Loading

அதீதம்-15

அந்த வாகனத்தின் பின்னிருக்கையில், தன் வருங்கால மாமியாரோடு அமர்ந்திருந்த ஆருத்ராவின் மனம் முழுவதும், அதீத படபடப்பைச் சுமந்திருந்தது. எளிதாக விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் அர்ஜுன் சொல்லிவிட்டான் தான்.

ஆனால், அவன் சொன்ன அளவிற்கு எளிதாகக் கூட இவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனம் ஒருமாதிரியாய் இருந்தது.

‘நிஜமாகவே எனக்கு இமயனை பிடிக்காது தானே? அப்படி இருக்கையில், ஏன் இந்த படபடப்பு?’ நினைக்காமல் அவளால் இருக்க முடியவில்லை.
பக்கத்தில் அமர்ந்திருக்கும், தனலெட்சுமியை ஓரக்கண்ணால் பார்த்தாள். நிச்சலனமான முகத்துடன் அமைதியாய் அமர்ந்திருந்தார் அவர்.

‘இமயன் அவர் மகன் தானே? எப்படி இவரால், இத்தனை அமைதியாய் இருக்க முடிகிறது? நான் தான் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறேனோ? பெற்ற தாய்க்கே இல்லாத பரிதவிப்பு எனக்கு மட்டும் ஏன்?’ யோசனை அவள் மூளைக்குள் ஓடியது. விபத்து மருத்துவமனை இதையெல்லாம் யோசிக்கும் போதே, அவளுக்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘இவன் என் வாழ்க்கைக்குள் வராமல் இருந்திருக்கலாம்!’ என அவள் நினைத்ததெல்லாம் இன்று வேறுவிதமாய் உருமாறி நின்று பயம் காட்டியது.

‘என் வாழ்க்கைக்குள் அவன் வராமல் இருந்திருக்கலாம். என நான் நினைத்ததற்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்குமோ?’ என யோசித்த மாத்திரத்தில் மனம் நடுங்கியது அவளுக்கு.

“அ.. அத்தை..! அவருக்கு ஒண்ணும் ஆகாது தானே?!” தயக்கமும் நடுக்கமும் ஒருசேர அவள் கேட்க, தனலெட்சுமியிடமிருந்து ஒற்றை புன்னகை மட்டுமே வெளிப்பட்டது.

“உனக்கு என் பையனை பிடிக்காதுன்னு தெரியும் ஆரு.. அவன் உன்னைக் காட்டாயப் படுத்தாறான் தான்.. நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். பிடிக்காத வாழ்க்கை, ஒரு பொண்ணை எவ்வளவு வேதனைப்படுத்தும்ன்னு ஒரு பொண்ணா என்னால் உணர முடியும் தான். ஆனால், என் பையன் நீ இல்லைன்னா வாழ்க்கையே இல்லைன்னு சொல்லும் போது, நான் என்ன செஞ்சுட முடியும்? வேணும்ன்னா ஒண்ணே ஒண்ணு செய்றேன்.. நீ எங்கே போன? எப்படி போன? யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன். இப்படியே இறங்கி போய்டு ஆரு. என் பையன் உசுரோட இருக்கிறானோ? சாகறானோ? அது அவனோட விதி. உனக்கு பிடிச்ச மாதிரி நீ வாழ்க்கையை அமைச்சுக்கோ!” என தனலெட்சுமி சொன்ன அதே நேரம், அந்த மகிழுந்து ஓரமாய் நின்றது.

வாகனத்திலிருந்து கீழே இறங்கி, ஆருத்ரா அமர்ந்திருந்த பக்கமாய் வந்து, கதவைத் திறந்துவிட்டுவிட்டு, அமைதியாய் ஓரமாய் கைக்கட்டி நின்றுவிட்டார் தனலெட்சுமி.

ஆருத்ராவின் கண்களோ, திறந்த கதவையும், அதன் பின் தெரிந்த வெளிச்சத்தையும் நோக்கியது.
‘இதோ இந்த வாகனத்திலிருந்து இறங்கினால் போய்விடலாம் தான். நான் எதிர்பார்த்த விடுதலை, சுதந்திரம் எல்லாம் தொட்டுவிடும் தூரத்தில் தான் இருக்கிறது. இப்போது நான் என்ன செய்வது?

வாகனத்திலிருந்து இறங்குவதா? இல்லை பயணத்தைத் தொடர்வதா?’ குழப்பம் சூழ்ந்தது அவள் மனதில்.

