
அதீதம்-22

“ஆருத்ரா! ஆருத்ரா!” அர்ஜுனின் குரல் அவள் செவிகளில் விழவே இல்லை. அவள் பார்வை முழுதும் அசைவற்று சரிந்துக் கிடந்த இமயனின் மீது மட்டுமே இருந்தது. கண்களில் கண்ணீர் நிறைந்து பார்வையை மறைக்க, மகிழுந்தை ஓரமாய் நிறுத்தியிருந்தாள் அவள்.
“ஆரு! நான் பேசுறது கேட்குதா? காரை நிறுத்திடாதே! அது அவன் உயிருக்கே ஆபத்தாக முடிஞ்சுடும். இப்போ நீ அழுதுட்டே இருந்தால், இமயனை நிரந்தரமாய் பார்க்க முடியாமல் போகலாம்.!” என அர்ஜுன் சொல்லிக் கொண்டே இருக்க, அவனின் கடைசி வார்த்தைகளில், உயிர் வந்தவளாய் நிமிர்ந்து அமர்ந்தாள் ஆருத்ரா.
“நான்.. என்ன செய்யணும்?” தொண்டையெல்லாம் வறண்டு போக, உயிர்ப்பே இல்லாத குரலில் கேட்டாள் அவள்.
“இங்கே பாரு ஆரு! உன் நிலமை எனக்குப் புரியுது. காரை மட்டும் நிறுத்தாமல் வந்துட்டே இரு! ஐ அம் ஆன் மை வே..! சீக்கிரம் வந்துடுவேன். இமயனோட உயிர் உன் கையில் தான் இருக்கு.!” என அழுத்தமானக் குரலில் சொன்னான் அர்ஜுன்.
“எனக்கு பயமா இருக்கு!” என அவளின் குரல் தடுமாறித் தளர்ந்தது.
“ஆரு! ப்ளீஸ்.. இது பயப்படுற நேரம் இல்லை. இமயனை மட்டும் கொஞ்சம் யோசிச்சு பாரு. நான் லைனிலேயே தான் இருக்கேன். இப்போ காரை ஸ்டார்ட் பண்ணு. தைரியமாய் இரு.. இமயனுக்கு எதுவும் ஆகாது!” என அவன் தைரியம் சொல்ல, மெதுவாகவே வாகனத்தை கிளப்பினாள் ஆருத்ரா.
அவள் இதுவரை ஓட்டிப் பழக்கியதெல்லாம் சிறிய ரக வாகனங்களாக இருக்க SUV ரக வாகனத்தை ஓட்டுவதில் அவளுக்கு சிரமமாகத் தான் இருந்தது. ஆனாலும் அர்ஜுனின் வழிகாட்டுதலில் வாகனத்தை செலுத்தியவள், அவன் சொன்ன இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தாள். அதன் பின் நிகழ வேண்டிய அனைத்தையுமே, தன் கரத்தில் எடுத்துக் கொண்டான் அர்ஜுன்.
இமயனின் அவசர சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவுடன் வந்திருந்தான் அர்ஜுன். முதலுதவி சிகிச்சைகள் துவங்கியது முதல், அவனை மருத்துவமனையில் அனுமதிப்பது வரை அவன் ஓயவே இல்லை.
“நான் தான் சொன்னேனே டா.. நம்ம ஆளுங்களைக் கூட கூட்டிட்டு போயிருக்கலாமே..? இப்போ இதெல்லாம் தேவையா?” அவசர சிகிச்சை பிரிவின் கதவைப் பார்த்து புலம்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
ஆருத்ராவே அறையின் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். கரையுடந்து கன்னத்தில் வழியும் கண்ணீரையும் துடைக்கக் கூட மறந்து அமர்ந்திருந்தாள் அவள்.
“ஆரு! அழாதே டி! இமயனுக்கு ஒண்ணும் ஆகாது!” தோழியைச் சமாதானப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தான் ராகவ்.
“நான் தான் உன் அண்ணனைப் புரிஞ்சுக்கல ராகவ்! அவனுக்கு இப்படி நடந்ததற்கு நான் தான் காரணம். எனக்கு ப்ரூவ் பண்ணுறதுக்காக தான் அவன் என்னை அங்கே கூட்டிட்டு போனான். எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியாய் இருக்கு ராகவ்.!” என தேம்பியபடி அவள் சொல்ல,
“ம்ப்ச்! உன்னால் தான் எல்லாம் நடந்ததுன்னு நினைக்காதே ஆரு! இமயன் சரியாகி சீக்கிரமே வந்துடுவான்.!” என அமைதிப்படுத்த முயன்றான் ராகவ்.
