
அகம்-10

எதிரே வந்து தன்னை மறைத்தார் போல் நின்றவனின் திண்ணிய மார்பில் மோதி நின்றாள் கருவிழி.
“இது எந்த பக்கி, கண்ணு தெரியாமல் குறுக்கே வந்து நிக்கிது? யோவ் லூசா நீ? எருமை மாடு மாதிரி இடிச்சுட்டு நிக்கிறே? கண்ணு தெரியலையா? இல்லை நடக்க இந்தப்பக்கம் இடமே இல்லையா? விட்டால் என் தலை மேலே ஏறி நடந்து போவியோ? எங்கிருந்து தான் நமக்குன்னு வருதுங்களோ? நாம நேரா போனாலும் நம்ம மேல் வந்து மோதுதுங்க..!” எனப் புலம்பியபடியே அண்ணாந்து பார்த்தவளின் கரு கரு விழிகள் வட்டமாய் விரிந்தது.
‘ஐயய்யோ மாட்டிக்கிட்டியே டி விழி..!’ என முனகியவள்,
“ஆத்தி! அழகரு! மாமா!” அவளின் கொவ்வை செவ்வாய் பயமும் பதற்றமுமாய் எதிரே நின்ற அழகரைக் கண்டு உச்சரித்தது.
“ஏன் தங்கச்சி, எல்லாரும் படிக்க காலேஜுக்கு உள்ளே போவாங்க! நீ என்ன வெளியே போற?” எனக் கேட்டான் அழகரின் கூடவே வந்திருந்த காத்தவராயன்.
“மாமா! அது வந்து.. நான்..!” என்ன சொல்வதெனத் தெரியாமல் உளறிக் கொட்டினாள் கருவிழி.
“என்னடி மாமா நோமான்னுட்டு இருக்கே? பஸ்ஸில் காலேஜ் வர்ர மாதிரி போக்கு காட்டிட்டு அந்தப் பரதேசி கூட ஊர் சுத்தக் கிளம்பிட்டியாக்கும்? அப்போ நெதமும் இப்படித்தான் திருட்டுத்தனம் பண்ணிட்டு இருந்திருக்கே? உன்னைப் பணம் கட்டி படிக்க வைக்கிறாரே அவரைச் சொல்லணும்! கொஞ்சமும் பொறுப்பு வேணாம்? நீ செய்யறதெல்லாம் பார்க்கும் போது, தாத்தா எடுத்த முடிவு சரிதான்னு சில நேரங்களில் தோணிடுது.! உன்னை நம்பி தானேடி காலேஜ் அனுப்பறோம்..!” என அவன் சொல்லிக் கொண்டிருக்க,
“மாமா ப்ளீஸ்..!” அவளின் தடுமாறிய குரலில், ஒரு நொடி தயங்கி நின்றவன் மீண்டும், வில்லில் கோர்த்த நாணாய், விரைத்து அவளை முறைத்தபடி நின்றான்.
கண்கள் அரைத்த மிளகாய் பழமாய் சிவப்பைப் பூசிக் கொள்ள, கை முஷ்டி இறுகியது.
“அழகரு!” என்றபடியே அருகே நெருங்கியவள், தன் மாமன் மகன் பார்வை சென்ற திசை நோக்க, அங்கே கண்களில் குளிர் கண்ணாடி சகிதமாய், கருப்பு நிற டீ-ஷட்டும் ஜீன்சுமாய் தோரணையாய் நின்றிருந்தான் ரோஹன்.
அவனின் பார்வை தன் அத்தை மகளைத் துளைப்பதிலேயே, அவன் யாராய் இருக்கக் கூடும் என ஊகித்திருந்தான் துடிவேல் அழகர்.
“ஹேய் பேபி! நான் கூப்பிட்டுட்டே இருக்கேன்! நீபாட்டுக்கு வந்துட்டே இருக்கே?” கையில் ரோஜாவுடன் ரோஹன் நின்றிருக்க,
“இந்தா கையும் களவுமா மாட்டிட்டே இல்லடி? அப்போ நெதமும் இது தான் நடக்குது? நீ காலேஜுக்கு வர்ரேன்னு பொய் சொல்லிட்டு தான் வர்ரியா?” கொதிக்கும் எரிமலையாய் அழகர் ஒருபுறம் நின்றிருக்க, இருவருக்கும் நடுவே அல்லாடியபடி நின்றிருந்தாள் கருவிழி.
