Loading

அதீதம்-21

மனம் கலங்கிப் போக, தன் காதலியின் முகத்தைப் பார்த்தான் இமயவரம்பன்.

“நீ இன்னொரு பெண்ணுடன் வாழ முயற்சிக்காததற்கு நிஜமாகவே நான் தான் காரணமா?” என்ற ஆருத்ராவின் கேள்வி, உளி கொண்டு இதயத்தைத் துளைத்ததைப் போன்ற ஒரு வலியை அவனுக்குள் ஏற்படுத்தியது. அவளையுமே அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. திடீரென அவள் முன்னே வந்து நின்று, கல்யாணம் காதல் என்றால், அவளும் என்னதான் செய்வாள் பாவம்.?

‘எல்லாம் என்னால் தான்! என் காதலை, என் நேசத்தை, நான் உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கும், அன்பின் அதீதங்களை, நானே நிரூபிக்கும் நிலைக்கு தள்ளப்படிருக்கிறேன் என்றால், அதற்கான முழுமுதற் காரணம் நான் தான்!’ எனத் தன்னைத் தானே நொந்துக் கொண்டான் இமயன்.

“நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா? நான் உன்னை ஹர்ட் பண்ணணும்ன்னு கேட்கலை..!” சங்கடமாய் அவள் வினவ,

“உன் மேல் எந்தத் தப்பும் இல்லை ஆரா! உன் மீதானக் காதலை நான் எனக்குள்ளேயே ஒளிச்சு வச்சிருந்தது தான் தப்பு! உன் கிட்டே சொல்லியிருக்கணும்!” எனச் சொன்னவன்,

“நாம ஒருத்தங்களை, நம்மளை விட அதிகமாக நம்பும் போது, அவங்களை சந்தேகப்பட மாட்டோம். அவங்க செய்றது எதுவுமே நமக்கு தப்பா தெரியாது. கண்மூடித் தனமாக அவங்களை நம்புவோம். அவங்களுக்காக நமக்கு சம்மந்தமே இல்லாதங்களைக் கூட பகைச்சுப்போம். அப்படி நான் கண்மூடித்தனமாக வச்ச நம்பிக்கையும், விசுவாசமும் தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.!” என முடிக்க, புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.
அவன் சொன்னதன் பொருள் அவளுக்கு தெள்ளத்தெளிவாய் விளங்காவிட்டாலும் கூட, அவன் மனநிலையை ஓரளவிற்கு அவளால் யூகிக்க முடிந்தது.

“என்னால் ஓரளவிற்கு உன்னைப் புரிஞ்சுக்க முடியுது மாயன்! எந்த விஷயத்திலும், தனக்கு ஆதாயம் இருக்கான்னு பார்க்கிறது தான் மனிதனோட இயல்பு. சாதாரண விஷயங்களுக்கே அப்படி இருக்கும் போது, அரசியலில் இதெல்லாம் நடக்கிறது தான். ஒவ்வொரு ஏமாற்றமும் அடுத்த முறை நாம ஏமாறாமல் இருக்கிறதுக்கான முன்னெச்சரிக்கைன்னு நினைச்சுக்கோ!” என அவள் சொன்னதில் அவன் உதடுகள், புன்னகையில் விரிந்தது. அவன் அவ்வப்போது அழைக்கும், மாயன் என்ற விளிப்பு, அவன் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது. அவன் விழிகளோ, மெய் மறந்து, அவளில் மட்டுமே மையம் கொண்டிருந்தது.

அவனால் நிஜமாகவே அவள் தன் அருகில் இருக்கிறாள், என்பதை நம்ப முடியவில்லை.

இப்படியெல்லாம் நடக்கும், அவன் ஆரா அவன் அருகில் அமர்ந்திருப்பாள், என யாராவது சொல்லியிருந்தால், நிஜமாகவே நம்பியிருக்க மாட்டான் தான். எல்லாம் கண் முன்னே நடப்பதைப் பார்க்க அவனுக்கு அதிசயமாகத் தான் இருந்தது. வழி தவறி கூடு சேர்ந்தப் பறவையைப் போல், அவனுக்குள் நிம்மதியும், இவளுக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற உறுதியும், அவனுக்குள் இருந்தது.

அதே நேரம், தன் காதலின் ஆழத்தை அவளிடம் காட்டுவதற்கான தீவிரமும் அவன் மனதிற்குள் இருந்தது. யோசனையோடு அமர்ந்திருந்தவன், தனக்குள் முடிவெடுத்தவனாய், அவளை அழைத்தான்.