“உனக்கு என் மேலே கோபம் வரலையா ராகவ்? எப்படி என்கிட்டே இவ்வளவு அமைதியாய் பேச முடியுது? இமயனுக்கு இப்படி ஆனதில் உனக்கும் வருத்தம் இருக்கும் தானே?”
“லூசா நீ? நீ என் ஃப்ரெண்ட் ஆரு! உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். இப்படி நடந்ததுக்கு உன்னை பழி சொல்லி என்ன ஆகிடப் போகுது சொல்லு? நடந்து முடிஞ்ச எதையுமே நம்மால் மாத்த முடியாது. ஆனால், இமயன் மீண்டு வருவான்ங்கிற நம்பிக்கையோட காத்திருக்கலாம். அதைத்தான் நானும் செய்றேன்.! நான் வைக்கிற நம்பிக்கை அவனை மீட்டுக் கொண்டு வருதோ இல்லையோ? அது எனக்குத் தெரியாது. ஆனால் உன்னோட நம்பிக்கை அவனை மீட்டுக் கொண்டு வரும்” என ராகவ் சொன்ன வார்த்தைகள் அவளிடம் கொஞ்சம் நம்பிக்கையைக் கொண்டு வந்தது.
அதே நேரம்,
“ரெண்டு நாளில் கல்யாணத்தை வச்சிக்கிட்டு, இப்படி வந்து படுத்துக்கிட்டானே? யார் கண்ணு பட்டுச்சோ? எல்லாம் இவளால் தான். என் பேரனை இப்படி படுக்க வச்சிட்டல்ல?” எனப் புலம்பியபடியே செல்லம்மா வர, அவரைத் தொடர்ந்து, இமயனின் தாய், தந்தை இருவரும் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து, ஆருத்ராவின் வீட்டினரும் வர,
“ஏங்க, நாங்களும் பார்த்துட்டே இருக்கோம்! என்ன நடந்தாலும் அவளையே குறை சொல்றீங்க? நாங்க ஒண்ணும் உங்கப் பையனுக்கு தான் கொடுப்போம்ன்னு விடாப்பிடியாய் நிற்கல. நீங்களா தான் வந்தீங்க! பேசுனீங்க! பாதுகாப்பு இல்லைன்னு உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க! இப்போ என்ன நடந்தாலும் அவளையே குறை சொல்றது சரியில்லை. பொண்ணைக் கொடுக்குறோம்ங்கிறதுக்காக எல்லாத்தையும் பொறுமையாய் கேட்டுக்கணும்ங்கிற அவசியமும் எங்களுக்கு இல்லை. இன்னும் கல்யாணம் தான் முடியலையே.. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா சொல்லுங்க! இப்போவே எங்கம் பொண்ணை நாங்க கூட்டிட்டுப் போக தயார்.!” என அபிராமி கோபமாய் பேச,
“ஐயோ! தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி! அவங்க ஏதோ ஆற்றாமையில் பேசுறாங்க! எதையும் மனசில் வச்சுக்காதீங்க!” என அபிராமியிடம் சொன்ன தனலெட்சுமி,
“அத்தே! கண்டதையும் உளறி வைக்காமல் பேசாமல்தேன் இருங்களேன். புள்ளை எப்படி இருக்கானோ? என்னமோன்னு பதறிட்டு கிடக்கிற நேரத்தில், அந்தப் புள்ளையைக் குறை சொல்லிட்டு திரியுறீக? நம்ம வீட்டுக்கு வரப் பிள்ளையை நாமளே குறை சொன்னால் நல்லாவா இருக்கும்? அந்தப் பிள்ளை முகத்தை பாருங்க, அழுது அழுது வீங்கிப் போய் கிடக்கு. எம்புட்டு வேதனை மனசுக்குள்ளே இருந்தால், இப்படி வெம்பிப் போய் உட்கார்ந்திருக்கும்? எல்லாத்துக்கும் மேலே, என் மகன் ஆசைப்பட்டிருக்கான். நல்லதோ, கெட்டதோ, அவதேன் நம்ம வீட்டு மருமக!” என தனலெட்சுமி சொல்லவும், மருமகளை முறைத்தபடி அமைதியாய் நின்றார் செல்லம்மா.
