Loading

அதீதம்-24

தன் அறையின் ஜன்னலோரமாய் நின்று, பூந்தூறலாய் விழும் மழைத் துளிகளை இரசித்தபடியே, நின்றிருந்தாள் ஆருத்ரா. மழை அவள் மனதிற்குள் மகிழ்ச்சியை விதைத்தாலும் கூட, விரைவில் வந்துவிடுவேன் எனச் சொன்ன, தன்னவன் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்தது.

இப்போதும் கூட, அவள் மனநிலை மாறவில்லை. அவன் விளையாடும் அரசியல் சதுரங்கத்தில், தன்னையும் பயன்படுத்திவிட்டானே என்றக் கோபம் அவளுக்குள் இருந்தது. அதோடு அதைப்பற்றி அவன் துளியும் வருத்தப்படாதது தான் அவளின் கோபத்திற்குக் காரணமாகவும் இருந்தது.

ஆனாலும் அந்தக் கோபத்தை அவளால் இழுத்துப் பிடிக்கத்தான் முடியவில்லை. தன்னைத் தேடி வரும் போதெல்லாம் நிராகரித்தவளால், அவன் தூரம் சென்றதும் அவனைக் காணாமல் இருக்க முடியவில்லை. சென்னை சென்று அவனைப் பார்த்து வந்து சில நாட்கள் கடந்த பின்பும், அவனைக் காணாமல், அவன் வருகைக்காக காத்திருந்தாள் ஆருத்ரா.

அதே நேரம், மயில்ராவணன் உடல்தேறி வீடு திரும்பும் வரை, அவர் உடனிருந்து, கட்சியின் அவசரப் பணிகளை முடித்துவிட்டு, அப்போது தான் மதுரைக்குத் திரும்பியிருந்தான் இமயன்.

அவனுக்கும் அவளைக் காண வேண்டும் என்கிற ஆவல் அதிகமாகவே இருந்தது.

சத்தமில்லாமல் திறந்திருந்தக் கதவின் வழியே உள்ளே நுழைந்து அவள் பின்னால் வந்து அசையாமல் நின்றான் இமயன்.

எதேச்சையாய் பின்னால் திரும்பியவள், அசையாமல் நிற்கும் அவனைப் பார்த்து பயந்து தான் போனாள். அவள் பதறிப் போய் அவனை விட்டு விலகி நிற்க,

“நான் தான் ஆரா!” என அவளை ஆசுவாசப்படுத்த முயன்றான் அவன்.

“ஏன் இப்படி பின்னாடி வந்து நின்னு பயமுறுத்துற? நிஜமாகவே பயந்துட்டேன்.!” எனச் சொன்னாள் அவள்.

“என்ன மேடம்.. கோபம் இப்போ போயிருச்சா?” என அவன் கேட்க,

“இல்லை! நான் இன்னும் உன்மேல் கோபமாகத்தான் இருக்கேன்.!” என பதில் சொன்னாள்.

“ஏன்.?”

“உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சே யாராவது போவாங்களா? எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி பண்ணினே? நீபாட்டுக்கு மயங்கி விழுந்துட்ட.. உனக்கு எதாவது ஆகிடுமோன்னு பயமா இருந்தது.!”

“நான் சொல்றதை நல்லா புரிஞ்சுக்கோ ஆரா.. அப்போதைக்கு எனக்கு வேற வழி இல்லை. அதை நடக்கவிடாமல் தடுத்தால், மறுபடியும் என்னைக் கொல்ல முயற்சிப்பாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு சாதகமாக நடக்கிற மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்கிட்டு, எனக்கு சாதகமா நடத்திக்கணும்ன்னு தான் நான் யோசிச்சேன்.! உன்னை அங்கே கூட்டிட்டு போய் மாட்டி விடறது என் ப்ளான் இல்லை. ஆனாலும், என் மனசுக்குள் நீ மட்டும் தான் இருக்கேன்னு நிரூபிக்க வேண்டியக் கட்டாயத்தில் இருந்தேன். உன்னைக் கூட்டிட்டு போனப்போவே நான் எல்லாத்துக்கும் தயாராகத் தான் இருந்தேன். எனக்கு என்ன நடந்திருந்தாலும், என் உயிரே போயிருந்தாலும் கூட, நான் உன்னைக் காப்பாத்தியிருப்பேன்.” என அவன் சொல்ல, தன் கரத்தினால், அவன் இதழ்களை மூடினாள் ஆருத்ரா.

“நெருப்புன்னு சொன்னால் வாய் சுட்டுடாது ஆரா.. இதற்கு முன்னால், இரண்டு முறை என்னைக் கொல்லவும் முயற்சி நடந்திருக்கு தான். ஒவ்வொருமுறை நான் தப்பிக்கும் போதும், திரும்ப முயற்சி நடக்கும்ன்னு எனக்குத் தெரியும். இதற்கு ஒரு முடிவு கட்டணும்ன்னு தான்.. நான் அதை எனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கிட்டேன். நான் ஒண்ணும் பெரிய ஆளெல்லாம் இல்லை. எனக்கும் துப்பாக்கியில் சுட்டால் வலிக்கும் மயக்கமும் வரும். ஹாஸ்பிட்டலில் நடந்தது வேணும்ன்னா நாடகமாய் இருக்கலாம்.. ஆனால் உன்னை நான் ஏமாத்தணும்ன்னு நினைச்சு இதையெல்லாம் செய்யலை.! என் சூழ்நிலை அப்படி..!” என அவன் சொல்ல ஆருத்ராவால் அவனைப் புரிந்துக்கொள்ள முடிந்தது.