“ஆரா..!” என்ற அவனின் மென்மையான விளிப்பில், அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“வா! போகலாம்!” எனக் கை நீட்டி அவளை அழைத்தான்.

“உனக்கு அடிப்பட்டிருக்கு! நீ ஹாஸ்பிட்டலில் இருக்க, இப்போ எங்கே போறது?”

“சொல்றேன் வா!” என்றவனின் குரலில் உற்சாகம் தெரிந்தது. அவள் கரம் பிடித்து, கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தவனை வினோதமாய்ப் பார்த்தான் அர்ஜுன்.

“இமயன்! எங்கே போற? அதுவும் ஆருத்ராவைக் கூட்டிட்டு நீ எங்கேயும் போக வேணாம்.! அந்த ஆளு, உன்னை மொத்தமா முடிச்சுடணும்ன்னு காத்துட்டு இருக்கார். நீ என்னடான்னா விளையாடிட்டு இருக்க?” கொஞ்சம் கடுமையாகவே கடிந்துக் கொண்டான் அர்ஜுன்.

“ரொம்ப முக்கியமான விஷயம் அர்ஜுன்.! என்னைத் தடுக்காதே ப்ளீஸ்..!” என இமயன் சொல்ல,

“இங்கே பாரு மச்சான்! இது ரிஸ்க்! இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம் இருக்கு! மேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதி பத்தின அறிவிப்பு எப்போ வேணும்ன்னாலும் வரலாம். இந்த நேரத்தில் நீ வெளியே போய் ஏதாவது ஒண்ணுன்னா என்ன செய்றது?” என அர்ஜுன் கவலையாகக் கேட்க, அர்ஜுனின் காதுக்குள் ஏதோ இரகசியமாய் முணுமுணுத்தான் இமயன்.

அர்ஜுனோ, புன்னகையுடன், ” சரி டா! பார்த்து போய்ட்டு வா! நம்ம பசங்களை துணைக்குக் கூட்டிட்டு போ!” என எச்சரித்தான்.

“நான் பார்த்துக்கிறேன் டா!” எனச் சொன்ன இமயன் இதனால் நடக்கப் போகும் விபரீதங்களை அறியவில்லை தான்.
ஆருத்ராவோ, அர்ஜுனையும், இமயனையும் மாறி மாறிப் பார்த்தபடி புரியாமல் நின்றாள்.

‘இவன் அவன் காதுக்குள் என்ன சொன்னான்? எதற்காக அர்ஜுன் சிரித்தான்?’ எனப் புரியாமல், நின்றிருக்க,

“வா! போகலாம்!” என அவள் கரம் பிடித்து இழுத்தான் இமயன்.

“எங்கே?”

“சொல்றேன் ஆரா!”

“நீ சொல்லாமல் நான் வர மாட்டேன்.!” பிடிவாதமாய் வர மறுத்தாள் பெண்.

“ஏன் வர மாட்டே? இன்னும் என்னை நீ நம்பலையா ஆரா?”

“நீ என்னவோ அர்ஜுன் கிட்டே சொன்னே, அவனும் சிரிச்சான். என்ன ப்ளான் பண்ணுறீங்க? எங்கேன்னு சொல்லாமல் நான் வர மாட்டேன்.!” வீம்பாக அவள் நிற்க,

“டேட்டிங் போறேன்னு சொன்னேன்.. அதான் அவன் சிரிச்சான்.” என அவன் சொன்னதும், அதிர்ந்து அவள் விழிக்க, அவள் ஸ்தம்பித்து நின்ற அந்த நொடியைப் பயன்படுத்தி, அவளை அழைத்துப் போய் வாகனத்திற்குள் அமர வைத்திருந்தான் அவன்.

“டேட்டிங்.? என் கூடவா? நான் வரலை!”

“நீ தானே எனக்குள் இருக்கிறவ.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவள்.. அப்போ உன் கூடத் தானே டேட்டிங் போகணும்?” புன்னைகையுடன் புருவம் உயர்த்தினான் அவன்.

“அது.. அத்தை எதாவது நினைச்சுப்பாங்க!” தடுக்க வழி கிடைக்கிறதா என காரணம் தேடினாள் அவள்.

“அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன்.”

