
அதீதம்-6

தோள்பட்டையில் கட்டுடன் அமர்ந்திருந்தான் இமயவரம்பன். நடப்பது என்னவெனப் புரியாமல் குழப்பமாய் நின்றிருந்தாள் ஆருத்ரா. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? எதற்காக நடக்கிறது? எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. ஒன்றும் புரியாமல், அவள் நின்றிருக்க, நாடியில் கரம் பதித்து யோசனையுடன் அமர்ந்திருந்தார் பழனிவேல்.
“என்னமோ இதோட போச்சு! நம்ம பிள்ளைக்கு எதாவது ஒண்ணுன்னா என்ன செஞ்சிருக்க முடியும்? எனக்கு என்னவோ இது சரியா படலை.!” வள்ளியம்மையின் கூற்றை ஆமோதிப்பதைப் போல், மொத்த வீடும் அமைதியாய் இருந்தது.
“எனக்கும் அத்தை சொல்றதுதேன் சரின்னு படுதுங்க மாமா! அந்தஸ்து, வசதின்னு பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு பொழுதுக்கும் பதறிக்கிட்டே கிடக்க முடியுமா?! உங்க அரசியல் ஆதாயத்திற்காக என் பொண்ணு வாழ்க்கையை பலி கொடுத்துறாதீக!” என ஒருவித ஆற்றாமையுடன் பேசினார் இந்துமதி.
“இந்து.. வாயை மூடிக்கிட்டு இருக்க மாட்ட! அப்பா யோசிக்கிறாங்கல்ல என்ன முடிவுன்னு அவங்களே சொல்லுவாக!” என மனைவியை அடக்கினார் பரமசிவம்.
“நீ என்னடா கூறுகெட்டத்தனமா பேசுற?, மாப்பிள்ளை தம்பி மேல பட்டது, தவறி உன் மகள் மேலே பட்டிருந்தாலும் இப்படித்தேன் பேசுவியா? பணம் காசு முக்கியந்தேன்.. ஆனால் எல்லாத்துக்கும் மேலே உசிரு முக்கியம்.! பணம் காசு போனால் சம்பாதிச்சுக்கிடலாம்.. உசுரு போனால் வருமா?” முதன் முறையாய் மருமகளின் கருத்தோடு ஒத்துப் போனார் வள்ளியம்மை.
“ம்மா.. புரியாமல் பேசாதேம்மா.. பொது வாழ்க்கைன்னு இருந்தால் இதெல்லாம் சகஜம்தேன்.. குடும்பத்தோடு போறோமின்னு தம்பி பாதுகாப்பு இல்லாமல் வந்துடுச்சு. போற இடத்திற்கு பாதுகாப்போட போய்ட்டோமின்னா என்ன பிரச்சனை வரப் போகுது?” என பரமசிவம் சொல்ல,
“ஆமாடா.. நான் புரியாமல் பேசுறேனா? நீதேன் புரியாமல் பேசிட்டு கிடக்க! பொது வாழ்க்கைன்னு அந்தத் தம்பி கஷ்டப்படுறாக.. எம் பேத்தி என்னத்துக்கு கஷ்டப்படணுங்கிறேன்? இந்த அரசியல் ஆதாயமெல்லாம் வேணாம். நமக்கு தோதான மாப்பிள்ளையாய் பார்த்து கல்யாணம் செஞ்சு வைப்போம். கல்யாணத்திற்கு முன்னேயே இப்படி நடக்கிறது எனக்கு சரியா படலை!” எனச் சொன்ன வள்ளியம்மையை ஆச்சர்யமாய் பார்த்தாள் ஆருத்ரா.
இங்கு வந்த நாளில் இருந்து, அவள் தான் மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தாள். முதல் மறுப்பு பெரியவர்கள் பக்கமிருந்து வந்திருக்கிறதென்றால், அது வள்ளியம்மையிடமிருந்து தான்.
என்னதான் அவள் அன்னை அவளுக்காக பேசினாலும் கூட, அது இந்த வீட்டில் எடுபடாது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், வள்ளியம்மை பேசினால், அவளின் தாத்தா யோசிக்கவாவது செய்வார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. ஆனால், அவள் நம்பிக்கைக்கு ஆயுள் குறைவென்பதை அவள் அடுத்த நொடியே அறிந்துக்கொண்டாள்.
