Loading

அதீதம்-17

தன் கண் முன்னால் வந்து நிற்கும் தீபக்கைப் பார்த்து புரியாமல் விழித்தாள் கவிநயா. என்ன நடக்கப் போகிறதோ? என்ற பயம் மனம் முழுதும் நிறைந்தது.

“இங்கே ஏன்டா வந்தே? உன்கிட்டே என்ன சொன்னேன்?” பயத்தின் அதீதத்தில் கோபம் வேறு வந்து தொலைத்தது அவளுக்கு.

“ஹேய் கவி! நீ என்னென்னவோ சொன்ன? ஆனால் பாரு.. உங்க அப்பாவே நம்ம கல்யாணத்திற்கு சம்மதிச்சுட்டார்.!” என உற்சாகமாய் சொன்னான் தீபக்.

“தீபக்! ப்ளீஸ்.. நீ இங்கிருந்து கிளம்பு.! நான் உன்கிட்டே அப்பறம் பேசறேன்.!” அவனை இங்கிருந்து விரட்ட முயன்றாள் கவிநயா.

“வாட் ஹேப்பண்ட் கவி? என்ன ஆச்சு? எதுக்காக இவ்வளவு பதற்றம்? உங்க அப்பா நம்மை புரிஞ்சுக்கிட்டார் இது போதாதா?!” என்னதான் தீபக் பேசினாலும் கவிநயாவால் தன் தந்தையை நம்ப முடியவில்லை.

அவளுக்கு பயம் நெஞ்சை அடைத்தது. தன் தந்தை தீபக்கை வரவழைத்தது சரியில்லை என உள்மனம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

“ஏன்ம்மா? எதுக்கு இவ்வளவு பயம்? அப்பா தான் தீபக்கை வரச் சொன்னேன்.!” என அவர் சிரித்துக் கொண்டே சொன்னாலும், கவிநயாவால் அவரை நம்ப முடியவில்லை.

“ஏன் கவி, எதுக்கு பயப்படுற? உன் அப்பா தானே?” என தீபக் தன் கை வளைவிற்குள் அவளை இழுத்துக் கொள்ள, தீபக்கின் அரவணைப்பில், கொஞ்சம் அமைதியானாள் கவிநயா.

“இமயன்! நீயாவது சொல்லேன் இந்தப் பொண்ணுக்கு? நான் என்ன அவளுக்கு கெட்டதா செஞ்சுடப் போறேன்.? நான் பெத்த பொண்ணே என்னை நம்ப மாட்டேங்குறா?” என வருத்தமாய் பேசினார் மயில்ராவணன்.
இமயனுக்கு இவரின் வார்த்தைகளை நம்புவதா? வேண்டாமா? எனப் புரியவில்லை. அவர் காலை பேசியதும், அவர் வெளிப்படுத்திய கோபமும் வேறாக இருக்க, இப்போது அவர் சொல்வது வேறாக இருக்கவும், குழம்பித் தவித்து நின்றான் அவன். இதே தீபக்கை கொன்றுவிடும் ஆத்திரம் அவருக்குள் இருந்தது. அதை மறந்து திருமணத்திற்கு சம்மதிக்கும் அளவிற்கு என்ன நிகழ்ந்தது? யோசனைகள் குதிரை வேகத்தில் ஓடியது.

அதே நேரம்,

“என்ன இமயன் நீயும் கல்லு மாதிரி நிற்கிறே? எல்லாத்தையும் விட, என் பொண்ணு வாழ்க்கை பெருசு இல்லையா? என் மகளை விட, எனக்கு எதுவும் முக்கியமில்லை.!” என அவர் சொன்னதைக் கேட்டு, அந்த அறைக்குள் நுழைந்த அர்ஜுனுமே அதிர்ந்து நின்றிருந்தான்.

“இவரு ஊருக்கு முன்னால் கொடுக்கிற அரசியல் வாக்குறுதியையே நிறைவேத்த மாட்டார். இதில் கவி கல்யாணத்தை இவரு நடத்தி வைப்பாருன்னு நாம நம்பணுமா? சும்மா உங்க வாய்க்கு வர்ரதையெல்லாம் சொல்லாதீங்க! இது என்ன புது ட்ராமாவா?!” எனக் கோபமாய்க் கேட்டான் அர்ஜுன்.