“இல்லை! இதெல்லாம் வேணாம். உனக்கு வேற அடி பட்டிருக்கு.. இப்போ எங்கேயும் போக வேணாம்.!”

“ஐ அம் ஃபெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்! ஓராயிரம் ஆசைகளை எனக்குள்ளே ஒளிச்சு வச்சிருக்கேன் ஆரா.. உன்னோட வாழ்ந்து முடிக்கிற வரை, எனக்கு எதுவும் ஆகாது.!” என அவன் சொல்ல, அளால் எதுவுமே பேச முடியவில்லை.

அவனுடனான இந்தப் பயணம், அவளுக்குக் கொஞ்சம் பயமாகவும், பதற்றமாகவும் தான் இருந்தது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன், இது அவசியமா? என்ற கேள்வியும் அவளுக்குள் இருந்தது. அதுவும் அர்ஜுன் எச்சரித்த பின்னும் அவன் அவளை அழைத்துப் போவது, அவளுக்கு உறுத்தலாகத் தான் இருந்தது. என்ன சொல்லி அவனை நிறுத்துவதென அவளுக்குப் புரியவில்லை.
அவனை நிறுத்தி வைப்பதற்கு அவளிடம் காரணங்களும் இல்லை.

விசிலடித்தபடியே உற்சாக மனநிலையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தவனைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் பார்த்ததும், அவளால் எதுவுமே சொல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல், அமைதியாகவே அமர்ந்திருந்தாள் அவள்.

“என்ன ஆரா.. எதுவுமே பேசாமல் வர்ர? என் மேல் கோபமா?!” எனக் கேட்டான் அவன்.

“இல்லை!”

“டேட்டிங்ன்னு உன்னைக் கூட்டிட்டு போய், ஏதாவது பண்ணிடுவேன்னு பயமா இருக்கா?” என அவன் சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தபடி கேட்க,

“நீ என்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்னு எனக்குத் தெரியும். உன் மனசில் இருந்தக் காதலை என்கிட்டே சொல்லவே, உனக்கு வருஷங்கள் தேவைப்பட்டிருக்கு. இன்னும் மத்ததெல்லாம் பண்ணணும்ன்னா, எத்தனை வருஷம் ஆகுமோ? இப்போவே உனக்கு நரை முடியெல்லாம் வந்துடுச்சு. கிட்டத்தட்ட நம்ம ரெண்டு பேருக்குமே வயசாகிடும்ன்னு நினைக்கிறேன்.!” அவன் கேட்ட அதே தொனியில் பதில் சொன்னாள் அவள்.

“என்னை ட்ரிகர் பண்ணுறியா? இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன். எல்லாத்தையும் என் கூட இருந்து பார்க்கத் தானே போற?”

“பார்ப்போம்! பார்ப்போம்!” எனச் சிரித்துக் கொண்டே சொன்னாள் ஆருத்ரா.

அதற்குள் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்துவிடவுமே, தன் இருக்கையிலிருந்து அவளுக்காக கதவைத் திறந்துவிட்டான் அவன்.

“இங்கே எதுக்கு வந்துருக்கோம்? இது உங்க ஊரு தானே? இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்த? உங்க வீட்டுக்குப் போகாமல், இங்கே ஏன் வந்திருக்கோம்?” என கேள்விகளை அடுக்கிக் கொண்டே வந்தாள் அவள்.
ஆம்! அவர்கள் வந்திருந்தது, அவனது சொந்த ஊரான கல்யானைக்கு தான். ஆனால் அவனது பெரிய வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், வேறு எங்கோ அழைத்து வந்திருந்தான்.

“பொறுமையாய் வா! உன்னோட எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும்!” எனச் சொன்னவன்,

“இதுக்கு மேலே கார் போகாது! நாம நடந்து தான் போகணும்!” எனச் சொன்னவன், அவள் கரம் பிடித்து, ஒற்றையடிப் பாதையில் நடந்தான். அவனது தீண்டலில் உடல் சிலிர்த்து அடங்கிய போதும், பாதுகாப்பாகவும் உணர்ந்தாள் ஆருத்ரா.

கன்னிப் பெண்ணின் நெற்றி வகிடாய் நீண்டிருந்த ஒற்றை வழிப் பாதையின் இருபுறமும், தென்னை மரங்கள் வரிசையாய் ஒற்றைக்காலில் நின்றன. அந்தத் தென்னந்தோப்பிற்குள், ஆங்காங்கே கிளிகளின் கொஞ்சல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. கண்களுக்குள் அடங்க முடியாத அளவிற்கு நீண்ட நெடிய தோப்பைக் கடந்த பின், ஒரு சிறு ஓடை, கெண்டைக்கால் நனையும் அளவிற்கே நீர் ஓடிக் கொண்டிருந்தது.

