
அதீதம்-9

அந்தப் பெரிய மகிழுந்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த, ஆருத்ராவின் முகம் முழுதும், கோபத்தில் சிவந்திருந்தது. இமயனைப் பார்க்க பார்க்க அவளுக்குக் கோபமாய் வந்தது.
‘என்ன செய்து இவனிடமிருந்து தப்பிப்பது?!’ என்ற எண்ணமே அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இவள் எங்கு சென்றாலும், அவன் விடவே போவதில்லை.. என்பது அவளுக்குத் தெரியவில்லை.
“இப்படி என்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி என்னத்தை சாதிக்கப் போற? எதுக்காக இதெல்லாம்? நிம்மதியாய் சென்னையில் இருந்தேன்.. நீ என் வாழ்க்கையில் வந்த நாள் முதல் என் நிம்மதியே போச்சு!” எனக் கேட்டாள் ஆருத்ரா.
சாலையில் கவனம் வைத்து வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனோ, அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை.
“நீ எத்தனை தடவை என்னைப் பிடிச்சு வச்சாலும், நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு நீ வேணாம்.!” என அவள் மீண்டும் சொல்ல,
“உன்னால் என்னைத் தாண்டிப் போக முடியாது ஆரா..!” எனச் சொன்னான் அவன். அவனுடைய அழுத்தமான குரல் அவன் சொல்வது பொய்யில்லை என்பதை பறைசாற்றியது.
“ஒரு பொண்ணைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் ஆண்பிள்ளைத் தனமா? இந்தக் கல்யாணத்தில் நீ மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. இதில் நானும் சம்மந்தப்பட்டு இருக்கேன். என் விருப்பம் முக்கியம்ன்னு உனக்கு தோணவே இல்லையா?!” என அவள் கேட்க,
“அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்தக் கல்யாணம் நடக்கும் அவ்வளவு தான். யார் நினைச்சாலும் இதைத் தடுக்க முடியாது.!” என அவன் உறுதியாய் சொல்ல,
“உன்னைக் கொன்னுட்டா இந்தக் கல்யாணம் நின்னுடும் தானே? உன்கிட்டே இருந்து தப்பிக்கிறதுக்கு நான் என்ன வேணும்ன்னாலும் செய்வேன். உன்னைக் கொன்னுடுவேன் இமயன்.!” என அவள் சொன்ன நொடியில், அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனம், க்ரீச்சிட்டு அதிர்வுகளோடு நின்றது. வாகனத்தை நிறுத்திவிட்டு, மகிழுந்தின் டேஷ் போர்டைத் திறந்து எதையோ கையில் எடுத்துக் கொண்டவன், அவளை நோக்கிப் போனான். பின் இருக்கையின் கதவைத் திறந்து அவன் உள்ளே ஏற, ஆருத்ராவோ எதையும் கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
“இப்போ எதுக்கு இங்கே வர்ர? என்னால் உன்னைக் கொல்ல முடியாதுன்னு நினைக்கிறியா? என்னால் முடியும்.!” என அவள் பேச,
“பெஸ்ட் ஆஃப் லக் ஆரா..!” என்றவன் அவளின் வலக்கரத்தைப் பிடித்து இழுத்து, அதில் தன் கையிலிருந்த துப்பாக்கியை வைத்தான். அவள் கரத்தில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, அதிர்ந்து விரிந்திருந்த அவளின் அகல்விழிகளை நேராய்ப் பார்த்தவன்,
“கில் மீ ஆரா.. உன் தைரியம் எதுவரைன்னு பார்த்திடுவோம்! என்னைக் கொன்னுடு! நேராக என் கண்ணைப் பார்த்து நெற்றிப் பொட்டில் சுடு” எனச் சொன்னான். இவளுக்கோ பேரதிர்ச்சி. முதன்முறையாய் துப்பாக்கியை நேரில் பார்க்கிறாள். கொஞ்சம் பயமாக இருந்தது.
‘இவன் துப்பாக்கியெல்லாம் வைத்திருக்கிறானே? ரௌடியாய் இருப்பானோ?’ என்றக் கேள்வியும் அவளுக்குள் முளைத்தது.