“அர்ஜுன்! அரசியலும், தேர்தல் வாக்குறுதியும், உன் தங்கச்சி வாழ்க்கையும் ஒண்ணா? ஏன்டா பைத்தியம் மாதிரி பேசுற? இப்போ நான் என்ன சொல்லிட்டேன்..? உன் தங்கச்சி விரும்பின அந்தப் பையனையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிட்டேன். இன்னுமும் நீ என்னை நம்ப மாட்டியா?” எனக் கேட்டார் அவர்.

“இதுவரை நாங்க நம்பற மாதிரி நீங்க எதாவது செஞ்சுருக்கீங்களா? எதாவது ஒரு விஷயம்? நாங்க என்ன படிக்கிறோம்? எங்களுக்கு என்ன பிடிக்கும்? எது பிடிக்காது? எதுவுமே உங்களுக்கு தெரியாது. குடும்பம்ன்னு ஒண்ணு இருக்குன்னு நினைப்பே இல்லாதவருக்கு, பிள்ளைங்க வாழ்க்கை மேலே இப்போ மட்டும் எங்கிருந்து அக்கறை வந்துச்சு?” தன் மனதிலிருந்த அத்தனையையும் கேள்வியாய் தொடுத்தான் அர்ஜுன்.

“இங்கே பாருடா இமயன்.. என் நிலமையைப் பாரு! இந்த மாதிரி ஒரு நிலை, என் எதிரிக்கும் வரக் கூடாது. பெத்த அப்பனை புள்ளைங்க நம்பாதது எங்காவது நடக்குமா? இவங்க ரெண்டு பேருக்காகத்தான் நேரம் காலம் பார்க்காமல் உழைச்சேன். என் பிள்ளைகளே இப்படி பேசும் போது வேதனையாய் இருக்கு டா! மதுரையில் மூட்டைதூக்கி பொழைப்பு நடத்தினவன் டா நான். இப்போ சொகுசா வாழற இவங்களுக்கு என் கஷ்டம் தெரியுமா? நான் கஷ்டப்பட்டு இம்புட்டையும் சேர்த்து வச்சதெல்லாம் இவங்களுக்காக தானே? என் புள்ளைகளே என்னைப் புரிஞ்சுக்கலையே?” எனத் தொண்டை அடைக்கப் பேசியவர், கண்களில் தேங்கிய கண்ணீருடன் இமயனின் தோளில் சாய்ந்துக் கொண்டார்.

இத்தனை நேரம் அவர் பேசிய பேச்சுக்களை விட, அவரின் ஒற்றைத்துளி கண்ணீர் சரியாக வேலை செய்தது. கண்ணீருடன் தன் தோளில் சாய்ந்திருந்தவரை ஆதரவாய் முதுகில் தட்டி தேற்றினான் இமயன்.

“சார்! நீங்க கவலைப்படாதீங்க! எம்புட்டு பெரிய மனுஷன் நீங்க? நீங்க போய் கண் கலங்கலாமா? உசிரு மட்டும் தான் மிச்சம்ன்னு இருந்த நேரத்தில், நீங்க மட்டும் இல்லன்னா நான் இந்த நிலையில் இப்படி நின்னுருக்க மாட்டேன். கடனில் மூழ்கி என்னைக்கோ செத்துருப்பேன். நீங்க கண்ணு கலங்கறதைப் பார்க்கையில் சங்கடமா இருக்கு சார்.! இப்போ என்ன இந்தக் கல்யாணம் நீங்க நினைச்சபடி கோலாகலமா நடக்கணும். அம்புட்டு தானே? நல்லபடியா நடக்கும்! நான் பேசுறேன் அர்ஜுன் கிட்டேயும், கவி கிட்டேயும்!” என உறுதியாய் இமயன் சொல்ல,

“நீ வாக்கு கொடுத்திருக்க இமயன்! என் பொண்ணு கல்யாணம், எனக்குப் பிடிச்ச மாதிரி நடக்கணும். அதற்கு நீ தான் பொறுப்பு!” என முகத்தை சோகமாய் வைத்தபடி சொன்னார் அவர். அவர் மீதிருந்த விசுவாசத்தில், கொஞ்சமும் யோசிக்காமல், உணர்ச்சியின் வேகத்தில், அவர் கரத்தின் மீது, தன் கரம் வைத்து சத்தியம் செய்திருந்தான் இமயன்.