“இதை நீ அப்போவே சொல்லியிருக்கலாம் இல்லையா?!”

“சொல்றதுக்கு நீ வாய்ப்பு கொடுக்கவே இல்லையே ஆரா?”

“ஸாரி..! நான் எல்லாமே நாடகம்ன்னு நினைச்சுட்டேன்.!”

“புரியுது ஆரா.. இது அரசியல் இங்கே இப்படித்தான்! யாரை அடிச்சு யார் மேல வர்ரதுன்னு தான் பார்ப்பாங்க! இதில் இந்த மாதிரி நடக்கிற விஷயங்களைத் தடுக்க முடியாது. முடிஞ்சால் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்க வேண்டியது தான். ஆளும் கட்சிக்குள்ளேயே இப்படியொரு நிலமை.. அப்போ எதிர்க்கட்சியை யோசிச்சு பாரு? எல்லாத்துக்கும் காரணம், பதவி.. அது கொடுக்கிற பணம், புகழ் மேலே இருக்கிற மோகம் தான். என்னதான் உட்கட்சி பூசல் இருந்தாலும், ஒவ்வொரு அரசியல்வாதியும், நமக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு உண்மையாய் இருந்தால் போதும். இங்கே தான் யார் எவ்வளவு அடிக்கிறதுன்னு தானே பிரச்சனையே வருது. ஆதிகாலத்திலிருந்து இப்போ வரை, வலியது பிழைக்கும் அப்படிங்கிறது தான் இயற்கையின் விதி.. விதியை யாராலும் மாத்த முடியாது ஆரா.!” என அவன் சொல்ல, அவனையே இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

“இப்படியே பார்த்துட்டே இருந்தால் என்ன அர்த்தம்?” என அவன் கேட்க,

“ஏன் பார்க்கக் கூடாதா? வேணும்ன்னா நீயும் பாரு.. நான் வேணாம்ன்னு சொல்லலையே?” என பதில் தந்தாள் அவள்.

“ஓஹோ..!”

“நீ பேசினதெல்லாம் போதும் மாயன்.. உன்னோட அரசியல், உன்னோட இருந்துட்டுப் போகட்டும். எனக்கு என் ஆயுசுக்கும் நீ என் கூட இருக்கணும். எனக்கு அது மட்டும் தான் வேணும்.!”

“அரசியலை நாம் தவிர்த்தால், நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்ன்னு ப்ளாட்டோ சொல்லியிருக்கார் தெரியுமா?”

“வீட்டுக்கு ஒருத்தர் அரசியலைத் தவிர்க்காமல் இருந்தால் போதும். முதலில் நான் சொன்னதுக்கு பதில் சொல்லு!” என அவள் கேட்க,

“என் ஆயுள் முடிஞ்ச பிறகும் நான் உன் கூடத்தான் இருப்பேன்.. போதுமா?” எனக் கேட்டு அவள் நெற்றியில் அவன் முத்தம் வைக்க,

“கல்யாணம் பண்ணிக்கலாமா மாயன்?” என அவன் கண்பார்த்து அவள் கேட்க, அவள் கண்களில் முத்தம் வைத்து தன் சம்மதத்தைத் தெரிவித்தான் இமயவரம்பன்.

*******

இமயன்-ஆருத்ரா திருமணத்திற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்தன. ஏற்கனவே திருமணம் நின்று போனதால் இந்த முறை அனைத்திலும் கூடுதல் கவனம் வைத்திருந்தான் இமயன்.

கூடவே அர்ஜுனும், ராகவும் தங்கள் பங்கிற்கு பணிகளைப் பிரித்துக் கொண்டனர்.
திருமணம் இமயனின் சொந்தக் கிராமத்தில் நடப்பதால், உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைப்பதாகவும், கட்சி சம்மந்தப்பட்ட மற்றவர்களை, வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

“டேய் மச்சான்..! நீ சொன்னபடியே நம்ம காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் கொரியர் பண்ணியாச்சு.! ஆரு சைட் கேட்டியா? வேற யாருக்காவது இன்விடேஷன் கொடுக்கணுமா?” என அர்ஜுன் கேட்க,

“இன்னும் சில பேருக்கு கொடுக்கணும்டா! ஆரா அவள் ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு கொடுக்கணும்ன்னு சொன்னாள். அதனால் தான், நானும் அவளும் சென்னை கிளம்பலாம்ன்னு இருக்கோம்!”

“கல்யாணத்தைப் பக்கத்தில் வச்சிட்டு சென்னைக்கெல்லாம் வேணாம் டா! வேணும்ன்னா சென்னையில் ஒரு ரிஷப்ஷன் அரேன்ஞ் பண்ணிக்கலாம் ஆரு கிட்டே சொல்லு டா!”

“மாண்புமிகு. தமிழக முதலமைச்சருக்கு இன்விடேஷன் கொடுக்கணுமே அர்ஜுன்.!”

“இங்கே பாரு இமயன்! இது தேவையில்லாத வேலைன்னு தான் சொல்வேன். அவருடைய வாழ்த்து உன் கல்யாணத்திற்கு தேவையில்லை. ஏற்கனவே அவர் உன்மேல் கோபத்தில் இருப்பார்.!” என அவனைத் தடுக்க முயன்றான் அர்ஜுன்.