‘இது மட்டும் தான் உனக்கான வாய்ப்பு. இறங்கி விடு!’

‘இமயனின் இக்கட்டான சூழலில் அவனை விட்டுப் போகப் போகிறாயா? உன் மாயன் உனக்கு வேண்டாமா?’

‘இப்போது இந்தப் பயணத்தை நீ தொடர்ந்தால், நிரந்தரமாய் சிறைக்குள் சிக்கிக் கொள்வாய்.!’

‘உன் மாயன் உனக்கு வேண்டாமென்றால், இறங்கி சென்று விடு. இமயனின் வாழ்வில் என்ன நடந்தது என தெரியும் முன்னமே, உன் முடிவு இதுவாகத் தான் இருக்கப் போகிறதா?’ அவள் மனமும் மூளையும், மாற்றி மாற்றி கேள்வி கேட்க, என்ன சொல்வதெனத் தெரியாமல் திணறினாள் ஆருத்ரா.

அவள் எதிர்பார்த்த முடிவு இது தான். அவள் இமயனிடமிருந்து எதிர்பார்த்ததும் விடுதலை மட்டும் தான். ஆனால், அவளால் இப்போது இறங்கி செல்ல முடியவில்லை. அவள் என்ன நினைக்கிறாள்? என்பது அவளுக்கே புரியவில்லை.

ஆனால், இமயனின் பக்கம் என்ன இருக்கிறது என்பதைத் தெரியாமல் போகக் கூடாதென்பதில் கொஞ்சம் உறுதி கூடியிருந்தது அவளுக்கு.

“நா.. நானும் வர்ரேன்!” திக்கித் திணறி கடைசியாய் சொன்னாள் அவள்.

அவள் சொன்னதும், மிக மிக மெல்லிய சிரிப்புடன், அவள் பக்கக் கதவை சாத்திவிட்டு, சுற்றி வந்து தன் இருக்கையில் அமர்ந்தார் தனலெட்சுமி. அவர் எந்த வார்த்தையும் ஆருத்ராவிடம் பேசவில்லை தான். ஆனால் அவர் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்திருந்தது.

தன் மகன் மீது அவளுக்குப் பிடித்தம் இல்லை என்பது, அவருக்கு ஏற்கனவே தெரியும் தான். ஆருத்ராவின் முகமும், அவள் நடந்துக் கொண்ட விதமும் அவருக்கு அவள் மனதைத் தெளிவாய்க் காட்டிக் கொடுத்திருந்தது. மகனிடம் இலை மறைக் காயாய் சொல்லித் தான் பார்த்தார். ஆனால், இமயன் தன் உயிராகவே அவளை நினைக்கையில், மகனின் ஆசையைக் கெடுக்கவும் பாழும் மனது இடம் கொடுக்கவில்லை. ஆனால், இமயனுக்கு விபத்து எனக் கேள்விப்படவும், ஆருத்ரா தன்னோடு வருவதாய் சொல்வாள் என அவர் எதிர்பார்க்கவே இல்லை. அந்த இடத்திலேயே அவருக்கு லேசான நம்பிக்கை வந்திருந்தது. இமயனைப் பெற்ற தாயாய், இரண்டாம் வாழ்க்கையையும், அவனை ஏமாற்றிவிடுமோ? என்ற பயமும் அவருக்கு இருந்தது.

ஆனால், அவர் பயத்திற்கு எதிர்மாறாய், வாகனத்தில் ஏறிய நொடியிலிருந்து, ஆருத்ராவின், பயம் பதற்றம் எல்லாமே அவருக்கு தெளிவாய் அவள் மனதைப் படம் போட்டு அவருக்குக் காட்டிவிட்டது.

ஆனாலும், ஒருவேளை இங்கிருந்து வெளியேற வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தான், அவள் இந்தப் பயணத்தைத் தொடர விரும்புகிறாளோ? என்றெண்ணி தான், அவள் இறங்கிச் செல்வதற்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தார். ஆனால், அவள் எங்கும் செல்லாதது அவருக்கு நிரம்பவே ஆச்சர்யம் தான். அந்த ஆச்சர்யம் இப்போது நிம்மதியாய் மாறியிருக்க, நேசத்தோடு ஆருத்ராவின் கரத்தைப் பற்றிக் கொண்டார் தனலெட்சுமி.
அவள் கேள்வியாய் அவரைப் பார்க்க,

“என் பிள்ளைக்கு ஒண்ணும் ஆகாது ஆரு! அவன் அம்புட்டு லேசில் கீழே சாஞ்சுட மாட்டான். எனக்கு நம்பிக்கை இருக்கு.” என அவர் சொன்னதை ஆச்சர்யமாய் பார்த்தாள் ஆருத்ரா. என்னதான் மனதிற்குள் பயம் இருந்தாலும் கூட, எதையுமே வெளியில் காட்டிக் கொள்ளாது, தைரியமாய் நிற்பவரைப் பார்த்து வியப்பாய் இருந்தது அவளுக்கு.

