
அதீதம்-16
அன்று..

இமயவரம்பன் மயில்ராவணனிடம் பணிக்குச் சேர்ந்து சில ஆண்டுகள் கடந்திருந்தது. பணம் எனும் மந்திரக் கோல் கொண்டு, உழைப்பு எனும் மந்திரத்தால் இழந்த அனைத்தையும் மீட்டிருந்தான். அவன் குடும்பமும் ஓரளவிற்கு நல்ல நிலைக்கு வந்திருந்தது.
மயில்ராவணனிடம் சேர்ந்த கொஞ்ச காலத்திலேயே, அவருக்கு மிகவும் நெருக்கமாய், அவர் வீட்டில் ஒருவனாய் மாறிப் போயிருந்தான் இமயன். அதோடு கூட, மயில்ராவணனின் மகனான அர்ஜுனும், இமயனும் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். உயிர் நண்பர்கள்.
அர்ஜுனின் அன்னை ராதிகாவிற்கு மட்டும் தான் இமயனைப் பிடிக்காது. நம்மிடம் பணி செய்பவனை அவனுக்கான எல்லையில் நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு. ஆனால் ராதிகாவைத் தவிர மற்றவர்களோடு, இமயனுக்கு நல்ல பிணைப்பு இருந்தது. அவன் தன் வீட்டில் இருப்பதை விட, மயில்ராவணன் வீட்டில் இருப்பது தான் அதிகமாக இருந்தது.
இப்படி எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த இதே தருணத்தில் தான், ஆருத்ரா தன் படிப்பை முடித்துவிட்டு, பணிக்காக சென்னைக்கு சென்றிருந்தாள். ஆருத்ராவின் படிப்பு முடிந்து விட்டது. அவள் தாத்தாவிடம் பேச வேண்டுமென அவன் நினைத்திருந்த அந்த தருணத்தில் தான் அவன் நினைத்திராதவை எல்லாம் நடந்தேறியது.
அன்று காலைப் பொழுது என்னவோ, இமயனுக்கு நன்றாகத்தான் விடிந்தது. அவன் தன் உடற்பயிற்சியை முடித்துவிட்டு, திரும்பிய நேரம், முதல் அழைப்பே மயில்ராவணனிடமிருந்து தான் வந்திருந்தது. மயில்ராவணனிடம் சேர்ந்த சில வருடங்களிலேயே அவருக்கு மிகவும் நெருக்கமாய், அவரின் அந்தரங்க உதவியாளராய் மாறிப் போயிருந்தான் இமயவரம்பன்.
வெளியிலிருந்து பார்ப்போருக்கு இவன் அரசியலுக்கு சம்மந்தமே இல்லாதவனைப் போலத்தான் தெரியும். ஆனால், மயில்ராவணன் எடுத்த ஒவ்வொரு முடிவுகளின் பின்னாலும் இமயனின் ஆலோசனை இருந்தது.
மயில்ராவணனிடமிருந்து அழைப்பு வந்ததும், அவசரமாய் ஏற்று காதில் வைத்தான் இமயன்.
“சொல்லுங்க சார்! வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன். இதோ கிளம்பிட்டேன்.!” என அவன் சொல்ல,
“சீக்கிரம் வா இமயன்! உனக்காகத்தான் காத்திருக்கேன்.! இங்கே ஒரு பெரிய பிரச்சனை!” என்றவரின் குரலில் லேசான தடுமாற்றம் தெரிந்தது.
“என்னாச்சு சார்? கட்சி சம்மந்தமா எதாவது விஷயமா? நம்ம ஆட்கள் யாரையாவது வரச் சொல்லட்டுமா?!” அக்கறையாய் கேட்டான் இமயன்.
“ம்ப்ச்! இது நம்ம வீட்டு விஷயம் டா! நீ மட்டும் வா போதும்!” என இரகசியமாய் அவர் அழைக்க புரியாமல் யோசனையோடே கிளம்பினான் அவன்.
‘இதுவரை இப்படி என்னை தனிப்பட்ட விஷயங்களுக்கு அழைத்தது இல்லையே? மேலோட்டமாய் குடும்ப விஷயங்கள் பேசினாலும் கூட, பெரும்பாலும் கட்சி சார்ந்த விஷயங்களாக மட்டுமே தான் இருக்கும். அப்படியிருக்கையில், இது என்னவாக இருக்கும்?!” என்ற யோசனையோடு, தன் வீட்டிலிருந்து, மதுரையில் மயில்ராவணன் குடும்பத்தோடு தங்கியிருக்கும் வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தினான். மூன்று நாட்களுக்கு முன்பாகத் தான், ஊர் திருவிழாவிற்காக குடும்பத்தோடு, மதுரை வந்து இறங்கியிருந்தார் மயில்ராவணன்.
இந்தச் சூழ்நிலையில் எதற்காக தன்னை அழைத்திருக்கிறார் என்பதும் அவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை.
யோசனைகளோடே வாகனத்தைச் செலுத்தியவன், மயில்ராவணனின், வீட்டை, அடுத்த அரைமணி நேரத்தில் வந்தடைந்திருந்தான். வாகனத் தரிப்பிடத்தில், வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழே அவன் இறங்கிய நொடி, மனதிற்குள் ஏதோவொரு இனம் புரியாத உணர்வு வியாபித்திருந்தது. அமைதியாய் வேக எட்டுகள் வைத்து உள்ளே நடந்தான்.
இவனை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த காவலாளி, பவ்யமாய் கதவைத் திறந்துவிட, உள்ளே நுழைந்தான் இமயவரம்பன்.
அந்தப் பெரிய கூடத்தைக் கடந்து, உள்ளே நுழைந்தவனின் கண்கள் மயில்ராவணனைத் தேட, அவரோ உணவு மேஜையில் அமர்ந்திருந்தார்.
“வா! வா! இமயன்.. உனக்காகத்தான் காத்திருக்கேன்.!” என இமயனைப் பார்த்து அழைத்தவர் தன் பக்கத்திலேயே இருத்திக் கொண்டார். இமயனைப் பார்த்ததும், மயில்ராவணனின் மனைவி ராதிகா கோபமாய் எழுந்து சென்றுவிட, சங்கடமாய் அங்கே அமர்ந்திருந்தான் இமயன்.
“நீ விடு.. இமயன்! அவளுக்கு நான் உன்னைக் கூப்பிட்டுட்டேன்னு கோபம். குடும்ப விஷயத்தில் உன் ஆலோசனையை நான் கேட்கிறது அவளுக்கு பிடிக்கலை! ரொம்பவே முக்கியமான விஷயம். நீ முதலில் சாப்பிடு! நான் சொல்றேன்.!” என அவர் சொல்ல, கேள்வியாய் எதிரே அமர்ந்திருந்த அர்ஜுனைப் பார்த்தான் இமயவரம்பன்.
‘என்ன பிரச்சனை டா?!’
சைகையாலேயே இமயன் அர்ஜுனிடம் வினவ, அர்ஜுனோ கண்களால் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த கவிநாயாவைக் காட்டினான்.
என்ன விஷயமென்பது புரியாமல் குழப்பமாய் அமர்ந்திருந்த இமயனின் விழிகள் கவிநயாவின் முகத்தை ஆராய்ந்தது. அவள் கண்களோ கலங்கி சிவந்திருக்க, முகமோ வாடிப் போயிருந்தது. கவியின் முகத்தை வைத்தும், அவள் உணவை அளைந்துக் கொண்டிருந்ததை வைத்தும், ஓரளவிற்கு விஷயத்தை யூகித்திருந்தான் இமயன். இந்தப் பிரச்சனையாகத்தான் இருக்கும் என யூகிப்பதில் அவனுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.
அதுவொன்றும் கடினமான காரியம் இல்லையே? கவிநயாவிடம் அவன் அதிகமாய் பேசியது இல்லை என்றாலும், அவள் பிடிவாதம் பற்றி அவனுக்கு தெரிந்திருந்தது. இப்போதும் கவிநயாவின் கண்களில் பிடிவாதம் தான் அவனுக்குத் தெரிந்தது.
“என்ன ஆச்சு டா?” இரகசியமாய் வாயசைத்து, அர்ஜுனிடம் வினவினான் அவன்.
“லவ் மேட்டர் டா!” என அர்ஜுன் சொல்ல, தான் யூகித்தது சரி தான், தனக்குள்ளேயே யோசித்தவன், அமைதியாய் உண்ணத் துவங்கினான். காலை உணவை முடித்துவிட்டு, அமைதியாய் மயில்ராவணன் முன்னால் அமர்ந்திருந்தான் இமயன்.
“நான் சொல்லாமலே வீட்டுச் சூழ்நிலையை வச்சே உனக்கு என்னன்னு புரிஞ்சுருக்கும்!” எனப் பேச்சைத் துவங்கினார் மயில்ராவணன்.
“இருக்கலாம் சார்! ஆனால், நாம யூகிப்பதெல்லாம் சரியாகத்தான் இருக்கணும்ன்னு கட்டாயம் இல்லையே?” என அவன் கேட்க,
“வேற என்ன பிரச்சனை? லவ் தான் பிரச்சனையே! கவி அவள் படிச்ச இடத்தில் ஏதோவொரு பையனை லவ் பண்ணிட்டேன்னு வந்து நிற்கிறா! இப்போ என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியலை இமயன்.!” வருத்தமும் குழப்பமும் அவர் குரலில் தெரிந்தது.
“பையன் நல்லப் பையனாய் இருந்தால், சரின்னு சொல்ல வேண்டியது தானே சார்? உங்கப் பொண்ணு பிடிவாதம் தான் உங்களுக்குத் தெரியுமே? வாழப் போறது அவங்க தானே?”
“அது எப்படி சரியா வரும் இமயன்? நம்ம ஸ்டேடஸ்க்கு அந்தப் பையன் சரியா வர மாட்டான் இமயன். நம்ம கால் தூசிக்குப் பெற மாட்டான். இன்னும் நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சிருக்கிற நமக்கும், குடும்பத்தை சமாளிக்க வழியில்லாமல் வெளிநாட்டில் வேலை செய்றவனுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது.!” என முகத்தில் இறுக்கத்துடன் பேசினார் அவர்.
“நம்ம கவிக்கு அவனைப் பிடிச்சிருக்கே சார்?!”
“அவளுக்கு பிடிச்சுருக்குன்னு கண்ணை மூடிட்டு கட்டி வைக்க சொல்லுறியா இமயன்? நான் உன்கிட்டே இந்த பதிலை எதிர்பார்க்கலை. அவனைத் தூக்கிட்டு வந்து தோலை உறிக்க சொல்லுவன்னு எதிர் பார்த்தேன்.!” என அவர் சொல்ல இமயனால் பதில் பேச முடியவில்லை.
தன் மனம் முழுக்க தன் ஆராவின் மீதானக் காதலைச் சுமந்துக் கொண்டு திரியும் அவனால், இன்னொரு காதலைப் பிரிக்க வேண்டுமென, வாய் வார்த்தையாகக் கூடச் சொல்ல மனம் வரவில்லை.
“சார்.. நாம அரசியலில் செய்யறது வேற. இது உங்கப் பொண்ணு வாழ்க்கை. இது ஒண்ணும் அரசியல் இல்லை.!” என அவன் சொன்ன பதிலில் மயில்ராவணனுக்கு திருப்தி இல்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது.
“கண்டவனுக்கும் என் பொண்ணைக் கட்டிக் கொடுக்க, நான் ஒண்ணும் இல்லாதவன் இல்லை. இந்த மாநிலத்தோட முதலமைச்சர். என் பதவிக்குன்னு ஒரு மரியாதை ஸ்டேடஸ் எல்லாம் இருக்கு. என்னைப் போய் இப்படியொரு பரதேசிக்கு என் பொண்ணைக் கொடுக்க சொல்றியா? அப்படி என்ன பெரிய மண்ணாங்கட்டி காதல்? அவனோட சம்பளத்தை வச்சு என் பொண்ணோட ஒருநாள் செலவை அவனால் பார்க்க முடியாது. இப்படி இருக்கும் போது, அவனுக்கு என் பொண்ணை நான் கொடுக்கணுமா? மாத சம்பளம் வாங்குற பரதேசிக்கு முதலமைச்சர் பொண்ணு கேட்குதாம்? எவ்வளவு திமிர் தெரியுமா அவனுக்கு? அவனைக் கொன்னு போட்டுட்டா என் பொண்ணு நான் சொல்றவனைக் கட்டித் தானே ஆகணும்?!”
பதவியும் பணமும் இருக்கிறதென்ற அகங்காரத்தில் பேசுகிறார் என்பது இமயனுக்குப் புரிந்தது.
தான் என்ன சொன்னாலும், அவர் கேட்கப் போவதில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது. தன் பதவியையும், பணத்தையும் வைத்து, அவர் ஆடும் ஆட்டத்தில், ஓர் உயிர் பலியாவதையும், அதற்கு தான் துணை போவதையும் இமயன் விரும்பவில்லை.
“உங்களுக்குப் பிடிக்கலைன்னா உங்க பொண்ணுக்கிட்டே பேசலாமே சார்? பொறுமையாய் சொன்னால் புரிஞ்சுப்பாங்க சார்! எதையும் யோசிக்காமல், அவசரப்பட்டு முடிவெடுத்தால், நாளைக்கு நம்ம கட்சிக்கு தான் கெட்டப் பேரு. அந்தப் பையனை எதாவது பண்ணிட்டு, நம்ம பேரு நாளைக்கு அடிபட்டால், மக்கள் மத்தியில் நம்ம கட்சிக்கு இருக்கிற நம்பிக்கை போய்டும் சார்.!”
அவரின் கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானப்படுத்த முயன்றான் இமயன்.
“என்ன வேணும்ன்னாலும் நடக்கட்டும்.! நான் இதை நடக்க விட மாட்டேன்.!”அவரின் பேச்சில் அதீத கோபம் மட்டுமே தெரிந்தது.
“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க சார்! இப்போ நாம அவசரப்பட்டு எடுக்கிற முடிவு, நம்ம ஒட்டுமொத்த கட்சியையே பாதிக்கும். கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க! இதுவே நாம, கவிக்கும் அந்தப் பையனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சால், அந்தஸ்து பேதம் பார்க்காமல், தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சாருன்னு பேரு கிடைக்கும்!” என இமயன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அனுமதியின்றி கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் அர்ஜுன்.
“இமயன்! நீ இவருக்கிட்டே என்ன பேசினாலும் வேஸ்ட் தான். இவர் பணம், பதவின்னு அதை மட்டும் தான் கட்டிட்டு அழுவார். பிள்ளைகளோட மனசைப் பற்றி இவருக்கு எந்தக் கவலையும் இல்லை. இவரை மாதிரி ஒரு சுயநலவாதியை நான் பார்த்ததே இல்லை. பெத்தப் பிள்ளைகளை விட, பதவியும் பணாமும் தான் இவருக்கு முக்கியம்!” எனக் கோபமாய்க் கத்தினான் அர்ஜுன்.
“வாயை மூடு அர்ஜூன்.! எதாவது பேசினே பல்லை உடைச்சுடுவேன். இதே பதவியும் பணமும் தான் உன்னையும், உன் தங்கச்சியையும் வளர்த்துச்சு. நினைச்ச படிப்பை படிக்க வச்சுது. நான் சாம்பாதிச்ச பணத்தில், வளர்ந்து என் முன்னாலே நின்னு எதிர்த்து பேசுற பார்த்தியா?!”
“நீங்க சம்பாதிக்கிறதும், நீங்க பெத்த புள்ளைகளை படிக்க வைக்கிறதும் உங்க கடமை. உண்மையாய் உழைச்சு சம்பாதிக்க துப்பு இல்லை. அடுத்தவனை அடிச்சு சம்பாதிக்கிறதெல்லாம் ஒரு பிழைப்பா? நீங்க இந்த ஊருக்கெல்லாம் முதலமைச்சரா இருக்கலாம். உங்களைப் பார்த்து எல்லாரும் பயப்படலாம். ஆனால், உங்களைப் பார்த்து பயப்படணும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.!” என அவருக்கு நிகராய் கத்தினான் அர்ஜுன்.
“அர்ஜுன்! கொஞ்ம் அமைதியாய் இருடா பேசிக்கலாம்.!”
“இந்தாள் கிட்டே என்னத்தை டா பேசுறது? பணம் மட்டும் தான் வாழ்க்கைன்னு நினைக்கிற பணப் பிசாசு டா இவரு!”
“உனக்காக தானே டா இவ்வளவும் சம்பாதிச்சு வச்சிருக்கேன்!” என இடையிட்டு கத்தினார் மயில்ராவணன்.
“உங்க பணத்தில் எனக்கு அஞ்சு பைசா வேணாம். முதலமைச்சர் பையன்ங்கிற மண்ணாங்கட்டி அடையாளமும் எனக்கு வேணாம். என் பேருக்கு முன்னால் இனிஷியலா இருக்கிற உங்களை என்னால் மாத்த முடியாது தான். ஆனால், நான் எனக்குன்னு ஒரு பாதையை அமைச்சுக்கிட்டு என்னால் தனிச்சு நிற்க முடியும். நான் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ஏற்கனவே செஞ்சுட்டேன்.!” மின்னாமல், முழங்காமல், பெரிய இடியாய் மயில்ராவணன் தலையில் இறக்கினான் அர்ஜுன்.
தனக்குப் பின்னால், தன் மகன் வந்து பதவியில் அமர்வான். கட்சியை கட்டிக் காப்பான் என்ற கனவு சில்லு சில்லாய் நொறுங்க, இமைக்காத விழிகளுடன் மகனைப் பார்த்தார் அவர்.
“அப்படியெல்லாம் விட முடியாது அர்ஜுன்.! எனக்குப் பின்னால் நீ தான் இந்தக் கட்சியைப் பார்த்துக்கணும். உனக்கும், உன் தங்கச்சிக்கும் என்ன நல்லதுன்னு எனக்குத் தெரியும். நீ பேசாமல், உன் வேலையைப் போய் பாரு.!” அழுத்தமான குரலில் அவர் சொல்ல,
“எங்களுக்காக நீங்க இதுவரை செஞ்சதெல்லாம் போதும். என் விஷயத்திலும், கவி விஷயத்திலும் நீங்க தலையிடாதீங்க! எங்களைப் பார்த்துக்க எங்களுக்கு தெரியும். கவி விரும்பின பையனைப் பற்றி நான் விசாரிச்சுட்டேன். ரொம்ப நல்ல பையன். இனிமே உங்களை எதுவும் கேட்கிறதா இல்லை. நானே அவளுக்கு ரிஜிஸ்டர் மேரெஜ் பண்ணி வைக்கலாம்ன்னு இருக்கேன்.!”
என அர்ஜுன் சொல்ல, அடுத்த அதிர்ச்சி மயில்ராவணனுக்கு.
அவர் போட்டு வைத்திருந்த அத்தனை திட்டமும் தவிடுபொடி ஆகி விடுமோ? என்ற பயம் அவருக்குள் சூழ ஆரம்பித்திருந்தது. அவர் கவிநயாவின் திருமணத்தை வைத்து தான் நிறைய திட்டங்களைத் தீட்டியிருந்தார்.
மத்தியிலுள்ள முக்கிய அமைச்சரின் மகனுக்கு கவிநயாவைத் திருமணம் செய்யலாம் என்கிற திட்டத்தை வைத்திருந்தார். மத்தியிலுள்ள அமைச்சருடன் தொடர்பை ஏற்படுத்திவிட்டால், மத்தியிலுள்ள முக்கியப் புள்ளிகளின், தொடர்பு கிட்டும் என்ற கனவெல்லாம் கானல் நீராய் போய்விடுமோ? என்ற அச்சம் வெளிப்படையாகவே அவர் முகத்தில் தெரிந்தது.
எல்லாவற்றையும் தாண்டி, இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அது சாதி.. ஒரு குறிப்பிட்ட சாதி சங்கத்தின் தலைவராக இருக்கும் மயில்ராவணன் தன் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மீறி, தன் சாதியைச் சேராத ஒருவனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து வைப்பதெல்லாம் கனவிலும் நடைபெறாத ஒன்று தான்.
“அர்ஜுன்! நீ பொறுமையாய் இரு! சார் கிட்டே நான் பேசுறேன். கவியை தைரியமாய் இருக்க சொல்லு! எல்லாம் சரியாக நடக்கும்!” என இமயன் பேசிக் கொண்டிருக்க,
“கவியை வரச் சொல்லு அர்ஜுன்!” யோசனையோடு மகளை வரச் சொன்னார் மயில்ராவணன். இதை அர்ஜுனே எதிர்பார்க்கவில்லை.
“எதுக்கு? அவள் மண்டையைக் கழுவறதுக்கா?” எனக் கோபமாய் கேட்டான் அர்ஜுன்.
“கவி என்ன நினைக்கிறாள்ன்னு எனக்குத் தெரியணும். நீ வரச் சொல்லுறியா? இல்லை நானே பேசிக்கவா?!” என அவர் கேட்க, கதவைத் திறந்து வெளியேறி கவியை அழைத்து வந்தான் அர்ஜுன்.
“கவி!” என மயில்ராவணன் விளிக்கும் வரை, ஒற்றை வார்த்தைக் கூடப் பேசாமல் அமைதியாய் நின்றாள் கவிநயா.
மயில்ராவணன் விளித்த பின்பும் கூட, தலையை நிமிர்த்தி பார்த்தாளே ஒழிய, எதுவுமே பேசவில்லை.
“நல்ல பணக்கார மாப்பிள்ளை. வெல் செட்டில்ட்டு ஃபேமிலி.! இன்னும் பல தலைமுறைக்கு சொத்து இருக்கு. அப்படியொரு பையனை உனக்கு பார்த்து வச்சிருக்கிறேம்மா! அவ்வளவு நல்ல பையனை விட்டுட்டு.. அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படுற பையன் உனக்கு தேவையா? உன்னோட ஸ்டேட்டஸ் என்னன்னு யோசி கவிம்மா! உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற பையன் உனக்கு தகுதியானவனா இருக்கணும்! நீயும் அவனும் ஒண்ணா வேலை பார்த்தீங்க, அதுக்காக அவனையே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா என்ன அர்த்தம்? நீ ஒண்ணும் சாதாரண பொண்ணு இல்லை டா. இந்த மயில்ராவணன் பொண்ணு. இந்த தமிழ்நாட்டையே ஆளற முதலமைச்சர் பொண்ணு. எல்லாத்தையும் மறந்துட்டு, கோபுரத்தில் இருக்கிற நீ குப்பையில் விழுந்துடாதே!” என மகளின் மனதை மாற்ற முயன்றார் அவர்.
“எனக்கு வேணாம்ப்பா! இந்த அரசியல்.. இந்த சொகுசான வாழ்க்கை! எதுவும் எனக்கு வேணாம். இந்த அரசியலுக்கு சம்மந்தமில்லாத, என்னைப் புரிஞ்சுக்கிற பையன் தான் எனக்கு வேணும்ன்னு நான் நினைச்சேன். நீங்க ஆயிரம் மாப்பிள்ளைகளை பார்க்கலாம்ப்பா! உங்களை விட பணக்காரங்களா இருக்கலாம். என்னை கல்யாணம் பண்ணிக்கிற, தகுதி, அந்தஸ்து, பணம், பதவி எல்லாமே அவங்கக் கிட்டே இருக்கலாம். ஆனால் அவங்க எனக்கு பிடிச்சவங்களா இருக்க மாட்டாங்க! எனக்கு பிடிச்சவன் என்னோட தீபக் மட்டும் தான். இந்தப் பகட்டான பணக்கார வாழ்க்கை எனக்கு சலிச்சு போய்டுச்சுப்பா! நான் நிம்மதியான, அமைதியான வாழ்க்கை வாழணும்ன்னு நினைக்கிறேன். அதை உங்களால் கொடுக்க முடியாது!” எனத் தெளிவாகவே கவிநயா சொல்ல, இமயனுக்கு தெளிவாகவே கவியின் மனம் புரிந்தது. ஆனால் மயில்ராவணனின் மனதில் என்ன இருக்கிறது? என்பதைத் தான் யாராலும் யூகிக்கவே முடியவில்லை.
“அந்தப் பையனை என்னைப் பார்க்க வரச் சொல்லும்மா!” எனச் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட, சட்டென்று அவர் சொன்னதில் குழப்பம் மேலோங்க, மூவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பார்த்தபடி நின்றிருந்தனர்.
******
“நிஜமாவே அவர் அப்படித்தான் சொன்னாரா?”
“திடீர்ன்னு அவர் இப்படிச் சொல்ல காரணம் என்ன?!”
“இவர் பேச்சை நம்பி தீபக்கை கூட்டிட்டு வரச் சொல்றியா அர்ஜுன்? எனக்கு இதெல்லாம் ரிஸ்க்ன்னு தோணுது! ஏதோ திட்டம் போட்டுருக்காரோன்னு எனக்கு பயமா இருக்கு.” குழப்பமாய் வெளி வந்தது கவிநயாவின் குரல்.
“வேற ஆப்ஷன் நமக்கு இல்லை கவி! அந்த ஆளைப் பத்தி உனக்குத் தெரியாது. நாம கூட்டிட்டு வரலைன்னா அவரே கண்டு பிடிச்சுடுவார். அவரா கண்டு பிடிச்சாருன்னு வை.. போட்டுத் தள்ளிடுவார்.!” என அர்ஜுன் சொல்ல,
“அர்ஜுன்! இன்னும் ஒரு வருஷத்தில் எலெக்ஷன் வரப் போகுது. இந்தச் சமயத்தில், எந்த பிரச்சனையிலும் மாட்டணும்ன்னு சார் நினைக்க மாட்டார். நீங்க அந்தப் பையனைக் கூட்டிட்டு வர்ர ஏற்பாட்டை பண்ணுங்க, சார் கிட்டே நான் பேசறேன்.!” என இடையிட்டு சொன்னான் இமயவரம்பன்.
“நோ! நான் இதற்கு சம்மதிக்க மாட்டேன்!” முதல் எதிர்ப்பு கவிநயாவிடமிருந்து தான் வந்தது.
“முதலில் நம்ம யோசிச்சபடியே ரெஜிஸ்டர் மேரேஜை முடிச்சுடலாம் அர்ஜுன்! அப்பறம் இங்கே கூட்டிட்டு வர்ரதைப் பார்க்கலாம்.!” எனத் தெளிவாகச் சொன்னாள் கவிநயா. அவளுக்கு, அவளின் தந்தையை நினைத்து பயமாக இருந்தது. இவரை நம்பி அழைத்து வந்து தீபக்கிற்கு ஏதாவது ஆகிடுவோமோ? என்ற அச்சம் மட்டுமே அவளை இப்படி பேச வைத்தது.
“இல்லை கவி.. இமயன் பேசிப் பார்க்கட்டுமே.. ஒருவேளை அவர் சம்மதிச்சால் நமக்கும் சந்தோஷம் தானே? அவரை எதிர்த்து நிற்கணும்ன்னு நமக்கும் ஆசை இல்லை தானே?!” என என்னதான் சமாதானப்படுத்த முயன்றாலும் கவிநயாவின் மனம் சமாதானம் ஆகவில்லை. அவளுக்கு, அவள் தந்தையைப் பற்றி நன்றாகவே தெரியும், அவர் கண்டிப்பாய் இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார் என்பதும் தெரியும்.
“கவிக்கு இஷ்டம் இல்லைன்னா விடு அர்ஜுன். கவி ரொம்ப பயப்படுறாங்க! அவங்க சொன்ன மாதிரியே, முதலில் ரெஜிஸ்டர் மேரேஜை முடிச்சுட்டு, அப்பறம் சார் கிட்டே பேசிப் பார்ப்போம்.!” என இமயன் சொன்னதும் தான் கவிநயாவின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.
****
அதே நேரம்,
சுழல் நாற்காலியில் அமர்ந்தபடியே அங்கும் இங்குமாய் சுழன்றுக் கொண்டிருந்த மயில்ராவணன் மனமும் குழப்பமாய் இருந்தது. அவரின் கண்கள் மேஜை மீது கிடந்த கோப்பின் முதல் பக்கத்தில் இருந்த தீபக்கின் முகத்தில் தான் நிலைத்திருந்தது. தன் மகளின் மனதைக் கலைத்த தீபக்கைப் பார்த்து அவருக்குக் கோபமாய் வந்தது.
“இவன் கிட்டே என்ன இருக்குன்னு, இவளுக்கு இவனைப் பிடிச்சிருக்கு?!” என முணுமுணுத்தவரின் கரத்தினில், தீபக் பற்றிய மொத்த விவரங்களும் அடங்கியிருந்தது.
தீபக்கை பொருத்தவரை நல்ல படிப்பு, நல்ல வேலை, என எல்லாமே அவனுக்குப் பிடித்த மாதிரியாகத்தான் அமைந்திருந்தது. இந்தியாவில் தன் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவில் பணியாற்றுகிறான். அவன் நிறுவனத்திலேயே பணி நிமித்தாமாய் வந்த கவிநயாவை அவனுக்கு நிரம்பவும் பிடித்திருக்கிறது. நட்பாய் துவங்கி, காதலாய் மலர்ந்து, இப்போது மயில்ராவணனின் முன் வந்து நிற்கிறது.
மயில்ராவணனின் முகமோ யோசனையைத் தத்தெடுத்தது. தான் பெற்ற மகவுகள் இருவருமே, தனக்கு எதிராய் நிற்பதில் அவருக்கு கோபம் இருந்தது. அவரைப் பொருத்தவரை, தன் மகளுக்கு தான் பார்க்கும் மாப்பிள்ளை மட்டுமே தகுதியானவன். முதலமைச்சரின் மருமகன் எனச் சொல்லிக்கொள்ளவும், சில. தகுதிகள் வேண்டும். என்பது அவரின் உறுதியான கொள்கை.
ஆனால், தன் பிள்ளைகளே தனக்கு எதிராக நிற்கையில், அவசரப்பட்டு ஏதாவது செய்தால், எல்லாம் கை மீறிப் போய்விடும் என்ற சுதாரிப்பும் அவரிடம் இருந்தது. அதனாலேயே பொறுமையாய், நிதானமாய் காய் நகர்த்த முடிவு செய்திருந்தார் மயில்ராவணன். முடிவு செய்தவுடன், அதைச் செயல்படுத்தவும் துவங்கியிருந்தார்.
“யோவ் மணி!” தன் தனிப்பட்ட உதவியாளரான மணிகண்டனை அழைத்தவர்,
“இந்தப் பையன்.. இன்னும் அரைமணி நேரத்தில் என் முன்னால் வந்து நிற்கணும்!” என உத்தரவிட்டார். மணிகண்டன் தீபக்கை அழைத்து வருவதற்கான செய்துக் கொண்டிருக்க, இவர் முகத்திலோ, குரூரமான புன்னகை.
“உன்னையும், உன் அண்ணனையும் எப்படி என் வழிக்குக் கொண்டு வரணும்ன்னு எனக்குத் தெரியும் கவி. உங்களுக்கு தான் என்னைப் பற்றி தெரியலை! எவனோ ஒருத்தனை அவ்வளவு லேசா இந்த வீட்டுக்குள்ளே விட்டுடுவேனா? நான் யாரைக் கை நீட்டுறேனோ, அவனுக்கு நீ கழுத்தை நீட்டித் தான் ஆகணும். முதலில் இந்த தீபக் வரட்டும். அப்பறம் பார் என் ஆட்டத்தை!” எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தார்.
அதே நேரம், மணிகண்டன் தீபக்கை அழைத்து வந்திருந்தார். தீபக்கோ, எந்தத் தயக்கமும் இல்லாமல் உள்ளே நுழைந்து,
அவர் முன்னால் அமர்ந்திருந்தான்.
அவன் தன் அனுமதி கேட்காமல் அமர்ந்ததிலேயே அவர் கோபம் எல்லையைக் கடந்திருந்தது.
“ஐ அம் தீபக்! எதுக்காக என்னைக் கூப்பிட்டீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? எல்லாம் தெரிஞ்சு தான் வரச் சொல்லிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.” என அவன் கேட்க,
“உனக்கும், என் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்ன்னு இருக்கேன். நீங்க ரெண்டு பேரும், லவ் பண்ணுறதை கவி சொல்லிட்டா.. என்னதான் எங்க குடும்பத்துக்கு நீ தகுதியே இல்லாதவனாக இருந்தாலும், என் பொண்ணுக்காக மட்டும் யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.” பிரம்மப் பிராயத்தனப்பட்டு, தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு பேசினார் அவர்.
அவனை மரியாதையாய்க் கூட விளிக்க விருப்பமில்லாமல், கடனுக்கென பேசினார் அவர். தான் போட்டு வைத்திருக்கும், திட்டம், தன் உடல்மொழியில் கூட கசிந்துவிடாத அளவிற்கு, தெளிவாக இருந்தார்.
“தேங்க் யூ அங்கிள்! நீங்க இவ்வளவு ஈஸியா ஒத்துப்பீங்கன்னு நாங்க நினைக்கலை. தேங்க் யூ ஸோ மச் அங்கிள்! நிஜமாவே நான் இதை நம்பலாமா?” என தீபக் பேசிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்த கவிநயா அதிர்ந்து நின்றிருந்தாள்.
“நீ என் இங்கே வந்த?” என அவள் இதழ்கள் பயத்துடன் மென்மையாய் முணுமுணுத்தது.
“யாரோ ஒருவர் மீதான..
காதல்..
நம்மை எல்லாவற்றையும்,
கடந்து வர வைக்கிறது..!”