என்னதான் அவள் தைரியமானப் பெண்ணாக இருந்தாலும் கூட, முதன்முறையாய் தன் கரத்தினில் துப்பாக்கியைப் பார்க்கவும் அவள் மனம் நடுங்கியது. துப்பாக்கியின் கனம் தாங்காது, தன்னால் கீழிறங்கிய தன் வலக்கரத்தை, இடக்கரத்தால் தாங்கிக் கொண்டவள், லேசாக நடுங்கியக் கரத்துடனே, துப்பாக்கியை இரு கரங்களால் பிடித்தாள். சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த துப்பாக்கியைத் தன் கரத்தினில் பிடிப்போம் என அவள் இதுவரை நினைத்ததில்லை. கொஞ்சம் பயமும் பதற்றமும், ஒருசேர அவளைத் தடுமாற வைக்க, துப்பாக்கியின் கனம் அவளின் செயலைக் கொஞ்சம் தாமதப்படுத்தியது.
‘சினிமாவில் ஒத்தைக் கையில் பிடிச்சு அசால்ட்டா சுடுறாங்க! இவ்வளவு வெய்ட்டா இருக்கு?’ எனத் தனக்குள் புலம்பியவள்,
‘என்ன நடந்தாலும் பரவாயில்லை! இவன்கிட்டே இருந்து, எனக்கு விடுதலை கிடைக்க, இவனைக் கொன்னால் தான் முடியும்ன்னா, அதையும் நான் செய்ய தயார்.!’ எனத் தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டவள், துப்பாக்கியைத் தூக்கி அவன் நெற்றிக்கு நேராகப் பிடித்தாள். பக்கவாட்டில் திரும்பி, அவனை நோக்கி, அவள் துப்பாக்கியை நீட்டியிருக்க, அவன் நெற்றிக்கும், துப்பாக்கிக்குமான தூரம் மிக மிகக் குறைவாகவே இருந்தது.
“நான் விளையாடலை இமயன்! நிஜமாவே நான் சுட்டுடுவேன்.!”
“நானும் விளையாட்டுக்கு சொல்லலை ஆரா! கம் ஆன்.. ஷூட்!” என அவன் சொல்லவும், அவள் கண்ணை மூடிக்கொண்டு விசையை அழுத்தவும் சரியாக இருந்தது. அதே நேரம், அவள் கரத்தை நகர்த்திப் பிடித்து துப்பாக்கியை கரத்தில் வாங்கியிருந்தான் இமயவரம்பன். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்காது, நிமிர்ந்து பார்த்தவளின் முன், கரத்தில் துப்பாக்கியை வைத்து விளையாடியபடி அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
“உன் கையில் துப்பாக்கியை அன்லாக் பண்ணி கொடுத்துட்டு, சும்மா உட்கார்ந்திருக்க, நான் ஒண்ணும் முட்டாள் இல்லை ஆரா. சுட மாட்டேன்னு நினைச்சேன். பரவாயில்லை. அரசியல்வாதி பொண்டாட்டியாகப் போறவளுக்கு தைரியம் இருக்காதா என்ன?!” என நக்கலாய் அவன் சொல்ல, ஏகத்திற்கும் கோபம் எகிறியது இவளுக்கு.
“நான் உன் பொண்டாட்டி ஆகப் போறதே இல்லை! நான் உனக்கு கழுத்தை நீட்டுவேன்னு கனவு காணாதே! இப்படித்தான் உன் வொய்ஃப்கிட்டே அரெகென்ட்டா இருந்திருப்ப.. அதனால் தான் நீ வேணாம்ன்னு தூக்கிப் போட்டுட்டு போயிருப்பாங்க! உன்னைக் கொல்ல முடியாமல் போனாலும், நான் செத்துப் போயாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்துவேன்.!” என அவள் சொன்ன நொடி, கோபத்தில் அவன் கண்கள் சிவந்தது.
“ஆரா..!” அவனின் கோபக் குரலில் அதிர்ந்து, அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் ஆருத்ரா.