இமயன் என்னதான் அவள் மனதிற்குள் மாயனாக பதிந்து போயிருந்தாலும் கூட, மாயன் என்ற பெயரைத் தவிர அவளுக்கு எதுவுமே தெரியாது. நன்கு யோசித்துப் பார்த்தால், அவன் அவளுக்கு மூன்றாவது மனிதனைப் போலத்தான். அப்படி இருக்கையில், அவளாலேயே உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இப்போது அவள் மனம் படபடவென அடித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இமயனைப் பெற்ற தாயாய் இவரால், எப்படி இவ்வளவு தைரியமும், நம்பிக்கையுமாக இருக்க முடிகிறது? வியக்காமல் இருக்க முடியவில்லை.
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, மருத்துவமனை வந்துவிட, வாகனத் தரிப்பிடத்தில், காரோட்டி வாகனத்தை நிறுத்தவும், தனலெட்சுமியுடன் இறங்கி நடந்தாள் ஆருத்ரா. உள்ளே செல்ல, செல்ல அவள் பதற்றமும், படபடப்பும் அதிகரித்தது.

‘அவனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது! நான் அவன் என் வாழ்க்கைக்குள்ளே வந்துருக்கக் கூடாதுன்னு நினைச்சேன் தான். ஆனால், இப்படி எதுவும் நினைக்கலை!’ என தன் மனதிற்குள் வேண்டுதல் வைத்தபடியே நடந்தாள் அவள்.

இந்த மாதிரியான உணர்வுகள் அவளுக்கு புதிது. இந்த படபடப்பும், பதற்றமும் அவளுக்கு புதிது. இமயன் மீதான இந்தப் புதுவித உணர்வின் காரணம் புரியாமல், வரவேற்பில் எந்த அறை என்று கூட விசாரிக்காது, தன்போக்கில் உள்ளே சென்றவளை, கைப்பிடித்து இழுத்து நிறுத்தினார் தனலெட்சுமி.

“ஆரு! எந்த அறைன்னு தெரியாமல் எங்குட்டு போவ?!” என அவர் கேட்க, தயக்கமாய் அவரைப் பார்த்தபடியே நின்றாள் அவள். அதன் பின் வரவேற்பில், எந்த அறை என விசாரித்துவிட்டு, அந்த அறையை நோக்கி செல்ல, அறையின் வாசலிலேயே அர்ஜுன் காத்திருந்தான்.

“அர்ஜுன்! உனக்கு ஒண்ணும் இல்லையே?!” அவசரமாய் கண்களால் ஆராய்ந்தபடியே கேட்டார் தனலெட்சுமி.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா! இமயனுக்கும் ஒண்ணும் பெருசா எதுவும் இல்லை. நாங்க கொஞ்சம் சுதாரிச்சு ஓரம் கட்டிட்டோம்.!” என்றவனின் பார்வை ஆருத்ராவின் மீது தான் இருந்தது. முதன்முறையாய் ஆருத்ராவைப் பார்த்தவனின் மனம், இமயனோடு சேர்த்து வைத்துப் பொருத்திப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டது. அவனுடைய ஆசை, கனவு எல்லாமே அர்ஜுனுக்கு தெரியுமே.! தன் நண்பனுக்காக சந்தோஷப்பட்டுக் கொண்டவன், கதவைத் திறந்து உள்ளே அழைத்துப் போனான்.

அங்கே அறையில், கால் மேல் கால் போட்டு மெத்திருக்கையில் சாய்ந்து அமர்ந்து, கரத்திலிருந்த, கிண்ணத்திலிருந்த பழக்கலவையை உண்டபடியே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் இமயவரம்பன். நெற்றியில் மட்டும் சிறிய கட்டுப் போடப்பட்டிருந்தது.

