Loading

அதீதம்-18

தகதகக்கும் தங்க நிறப் புடவையில், ஒப்பனைகளோடு கண்ணாடியின் முன் அமர்ந்திருந்தாள் கவிநயா.

வெள்ளி சரிகை இழையோடிய தங்க நிற புடவைக்கு, அடர் மருதாணிச் சிவப்பில் நெய்யப்பட்டிருந்த கரை வெகு பொருத்தமாக இருந்தது. ஆளுயரக் கண்ணாடியில் தன் முழு உருவத்தையும் பார்த்தவளின் இதழ்களில் புன்னகை நிறைந்திருந்தது. அவள் அணிந்திருந்த அணிகலன்களும், அவளின் அழகிற்கு இன்னும் அழகு சேர்த்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக தான் விரும்பிய வாழ்க்கை அமையப் போகிறதென்கிற மகிழ்ச்சியும் நிறைவும் அவள் முகத்தில் தெரிந்தது. அலங்கார மேஜையின் மீதிருந்த விலையுயர்ந்த அலைபேசியை எடுத்து, தன் முகத்திற்கு முன் வைத்து, புன்னகைத்தபடியே சுயமியைக் க்ளிக்கியவளுக்கு, இது தான் தன் கடைசி புன்னகை என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை தான்.

தான் எடுத்த புகைப்படைத்தை, தீபக்கின் எண்ணிற்கு அனுப்பிவிட்டு, அவனுக்கு அழைப்பெடுத்தாள் கவிநயா.

அழைப்பு சென்றுக் கொண்டே இருந்ததே ஒழிய, தீபக் அழைப்பை ஏற்கவே இல்லை.

“இவன் எங்கே போனான்? கால் பண்ணினாலும் எடுக்கலை!” யோசித்தபடியே அவள் மீண்டும் அழைப்பெடுக்க முயன்ற அதே நேரம், அவள் அறையின் கதவு தட்டப்பட்டது. தீபக்காகத் தான் இருக்கும். தனக்காகத் தான் வந்திருப்பான் என யோசித்தபடியே கதவைத் திறந்தவளின் புன்னகை கொஞ்சம் கொஞ்சமாய் வடிய, யோசனையோடு எதிரில் நின்றவரைப் பார்த்தவள்,

“வாங்கப்பா! தீபக் மணையில் உட்கார்ந்தாச்சா? என்னைக் கூப்பிடவா வந்தீங்க?!” என வெளியில் நின்ற மயில்ராவணனைப் பார்க்க, அவசரமாய் உள்ளே வந்து கதவை அடைத்தார் அவர்.

“என்ன ஆச்சுப்பா?” பதற்றமாய் நின்றிருந்த அவர் முகம் பார்த்து வினவினாள் கவிநயா.

“ஒண்ணும் இல்லைம்மா!” எனச் சொன்னாலும், அவர் முகத்திலிருந்த பதற்றத்தில் உள்ளுக்குள் உதறலெடுத்தது அவளுக்கு.

“என்னதான் ஆச்சு? சொல்லித் தொலைங்க! உங்க முகமே சரியில்லை. என்கிட்டே சொல்லணும்ன்னு தானே வந்திருக்கீங்க? அப்பறம் ஏன் சொல்லாமல் இருக்கீங்க?!” எனக் கோபமாய் அவள் கேட்க,

“கவிம்மா! நான் எல்லாமே உன் சந்தோஷத்திற்காகத் தான் செஞ்சேன். ஆனால், இப்படி நடக்கும்ன்னு நான் கனவிலும் நினைக்கலை! நீ இதை எப்படி தாங்கிக்க போறன்னு எனக்குத் தெரியலை டா!” என அவர் அழுகையை அடக்கியபடி பேசவும், பதறித்தான் போனாள் கவிநயா.

“தீபக்! அவனுக்கு எதாவது ஆகிடுச்சாப்பா?!” என யோசனையோடு வினவியவள், பின் ஏதோ யோசித்தவளாய்,

“என்ன பண்ணுனீங்க அவனை? தீபக் எங்கே? நீங்க தான் எதாவது பண்ணியிருப்பீங்க! உங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். தீபக்கிற்கு மட்டும் ஏதாவது ஆச்சு.. உங்களைச் சும்மா விட மாட்டேன்!” என தந்தை என்றும் பார்க்காது, தன் எதிரில் நின்றிருந்த, மயில்ராவணனின் சட்டையைப் பிடித்திருந்தாள் கவிநயா.