“வள்ளி! நீ கொஞ்சம் புலம்பாமல் இரேன்.. எனக்கு தம்பி மேலே நம்பிக்கை இருக்கு. இமயன் எல்லாத்தையும் பார்த்துப்பான்..!” என ஒற்றை வார்த்தையில், அனைத்திற்கும் முடிவு கட்டினார் பழனிவேல்.
“எல்லாத்தையும் தம்பி பார்த்துப்பான்னு நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனால் நாளைக்கு இந்த தம்பியே இல்லாமல் போய்ட்டால், நம்ம பொண்ணு நடுவில் நிற்குமா? எதுவா இருந்தாலும் யோசிச்சு பேசுங்க!” என மீண்டும் வள்ளியம்மை சொல்ல,
“எம்புட்டு செலவு பண்ணி கல்யாணம் ஏற்பாடு பண்ணிருக்கு.? மருதை மட்டுமில்லை, தமிழ்நாடு, டெல்லின்னு எல்லா ஊருபக்கமும் பத்திரிக்கை கொடுத்தாச்சு. இப்போ வந்து அது, இதுன்னு விளையாடுறீகளா? கல்யாண வேலையை நாங்க பார்த்துக்கிடுவோம்.. நீங்க போய் உங்க பொழப்பை பாருங்க!”என பழனிவேல் உறுதியாய் சொல்லிவிட, ஏமாற்றம் தாங்கிய முகத்துடன் நின்றிருந்தாள் ஆருத்ரா.
“இமயன்! நீ ஒத்தைக்கு வீட்டுக்குப் போக வேண்டாம். நான் துணைக்கு ஆள் அனுப்பறேன். முதலில் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுத்து, பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்! இத்தனை வருஷமாய், கட்சியில் இருந்து, கட்சியின் வளர்ச்சிக்கு உழைச்ச உனக்கே இந்த நிலைமைன்னா, அடிமட்ட தொண்டர்களோட நிலை என்ன? இதுக்குத்தேன் அப்போவே சொன்னேன். அவங்க தாரேன்னு சொல்லும் போதே, வேண்டாம்ன்னு சொல்லாமல் பதவியில் உட்கார்ந்திருக்கணும். நாம யோசிக்க எடுத்துக்கிட்ட நேரத்தை எதிராளி அவனுக்கு சாதகமாய் பயன்படுத்திக்கிட்டான்.! சுதாரிக்க வேண்டிய இடத்தில், சுதாரிக்காமல் விட்டது நம்ம தப்புத்தேன்.!” என பழனில் வேல் சொல்ல,
“நீங்க சொல்றது சரிதானுங்க ஐயா.. நம்பி கெட்ட பிறகுதேன் புத்திக்கு உரைக்குது. இனிமே இதை நான் லேசில் விடப் போறதில்லைங்க ஐயா!” எனச் சொன்னவன், ஒருபுறம் மட்டும் கழற்றி விடப்பட்டிருந்த சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். ஆருத்ராவோ, அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். காலையிலிருந்து நடந்தவை அனைத்தும் அவள் மனதிற்குள் ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. வேறு வழியில்லாமல் குழப்பத்துடனே தோட்டத்தின் கல் மேடையில் சென்று அமர்ந்தாள். வேப்பமர நிழலின் குளுமையை உடல் உணர்ந்தாலும், மனம் அதில் லயிக்க மறுத்தது.
அதே நேரம்,
“ஆரு.. என்னதான் இமயனுக்கு அடிபட்டாலும், ஒரே நாளில், உலக ஃபேமஸாகிட்ட போ..!” என அலைபேசியில் பார்வை பதித்தபடியே வந்தான் ராகவ்.
“என்னடா உளறுறே?!” என இவள் புரியாமல் கேட்க,
“இவருடன் இருக்கும் இவர் யார்? இமயவரம்பனை திருமணம் செய்துக்கொள்ளப் போகும் இந்தப் பெண் யார்? இந்த ஆருத்ராவின் பின்னணி என்ன?” என சமூக வலைதளம் முழுதும் அவளைப் பற்றிய செய்திகளாகவே இருந்தது. ஒருபுறம் இமயவரம்பன் தாக்கப்பட்டதைப் பற்றி வதந்திகள் பரவிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் இவளைப் பற்றிய தேடுதல் நடந்துக் கொண்டிருந்தது.
“இவரைத் திருமணம் செய்யப் போவது இவரா?!”
“இரண்டாம் திருமணத்திற்கு சம்மதித்ததற்கு இது தான் காரணமா?”