ஆருத்ரா அவனைப் பார்த்த மாத்திரத்தில், அவனுக்கு ஒன்றும் இல்லை எனத் தெரிந்ததும்,கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. அதே நேரம், இமயனும் அவளைப் பார்த்துவிட, தன் அன்னையுடன் வந்திருந்த அவளைப் பார்த்ததும் அதிர்ந்து எழுந்து நின்றுவிட்டான் இமயன்.

“ஆரா..!” மென்மையாய், இதழ் விரிந்த புன்னகையுடன் அவன் உதடுகள் உச்சரித்தது.

“பார்த்து பதுவிசா போகலாம்ல்ல டா! கல்யாணத்திற்கு இன்னும் மூணு நாளுதேன் கிடக்கு. இந்நேரத்தில், ஆக்ஸிடென்ட் அது இதுன்னு..! உன் அப்பத்தா புலம்பித் தள்ளுறாக! மருமகளை வேற பேசிப்புட்டாக!” மகனின் நெற்றிக் காயத்தை வருடியபடியே சொன்னார் தனலெட்சுமி.

“எம்புட்டு சூதானமா போனாலும், இடிக்கணும்ன்னு குறிக்கோளோடு வர்ரவனை என்ன செய்ய முடியும்?” என பதில் கேள்வி கேட்டான் இமயன்.

“இதுக்குத்தான் இந்த கட்சி கண்ணராவியெல்லாம் வேணாம்ன்னு சொன்னேன். யாரு கேட்குறீங்க? அர்ஜுன் நீயாவது சொல்லக் கூடாதா? உங்க அப்பாவை எதிர்த்து நாம என்ன பண்ண முடியும்? பொழுதுக்கும் மாற்றி மாற்றி அடிச்சுட்டே இருந்தால், இதுக்கெல்லாம் எப்போ தான் முடிவு வரும்? சம்பாதிச்ச வரை போதும் டா இமயன். இப்போவே எம்புட்டு பாவத்தை சேர்த்திருக்கோமோ தெரியலை.. பட்ட வரைக்கும் போதும். விட்டுடலாம் இமயன்.!” என தன் மகனிடமும், அர்ஜுனிடமும் சேர்த்தே சொன்னார் தனலெட்சுமி.

“ம்மா! என் அப்பா தான் எல்லாத்தையும் வீம்புக்குன்னு பண்ணிட்டு இருக்கார்! அப்போ இமயனுக்கு அவர் பண்ணதெல்லாம் சரின்னு சொல்றீங்களா? எல்லா நேரமும் அமைதியாவே இருக்க முடியாதும்மா! இந்த விஷயத்தில், என் சப்போர்ட் இமயனுக்குத்தான்.!” என அர்ஜுன் சொல்ல,

“ம்மா! நான் பணாத்துக்காக தான் இதுக்குள்ளே வந்தேன். ஆனால், இப்போ எனக்கே அரசியல் பிடிச்சிருக்கு. நான் இதை விடனும்ன்னு நினைச்சாலும், விட முடியாதும்மா! விடறதும் அவ்வளவு ஈஸி இல்லை. எது தேவையோ அதுவே தர்மம்ன்னு நீங்க கேட்டதில்லை.? எனக்கு தேவை பதவி..! அது என் கைக்கு கிடைக்கும் வரை நான் நிற்கப் போறதும் இல்லை. மாண்புமிகு முதலமைச்சரை சும்மா விடப் போறதும் இல்லை.!” என அவன் சொல்ல, அவர்கள் பேசுவதை ஒன்றுமே புரியாமல் பார்த்திருந்தாள் ஆருத்ரா.

******

அடுத்த பத்து நிமிடமாய், இமயனின் முன் நின்றிருந்தாள் ஆருத்ரா. அர்ஜுனும் தனலெட்சுமியும் வெளியே சென்று பத்து நிமிடங்கள் கடந்த பின்னும் அமைதியாய் அசையாமல் நின்றிருந்தாள் அவள். மருத்துவமனையின் மருந்து வாசனை அவள் நாசியை நிரடிவிட்டுச் செல்ல, என்ன பேசுவதெனத் தெரியாமல் நின்றிருந்தவளை, எதிரில் அமர்ந்தபடி ஆராய்ந்துக் கொண்டிருந்தான் இமயவரம்பன்.

கடிகாரத்தின் ஓசை மட்டும் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்க, ரோஜா வண்ண கையில்லா சுடிதாரில், தன்னைப் பார்க்காமல் சுவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றவளை பார்வையால் வருடினான் அவன்.