“அவனுக்கு ஏதாவது நடந்தால், நீ என்னைத் தான் சந்தேகப்படுவன்னு எனக்குத் தெரியாதா? இதுவரை நான் உனக்கும், உன் அண்ணணுக்கும் எதுவும் செஞ்சதில்லை. அந்த ஒரே காரணத்திற்காகத்தான் இந்தக் கல்யாணத்திற்கு சம்மதிச்சேன். உங்க வாழ்க்கையாவது உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கட்டும்ன்னு நினைச்சது தான் நான் செஞ்ச தப்பு! ஒருவேளை நான் பார்த்திருந்த மாப்பிள்ளையாய் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? நடக்கத்தான் நான் விட்டுருப்பேனா? நீயாக தேர்ந்தெடுத்த வாழ்க்கை தானே? அதான் இப்படி நடந்துடுச்சு!” நிஜமாகவே கவலையான குரலில் சொல்வதைப் போலவே சொன்னவர், அவள் கரத்திலிருந்து தன் சட்டைக் காலரை விடுவித்துக் கொண்டார்.

அவர் சொன்ன வார்த்தைகளில், இந்த முறை குழம்பிப் போய் நிற்பது கவிநயாவின் முறையானது.

“என்ன சொல்றீங்க? எனக்கு புரியலை! அப்படி என்ன செஞ்சுட்டான் தீபக்?” எனப் பதில் கேள்வி கேட்டாள் அவள்.

“இந்தக் கல்யாணமே வேணாம்ன்னு ஓடிட்டான்ம்மா!” சத்தமில்லாதக் குரலில் அவர் சொல்ல, அதிர்ந்து நின்றுவிட்டாள் கவிநயா.

“பொ.. பொய் தானே சொல்றீங்க?” எனத் திணறியபடி கேட்டவளால், நிஜமாகவே நம்ப முடியவில்லை. தீபக்கிற்கும், அவளுக்கும் இடையேயான காதல் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். அவன் இப்படி பாதியில் விட்டுவிட்டு ஓடிப் போகிறவன் இல்லை என்பதும் அவளுக்குத் தெரியும். அவள் சொல்லி அவன் வேண்டாமென மறுத்த ஒரே விஷயம், வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதை மட்டும் தான். சொல்லப் போனால், அவளுக்குமே அதில் பெரிதாக விருப்பமில்லை. இன்னுமும் தாய் தந்தையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டாம் என்பது தான் அவள் எண்ணமாகவும் இருந்தது.

“உன் வீடும் வேணாம்! என் வீடும் வேணாம்! நாம யு.எஸ் போய்டுவோம்!” என்பதைத் தான் இறுதியாக தீபக் சொன்னான். அவளும் அதற்கு சம்மதித்து தான் இருந்தாள். அப்படியிருக்கையில், அவன் இப்படி தன்னை வேண்டாமெனச் சொல்லிவிட்டுப் போயிருப்பான் என அவள் மனம் நம்ப மறுத்தது.

“நான் உன்கிட்டே பொய் சொல்லி என்ன செய்யப் போறேன்? உனக்கும் அந்தப் பையனுக்கும் என்ன நடந்துச்சுன்னு எங்களுக்குத் தெரியாதே? உனக்குப் பிடிச்சிருக்குன்னு தான், நான் அந்தப் பையனைப் பத்தி விசாரிக்கவே இல்லை. என் பொண்ணோட தேர்வு சரியா இருக்கும்ன்னு நினைச்சேன். இப்படி நடக்கும்ன்னு எனக்குத் தெரியலையே? உலகம் தெரியாத பொண்ணும்மா நீ உன்னை ஏமாத்திட்டு போய்ட்டானே படுபாவி!” என அவர் புலம்புவதைப் பார்க்க, பார்க்க அவளுக்குக் குற்றவுணர்வாக இருந்தது.

ஏற்கனவே தீபக் எங்கே சென்றான்? என்ற குழப்பத்தில் இருந்தவளுக்கு, தன் தந்தையின் செயல் உண்மையா? நடிப்பா? எனப் பிரித்தறிய முடியவில்லை. கூடவே குற்றவுணர்வும் சேர்ந்துக் கொள்ள, தன் மீது தான் தவறோ? என யோசிக்கத் துவங்கியிருந்தாள்.