அவன் யோசிக்காமல் செய்த இந்த ஒருவிஷயம் தான், அவன் வாழ்க்கையையே தலைகீழாய் மாற்றப் போகிறதென்பதை முன்னமே அறிந்திருந்தால், இதைச் செய்திருக்க மாட்டானோ என்னவோ?
தான் நினைத்த காரியத்தை சாதித்ததும், அமைதியாய் முகத்தை சோகமாய் வைத்தபடியே மயில்ராவணன் வெளியேறியிருக்க,

“அந்த ஆளைப் பற்றி உனக்கு தெரியாது டா! இது எல்லாமே ட்ராமா!”

“இருக்கட்டுமே அர்ஜுன்! ஆனால், அவர் கவிக்கு பிடிச்ச பையனையே தானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றார்! வேற பையனைக் கல்யாணம் பண்ண சொல்லி கட்டாயப்படுத்தலையே?!” எனக் கேட்டான் இமயவரம்பன்.

அர்ஜுன் புரியாமல் யோசனையோடு நிற்க,

“அர்ஜுன்! நல்லா யோசிச்சு பாரு! நமக்கு நாம நினைச்சது நடக்கணும். எனக்கு தெரிஞ்சவரை, உங்க அப்பா, அவர் கௌரவம் பாதிக்கப்பட்டுட கூடாதுன்னு தான், அவரே நடத்தறதா சொல்றார். நாம இந்த வாய்ப்பை தவறவிட வேணாம்ன்னு நான் சொல்றேன்.!” என இமயன் சொல்வது சரியாக இருந்தாலும், மனதின் ஒரு ஓரத்தில், ஏதோவொன்று நெருடியது.

“ம்ப்ச் புரியுது டா! நீ எங்களுக்காக யோசிக்கிறன்னு புரியுது. பட், இவரைத் தான் நம்ப முடியலை!” என யோசனையோடு சொன்னான் அர்ஜுன்.

“ஹேய் கவி! என்ன தான் நடக்குது இங்கே.? உன் அப்பா அவரே கூப்பிட்டு கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்னு சொல்றார், இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு? எனக்கு ஒண்ணுமே புரியலை. நீ சொன்ன அளவிற்கு உங்க அப்பா கெட்டவர் மாதிரி எனக்கு தெரியலையே?” என தீபக் சொல்ல,

“தீபக்! இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்படியே பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம். நீங்க கவலைப்படாதீங்க! சார் கிட்டே பேசறதுக்கு உங்க அம்மா அப்பாவை வரச் சொல்லுங்க! மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.!” என தீபக்கை சமாதானப்படுத்தி அனுப்பினான் இமயன்.

“இமயன்! இதெல்லாம் சரியா வருமா? எனக்கென்னமோ நடக்குறதெல்லாம் சரியா படலை!” என அர்ஜுன் சொல்ல,

“உங்க அப்பா கூடவே நான் இருக்கப் போறேன். அப்படியிருக்கும் போது, எனக்குத் தெரியாமல், என்ன நடந்துடப் போகுது? அவர் கண்டிப்பா தன் பொண்ணோட கல்யாணம், ரெஜிஸ்டர் ஆஃபீஸில் நடக்கறதை விரும்பமாட்டார். நல்லா யோசிச்சு பாரு, ஒரு முதலமைச்சரோட பொண்ணு கல்யாணம், யாருக்கும் தெரியாமல், இரகசியமா நடக்கறதை விரும்புவாரா? ஊரு மெச்ச கல்யாணம் பண்ணணும்ன்னு தான் இவ்வளவு தூரம் அவர் இறங்கி வந்திருக்கிறார். இதை நாம தவற விட வேண்டாம்ன்னு தான் நான் நினைக்கிறேன்.!” எனச் சொன்னான் இமயன்.