“அம்மா அந்தக் காலத்து ஆளு! என்னத்தையாவது புரியாமல் பேசுவாங்க! எதுவும் நினைச்சுக்காதீங்க!” என இமயனின் தந்தை சொன்ன பின்னே இயல்பானார் அபிராமி.
“ஏன் அபி, நம்ம ஆருவுக்கு கல்யாணம் முடியறதுக்குள்ளே இன்னும் என்னென்ன பிரச்சனையெல்லாம் வரப் போகுதோ? மாப்பிள்ளை பையனுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிருச்சுன்னா என்ன செய்யறது?” என பொன்னி கேட்க,
“அக்கா! என்னத்தையாவது ஏடாகூடமாய் பேசி வாங்கி கட்டிக்காதீங்க? நானே பதறிப் போய் இருக்கேன். இப்போ என்ன சொல்ல வர்ரீங்க? இமயனுக்கு எதாவது ஆகிடனும்ன்னு நினைக்கிறீங்களா? என் பொண்ணு விஷயத்தில் ஆளாளுக்கு விளையாடாதீங்க! நான் மனுஷியாகவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.!” என அழுத்தமாய் அபிராமி சொல்ல, அமைதியாகிப் போனார் பொன்னி.
“ஏய்! என்னத்துக்கு டி இப்படி அழுது வடிஞ்சுட்டு இருக்கே? தைரியமாய் இருக்க வேணாமா? இன்னும் கல்யாணமே முடியலை டி! உனக்கு தான் ஆரம்பத்திலிருந்தே இந்தக் கல்யாணம் பிடிக்கலையே.. அப்பறம் ஏன் அழற? என்ன தான்டி ஆச்சு?” எனை மகளைத் தோளோடு அணைத்தபடி வினவினார் அபிராமி.
“ம்மா..!” என்ற கேவலோடு தாயின் தோளில் சாய்ந்துக் கொண்டவள்,
“எனக்கு இமயனைப் பிடிச்சுருக்கும்மா! எனக்கு அவன் வேணும்.! அவனுக்கு எதுவும் ஆகிடாதுல்ல மா? நான் தான் அவனைக் கேட்டேன், நீ கவியோட வாழாததற்கு நான் தான் காரணமான்னு கேட்டேன். அதுக்காக தான் என்னை அங்கே கூட்டிட்டு போனான். ஆனால் இப்படி நடக்கும்ன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை.!” என அவள் தேம்பித் தேம்பி அழ, அவன் முதல் மனைவியுடன் வாழவே இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தாலும் அபிராமியால் ஓரளவிற்கு அனைத்தையும் அனுமானிக்க முடிந்தது.
‘கட்டிய மனைவியுடன் அவன் வாழ்க்கையைத் துவங்காததற்குக் காரணம் தன் மகளா? அத்தனை நேசமா இவள்மேல்?’ என்ற கேள்வியும் அவருக்குள் இருந்தது.
ஆருத்ராவின் தலைகோதி அவளை ஆசுவாசப்படுத்தியவர்,
“உன் இமயன், உன்கிட்டே திரும்பி வந்துடுவான்! அழாதே ஆரு! எல்லாம் சரியாகிடும்!” என அவர் ஆருத்ராவை சமாதானப்படுத்தினார்.
அதே நேரம், இமயன்-ஆருத்ரா திருமணம் தள்ளிப்போன செய்தியையும், அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும், சமூக ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
“மேலூர் தொகுதி வேட்பாளர், இமயவரம்பன் மீது துப்பாக்கிச்சூடு. திடீர் தாக்குதலால் தள்ளிப்போன திருமணம். மீண்டு வருவாரா இமயவரம்பன்? இல்லை மேலூர் தொகுதிக்கு புதிய வேட்பாளரை நிறுத்தப் போகிறதா ஆளும் கட்சி?” என்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்க,
“இதுக்குப் பின்னாடி யாரு இருக்காங்கன்னு எனக்குத் தெரியணும்! கண்டிப்பா அந்த ஆளாகத் தான் இருக்கும்!”
“சார்! காட்டுப்பகுதியாய் இருந்ததால், சிசிடிவி எதுவுமே இல்லை சார்!”
“புல்லட் எங்கிருந்து வந்திருக்கலாம்ன்னு கெஸ் இருக்கா?”