“நான் கால் பண்ணி கேட்கிறேன் ப்பா! அவன் அப்படி சொல்லியிருக்க மாட்டான்!” அவன் மீதிருந்த கடைசி நம்பிக்கையில் சொன்னவள், மீண்டும் அலைபேசியில் தீபக்கிற்கு அழைப்பெடுக்க, அழைப்பு சென்றுக் கொண்டே இருந்ததே ஒழிய, அழைப்பை யாருமே ஏற்கவில்லை.

‘இந்தத் திருமணத்திற்காக எவ்வளவு போராடியிருக்கிறார்கள் என்பது அனுக்குத் தெரியும். இந்தத் திருமணம், அவர்கள் வாழ்நாளில் எவ்வளவு முக்கியம் என்பதும், அவனுக்குத் தெரியும். அப்படி இருக்கையில், இந்தத் திருமணத்தை மறுத்துவிட்டு, அவள் காதலை மறுத்துவிட்டு அவன் சென்றுவிட்டானா?’ கேள்வி அவள் மனதிற்குள் எழாமல் இல்லை. அவன் சென்றிருக்க மாட்டான் என்பதை உறுதியாய் அவளால், நம்பவும் முடியவில்லை. அவள் குழப்பமாய் இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்து நின்றிருந்த நேரத்தில், அவள் அலைபேசிக்கு தீபக்கிடமிருந்து அழைப்பு வந்தது.

‘இந்த ஒற்றை அழைப்பில் தந்தை சொன்னதெல்லாம் பொய்யாகி விடாதா? தீபக் தன்னிடம் திரும்பி வந்து சேர்ந்திட மாட்டானா?!’ என்ற கேள்விகளுடன் அழைப்பை ஏற்றவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

“இ.. இது.. சரியாய் வராது கவி! நீ எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் இருக்க! எப்போதும் உன் உயரத்தை என்னால் தொட முடியாது. அதனால் இது வேண்டாம். இந்தக் கல்யாணம் நடக்காது. நான் செஞ்ச எல்லாத்துக்கும் சேர்த்து என்னை மன்னிச்சுடு கவி!” என்ற உணர்ச்சியே இல்லாத தீபக்கின் வார்த்தைகள், எரிமலைக் குழம்பாய் அவள் செவிக்குள் இறங்கி அவள் இதயத்தைப் பொசுக்கியது. கண்ணுக்குத் தெரியும் காயங்களை விட, கண்களுக்குப் புலப்படாத மனதின் காயங்கள் வலி மிகுந்தவை. அந்த நிலையில் தான் கவிநயாவும் இருந்தாள்.

அவள் தீபக்கிடமிருந்து சத்தியமாய் இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை. அவள் ஒருநாளும், அவள் உயரத்திற்கு வரச்சொல்லி அவனை வற்புறுத்தியதே இல்லை. அவன் தனக்கு தகுதியானவன் இல்லை என்றும் அவள் ஒருநாளும் நினைத்ததே இல்லை. இப்போதும் கூட, அவன் சம்மதித்தால், அவனோடு அவன் கைப்பிடித்து, அனைத்தையும் உதறிவிட்டுச் செல்ல அவள் தயாராகத்தான் இருக்கிறாள். தயாராகத்தான் இருந்தாள். அவளைப் பற்றித் தெரிந்தும், அவன் சொன்ன வார்த்தைகள் அவளை நிரம்பவும் வேதனைப்படுத்தியது. கண்கள் கலங்கியபடி, கையாலாகதத் தனத்துடன், தன் தந்தையைய் பார்த்தபடி நின்றாள் கவிநயா.

அவளுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையை எப்படி சமாளிப்பதென்று அவளுக்குப் புரியவில்லை.

“அர்ஜுன் எங்கேப்பா?” தன் கடைசி பிடிமானமாய், தன் உடன் பிறந்த தமயனைத் தான் அவள் மனம் தேடியது.

“அர்ஜுன் தீபக்கை தேடி போயிருக்கான் மா!”