“இப்படியே எவ்வளவு நேரம் நிற்கிறதாக உத்தேசம் ஆரா? எதாவது வேண்டுதலா என்ன?” என்ற கேள்வியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அவள்.

“போன முறை, நான் ஏதேதோ பேசி தான், நீ ஒண்ணுமே சொல்லலை.. அதனால் தான் வெய்ட் பண்ணுறேன்!”

“இப்படியே அமைதியாய் நின்றிருந்தால், வெளியே போனவங்க மறுபடியும் உள்ளே வந்துடுவாங்க! தனியாக பேசட்டும்ன்னு தானே போனாங்க? நீயும் என்கிட்டே பேசுறதுக்கு தானே கால் பண்ணின? இப்போ அமைதியாய் நின்றிருந்தால் என்ன அர்த்தம்?!” என அவன் கேட்டதற்கும் அவளிடம் பதில் இல்லை. ஆனால் அவள் விழிகள் உயர்ந்து கதவை நோக்கியது.

“நான் சொல்லாமல், யாரும் உள்ளே வர மாட்டாங்க ஆரா!” எனச் சொன்னவன்,
பக்கத்திலிருந்த நாற்காலியை அவள் முன் இழுத்துப் போட்டவன்,

“உட்கார் ஆரா!” எனச் சொல்ல, அமைதியாய் அமர்ந்தாள் அவள்.

“உனக்கு என்ன கேட்கணுமோ, என்னைப் பார்த்து கேளு! நான் பதில் சொல்றேன்.!” என அவன் சொல்ல, சில நொடிகள் தயங்கியபடியே, அமைதியாய் அமர்ந்திருந்தவள், பின் யோசித்து நிமிர்ந்து அவனைப் பார்த்து,

“இப்போவும் நீங்க கவிநயாவை விரும்புறீங்களா?”எனக் கேட்டாள் அவள். அவளுக்கு அதற்கான பதில் நிச்சயமாய் தெரிய வேண்டியிருந்தது. என்னதான் அவள் மனதிற்கு நிதர்சனம் உரைத்தாலும், கவிநயா அவள் கணவனோடு வாழ்கிறாள் எனப் புரிந்தாலும், இந்த பதில் அவளுக்கு தேவையாய் இருந்தது.

அவனின் கடந்தகாலம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கடந்தகாலத்திற்கு முன் தெரிய வேண்டிய முதல் விஷயமாகத்தான் அவள் நினைத்தாள்.

“கவியை நான் விரும்பறேனான்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறியே அப்போ, என்னை உனக்கு பிடிச்சிருக்கா ஆரா?” ஒளிவு மறைவில்லாமல் நேராய் கேட்டான் இமயன்.

ஆருத்ரா அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆனால் இமயன் தொடர்ந்து பேசினான்.

“நான் ஏன் உன்னை ‘ஆரா’ன்னு கூப்பிடுறேன்னு உனக்குத் தெரியுமா?” எனக் கேட்க, அவள் தலை மட்டும் ‘இல்லை’ என இடவலமாய் ஆடியது.

“லத்தின் மொழியில் ஆரா என்ற சொல்லுக்கு மென்மையான காற்று அல்லது சுவாசம்ன்னு அர்த்தம். நம்ம ஆன்மீக நம்பிக்கைகளின் படி, நம்ம உடலைச் சுற்றியிருக்கிற கண்ணுக்குத் தெரியாத எலெக்ட்ரோ மேக்னெட்டிக் ஃபீல்ட்டுக்கு கூட, ஆரான்னு தான் பேரு. என் உள்ளே சுவாசமாகவும், வெளியே மின்காந்த அலைகளாகவும் நீ மட்டும் தான் இருக்கிற அதனால் தான் உன்னை ஆரான்னு கூப்பிடுறேன். சந்தேகம் தீர்ந்ததா?!” என அவன் கேட்க, விலுக்கென நிமிர்ந்து விழி விரிய அவனைப் பார்த்தாள் அவள்.

சர்வசாதாரணமாய் அழைக்கும் பெயருக்குள் இத்தனை அர்த்தங்களை வைத்திருப்பான் என அவள் யோசித்துக் கூடப் பார்த்ததில்லை. சாதாரண பெயருக்குள் சர்வத்தையும் அவன் அடக்கி விட்டதாகத்தான் அவளுக்குத் தோன்றியது. அவன் தந்த ஒற்றை விளக்கத்திலேயே அவன் மனம் அவளுக்குப் புரிந்தது. உணர்வுகளின் மிகுதியில் தொண்டை அடைக்க, வார்த்தைகள் வராமல் தடுமாறி எழுந்து நின்றிருந்தாள் பெண்.