“மரத்து மேலே இருந்து ஷுட் பண்ணிருக்காகங்க சார். துப்பாக்கியும் நாட்டு துப்பாக்கியாய் இருக்கு!”
“அப்போ ஏதோ லோக்கல் கேங் தான் பண்ணிருக்காங்க! நல்லா விசாரிங்க!” என அர்ஜுன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், அடுத்த அதிர்ச்சி தகவல் அவனை வந்து சேர்ந்தது.
அடுத்த இரண்டு வாரங்களில், மேலூர் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாய் செய்தி கிடைத்ததும், அர்ஜுன் முடிவே செய்துவிட்டான், இது மயில்ராவணன் வேலையாகத்தான் இருக்கும் என்பதை.
“இந்த ஆளு தான் இதை பண்ணிருப்பாருன்னு நினைச்சேன். இவன் ஹாஸ்பிட்டலில் இருக்கிறதைக் காரணமாக வச்சு, வேற யாரையாவது நிறுத்த திட்டம் போடுறார். நீங்க நல்லா விசாரிச்சு, எனக்கு ரிப்போர்ட் கொடுங்க!” என தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அலைபேசியை அவன் அணைத்த அதே நேரம் அடுத்த அழைப்பு அவனுக்கு வந்தது.
“சார்! நாங்க ஜீ த்ரீ போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுறோம் சார்! இமயன் சார் விஷயமா பேசணும்! கொஞ்சம் வர்ரீங்களா?” என அழைக்க,
“வர்ரேன் வைங்க!” எனச் சொல்லி, அந்தக் குறிப்பிட்ட காவல் நிலையத்திற்குக் கிளம்பினான் அர்ஜுன். கிளம்பும் முன், இமயனுக்கு வேண்டிய பாதுகாப்பை ஏற்பாடு செய்துவிட்டு,
“ராகவ்! நான் அவசர வேலையாய் கிளம்புறேன். இங்கே கவனமாகப் பார்த்துக்கோ! மீடியா, ப்ரஸ், யார் வந்தாலும் உள்ளே விட்டுடாதே!” என முன்னெச்சரிக்கையாய் சொல்லிவிட்டுத் தான் சென்றான்.
ஆனாலும் அவன் மனம் பதைபதைப்பை உணர்ந்தது. இமயனுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்ற பயமும் அவனுக்குள் இருந்தது.
‘இமயன் இப்படி விட்டேத்தியாக பாதுகாவலர்கள் துணையில்லாமல் போகிறவன் இல்லை. ஆனாலும் இது எப்படி நடந்தது? அவன் ஆருத்ராவை அழைத்துச் செல்வதாய் எடுத்த முடிவு, திடீரென எடுத்த முடிவு தான். அப்படியிருக்கையில், அவன் செல்லும் இடத்தைச் சரியாகக் கணித்து தாக்குதல் நடந்திருக்கிறதென்றால், இதன் பின்னே இருப்பது யார்? எப்படி இவன் அங்கே செல்கிறான் என்பது தெரிந்தது? தன்னிடம் சொல்லும் போது கூட, இமயன் காதுக்குள் தானே சொன்னான்.. அப்படியிருக்கையில் எப்படி..?’ என அர்ஜுன் யோசித்துக் கொண்டிருக்க, அவன் யோசனை எங்கேங்கோ சென்றது.
“ஓ.. நோ.. அப்படி மட்டும் இருந்துடக் கூடாது!” எனக் கத்தியவனின் முகம் இயல்பைத் தொலைத்தது.
******
காவல் நிலையத்தின் வாசலில் வந்து இறங்கிய அர்ஜுனுக்கு, கொஞ்சம் பதற்றமாகத் தான் இருந்தது. நாள் முழுதும், நடப்பவை எதுவுமே அவனுக்கு சரியாகவேப்படவில்லை.
“எதுக்காக சார் என்னை நேரில் வரச் சொன்னீங்க? இமயன் மேலே யாராவது கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காங்ளா?” என எரிச்சலுடன் கேட்டான் அவன்.
“இல்லை சார்! இது ஃபோனில் சொல்ற விஷயமில்லை. அதனால் தான், உங்களை நேரில் வரச் சொன்னோம்.!”
“அப்படி என்னய்யா விஷயம்? நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன்னு தெரிஞ்சாலே, கதைக் கட்டி, இந்த மீடியாக்காரனுங்க நியூஸ் ஆக்கிடுவானுங்க! என்ன விஷயம்ன்னு சொல்லித் தொலைங்க!”