“வேண்டாம் பா! அவனைத் தேட வேண்டாம்ன்னு சொல்லிடுங்க! என்னை வேணாம்ன்னு சொல்லிட்டுப் போனவன், திரும்ப வந்தாலும், அவனை ஏத்துக்க நான் தயாராய் இல்லை. இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க!” எனச் சொல்லிவிட்டு, அவள் நகரப் போன அதே நொடி,

“அப்போ.. உன்னைப் பெத்து வளர்த்த இந்த அப்பனைப் பற்றி யோசிக்க மாட்டியா கவி? உனக்காக இத்தனையும் செஞ்சதுக்கு நான் அவமானப்பட்டு நிற்கணுமா? முதலமைச்சர் பொண்ணோட கல்யாணம் நின்னுடுச்சுங்கிறது, எனக்கு, என் பதவிக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?!” என அவர் கேட்ட கேள்வியில், அசையாமல் நின்றாள் கவிநயா.

அவளுக்கு, என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. தான் நம்பி ஏமாந்து போனதற்கு, தன் தந்தை என்ன செய்வார்? புரியாமல் குழப்பமாய் நின்றிருந்தாள் அவள். கண்கள் கலங்கியது அவளுக்கு. குற்றவுணர்ச்சியின் பிடியில், பதிலேதும் சொல்ல முடியாமல், அவள் தலை கவிழ்ந்து நின்றது, மயில்ராவணன் போட்டிருந்த திட்டங்களுக்கு சாதகமாகவே இருந்தது.

“சொல்லு கவிம்மா! உன்னைப் பெத்த பாவத்துக்கு, இந்த ஊரு முன்னாடி நான் அசிங்கப்பட்டு நிற்கணுமா?”

“இப்போ நான் என்ன செய்ய முடியும்? நீங்க அவமானப் பட்டு நிற்கிறதுக்கு, நான் தான் காரணம்ன்னு எனக்கு புரியுதுப்பா! ஆனால், நான் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கேனே?!” என வேதனையில் விம்மியவளுக்கு தொண்டை அடைத்தது.

“அப்போ அவ்வளவு தானா கவிம்மா? என் பொண்ணா, இந்த அப்பனோட கௌரவத்தைக் காப்பாத்தற கடமையும், பொறுப்பும் உனக்கு இல்லையா?” என அவர் கேட்க, பதில் பேசாமல் சிலையாய் சமைந்து நின்றாள் கவிநயா.

அவளால், தன் தந்தையின் நிலையைப் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆனால் ‘இப்போது என்ன செய்ய முடியும்? மாப்பிள்ளையே திருமணம் வேணாமெனச் சென்ற பிறகு, இவளால் என்ன செய்துவிட முடியும்? நின்று போன திருமணத்தை மீண்டும் நடத்துவது எப்படி சாத்தியமாகும்?’ என்ற கேள்விகளும், அவள் மனதிற்குள் இருந்தது.

“என்னம்மா பதிலே பேச மாட்டேங்கிறே? இந்த அப்பா உனக்காக தானே எல்லாம் செஞ்சேன். எனக்காக சரின்னு ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேங்கிறியே?” என அவர் தாழ்ந்து, தளும்பிய குரலில் வினவ,

“இப்போ எதுவுமே செய்ய முடியாதுப்பா! நின்னு போன கல்யாணத்தை திரும்ப எப்படி நடத்த முடியும்? என்கிட்டே பேசுறதுக்கு பதில், கல்யாணம் நின்னுடுச்சுன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லுறது நல்லது.!” என அவள் பதில் சொன்னாள்.

“அப்போ நான் எல்லார் முன்னாடியும் கேவலப்பட்டு நிற்கணும் அதானே உன் ஆசை? நீ சொன்னங்கிற ஒரே காரணத்திற்காக, அந்த பரதேசி குடும்பத்தையெல்லாம் கூப்பிட்டு பேசினேனே, என் புத்தியை நானே செருப்பால் அடிச்சுக்கணும்.!” என அவர் கோபமாய்க் கத்த,

“இப்போ நான் என்ன தான் செய்யணும்ன்னு சொல்றீங்க?” இயலாமையோடு கேட்டாள் அவள்.