தன் காலணியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு, அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, குளிர் ஓடை நீரில் பாதம் பதிய அவள் நடக்க, அவனுடனான பயணம் அவளுக்குப் பிடிக்கத் துவங்கியது. மனதில் உறுத்திக் கொண்டிருந்த விஷயங்களெல்லாம் மறந்து போயிருக்க, நீலக்கடலை ஆட்கொண்டிருக்கும், ஆதிஷேஷனைப் போல, ஆருத்ராவின் மனதை அவள் மாயன் மட்டுமே ஆட்கொண்டிருந்தான்.

அந்த ஓடையைக் கடந்தப் பின், மீண்டுமொரு ஒற்றைவழிப் பாதையில் பயணம். இந்த ஒற்றைவழிப் பாதையின் இருபுறமும், வயல்வெளிகள் காட்சியளித்தன. வயல்வெளிகள், வரப்புகளின் முடிவில், கண்களுக்கு வீடுகள் தென்பட, சில தெருக்களையும், பல வீடுகளையும் தாண்டிச் சென்ற பின், அவன் அழைத்து வந்திருந்த அந்தப் பழைய வீடு அவள் கண்களுக்குப் புலப்பட்டது. வீட்டின் இருபுறமும், பூச்செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. வீட்டின் பக்கவாட்டில் காலியான இடமும் இருந்தது.

வெளியே திண்ணை வைத்துக் கட்டப்பட்டிருந்த வீட்டின் தோற்றமே, அது இமயன் குடும்பத்தினர் வாழ்ந்த வீடு என்பதைச் சொல்லாமல் சொன்னது. கதவை தான் கொண்டு வந்திருந்த சாவியின் உதவியால் திறந்து அவளை உள்ளே அழைத்துப் போனான் இமயவரம்பன்.

என்னதான் பழைய வீடாக இருந்தாலும், இன்னுமே நேர்த்தியாகப் பராமரிக்கப்படுவதை அவளால் உணர முடிந்தது. நவீனத்திற்கு ஏற்றாற் போல் சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதையும் அவள் புரிந்துக்கொண்டாள்.

******

“இங்கே தான் நீங்க முன்னாடி இருந்தீங்களா?” வீட்டைக் கண்ணால் ஆராய்ந்தபடியே கேட்டாள் அவள்.

“ம்ம்!” வெறும் ஒற்றை எழுத்தில் பதில் சொன்னான் அவன்.
வரவேற்பறையில் மாட்டப்பட்டிருந்த, திருமணப் புகைப்படங்களைப் பார்த்து,

“இது உன் தாத்தா, பாட்டி, இது உன் அம்மா அப்பாவா?” என ஆர்வமாய் அவள் கேட்க,

“ஆமா! அவங்க தான்!” எனச் சிரித்தபடியே பதில் சொன்னான் அவன்.

“ஹேய்! இமயன் இது நீயா? கொழுக் கொழுன்னு அழகா இருக்கே? ஆமா இது யாரு அழுமூஞ்சியாய் இருக்கிறது?” என அவனைப் பார்த்து அவள் கேட்க,

“இந்த அழுமூஞ்சி உன் ஃப்ரெண்ட் ராகவ் தான். நீ சொன்ன மாதிரியே அந்தக் கொழு கொழு பையன் நான் தான்.!” என அவன் சொல்ல, மிக நெருக்கத்தில் கேட்ட அவன் குரலில், தடுமாறி தயங்கி நின்றாள் பெண்.

ஆனால் அவனோ, சாதாரணமாகத் தான் நின்றிருந்தான். ‘தன்னிடம் கிளர்ந்தெழும் குறுகுறுப்புகள் அவனுக்குள் தோன்றவில்லையோ?’ என்றெல்லாம் அவளுக்குத் தோன்றியது. வரிசையாக, அவனது குடும்பப் புகைப்படங்கள், சிறு வயது புகைப்படங்கள் எனக் காட்டி முடித்த பின், அவளை தன் தன் தோளோடு சேர்த்து அணைத்தபடி, மாடியறையை நோக்கி அழைத்துப் போனான் அவன். அவனின் நெருக்கமும் தொடுதலும், அவளை ஏதோ செய்தது. இனம்புரியாத அந்த உணர்வில், தடுமாறி தத்தளித்து நின்றாள் ஆருத்ரா.