“உட்காரு ஆரா..!” எனக் கைப்பிடித்து அமர வைத்தவன்,

“கவி இப்போ மட்டும் இல்லை. எப்போவுமே என் மனசில் இருந்ததில்லை. அந்தக் கல்யாணம் என்னைப் பொருத்தவரையில் ஒரு விபத்து. அப்போ இருந்து, இப்போ வரை நீ மட்டும் தான் என் மனசில் இருக்க ஆரா.. என் உயிர் மூச்சாக!” எனச் சொன்னவனின் கண்களில் தெரிந்த காதலும் நேசமும் கண்கூடாகத் தெரிந்தது அவளுக்கு. வெறும் பெயரை விளிப்பதிலேயே உள்ளும் புறமுமாய் நீ இருக்கிறாய் என அவன் உணர்த்திவிட்ட பிறகு, இவள் என்ன பேச முடியும். கண்கள் தன்னை அறியாமல் கலங்க, அவன் கரத்தை இறுகப் பற்றினாள் ஆருத்ரா.

முதன்முறையாய் அவன் கரம் பற்றியவளின் உடல் சிலிர்த்து அடங்க, கண்கள் கலங்க அவனை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். கண்கள் கலங்கி நீர் தேங்கி நின்றது.

“இப்போவும் எனக்கு நோ சொல்லுவியா ஆரா..?!” கண்ணோடு கண் நோக்கி அவன் கேட்க, இவள் தலை அவசரமாய் இல்லையென அசைந்தது.

“என்னோட கடந்தகாலம் தெரிய வேணாமா உனக்கு?” என அவன் கேட்க,

“நோ..!” எனச் சொன்னவளின் கன்னம் தழுவி நழுவியது கண்ணீர் துளி.

“ஹேய்.. அழாதேடி லூசு! தொட்டாசிணுங்கி! இப்படி அழுது வடியத்தான் என்னைப் பார்க்க வந்தியா?!” என அவன் கேட்க,

“உன் அன்பு அதீதமானது மாயன்.. எனக்கு உன் அளவிற்கு அன்பு செய்யத் தெரியாதே!” தொண்டை அடைத்து, வார்த்தைகள் தடுமாறச் சொன்னாள் அவள்.

“நீ என் கூட இருந்தால் போதும் ஆரா.. நான் அன்பு செய்றேனே உனக்கும் சேர்த்து.. அது போதாதா?!” அவன் கேட்ட கேள்வியிலும் கூட, முழுக்க முழுக்க காதல் மட்டுமே தெரிந்தது.

‘உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் பெண்ணே!’ எனச் சொல்லும் காதல் கிடைப்பதெல்லம் எவ்வளவு பெரிய வரம், இத்தனை நேசம் வைத்திருப்பவனைப் புரிந்துக் கொள்ளாமல், அவனை வேதனைப்படுத்தியதை நினைத்து, அவளுக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.

“ஐ அம் ஸாரி மாயன்..! நான் உன்னை நிறைய ஹர்ட் பண்ணிட்டேன் தானே?” என நிஜமான வருத்தத்துடன் கேட்டாள் அவள்.

“அப்படி சண்டைப் போட்ட ஆராவைத் தான் எனக்குப் பிடிச்சுருக்கு. இந்த தொட்டாச்சிணுங்கி அழுமூஞ்சியை எனக்குப் பிடிக்கலை!” அவளை இயல்பாக்குவதற்காக வேண்டுமென்றே சீண்டினான் அவன்.

“நான் ஒண்ணும் அழு மூஞ்சி இல்லை. நீ என்னை எமோஷ்னலா ஆக்கிட்ட!” அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாள் அவள்.

“ஏன் உனக்கு என் மேல் இவ்வளவு லவ்? அப்படி உனக்கு என்ன பண்ணிட்டேன் நான்? முன்னவே நீ என்கிட்டே வந்து பேசியிருந்தால், நான் விவேக்கை லவ் பண்ணியிருக்க மாட்டேனே?!” எனக் கேட்டாள் அவள்.