“நீ ம்ம்ன்னு ஒருவார்த்தை சொல்லு போதும்! நான் நடத்திக் காட்டறேன் இந்தக் கல்யாணத்தை! உனக்கென்னடா குறைச்சல்? உன் அழகிற்கும், அறிவுக்கும் ஆயிரம் மாப்பிள்ளை வருவாங்க! அந்த தீபக்கிற்கு உன் அருமை தெரியலை. உன்னோட தகுதிக்கு அவன் சரியானவன் இல்லை கவிம்மா! நீ இந்த மயில்ராவணன் பொண்ணு டா!” என அவர் சொல்ல, கண்ணீர் ஈரம் படிந்த இமைகளை உயர்த்தி, எதிரில் நின்றவரை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“வேணாம்ப்பா! எனக்கு கல்யாணமே வேணாம்!” என அவள் சொல்ல,

“இந்த அப்பனுக்காக நீ எதாவது செய்யணும்ன்னு நினைத்தால், நான் சொல்ற பையனைக் கல்யாணம் பண்ணிக்கோ! நீ எனக்காக வேற எதுவுமே செய்ய வேணாம். பெரிய பெரிய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்ன்னு அம்புட்டு பேரையும் இந்தக் கல்யாணத்திற்கு அழைச்சிருக்கேன். எல்லார் முன்னாடியும் என்னை தலைக் குனிந்து நிற்க வச்சிடாதே! இதன் பிறகும், கல்யாணம் வேணாம்ன்னு சொன்னால், எனக்கு சாகறதைத் தவிர வேற வழியில்லை கவிம்மா!” எனச் சொல்லிவிட்டு கதவைத் திறந்துக் கொண்டு அவர் வெளியே சென்றுவிட, என்ன முடிவெடுப்பதெனத் தெரியாமல் குழம்பி நின்றாள் கவிநயா.

அவர் மிரட்டியிருந்தால், வற்புறுத்தியிருந்தால், கட்டாயப்படுத்தியிருந்தால், சட்டென தூக்கியெறிந்துவிட்டு சென்றிருப்பாள் தான். ஆனால், அவர் உணர்வு ரீதியாய் பேசியது, அவளை உள்ளுக்குள் ஏதோ செய்தது. ஏற்கனவே தீபக்கை நினைத்து மனதளவில், அவள் பலவீனமாய் இருக்க, தன் தந்தை நடத்திக் கொண்டிருப்பது நாடகமெனப் புரியாமல், பெற்ற மகளாய் அவர் கௌரவத்தைக் காக்க முடிவு செய்தாள் பெண். ஆனால், இங்கே நடந்தேறிய அனைத்துமே மயில்ராவணனின் திட்டமிடல் என முன்பே அறிந்திருந்தால், இந்தத் திருமணமே நிகழ்ந்திருக்காதே.. தின் அரசியலில் ஆடும், அதே ஆடுபுலி ஆட்டத்தை தன் பெற்ற பெண்ணின் வாழ்க்கையிலும் ஆடத் தயங்கவில்லை மயில்ராவணன். அவர் ஒரு நல்ல அரசியல்வாதியாய் வென்றுவிட்டார் தான். ஆனால், ஒரு தகப்பனாய் அவர் தோற்றுப் போய்விட்டார்.

ஆனால் அவருக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. அவருக்கு அரசியல்வாதியாய், முதலமைச்சராய் ஜெய்க்க வேண்டும். அது மட்டுமே முக்கியம். மகளின் மனதை வென்று அவருக்குப் பெரிதாய் என்ன கிடைத்துவிடப் போகிறது? அதுவே, தான் நினைத்ததை சாதித்துவிட்டால், அவருக்கு கிடைப்பது அதிகம் தான். அவரின் அழுத்தமான எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது.

******

இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் எனத் தலையாட்டி விட்டாலும், கவிநயாவின் மனம் அனலில் விழுந்த புழுவாய் துடித்துக் கொண்டிருந்தது. யார் மணமகன்? அவள் யாரைத் திருமணம் செய்யப் போகிறாள்? எதுவுமே அவளுக்குத் தெரியாது. தான் எடுத்த ஒற்றை முடிவு தவறாய்ப் போனதும், அவள் மனதிலிருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையும், ஒன்றுமில்லாமல் வடிந்து போயிருந்தது. இந்தத் திருமணத்தை நிறுத்தவோ, அதைத் தவிர்த்துவிட்டுச் செல்லவோ, அவளுக்கு தைரியமில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, குற்றவுணர்வு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று தின்றுக் கொண்டிருந்தது. இன்னொரு அவமானத்தைத் தன் தந்தைக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது என தனக்குள் முடிவு செய்துக் கொண்டாள். தன்னை இந்த இடத்தில் நிறுத்திவிட்டு, காணாமல் போன தீபக்கின் மீது தான் கோபம் கோபமாய் வந்தது. ஆனால், சற்று நிதானமாய், பொறுமையாய் யோசித்திருந்தாலே, தீபக் அப்படி செய்திருக்க மாட்டான் என்பது அவளுக்குப் புரிந்திருக்கும். ஆனால், சரியான திசையில் யோசிக்கக் கூடிய மனநிலையில் தான் அவள் இல்லை.