இமயனைப் பொருத்தவரை, மயில்ராவணன் வெளியில் ஆயிரம் விஷயங்கள் நியாயம் பார்க்காமல், அவர் நோக்கத்திற்குசெய்தாலும், அவன் விஷயங்களில் இதுவரை சரியாகத்தான் இருந்திருக்கிறார். அவன் கேட்காமலே நிறைய முறைகள் பணவுதவி செய்திருக்கிறார்.

அப்படியிருக்கையில், இந்த விஷயத்தில் மட்டும் தன்னை ஏமாற்றிவிடுவாரா? என்ற நம்பிக்கையும் அவர் மீது அவனுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் அவன் அர்ஜுனிடம் பேசியதும் கூட.. ஆனால், இமயன் மயில்ராவணன் கைதேர்ந்த அரசியல்வாதி என்பதை அந்தநொடி மறந்து போனான்.

நம் பார்வைக்கு நல்லவர்களாக தெரியும் எவரும், இறுதிவரை அதே பிம்பத்தோடு இருப்பதில்லை. நாம் பார்க்கும் கோணம் மாற மாற காட்சிகளும் மாறத்தான் செய்கின்றன. அதே போல் தான், அவரின் சிரித்த முகத்தையே பார்த்த இமயனுக்கு, அவருக்குள் இருக்கும், இன்னொரு முகம் பற்றி தெரியவில்லை. அதை அவர் வெளிக்காட்டியதும் இல்லை.

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் இமயன். ஒருவேளை நாம நினைச்சது நடக்கலைன்னா என்ன செய்யறது?” எனக் கேட்டாள் கவிநயா. அதற்கு இமயனிடம் பதில் இல்லை. ஏனென்றால், இமயன் கண்ணுக்குத் தெரியாமல் அவர் செய்திருக்கும் விஷயங்கள் ஏராளம். கொஞ்சம் ஜாதியின் மீது பிடித்தம் உள்ளவராய் இருந்தாலும் கூட, இமயனைப் பொருத்தவரை அவர் நல்லவர். ஆனால், அவர் அவனிடம் காட்டிக் கொண்டிருக்கும் பிம்பம், சில்லு சில்லாய் நொறுங்கப் போகும் காலம், வெகுதொலைவில் இல்லை என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

“இப்போ என்ன சொல்ல வர்ரீங்க.. பத்திரிக்கையில் மட்டும் பேரைப் போட்டுட்டு, உங்களை வேற யாருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருவாங்கன்னு நினைக்கிறீங்களா?” எனக் கேட்டவன் கவிநயா பதில் சொல்லாது நிற்கவும் அவனே தொடர்ந்தான்.

“கல்யாண வேலைகள் நடக்கத் துவங்கும் போது, உண்மை தெரிந்துவிடாதா? பத்திரிக்கையில், கவியோட பேரும், தீபக்கோட பேரும் தான் இருக்கப் போகுது. கல்யாணத்திற்கு துணி எடுக்கிறதில் இருந்து, தீபக் வீட்டு ஆளுங்களை கூப்பிடுறதுன்னு எவ்வளவோ இருக்கு, அப்படியிருக்கையில், பத்திரிக்கையில் ஒருத்தர் பேரைப் போட்டுட்டு, இன்னொருத்தருக்கு கட்டி வைப்பாங்களா.? உங்க அப்பா சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட, கௌரவம் பார்ப்பவர், அவர் எப்படி இப்படி ஒன்றைச் செய்ய நினைப்பார்.? அப்படியே ஏதாவது தப்ப்பாக நடந்தால், அதைச் சரி செய்ய வேண்டியது என் பொறுப்பு!” என அவன் சொன்னது, கவிநயாவிற்கு மட்டுமல்ல, அர்ஜுனிற்கும் கூட சரியாகத்தான் பட்டது.

இமயன் சொல்வதைப் போல், ஊரறிய இவன் தான் மாப்பிள்ளை எனச் சொன்ன பின், அதை எப்படி மாற்ற முடியும்? ஊரெல்லாம் தெரிந்த பிறகு, திருமணம் நடந்து தானே தீரும்.. என்ற எண்ணம் அவர்களுக்குள் வலுப்பெற்றிருந்தது.