“அவர் வரணும் டா! அவர் பண்ணின தப்பை நான் சரி பண்ணிட்டேன்னு அவருக்குத் தெரியணும். நமக்குப் பிடிச்சவங்களை மனசில் வச்சுக்கிட்டு இன்னொருத்தரை நம்ம வாழ்க்கைக்குள்ளே அனுமதிக்கிறது நரகம் டா. கல்யாணம் ஒண்ணு தான் ஆனால் ரெண்டு பேரோட வாழ்க்கை வீணாகிடுச்சே? அவரோட பதவி, கௌரவம், சாதி, எல்லாத்தையும் விட, அவர் பசங்களோட மனசும் அவங்க விருப்பமும் பெருசுன்னு அவருக்குத் தெரியணும்!” என இமயன் சொல்ல, அவன் தனக்காகவும் கவிக்காகவும் சேர்த்தே யோசிக்கிறான் என்பது அர்ஜுனுக்குப் புரிந்தது. அதன் பிறகு அர்ஜுன் இமயனைத் தடுக்க முயற்சிக்கவில்லை.

ஆனாலும் அர்ஜுனுக்கு தன் தந்தையை இமயன் அழைப்பது பிடிக்கவில்லை தான்.

******

மறுநாள் காலையிலேயே ஆருத்ராவோடு சென்னை சென்று சேர்ந்திருந்தான் இமயன். இருவருக்குமான முதல் பயணம். அதுவும் விமானப் பயணம். ஆருத்ராவிற்கு அந்தப் பயணம் நிரம்பவே பிடித்திருந்தது. சிலமணி நேரத்தில் முடிந்துவிட்ட பயணமாக இருந்தாலும், கரம் கோர்த்து அருகருகே அமர்ந்து பயணிப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.

விமான நிலயத்திலிருந்து, அவன் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த அறையில், கிளம்பி தயாராகி, காலை உணவையும் முடித்துவிட்டு, ஆருத்ராவையும் அழைத்துக் கொண்டு, மயில்ராவணனைப் பார்க்கத்தான் சென்றிருந்தான் இமயன்.

“இவர் நம்ம கல்யாணத்திற்கு வருவாருன்னு நம்பறியா?”

“வரலாம்.. வராமலும் இருக்கலாம்!”

“இல்லை.. அவருக்கு உன்னைப் பிடிக்காதே.. அவசியம் இவரை இன்வைட் செய்யணுமா?” எனத் தயங்கியபடியே கேட்டாள் அவள்.
அவள் கேள்வியிலிருந்த பயம் அவனுக்குப் புரிந்தது. அவனுக்கு எதாவது ஆகிவிடுமோ? என்ற பதற்றமும் அவள் முகத்தில் படர்ந்திருப்பதை அவனால் உணர முடிந்தது.

“எனக்கு எதுவும் ஆகாது ஆரா.. பயப்படாதே!” எனத் தைரியப்படுத்தி அவளை அழைத்துப் போனான் இமயன்.
வாயில் காவலர் மரியாதையோடு கதவைத் திறந்து விட, ஆருத்ராவுடன் உள்ளே நுழைந்தவன், வரவேற்பறையில் அமர்ந்து மயில்ராவணனுக்காய் காத்திருந்தான். முன்பு போல், சட்டென்று உள்ளே நுழைந்து அவர் முன் அமர, அவனை ஏதோவொன்று தடுத்தது. அடுத்த சில நிமிடங்களில், மயில்ராவணனின் உதவியாளர் வந்து அழைத்துப் போக, அந்தப் பெரிய அறையில் போடப்பட்டிருந்த மெத்திருக்கையில், மயில்ராவணன் எதிரே சென்று ஆருத்ராவுடன் அமர்ந்தான் இமயவரம்பன்.

“இமயன்! வாங்க! வாங்க! நீங்க தான் வந்திருக்கீங்கன்னு அப்பா சொல்லவே இல்லையே?” என்றபடி கையில் பழச்சாறுடன் வந்தாள் கவிநயா. கவிநயாவை இங்கே பார்த்த இமயனுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. இமயனின் முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கவிநயாவும் புரிந்துக் கொண்டாளோ என்னவோ,

“என்னதான் நடந்திருந்தாலும், அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சு, விலகி இருக்க முடியலை. இப்போவும் அப்பா என்கிட்டே பேச மாட்டார் தான். அவர் கோபம் அப்படியே இருக்கட்டும். அவர் பொண்ணாக இந்தச் சூழ்நிலையில் நான் அவர் கூட இருக்கிறது தான் சரி!” எனக் கேட்காமலே பதில் சொன்னாள் கவிநயா.

“சொல்லு இமயன்! என்ன விஷயமாய் வந்திருக்க? வருங்கால மனைவியுடன் வந்திருக்கிறதைப் பார்த்தால், கட்சி விஷயம் இல்லைன்னு மட்டும் தெரியுது..!” என இடைநிறுத்தி அவனைப் பார்த்தார்.

“உண்மை தான் மாமா.. எனக்கும் என் மனசுக்குப் பிடிச்சப் பொண்ணுக்கும் கல்யாணம். நீங்க இல்லாமல் எப்படி கல்யாணம் நடக்கும்? அதான் உங்களுக்கு பத்திரிக்கை வச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தோம்!”

“இன்னும் என்னையே மாமான்னு கூப்பிட்டு திரியுற? உன் வருங்கால மாமனார் கோவிச்சுக்கப் போறார்..!” என நக்கலாய் கேட்டார் அவர்.

“அவர் உங்களை மாதிரி இல்லைங்க மாமா!” சற்றும் சளைக்காமல் பதில் கொடுத்தான் அவன்.