தன் தோளோடு அணைத்துப் பிடித்து, அவளை அந்த அறையின் முன் நிறுத்த, கேள்வியாய் அவனைப் பார்த்தாள் அவள்.

“இங்கே உன்னைக் கல்யாணத்திற்குப் பிறகு தான் கூட்டிட்டு வரணும்ன்னு நினைச்சேன். ஆனால், நீ கேட்ட ஒரேயொரு கேள்வி என்னை இங்கே வர வச்சிடுச்சு.!” என அவன் சொல்ல, இவளுக்குள்ளோ ஆர்வம் கூடியது.

“அப்படி என்ன இருக்கு உள்ளே?” என அவள் கேட்ட அதே நேரம், கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே அழைத்துப் போனான் அவன். ஆர்வத்துடன் அவன் தோள் வளைவிற்குள் நின்றபடியே உள்ளே நுழைந்தாள் அவள்.
‘பெரிதாக என்ன இருந்துவிடப் போகிறது?’ என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தவள் அதிர்ந்து தான் போனாள்.

நிஜமாகவே அவள் கண்களை அவளால், நம்பவே முடியவில்லை. தான் கேட்ட ஒற்றைக் கேள்வி அவனை எவ்வளவு பாதித்திருக்கும்? என்பது அவளுக்குப் புரிந்தது.
உள்ளே நுழைந்ததுமே, வாசலில் நேர் எதிரே வரையப்பட்டிருந்த ஓவியத்தில், திருமணக்கோலத்தில் நின்றிருந்தனர் இமயனும் ஆருத்ராவும். இவளோ ஆதிர்ச்சியாய் அவனைப் பார்க்க,

“என் மனசுக்குள்ளேயே நமக்கு கல்யாணம் முடிஞ்சு நிறைய நாள் ஆகிடுச்சு ஆரா. இந்த அறைக்குள்ளே என்னைத் தவிர இதுவரை யாரும் வந்ததே இல்லை. இது நமக்கான இடம். உனக்கும் எனக்கும் மட்டுமான இடம்.!” என அவன் சொன்னான்.
நேர்த்தியாய் அழகான பச்சை நிறப் புடவையில், அவன் கைவளைவிற்குள் அவள் முகம் சிவந்து நிற்பதைப் போல் வரையப்பட்டிருந்தது அந்த ஓவியம். அது ஓவியம் என உணர முடியாத அளவிற்கு அத்தனை தத்ரூபமாக வரையப்பட்டிருந்து. அதை அவள் இமை கூட சிமிட்ட மனமின்றி பார்த்துக் கொண்டிருக்க,

“இதுக்கே அசந்து போய் நின்னுட்டா எப்படி? இன்னும் இருக்கே..!” என அவன் சொல்ல, சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினாள் ஆருத்ரா.

அவளின் சிறு வயதுப் புகைப்படம் கூட, புதிதாக்கப்பட்டு அவன் வீட்டில் இருந்தது. முதன் முதலாய் அவன் அவளைப் பார்த்தது. தோட்டத்தில் பட்டாம்பூச்சியைப் பிடித்துத் தந்தது. அவள் விளையாடிக் கொண்டிருப்பது. அவள் தன் தாத்தாவோடு அமர்ந்திருப்பது, அவள் பூப்பறித்துக் கொண்டிருப்பது என அவன் பார்த்த விஷயங்கள் எல்லாம் புகைப்படமாய் அந்த வீட்டின் சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருக்க,

அவன் கற்பனை செய்த விஷயங்கள் எல்லாம் ஓவியங்களாய் தீட்டப்பட்டிருந்தது.
அவனும் அவளும் ஒன்றாக பேருந்தில் பயணிப்பது, இருசக்கர வாகனத்தில் கட்டிப்பிடித்தபடி பயணிப்பது, இருவரும் ஒன்றாய் பனிக்கூழ் உண்பது, அவள் மடியில் அவன் உறங்கிக் கொண்டிருப்பது, இருவருமே ஒன்றாக கோவிலில் சாமி கும்பிடுவது, எனத் துவங்கி, அவர்களின் குழந்தை பிறந்து நடை பயில்வது வரை ஓவியங்கள் நிறைந்திருந்தன.

