Loading

அதீதம்-7


அந்த அறை முழுவதையும், நிசப்தம் மட்டுமே ஒட்டுமொத்தமாய் ஆட்கொண்டிருந்தது. குளிர்பதனியின் மென்மையான காற்றுக்கு, கனமான திரைச்சீலைகள் கூட அசைய மறுத்தது. அந்த அளவிற்கு அடர்த்தியான நிசப்தம், அந்த அறையை ஆட்கொண்டிருக்க,

 

“என்ன சார், சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கீங்க? இந்த மாநிலத்தையே ஆளுற முதலமைச்சர் என் வீடு தேடி வந்திருக்கீங்கன்னா அது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும்.!” என்றபடியே உள்ளே நுழைந்தான் இமயவரம்பன்.

இமயவரம்பனை அலைபேசியில் பிடிக்க முடியாது, நேரிலேயே அவனைச் சந்திப்பதற்காக மதுரை வந்துவிட்டார் மயில்ராவணன். அவன் வீட்டிற்கு அவனைத் தேடி வந்தவரை, காக்க வைத்து வேண்டுமென்றே அவன் தாமதமாக வந்து நிற்பதில், ஏகக் கடுப்பில் இருந்தார் அவர்.

 

“சும்மா நடிக்காதே இமயன்! நான் இங்கே வருவேன்னு உனக்குத் தெரியாதா என்ன?!”

“நீங்க இங்கே வருவீங்கன்னு எனக்கு எப்படி சார் தெரியும்? நான் என்ன உங்க மனசாட்சியா?!” நக்கலாய் இமயன் பதில் சொன்னதும் அவரிடத்தில் கோபத்தை தான் கிளப்பியது.

 

“ம்ப்ச்! உன் நடிப்பையெல்லாம் என்கிட்டே வச்சுக்காதே! இப்போ உனக்கு என்னதான் வேணும்? நான் தமிழ்நாட்டோட முதலமைச்சர் உன் வீட்டு வேலைக்காரன் இல்லை. உன் இஷ்டத்திற்கு என்ன வேணும்ன்னாலும் பண்ணலாம்ன்னு நினைப்பா? சொந்த ஊருக்காரன்னு கூடப் பார்க்க மாட்டேன். செஞ்சு விட்டுட்டு போய்ட்டே இருப்பேன் பார்த்துக்கோ!” எனக் கோபமாய் பேசினார் மயில்ராவணன்.

 

“முடிஞ்சா செஞ்சு விட்டுருங்க! நான் எல்லாத்துக்கும் தயாராகத்தேன் இருக்கேன். என்னை என்ன பழைய இமயவரம்பன்னு நினைச்சீங்களா? பழைய மாதிரி அடிமையாய் உங்கக் காலடியில் கிடப்பேன்னு மட்டும் நினைச்சுராதீங்க! சென்னையிலேயே ஒய்யாரமாய் உட்கார்ந்துட்டு இருந்த உங்களை, என் வீடு தேடி, என் வாசல் தேடி வர வச்சிட்டேன்ல்ல? நீங்க முதலமைச்சர் தான் கடவுள் இல்லை. இப்போவும், கம்பீரமா உங்கப் பதவியில் நீங்க உட்கார்ந்திருக்கீங்கன்னா அதற்குக் காரணம் நான் தான். அது உங்களுக்கே நல்லா தெரியும்.!” என அவன் சொல்ல, மயில்ராவணன் முகத்தில் ஈயாடவில்லை.

 

“நீ எனக்காக நிறைய செஞ்சுருக்க இமயன்.. நான் இல்லைன்னு சொல்லவே இல்லை. உன்னால் தான் நான் இந்த நிலையில் நிற்கிறேன். எனக்கு விழுந்த ஒவ்வொரு ஓட்டுக்குப் பின்னாடியும் நீ இருக்கேன்னு எனக்குத் தெரியும். எந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். தொகுதி வாரியாய் என்ன பிரச்சனை? நமக்கு ஓட்டு விழ வைக்க என்ன செய்யணும்? எங்கெங்கே எப்படி ஓட்டு கேட்கணும்ன்னு ஒவ்வொண்ணுக்கும் பின்னாலேயே தான் நீ இருந்த. இப்போவும் இருக்க. என்னதான் வெளியில் நீ கட்சிக்கு சம்மந்தம் இல்லாத ஆள் மாதிரி இருந்தாலும், என்னோட தனிப்பட்ட அரசியல் ஆலோசகரா இருக்கிறவன் நீ தான். நான் நன்றி மறக்கிறவன் இல்லை இமயன்!” என அவர் சமாதான உடன்படிக்கைக்கு முயல,

 

“இம்புட்டு நன்றி உங்க மனசில் இருந்ததால் தான், என்னைக் கொல்ல ஆள் அனுப்புனீங்களா? இதிலேயே உங்க நன்றி என்னன்னு தெரியலை.?!” நறுக்குத் தெறித்தார் போல் கேட்டான் இமயன். அவர் பதிலே பேசவில்லை. அவரால் பதில் பேச முடியவில்லை.