“அழகரு!” ரோஹனின் சுயரூபம் தெரிந்து அவன் முகம் பார்க்கக் கூட அச்சம் கொண்டவளாய் அழகனின் கரம் பற்றினாள் கருவிழி.
பின்னே எத்தனை நாளைக்கு நரி நீலச்சாயம் பூசிக்கொண்டே திரிய முடியும்? அந்தக் குள்ளநரியின் சாயம் மழை நீரால் வெளுத்தது போல், ரோஹன் என்ற குள்ளநரியின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்கத் துவங்கியிருந்தது. எத்தனை நாட்களுக்குத்தான் நல்லவன் முகமுடியை அணிந்துக் கொண்டு அலைய முடியும்.? அவனின் உண்மைக் குணம், அதாவது என்றுமே மாறாத பிறவிக்குணம், அவனை அறியாமலே வெளிப்பட்டுவிட்டது.
“ஹேய் பேபி!” என முகம் சிவக்க உரைத்தவன், அழகனின் கரம்பற்றி நிற்பவளைப் பார்த்துக் கோபம் வந்தவனாய், கவிழியின் அருகே வந்து அவன் கரம் பற்ற முயன்றவன், இமை சிமிட்டும் நேரத்திற்குள்ளாகவே பொத்தென கீழே விழுந்திருந்தான்.
அவனின் இடப்புற உதடு கிழிந்து உதிரம் கசிய ஆரம்பித்திருந்தது. தன் அருகில் நிற்கும் கருவிழியைத் தீண்ட முயன்றவனின் முகத்திலேயே ஓங்கிக் குத்தியிருந்தான் அழகர். அவனின் தடிமனான மோதிரம், ரோஹனின் உதட்டைக் கிழித்து உதிரம் ருசித்திருந்தது.
“ப்ளடி **** !” எதோ கெட்டவார்த்தையை சத்தமாய் முணுமுணுத்த ரோஹன், விழுந்த வேகத்தில் எழுந்து, கருவிழியை நெருங்கி வந்து நின்றான்.
“என்னடி ஆள் வச்சு அடிக்கப் பார்க்கிறியா?!” அவளை முறைத்தபடியே அழகரை நோக்கிக் கை ஓங்கியவனின் கரத்தைப் பிடித்து மடிக்கி தன்னோடு இழுத்து, அவனின் இரு கைகளையும் தன் முரட்டுக் கரங்களுக்குள் அடக்கியிருந்தான் துடிவேல் அழகர்.
“மாமா! வேணாம் மாமா! அவனை விட்டுரு! எதுவும் பிரச்சனை வேணாம்! நாம போய்டலாம் வா..!”அவனின் கரம் பற்றி இழுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் கருவிழி.
“வாயை மூடிட்டு போடி!” அவளை பார்வையாலே எரித்தவன்,
“ஏன்டா, படிக்கறதுக்கு தானே காலேஜ் வர்ரீங்க? அதை மட்டும் பண்ண வேண்டியது தானே? எந்தப் பொண்ணு எப்போ வீட்டைவிட்டு வெளிய வரும்ன்னு காத்துட்டு இருப்பீங்களோ? இன்னொரு தடவை இவ பின்னால் உன்னைப் பார்த்தேன், நீ இருப்பே ஆனால் உன்னால் அவளைப் பார்க்க முடியாது..!” என்றவன் ரோஹனைக் கீழே தள்ளியிருந்தான்.
“அழகரு! வேணாம்! வா வீட்டுக்குப் போயிருவோம்..! சொன்னா கேளு அழகரு.. சண்டை எதுவும் போட வேணாம்.? தாத்தாவுக்கு தெரிஞ்சுதுன்னா அம்புட்டுத்தான்.!” கரம் பிடித்து தடுக்க முயன்றவளை உதறித் தள்ளியவன், ரோஹனோடு மல்லுக்கு நின்றான்.