“ப்பா.. இதுவரை நீங்க செஞ்சதெல்லாம் போதும். இனியாவது அவங்களை வாழ விடுங்க!” கவிநயா இடையிட்டு பேச, மகளின் புறம் அவர் திரும்பவோ, பதில் பேசவோ இல்லை. அதே நேரம், அவளைத் திட்டவும் இல்லை. அவரின் நடவடிக்கைகளில், ஏதோவொன்று வித்தியாசமாகத் தெரிந்தது இமயனுக்கு.

‘ஒருவேளை இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதால், வித்தியாசமாகத் தெரிகிறாரோ?’ என நினைத்துக் கொண்டான் இமயன்.
அதன் பிறகு, அவருக்கான உரிய மரியாதையுடன், வெள்ளித் தாம்பூலத்தில், பழங்கள், இனிப்பு வகைகளுடன், திருமண அழைப்பிதழையும் வைத்து, அவருக்குக் கொடுப்பதற்காக எழுந்து நின்றான். அவரும் உடன் எழுந்து நின்று, அதனை வாங்குவதற்காகக் கரம் நீட்ட,

“மேடம் எங்கே சார்? அவங்களையும் கூப்பிடுங்க!” என அவன் சொல்ல, மறுக்க முடியாமல் மனைவியை அழைத்தார் மயில்ராவணன்.

“மேடம்! நீங்களும் வாங்க! ரெண்டு பேரும் சேர்ந்து நின்னு வாங்கிக்கோங்க!” என அவன் சொல்ல, இமயனின் செயல் ராதிகாவிற்கு செருப்பால் அடித்ததைப் போல இருந்தது. அவனை ஆயிரம் முறை அவமானப் படுத்தியிருந்தாலும் கூட, அவன் தன்னையும் மதித்து அழைப்பது அவருக்கு வியப்பாகத் தான் இருந்தது. திருமண அழைப்பிதழை இருவரும் இணைந்துப் பெற்றுக் கொண்டனர்.

“இந்த முறையாவது கல்யாணம் நிற்காமல் நடக்கட்டும்!” எனச் சொன்னபடியே அவர் அவனைப் பார்க்க,

“கண்டிப்பாக நடக்கும் மாமா!” என்றவன்,

“கண்டிப்பாக ரெண்டு பேரும் சேர்ந்து வந்துடுங்க!” என இடைநிறுத்தினான். ,அவரோ அவனுக்கு பதில் சொல்லாமல் சிரித்து வைத்தார். அவர் சிரிப்பின் பின்னே என்ன இருந்தது என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை. அதன் பின், கவியையும் அவள் கணவன் தீபக்கையும் திருமணத்திற்கு அழைத்துவிட்டு, அவள் கொடுத்த பழச்சாறையும் பருகிவிட்டு விடைபெற்றுக் கிளம்பியிருந்தான் இமயன். இறுதியாக ஆருத்ராவின் அலுவலக நண்பர்களையும், திருமண வரவேற்பிற்கு அழைத்துவிட்டு, அன்று இரவே மதுரைக்குத் திரும்பியிருந்தனர்.

*****

அடர் அரக்கு நிறத்தில், பச்சை நிறக் கரை வைத்து, புடவை முழுதும் தாமரைப் பூக்களும் கொடிகளுமாய் அழகு சேர்க்க, இரு ஓரங்களிலும், கிளி அமர்ந்திருப்பது போல் தங்க நிறத்தில் நெய்யப்பட்டிருந்த பட்டுப் புடவையில் கொள்ளை அழகாய் இருந்தாள் ஆருத்ரா. புடவைக்கு தோதாக ஆன்டிக் வகை நகைகள் அணிந்து, பொன் சிலையென அவள் நடந்துவர, தன் நெடுநாளையக் கனவு நனவாகப் போவதைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் இமயன்.

அழகுப் பதுமையென அவள் பக்கத்தில் வந்து அமர, அவன் ஆசைப்பட்டபடியே அவனது சொந்தக் கிராமத்தில், அவனின் அனைத்து உறவுகளும் சூழ்ந்து நிற்க, வெட்ட வெளியில், பூந்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மண மேடையில், தன் மனதிற்குப் பிடித்த பெண்ணின் கழுத்தில் பொன்தாலி பூட்டும் நேரத்திற்காகக் காத்திருந்தான் இமயன்.

அதே நேரம் தன் பாதுகாவலர்கள் துணையோடு அங்கு வந்து நின்றார் மயில்ராவணன்.

‘இவர் நிச்சயம் வரமாட்டார்’ என்று தான் இமயன் நினைத்திருந்தான். அவர் இப்படி வந்து நிற்பார் என அவன் எதிர்பார்க்கவே இல்லை!

‘ஏதாவது திட்டத்துடன் வந்திருப்பாரோ?’ என்றச் சந்தேகமும் அவனுக்குள் இருந்தது. ஆனாலும், அதைக் குறித்தப் பதற்றமோ, பயமோ அவனுக்குள் இல்லை. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் அவனுக்குள் இருந்தது.

“இதுக்குத் தான் சொன்னனேன்.. இந்த ஆளைக் கூப்பிடாதேன்னு.. நீ தான் கேட்கவே மாட்டேன்னுட்ட!” என நண்பனின் காதைக் கடித்தான் அர்ஜுன்.