“சார்! இமயனை சாரை சுட்டுட்டதாக ரெண்டு பேர் சரண்டர் ஆகியிருக்காங்க சார்!” என அந்தக் காவல் ஆய்வாளர் சொல்ல,
“வாட்!” என அதிர்ந்துவிட்டான் அர்ஜுன்.
“இதை யார் பண்ண சொன்னதுன்னு விசாரிச்சீங்களா?”
“எவ்வளவோ விசாரிச்சுட்டோம் சார்! முயல் வேட்டைக்குப் போனோம்! தெரியாமல் குறி மாறிடுச்சுன்னு சொல்றானுங்க சார்!”
“முயலைப் பிடிக்க நாட்டு துப்பாக்கி வச்சு சுட்டாணுங்களாமா? எஃப்.ஐ.ஆர் போட்டுட்டீங்களா? நான் பார்க்கலாமா அவனுங்களை?” என அர்ஜுன் கேட்க,
“இன்னும் எஃப்.ஐ.ஆர் போடலை சார். இப்போ உங்களைப் பார்க்க விட்டால், எதாவது பிரச்சனை வரும் சார்!” என அந்த அதிகாரி தயங்க,
“நான் வேணும்ன்னா அப்பாவுக்கு கால் பண்ணி தரவா? பேசுறீங்களா?” என அவன் கேட்ட ஒற்றை வார்த்தை அவர்களை சம்மதிக்க வைத்தது.
தன் எதிரில் நின்ற இருவரையும் பார்வையால் ஆராய்ந்தான் அர்ஜுன். படிப்பறிவு இல்லாத, கிராமப்புறத்து ஆட்களாகத் தான் தெரிந்தார்கள். ஐந்து நிமிடங்களாய் அர்ஜுன் அவர்களையே பார்த்திருந்தும் கூட, ஒற்றை வார்த்தைப் பேசவில்லை.
“யாருக்காக இதைப் பண்ணுணீங்க? உங்களை இதைச் செய்யச் சொன்னது யாரு?”
“நாங்கதேன் சொன்னோமே சார், முயல் வேட்டைக்கு காட்டுக்குள்ளே போனோம். மரத்து மேலே உட்கார்ந்து குறிப் பார்த்தோம். குறி தப்பிப் போயிடுச்சு. செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு சரணடைஞ்சுட்டோம். இன்னும் என்ன செய்யணும்ன்னு சொல்றீக? மேல் கோர்ட்டு.. கீழ் கோர்ட்டுன்னு எங்கே நிறுத்துனாலும் இதைத்தேன் சொல்லுவோம்!” என அவர்கள் சொல்ல,
“பச்சைக் குழந்தைக் கூட, நீங்க சொல்றதை நம்பாது. முயல் வேட்டைக்கு நாட்டுத் துப்பாக்கியா? லைசென்ஸ் வச்சிருக்கீங்களா?” என அர்ஜுன் கேட்ட போதும் கூட, அவர்கள் பயப்படுவதாய் தெரியவில்லை.
“உங்க பின்னாடி யாரோ பெரிய ஆள் இருக்காங்க! அந்த தைரியத்தில் தானே பேசுறீங்க?”
“பின்னே என்ன தம்பி, நம்ம முதலமைச்சர் தான் இதைச் செய்யச் சொன்னார். தேர்தலில் வேற ஒருத்தரை நிறுத்தப் போறாங்கன்னு உண்மையைச் சொல்ல முடியுமா? நம்ம ஐயா பேரு கெட்டுப் போயிராது!” என எதார்த்தமாய் சொல்வது போல் அவர்கள் சொல்ல,
“என்ன சொல்றீங்க?” எனப் பதற்றமாய்க் கேட்டான் அர்ஜுன்.
“ஆமா தம்பி! யாருக்கிட்டேயும் சொல்லிராதீக! நம்ம மயில்ராவணன் ஐயாதேன், அவங்க ஆளு மூலமா துப்பாக்கியும், பணமும் கொடுத்து விட்டாக! நம்ம ஐயாவை எதிர்த்து நின்னால் நாங்கதேன் சும்மா விட்டுருவோமா? அதேன் முயலைச் சுடுற மாதிரி போக்குக் காட்டிப்புட்டு சுட்டுப்புட்டோம்!” என அவர்கள் கிசுகிசுப்பான இரகசியக் குரலில் சொல்ல, நிஜமாகவே அதிர்ந்து தான் போனான் அர்ஜுன்.