கொஞ்ச நேரத்திலேயே அடிதடி சண்டையாகிவிட, கல்லுரியின் மாணவர் பட்டாளம் சுற்றிலும் கூட்டமாய் கூடி நின்றது.
மாற்றி மாற்றி இருவரும் அடித்துக் கொள்ள, காத்தவராயன் ஒருபுறமும், கருவிழி ஒருபுறமும் மாற்றி மாற்றி இழுத்து விலக்க முயற்சி செய்தனர்.
அவனின் முரட்டுத்தனமான திடகத்திரமான உடல்வாகினால், இருவர் இழுத்துமே அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட அழகருக்கு நிகராய் ரோஹனுமே எதிர்த்து நின்றான்.
ஒரு கட்டத்தில் சண்டையும் சத்தமும் பெரிதாகிவிட, மூவரும் கல்லூரி முதல்வரின் முன்னால் நின்றிருந்தனர்.
“இது காலேஜா? இல்லை சந்தைக் கடையா? நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க அழகர்? எங்க காலேஜ்குள்ளே வந்து எங்க பசங்க மேலே கை வைக்கிற ரைட்ஸ் உங்களுக்கு யார் கொடுத்தது? இதுக்கே நான் உங்க மேலே கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் தெரியுமா?!” அந்தக் கல்லூரியின் முதல்வராய் கண்டிப்புடன் குரல் எழுப்பினார் அனுபமா.
“படிக்கிற புள்ளை பின்னால், பொறுக்கி மாதிரி சுத்தினால் அடிக்க தான் செய்வாங்க!” கருவிழியை முறைத்தபடி சொன்னவனின் கைமுஷ்ட்டி இறுகி நரம்புகள் தெறித்தது.
“அழகரு! அங்கண உட்கார்ந்திருக்கிறது நான் இல்லை. என்கிட்டே பேசுற மாதிரி அவங்க கிட்டே பேசாதே..! என்னை வச்சு செஞ்சுடுவாக..! ப்ளீஸ் அழகரு..!” காதோரம் உரசிய கருவிழியின் குரல் கூட அவனை அசைக்கவே இல்லை.
“நாங்க இங்கே எதுக்கு இருக்கோம்? எதுவா இருந்தாலும் எங்க கிட்டே கம்ப்ளைண்ட் கொடுக்கலாம். நீங்களே உள்ளே வந்து அடிக்கிறது சரி இல்லை. நான் உங்களை எச்சரிக்கிறேன் மிஸ்டர். அழகர். உங்க தாத்தா சொக்கேசனுக்காக மட்டும் தான் உங்களை நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன். அவரோட பேரனா இருந்துட்டு, இப்படி பண்ணுறது சரி இல்லை.!” முகம் கடுகடுக்க அவனை எச்சரித்தார் முதல்வர்.
“எங்க வீட்டுப் பிள்ளை பின்னாலேயே அலையாமல் இருக்க சொல்லுங்க மேடம்! எங்கப் பொண்ணுக்கு எதாவதுன்னா இப்படித்தான் நடக்கும். அதுக்காக நான் செஞ்சது சரின்னு சொல்ல வரலை. பேபி பேபின்னு கருவிழி பின்னால் இவன் வர்ரது சரியில்லை.!” ரோஹனை பார்வையால் எரித்தபடியே பதில் சொன்னான் துடிவேல் அழகர்.
‘ஐயோ மாமா! போட்டுக் கொடுத்துட்டியே? மாட்டிக்கிட்டேன் போ! கடைசியா என்னைத் தான் கேள்வி கேட்கப் போறாங்க! ஐயோ, வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சியெல்லாம் பறக்குதே..! என்ன சொல்லி சமாளிக்கப் போறேனோ தெரியலையே..!’ மனதிற்குள் புலம்பியபடியே நின்றிருந்தாள் கருவிழி.