******

நாட்கள் அதன்போக்கில் நகர்ந்தன. மயில்ராவணன் செய்த ஒவ்வொரு விஷயமும், இந்த திருமணம் கட்டாயம் நடக்கும், என்ற ஆழமான நம்பிக்கையை கவிநயாவிற்குள் விதைத்திருந்தது. ஒவ்வொரு விஷயத்திற்கும், பெண்ணின் விருப்பத்தைக் கேட்டு கேட்டு செய்தார். நிஜமாகவே என் தந்தை தான் எனக்காக செய்கிறாரா? என்ற சந்தேகத்தோடு மகிழ்ச்சியையும் சேர்த்தே அவளுக்கு தந்தது.

தீபக்கின் பெற்றோரை அழைத்து, மரியாதையோடு அவர்களிடம் பேசி, நாள் குறித்தது தான் அவர் செய்த முதல் விஷயம். முதலில் தன் தந்தையை சந்தேகக் கண்ணோடு தான் பார்த்தாள் கவிநயா. இவர் யாரிடமும் இறங்கிப் போகும் இரகமில்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

“ஏம்ப்பா, இதெல்லாம் நிஜமாவே எனக்காக செய்றீங்களா? இல்லை நடிப்பா?” தந்தையிடமே நேரடியாய் கேட்டாள் அவள்.

“என்ன கவிம்மா இப்படி பேசுற? நீ என் ஒரே பொண்ணுடா.! உனக்காக நான் இதைக் கூடச் செய்ய மாட்டேனா? உன் சந்தோஷம் தானே என் சந்தோஷமும். கல்யாணப் பொண்ணு, எதையுமே யோசிக்காமல் சந்தோஷமா இருடா கண்ணு!” அவர் சொன்னதில் முழு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, அவர் பேசிய விதம் அவளை நம்ப வைத்தது.

‘ஒருவேளை நான் தான் சந்தேகப்படுகிறேனோ.?’ என்றெல்லாம் கூட அவளுக்குத் தோன்றியது.
ஆனால், அதன் பின் நடந்த விஷயங்களும் கூட, தந்தையின் மீதான அவளின் நம்பிக்கையைக் கூட்டுவதாகவே இருந்தது.

“இமயன்! எல்லாமே தரமா இருக்கணும்! நம்ம வீட்டுக் கல்யாணத்தோடுடோ முழு பொறுப்பும் உன்னோடது தான். நம்ம மதுரையில் கல்யாணம் நடந்தால், எப்படி இருக்குமோ, அப்படி இருக்கணும். குறைன்னு ஒண்ணு இருக்கவே கூடாது. சைவம், அசைவம்ன்னு தனித்தனியாய் பந்தி போடணும். என்ன என்ன வெரைட்டின்னு லிஸ்ட் போட்டுட்டு சொல்லு!” என இமயனைப் பணித்தார் அவர்.
சென்னையிலேயே மிகப் பெரிய திருமண மண்டபத்தை முன்பதிவு செய்திருந்தார். எல்லாமே கவிநயாவின் விருப்பத்தின் பேரில், அவளுக்குப் பிடித்த வகையில் ஏற்பாடு செய்வதைப் பார்த்து அவளுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

திருமண மண்டபத்தின் அலங்காரங்களில் கூட, அவள் விருப்பத்தைக் கேட்க, நிஜமாகவே அதிர்ந்து போனாள் கவிநயா.
இதற்கு நடுவில், கவிநயாவின் அன்னை ராதிகா வேறு, இந்தத் திருமணத்திற்கு தடையாய் இடையில் வந்து நின்றார்.

“எவனோ அண்ணாடங்காச்சிக்கு இவளைக் கட்டி வைக்கிறதுக்கு எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்?”

“ஏய்! அது யாராக இருந்தாலும் நம்ம வீட்டு மருமகன். மரியாதையாய் பேசக் கத்துக்கோ!” மனைவியை அதட்டினார் மயில்ராவணன்.