“இவரும் அரசியல் பின்னணியைச் சார்ந்தவரா?”
“பணத்திற்காக திருமத்திற்கு சம்மதித்தாரா ஆருத்ரா?!” எனத் திரும்பத் திரும்ப அலைபேசியின் திரையை நிறைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து எரிச்சலாய் வந்தது அவளுக்கு. அதிலும், அவளும் இமயனும் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் பேசு பொருளாகியிருந்தன.
“இதெல்லாம் என்னடா? அடுத்தவங்க வீட்டை எட்டிப் பார்க்கிறதைத் தவிர இவங்களுக்கு வேற வேலையே இல்லையா.? இதெல்லாம் பார்க்கப் பார்க்க எரிச்சலாய் வருது.!” எனக் கோபப்பட்டாள் ஆருத்ரா.
“ஏய் ஆரு.. சோஷியல் மீடியா அப்படித்தான். உனக்குத் தெரியாதா என்ன? நீ ஒரு முக்கியப் புள்ளியைக் கல்யாணம் பண்ணிக்க போறம்மா! அதுவும் அவர் முதலமைச்சரோட முன்னாள் மருமகன் வேற.. அப்போ கிளறத்தான் செய்வானுங்க! நீ இதையெல்லாம் கண்டுக்காதே! இதையெல்லாம் மனசில் போட்டுக்கிட்டால் நிம்மதியைத் தொலைக்க வேண்டியது தான்.!” என ராகவ் சொன்னது சரியாகப்பட்டாலும், அவளால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம், இமயன் தான் என அவன் மீது தான் அவளுக்குக் கோபம் வந்தது.
“நீ சொல்றதெல்லாம் புரியுது ராகவ். பட், ஏதோ ஒண்ணு உள்ளுக்குள்ளே உறுத்திட்டே இருக்கு. எதோ தப்பா இருக்குன்னு தோணுது.!” என அவள் சொல்ல,
“என்ன சொல்ற ஆரு?” எனப் புரியாமல் கேட்டான் ராகவ்.
“ஏன் ராகவ்.. இது நிஜமாவே எதிர்க்கட்சியோட சதின்னு உனக்கு தோணுதா?” என யோசனையுடன் கேட்டாள் ஆருத்ரா.
“ஐ திங்க் ஸோ..!” என அவன் சொல்ல,
“எனக்கு அப்படித் தோணலை ராகவ். இன்னைக்கு தாத்தாக்கிட்டே பேசிட்டு இருந்தப்போ, இமயனின் கண்ணில் ஒருவித உறுதி தெரிஞ்சது. தன்னை தாக்க வந்தவங்க மேலே அவனுக்கு கோபமே வரலை. அமைதியாய் இருந்தான். அந்த அமைதி ரொம்ப அசாத்தியமானதா இருந்தது. எனக்கென்னவோ இதற்கு பின்னால் வேற என்னவோ இருக்குன்னு தோணுது.!” எனச் சொன்னாள் ஆருத்ரா.
“ஆரு.. எதையாவது யோசிச்சு நீ குழம்பிட்டு திரியாதே..! எனக்கென்னவோ இமயன் சாரைப் பார்த்தால் தப்பா தோணலை. அவர் கண்ணில் ஒரு நேர்மை தெரியுது.!”
ராகவ் கூட, முதலில் இமயனுடனான திருமணத்தை நிறுத்துவதில் தான் மும்முரமாய் இருந்தான். ஆனால், இமயனைப் பார்த்த அந்த நொடி முதல் அவனால் சந்தேகப்பட முடியவில்லை. அதோடு கூட, ராகவை ஒருநொடிக் கூட இமயன் சந்தேகக் கண்ணோடு பார்க்கவில்லை.
ஆருத்ராவையும், தன்னையும் இணைத்து ஏதாவது பேசிவிடுவானோ? என்ற பயம் கூட ராகவிடம் இருந்தது. ஆனால் இமயன் அதைப் பற்றி ஒற்றை வார்த்தைக் கூடப் பேசவில்லை. அதுவே ராகவிற்கு இமயன் மீது ஒரு சிறு நம்பிக்கை துளிர்விடக் காரணமாகவும் இருந்தது.