“வாட் இஸ் திஸ் ரோஹன்..! பிஜி படிக்கிற உனக்கு கருவிழி க்ளாஸில் என்ன வேலை? உன் டிப்பார்ட்மெண்ட் பேக் சைட் தானே? நீ ஏன் இங்கே வந்தே? ஏற்கனவே காலேஜுக்கு டைம் பாஸுக்கு தானே வர்ரே? கருவிழியை ஏன் டிஸ்டர்ப் பண்ணுறே? என்ன ஸ்ட்டாக் (stalk-அச்சுறுத்தும் வகையில் பின் தொடர்தல்) பண்ணுறியா? இது தப்பு ரோஹன்.!” கண்டிப்பான குரலில் ரோஹனை நோக்கிச் சொன்னார் முதல்வர். வலக்கரம் தன்னால் மூக்குக் கண்ணாடியைச் சரி செய்தது.
“ஐ அம் நாட் ஸ்டாக்கிங்! என்னை கேள்வி கேட்க, உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும் தானே? வீ ஆர் இன் எ ரிலேஷன்ஷிப்! நானும் கருவிழியும் லவ் பண்ணுறோம். நான் என்னை லவ் பண்ணுற பொண்ணைத்தான் தேடி வந்தேன். இந்தக் காட்டுமிராண்டிக்கு தான் எதுவும் தெரியலை. நீங்க கருவிழி கிட்டேயே கேளுங்க! அப்பறம் இது படிக்கிற வயசு இப்போ லவ் அது இது எல்லாம் தேவை இல்லைன்னு தேவையில்லாத அட்வைஸ் எதுவும் வேண்டாம். நாங்க என்ன பண்ணுறோம் எங்களுக்கு எது தேவைன்னு எங்களுக்கே தெரியும்.!” அதீத திமிருடன், கல்லூரி முதல்வர் என்றும் பாராது பேசினான் ரோஹன்.
“ஷட் அப் ரோஹன். நீ யாராய் வேணும்னாலும் இருந்துட்டு போ! பட், காலேஜுக்குன்னு சில ரூல்ஸ் அன் ரெகுலேஷன்ஸ் இருக்கு. காலேஜ் கேம்பஸ்குள்ளே வந்த பிறகு இங்கே இருக்கும் விதிமுறைகளுக்கு நீ கட்டுப்பட்டு தான் ஆகணும். உன்னால் முடியலைன்னா தாராளமா நீ வெளியே போகலாம்.!” எனச் சொன்னவரை எரிச்சலுடன் ரோஹன் பர்த்தபடி நிற்க,
“கருவிழி! ரோஹன் பேசறதை கேட்டுட்டு தானே இருந்தே? என்ன லவ் பண்ணுறியா? ரோஹன் சொன்னது உண்மையா? தெளிவான பதில் எனக்கு வேணும்..!” தீர்க்கமாய் அவளை ஏறிட்டார் கல்லூரி முதல்வர்.
“அழகரு! நான் என்ன சொல்லட்டும்?”
“ஹான்! என்னைக் கேட்கிறே? நீதானே இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கே? பதில் சொல்லு! என்னையெல்லாம் கேட்காதே!”
“அழகரு! இந்த ஜடை போட்ட குடை மிளகாய் பதில் சொல்லாமல் விட மாட்டாங்க! ப்ளீஸ் மாமா! நல்ல மாமா தானே? எனக்கு பயமா இருக்கு. நீயே எதாவது சொல்லி சமாளியேன்..!”
“கொண்ணுடுவேன்டி உன்னை! நீ தானே கருவிழி! நீ தான் சொல்லணும். இந்த ரோசம் கெட்டவனை லவ் பண்ணுறேன்னு கையைக் கிழிச்சுக்கிட்டு, கல்யாணம் வரை போய், தாத்தாகிட்டே பேச்சு வாங்கி, இப்போ அடிதடி வரை வந்தாச்சு. இப்போ வந்து நான் எதாவது சொல்லி சமாளிக்கணுமா? என்னை ஆளை விடு.!” இருவரும் முணுமுணுப்பாய் பேசிக் கொண்டிருக்க,
“கருவிழி! உங்க இரகசிய ஆலோசனை எல்லாம் வீட்டில் போய் வச்சுக்கோங்க! நான் கேட்டதுக்கு எனக்கு பதில் வந்தாகணும். நீயும் ரோஹனும் லவ் பண்ணுறிங்களா? எனக்கு கிரிஸ்டல் க்ளியர் ஆக பதில் வேணும். சும்மா பேசி மழுப்பறதெல்லாம் தேவை இல்லை!” கருவிழியின் கண்களுக்குள் ஊடுருவிக் கேட்டார் கல்லூரி முதல்வர் அனுபமா.