“அவரே எனக்கும் அவருக்கும் பிரச்சனை எதுவும் இல்லைன்னு ஊருக்குக் காட்டுறதுக்காக வந்திருக்கார். எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்!” என அர்ஜுனிடம் மெதுவாக, யார் செவிகளிலும் விழாதவாறு சொன்னான் இமயவரம்பன்.
முதலமைச்சர் என்கிற தோரணையும், திமிரான பார்வையுமாய், திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் முதலமைச்சர் மயில்ராவணன்.

சொக்கர் மீனாட்சி பொன்ருவம் பதித்து, மஞ்சள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருந்த மாங்கல்யத்தை தன் மனைவியோடு சேர்ந்து, மயில்ராவணன் எடுத்துக் கொடுக்க, மறுக்காமல் தன் கரத்தில் வாங்கி ஆருத்ராவின் கழுத்தில் கட்டினான் இமயன்.

மயில்ராவணன் திருமணத்திற்கு வருவார் என்பதையும் இமயன் எதிர்பார்க்கவில்லை. அவர் தாலி எடுத்துக் கொடுப்பார் என்பதையும் அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதையெல்லாம் எதற்காக செய்கிறார் என்பதை அவனால் அனுமானிக்க முடிந்தது. அனைத்திற்கும் காரணம், அவரது பதவியும், அவர் கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகள் வெளியே தெரிந்துவிடக் கூடாதென்கிற எண்ணம் மட்டும் தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சுற்றிலும் அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கும், சமூக ஊடக வெளிச்சத்திற்காகவும் தான்.

“மேலூர். எம்.எல்.ஏ இமயவரம்பன் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார் முதலமைச்சர் மயில்ராவணன்.!” நாளை செய்தித்தாள்களில் வெளிவரும் தலைப்புச் செய்திகளில், அவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் அல்லவா? அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தின் பின்பும் அவரின் சுயநலம் ஒளிந்திருக்கும் என்பது இமயனுக்குத் தெரியுமே..!

ஆனால், இமயன் எதைப்பற்றியும் கவலைப் படவில்லை. இந்தத் தருணம், அவன் வருடக் கணக்காய் காத்திருந்தத் தருணம். தான் இழந்து விட்டதாய் நினைத்த காதலை மீண்டும் பெற்ற தருணம். அப்படியிருக்கையில் அதைவிட்டுவிட்டு மற்றதை நினைத்துக் கவலைப்பட அவன் தயாராக இல்லை. முகம் நிறைய சந்தோஷமும், சிரிப்புமாய், ஆருத்ராவின் நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு அவள் நெற்றியில் மீசை அழுந்த முத்தம் பதித்து தன்னில் சரிபாதியாய் இணைத்துக் கொண்டான் இமயவரம்பன். அவளோ நாணம் கொண்டு, இமை தாழ்த்திக் கொண்டாள். அவள் கண்களிலோ, அவனோட வாழப் போகும் வாழ்க்கை மீதான கனவுகள் மிளிர்ந்தது.

சுற்றி நின்ற இரு குடும்பத்தினர் முகத்திலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. முக்கியமாக, அர்ஜுன், ராகவ், கவிநயா, தீபக் அனைவரின் அகமும் முகமும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.

“வாழ்த்துக்கள் டா மச்சான்!” உள்ள நிறைவோடு இமயனின் தோளில் தட்டி தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்தான் ஆருயிர் நண்பன் அர்ஜுன்.

“வாழ்த்துக்கள் ஆரு! வாழ்த்துக்கள் இமயன்!” என ராகவைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் வாழ்த்த, முதலமைச்சரும் தன் பங்கிற்கு வாழ்த்திவிட்டு விடை பெற்றிருந்தார்.

******

திருமணம் முடிந்து சில நாட்கள் கடந்திருந்தது.. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், மனைவியுடனே கழித்தான் இமயன்.. அவன் வரைந்து வைத்திருந்த இரகசிய ஓவியங்கள், ஒவ்வொரு இரவிலும் நிஜமாகிக் கொண்டிருந்தன. ஆருத்ராவை விட்டு அரைநொடிக் கூடப் பிரிய முடியாத அளவிற்கு, அவள் மீதான காதல் பித்து கூடிப் போயிருந்தது.

இரண்டாம் தாரமாய் திருமணம் செய்து வைக்கிறோம், மகள் வாழ்க்கை என்ன ஆகுமோ? எனப் பயந்துக் கொண்டிருந்த ஆருத்ராவின் பெற்றோருக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

பெரியவர் குமரேசனுக்கும் கூட, தன் பேத்தியின் கணவன் சட்ட மன்ற உறுப்பினராக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியே..! அரசியல் நெளிவு சுளிவுகளில், இமயன் கைதேர்ந்தவன் என்பதை இந்தச் சில மாதங்களில் அவர் உணர்ந்திருந்தார். தான் அரசியலில் சாதிக்க முடியாததை தன் குடும்பத்தில் ஒருவன் சாதிக்கிறான் என்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

அதே நேரம், அந்த விடியல் நேரத்து இதமானக் குளிரில் மனைவியை அணைத்தபடி படுத்திருந்தான் இமயவரம்பன். இரவு நேர அன்புப் பறிமாறுதல்களின் விளைவாய் உறங்காமல், சற்று முன் தான் இருவரும் உறங்கியிருந்தனர். அந்த அதிகாலைப் பொழுதில், அலைபேசி ஒலியெழுப்பி அவன் ஆழ் துயிலைக் கலைத்தது.