‘இவர்கள் இதை ஏன் என்னிடம் சொல்ல வேண்டும்.? காவலர்களிடம் சொல்லாமல் என்னிடம் சொல்லக் காரணம் என்ன?’ என யோசித்தவன்,
“என்னை உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.
“என்ன தம்பி, உங்களைத் தெரியாதா? நம்ம மயில்ராவணன் மயன் உங்களைத் தெரியாமல் இருக்குமா? நாங்க உங்கக் கிட்டே சொன்னதை வெளியே சொல்லிராதீங்க தம்பி.! இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் தம்பி! ஐயா நாளைக்கே எங்களை வெளியே எடுத்துருவாரு, நீங்க கிளம்புங்க!” என அவர்கள் சொல்ல, குழப்பத்துடன் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து வாகனத்தைக் கிளப்பினான் அர்ஜுன்.
அவன் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு, மீண்டும், மருத்துவமனை வந்து சேர்வதற்குள், அடுத்தடுத்த நிகழ்வுகள் வேகமாக நடந்தேறியிருந்தன.
காவல் நிலையத்தில், அவர்கள் அர்ஜுனிடம் சொன்னவை அனைத்தும், சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன. அர்ஜுனின் பின்னாலிருந்து, யாரோ காணொளிக் காட்சியாகப் பதிவு செய்திருந்ததால், அர்ஜுனின் முகம் அந்தக் காணொளியில் தெரியவில்லை. ஆனால், மயில்ராவணன் தான், தங்களை இமயனைக் கொல்வதற்காய் அனுப்பினார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாய் இருந்தது. இவை எல்லாமே தெளிவான திட்டமிடல் என்பது மட்டும் அர்ஜுனுக்குப் புரிந்தது.
அதே நேரம்,
“அந்த வீடியோவில் இருப்பவை அனைத்தும், எனக்கும் எனது ஆட்சிக்கும் எதிராக அவதூறுகளைப் பரப்புவதற்காக, யாரோ செய்த சதி என்பதை உங்கள் முன் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். என் மீது தனிப்பட்ட விரோதம் கொண்ட விஷமிகளின் வேலையாகத்தான் இது இருக்கும்! அதோடு நான் மேலூரில் நிறுத்திய வேட்பாரான இமயவரம்பன் தான், தேர்தலில் போட்டியிடுவார் என்பதையும், தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கட்சியின் ஆணிவேரான இமயவரம்பன் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.! வாய்மை என்றும் வெல்லும்.” எனத் தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.
“இமயவரம்பன் அவர்களுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தில் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா?”
“சொந்தக் கட்சியிலிருக்கும் முக்கிய நபரைப் போட்டுத் தள்ள முயன்ற ஆளும் கட்சி!”
“என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? உட்கட்சி பூசலா? ஆளும் கட்சியின் ஆட்சி ஐந்தாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறதா?”
“இவரா இப்படிச் செய்தது? இமயவரம்பன் மீதான தாக்குதலின் காரணம் என்ன?”
“இமயவரம்பன் மீண்டு வருவாரா? மருத்துவமனையில் அவர் நிலை என்ன? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மேலூர் தொகுதியின் நிலை என்ன?”
என ஆளுக்கொரு பக்கமாய் விவாத நிகழ்ச்சிகளை பிரபல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பத் துவங்கியிருந்தன. இதெல்லாம் அர்ஜுனுக்கு ஏதோவொன்று சரியாக இல்லை என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தது.
ஆனாலும் பொறுமையாகக் காத்திருந்தான். இந்த நாடகம் முடியும் வரை அவன் அமைதிக் காத்து தான் தீர வேண்டும். ஏனென்றால், நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பவன், அவனின் நண்பன் இமயன் அல்லவா? நல்லதோ கெட்டதோ, இப்போது சமூக வலதளம் முழுக்க, இமயனுக்கான ஆதரவுகள் பெருகிக் கொண்டிருந்தன.
அவனது யூகம் சரியாக இருந்தால், இமயனுக்குப் பெரிதாக ஏதும் நேர்ந்திருக்காது.. என்பதை உணர்ந்தவனாய், அவசர சிகிச்சை பிரிவென்றும் பாராது, அவசரமாய் உள்ளே நுழைந்திருந்தான் அர்ஜுன்.