கலைந்திருந்த ஒப்பனையை, ஒப்பனைக் கலைஞர் திருத்திக் கொண்டிருக்க, சற்று முன்னிருந்த சந்தோஷ மனநிலை சுத்தமாய் வடிய, உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தாள். கண்களில் வெறுமை குடியேறியிருக்க, என்ன நடக்கிறதோ.. நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்திருந்தாள்.
ஒப்பனை திருத்தி, முன்பு அணிந்திருந்த புடவையை மாற்றி, அவளை சேடிப்பெண்கள் அழைத்து வர, தலைக் கவிழ்ந்து நடந்து வந்து, மணமகனாய் வீற்றிருந்த இமயவரம்பனின் அருகில் அமர்ந்தாள். பக்கத்தில் அமர்ந்திருப்பவன் இமயவரம்பன், என்பதைக் கூட அறியாது, அவள் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருக்க, கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இமயனும் அமர்ந்திருந்தான்.

அவன் மனம் முழுதும், அவனின் ஆருத்ரா மட்டுமே நிறைந்திருந்தாள். அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தாமல் விட்ட மடத்தனத்தை காலம் கடந்து நொந்துக்கொண்டான் அவன். ஒருதலைக் காதலாக இருந்தாலும் கூட, தன் ஆராவிற்குச் செய்யும் துரோகமாகவே கருதினான் இமயன். மனம் நிரம்பவே வலித்தது. தன் மனதோடு சுமந்துக் கொண்டிருந்தக் காதல், புதைமணல் படிமங்களைப் போல் தனக்குள் கடைசிவரை புதைந்தே கிடக்கப் போகிறதென்பதை நினைக்கையிலேயே அவன் உயிரோடு செத்துப் போனான்.

ஆயுள் முழுமைக்கும் தனக்கு இந்த செத்துப் பிழைக்கும் போராட்டம் தான் என்பது அவனுக்குப் புரிந்தது.

‘இவ்வளவு ஆழமாய் ஆருத்ராவை விரும்பும் நீ.. இந்தத் திருமணத்தைத் தவிர்த்துவிட்டுச் சென்றிருக்கலாமே?’ கேலியாய் கேள்வி கேட்டு நின்றது அவனது மனசாட்சி.

‘கஷ்டப்பட்ட காலத்தில், நான் கரைசேர, கைக் கொடுத்தவர், காலில் விழுந்த பின் நான் என்ன செய்துவிட முடியும்?’ கசந்த மனதுடன் தனக்குள் பதில் சொல்லிக் கொண்டான் அவன்.
ஆம்! கவிநயாவிடம், நடத்திய நாடகத்தைப் போலவே, இமயனிடம் வேறொரு நாடகத்தை நிகழ்த்தியிருந்தார் மயில்ராவணன்.

தற்போது இருக்கும் நிலையில், தன் கட்சியின் வளர்ச்சிக்கும், தன் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமானவன் இமயன், என்றக் காரணத்தால், அவன் காலிலேயே விழுந்திருந்தார் மயில்ராவணன். அவருக்கு காரியம் ஆக வேண்டுமல்லவா.? நான்கு சுவற்றிற்குள் இவன் காலில் அவர் விழுந்தது யாருக்கு தெரிந்துவிடப் போகிறது? ஆனால், அவர் நினைத்தவை நடந்தேறும் அல்லவா? அதிலும் அரசியல்வாதியான அவருக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?