“இன்னொரு முறை உன் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்துச்சு நானே உன்னைக் கொன்னுடுவேன். நான் உயிரோடு இருக்கும் வரை.. என் கண்ணின் கடைசி ஒளி மங்கும் வரை எனக்கு நீ வேணும். உன்னை என் மனசு முழுக்க சுமந்துட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா செத்துப் போகணும்ன்னு சொல்ற? நீ இல்லாமல் நான் என்னடி பண்ணுறது? ஏற்கனவே பாதி வாழ்க்கையைத் தொலைச்சுட்டேன்.. உன்னையும் தொலைச்சுட்டு என்னைப் பைத்தியக்காரனாய் அலைய சொல்லுறியா.? செத்துப் போகணும்ன்னா சொல்லு.. ரெண்டுபேரும் சேர்ந்து செத்துப் போவோம்.! முதலில் உன்னைக் கொன்னுட்டு நானும் செத்துப் போறேன்.!” என அவன் சொன்னதன் பொருள் விளங்காமல், சில நொடிகள் தடுமாறியவள், அவன் சொன்னதன் பொருள் புரிந்ததும், அதிர்ந்து விழித்தாள். அவள் முகம் முழுவதும், குழப்ப ரேகைகள் பற்றிப் படர ஆரம்பித்தது.
‘என்ன சொல்றான் இவன்? எனக்கு ஒண்ணும் புரியலையே? இவனோட மனசில் நான் இருக்கேனா? இவனை எனகக்குத் தெரியும் தான். இவன் ஒரு ரௌடி.. கட்டப் பஞ்சாயத்து பண்ணுகிறவன்.. என்கிற வரை மட்டுமே எனக்குத் தெரியும். நேரடியாக இவனை நான் சந்தித்ததே இல்லை எனும் போது, இவன் மனசில் நான் எப்படி இருக்க முடியும்? ஒண்ணுமே புரியலையே?’ ஆயிரம் கேள்விகள் அவள் மனதிற்குள் நொடிப் பொழுதிலே தோன்றி மறைந்தது.
“என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா?!” முதன்முறையாய் ஒரு தெளிவான கேள்வியை அவனிடம் கேட்டாள் ஆருத்ரா.
“தெரியும்!” என்ற அவனின் பதிலில் குழப்பம் இன்னும் கொஞ்சம் அதிகரித்திருக்க, யோசனையோடு பின்னிருக்கையில் அமர்ந்தவளை ஒருமுறை ஆழ்ந்து நோக்கியவன், முன்னிருக்கையில் ஏறி அமர்ந்து வாகனத்தைக் கிளப்பியிருந்தான்.
‘இவனை எங்காவது பார்த்திருக்கிறோமா? வீட்டுக்கு வந்திருக்கிறானா? என்னை விட பத்து வயது மூத்தவன், கண்டிப்பாக கல்லூரியிலோ பள்ளியிலோ பார்த்திருக்க முடியாது. சில முறைகள் இவன் முகத்தை கட்சி போஸ்டரில் சிறிய உருவமாகப் பார்த்திருக்கிறேன். எனக்கு இவனை நேரில் பார்த்ததாக நினைவில்லையே? அப்படிருக்கையில், நேரடித் தொடர்பில்லாத இவன் எப்படி என்னைத் தெரியும் என்கிறான்.?’ புரியாமல் இன்னும் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். திரும்பத் திரும்ப அதையே யோசித்து இவளுக்கு தலையை வலித்தது.
“நீ பொய் தானே சொல்ற? என்னை எப்படி உனக்கு தெரிஞ்சிருக்கும்? என்னை ஏமாற்றப் பார்க்கிறே தானே.? இப்படிச் சொன்னால் இவள் வாயை முடிருவாள்ன்னு நினைச்சு தானே இதெல்லாம் சொன்ன?!” என அவள் கேட்க,
“உனக்கு வேணும்ன்னா என்னைத் தெரியாமல் இருக்கலாம் ஆரா. ஆனால் எனக்கு உன்னை நல்லா தெரியும். ரொம்ப யோசிக்காதே.. சீக்கிரமே நீ தெரிஞ்சுப்ப!” என அவள் மனம் புரியாமல் சொன்னான் அவன்.