அங்கே இமயன், நிச்சலனமான முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்தான். மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க் மாட்டப்பட்டிருக்க, தோள்ப்பட்டையில் கட்டுப் போடப்பட்டிருந்து. மற்றபடி பெரிதாய் எதுவும் இல்லை. ஆனால், இதுவரை மருத்துவர் எதுவும் சொல்லாமல் இருப்பதை வைத்தே, இதுவும் இமயனின் திட்டம் என்பதை அறிந்துக் கொண்டான் அர்ஜுன்.
“இமயன்! போதும்! நீ நடிச்சதெல்லாம் போதும்!” என அர்ஜுன் சொல்ல, இமயனிடம் எந்த அசைவுமே இல்லை.
‘ஒருவேளை நிஜமாக இருக்குமோ? நான் தான் தவறாகப் புரிந்துக் கொண்டேனோ?’ என அர்ஜுன் யோசித்தாலும் கூட, இமயனைப் பற்றி நன்றாகத் தெரிந்தவனாக, இதை நம்பவும் முடியவில்லை.
“மச்சி! விளையாட்டு போதும்! மத்தவங்களை எல்லாம் விடு.. உன் ஆருத்ராவை யோசிச்சு பாரு.. வெளியே உட்கார்ந்து கதறிட்டு இருக்கா! நீ என்னடான்னா விளையாடிட்டு இருக்க?” என அர்ஜுன் சொல்ல, முக்கிலிருந்த மாஸ்க்கை நீக்கிவிட்டு எழுந்து அமர்ந்தான் இமயன்.
“எதுக்காக டா இதெல்லாம் செஞ்ச.? உன் வீட்டிலிருக்கவங்களுக்கு தெரிஞ்சால் என்ன ஆகும்?”
“அர்ஜுன்! நான் ஒண்ணும் தப்பு பண்ணல! உன் அப்பா போட்ட திட்டத்தை நான் செயல்படுத்தியிருக்கேன். எனக்கு சாதகமாய்..! அவ்வளவு தான்!”
“அதுக்காக உயிரோட விளையாடுவியா? எதாவது ஆகியிருந்தால் என்ன செய்வ?”
“எந்தப் பாதிப்பும் வராத இடமாய் பார்த்து சுடணும்ங்கிறது தான் திட்டம். ஆள் உங்க அப்பா ஏற்பாடு பண்ணினது. திட்டம் அவர் போட்டது.. துப்பாக்கியும் அவர் வாங்கிக் கொடுத்தது தான். ஆனால் திட்டத்தை செயல்படுத்திக்கிட்டது மட்டும் தான் நான். என்னைத் தவிர எந்த வேட்பாளரை அவர் நிறுத்துறார்ன்னு நானும் பார்க்கிறேன்.!” என அவன் சொல்ல,
“இமயன்! நீ என்ன சொன்னாலும் நீ செஞ்சது சரின்னு நான் ஒத்துக்க மாட்டேன். நீ சொல்றதெல்லாம் சரியாகவே இருக்கட்டும். ஆனால் ஏன் ஆருத்ராவைக் கூட்டிட்டு போன? அவளுக்கு எதாவது ஒண்ணுன்னா என்ன செஞ்சிருப்ப?” என பதில் கேள்வி கேட்டான் அர்ஜுன்.
“நான் தனியாகப் போறதாகத் தான் ப்ளான். ஆனால் ஆராவிடம் சில விஷயங்கள் பேச வேண்டி இருந்தது. அதுக்காகத் தான் கூட்டிட்டுப் போனேன். அதோட, நம்ம ப்ளான் என்னைக்குமே பிசிறு தட்டாது. அதோட, இது அரசியல் அர்ஜுன். இங்கே சரி, தப்புன்னு எதுவுமே இல்லை. நாம ஜெய்க்கணும் அது மட்டும் தான் இங்கே முக்கியம்.!”