சில நொடிகள் யோசனையில் கழித்தவளின் கரம், அழகரின் மணிக்கட்டைப் பற்றி இறுக்கியது. கண்களும் யோசனையும் எங்கெங்கோ தடுமாறி இறுதியில் ரோஹனில் நிலைத்தது. அலட்சிய சிரிப்புடன் ‘யார் என்னை என்ன செய்துவிட முடியும்?’ என்ற தோரணையில் நின்றிருந்தவனைப் பார்த்தாள். கருவிழி தன்னைப் பார்க்கவும், வழக்கமான வசீகரச் சிரிப்பை உதிர்த்தான் அவன்.
ஆனால் உள்ளே கொதிக்கும் எரிமலையைக் கண்ணுக்குள் அடக்கியபடி, அடக்கப்பட்டக் கோபத்துடன் மரமாய் நின்றிருந்தான் துடிவேல் அழகர். தன் அத்தை மகளின் தனிப்பட்ட விஷயங்களை எல்லோர் முன்னமும் கடைபரப்ப தானும் ஓர் காரணமாகிப் போனோமே? என்றக் குற்றவுணர்வு அவனைக் கொன்று தின்றுக் கொண்டிருந்தது.
“பேசு கருவிழி! அமைதியாய் இருந்தால் என்ன அர்த்தம்? ரோஹன் சொல்றது உண்மைன்னு நான் எடுத்துக்கவா?” என அவர் கேட்டதும்,
“நோ மேம்..! வீ.. வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்..! அதைத் தவிர எங்களுக்குள்ளே எதுவும் இல்லை. நான் என்ன சொல்லியும் புரிஞ்சுக்காமல், பின்னால் வரவும் தான் என் மாமா கேட்டார். அது சண்டையில் முடிஞ்சுடுச்சு.!” திக் திக் என பதைபதைக்கும் மனதுடன் தட்டுத் தடுமாறி சொன்னாள் கருவிழி.
“இஸ் இட் ரைட்? ஒரு பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லியும் பின்னால் வர்ரது சரியா ரோஹன்? இது தப்புன்னு உனக்கு தோணலையா?!”
“ஷீ இஸ் லையிங்! அவ என்னை லவ் பண்ணுறா! இதை நான் எப்படி டீல் பண்ணணுமோ அப்படி பண்ணிக்கறேன். எது சரி, எது தப்புன்னு எனக்கு நீங்க சொல்லித் தர தேவையில்லை!” விரல்நீட்டி முதல்வரையே எச்சரித்தவன் கருவிழியை முறைத்தபடியே வெளியேறியிருந்தான்.
ஆனால், அழகரோ அதிர்ச்சியில் இருந்தான்.
‘இத்தனை நாட்களாய் ரோஹனை விரும்புவதாய் மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்பவள், எதற்காக மாற்றிப் பேசினாள். இந்தச் சூழ்நிலையிலிருந்து தப்புவதற்காகவா? இல்லை என்னைக் காப்பாற்றவா?’ யோசனையில் நின்றிருந்தவனை, கைப்பிடித்து இழுத்துப் போனாள் கருவிழி.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அழகரு விழி திருந்திருச்சு பா …
ஆமா.. ஆமா டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள் 💜
ஆம். ஒருவரின் உண்மையான முகம் என்றேனும் ஒரு நாள் வெளி வரும் ரோஹனை போல்.
ஒரு பக்கம் ரோஹன் மறுபக்கம் அழகர் பாவம் கரு கரு. 😀
சண்டை போட்டு பிரின்சிபால் வரைக்கும் வந்தாச்சு. தான் தான் அவசரப்பட்டு செயல்பட்டு மற்றவர் பார்வைக்கு விழியை கொண்டு வந்து விட்டோமோ என்று வருந்துகிறான்.
பார்ரா! விழி தைரியம் வந்து அவளே சொல்லிட்டா.