“இந்த வீட்டு மருமகனாகிறதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும். அதெல்லாம் அவன்கிட்டே இல்லை. இவ்வளவு பெரிய மண்டபத்தில் கல்யாணம் வைக்கிற அளவிற்கு அவன் தகுதியானவனா.? அவன் அந்த மண்டபத்து வாசலை மிதிச்சுருப்பானா?” எனக் கணவனிடம் காய்ந்தவர்,

“இவருக்கு தான் அறிவில்லைன்னா உனக்குமா அறிவில்லை? வெளிநாட்டுக்கு போனோமா, படிச்சோமா.. வேலை பார்த்தோமான்னு இருக்கிறதை விட்டுட்டு, காதல் கண்ணராவின்னு கண்டதையும் பண்ணிட்டு வந்து நிற்கிறே? என்னதான் நினைச்சுட்டு இருக்கே?” என மகளிடமும் பேசினார்.

“ம்மா! எனக்கு இவ்வளவு ஆடம்பரமா கல்யாணமெல்லாம் வேணாம். இப்படி பண்ணுங்கன்னு நான் யார்க்கிட்டேயும் கேட்கவும் இல்லை. ஜஸ்ட் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு தான் நான் நினைச்சிருந்தேன். பட், அப்பா தான்..!” என அவள் இடைநிறுத்தி தந்தையைப் பார்த்தாள்.

“நீயெல்லாம் படிச்சுருக்கியா கவி! நீ இந்த மாநிலத்தோட முதலமைச்சரோட பொண்ணு டி! நம்ம ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டி போகும் போதும், நம்மோட வாழ்க்கைத்தரம் உயரணும். இப்படியொரு ஹை-க்ளாஸ் லைஃபில் இருந்துட்டு, இன்னும் கீழே போகணும்ன்னு நினைக்கிறியா? உன்னோட வாரிசுகளுக்கு, சாதாரண மிடில் க்ளாஸ் லைஃபை தான் கொடுக்க போறியா.? காதல் கண்ணராவியெல்லாம் காசு இல்லாமல் ஒண்ணுமே இல்லை டி!” என மகளின் மனதை மாற்ற முயன்றார் ராதிகா.

“ராதிகா! சும்மா இரு! அவள் கல்யாணத்திற்கு அப்பறமும் நம்ம வீட்டில் தான் இருக்கப் போறா! அவளுடைய வாழ்க்கைத் தரம் ஒண்ணும் குறைஞ்சு போய்டாது. அவள் ஆசைப்பட்டதை அவள் செய்யட்டும் விடு.!” எனச் சொன்னார் மயில்ராவணன்.

“என்னங்க பேசுறீங்க? எவனோ ஒருத்தனை மாப்பிள்ளைன்னு கூட்டிட்டு வந்து நடு வீட்டில் உட்கார வைக்க நான் விட மாட்டேன். இந்தக் கல்யாணத்திற்கு நான் வரவும் மாட்டேன்!” என சொல்லிவிட்டு கோபமாய் வெளியேறியிருந்தார் ராதிகா.
“ப்பா! நான் கல்யாணத்திற்கு பிறகு இங்கெல்லாம் இருக்க மாட்டேன்ப்பா! நான் தீபக் கூட யு.எஸ் போய்டுறேன். என்னால் இங்கே இருக்க முடியாது. அது தீபக்கிற்கு மரியாதையாய் இருக்காது!” என கவிநயா தன் தந்தையிடம் சொல்ல,

“அதெல்லாம் சரி வராது கவிம்மா! ஒண்ணும் இல்லாதவங்க வீட்டுக்கு உன்னை அனுப்பிட்டு, நாங்க என்னவோ, ஏதோன்னு இருக்க முடியாது! நீ மாப்பிள்ளைக்கிட்டே பேசும்மா! நம்ம வீட்டில் என்ன குறை? வசதி இல்லையா? பணம் இல்லையா? எல்லாமே தேவைக்கு அதிகமாவே இருக்கு. முதலமைச்சர் வீட்டோட மாப்பிள்ளைன்னு சொல்றதுக்கு அந்தப் பையன் கொடுத்து வச்சிருக்கணும்.! நீ பேசிட்டு என்னன்னு சொல்லும்மா!” என அவர் சொல்ல,

“ப்பா.. அதெல்லாம் சரி வராது.!” அவள் சொல்ல வர,
“உன்னால் பேச முடியலைன்னா சொல்லு நான் பேசறேன். ஒண்ணும் இல்லாதவங்களுக்கு, வீட்டோட மாப்பிள்ளையாய் இருக்க கசக்குமா என்ன?” என அவர் சொன்ன வார்த்தை சுருக்கென கவிநயாவின் நெஞ்சைத் தைத்தது. ஆனால், அவர் சொன்னதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்துக் கொள்ளாமல், தன் மீது அவர் வைத்திருக்கும், பாசமாகவும், அக்கறையாகவும் நினைத்தது தான், அவள் செய்த தவறு.