“அவன்கிட்டே உனக்கு நேர்மை தெரியுதா? எனக்கு அவன் நேர்மையானவன்னு தோணலை! அவனைப் பார்த்தால் எனக்கு நிறைய கேள்விகள் மட்டும் தான் தோணுது. இவனுக்கும் இவன் வொய்ஃப்க்கும் என்ன பிரச்சனை? ஏன் டிவோர்ஸ் பண்ணினாங்க? முதலைமைச்சரோட மருமகன்ங்கிறது எவ்வளவு பெரிய அந்தஸ்து.. அதை ஏன் இவன் வேணாம்ன்னு சொல்லணும்? ஒருவேளை இவன் வேணாம்ன்னு சொல்லலைன்னாலும் பணத்திற்காக ஸ்டிக் ஆன் பண்ணி இருந்திருக்கலாமே.? தாத்தாகிட்டே பேசினதை வச்சு பார்த்தால், முதலில் பதவி கொடுக்கிறேன்னு சொல்லிருக்காங்க, இவன் மறுத்திருக்கான். என்னோட கெஸ் இப்போ இவனுக்கு பதவி வேணும். அதுக்காகத்தான் இத்தனையும் பண்ணுறான்னு தோணுது!”
“ஆனால் கடைசியில் இது எல்லாமே அனுமானங்கள் மட்டும் தான் ஆரு! உன்னோட அனுமானங்கள் சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.!”
“இது உண்மையாகவும் வாய்ப்பு இருக்கு தானே.?!”
“வாய்ப்பு இருக்கு தான்.. இல்லைன்னு நான் சொல்ல மாட்டேன். ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன், பெஸ்ட் இம்ப்ரஷன்னு சொல்லுவாங்க! இப்போ வரை இமயன் கிட்டே எதுவும் தப்பா இருக்கிற மாதிரி எனக்குத் தோணலை..! அதுவே விவேக் விஷயத்தில் எனக்கு கொஞ்சம் உறுத்தல் இருந்துச்சு.. அப்போ உன்னோட இந்த அளவிற்கு நான் பேச மாட்டேனே.. அதனால் கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. ஆனால் நீ இப்போ சொல்ற எதுக்கும் ஆதாரமே இல்லை ஆரு! நாமளா எதையாவது ஒண்ணு யோசிச்சு அது தப்பா போய்டுச்சுன்னா? நல்லவரா இருக்கிற ஒருத்தரை தப்பா ஃப்ரேம் பண்ணிடுவோமோன்னு தோணுது!”
“ஏன்டா நீ இப்படி ஓவர் நல்லவனா இருக்கே? யாரையுமே இப்படி குருட்டாம்போக்கில் நம்பாதே டா!” என அவள் சொல்ல,
“நானும் அதையே திருப்பி சொல்லலாம் இல்லையா? நீயும் பார்க்கிறவங்க எல்லாரையும் சந்தேகப்படாதே.. நீ தேவையில்லாமல் அவரை சந்தேகப்படுறியோன்னு தோணுது.!” எனச் சொன்னான் அவன்.
“டேய் எருமை! நீ எனக்கு ஃப்ரெண்டா.. இல்லை அவனுக்கு ஃப்ரெண்டா? நீ வந்தது கல்யாணத்தை நிறுத்துறதுக்கா? இல்லை நடத்தி வைக்க வந்தியா டா? என்னடா நினைச்சுட்டு இருக்க நீ?” எனக் கோபமாய் அவள் முறைக்க,
“தெரியலை ஆரு.. இரண்டாவது கல்யாணம்ங்கிற ஒரு காரணத்தைத் தவிர எனக்கு வேறெதுவும் முரணா தெரியலை ஆரு..! எனக்குத் தோணினதைப் பேசினேன்.. அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?!” எனக் கேட்டான் ராகவ்.
“உன் நியாயம் மண்ணாங்கட்டியெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ.. முதலில் நீ என் ஃப்ரெண்ட்.. அதை முதலில் ஞாபகம் வச்சுக்கோ!” எனப் போலியாய் விரல் நீட்டி மிரட்டினாள் அவள்.
“சரிம்மா! நீ என் ஃப்ரெண்ட் அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு போதுமா?” என அவன் சொல்ல, அவனோடு சேர்ந்து சிரித்துக் கொண்டாள் ஆருத்ரா.