“இதையெல்லாம் என்கிட்டே சொல்லிட்டு செஞ்சிருந்தால், கொஞ்சம் ரிலாக்ஸா இருந்திருக்கலாம். என்னையும் டென்ஷனா சுத்த விட்டுட்ட டா! நீ பழைய வீட்டுக்குப் போறேங்கிற தகவல், அந்த ஆளுக்கு எப்படித் தெரியும்?” என அவன் கேட்க,
“நான் அந்த வீட்டுக்குப் போற விஷயத்தை கசிய விட்டதே நான் தான். உயிரைப் பணயம் வச்சு, இதையெல்லாம் செய்யணுமான்னு நீ கேட்கலாம்.. ஆனால், எலிக்கு பொறி வைக்கும் போது, சில நேரங்களில், எலிப்பொறிக்குள்ளே இருக்கிற உணவாக நாம மாற வேண்டி இருக்கலாம். கடைசியில் எலியைப் பிடிச்சோமாங்கிறது தான் விஷயம்.. அப்படித்தான் இதுவும். நீயே நல்லா யோசிச்சு பாரு, நானும், கவியும் இழந்ததை அவரால் திரும்பக் கொடுக்க முடியுமா.? இத்தனையும் செஞ்சுட்டு, துளி குற்றவுணர்வு அவருக்கிட்டே இருக்கா?” எனக் கேட்டான் இமயன்.
“புரியுது டா! ஆனால், இதை எப்படி வீட்டில் சொல்லுவ?”
“ஏன் சொல்லணும்? அடிபட்டது பட்டதாகவே இருக்கட்டும். டாக்டர் கிட்டே நான் பேசிக்கிறேன்.!”
“என்னமோ தெரியலை.. நீ செய்யறெதெல்லாம் சரியாக இருந்தாலும், ஆருத்ராவை ஏமாத்தறது மட்டும் எனக்குப் பிடிக்கலை!” எனச் சொல்லிவிட்டு அர்ஜுன் வாசலை நோக்கித் திரும்பிய அதே நேரம், மார்பின் குறுக்கே கைக்கட்டியபடி நின்றிருந்தாள் ஆருத்ரா.
“நீ உன் அரசியல் விளையாட்டை விளையாட நான் தான் கிடைச்சேனா இமயன்? என் உணர்வுகளோட விளையாடும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது.? இரத்ததோடு நீ சரிஞ்சதை இப்போ நினைச்சாலும் பயத்தில் மனசு நடுங்குது. உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு, காரை ஓட்டிட்டு வந்த ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருந்துச்சு தெரியுமா? நீ என்னடான்னா உன்னோட காரியத்தை சாதிக்க என்னை ஏமாத்தியிருக்க?” என அவள் கோபமாய்க் கேட்டதிலேயே அவள் அனைத்தையும் கேட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டான் இமயன்.
“இங்கே பாரு ஆரா.. நான் இதைச் செய்யலைன்னாலும் இது நடந்திருக்கும். என்னா இந்தத் திட்டத்தைப் போட்டதே, மயில்ராவணன் தான். அதை மாற்றி எனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கிட்டேன் அவ்ளவு தான்!” என இமயன் புரிய வைக்க முயன்றாலும், அவள் புரிந்துக்கொள்ளவே இல்லை.
“நீ ஆயிரம் விளக்கம் சொன்னாலும், என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. உன்னோட நாடகத்தில் என்னையே வச்சு விளையாடிட்டியே? ரொம்ப வலிக்குது இமயன்! என்னை ஏமாத்தி என் கூட பழகின விவேக்கிற்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? எனக்கு உன்னைப் பார்க்கவோ, பேசவோ, பிடிக்கலை! தயவு செய்து என் முகத்தில் முழிச்சுடாதே!” எனக் கண்ணீருடன் சொன்னவள் விறுவிறுவென வெளியேறியிருந்தாள்.
அவனுக்காக எப்படிப் பதறித் துடித்தாள்.? அவன் கண்மூடிக் கிடந்த ஒவ்வொரு நொடியும், அவள் மனதால் செத்து செத்து பிழைத்தாளே? அப்படியிருக்கையில், அவனின் அரசியல் ஆதாயத்திற்கு தன்னையும் பகடையாய் பயன்படுத்தியதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கண்களில் நீர் வற்றிப் போய், கடைசி துளி நீரும் கன்னத்தில் வழிய, இமை சிமிட்டி அழுகையை மறைத்தபடி மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருந்தாள் ஆருத்ரா.
“காகிதக் கசங்கல்களாய்..
மடிந்துக் கிடக்கும் என் மனதை..
சுருட்டி ,மடித்து, கசக்கி..
குப்பையில் வீசுகிறாய்..!
எனை வீசியெறிந்தது
நீயாக இருப்பதாலே..
மானம் கெட்டுப் போய்..
உன்னையே தேடித் தொலைகிறது
என் மானம் கெட்ட மனது..!”