“ம்ப்ச்! யாரு இந்நேரத்தில்?” என எரிச்சலுடன் அலைபேசியை எடுத்தவன், தன் மனைவி விழித்துவிடாதபடி, அவளுக்குப் போர்த்திவிட்டு, அணவாக தலையனையையும் வைத்துவிட்டு, அலைபேசியை எடுத்துக் கொண்டு, அறையின் இன்னொரு கதவைத் திறந்து பால்கனியை நோக்கிப் போனான்.

“மீட்டிங்கா?”

“என்ன திடீர்ன்னு?”

“அவசரமா என்ன முடிவு எடுக்கப் போறார்.?”

“ம்ம்.. வர்ரேன்!” எனச் சொன்னபடியே அலைபேசியை அணைத்தவனின் முகம் யோசனையைத் தத்தெடுத்திருந்தது.

‘திடீர் ஆலோசனைக் கூட்டம், அதுவும் அவசரமாக மயில்ராவணன் ஏற்பாடு செய்ய என்னக் காரணம்?’ என்ற யோசனையுடனே குளித்துக் கிளம்பியவன், உறங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பினான்.

“ஆரா..! ஆரா..!” என அவன் அவளை விளிக்க, அவன் கரத்தை இழுத்து மார்போடு அணைத்தபடி, மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தாள் அவனின் அழகு மனையாள்.

“ம்ப்ச்! அவசரமாய் ஒரு மீட்டிங்! நான் உடனே சென்னைக் கிளம்பணும். நாளைக்கு வந்துடுவேன்னு நினைக்கிறேன்.!”

“நீ எங்கேயும் போக வேணாம் மாயன்! ஹனிமூன் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு தனியா போறேன்னு சொல்ற? நான் உன்கிட்டே பேச மாட்டேன் போ..!” என பாதி தூக்கத்தில், கோபம் கொண்ட மனைவியின், இதழோடு இதழ் சேர்த்தவன்.. அவளைக் கொஞ்சி, கெஞ்சி அனுமதி வாங்கிக் கிளம்பியிருந்தான்.

*********

வழக்கமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் கட்டிடத்திற்கு சற்று தாமதமாகவே வந்து சேர்ந்திருந்தான் இமயவரம்பன். காலையிலேயே கிளம்பியிருந்தாலும், மதுரையிலிருந்து, சென்னை வந்து சேர தாமதமாகியிருந்தது. கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் அனைவரும் அங்குக் கூடியிருந்தனர். நீள் செவ்வக மேஜையின் இருபுறமும் அமர்ந்திருந்தவர்களிடம் தீவிர வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது. என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழப்பமாய் இமயன் நின்றிருக்க,

“அது எப்படிங்க நம்ம கட்சியில் 22 எம்.பி இருக்கோம், எங்களை விட்டுட்டு அவனை எப்படி நீங்க சொல்லலாம்?”

“சீனியார்ட்டி படி பார்த்தாலும் அவனால் உள்ளே வர முடியாது!”

“இதை நாங்க ஒத்துக்கவே மாட்டோம்.!”

“நீங்க நம்ம கட்சியிலிருக்கும் எங்களுக்கு எதிராக செயல்பட்டீங்கன்னா நாங்க, கட்சிப் பணியிலிருந்து விலக வேண்டி இருக்கும்.!” என ஆளுக்கொன்றாய் கத்திக் கொண்டிருக்க, நடுநாயகமாய் அமர்ந்தபடி அமைதியாய் இருந்தார் மயில்ராவணன்.
இமயனோ, என்ன நடக்கிறது எனப் புரியாமல், தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர,

“யார் யார் கட்சியை விட்டுப் போகணுமோ.. போங்க! இந்தப் பதவி ஒண்ணும் நீங்களா தேடிக்கிட்டது இல்லை. நான் உங்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது. உங்க இடத்தில் இன்னொருத்தரை என்னால் உட்கார வைக்க முடியும். அது உங்களுக்கே தெரியும். எனக்குத் தேவைப்படுறது கட்சிக்கு உண்மையாய் உழைக்கிற ஒருத்தர் தான். அது எம்.எல்.ஏ, எம்.பி யாராக வேணும்னாலும் இருக்கலாம். ஆனால், எனக்குப் பிறகு கட்சியை விழாமல் தூக்கிப் பிடிக்கிற ஒருத்தராகத்தான் இருக்கணும்.!” என மயில்ராவணன் சொல்ல அந்த இடம் முழுதும் அடர்ந்த நிசப்தம்.

“என்னால் கட்சியை விழாமல் காப்பத்த முடியும், தமிழ் நாட்டிலேயே பெரிய கட்சிங்கிற நிலைக்கு உயர்த்த முடியும்ன்னு நம்பிக்கை உள்ளவங்க தாராளமாய் கை உயர்த்தலாம்!” என அவர் சொன்ன போதும் நிசப்தம் மட்டுமே அவருக்கு பதிலாய்க் கிடைத்தது.

“எல்லாரும் அமைதியாய் இருக்கீங்க பேசுங்க!”

“நாம ஓட்டெடுப்பு நடத்தலாம் ஐயா!”

“யாருமே தைரியமாய் கை தூக்காத போது, யாருக்கும் யாருக்கும் ஓட்டெடுப்பு நடத்துவீங்க?” என அவர் கேட்க, அந்தப்பக்கம் பதில் இல்லை.