“எனக்கு உன்னை யாருன்னே தெரியாது. அதாவது நேரடியாய் தெரியாது. ஆனால் உனக்கு என்னைத் தெரியும். வெறும் ஒன் சைட் லவ்வுக்காகவா என்னை இப்படி படுத்துறே? யூ ஆர் நாட் மை சாய்ஸ் இமயன். எனக்குன்னு சில ஆசைகள் கனவுகள் எல்லாமே இருக்கு. அதுக்கெல்லாம் நீ செட் ஆகவே மாட்ட. எல்லாத்தைவிட முக்கியமா எனக்கு இந்த அரசியல், உன் கையில் இருக்கிற துப்பாக்கி.. எதுவுமே பிடிக்கலை.!” என அவள் சொல்ல,
“நான் எதுக்கு செட் ஆவேன்.. மாட்டேன்னு கல்யாணத்திற்கு அப்பறம் விளக்கமா தெரிஞ்சுக்கலாம்! இப்போ கொஞ்சம் அமைதியாய் இரு!” எனச் சொல்லி அவள் வாயை அடைத்திருந்தான் இமயன். அவன் சொன்னதன் பொருள் புரிந்து, திணறி, தன்னைச் சமாளித்து நிமிர்ந்தவள்,
“அப்பறம் நான் டேக்ஸியில் வரும் போது ரெண்டு பேர் கடத்த முயற்சி பண்ணுனாங்களே, அதுவும் உன்னோட ஏற்பாடு தானே? நான் எங்கேயும் போகக் கூடாதுன்னு என்னைப் பயமுறுத்த பார்க்கிறியா?!” எனத் தன்னை இயல்பாய் காட்டிக் கொள்வதற்காய் கேட்டாள் ஆருத்ரா.
“உனக்கு மூளை இருக்கும்ன்னு நினைச்சேன். என் வீட்டிலேயே இருக்கிற உன்னை நான் எதுக்குக் கடத்தணும்.? உன்னைப் பயமுறுத்துவதற்கு, கடத்தணும்ங்கிற அவசியம் எனக்கில்லை. உன்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியாது. இப்போதைக்கு அமைதியாய் இருக்கிறது தான் உனக்கு நல்லது!” என மயில்ராவணனை மனதில் வைத்துச் சொன்னான் இமயவரம்பன்.
ஆருத்ராவைக் கடத்த முயற்சி செய்தது மயில்ராவணனாகத் தான் இருக்கும் என்பதில் உறுதியாய் இருந்தான் அவன். ஆருத்ராவைப் பகடையாய் வைத்து, காய் நகர்த்திக் காரியம் சாதிக்க வியூகம் அமைத்திருக்கிறார் முதலமைச்சர் என்பது அவனுக்குத் தெரியாதா என்ன? இவளுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதென்பதை மனதில் வைத்து தான், தன் விட்டிற்கு அவளை இடம் மாற்றினான்.
தன் முதுகிற்குப் பின்னால் என்னென்ன நடக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். துரோகிகள் முதுகில் தானே குத்துவார்கள். நன்றி மறந்து முதுகில் குத்தும் நபர்களும், மேலே ஏற்றிவிட்ட ஏணியையே உதைத்துத் தள்ளும் நபர்களும், நிச்சயமாய் நண்பர்களாய் இருக்க முடியாது அல்லவா? தனக்குப் பின்னால் நடக்கும் சதிகளின் வீரியம் அறிந்து தான், அவளைப் பாதுகாப்பாய் தன் வீட்டிலேயே வைத்திருக்கிறான் அவன்.
“நம்ம வழக்கம்ன்னு ஒண்ணு இருக்குதே ராசா? கலியாணத்துக்கு முன்னவே பொண்ணு நம்ம வீட்டில் வந்து உட்கார்ந்திருந்தால் ஊரு என்ன பேசும்?!” என அவனின் அப்பத்தா கேட்ட போது கூட,
“உனக்கு இந்த ஊரு பயலுக முக்கியமா? இல்லை நான் முக்கியமா?” எனக் கேட்டு அவரின் வாயை அடைத்திருந்தான். என்னதான் ஆருத்ராவிற்கு தன்னைச் சுற்றி நடப்பவை தெரியாவிட்டாலும் கூட, இவள் சிறுபிள்ளைத் தனமாய் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வது அவனுக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.