என்னதான், அவள் வெளியே சிரித்தாலும், அவள் மனதிற்குள் நிறைய யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தது. ஏனோ இமயனை அவளால் முழுதாக நம்ப முடியவில்லை. அவளைச் சுற்றி நடக்கும் அனைத்தின் பின்னாலும் அவன் தான் இருக்கிறான் என்பது அவளுக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. அவளின் பெயரும், அவன் பெயரும் சேர்ந்து பேசு பொருளானதன் பின்னணியிலும், அவன் தான் இருப்பானோ? என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. எல்லோரையும் ராகவோடு அனுப்பிவிட்டு, தன்னை மட்டும் ஏன் அவன் தன்னோடு இருத்திக் கொண்டான்? தன் ஆதாயத்திற்காக இவன் என்னை வைத்துக் காய் நகர்த்துகிறானோ? என்ற சந்தேகமும் அவளுக்குள் இருந்தது. பொதுவாய் ஆருத்ரா இப்படி அதீதமாய் சிந்திப்பவள் எல்லாம் இல்லை. ஆனால் இமயன் விஷயத்தில் யோசிக்காமல் அவளால் இருக்க முடியவில்லை. தான் வேண்டாம் என முடிவு செய்த ஒரு விஷயம், தன்னை மீறி நடந்துவிடுமோ? என்ற பயம் தான் ஆருத்ராவின் அதீத சிந்தனைக்குக் காரணமோ என்னவோ?
******
“டேய் என்னதான்டா செஞ்சு தொலையறீங்க? நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன செஞ்சு வச்சிருக்கீங்க? அவனை ஆள் இருக்கிற இடம் தெரியாமல் பண்ணுங்கன்னு சொன்னால், பொது இடத்தில் வச்சு செஞ்சு விட்டுருக்கீங்க? சொன்னதை விட்டுட்டு சுரையைத் தான் புடுங்குவீங்க..!” என எதிரில் நின்ற இருவரையும் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார் மயில்ராவணன். தான் சொன்னதை விட்டுவிட்டு வேறொன்றைச் செய்துவிட்டார்களே? என்றக் கோபத்தில் அவர் முகம் கல்லாய் இறுகியிருந்து.
அதீத கோபத்தின் காரணமாய் இரத்த அழுத்தம் உயர்ந்து வியர்த்துக் கொட்டியது அவருக்கு. அதற்குமேல் நிற்க முடியாமல், தொப்பென பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்தார் மயில்ராவணன்.
தான் வேலை ஏவிய நபர்களை விசாரிப்பதற்காக, தன் பாதுகாவலர்களைத் தவிர்த்துவிட்டு, இரகசியமாய், அதி நவீன தங்கும் விடுதிக்கு வந்திருந்தார்.
“சார்! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க சார்!” என எதிரில் நின்றவனில் ஒருவன் சொல்ல,
“என்னத்தைய்யா கேட்க சொல்ற? ஒட்டுமொத்த மீடியாவும் இவனைப் பற்றி மட்டும் தான் பேசுது. ஆள் அடையாளம் தெரியாமல் ஆக்க சொன்னால், ஊரு உலகம் முழுதும் அவனை ஃபேமசாக்கி விட்டுருக்கீங்க? உங்களை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைச்சேனே என்னை நானே செருப்பால் அடிச்சுக்கணும்.! இந்த மீடியாக்காரணுங்க வேற, என்னையே உத்து உத்து கவனிக்கிறானுங்க! அவனுங்க கண்ணில் மாட்டாமல் வர்ரதுக்குள்ளே ஒருவழி ஆகிட்டேன். எல்லாத்துக்கும் காரணம் நீங்க செஞ்ச வேலை தான்.! இப்படி விளங்காத வேலையை நீங்க செய்றதுக்கு, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம், தம், தண்ணி, பொண்ணு, ட்ரக்ஸ், எல்லாத்துக்கும் மேலே பொட்டி பொட்டியாய் பணம் எல்லாத்தையும் அழுதிருக்கேன். ஆனால் நீங்க என்னடான்னா காரியத்தையே கெடுத்துட்டீங்க!” எனத் தன்னை மீறி கத்தியவர், நெற்றியில் அரும்பிய வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார்.
“இங்கே பாருங்க சார்! என்ன ஏதுன்னு புரியாமல், நீங்கபாட்டுக்கு பேசிட்டே போறீங்க? முதலமைச்சராச்சேன்னு அமைதியாய் நிற்கிறோம். நானும் கிருபாவும் எத்தனை சம்பவம் பண்ணிருக்கோம்? எதுக்குமே ஆதாரமோ ஆளோ கிடைக்கலையே? அப்படி இருக்கயில், நாங்க இப்படி அசிங்கமா பண்ணிருப்போம்ன்னு நினைக்கிறியா சார்?” என மாரி கேட்க, யோசனையாய் புருவம் சுருக்கினார் மயில்ராவணன்.
“இப்போ என்ன சொல்றீங்க? இதை நீங்க செய்யலையா?! நீங்க செய்யலைன்னு சொல்லி என்கிட்டே இருந்து தப்பிச்சுக்கப் பார்க்கிறீங்களா?! உங்கக் கிட்டே இருந்து தகவல் வந்ததுன்னு தான், நான் அந்த துணிக்கடகாரன் கிட்டே பேசி வச்சிருந்தேன். இன்னைக்குத்தேன் சம்பவம்ன்னு எனக்கு உங்க ஃபோனில் இருந்துதேன் தகவல் வந்துச்சு. நீங்க என்னடான்னா செய்யலைங்குறீக? நெசமாவே செய்யலையாடா?”
“சார்! உங்க கிட்டே கை நீட்டி துட்டு வாங்கியிருக்கோம். நாங்கதான் சார் செஞ்சோம்.. கொஞ்சம் மிஸ் ஆகிருச்சுன்னு சொல்லி, பணத்தை அடிச்சுட்டு போயிருக்கலாம். அதை விட்டுட்டு நாங்க ஏன் பொய் சொல்லணும்? இந்தத் தொழிலில் எங்களுக்கு நேர்மை ரொம்ப முக்கியம் சார்! நீங்க அரசியல் பண்ணுறவங்க ஆயிரம் பொய் பேசுவீங்க.. நாங்க அப்படி இல்லை சார்! நாங்கதான் சொன்னோமே சார், அடுத்த வாரம் தான் சம்பவத்திற்கு நாள் குறிச்சுருக்கோம்ன்னு சொன்னோமே?! சொன்ன தேதியை விட்டுட்டு வேற நாளில் பண்ணுறதெல்லாம் நமக்கு பழக்கமில்லை சார்.!” எனக் கிருபா கேட்க, இந்த முறை அதிர்ந்ததென்னவோ மயில்ராவணன் தான்.
“அப்போ இமயனைக் கொல்ல முயற்சி பண்ணினது நீங்க இல்லையா?”
“இவ்வளவு நேரமா தெலுங்கிலேயே சொல்லிட்டு இருக்கோம்? நாங்க செய்யலை சார்!” என உறுதியாய் சொன்னான் மாரி.
“டேய்.. நீங்க செய்யலைன்னா அதை செஞ்சது யாருடா? எதிர்க்கட்சியோட சதின்னு நியூஸில் சொல்றாணுங்க! எனக்குத் தெரிஞ்சு இதை எதிர்க்கட்சி செஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னுனோ தான் தோணுது!” என யோசித்தபடியே சொன்னார் அவர்.
‘இவனுங்களும் இல்லை, எதிர்க்கட்சியும் இல்லை! அப்போ இதை யாரு பண்ணிருப்பா.?!’ என அவர் தனக்குள் யோசனையோடு அமர்ந்திருக்க, அவர் சாந்தனையைக் கலைத்து அலறியது அலைபேசி. காவல்துறை ஆணையரிடமிருந்து தான் அழைப்பு வந்தது.
“சொல்லுய்யா! என்ன நிலவரம்?”
“சார்..!” என அந்தப்பக்கமாய் ஆணையர் தயங்குவது இவருக்குப் புரிந்தது.
“என்னய்யா? சொன்னால் தானே தெரியும்?!” என மயில்ராவணன் கேட்க,
“சார்! எப்படி விசாரணை பண்ணினாலும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றானுங்க சார்!” எனச் சொன்னார்.
“நீ எப்படி விசாரிச்சாலும், நான்தான் செய்யச் சொன்னேன்னு என் பேரைச் சொல்லிருப்பானுங்களே? நான்தான் இமயனை போடச் சொன்னதா சொன்னானுங்களா?!” என இமயன் தாக்கப்பட்ட விஷயத்தில் கைதான நால்வரும் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை மயில்ராவணன் சொல்லவும்,
“உங்களுக்கு எப்படி சார் தெரியும்?!” எனக் கேட்டார் காவல்துறை ஆணையர்.
“அதெல்லாம் அப்படித்தான்ய்யா! இதுக்குப் பின்னாடி யாரு இருக்கா, என்ன செய்ய முயற்சிக்கிறாங்க? எல்லாம் எனக்குத் தெரியும். நீ கொஞ்ச நாளைக்கு இந்த விஷயம் வெளியே வராமல் பார்த்துக்கோ! எப்படியும் ப்ரஸ் மீட் வைக்கும் போது, எவனாவது கேள்வி கேட்பான். விசாரிச்சுட்டு இருக்கோம்ன்னு மட்டும் தான் நீ சொல்லணும். மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.! அதோட அந்த இமயவரம்பன் என்ன செய்றான்னு ஒரு கண்ணு வச்சிக்கோ..” என அவர் சொன்னதும், சம்மதம் தெரிவித்து அலைபேசியை அணைத்திருந்தார் காவல் ஆணையர்.
“நீங்க போங்க டா! அடுத்து நான் என்ன செய்யணும்ன்னு சொல்ற வரை எதுவும் செய்ய வேணாம். உங்களுக்கு வர வேண்டியது வந்து சேரும்!” எனச் சொல்லி, மாரியையும், கிருபாவையும் அனுப்பி வைத்தார். அவர் மனதிற்குள்ளோ, பத்து ஆண்டுகளாய், கைப்பற்றி காப்பாற்றிய பதவிக்கு, இந்த ஓராண்டு முடிவதற்குள்ளாகவே முடிவு வந்துவிடுமோ, என்ற பயம் அவருக்குள் இருந்தது.
அதோடு, மயில்ராவணன் மனம் முழுதும், இமயனைப் பற்றிய சிந்தனைகள் மட்டுமே ஓடிக்கொண்டு இருந்தது. அவன் இத்தனையும் செய்வதன் காரண காரியமெல்லால் அவருக்குப் புரியத்தான் செய்தது. ஆனாலும், அவனாக இல்லாமல் வேறு யாராவது இருக்குமோ? என்ற சந்தேகமும் அவருக்குள் இருந்தது. இதை இதற்குமேல் வளரவிடாமல் எப்படி தடுப்பது என அவர் யோசித்துக் கொண்டிருக்க, இடியாய் அடுத்த செய்தி அவர் தலையில் வந்திறங்கியது.
“சார்.. சார்..!” என மயில்ராவணனின் உதவியாளனான மணிண்டன் அவசரமாய் பதறியபடி ஓடி வந்தான்.
“ஏன்டா இப்படி பேயடிச்ச மாதிரி பயந்து ஓடி வர்ர? இருக்கிற பிரச்சனையில், நீ எதாவது புதுசா கிளப்பி விட்டுடாதே! நேரம் ஆகிருச்சு! எவன் கண்ணிலும் மாட்டும் முன்னே இங்கிருந்து கிளம்பணும்!” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவரின் அலைபேசி அவருக்குஇடையூறாய் அலறியது.
“சார்.. சோஷியல் மீடியா முழுசும் ஒரு வீடியோ வைரலாகிட்டு இருக்கு முதலில் அதைப் பாருங்க!” என்ற பதற்றமான குரல் அந்தப்பக்கம் கேட்க,
“இருக்கிற இம்சையில் இவனுங்க வேற..!” எனப் புலம்பியபடியே அலைபேசியை எடுத்துப் பார்த்தவர் நிஜமாகவே அதிர்ந்து தான் போனார். நிச்சயமாய் அவர் இப்படியொன்றை எதிர்பார்க்கவே இல்லை. இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ? என்ற பயம் முதன் முறையாய் அவருக்குள் முளைத்திருந்தது. தன் வாழ்நாளிலேயே முதன்முறையாய் இமயவரம்பனை நினைத்து அவருக்குள் ஓர் அதிர்வு வந்து போனது. அவனைக் கொஞ்சம் குறைத்து எடை போட்டுவிட்டதாக அவருக்குத் தோன்றியது. இனி அவர் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, தன் அவப் பெயரை போக்கி, ஆட்சியை நிலைக்க வைக்க எதாவது செய்தாக வேண்டும். என்ன செய்வதெனப் புரியாமல் குழம்பிப் போய் அவர் நிற்க, அவரின் அலைபேசியில் அந்தக் காணொளி இன்னும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
“நாங்க அஞ்சு பேரும், இமயவரம்பன் மீது தாக்குதல் நடத்தியதற்குக் காரணம் மயில்ராவணன் சார் தான். பணத்திற்காகத்தான் செய்தோம். சார் எல்லாத்திற்குமே ப்ரூஃப் இருக்கு சார். இமயன் சாரை மொத்தமா முடிச்சுடுறது தான் எங்களுக்கு வந்த ஆர்டர்.!” என அவன் பேசிக் கொண்டே இருந்தான். இப்போது தான், இந்த சதுரங்க ஆட்டத்தின் பின்னால் இருப்பது இமயன் தான் என்பது அவருக்கு தெளிவாய் விளங்கியது. நால்வர் மாட்டியதும், ஒருவர் தப்பிச் சென்றதும் இதற்குத்தான். தன் மீதும் தன் ஆட்சியின் மீதும் அவதூறு பரப்பத்தான் இத்தனையும் என்பது அவருக்குப் புரிந்தது. புரிந்த மாத்திரத்தில், அவர் தயங்கி குழம்பி நின்றதெல்லாம் ஒரேயொரு நொடி மட்டும் தான்.
அடுத்தநொடியே தன் அதிகாரத்தைக் கையிலெடுத்து, எந்த மூலை முடுக்கிலும் இந்த காணொளி காட்சியை ஒளிபரப்பாத படி தடை செய்தார்.
முழுதாக பத்து வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறார் தன் சாம்ராஜ்ஜியத்தை அத்தனை எளிதில் சரிய விட்டுவிடுவாரா என்ன? அரசியல் எப்படிப்பட்ட விளையாட்டு என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில்,
“அரசின் மீது அவதூறு பரப்பியதாக, பதிமூன்று யூ ட்யூப் சேனல்கள் முடக்கப்பட்டன.!”
” சமுக வலைதளங்கள் மூலமாக தவறான கருத்துக்களைப் பரப்பும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை.!”
” தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும்! தயவு செய்து அரசுக்குப் புறம்பான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். முதலமைச்சர் வேண்டுகோள்.!” என செய்திகள் மாற்றி எழுதப்பட்டன. மாற்றி எழுதினார் மயில்ராவணன்.
முதலில் பதவி தன்னைக் காப்ப்பதற்கு பிறகு தான் மக்களைக் காப்பதற்கு என்ற கொள்கை உடையவர் அவ்வளவு எளிதில் விட்டுவிடுவாரா என்ன? தனக்கு சாதகமானக் காய்களை நகர்த்தி தனக்கு சாதகமான சூழ்நிலையைக் கொண்டு வந்த பின்னரே நிம்மதியாய் மூச்சுவிட்டார் மயில்ராவணன்.
ஆனாலும் இமயவரம்பன் அவர் கண்ணில் விழுந்தத் துரும்பாய் உறுத்திக் கொண்டிருந்தான். முதலில் இமயனோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினால், மட்டுமே இதற்கு முடிவுகட்ட முடியும் என உணர்ந்துக் கொண்டவர்,
“மணி.! இமயனை என்னை வந்து பார்க்கச் சொல்லு! என்னைத் தனியா மீட் பண்ண எங்கே வரணும்ன்னு அவனுக்குத் தெரியும்!” என தன் உதவியாளரின் மூலம் தகவல் அனுப்பினார் அவர்.
“சார்.. இமயன் சார் கல்யாண வேலையில் பிஸியாய் இருக்காராம். இப்போதைக்கு உங்களை வந்து சந்திக்கிற சூழல் இல்லைன்னு சொல்ல சொன்னார் சார்!” என மணிகண்டன் மூலமாய் இமயனிடமிருந்து கிடைத்த பதில் அவரை அதீதக் கோபத்தில் ஆழ்த்தியது. அந்தக் கோபம் தணியும் முன்னமே இமயனுக்கு அழைப்பெடுத்திருந்தார் மயில்ராவணன். ஆறேழு முறை அழைப்பெடுத்த பிறகும் கூட, அவன் அழைப்பை ஏற்காமல் போக, ஆத்திரமும் கோபமும் ஒருசேர உச்சிக்கு ஏறியிருக்க, கடுகடுத்த முகத்துடன் நின்றிருந்தார் அவர். அவர் மனமோ அடுத்து செய்ய வேண்டியவைகளைக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. ஜனநாயகம் எனப் பெருமையாய் சொல்லிக்கொண்டு, பணத்தை மையமாய் வைத்து பணநாயகம் நடத்திக் கொண்டிருக்கும், இவர்களைப் பார்த்து ஏளனமாய் சிரித்துக் கொண்டிருந்தது காலம்.