அவளுக்கோ, அந்த ஓவியங்களைப் பார்க்க, பார்க்க தலையைச் சுற்றியது.

‘இத்தனை நேசத்தை, காதலை முழுக்க முழுக்கச் சுமந்துக்கொண்டு ஒருவனால் இருக்க முடியுமா? இந்தக் காதலுக்கு நான் தகுதியானவள் தானா?’ என்ற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது.

“இ.. இதெல்லாம் நீயே வரைஞ்சதா?” என நம்ப முடியாமல் அவள் கேட்க,

“வேற யாரு வரைஞ்சிருப்பாங்கன்னு நீ நினைக்கிற?” என்ற பதில் கேள்வி கேட்டு, அவனே வரைந்ததை உறுதி செய்தான் இமயன். அவன் பெயரைப் போலவே அவன் காதலும் மலையளவு உயர்ந்தது என்பதைப் புரிந்துக் கொண்டாள் அவள்.

“இந்த வீட்டோட எனக்கு தனிப்பட்ட நெருக்கம் உண்டு. என்னோட சின்ன வயசில் நாங்க வாழ்ந்த வீடு. என்னோட சிரிப்பு, சந்தோஷம், அழுகை, கண்ணீர், சோகம், துக்கம், கோபம் எல்லாத்தையும் இந்த வீடு பார்த்திருக்கு. வசதி வாய்ப்புக்காக எல்லாரும் வேற வீட்டுக்குப் போய்ட்டாலும் கூட, என்னால் இந்த வீட்டை விட முடியலை. நான் என்னோட குடும்பத்தை என் வீட்டில் எனக்காக உருவாக்கிக்கிட்டேன். இங்கே நான் வந்துட்டால், நீ, நம்ம குழந்தை, கூடவே நான்.. கற்பனையாய் இருந்தாலும் அழகானது என் உலகம். ஒருவேளை எனக்கு நீ கிடைக்காமல் போயிருந்தாலும், இந்தக் கற்பனையிலேயே என் வாழ்க்கை முடிஞ்சிருக்கும். வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு, இது பைத்தியக்காரத் தனமாக தெரியலாம். ஆனால் எனக்கு இது மட்டும் தான் வாழ்க்கை!” என அவன் சொல்ல, நெகிழ்ந்து போய் கண்களில் நீர் தேங்க, அவனை அண்ணாந்து பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்.

‘இப்படி கற்பனையிலேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவனால், எப்படி கவியுடன் வாழ முயற்சித்திருக்க முடியும்? நீ கவியுடன் வாழ முயற்சிக்காததற்கு நிஜமாகவே நான் தான் காரணமா? என நான் கேட்ட ஒற்றைக் கேள்விக்கான பதில், இதோ, கண் முன்னே விரிந்து கிடக்கிறதே?’ என யோசித்தவளின் மனம் அவன் அன்பின் அதீதத்தில் பாரமாய் கனத்தது.

“இப்போ சொல்லு ஆரா, என்னால் எப்படி கவியுடன் வாழ முயற்சித்திருக்க முடியும்? என்னால் முடிஞ்சிருக்கும்ன்னு நீ நினைக்கிறியா? அப்படியே நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும், உயிரோட இருக்கும் பிணமாக வேணும்ன்னா இருந்திருப்பேன்..!” என அவன் சொல்ல,

“இப்படியெல்லாம் பேசாதே மாயன்!” என தன் பொன் விரல்களால் அவன் இதழ் மூடினாள் பெண்.

“சும்மா பேச்சுக்கு சொல்றதுக்கெல்லாம் நான் செத்துட மாட்டேன் டி!” என அவன் மீண்டும் சொல்ல, அவன் தோளில் கரம் பதித்து எம்பி, தன் இதழ்களால் அவன் இதழ்களை மூடியிருந்தாள் அவனின் ஆரா.
அவள் இப்படிச் செய்வாள், என எதிர்பார்க்காதவன், முதலில் தடுமாறி, பின் அவள் இடையோடு கையிட்டு தூக்கி, அவள் துவங்கி வைத்ததை அவன் முடித்து வைத்தான். நொடிகள் நிமிடங்களாய் நீண்டு, இடைவெளிக்காய் அவள் தவித்து, மூச்சுவாங்க அவள் நிற்க, அவளை இறுக்கமாய் அணைத்து, அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான் அவன்.