*******
இமயன் ஆருத்ராவை தன் வீட்டில் இறக்கிவிடும் போது, வீட்டில் யாருமே இல்லை. ஒட்டுமொத்த வீடும் நிசப்தமாய் இருந்தது. அவள் வெளியே சென்றதும் யாருக்கும் தெரியவில்லை. அவள் வரும்போது யாரும் வீட்டிலும் இல்லை. உள்ளே வந்து தன் குடும்பத்தினரைக் கண்களால் தேடினாள்.
‘தனியாக விட்டுட்டு எங்கே போனாங்க?!’ என யோசித்தபடிய அவள் நின்றிருக்க,
“எல்லாரும் கோயிலுக்குப் போயிருக்காங்க!” அவள் கேட்காமலே அவன் பதில் சொன்னதிலேயே அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவர்களாகப் போகவில்லை. இவன் தான் அனுப்பி வைத்திருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. அவன் சொன்னதற்கு அவள் பதிலேதும் பேசவில்லை. அமைதியாய் தன் அறையை நோக்கி நகர்ந்தவளை,
“இனியாவது எங்கேயும் ஓடிப் போக முயற்சிக்காதே! ஊரறிய கல்யாணம் பண்ணணூம்ன்னு நினைச்சுட்டு இருக்கேன். யாருக்கும் தெரியாமல், இரகசியமாக தாலி கட்ட வச்சிடாதே!” என்ற இமயனின் குரல் தேக்கி நிறுத்தியது.
“உனக்கு ஒண்ணும் தாலி கட்டுறது புதுசு இல்லையே? ஊரறிய கட்டினாலும், இரகசியமா கட்டினாலும், நீ கட்டுற தாலி எனக்கு வேணாம்.!” எனச் சொன்னவள் விறுவிறுவென படிகளில் ஏறிவிட்டாள். படிகளைக் கடந்து அவள் அறையை நோக்கிப் போன நேரம், அவள் முன் வந்து நின்றான் ராகவ்.
ராகவைப் பார்த்ததும், அவள் முகம் கடுகடுவென மாறியது. அவனிடம் நின்று பேசுவதற்குக் கூட, அவளுக்கு மனம் வரவில்லை. நண்பன் என நம்பி ஏமாந்த தன்னையே நொநந்துக் கொண்டவள், அவனைக் கண்டுக்கொள்ளாமல் தாண்டிச் செல்ல முயன்றாள்.
“ஆரு நில்லு! நான் சொல்றதைக் கேளு ஆரு!” அவன் சொன்னது இவள் செவிதனில் விழுந்தாலும் கூட, காது கேட்காதவளைப் போல, அறைக்குள் நுழைந்துவிட்டாள். அவள் பின்னலேயே வந்த ராகவோ, கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வர, அவனைப் பார்வையால் எரித்தாள் ஆருத்ரா.
“ஆரு ப்ளீஸ்..!”
“உன்னை யாருடா இங்கே வரச் சொன்னது? உனக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. ஒழுங்கா ஓடிரு! நீ எத்தனை தடவை ப்ளீஸ் சொன்னாலும், உன்கிட்டே பேச நான் தயாராய் இல்லை.!” தெளிவாகவே சொன்னாள் ஆருத்ரா.
“என் பக்க நியாயத்தை சொல்றதுக்குக் கூட, வாய்ப்பு தர மாட்டியா ஆரு?!” என அவன் கேட்க,
“ஓ.. உன் பக்கம் நியாமெல்லாம் இருக்கா ராகவ்? இமயன் தான் உன் அண்ணன்ங்கிறதையே என்கிட்டே மறைச்சு, என்னை ஏமாத்திட்டல்ல? உன் அண்ணனுக்காக எனக்கு துரோகம் பண்ணிட்டல்ல ராகவ்?!” அவன் கண்ணைப் பார்த்து தொண்டை அடைக்கக் கேட்டாள் ஆருத்ரா.
