் தான் வண்டியைத் தள்ளிக்கிட்டே வர்ரது? முடியலை ராசா! நீ ஏறி உட்கார்ந்தா ஓட்டிக்கிட்டே போயிரலாமே..!” என காத்தவராயன் சொல்ல,
அவனிடமிருந்து வாகனத்தை வாங்கி கிளப்பினான் அழகர். பின்னால் ஏறி அமர்வதற்காய் காத்தவராயன் அழகரைப் பார்த்தபடி காத்திருக்க,
“உன் தொங்கச்சிக்கு ரொம்பத்தான் சப்போர்ட் பண்ணுற! இப்படியே நடந்து வந்து சேரு.. அப்போ தான் புத்தி வரும்.!” எனச் சொல்லிவிட்டு வாகனத்தைக் கிளம்பிக் கொண்டு சென்றுவிட்டான் துடிவேல் அழகர்.
“அட பக்கிப் பயலே..! உன்னை நம்பி வந்ததுக்கு நல்லா சிறப்பா செஞ்சுட்டடா ராசா! வெங்காய மண்டியில் வேலைப்பார்த்துட்டு கிடந்தவனை கூட வான்னு இழுத்துட்டு வந்து, இங்கே ஒரு பஞ்சாயத்தைக் கூட்டிட்டு, நடு ரோட்டில் அம்போன்னு விட்டுட்டு போய்ட்டான். இவனல்லவோ உயிர் நண்பன். இனி வீட்டுக்குப் போனால் இவன் தாத்தன் முறைச்சுட்டே நிப்பாரு. நீ தானேடா பஞ்சாயத்தை இழுத்துவிட்டேன்னு மீசையை முறுக்கிக்கிட்டே நம்ம தலையை உருட்டுவானுங்க! ஆனாலும் அரசியலில் இதெல்லாம் சாதாரணம் தானே.? நாம பார்க்காத பஞ்சாயத்தா? மதுரை ஜில்லாவுக்கே நாம தானே எல்லாம். பிரபலங்களின் வாழ்க்கையில் ப்ராப்ளம் வர்ரது சகஜம் தானே? விடு டா காத்தவராயா பார்த்துக்கலாம்.!” எனத் தனக்குத்தானே புலம்பியபடி கல்லூரி வளாகத்தினுள் நடந்துக் கொண்டிருந்தான் காத்தவராயன். இது அடிக்கடி நடக்கும் நிகழ்வென்பதால் காத்தவராயனுக்கு கோபமெல்லாம் வரவில்லை. மாறாக நடப்பதற்கு தான் அலுப்பாக இருந்தது.
“நல்லா அழகர் கூட வண்டியில் போய் சொகுசா பழகியாச்சு. கொஞ்ச தொலைவு நடக்கவே சடைவா கெடக்கு!”
“வரும் போது பக்கமா தெரிஞ்சுது. காலேஜை விட்டு வெளியே போகணும்ன்னாலே இன்னும் ஏழு மையில் போகணும் போல. இம்புட்டு பெரிய காலேஜை யார் கட்டச் சொன்னது? கொடுமையிலும் கொடுமை இப்படி பைத்தியக்காரன் மாதிரி தனியா பேசிட்டு நடக்கறது தான்.!” என மீண்டும் புலம்பலுடன் நடந்தவனை, கல்லூரிப் பெண்கள் கூட்டம் கடந்து போக, கண்ணுக்குக் குளிர்ச்சியாய் கடந்துப் பெண்களைப் பார்த்து ஈஈயென இளித்து வைத்தான் காத்தவராயன்.
‘இந்த அழகர் விட்டுட்டுப் போனதும் நல்லதுக்குத்தான். நமக்கு ஒரு ஜோடியை செட் பண்ணிட்டு நாமளும் ஜோடியாய் சுத்தணும்.’ என மனதில் உறுதியெடுத்துக் கொண்டவன்,
“மஞ்சக்காட்டு மைனா.. என்னைக் கொஞ்சி கொஞ்சி போனா..!” எனப் பாடியபடியேய் அந்த மஞ்சள் நிற ஆடை அணிந்த பெண்ணை நோக்கிப் போனான்.
“ஹலோ! உங்க அழகின் இரகசியம் என்ன? நட்சத்திரங்களின் அழகு சோப்பா?” விளையாட்டாகவே கேட்டான் காத்தவராயன்.
“யோவ்! நட்சத்திரம் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா? சோப்பு போட்டு குளிக்க வைக்க?” எனச் சொன்ன அந்தப் பெண் முன்னால் நடக்க, விளையாட்டின் சுவாரசியம் கூடியது காத்தவராயனுக்கு.
“யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்..!” எற்றபடியே பின்னால் நடந்தான் காத்தவராயன்.