“முதலமைச்சர். மயில்ராவணன் தலை நிமிர்ந்து நடக்கறதும், நாண்டுக்கிட்டு தொங்கறதும் உன் கையில் தான் இருக்கு இமயன். அந்தத் தீபக் என் பொண்ணு வேணாம்ன்னு ஓடிட்டான். இப்போ உன்னால் மட்டும் தான் என் கௌரவத்தைக் காப்பாற்ற முடியும்.!”

“தீபக் எங்கேன்னு இன்னும் ஒருமணி நேரத்தில் நான் கண்டுபிடிக்கிறேன் சார்! நீங்க கவலைப் படாதீங்க!” என நகரப் போனவனின் கரம் பிடித்து நிறுத்தினார் மயில்ராவணன்.

“என் பொண்ணு வேணாம்ன்னு அவன் சொல்லிட்டான். வலுக்கட்டாயமாய் அவனை இழுத்துட்டு வந்து தாலி கட்ட வைக்கிறது சரியா வராது. என் பொண்ணோட தகுதிக்கு ஏற்ற ஒரே மாப்பிள்ளை நீ மட்டும் தான்!” என அவர் சொல்ல அதிர்ந்து நின்றுவிட்டான் இமயன்.

“ஐயோ சார்.. இதெல்லாம் சரி வராது சார்! உங்க உயரம் வேற.. நான் சாதாரண ஆளு சார். எனக்கு இருக்கிற மதிப்பு மரியாதை எல்லாம் உங்க கூட இருக்கிறதால் மட்டும் தான்.!” எனத் தெளிவாய் சொன்னான் அவன்.

“உன்னை சம்மதிக்க வைக்க வேற வழி தெரியலை இமயன்!” என்றவர், தன்னை விட, வயதில் சிறியவன் என்றும் பாராது இமயனின் காலில் விழுந்திருந்தார்.
இவர் இப்படிச் செய்வார் என்பதைத் துளியும் எதிர்பார்த்திராத இமயனுக்கு, அவர் சட்டென காலில் விழுந்தது பேரதிர்ச்சி தான். பதறி பயந்து, அவரைத் தூக்கி நிறுத்தினான். அவர் இல்லையென்றால், அவன் இப்போதிருக்கும் நிலை சாத்தியமில்லை என்ற நன்றியுணர்வு, அவனைச் சம்மதமாய் தலையசைக்க வைத்தது.

கவிநயாவும், இமயனும் ஆளுக்கொரு மனநிலையில் இருக்க, திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களை கைக்கூப்பி இன்முகத்துடன்இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தார் மயில்ராவணன். அவர் முகத்தில் நினைத்ததை சாதித்து முடித்துவிட்ட பூரிப்பு இருந்தாலும், ஏதோவொரு அதிருப்தியும் இருந்தது.

திடீரென மணமகன் மாறியதைக் குறித்து சலசலப்புகள், எழுந்தாலும், முதலமைச்சர் என்ற அதிகாரம், அனைத்தையும் அமைதியாக்கியது.
அனைத்து சமூக வலைதளங்களும், ஊடகங்களும், திருமணத்தில் நடந்த குளறுபடிகளை மறைத்துவிட்டு, இமயனுக்கும், கவிநயாவிற்கும் திருமணம் என்ற செய்தியை மட்டுமே மாற்றி மாற்றி ஒளிபரப்பு செய்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றையும் நொடிப் பொழுதில் தலைகீழாய் மாற்றியிருந்தார் மயில்ராவணன்.

ஆனால், அவர் அறிந்திராத ஒன்று, இந்தத் திருமணம் தான் அவர் வாழ்நாளில் செய்த பெரிய தவறு என்பதைத் தான். இந்தத் திருமணம் தான், இமயனை அவருக்கு எதிராய் திருப்பப் போகிறதென்பதை அவர் அப்போதைக்கு அறிந்திருக்கவில்லை தான்.

இமயனும், கவிநயாவும், மனதில் ஆயிரம் குழப்பங்கள் சூழ அமர்ந்திருக்க, தீபக்கை தேடிச் சென்றிருக்கும் அர்ஜுன் வருவதற்குள் திருமணத்தை நடத்தி முடித்துவிட வேண்டுமென்பதில் தீவிரமாய் இருந்தார். அதன்படி, அவசரமாய் திருமணச் சடங்குகள் வேகமாய் நடைபெற, ஆளும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தாலியெடுத்துக் கொடுக்க, இறுகிய முகத்துடன், கவிநயாவின் முகத்தை ஏறெடுத்தும் பாராது தாலியைக் கட்டியிருந்தான் இமயவரம்பன்..
தன் ஆராவின் மீதான காதலைத் தனக்குள் புதைத்தபடி..