 

“நா.. நான் ஒண்ணும் அதெல்லாம் பண்ணலை இமயன். உனக்கு என்னைப் பற்றித் தெரியாதா? உன் மேல நம்பிக்கையும், நன்றியும் இருக்கப் போய்த்தான், என் பொண்ணையே உனக்குக் கட்டிக் கொடுத்தேன். என்னைக் கை நீட்டி குற்றம் சொல்லும் முன் யோசிச்சு பாரு இமயன்!” என அவர் சொல்ல,
“நீங்க ஆள் ஏற்பாடு பண்ணுணீங்கன்னு எனக்குத் தெரியும். ஆதாரம் காட்டவா?! உங்க சுயநலத்திற்காக உங்கப் பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சீங்க.. கடைசியில் என்ன ஆச்சு? நான் உங்களை விட்டு வெளியே போய்டக் கூடாதுன்னு, என்னை இழுத்துப் பிடிக்கத் தானே இந்தக் கல்யாணத்தைப் பண்ணி வச்சீங்க?” என அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது வாயடைத்து நின்றார் மயில்ராவணன்.

 

இமயனுக்கு மனம் நிரம்ப வலித்தது. தன் தகப்பனுக்கு நிகராக நினைத்தவர் தன் முதுகில் குத்துவார் என அவன் கனவிலும் நினைத்ததில்லை. அவரை நம்பினான். தன்னை நம்பியதை விட, மயில்ராவணனை அதிகமாய் நம்பினான். ஆனால் அவர் தனக்கே துரோகம் செய்வார் என ஒருநாளும் அவன் நினைக்கவில்லை.

 

அவர் அரசியல்வாதி.. இவரிடம் ஒன்றும், அவரிடம் ஒன்றும் மாற்றி மாற்றி பேசி, காரியம் சாதித்துக்கொள்ளும் வல்லமை படைத்தவர். அவருக்கு அது வழக்கம் தான். ஆனால் நம்பி காயம் பட்ட அவனுக்குத் தானே ஏமாற்றப்பட்டதன் வலி தெரியும். இன்றும் அவன் அவரை மதிக்கிறான். இன்றும் அவரைப் பற்றிய இரகசியங்கள் அவன் மனப் பெட்டகத்தில் பத்திரமாய் இருப்பதால் மட்டுமே அவர் தலை நிமிர்ந்து நடக்கிறார். இப்போதும், கண் சிமிட்டும் நேரத்தில், அவரைப் பற்றிய இரகசியங்களை அவன் உடைத்துவிட முடியும். ஆனாலும் அவனுக்கென்று சில கொள்ளைகள் இருக்கிறதே..?

 

இமயனைப் போல, நன்றிக்காக, நம்பிக்கைக்காக கடைசிவரை உண்மையாய் இருக்கும் நபர்கள் தான் அதிகமாய் காயப்படுகிறார்கள். இங்கே கேட்டு, அங்கே சொல்லி காரியம் சாதித்துக் கொண்டு, வெளியே நல்லவராய் காட்டிக் கொண்டு திரிபவர்கள், தனக்கென்று கூட்டம் சேர்த்துக் கொண்டு, நன்றாகத்தான் இருக்கிறார்கள் மயில்ராவணனைப் போல. காலம் கலிகாலமாய் மாறிவிட்ட பின் தலைகீழாய் மழை பெய்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை தான்.

 

“பேசுங்க சார்.. வாயைத் திறந்து பேசுங்க! இந்த மாநிலத்தின் முதலலமைச்சர், கட்சிக் கூட்டத்தில் வாய் ஓயாமல் பேசுறவர் இப்போ வாயடைச்சு நிற்பதின் காரணம் என்ன? எதுக்காக இந்த மௌனம்.? என் நல்லதுக்குன்னு நீங்க செஞ்சது அத்தனையும் உங்க சுயநலத்திற்காக மட்டும் தானே? அப்பறம் ஏன் எனக்காகன்னு பொய் சொல்றீங்க? நீங்க மேடையில் பேசி பேசி மக்களை ஏமாத்தற மாதிரி என்னையும் ஏமாற்றலாம்ன்னு நினைக்காதீங்க!” எனக் கோபமாய் அவன் பேச,.