“நான் வேணும்ன்னு பண்ணல ஆரு! நீ அன்னைக்கு என் அண்ணன் பேரைச் சொல்ற வரை, என் அண்ணனுக்குப் பார்த்திருக்கிற பொண்ணு நீ தான்னு எனக்குத் தெரியாது. தெரிஞ்ச பின்னாலும் கூட, நான் உன்னை சென்னைக்கு தான் கூப்பிட்டேன். நல்லா யோசிச்சு பாரு.. நான் அன்றைக்கு உன்கிட்டே சொன்னேன். சென்னை வந்துடு பார்த்துக்கலாம்ன்னு. ஆனால் நீ வரவே இல்லை. உன்கிட்டே இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதனால் தான் நான் இங்கே கிளம்பி வந்தேன்.! உன்னைக் கூட்டிட்டு போய்டலாம்ன்னு வந்தேன்.ஆனால் என்னால் முடியலை.” என அவன் சொல்ல,
“நல்லா கதை சொல்ற ராகவ்! இங்கே வந்த பின்னால் சொல்லியிருக்கலாமே? இங்கே வந்ததும், உன் அண்ணன் பக்கம் உன் மனசு சாய்ஞ்சுடுச்சு அப்படித்தானே? உங்க ரெண்டு பேருக்கும் என் வாழ்க்கை என்னடா விளையாட்டா? ஆளாளுக்கு விளையாடுறீங்க!” என அவள் கேட்க பதில் சொல்ல முடியாது அமைதியாய் நின்றான் ராகவ்.
“வாயைத் திறந்து பேசு டா! நீ பேச மாட்டே.. நீ எப்படி பேசுவ? அவங்க அவங்க குடும்பம்ன்னு வரும்போது ஃப்ரெண்ட்ஷிப்பாவது மண்ணாவது.. எல்லாரையும் மாதிரி நீயும் சுயநலவாதியாய் மாறிட்டல்ல? உன் அண்ணனுககாக தான் எனக்கும் விவேக்கிற்கும் ப்ரேக் அப் ஆகற மாதிரி செஞ்சியா?!” என அவள் கேட்க,
“ஆரு.. சத்தியமா இல்லை டி! நிஜமாவே உன் நல்லதுக்காக தான் விவேக்கிற்கு கல்யாணம் ஆகப் போற விஷயத்தை உன்கிட்டே சொன்னேன்.!” என அவன் பதில் சொன்னதையும் சந்தேகமாய்ப் பார்த்தாள் ஆருத்ரா.
“அப்போ இப்போ நீ எனக்கு பண்ணுறதுக்குப் பேர் என்னடா?!” என அவள் கேள்வி கேட்க, விக்கி விரைத்துப் போய் நின்றான் ராகவ். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவளின் ஒவ்வொரு கேள்வியும் பொட்டில் அடித்தாற் போல் இருக்க, பதில் சொல்லாது அமைதியாய் நிற்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.
“என்னை மன்னிச்சுடு ஆரு! இங்கே நான் சொல்றதெல்லாம் கேட்க மாட்டாங்க டி! நீ எப்போவுமே எனக்கு நல்ல ஃப்ரெண்ட் தான். ஆனால், இந்தக் கல்யாணம் அண்ணன் முடிவு பண்ணின விஷயம். இதை மாற்ற என்னால் முடியாது.!” என அவன் தயங்கி தயங்கி சொல்ல,
“இன்னும் என்னடா ஆறு, ஏழுன்னு கூப்பிடுற? அண்ணின்னு கூப்பிடு! நீயும் உன் அண்ணனும் சேர்ந்து முடிவு பண்ணிட்டீங்களே? யாரு வாழ்க்கை எப்படி நாசமாகப் போனால் உனக்கென்ன? உனக்கு உன் அண்ணன் வாழ்க்கை தானே முக்கியம்? நானெல்லாம் யாரோ தானே? எங்கே உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு, உங்க வீட்டில் ஒரு பொண்ணு இருந்தால், உன் அண்ணன் மாதிரி ஒருத்தனுக்கு ரெண்டாந்தாரமாய் கட்டிக் கொடுப்பியா?!” என்ற அவளின் கேள்விக்கு,
“இமயன் ரொம்ப நல்லவன் ஆரு! நீ அவனைத் தப்பா புரிஞ்சுட்டு இருக்க!” என அவன் சொல்ல, வேகமாய் அவன் பக்கத்தில் வந்தவள், அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.