******

“என்ன ஆச்சு கவி? ஏன் ஒருமாதிரியாய் இருக்க?” எனக் கேட்டபடி வந்தான் அர்ஜுன்.
அவளோ யோசனையோடு பால்கனியில் அமர்ந்தபடியே இருளை வெறித்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் கவி! உன்னைத் தான் கேட்கிறேன். என்ன ஆச்சு?!”

“அர்ஜுன்! எனக்கு எதுவோ, சரியாப் படலை டா! கொஞ்சம் பயமா இருக்குடா! எதாவது தப்பா நடந்துடும்ன்னு தோணிட்டே இருக்கு.!”

“ஏய்.. எதுக்கு இப்படியெல்லாம் யோசிக்கிறே? எல்லாமே சரியாகத் தானே நடக்குது! அப்பறம் என்ன.? நான் கூட இமயன் சொன்னப்போ நம்பலை. ஆனால், கௌரவத்திற்காக இவர் இவ்வளவு தூரம் பண்ணுவாருன்னு நான் நினைக்கவே இல்லை!”

“அது தான்டா எனக்கு சந்தேகமா இருக்கு. எல்லாமே சரியா நடக்கிறது தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு அர்ஜுன். எல்லாமே என் விருப்பத்தோட, எனக்கு பிடிச்ச மாதிரி நடக்குது. அதிலேயும் அப்பா ஒவ்வொரு விஷயத்திற்கும், என்னைக் கேட்டு தான் எல்லாம் செய்யறார். சில நேரம் இதெல்லாம் கனவோன்னு தோணுது”

“ஒருவேளை, நிஜமாகவே அவருக்கு உன் மேல் பாசமோ என்னவோ?!”

“இந்தப் பாசம் இத்தனை நாள் எங்கே டா போச்சு? உனக்கு ஞாபகம் இருக்கா? தீபக் விஷயம் தெரிஞ்சப்போ எப்படி கோபப்பட்டு திட்டினார். நீயும் பார்த்துட்டு தானே இருந்தே.? இப்போ இதெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை!” என தன் மனதிலிருப்பவற்றைக் கொட்டினாள் கவிநயா.
அர்ஜுனுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், பெண் தன்னை மீறி சென்றுவிடுவாள் என்ற பயம் தான் அவரை இத்தனையும் செய்ய வைக்கிறது. மகள் ஓடிப் போய்விட்டாள் என்ற அவமானத்தை அவர் நிச்சயம் விரும்பமாட்டார் என்பதையும் உணர்ந்தே இருந்தான் அர்ஜுன்.
“கவி! இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம்! எதையும் மனசுக்குள் போட்டு குழப்பிக்காதே! எல்லாமே நல்லபடியா நடக்கும். அவருக்கு பிடிக்கலைன்னா எதுக்கு இவ்வளவு மெனக்கெட்டு செய்யப் போறார்.? ரொம்ப யோசிக்காமல் போய் தூங்கு. நீ ஆசைப்பட்ட வாழ்க்கைக் கிடைக்கப் போகுதேன்னு சந்தோஷமா இரு!” எனத் தேற்றிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அர்ஜுன்.

*****

“நான் சொன்னதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கா?”

“அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு சார்!”

“யாருக்கும் சந்தேகமே வராமல் செய்யணும். எல்லாமே தற்செயலாய் நடந்த மாதிரி இருக்கணும். எதாவது சொதப்பிச்சு நீங்க தொலைஞ்சீங்க சொல்லிட்டேன்.!” என எதிரில் நின்ற நால்வரையும் மிரட்டிக் கொண்டிருந்தார் மயில்ராவணன்.

“யாருக்கும், எந்தச் சந்தேகமும் வராது சார்! நாங்க பார்த்துக்கிறோம்!”

“பார்த்து டா! இப்போவெல்லாம் மூலைக்கு மூலை சிசிடிவி மாட்டி வச்சிருக்காணுங்க! எதிலேயும் சிக்கிராதீங்க!”