 

“கொஞ்சம் பொறுமையாய் இரு இமயன்! நான் சொல்றதைக் கேளு! இப்போவும் எனக்கு நீ ரொம்ப முக்கியம். நீ முக்கியம்ன்னு நினைச்சதால் மட்டும் தான், எல்லா வேலையையும் விட்டுட்டு மதுரை வரை வந்திருக்கேன். உனக்கு எவ்வளவு பணம் வேணும்ன்னு சொல்லு. நாம நமக்குள்ளே ஒரு டீல் போட்டுப்போம். இந்தக் கட்சி, பதவின்னு நீ வராமல் இருக்கணும்ன்னா நான் உனக்கு எவ்வளவு தரணும்? நீ எவ்வளவு கேட்டாலும் நான் கொடுத்துடுறேன். ஆனால் நீ அதோட விலகிடணும்!” என தன் காரியம் முடிவதற்காக, நிதானமாய் பொறுமையாய், இமயன் மீது அக்கறை இருப்பவர் போலவே பேசினார் மயில்ராவணன்.

 

இமயன் பதில் ஏதும் பேசாமல், அமைதியாய் நிற்க,

 

“இங்கே பாரு இமயன்! உனக்கும் கல்யாணம் ஆகப் போகுது. நீயும் வாழணும். உன்னை நம்பி வர்ர அந்தப் பொண்ணையும் யோசிச்சு பாரு! நான் உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்ங்கிறது புரியும்.!” என அவன் மனதைக் கரைக்க முயன்றார் அவர்.

 

“அப்போ அந்த பாலம் கட்டுற கான்ட்ரேக்ட்டில் அடிச்சீங்களே.. அந்த ஐயாயிரம் கோடி.. அதை எனக்குக் கொடுங்க!” என அவன் சட்டென கேட்டுவிட, கண்கள் தெறித்து விழுமளவிற்கு அதிர்வுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தார் மயில்ராவணன்.

 

“விளையாடுறியா இமயன்.? நானும் என் பொறுமையை இழுத்துப் பிடிச்சு வச்சிட்டு நிற்கிறேன். என் பொறுமையை ரொம்பவே சோதிக்கிற நீ.. ஐயாயிரம் கோடி உனக்கு சாதாரணமா போச்சா? அதில் வந்த பணம் சம்மந்தப்பட்டவங்களுக்கெல்லாம் பங்கு பிரிச்சுக் கொடுத்தாச்சு.!” என எரிச்சலுடன் சொன்னார் அவர்.

 

“நான் விளையாடலை சார். நிஜமாகத்தான் கேட்கிறேன். இது விளையாட்டு விஷயமில்லைன்னு எனக்குத் தெரியும்! தொகுதி மேம்பாட்டு நீதி, பேரிடர் மேலாண்மை நிதி, வடிகால் சீரமைப்பு நிதின்னு எவ்வளவு வருது.. நீங்க எவ்வளவு செலவு பண்ணுறீங்க? குறிப்பிட்ட பணிக்கு எவ்வளவு போகுது.. உங்க பைக்கு எவ்வளவு வருதுன்னு எல்லாமே எனக்குத் தெரியும். ஐயாயிரம் கோடியெல்லாம் உங்களுக்கு ஒரு விஷயமே இல்லைன்னு எனக்குத் தெரியும். ஸ்விஸ் பேங்க்கில் இதைவிட நிறைய பதுக்கியிருக்கீங்கன்னு கூட எனக்குத் தெரியும்!” என அவன் சொல்ல,

 

“தெரிஞ்சு வச்சு என்ன செய்யப் போற? இதெல்லாம் வெளியில் போய் சொன்னால் ஒரு பய நம்ப மாட்டான். கொலையே செஞ்சிருந்தாலும், ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது இமயன். இது அரசியல். இது ஒண்ணும் சின்னக் குழந்தைங்க விளையாட்டு இல்லை. வந்த வரை லாபம்ன்னு கொடுக்கிற காசை வாங்கிக்கிட்டு விலகும் வழியைப் பாரு! இப்போ உனக்கு நான் பணம் கொடுக்கிறதே, இத்தனை நாளாய் கட்சிக்காக உழைச்சிருக்கிறியே அதுக்கான சன்மானம் தான்.!”