“காதலைச் சொல்ல வேணும்ன்னா நான் தயங்கி நின்னுருக்கலாம்! ஆனால் மத்ததுக்கெல்லாம் தயங்கி நிற்கிற ஆள் இல்லை டி.. இப்போ புரியும்ன்னு நினைக்கிறேன்!” என அவன் கண்சிமிட்டி சிரிக்க, நாணத்தில் அவன் மார்பில் முகம் புதைத்தாள் அவள்.

அவன் மார்பில் சாய்ந்தபடியே, மீண்டும் அந்த அறையில் பார்வையை ஓட்டியவள், அங்கே பூட்டியிருந்த இன்னொரு அறையைப் பார்த்து,

“அந்த ரூம் ஏன் பூட்டியிருக்கு..? அங்கே எதாவது வரைஞ்சு வச்சிருக்கியா?” எனக் கேட்டாள்.

“இருக்கு..! ஆனால் நீ இப்போ பார்க்க வேணாம்! அது நம்ம பெட் ரூம்.. அங்கே வரைஞ்சு வச்சிருக்கிறதெல்லாம் நமக்கு மட்டுமேயான டர்ட்டி திங்ஸ்.. அதெல்லாம் கல்யாணத்திற்கு அப்பறம் காட்டுறேன்.!” எனக் கிசுகிசுப்பாய் அவள் காதிற்குள் சொன்னவனை அவள் முறைக்க,

“முறைக்காதே டி! கல்யாணம் பண்ணி குழந்தையே பெத்துருக்கேன். அப்போ கற்பனை அப்படியெல்லாம் போகாதா?!” என அவன் கேட்க, அவள் பதிலே சொல்ல முடியாமல் திகைத்து நின்றாள்.

“ஏன் என் மேல் உனக்கு லவ் வந்தது? வேற எந்தப் பொண்ணும் உன் கண்ணுக்கு தெரியலையா?”

“இதென்ன கேள்வி? இதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”

“நீ தான் அரசியல்வாதியாச்சே..? உனக்கா பதில் தெரியாது?” என அவள் கேட்க,

“உனக்கு ஏன் ஐஸ்க்ரீம் பிடிக்கும்ன்னு கேட்டால் நீ என்ன சொல்லுவ?” என பதில் கேள்வி கேட்டான் அவன்.

“அதுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? பிடிக்கும் அதனால் சாப்பிடுறேன்.!” எனச் சாதாரணமாய் அவள் சொல்ல,

“அதே பதில் தான் நானும் சொல்வேன், வேற எந்தப் பொண்ணையும் எனக்குப் பிடிக்கலை.. உன்னை மட்டும் தான் பிடிச்சுது. இதுக்கு மேலே எனக்கு பதில் சொல்லத் தெரியாது!” என அவன் சொல்ல இதழ்விரித்து சிரித்தாள் அவள்.

“நீ எதிர்பார்த்த பதிலை நான் சொல்லிட்டேனா? போதுமா? என்னையே கேள்வி கேட்டு திணற வைக்கிறியே..!” என்றவன், அவளை மீண்டும் இறுக அணைத்துக் கன்னத்தில் இதழ் பதித்தான்.

“போதும்! இங்கே இருந்தால், இனிமே சரி வராது.! வா! கிளம்பலாம்!” எனச் சொன்னவன், அவள் கரம்பிடித்து அழைத்துக் கொண்டு கீழே வந்தான். அவள் கரத்தோடு கரம் கோர்த்தபடி நடந்து வந்து, கவனமாகக் கதவைப் பூட்டிவிட்டு, சாவியை அவளிடம் தந்துவிட்டு, அவளுடன் நடந்தான்.

மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போதிருந்த சஞ்சலங்கள் எதுவும் இப்போது அவள் மனதில் இல்லை. அவள் மனம் தெளிவாகவே இருந்தது. அவன் காதல் அவளுக்கானது மட்டுமே என்ற நிம்மதியும் இருந்தது.
ஆனால் அந்த நிம்மதிக்கு அற்ப ஆயுள் என்பதை இருவருமே அறிந்திருக்கவில்லை. அது தான் விதியோ என்னவோ? அவனைப் பற்றி அவளுக்குள் தெளிவு வந்த பின், அவனின் நேசத்தை உணர்ந்துக் கொண்ட பின், இப்படியொன்றை நடத்த தான் காலமும் காத்திருந்ததோ என்னவோ?
வீட்டிலிருந்து வெளியேறி, உரிமையாய் அவன் கரம் பற்றி அவனுடன் நடந்தாள் அவள். குடியிருப்புப் பகுதிகளைக் கடந்து வயல்வெளி, ஓடை, ஒற்றையடிப் பாதை என ஒவ்வொன்றாய் கடந்து, வாகனத்தை நோக்கி அவர்கள் நடந்துக் கொண்டிருந்த நேரம், அவர்களுக்குப் பின்னால் கேட்ட சத்தத்தில் நடையை நிறுத்தி திரும்பி நின்றான் இமயன்.