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் சார்.! நீங்க கவலைப்படாதீங்க!”

“அதே மாதிரி, நீங்க ஒருவேளை மாட்டிக்கிட்டால், என் பேரு வெளியே வரவே கூடாது. தப்பித் தவறி வந்துச்சு. நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க!”

“இதெல்லாம் நீங்க சொல்லித்தான் தெரியணுமா சார்? வந்த தடமே தெரியாமல், வேலையை முடிச்சுட்டு போய்ட்டே இருப்போம். நம்ம தொழில் சுத்தத்தைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே?”

“தெரிஞ்சு தானே உங்களை வரச் சொன்னேன்.! நான் அனுப்பின ஃபோட்டோ வந்துச்சு தானே? ஆளைச் சரியா பார்த்துக்கோங்க! ஆளை மாத்திடாதீங்க!”

“இன்னா சார் நீங்க.. நம்மளைப் பத்தி தெரிஞ்சும், நம்பிக்கை இல்லாத மாதிரி பேசுறீங்க? நம்புங்க பாஸ்..!” இத்தனை நேரமாய் மற்ற மூவரும், மாற்றி மாற்றி பதில் சொல்லிக் கொண்டிருக்க, முதன்முறையாய், அந்த நால்வரில் தலைவன் போல் இருந்த ஒருவன் தன் தகரக் குரலில் சொல்ல,

“எல்லாம் தெரியும்ய்யா! நீ யாரு.? உன் பின்ணணி என்ன? உன்மேல் எத்தனை கேஸ் இருக்கு எல்லாமே எனக்கு தெரியும். நீ சரியா இருக்கிற வரை தான் நானும் சரியா இருப்பேன். எதாவது தப்பாச்சு, என்கவுண்டரில் போய்ச் சேர வேண்டியது தான்.!” சிரித்துக் கொண்டே மறைமுகமாய் மிரட்டினார் மயில்ராவணன்.

“உங்களைப் பத்தி தெரியாதா சார்? சரியா செஞ்சு முடிச்சுட்டு சொல்றோம் சார்.! அப்படியே அந்தப் பணம் அட்வான்ஸா கொஞ்சம் கொடுத்தீங்கன்னா..?” என அவன் நிறுத்த,

“வேலை முடிஞ்ச மறு நிமிஷம், எதாவது அன்நோன் அக்கௌண்ட்டிலிருந்து, உன் அக்கௌண்ட்டுக்கு பணம் வரும்! நீங்க இப்போ போகலாம்!” எனச் சொன்னவரின் முகம் முழுதும் புன்னகை நிரம்பியிருந்தது.
தான் நினைத்ததை சாதித்தே பழக்கப்பட்டவர், மகள் விஷயத்தை அத்தனை எளிதாய் விட்டுவிடுவாரா என்ன?

“கவிம்மா! இந்த அப்பா உனக்கு பிடிச்ச எல்லாமே பார்த்து, பார்த்து செய்யறதுக்குக் காரணம் என்னன்னு தெரியுமா? மத்ததெல்லாம் உனக்கு பிடிச்ச மாதிரி இருந்தாலும், உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை எனக்குப் பிடிச்சவனாகத்தான் இருப்பான்.!”

எனத் தனக்குள் சொன்னபடியே சத்தமாய் சிரித்தார். அந்த அறை முழுதும், அவரின் அசுரச் சிரிப்பு எதிரொலித்த அதே நேரம், தன் அறையில், திருமணக் கனவுகளோடு, ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் கவிநயா. அவளின் எதிர்காலம், தன் தந்தையால் தீர்மானிக்கப்பட்டதை அறியாமல்..

“உன் மீது நான் கொண்டுள்ள காதல்..

பெருந்திணைக் காதலாகவே இருந்துவிட்டுப் போகட்டும்..!

பணத்தால்.. நிறத்தால்.. உயரத்தால்..

உடலமைப்பால்.. நான் உனக்குப் பொருந்தாதவனாய் இருக்கலாம்..

என்னளவிற்கு உன் மனதிற்குப் பொருத்தமானவன்..
இவ்வுலகில் இல்லவே இல்லை..!”

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்