“நான் என் மகனைக் கட்சிக்குள்ளே கொண்டு வர முயற்சி செஞ்சது இங்கே எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவனுக்கு விருப்பமில்லைன்னு சொல்லிட்டான். விருப்பம் இல்லாதவனைக் கட்டாயப்படுத்த முடியாது. எனக்குப் பிறகு கட்சியை சரியானப் பாதையில் கொண்டு போக சரியான ஆள், இமயவரம்பன் மட்டும் தான்.!” என அவர் சொல்ல, பாதி புரிந்தும் புரியாமலும் அமர்ந்திருந்த இமயவரம்பன் அதிர்ந்து தான் போனான்.

“நான் எனக்குப் பிறகான, என் அரசியல் வாரிசாக இமயவரம்பனை அறிவிக்கிறேன்.!” என அவர் சொல்ல, அவரைப் பகைத்துக் கொள்ள பயந்து, அவர் முடிவை ஏற்றுக் கொண்டு, அனைவரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

‘நிஜமாகவே இவர் என்னைத்தன் .. அரசியல் வாரிசாக அறிவித்திருக்கிறாரா? என்ன காரணமாக இருக்கும்?’ என யோசித்தபடியே இமயன் அவர் முகத்தைப் பார்க்க, அவர் முகத்தில் தெரிந்த உணர்வுகளை ஆராய்ந்தான் இமயன். அவர் முகத்திலோ எதையோ சாதித்துவிட்ட உணர்வு அதீதமாக தென்பட்டது.

‘இவர் இப்படிச் செய்பவர் இல்லையே? இதன் பின்ணணியில் என்ன இருக்கிறது?’ என ஒன்றும் புரியவில்லை இமயனுக்கு. இதன் பின்னால் வேறு ஏதோ இருக்கிறது என்பது மட்டும் இமயனுக்குப் புரிந்தது.

“நான் உன் விருப்பம் என்னன்னு கேட்கலைங்கிற எண்ணம் உனக்கு இருக்கலாம் இமயன்! ஆனால், நான் சொன்னால் நீ மறுக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். உன்னால் மறுக்கவும் முடியாது!” என அவர் மீண்டும் சொல்ல, இமயனால் எதுவுமே பேச முடியவில்லை. இதை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற தவிப்பு அவனுக்குள் இருந்தது.

ஆனால் அதே நேரம்,

“ஜஸ்ட் அக்ஸெப்ட் இட் டா..!” என அர்ஜுனிடமிருந்து வந்திருந்த ஒரு குறுஞ்செய்தி அவனை இதை ஏற்றுக்கொள்ள வைத்தது. என்னதான் அவன் இதை ஏற்றுக் கொண்டாலும் அவன் மனதில் ஏதோவொரு உறுத்தல் இருக்கத்தான் செய்தது. எனவே அவசரமாய் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அர்ஜுனைத் தேடித்தான் போனான் இமயவரம்பன்.

*****

“இங்கே என்ன தான்டா நடக்குது? ஒரு எம்.எல்.ஏ பதவிக்கு நான் வந்துடக் கூடாதுங்கிறதுக்காக என்னைக் கொல்லவே துணிஞ்சவர், இப்போ என்னடான்னா என்னை அரசியல் வாரிசா அறிவிக்கிறார். எனக்கு ஒண்ணுமே புரியலை டா மச்சான்!” என அர்ஜுனிடம் இமயன் புலம்ப,

“உண்மையிலேயே அதற்கான திறமை உன்கிட்டே இருக்கு டா!” எனச் சாதாரணமாய் சொன்னான் அர்ஜுன்.

“விளையாடாதே அர்ஜுன். உங்க அப்பா இப்படி செய்யக் கூடிய ஆள் இல்லை! இதுக்குப் பின்னால் வேற ஏதோ இருக்கு!”

“விதி தான் வேற என்னவா இருக்க முடியும்?” என இமயனின் கேள்விக்கு பூடகமாய் பதில் சொன்னான் அர்ஜுன்.

“என்னடா சொல்ற?”

“ஆமா.. உன்னைக் கட்சிக்குள்ளே வரக் கூடாதுன்னு விரட்டினார். ஆனால், அவர் மயங்கி விழுந்தப்போ நீ காப்பத்தினியே, அப்போவே மனுஷன் பாதி செத்துட்டார். அதோட, ஹார்ட் அட்டாக்.. இது மூணாவது முறை வந்திருக்கு. மூணாவது முறைன்னு சொன்னதும், அவருக்கு பயம் வந்துடுச்சு. தன் காலம் முடியறதுக்குள்ளே கட்சியை தகுதியான ஆள்கிட்டே ஒப்படைச்சுடணும்ன்னு தான் இப்படியெல்லாம் செஞ்சுருக்கார்.!” என அர்ஜுன் சொல்ல இமயனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“பாவம் டா சார்..!” என இமயன் சொல்ல,

“ஆமா.. நீ அந்த ஆளுக்கு இரக்கப்பட்டுட்டு இரு.. இதில் கூட முழுக்க முழுக்க அவர் சுயநலம் மட்டும் தான் இருக்கு. முக்கியமாக சாதி தான் அவர் உன்னைத் தேர்ந்தெடுக்க முதல் காரணம். ரெண்டாவது, மத்தவங்களை நம்பி, கட்சியைக் கோட்டை விட அவர் விரும்பலை. உன்னை மாதிரி யாரும் நேர்மையாய் இருக்க மாட்டாங்கன்னு அவருக்குத் தெரியும்.