அதே நேரம், தீபக்கைத் தேடிச் சென்று, அவனைப் பற்றிய தகவலுடன், அர்ஜுன் வந்து சேரவும், இமயன் கவிநயாவின் கழுத்தில் தாலிக் கட்டவும் நேரம் சரியாக இருந்தது. திருமண மண்டபத்தின் வாசலில் வந்திறங்கிய அர்ஜுனுக்கு, கெட்டிமேளச் சத்தம் கேட்கவும், ஒருவேளை தீபக் தான் திரும்பி வந்துவிட்டானோ? திருமணம் முடிந்துவிட்டதோ? என்ற எண்ணம் தான் தோன்றியது. ஆனால், தீபக்கிற்கு பதில், இமயனைப் பார்த்தவன் மொத்தமாய் அதிர்ந்து நின்றிருந்தான். மொத்தமாய் ஸ்தம்பித்த நிலை அர்ஜுனிடம்.

இமயனைப் பார்த்து அதிர்ந்து நின்ற அர்ஜுனைப் பார்த்த பின்பே தன் பக்கத்தில் மணமகனாய் அமர்ந்திருந்தவன் யாரெனப் பார்த்தாள் கவிநயா. தன அருகில் அமர்ந்திருந்த இமயனைப் பார்த்ததும், அவளுக்கும் பேரதிர்ச்சி தான். தன் சகோதரனின் நண்பன் என்ற கண்ணோட்டத்தில் பார்த்திருந்தவளுக்கு, இனி எப்படி அவனை எதிர்க்கொள்வதெனப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.

“என்னப்பா நடக்குது இங்கே? தீபக் எங்கேன்னு தேடிட்டு வர்ரதுக்குள்ளே என்ன பண்ணி வச்சிருக்கீங்க? கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாமே?” எனத் தந்தையிடம் இரகசியமாய் கேள்வி கேட்டான் அர்ஜுன்.

“பொறுமையாய் காத்திருந்தால், ஓடிப் போன பரதேசி வந்துடுவானா.? உன் தங்கச்சிக்கு இமயனை விட நல்ல மாப்பிள்ளை கிடைச்சுடுவானா? எல்லாம் முடிஞ்சுடுச்சு.. நீ எதையாவது சொல்லி குழப்பி விட்டுடாதே! உன் தங்கச்சி வாழ்க்கையில், உனக்கு அக்கறை இருக்கும்ன்னு நினைக்கிறேன்!” என அவர் கேட்டதும், சட்டென அமைதியாகிப் போனான் அர்ஜுன்.

‘இவர் சொல்வதும் உண்மை தான். கவிநயாவிற்கு தேடிப் பிடித்தாலும் இப்படியொரு மணமகன் கிடைக்க மாட்டான் தான். ஆனால், அவள் மனதில் தீபக் இருக்கிறானே.? அதே போல் என் நண்பனின் மனமும் எனக்கு நன்றாகத் தெரியுமே.. அவன் மனதில் இருக்கும் பெண் ஆருத்ரா தானே? இப்படி இருக்கையில் இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? எல்லாம் நடந்து முடிந்த நிலையில், தீபக் கடத்தப்பட்ட விஷயத்தை இமயனிடமும், கவிநயாவிடமும் சொல்வதா? வேண்டாமா? இப்போதைக்கு இதைச் சொல்லாமல் இருப்பது தான், இருவரின் வாழ்க்கைக்கு நல்லதாக இருக்குமா? ஆருத்ராவை மறந்துவிட்டு கவியை இமயன் ஏற்றுக்கொள்வானா?’ என்றக் குழப்பங்களுடன் அமைதியாய் நின்றிருந்தான் அர்ஜுன்.

“நூறுநூறு விரல்களால்
நிலத்தை இறுகப் பிடித்திருக்கும்..

சல்லிவேர் இப்பிரியம்..!

எத்தனை வலுகொண்டு பிடுங்கினாலும்
அறுபட்டு

மண்ணின் நெஞ்சில்
கொஞ்சம் எஞ்சும்!”

(படித்ததில் பிடித்தது)

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்