“என்னடா சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறியா? உன் அண்ணன் என்ன பெரிய உத்தம புத்திரனா? அவன் நல்லவன்னு நீ சொன்னதும், நான் கண்ணை மூடிட்டு கழுத்தை நீட்டனுமா? நீயெல்லாம் ஃப்ரெண்டா டா? ஃப்ரெண்ட்ன்னு சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? தயவு செய்து என் கண்ணு முன்னால் நிற்காதே! போய்டு! உன்னை நான் பார்க்கவே விரும்பலை. இனிமே நீ யாரோ.. நான் யாரோ.. இந்த நிமிஷமே, இங்கேயே, இதோடு முடிச்சுக்கலாம்.!” என அவள் கோபமாய் சொன்னாள். அதீத கோபத்தில் அவள் முகம், செக்கச் செவேலென சிவந்திருந்தது.
கண்களில் கோபம் அப்பியிருக்க, மனம் முழுதும், ஆற்றாமையும், வெறுமையும் மட்டுமே நிரம்பியிருந்தது. எதிரில் நின்ற ராகவைப் பார்க்கப் பார்க்க அவள் கோபம் இன்னும் அதிகரித்தது.
“அம் ஸாரி ஆரு..! இந்தச் சூழ்நிலையில் என்னால் உனக்கு உதவி செய்ய முடியலையேன்னு வருத்தமா இருக்கு. பட், உன் சூழ்நிலை எப்படியோ, அதே மாதிரி சூழ்நிலையில் தான் நானும் இருக்கேன். நீ என்னை அடிச்சாலும் பரவாயில்லை. என் அண்ணனை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது ஆரு!” கரத்தால் கன்னத்தைத் தாங்கியபடியே அவன் சொல்ல,
“உன் அண்ணன் புராணம் பாடினது போதும் ராகவ். எனக்கு உன்னைப் பார்க்கவே கடுப்பா இருக்கு. பேசாமல் இங்கிருந்து போய்டு!” என எரிச்சலுடன் சொன்னாள் அவள்.
அவன் அமைதியாய் வாடிய முகத்துடன் திரும்பி நடக்கத் துவங்க,
“ஒரு நிமிஷம்..!” எனச் சொல்லி அவனை நிறுத்தினாள்.
“எனக்கு உன் ஆஃபீஸிலேயே வேலை கிடைத்ததற்கு பின்னாலும் உன் அண்ணன் தான் இருக்கானா?!” எனக் கேட்டாள்.
அவசரமாய் மறுப்பாய் தலையாட்டியவன், “இல்லை!” எனப் பதில் சொன்ன பின்பே அவளுக்கு நிம்மதியாய் இருந்தது. ராகவ் இமயனின் தம்பி எனத் தெரிந்ததில் இருந்து, ஒருவேளை தன்னைக் கண்காணிப்பதற்காவே, ராகவ் பணிபுரியும் அதே அலுவலகத்தில் தனக்கும் வேலை கிடைத்ததோ என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. இமயன் அவளை முன்பே தெரியும் எனச் சொன்னதும், அந்தச் சந்தேகம் இன்னும் கொஞ்சம் வலுப்பெற்றிருந்தது. ராகவின் வாயிலிருந்து, இல்லை என்ற பதில் வந்ததும் தான் அவளால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
அவன் பதில் சொன்னதும், நகர முயன்றவளை,
“ஆரு..!” என்ற ராகவின் குரல் தேக்கி நிறுத்தியது.
“ராமன் புகழ் பாடும் லக்ஷ்மணன் மாதிரி இன்னும் உன் அண்ணன் புராணம் பாடி முடியலையா? உன் அண்ணன் என்ன கடவுளா? அவனும் சாதாரண மனுஷன் தானே?!” என நக்கலாய் கேட்டவளிடம்,
“நீ நினைக்கிற மாதிரி இல்லை ஆரு.. அவன் அவனோட முதல் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டுட்டான். அதனால் தான் அவன்கிட்டே என்னால் உனக்காக பேச முடியலை.!” என நிஜமான வருத்தத்துடன் சொன்னான் ராகவ். ஒருபுறம் தோழி, மறுபுறம் சகோதரன்.. யார் பக்கம் நிற்பதெனெ அவனுக்கே தெரியவில்லை. அவனைப் பொருத்தவரை, அவனுக்கு இருவருமே முக்கியம். ஆனால் சில வருடங்கள் முன் கிடைத்த நட்பின் முன், ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதரப் பாசம் வெற்றி கண்டது.
“உன் அண்ணன் முதல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டான். அதனால், நான் ரெண்டாவதாக அவனைக் கட்டிக்கிட்டு கஷ்டப்படணுமா? நல்லா இருக்கு ராகவ் உன் நியாயம். உன்கிட்டே நியாயமெல்லாம் எதிர்பார்க்கலாமா? நீ தான் இமயன் கண்ணுல நேர்மை தெரியுது, மண்ணாங்கட்டி தெரியுதுன்னு சப்போர்ட் பண்ணியவனாச்சே? அப்போ கூட நான் யோசிக்கலை ராகவ். இப்போ தானே தெரியுது.. நீ உன் அண்ணனுக்காக பேசியிருக்கேன்னு.!” என அவள் சொன்னதைக் கேட்டவன்,
“ஆரு..!” என இடைநிறுத்த,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.! கண்ணு முன்னால் நின்னு கடுப்பேத்தாமல் போய்டு ராகவ். உன் அண்ணனுக்காக என் எதிரில் நின்னு சண்டைப் போட்டிருந்தால் கூட, நான் நீ சொல்றதைக் காது கொடுத்து கேட்டிருப்பேனோ என்னவோ? இப்படி நீ என் முதுகில் குத்தின பிறகு.. எனக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கலை ராகவ். எனக்காக செய்யணும்ன்னா ஒண்ணே ஒண்ணு செய்..!” என இடைநிறுத்தி அவள் அவனைப் பார்க்க,
“சொல்லு ஆரு..!” எனக் கேட்டவனிடம்,
“நட்புன்னு சொல்லி யார் முதுகிலும் குத்தாதே.. உன் சுயநலத்திற்கு நட்பை தயவு செய்து யூஸ் பண்ணாதே! நான் உன்னை எவ்வளவு நம்பினேன் தெரியுமா? ரொம்ப வலிக்குது ராகவ். நீ செஞ்ச துரோகத்தை என்னால் மன்னிக்கவே முடியாது! உன்னை மன்னிக்கிற அளவிற்கு எனக்கு பெரிய மனசெல்லாம் இல்லை.!” எனச் சொன்னவள்,
“முதலில் என் ரூமிலிருந்து வெளியே போ!” என அவள் வாசலை நோக்கிக் கை காட்ட அமைதியாய் வெளியேறியிருந்தான் ராகவ்.
ராகவ் சென்ற பின் ஓய்ந்து போய் கட்டிலில் அமர்ந்தவளுக்கு, மனம் பாரமாய் கனத்தது. கதவே இல்லாத அறைக்குள் மூச்சுக் காற்றுக்குத் தவிப்பதைப் போல் உணர்ந்தாள் ஆருத்ரா. இனி எதுவுமே செய்ய முடியாது என்ற ஒருவித கையறு மனநிலைக்கு வந்திருந்தாள். அவள் மனமும் உடலும் நிரம்பவே களைத்துப் போயிருந்தது. தான் தோற்றுப் போகிறோம் என்ற உணர்வை அவளைப் பலவீனப்படுத்த, தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.
“இன்னும் தூக்கம் போகலையா ஆரு? பொழுது போன நேரத்தில், தலையில் கை வச்சு உட்கார்ந்திருக்க?!” என்றபடியே பேத்தியின் நெற்றியில் விபூதியை இட்டுவிட்டார் வள்ளியம்மை.
“ஆரு! நீ என்ன இங்கே இருக்கே? எப்படி வந்த? நீ தூங்கறேன்னு நான் தான் சொல்லி வச்சிருந்தேன்!” என தன் காதுக்குள் கேட்ட மஞ்சரியின் குரலில் விரக்தியாய் சிரித்துக் கொண்டாள் ஆருத்ரா.
“மனதிற்கு மிக நெருக்கமான
ஒருவரால் மட்டுமே..
கணங்கள் தோறும் எனக்கு,
மரணத்தை வழங்க முடியுமென்று நான்..
அறிந்துகொண்ட அந்தத் தருணத்தில்,
நான் எல்லோரிடமிருந்து,
என்னை அந்நியப்படுத்திக் கொண்டேன்..
ஏன் என்னிடமிருந்தே என்னை..”
(படித்ததில் பிடித்தது)