எல்லாத்துக்கும் மேலே, நான் வாரிசு அரசியலை ஊக்குவிக்க மாட்டேன்னு பெருமையாய் சொல்லிக்கலாம். இதை விட இன்னும் குறிப்பாக சொல்லணும்னா அவர் கட்சியில் இருந்துக்கிட்டு, அவருக்கு எதிரா உன்னால் செயல்பட முடியாது.! முக்கியமாக அவரைப் பற்றின இரகசியங்கள் உன்கிட்டே கடைசிவரை பாதுகாப்பாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் அவருக்கு இதில் நிறைய நன்மைகள் இருக்கு. அதுக்காக தான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.” என அர்ஜுன் சொல்ல, இமயனுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்,

‘விமானங்கள் நேர்க்கோட்டில் பயணப்பதில்லை.. அதே போல் தான் சிலர் எந்தச் சூழ்நிலையிலும் மாறுவதில்லை. அப்படித்தான் மயில்ராவணனும்.. சில இப்படித்தான், மற்றவர்களைப் பற்றிய சிந்தனையே அவர்களிடம் இருக்காது. சின்னஞ்சிறிய விஷயங்களிலும் கூட, தன் நன்மையை மட்டுமே பேணுபவர்கள்! இவர்களை ஒருபோதும் மாற்றவோ, திருத்தவோ முடியாது.’ என யோசித்தபடியே நின்றிருந்தான் இமயன்.

“இப்போ என்னடா செய்யப் போற? இதை வேணாம்ன்னு சொல்லப் போறியா?” என யோசனையோடு நின்றிருந்த நண்பனைப் பார்த்துக் கேட்டான் அர்ஜுன்.

“நான் ஏன்டா வேணாம்ன்னு சொல்லணும்? இது தானாக என்னைத் தேடி வந்த வாய்ப்பு. இதைக் கை நழுவ விட நான் தயாராய் இல்லை. உங்க அப்பா எனக்கு லாக் வச்சுட்டதா நினைக்கிறார். ஆனால் அந்த அரியணைக்கான சாவியே அவர் என் கையில் கொடுத்துட்டார்!” எனப் புன்னகையுடன் சொன்னான் இமயவரம்பன். அவன் சொன்னதன் அர்த்தம் அப்போதைக்கு அர்ஜுனுக்கு விளங்கவில்லை.

**-*****

சில வருடங்களுக்குப் பிறகு..
அந்த வழி முழுவதும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.. ஆங்காங்கே கட்சிக் கொடிகள் காற்றின் வேகத்திற்கேற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தன.

“தலைவர் வாழ்க..! தலைவர் வாழ்க..!” என்ற கோஷங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. சாலையில் வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் கூடியிருந்தது. சாலையின் இருபுறமும் பெரிய பெரிய பேனர்கள் அணிவகுத்து நின்றன.
ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் தங்களின் புதியத் தலைவரை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தது. ஆம், மயில்ராவணன் தன் கையில் தந்த சாவியை சாரியாகப் பயன்படுத்தி அவன் சொன்னபடியே அரியணையைக் கைப்பற்றியிருந்தான் இமயவரம்பன்.

234 தொகுதிகளில், 125 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன், ஆட்சியைப் பிடித்திருந்தது இமயவரம்பன் தலமையிலான கட்சி.
அடுத்த சில வருடங்களிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக முன்னேறியவன், இதோ இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற நிலைக்கு தன்னைத் தானே உயர்த்திக் கொண்டான். இந்த நிலை தானாக ஒன்றும் அவனுக்குக் கிடைத்துவிடவில்லை.

மயில்ராவணன் கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தும் திறமை அவனிடம் இருந்தது. இமயனின் வளர்ச்சியின் வேகத்தைப் பார்த்து, தங்கள் கட்சியின் மூத்த தலைவராய் மாறி வழி விட்டிருந்தார் மயில்ராவணன்.

இமயவரம்பன் பதவியேற்பு விழாவை தன் மனைவியுடன் மெத்திருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

அதே போல் ராகவும் அவன் மனைவி, குழந்தைகளுடன் அமர்ந்து இதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம், நிறைமாத வயிற்றோடு இருந்த ஆருத்ராவும் தன் ஆறு வயது மகன் மாறனுடன் அமர்ந்து தன் கணவன் பதவியேற்பதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆருத்ராவும் தன் பணியில் உயர் மேலாளராய் பதவி உயர்வைப் பெற்றிருந்தாள்.

“ம்மா… அப்பா! அப்பா!” எனத் தொலைக்காட்சியில் தகப்பனைக் கண்டு குதூகலித்தான் மாறன்.

“ம்மா! நானும் பிக் பாய் ஆனதும், அப்பாவை விட பிக் பிக் பொலிட்டீஷியன் ஆவேன்..!” என மகன் சொல்ல,

“ப்ரைம் மினிஸ்டர் ஆகப் போறியா மாறா?” எனப் புன்னகையுடன் அவள் கேட்க,

“நோ ம்மா..! ஐ வான்ட் டூ பிகம் அமெரிக்கன் பிரெஸிடென்ட்..!” என அவன் சொல்ல மகனின் நெற்றியில் நேசத்துடன் முத்தம் வைத்தாள் ஆருத்ரா.

அதே நேரம், மதிப்பிற்குரிய ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க,

“இமயவரம்பன் எனும் நான்..!” என உறுதிமொழியேற்று பதிவியேற்றுக் கொண்டவன், தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றுவதற்கான முதல் கையெழுத்தைப் பதித்தான்..

இமயவரம்பனின் அரசியல் பயணம் இனி என்றென்றும் தொடரும்..!

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
16
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்