 

“அப்போ உங்கப் பொண்ணைக் கட்டிக்கிட்டு என் வாழ்க்கையைத் தொலைச்சதுக்கான நஷ்ட ஈடாக என்ன தருவீங்க மாமனாரே? தொலைஞ்சு போன என் வாழ்க்கையை உங்களால் திருப்பித் தர முடியுமா? இது அரசியல், குழந்தைங்க விளையாட்டு இல்லைன்னு சொல்ற நீங்க, என் வாழ்க்கையை விளையாட்டாய் மாத்துனீங்களே அதுக்கான பதில் என்ன? நான் தொலைச்ச என் வாழ்க்கையை உங்க பணத்தால் மதிப்பிட முடியுமா? இல்லை நான் இழந்த நாட்களை உங்களால் திருப்பித் தர முடியுமா? உங்க பொண்ணோட நடந்த கல்யாணத்தை இல்லாமல் பண்ண முடியுமா? இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் தான்.. ஆனால் எனக்கு இது ரெண்டாம் கல்யாணம் தானே? இதை உங்களால் மாத்த முடியுமா? இதுக்கான நஷ்டஈடாக, சன்மானமாக, உங்க பாஷையில் சொல்லணும்ன்னா லஞ்சமாக என்ன தரப் போறீங்க?!” என அவர் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கேள்வி கேட்டான் இமயன்.

 

“ம்க்கும்..!” எனத் தொண்டையைச் செருமிக் கொண்டவர்,

 

“அதுக்காகத்தான் உன் கல்யாணத்தை நானே முன்னே நின்னு நடத்தி வைக்கிறேன். இது பத்தாதா உனக்கு? பணத்தை தண்ணியா இரைக்கிறேன். இதற்குமேல் என்ன செய்யணும்ன்னு நினைக்கிற?!” எனத் திமிராகவே கேட்டார்.

 

“நீங்க இப்போ நேரில் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் அன்றைக்கு ஃபோனிலேயே எனக்கு என்ன வேணும்ன்னு தெளிவா சொல்லிட்டேன்.அதோட, நீங்க என்னைப் பார்க்க வரலைன்னு கூட எனக்குத் தெரியும் மாமனாரே.. மதுரையில் நடக்கிற புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்கத்தான் வந்தீங்கன்னு கூட எனக்குத் தெரியும். எனக்கு நம்மக் கட்சியில் பதவி வேணும். எம்.எல்.ஏ என்கிற அந்தஸ்து வேணும்.!” என தெள்ளத் தெளிவாய் அவன் சொல்ல,

 

“ம்ப்ச்! எந்தத் தொகுதியும் காலியா இல்லை இமயன். தேர்தல் எல்லாம் முடிஞ்சாச்சு. இனி என் கையில் ஒண்ணும் இல்லை. வேணும்ன்னா அடுத்த தேர்தலில் பார்க்கலாம்!” தட்டிக் கழிக்க முயன்றார் மயில்ராவணன்.

 

“இந்தத் தட்டிக் கழிக்கிற வேலையெல்லாம் வேணாம் மாமா! நம்ம மேலூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சுந்தரம் உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிட்டலில் தானே இருக்கார். பிழைக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்களாமே..? அந்தத் தொகுதியில் என்னை நிறுத்துங்க! இத்தனை வருஷம் கட்சிப்பணி செஞ்ச எனக்காக இதைக் கூடச் செய்ய மாட்டீங்களா? நீங்க நினைச்சால் செய்யலாம் மாமா! ஏன்னா நீங்க இந்த மாநிலத்தோட முதலமைச்சர். உங்களால் முடியாதது எதாவது இருக்கு?” என நக்கலாகவே கேட்டான் அவன்.

 

“முடியலைன்னு நான் சொன்னால்?!” எனக் கேள்வியாய் அவர் நிறுத்த,

 

“இத்தனை வருஷமாய் உங்கக் கட்சியில் இருந்த நான்.. எதிர்க்கட்சியில் சேருவதை உங்களால் தடுக்க முடியாது..! வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். அதோட பின் விளைவுகள் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன். யோசிச்சு எனக்கு நல்ல முடிவா சொல்லுங்க மாமா! எனக்கு நல்லதா இருக்கணும்..! சொல்றது புரியுது தானே?!” என அழுத்தம் தந்து அவன் கேட்க, விக்கி விரைத்துப் போய் அசையாமல் நின்றார் மயில்ராவணன்.

********

“ம்மா! எதுக்கும்மா அவங்க ஊருக்குப் போகணும்? நான் எங்கேயும் வரலை.. நீங்க போய்ட்டு வாங்க! நான் கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னாடி வர்ரேன்.!” என தன் தாயிடம் புலல்பிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

 

“என்கிட்டே சொன்னதைப் போய் உன் தாத்தாக்கிட்டே சொல்லு ஆரு! அவிங்க ஊரில் தான் கல்யாணத்தை நடத்தணுமாம். பேசாமல் வாயை மூடிக்கிட்டு துணியை எடுத்து வைக்கிற வழியைப் பார்!”

 

“ம்ப்ச்! ம்மா! நம்ம வழக்கப்படி பொண்ணு வீட்டில் தானே கல்யாணம் பண்ணுவாங்க? இவங்க மட்டும் ஏன் புதுசு புதுசா செய்றாங்க? எனக்கு இதெல்லாம் பிடிக்கலை!” சலித்துக் கொண்டாள் அவள்.

 

“ஆமா! உன்னையும் என்னையும் கேட்டுத்தேன் இந்த வீட்டில் எல்லாம் நடக்குது பாரு? அவங்களுக்கு எது வசதியோ அதைத்தேன் செய்வாங்க! நீ வெரசா துணிமணிணை எடுத்து வச்சுட்டு, குளிச்சுட்டு வந்துரு. நல்ல சேலையாய் எடுத்து கட்டிக்கோ ஆரு!”

 

“ம்மா! நான் கிளம்புறதே பெரிய விசயம். இதில் சேலையெல்லாம் கட்டச் சொன்னன்னு வையி.. நான் வரவே மாட்டேன். அப்படியே சென்னைக்கு ஓடிப் போயிருவேன் பார்த்துக்கோ!”

 

“போடி.! அப்படியே என்னையும் கூட்டிக்கிட்டு போ! உனக்கு நடுவிலும் இந்தக் குடும்பத்திற்கு நடுவிலும் சிக்கி சீரழிஞ்சுட்டு கிடக்கேன். நிம்மதியாய் இவிங்க இல்லாத ஊரில் இருந்துட்டு போறேன். உன் தாத்தன் என்னடான்னா புள்ளையை வெரசா கிளப்பி விடுன்னு சொல்றார். நீ என்னடான்னா ஆயிரம் நொட்டை சொல்லிக்கிட்டு இங்கணயே உட்கார்ந்து கிடக்க. இதில் உன் பெரியம்மா வேற ஆரு கிளம்பிட்டாளான்னு இப்போ வந்துருவா! என்னைப் போட்டு சாவடிக்கிறீங்க! உங்கக் கிட்டே கிடந்து பாடுபடுறதுக்கு போய்ச் சேர்ந்துடலாம் போல இருக்கு.!” என ஆற்றாமையோடு இந்துமதி சொல்ல,

 

“ம்மா! ஏம்மா லுசு மாதிரி பேசுற..?” எனக் கேட்டாள் ஆருத்ரா.

 

“எம்மா ராசாத்தி! போதும் முடியலை.. வாயை மூடிட்டு கிளம்பு!” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

“என்ன ஆரு, நேரம் ஆகிடுச்சு.. இன்னும் குளிக்காமல் உட்கார்ந்து கிடக்க? தாத்தாஅங்கண இன்னும் கிளம்பலையான்னு வையுறாக!” என்றபடி வந்து நின்றார் பொன்னி.

 

“அவருக்கு என்ன சேலை கட்டுற வேலையா? தலையைப் பின்னி பூ வைக்கிற வேலையா? போங்கக்கா ஆரு பத்து நிமிஷத்தில் வந்துடுவா!” என இந்துமதி சொல்ல பொன்னியின் முகம் ஒருமாதிரி சுருங்க, அமைதியாய் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

 

“ம்மா! பெரியம்மா தாத்தாக்கிட்டே சொல்லிடப் போறாங்கம்மா!”

 

“சொன்னால் சொல்லட்டும். சும்மா இங்கே கேட்டு அங்கே சொல்லிக்கிட்டு.. எம்புட்டு தான் நானும் பொறுத்துப் போக?” எனச் சலித்துக் கொண்டார் இந்துமதி.

 

“ம்மா! பேசாமல், நீ சொன்ன மாதிரி நீயும் நானும் ஓடிப் போயிருவோமா? உனக்கும் இந்தக் கல்யாணம் பிடிக்கலை தானே? பின்னே ஏம்மா?!” எனக் கேட்டாள் ஆருத்ரா.

 

“கொஞ்சம் பயம் இருக்கு டி! இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா ரெண்டாந்தாரம்ன்னு ஒண்ணு, அப்பறம் அந்தப் பையனுக்கு அடிப்பட்டது ஒண்ணு.. ரெண்டும் என் மனசுக்குள்ளே உறுத்திக்கிட்டு தான் இருக்கு. ஆனால் உன் தாத்தா என்னதேன் கோபமாய் பேசினாலும், உங்களுக்குக் கெட்டது நினைக்க மாட்டாரு… அந்த ஒரேயொரு காரணத்திற்கு தான் அமைதியாய் இருக்கேன்.! என்னதேன் கல்யாணத்தை விட்டுட்டு ஓடிப் போனாலும், உன் அப்பாவும், தாத்தாவும் நம்மளை விட்டுட்டுதேன் மறுவேலை பார்ப்பாங்க! சும்மா புலம்பாமல் படக்குன்னு கிளம்பி வா! நான் கீழே போறேன்.!” எனச் சொல்லிவிட்டு அவர் எழுந்து சென்றுவிட, யோசனையாய் அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

 

அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. திருமணத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல், இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நண்பன் ராகவ் இமயனுக்கு ஆதரவாய்ப் பேசுவதைத் தான் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

தனக்குத் தானே அவன் முதலில் நண்பன், அப்படியிருக்கையில் தன்னை விட்டுவிட்டு, அவன் இமயன் பக்கம் நிற்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

‘அப்படி என்ன இவன் நல்லவன்.? எல்லாரும் இவனுக்கே சப்போர்ட் பண்ணுறாங்க? ராகவ் மட்டும் தான் என் பக்கம் இருந்தான். இப்போ அவனும் நியாயம் பேசுறேன், அவன் கண்ணுல நேர்மை தெரியுதுன்னு திரியறான் எருமைமாடு! கடவுளே.. என்னைக் காப்பாத்து. என்னால் முடிஞ்ச வரை முயற்சி பண்ணிட்டேன். இந்தக் கல்யாணத்தை மட்டும் எப்படியாவது நிறுத்திடு.!’ எனத் தனக்குள் வேண்டிக் கொண்டாள் ஆருத்ரா.

 

அடுத்த அரைமணி நேரத்தில் அழகான ஆர்க்கிட் நிறத்தில், வெள்ளிக் கரை வைத்த புடவை அணிந்து, தோகையாய் விரித்தக் கூந்தலுடன் படிகளில் இறங்கி வந்தாள். பெரிதாய் ஒப்பனை எதுவும் அவள் முகத்தில் இல்லை. புடவையிலிருந்த சில்வர் நிறத்திற்கு தோதாக, குட்டி ஜிமிக்கியும், கழுத்தில் மெல்லிய சங்கிலியும் அணிந்திருந்தாள்.

 

“என்னடி இப்படி வந்து நிற்கிறே? நகையெல்லாம் எடுத்து போட்டுட்டு வான்னு சொன்னேன்ல்ல? எல்லார்கிட்டேயும் எனக்கு வசவு வாங்கிக் கொடுக்கிறதே உனக்கு வேலையா டி?” என இந்துமதி அவள் காதுக்குள் முணுமுணுக்க,

 

“ம்மா! நான் இப்படித்தான் வருவேன். இல்லைன்னா என்னை விட்டுட்டு நீங்க எல்லாம் கிளம்புங்க!” என அவள் பதிலுக்கு சத்தமாய் சொன்னாள்.

“கொஞ்சம் மெதுவா பேசு டி!” என மகளைக் கண்டித்தவர்,

“மஞ்சு! அக்காவோட நகையெல்லாம், அந்த மெருன் கலர் பேக்கில் இருக்கும் அதை எடுத்துட்டு வா!” என தன் இளைய மகளைப் பணித்தார்.

 

“ஆமா இந்து! நீ செய்றதுதேன் சரி! பொண்ணுக்கு பூவு, பொட்டு, நகைதேன் அழகு!” என இடையில் வந்து நின்றார் பொன்னி.

 

“ஆமா! ஃபாரின் கன்ட்ரீஸில் இருக்கிறவங்க எல்லாரும் பொட்டு வச்சு பூ வச்சுட்டு தானே திரியறாங்க? அவங்க எல்லாம் அழகா இல்லையா பெரியம்மா?” வேண்டுமென்றே கேட்டாள் ஆருத்ரா.

“ம்க்கும்.. அவங்க எங்கே அழகா இருக்காங்க? வெள்ளை வெளேர்ன்னு வெளுத்துப் போய்தேன் கிடக்காக!” என பொன்னி சொன்ன அதே நேரம்,

 

“அவளுக்குப் பிடிச்ச மாதிரி வரட்டும் அத்தே! ஆராவைக் கட்டாயப் படுத்தாதீங்க!” என்றபடி வந்து நின்றான் இமயவரம்பன். தன் செவிகளை அவன் குரல் தீண்டிய மாத்திரத்தில், விலுக்கென்று தன்னை அறியாமலே நிமிர்ந்து பார்த்தாள் ஆருத்ரா. எப்போதும் போல், வேட்டி சட்டையில் தான் இருந்தான். ஆனாலும் அழகாகத் தான் இருந்தான்.

 

‘இவனுக்கு வேற அவுட்- ஃபிட்டே கிடைக்காதா? எப்போ பார்த்தாலும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைன்னு தான் இருக்கான். கொஞ்சம் கலர்ஃபுல்லா ட்ரெஸ் பண்ணினால் என்ன?’ எனத் தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

 

‘என்னைக் கட்டாயப்படுத்தி மணக்கத் துணியும் இவனா, என் விருப்பத்திற்கு மதிப்பளிக்கிறான்?’ வியப்பாய் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆருத்ரா.
அதே நேரம், இவர்கள் பயணம் செய்வதற்கான வாகனங்கள் தயாராகிவிட, வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் ஆருத்ரா. இவர்களின் வாகனம் கிளம்பி வாசலைக் கடக்கும் வரையிலுமே இமயனின் பார்வை ஆருத்ராவிடம் மட்டுமே இரசனையாய் படிந்திருந்தது.
சிறிது தூரம் பயணப்பட்டு வந்ததுமே,

 

“எந்த ஊருக்கு போறோம்மா?!” தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அன்னையிடம் கேட்டாள் ஆருத்ரா.

 

“எந்த ஊருன்னு தெரியாமல்தேன், வண்டியில் ஏறி உட்கார்ந்தியாக்கும்? நல்ல பொண்ணு.. பத்திரிக்கையில் பார்த்திருந்தாலே எந்த ஊருன்னு தெரிஞ்சுருக்குமே?” என பொன்னியின் குரல் பின்னாலிருந்து கேட்க,

 

“நான் எப்படியும் சென்னைக்குத்தான் போகப் போறேன். இந்த ஊரையெல்லாம் தெரிஞ்சு நான் என்ன பண்ணப் போறேன்?!” என பொன்னிக்கு பதில் கொடுத்தவள், தன் அன்னையிடம் மீண்டும் ஊரின் பெயரைச் சத்தமில்லாமல் வினவினாள்.

 

“யானைக்கல் டி! அதுதேன் இமயன் தம்பி பிறந்த ஊராம்!” என இந்துமதி சொல்ல,

“இப்படியொரு ஊரு மதுரையில் இருக்கா?!” எனக் கேட்டவளுக்கு, இந்தப் பெயரை எங்கோ கேட்டது போலவும் ஞாபகம் இருந்தது.

 

“நீயெல்லாம் மருதையில் பிறந்து வளர்ந்தேன்னு சொல்லிக்காதே! நம்ம வடக்குவெளி வீதியிலே யானைக்கல் சிலை இருக்குமே அந்த ஊருதேன் யானைக்கல். சின்ன வயசில் உங்க அப்பா கூட்டிட்டு போயிருக்காரே டி! உனக்கு ஞாபகம் இல்லை? பூங்கா, நீருற்று எல்லாம் பார்த்தேன்னு கதை சொல்லுவியே?!” என இந்துமதி கேட்க அவளுக்கு சுத்தமாய் நினைவில்லை.

 

மதுரையின் வடக்கு வெளி வீதியில், நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிறுவப்பட்ட யானைக்கல் சிலையைச் சுற்றி அமைந்த மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியே யானைக்கல் என்ற புறநகர்ப் பகுதி. மதுரையின் நான்கு வெளிவீதிகளிலும் (கீழ வெளி வீதி, மேல வெளி வீதி, வடக்கு வெளி வீதி மற்றும் தெற்கு வெளி வீதி) பழங்காலத்தில் கட்டப்பட்டிருந்த பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்கள் மற்றும் நுழைவு வாயில்களில், மேல வெளி வீதி கோட்டை வாசலைத் தவிர மீதி மூன்று கோட்டைச் சுவர்களும், நுழைவு வாயில்களும், பிற்காலத்தில் வெள்ளைக்கார கலெக்டரான ‘மாரட்’ (Marret) என்பவரது உத்தரவால் அகற்றப்பட்டன.

 

வடக்கு வாசல் அகற்றப்பட்ட இடத்தில் அடையாளச் சின்னமாக, மகாலிலிருந்து எடுத்து வரப்பட்ட ஒரு யானைக்கல் சிலை நிறுவப்பட்டது. அதுவே, இன்றும் காட்சி தருகிறது. அந்த இடமே யானைக்கல் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிழக்கு திசை நோக்கி வைக்கப்பட்டிருந்த இந்த யானைக்கல் சிலை, சில காலம் வேறு திசையைப் பார்க்கும் வண்ணம் திருப்பி வைக்கப்பட்டது. அப்போது முதல் மழை இல்லாது மதுரை வறட்சியாகக் காணப்பட்டதாகவும், பின்னர் பழையபடி கிழக்குத் திசை நோக்கியே திருப்பி வைக்கப்பட்டதும், மீண்டும் மழையால் செழிப்படைந்ததாகவும் செவி வழிக் கதை ஒன்று உண்டு.

 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தற்போது காந்தியடிகள் சிலை, சிறிய பூங்கா மற்றும் நீரூற்றும் ஏற்படுத்தப்பட்டு, மதுரை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், யானைக்கல்லும் புதுப்பிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

 

அவளுக்கு எதுவும் நினைவில்லாமல் போனாலும், அந்தப் பெயர் எங்கோ கேட்டது போல் மட்டும் ஞாபகம் இருந்தது. ஒருவேளை சிறு வயதில் போய் வந்ததால் நினைவிருக்குமோ என நினைத்துக் கொண்டாள்.
அதே நேரம், ‘ராகவை காலையிலிருந்து பார்க்கவே இல்லையே? எங்கே சென்றான் அவன்? சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்குப் போய் விட்டானோ?!’ என்ற எண்ணம் தோன்ற,

 

“ராகவ் எங்கேம்மா?” என தன் அன்னையிடம் கேட்டாள் ஆருத்ரா.

“அவரு இமயன் கூட இருப்பாரு. அவரு தானே மாப்பிள்ளை தோழன். அந்த ராகவ் உன் கூடத்தேன் வேலை செய்யுதாம்ல்ல?! நீயும் ஒத்தை வார்த்தை கூட சொல்லவே இல்லை ஆரு?!” என தன் அன்னை பதில் கேள்வி கேட்பதை விநோதமாய்ப் பார்த்தாள் ஆருத்ரா.

 

“ஏம்மா உனக்கு தெரியாதாக்கும்? அவன் என் ஃப்ரெண்ட் மா! அவன் என்னைப் பார்க்கத்தான் இங்கே வந்தான். தாத்தாகூட சென்னையில் பையன் கூட சுத்துறேன்னு திட்டினாரே.. இவன் தான் அவன். நீ என்னடான்னா அவன் என் கூட வேலை செய்யறதே தெரியாதுங்கிற?” என அவள் கேட்க,

 

“ஆமாம்மா! ஆரு என்கிட்டே சொல்லிருக்கா! ராகவ் அவ கூட வொர்க் பண்ணுறவங்க தான்.!” என மஞ்சரியும் இடையிட்டு சொல்ல,

 

“அப்போ அதுவும், இதுவும், ஒரே பையன் தானா? எனக்கு உன்கூட வேலை செய்யறதெல்லாம் இப்போதேன் தெரியும். முதல் நாள், இமயன் அந்தப் பையனை நம்ம வீட்டுக்கு கூட்டி வந்துச்சே, அப்போ தாத்தாதேன் இந்தப் பையன் இமயனோட தம்பின்னு சொன்னாக. அது மட்டுந்தேன் எனக்குத் தெரியும். பிறகு ராகவ் தான் உன் கூட வேலை பார்க்கிறதை சொன்னிச்சு!” என்ற அபிராமியின் கூற்றில் ஒட்டுமொத்தமாய் அதிர்ந்து போனாள் ஆருத்ரா.

 

“ம்மா.. நீ.. நிஜமாகத் தான் சொல்றியா? சும்மா பொய் சொல்லாதே மா!” என குரல் கமறக் கேட்டாள் அவள்.

 

“இந்த விஷயத்தில் பொய் சொல்லி நான் என்னடி செய்யப் போறேன்?! நீ வேணும்ன்னா அந்த ராகவ் கிட்டேயே கேளு! இமயனின் தம்பிதேன் இந்த ராகவ். இதுவே தெரியலை ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கிற..” என அவர் சொல்லிவிட, தன்னை ஏமாற்றிய ராகவின் மீது அதீதக் கோபத்தில் அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்