சில நொடிகள் நிதானித்து, கண்களால் சுற்றிலும் ஆராய்ந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, அவன் கண்களுக்கு யாரும் புலப்படவில்லை.

“என்ன ஆச்சு? யாரையாவது தேடுறியா இமயன்?” என ஆருத்ரா கேட்க,

“ஒண்ணுமில்லை!” எனச் சொன்னாலும் சுற்றிலும் பார்வையை அலசியபடியே நடந்தான் அவன். ஆருத்ராவிற்கோ ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் பதற்றத்தோடு, அவன் கரம் பிடித்து நடந்தாள் அவள். கிட்டத்தட்ட மகிழுந்தை நெருங்க சில அடிகள் இருக்கும் போதே, பதற்றமாய் அவளைப் பிடித்து இழுத்து வந்த இமயன் அவளை வாகனத்திற்குள் தள்ளுவதற்கும், அவன் மீது துப்பாக்கிக்குண்டு பாய்வதற்கும் சரியாக இருக்க, பதற்றத்தில் வீறிட்டு அலறியிருந்தாள் ஆருத்ரா.

“ஆரா..! ஒண்ணும் இல்லை. பயப்படாதே!” என்றபடியே மார்புப் பகுதி உதிரத்தில் நனைந்திருக்க, அவளை ஆசுவாசப்படுத்த முயன்றபடியே உள்ளே ஏறி அமர்ந்தான் அவன்.

“ஐயோ! இரத்தம்! இமயன்! எனக்கு பயமா இருக்கு!” என அவள் பயத்துடன் அழுகையில் கரைய,

“இங்கே பாரு..! நாம உடனே இங்கிருந்து கிளம்பணும்! நீ தான் காரை ட்ரைவ் பண்ணணும்! நிதானமாய் மூச்சை இழுத்துவிடு! இது அர்ஜுனோட கார்! இந்த கார் புல்லட் ப்ரூஃப்.. அதனால் பயப்படாமல், வண்டியை எடு..! சீக்கிரம் ஆரா..! சொல்றதைக் கேளு!” நல்லவேளையாக அவளைத் தள்ளியது ஓட்டுநர் இருக்கையாக இருக்க, பதற்றமும் பயமும் ஒருசேர, அவள் வாகனத்தைக் கிளப்பவும், பக்கவாட்டுக் கண்ணாடியை இன்னொரு தோட்டா உரசிச் செல்லவும் சரியாக இருக்க, அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தன் அலைபேசியில்,

“கால் அர்ஜுன்!” என குரலொலி மூலமாக அழைத்தவன்,

“அர்ஜுன்! கார் லொக்கேஷன் ட்ரேஸ் பண்ணிட்டு சீக்கிரம் வா! எமெர்ஜென்ஸி டா!” எனச் சொன்னபடியே மயங்கிச் சரிந்திருந்தான்.

“ஐயோ.. இமயன்! இமயன்..! ப்ளீஸ் கண்ணைத் திற! எனக்கு பயமா இருக்கு இமயன்!” எனப் பதறியபடி அவனை எழுப்ப முயல, அவள் குரல் மட்டுமே அந்த வாகனத்தினுள் எதிரொலித்துக் கொண்டிருக்க, அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்த அர்ஜுனின் குரல் அவள் செவிகளில் விழாமல் போனது.

“உன் குரல் எனக்குள் கேட்கிறது..

உன் கண்ணீரின் கதகதப்பும் உணர முடிகிறது..

எனக்கான உன் தவிப்பும் எனக்குப் புரிகிறது..

என்ன செய்ய?

உனக்காக நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு..

இல்லாமல் போய்த்தான் நிரூபிக்க வேண்டுமோ என்னவோ?

நான் காணாமல் போனாலும் கூட,

நான் கொண்ட காதல்..

உனக்காக மட்டுமே காத்துக்கிடக்கும் காதலியே..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்