“ஹான் தேனுமிட்டாய்..!” அந்தப் பெண்ணும் நக்கலாய் பதில் சொன்னாள்.
“இதுவும் இனிப்பா தான் இருக்கு. நீங்க சிங்கிளா? இல்லை டபுளா? சொன்னிங்கன்னா பின்னால் வரலாமா? வேணாமான்னு முடிவெடுக்க வசதியா இருக்கும்.!” என அவன் கேட்க, தெற்றுப்பல் தெரிய கலகலவென சிரித்த அந்தப் பெண்ணைப் பார்த்தவன்,
“திருமண மலர்கள் தருவாயா.. தோட்டத்தில் நான் வைத்தப் பூச்செடியே..?” காலைத் தூக்கி தூக்கி ஆடியபடியே அந்தப் பெண்ணின் பின்னால் உற்சாகமாய் நடந்தான் காத்தவராயன்.
“தினம் தினம் தருவேன் வருவாயா உனக்கொரு செருப்படியே..!” அந்தப் பெண் பதில் பாட்டு பாட, அதிர்ந்து நின்றுவிட்டான் காத்தவராயன். இப்படியொரு பதில் வருமென அவன் எதிர்பார்க்கவே இல்லை.
“நான் எம்புட்டு டீசெண்ட்டா ப்ரபோஸ் பண்ணினேன். நீ என்ன புள்ள பொசுக்குன்னு நீ இப்படி சொல்லிட்டே? நான் அழகா இல்லையா? என்னை பிடிக்கலையா?” முன்னால் சென்று வழிமறித்து நின்றான் காத்தவராயன். அந்தப் பெண் சம்மதம் சொல்வாள், நமக்கும் ஜோடி கிடைத்துவிடும் என அவன் எதிர்பார்ப்புடன் நின்றிருக்க,
“நீங்க செக்காணூரணி செவத்தய்யா பேரன் காக்காவிரட்டி தானே?” பதிலுக்கு கேள்வி கேட்டாள் அந்தப் பெண்.
“ஆமா..! என்னை முன்னவே உனக்குத் தெரியுமா? அய்த்த மவளா? மாமன் மவளா.? யாருபுள்ள நீயி?” கண்களில் மயக்கம் தேக்கிக் கேட்டான் காத்தவராயன். அந்தப் பெண் யாரென அறியும் ஆர்வம் அவன் குரலில் தெரிந்தது.
“ம்க்கும் ஆசை தான்? உன் தாத்தனும், என் தாத்தனும் கூடப் பொறந்தவிங்க! நான் உனக்கு தங்கச்சி முறை! கூறுகெட்டத்தனமா பூச்செடி, புண்ணாக்குன்னு பாட்டு பாடிக்கிட்டு.. சோலியைப் பார்த்துக்கிட்டு போயிரு. எங்க அப்பன் ஆத்தாகிட்டே சொன்னேன்னு வையி, வேட்டியை அவுத்துட்டு ஓட விட்ருவாய்ங்க! மண்டை பத்திரம்..! கூறுகெட்ட பய..!” ஏசிவிட்டு அந்தப் பெண் நகர, திகைத்துப் போய் நின்றுவிட்டான் காத்தவராயன்.
“ஆத்தாடி ஆத்தா! தங்கச்சி முறை புள்ளைக்கிட்டேவா திருமண மலருன்னு பாட்டுப் பாடினேன். எவனுக்காவது தெரிஞ்சால் மானம், மரியாதை என்ன ஆகுறது? மயிரிழையில் மானம் தப்பினான் காத்தவராயன்..! முறைப்பொண்ணுன்னு வர்ரதுங்க எல்லாம் இப்போ தான் பள்ளிக்கூடம் போவுதுங்க! எவகிட்டேயாவது நாமளே போய் பேசினால் நொண்ணேன்னு சொல்லிறாளுங்க! காலக் கொடுமைடா காத்தவராயா! காலம் முழுசுமே கன்னி சாமியாய் வாழப் போறோமோ? அவன் அவன் ரெண்டு மூணுன்னு வச்சுட்டு திரியறான். நமக்கு ஒண்ணுக்கே வழி இல்லை. இதை எங்கே போய் சொல்ல?” எனப் புலம்பியபடியே நடந்தவனை, தன் இருசக்கர வாகனத்தில் நின்றபடி பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான் துடிவேல் அழகர்.
“அழகு! நீ எப்போ வந்தே?” தடுமாற்றமும், சிரிப்புமாய் வினவினான் காத்தவராயன்.
“அந்தப்புள்ள கிட்டே செருப்படி வாங்கினியே அப்போவே வந்துட்டேன்.!” அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டே இருந்தான் அழகர். அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. நண்பனை தனியே விட்டுச் சென்றதில், மனம் கேட்காமல், திரும்ப வந்த அழகரின் கண்களில் வசமாக சிக்கியிருந்தான் காத்தவராயன்.
“ஆத்தி! அப்போவே வந்துட்டியா? அது ஒண்ணுமில்லை! சும்மா பேசிட்டு இருந்தேன். வேற ஒண்ணுமில்லை!” சமாளிக்க முயன்றவன் அழகர் நிறுத்தாமல் சிரிப்பதைப் பார்த்ததும்,
“சரி விடு! உனக்கு தானே தெரிஞ்சுது. தெரிஞ்சுட்டு போவட்டும். உனக்கு மட்டும் நான் ஒரு திறந்த புத்தகமா இருந்துப்புட்டு போறேன். இப்போ வண்டியை எடு, இடத்தைக் காலி பண்ணுவோம்.! உங்க அப்பனோ, பெரியப்பனோ ஒரு பொம்பளப்பிள்ளையைப் பெத்திருந்தால், நானும் ஜோடி இல்லாமல் அலைஞ்சிருக்க மாட்டேன்ல்ல? இந்த ஊரு முழுக்க, எனக்கு தங்கச்சியா பெத்து போட்டு வச்சிருக்காணுங்க பொறுப்பே இல்லாதவிங்க! அத்தை மாமன் முறை வர்ர வீட்டில் எல்லாம் தடிமாட்டு பசங்களா இருக்காணுங்க! நம்ம விதி.. என்ன செய்ய?!” எனப் புலம்பியபடி அமர்ந்திருந்தவனிடம்,
“அதுக்கெல்லாம் ஒரு குடுப்பிணை வேணும் காக்காவிரட்டி! இந்த ஜென்மத்துக்கு உனக்கு இதுதான்னு எழுதியிருக்கும் போல. உனக்கும் கல்யாணத்துக்கும் இராசியில்லைன்னு தான் நினைச்சேன். உனக்கும் காதலுக்கும் கூடஇராசியில்லை போல.. முதலில் சொந்தம் பந்தம், ஒண்ணு விட்டவிங்க, விடாதவிங்க எல்லார் விட்டுலேயும் உனக்கு எத்தனை தங்கச்சி இருக்கும்ன்னு கணக்கெடு. அதுங்களை தவிர்த்து மத்த புள்ளைங்க கிட்டே போய் உன் காதல் செடியை நடு!” சிரிப்பை இதழுக்குள் பதுக்கியபடி அழகர் சொல்ல,
“அது இருக்கும் ஒரு நூத்தி முப்பது..!” என யோசனையோடு காத்தவராயன் சொல்ல,
“தங்கை உடையான் படைக்கு அஞ்சான். உனக்கு ஒரு படையே தங்கச்சியா இருக்கு. என்ஜாய் டா காக்கா விரட்டி..! உனக்கு இந்த ஜென்மம் முழுசும் பிரம்மச்சாரியம் தான்.! பேசாமல் எனக்கு இண்ட்ரோ கொடுத்துவிடு கரு கருவையும் சேர்த்து நூத்தி முப்பத்தி ஒண்ணா இந்துட்டு போவட்டும்.” என்றவன் இதழ் விரிந்த சிரிப்புடன் வாகனத்தைக் கிளப்பினான்.
கருவிழி, ரோஹன் எனக் குழப்பத்தில் இருந்தஅழகர், காத்தவராயன் உபயத்தால் மட்டுமே, அனைத்தையும் மறந்து சிரித்திருந்தான்.
ஆனால், ஈசலின் ஆயுளைப் போல இந்தச் சிரிப்பிற்கு ஆயுள் குறைவு என்பதை அவன் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ யாரு தாத்தா பிரச்சனை பண்ண போறாரோ … நல்லா ஜாலியா போகுது கதை …
உங்களுக்குப் பிடிச்சிருக்கா 😍 நான் ரொம்ப ரொம்ப ஹேப்பிடா 😍 தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💙💚
அவ மறந்து விட்டுட்டு போன சாப்பாட கொடுத்துட்டு போக தான் வந்தியா அழகரு?
கரு கருவின் திடீர் மாற்றம் எதனால் என்ற குழப்பத்தில் அழகர்.
ரெண்டு தங்கச்சிக்கும் ரூட் கிளியர் ஆனதை அடுத்து தனக்கு பொண்ணு தேடி ரூட் விடுறாரு.
Mr.காக்கா விரட்டி இப்படியா பொண்ணு தேடறது 🤭🤭 கல்யாண ராசி இல்லேன்னு நினைச்சா காதல் ராசியும் இல்லை போலவே.
😂😂😂 காக்காவிரட்டிக்கு எந்த ராசியும் இல்லை போல டா. உங்க கமெண்ட் ரொம்ப பாஸிட்டிவ் வைப் தருது டா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் டா 💛💚💜