“தெரியலையே..! அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவேன். உன்னைப் பார்த்திருக்கேன். நிறைய முறை உன்னோடு விளையாடியிருக்கேன். பட்டாம்பூச்சி பிடிச்சு கொடுத்திருக்கேன். அழகா குட்டியா இருப்ப! உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஆரா. அப்பறம் கொஞ்சம் வருஷம் நான் இங்கே வர்ரதுக்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கலை! திடீர்ன்னு ஒருநாள் வந்தேன் உனக்கு ஞாபகம் இருக்கா?!” எனக் கேட்டான் அவன்.

“இல்லையே?” யோசனையாய் சொன்னாள் அவள்.

“காலேஜ் படிப்பெல்லாம் முடிச்சுட்டு, வேலை கிடைக்காமல், குடும்பக் கடனை அடைக்க வழி தெரியாமல் உன் தாத்தாவை தேடி வந்து, மயில்ராவணன் கிட்டே வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷம் ஆகியிருந்தது. நான் உன் வீட்டுக்கு வந்த அந்த நாள் தான் நீ காலேஜ் சேருவதற்கு அப்ளிகேஷன் ஃபில் அப் பண்ணிட்டு இருந்த. நாம பார்த்த குட்டிப் பொண்ணா இவள்ன்னு ஆச்சர்யமாய் இருந்தது. அவ்வளவு அழகா இருந்த தெரியுமா? வெறும் பதினேழு வயசு சின்ன பொண்ணுக்கிட்டே விழுவேன்னு நான் நினைச்சு கூடப் பார்த்ததில்லை. முதலில் ஏதோ வயசுக் கோளாறுன்னு தான் நினைச்சேன். ஆனால் உன் முகம் என்னால் மறக்கவே முடியலை. சின்ன பொண்ணாக வேற இருந்த.. உன்கிட்டே பேசி, உன் மனசைக் கலைக்கவும் நான் விரும்பலை. எல்லாத்துக்கும் மேலாக, நீ என் வீட்டுக்கு வரும்போது, நீ உன் வீட்டில் இருக்கிறதை விட சந்தோஷமா இருக்கணும்ன்னு நினைச்சேன். அதுக்கு பணம் வேணும்ன்னு எனக்குப் புரிஞ்சது. நான் பணத்துக்குப் பின்னால் ஓடினது என் குடும்பத்திற்காக மட்டும் இல்லை. எதிர்காலத்தில் என் குடும்பத்தில் ஓர் அங்கமாய் வரப் போற உனக்காகவும் தான்.!”

“எங்கே இருந்து இப்படியெல்லாம் பேச கத்துக்கிட்டே? உன்னை உருகி உருகி காதலிக்கிற வாய்ப்பெல்லாம் எனக்கு இல்லையா.? கல்யாணத்திற்கு மூணு நாள் முன்னாடி வந்து சொல்ற? எனக்கு உன்னோட காதலைப் பார்த்து பொறாமையாய் இருக்கு மாயன்.!”

“இப்போ என்ன கல்யாணம் பண்ணிட்டு ஆசை தீர காதலிச்சுக்கோ.. உன்னை யார் வேணாம்ன்னு சொன்னது? கல்யாணத்திற்கு முன்னே மூணு நாள் இருக்கே.. அந்த மூணு நாளும் உனக்கே உனக்கு தான். ஆசை தீரா காதலிக்கலாமே ஆரா!” என அவள் நாசியைத் தீண்டினான் அவன்.

“நான் விவேக்கை விரும்பினது பத்தி உனக்கு தெரியும் தானே? உனக்கு எதுவும் கோபம் இல்லையே?” எனக் கேட்டாள் அவள்.

“அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம். அது லவ்வே இல்லைன்னு எனக்குத் தெரியும். முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும் விட்டுடு ஆரா!”

“நான் அவனை விரும்பறது தெரிஞ்சும், நீ ஏன் தடுக்க முயற்சிக்கல?”

“சில விஷயங்களில் கிடைக்கிற அனுபவங்கள் நமக்கு ரொம்ப அவசியம் ஆரா. நான் குறுக்கே வந்து தடுத்திருந்தால், நீ என்னை வில்லனாகத் தான் நினைச்சிருப்ப. இப்போவே அப்படித் தானே நினைக்கிற? இந்த விவேக் விஷயத்தில் நீயே பட்டுத் திருந்தி வெளியே வந்துடுவன்னு எனக்குத் தெரியும். இன்னொருத்தர் சொல்லி நாம கத்துக்கிறதை விட, நமக்கு கிடைக்கிற ஒவ்வொரு அனுபவமும் ஒரு புது விஷயத்தை கத்துத் தரும். விவேக் விஷயமும் அப்படித்தான். அப்படியே எதாவது தவறா நடக்கிற மாதிரி தெரிஞ்சால் நான் உன் முன்னால் வந்து நின்னிருப்பேன்.!” என அவன் சொல்வதை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

“ஒருவேளை விவேக்கும் என்னை உண்மையாய் லவ் பண்ணியிருந்தால், என்ன செஞ்சிருப்ப?” என அவள் கேட்க அவன் முகம் சட்டென மாறியது. வேகமாய் கட்டிலிலிருந்து எழுந்து நின்று, அவளுக்கு முதுகு காட்டி நின்றவன்,

“ஒருவேளை உண்மையாய் இருந்திருந்தால், நீ விவேக்கோட வாழறதை தடுத்திருக்க மாட்டேன். நீ சந்தோஷமாய் வாழறதைப் பார்த்துட்டே நானும் வாழ்ந்து முடிச்சுருப்பேன்.!” என அவன் சொன்னதைக் கேட்டு பிரம்மித்து நின்றுவிட்டாள் ஆருத்ரா.

“நீ கல்யாணம் பண்ணிருக்க மாட்டியா?!” எனக் கேட்டாள் அவள்.

“நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை ஆரா.! நீ கேட்கலாம், அப்பறம் ஏன் கவியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு.. நான் ஏற்கனவே சொல்லிட்டேன், அது கல்யாணம் இல்லை. எதிர்பாராமல் நடந்த விபத்து!”

என அவன் சொல்ல, அவனை விழியசைக்காமல் பார்த்தபடியே பிரம்மித்து நின்றுவிட்டாள் ஆருத்ரா.

“இப்போவும் எட்ட நின்னு வேடிக்கை தான் பார்த்துட்டு இருப்பியா? கட்டிக்க மாட்டியா?” என அவன் கேட்க, தயக்கமும் நாணமும் போட்டி போட, முகம் சிவந்து நின்றவள், அவன் கரம் விரித்து, தலையசைத்து ‘வாவென’ அழைத்த மறுநொடியே, ஓடிப் போய் அவன் கரங்களுக்குள் அடைக்கலமாகியிருந்தாள்.

அவனை இறுக அணைத்து அவன் மார்புக்குள் முகம் புதைத்தவளின் கண்களில், வழிந்த கண்ணீர், அவன் மார்புச் சட்டையை வெதுவெதுப்பாய் நனைத்தது. ஆனந்தமும், நெகிழ்வும், அதிர்ச்சியும் ஒருசேர அவளைத் தாக்க, சந்தோஷக் கண்ணிரோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“லவ் யூ மாயன்!” என அவள் சொல்ல, நெகிழ்ந்து உருகி, அவள் நெற்றியில் முத்தம் வைத்தான் அவன். அடர்ந்த மீசை ரோமங்கள் பதிய அவன் கொடுத்த ஒற்றை முத்தத்தில், கிறங்கி மயங்கி நின்றாள் மாது.

“ஆரா..!” நெஞ்சில் சாய்ந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவளை விளித்தான் அவன்.

“ம்ம்ம்!” ஒற்றை எழுத்தில் என்னவெனக் கேட்டாள் அவள்.

“இந்த விஷயத்தில், கவிநயா எங்கே வந்தாள்? என்ன நடந்தததுன்னு நீ தெரிஞ்க்கணும் ஆரா!” என அவன் சொல்ல,

“முடிஞ்சது, முடிஞ்சதாகவே இருக்கட்டும் விட்டுடு மாயன்!” அவன் சொன்னதையே அவனிடம் திருப்பிப் படித்தாள் அவள்.

“ஏய்.. நான் சொன்னதையே என்கிட்டே திருப்பி சொல்ற.? என்னோட முதல் திருமணத்தைப் பற்றி எதுவும் தெரியாமலே, என்னைப் புரிஞ்சுக்கிட்டது எனக்கு சந்தோஷம் தான் ஆரா.. ஆனால், என் மன நிம்மதிக்காக உன்கிட்டே சொல்லிடுறேன்.!” என தன் கடந்தக் காலத்தை சொல்லத் துவங்கியிருந்தான் இமயன்.

“பூமிக்கு பாரமாக இருக்கிறாய்..
காதல் செய்து
காற்றில் இறகாகு..!”

(படித்ததில் பிடித்தது)

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment