Loading

அதீதம்-13

தன் பின் வந்து நின்று, அவன் தொண்டையைச் செருமியதில், பயந்து போய் அவனைத் திட்டியிருந்தாள் ஆருத்ரா. தன்னையறியாமல் திட்டிவிட்டு, பின் யோசித்து, தயக்கத்துடன் நின்றிருந்தாள் அவள். அவளுக்கு எதிரே நின்றிருந்த அவனோ, அவளையே பார்த்திருந்தான். அவனின் வன்மையான உதடுகளில், புன்னைகை நிறைந்திருந்தது. கண்களோ அவளில் மட்டும் மையம் கொண்டிருந்தது.

அவன் பார்வையின் வீரியம் தாங்காது, பார்வையை வேறு பக்கமாய் திருப்பியவள்,

“ஸா.. ஸாரி..! வேணும்ன்னு நான் பண்ணலை. நீங்க பின்னாடி வந்து நிற்பீங்கன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை. நிஜமாவே பயந்துட்டேன்.!” மெல்லிய குரலில் அவனைப் பார்க்காமலே சொன்னாள் ஆருத்ரா.

“எனக்குத் தெரியும் ஆரா.. நீ வேணும்ன்னு செய்யலைன்னு எனக்குத் தெரியும்!” என அவன் சொல்ல, எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றாள் அவள்.
நிமிடங்கள் நொடிகளாகிக் கடந்துக் கொண்டிருந்தது. அவனிடம் நிறைய கேட்க வேண்டுமென நினைத்திருந்தவளுக்கு வார்த்தைகள் வர மறுத்தது. என்ன கேட்க? என்ன சொல்ல? எதுவும் புரியாமல் அமைதியாய் நின்றாள்.

அவனிடம் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. அவள் இதுவரை இப்படி உணர்ந்ததில்லை. யாராக இருந்தாலும், நேரடியாய் பேசிவிடும் ரகம் அவள். முதன் முறையாய் ஒரு சிறிய தாயக்கம், தடுமாற்றம் அவளிடம். காரணம் என்னவென்று தெரியவில்லை.

“என்ன கேட்கணும் ஆரா..? பேசணும்ன்னு சொல்லிட்டு, இப்போ வரை அமைதியாய் நின்றால் என்ன அர்த்தம்?!” அவள் மௌனத்தை உடைக்க முயற்சி செய்தான் இமயவரம்பன். குளிர்தனப் பெட்டிக்குள் பலநாள் சேர்ந்திருக்கும் பனிக்கட்டியாய் அவள் மௌனம் கரைய மறுத்தது.

“ஆரா..!” மீண்டும் அவன் குரல் கதகதப்பான வெப்பமாய் மாறி அவள் மௌனம் உடைக்க முயற்சி செய்தது.

“அப்போ நான் போகட்டுமா? கேட்க எதுவும் இல்லை தானே?” என்ற கேள்வி இறுதியாய் அவளை அவனை நோக்கித் திருப்பியது.

“நான் என்ன கேட்பேன்னு தெரியாதா? நீ ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறது உன் இஷ்டம் தான். நான் அதில் எதுவும் சொல்ல முடியாது. உன் பணத்திற்கும், அந்தஸ்திற்கும் எத்தனையோ பொண்ணுங்க கிடைப்பாங்க! ஆனால், என்னை எதற்காக உன் வாழ்க்கைக்குள்ளே இழுக்கிறே? அதுவும் விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும்.?” கோபத்தை வெளிக்காட்டாமல், கொஞ்சம் நிதானமாகவே பேசினாள் ஆருத்ரா. கண்டிப்பாக பதில் சொல்லியே தீர வேண்டுமென்கிற அழுத்தம் அவள் குரலில் இருந்தது.

“ஏன்னா.. இந்த ஆருத்ரா தான் என் மனசுக்குப் பிடிச்சவ. அது மட்டும் தான் காரணம்.!” என அவன் இலகுவாய் சொல்லவும், ஆருத்ராவின் முகம் ஏமாற்றமாய் சுருங்கியது.

“நான் உண்மையைச் சொல்லணும்ன்னு நீ நினைக்கிறியா? இல்லை.. நீ எதிர்பார்க்கிற பதிலை சொல்லணும்ன்னு நினைக்கிறியா ஆரா?” அவள் முகத்தை வைத்தே மனதைக் கணித்துக் கேட்டான் இமயன்.

“உனக்கு பிடிச்சிருக்கு அப்படிங்கிற ஒரே காரணத்திற்காக எனக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்க மாட்டியா? எனக்கு பிடிக்கலைன்னாலும், நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படித்தானே?!” இப்போது அவள் குரலில் லேசாய் கோபத்தின் சாயம்.

“என்னை உனக்குப் பிடிக்கும் ஆரா.. இப்போ என்னதான் என்னைப் பிடிக்கலைன்னு சொன்னாலும், உன் மனசுக்கு என்னைப் பிடிக்கும்!” வெகு நிதானமாய் மெல்லிய குரலில் சொன்னான் அவன்.

“டையலாக் ரொம்ப நல்லா இருக்கு. அவ்வளவு தானா? இன்னும் பேசுறதுக்கு வேற ஏதாவது இருக்கா? சினிமா டையலாக்கெல்லாம், அந்த நேரத்திற்கு கைத்தட்டி சிரிக்க மட்டும் தான். வாழ்க்கைக்கு உதவாது.!” எனச் சொன்னபடி கோபமாய் அவனைப் பார்த்தவள்,

“இந்தக் கல்யாணமெல்லாம் வேணாம். தயவு செய்து இதை நிறுத்திடு. நீயும் நிம்மதியாய் இருக்கலாம். நானும் நிம்மதியாய் இருப்பேன்.!” என நிறுத்தி அவனை மீண்டும் பார்த்தாள்.

“நீ இல்லாமல், நான் எப்படி சந்தோஷமாய் இருக்க முடியும் ஆரா?!” என நிச்சலனமில்லா முகத்துடன் அவன் கேட்க, அவளுக்கோ, அவனைப் பார்க்க கோபம், கோபமாய் வந்தது.

“போதும் இமயன்! என்னைக் கல்யாணம் பண்ணினால் தான் நீ சந்தோஷமா இருப்பியா? அப்போ முதல் கல்யாணம் ஏன் பண்ணின? நீ மட்டும் என் வாழ்க்கையில் இல்லாமல் போனால் போதும், நான் ரொம்ப சந்தோஷமாய் இருப்பேன். நீ வந்த பிறகு தான் என் வாழ்க்கை நிம்மதியே இல்லாமல் போச்சு. கட்சி மாறுவது போல, உனக்கு ஆளை மாத்தறது வழக்கமா இருக்கலாம். ஆனால், எனக்கு அப்படி இல்லை. முதல் மனைவி பிடிக்கலைன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்குவ.. நாளைக்கே நான் பிடிக்காமல் போய்ட்டா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவியா?” கோப மிகுதியில், அவளிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவன் கோபத்திற்கு தூபம் போட்டது.

“ஆரா.. போதும் நிறுத்து!” கோபத்தில் இருந்த அவள் செவிகளில், அவன் சொன்ன எதுவுமே விழவில்லை. அவளை அவன் சொன்னது எதையுமே கேட்காமல், தன்போக்கில் பேசிக் கொண்டே இருக்க,

“ஆருத்ரா!” என்ற அவனின் விளிப்பில் அதிர்ந்து, தன் பேச்சை நிறுத்திவிட்டு அசையாமல் நின்றாள்.

“என்னன்னு யோசிச்சு பேச மாட்டியா? என்னைப் பார்த்தால், உனக்கு எப்படி தெரியுது? தினமும் ஒருத்தி கூட குடும்பம் நடத்தறவன் மாதிரி தெரியுதா? இன்னொரு முறை இப்படியொரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்துச்சு.. நானே உன்னைக் கொன்னுடுவேன்.!”

“நான் அப்படித்தான் பேசுவேன். நீ செய்யாததையா நான் பேசிட்டேன்.? நீ அப்படித்தானே இருக்க?” குரல் தடுமாற கேட்டாள் அவள்.

“நான் அப்படித்தான்னு நீ வந்து பார்த்தியா? இல்லை ஏதாவது ஆதாரம் வச்சிருக்கியா?!” என அவன் கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றாள் அவள்.

“உன்னால் பதில் பேச முடியலை இல்லையா? உனக்கே தெரியாத ஒரு விஷயத்தை பற்றி, நீயா உனக்கு தோணுறதை எல்லாம் பேசுவியா? உன்னை என்னால் புரிஞ்சுக்க முடியுது ஆரா. உன் கோபம் எனக்குப் புரியுது. ஆனால், முதலில் உனக்கு என் மேல் இருக்கிற கோபம், இது ரெண்டாம் கல்யாணம்ங்கிற எல்லா விஷயத்தையும் தள்ளி வச்சிட்டு, நான் சொல்றதை உண்மைன்னு நம்புறதாக இருந்தால் சொல்லு. என்ன நடந்ததுன்னு எல்லாத்தையும் நான் சொல்லத் தயார். உனக்கு சாதகமான பதிலை மட்டும் தான் சொல்லணும்ன்னு நீ நினைத்தால் அதுக்கு நான் தயாராய் இல்லை.!” கொஞ்சம் அழுத்தமான தொனியில் அவன் சொல்ல, யோசனையாய் புருவம் சுருக்கியபடி நின்றாள் அவள்.

சற்றுமுன் அவளுடன் பேச வேண்டுமென்பதற்காய், ஆசையுடன் வந்தவனை கோபப்படுத்திவிட்டாளே.. அவன் இழுத்துப் பிடித்திருந்த இலகு மனநிலையை மாற்றி, அழுத்தமாய் அவனை நிற்க வைத்துவிட்டாள். அவனுமே அனைத்தையும் அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வந்தான். ஆனால் அவனால் முடியவில்லை. தான் சொல்வதை உண்மையென நம்பாத இவளிடம் என்ன பேசுவது? என அவன் மனநிலை மாறிப் போனது.

“உனக்கு எப்போ என்மேல் நம்பிக்கை வருதோ.. அப்போ கூப்பிடு..! பேசுவோம். போயும் போயும் உன்னை எனக்கு ஏன்டி பிடிச்சுது.? என்னைப் புரிஞ்சுக்கக் கூட முயற்சி செய்யாத உன்னை மட்டும் தான் இப்போவும் பிடிச்சுத் தொலையுது. உன்மேல் இருக்கிற இந்தக் காதலை கடைசி வரை சுமந்துட்டு திரியறது தான் நான் வாங்கி வந்த சாபம் போல.? எனக்காகவாவது நீ சில வருடங்கள் முன்னவே பிறந்திருக்கலாம்..!” என ஆற்றாமையோடு சொன்னவன் விறுவிறுவென கீழிறங்கி சென்றிருக்க, புரியாமல் மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் ஆருத்ரா.

அவன் சொன்னதன் பொருள் இப்போதும் அவளுக்கு விளங்கவில்லை. என்ன சொன்னான் எனப் புரியாமல், அவன் தன்னைவிட்டு விலகிச் செல்வதை அவள் பார்த்திருக்க, அவள் மனதிற்குள்ளோ, ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.

“நான் சீக்கிரம் பிறந்திருக்கணும்ன்னு சொல்லிட்டு போறான். நான் பிறக்கிறது என் கையிலா இருக்கு? என்ன சொல்றான் இவன்? ஒண்ணுமே புரியலையே/!”

“என் மேல் வச்ச காதலை இவனை யாரு சுமக்க சொன்னது? இவன் என்ன சொல்றான்னு புரிஞ்சுக்கிறதுக்கே எனக்கு இன்னொரு மூளை வேணும் போல..!” எனப் புலம்பியபடி அவள் நின்றிருக்க, இரவு நேரத்தில், படுக்கையில் மகளைக் காணாமல், அவளைத் தேடி வந்திருந்தார் அபிராமி.

“இந்நேரத்தில், இங்கண என்னடி செய்ற? பேய் உலாத்தற நேரத்தில் ஒத்தையில் நின்னுட்டு இருக்க?!” என அவர் கேட்க அசையாமல் எங்கோ பார்த்தபடி நின்றாள் மகள்.

“நிஜமாவே பேய் எதுவும் பிடிச்சுருச்சா எங்கிட்டோ பராக்கு பார்த்துட்டு நிற்கிறாளே..?” எனப் புலம்பியவர், மகளைப் பிடித்து உலுக்கினார்.

“ம்ப்ச்! என்னம்மா? இங்கே ஏம்மா வந்த? என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடும்மா!” சலிப்பாய் அவள் சொல்ல,

“லூசாடி நீ? நடுராத்திரி மெத்தையில் (மொட்டை மாடி) நின்னுக்கிட்டு விளையாடிட்டு இருக்கியா? அர்த்த ராத்திரியில் உன்னைக் காணோம்ன்னு தெரிஞ்சதும், தேடி ஓடி வந்தவளைப் பார்த்து, நீ இதுவும் பேசுவ, இன்னுமும் பேசுவ டி!” எனச் சொன்னார் அபிராமி.

“ஏன் ஓடிப் போய்ட்டேன்னு சந்தேகப்பட்டு ஓடிவந்தியா? கவலைப் படாதேம்மா. நான் எங்கே போனாலும், ஏன் இந்த உலகத்தோட இன்னொரு மூலைக்குப் போனாலும் கூட, உன் மருமகன், என்னைப் பத்திரமா கொண்டு வந்துருவான்.!” அவன் இதுவரை செய்ததையெல்லாம் மனதில் வைத்து விளையாட்டு போல் தன் அன்னையிடம் சொன்னாள் அவள்.

“சும்மா என்னத்தையாவது உளறாமல், வந்து தூங்கு டி!” என அவளை அழைத்துப் போனார் அபிராமி. யோசனையுடனே, அன்னையுடன் சென்று, கட்டிலில் படுத்தவளுக்கு தூக்கம் வர மறுத்தது. இமயவரம்பன் இறுதியாய் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள், மீண்டும், மீண்டும் அவள் மனதிற்குள் வந்து பாடாய் படுத்தியது.

“என்னைப் புரிஞ்சுக்க முயற்சி கூட பண்ணாத உன்னை மட்டும் தான் பிடிச்சு தொலையுது.. எனக்காகவாவது நீ சில வருடங்கள் முன்னவே பிறந்திருக்கலாம்!”  என்ற அவனின் வார்த்தைகள் உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“அவனை நான் புரிஞ்சுக்கணும்ன்னா எந்த விஷயத்தில்? எதுவுமே தெரியாமல் நான் எதைப் புரிஞ்சுக்கணும்? நான் சில வருஷம் முன்னாலேயே பிறந்திருக்கணும்ன்னு அவன் சொல்றான்னா, இந்தக் கல்யாணத்திற்கு வயசு தடையாய் இருந்ததா என்ன?” தாமதமாக யோசித்தாலும், சரியாக யோசித்தாள் ஆருத்ரா. பின் ஏதோ யோசனை வந்தவளாய்,
“ம்மா..!” என தன் அன்னையை எழுப்பினாள்.

“என்னடி.. சும்மா நொய் நொய்ன்னுட்டு இருக்கே?”
“ஒண்ணே ஒண்ணு உன்கிட்டே கேட்கணும்மா!”

“அர்த்த ராத்திரியில் தான் இதை கேட்கணும்.. அதைக் கேட்கணும்ன்னு சொல்லுவ? என்னதான்டி உன் பிரச்சனை?!”

“இமயனை நம்ம தாத்தாவுக்கு எப்படி தெரியும்? நீ அவனை ஏற்கனவே பார்த்திருக்கியா?”
“ம்ம்ம்.. உன் தாத்தாவும், இமயனோட தாத்தாவும் சினேகிதர்கள் ஆரு. இமயனோட தாத்தா இறந்த பிறகு, அவங்க தொழில் நொடிச்சுப் போச்சு. இமயனோட அம்மா அப்பாவிற்கு விவசாயத்தை தவிர வேறு தொழில் இல்லை. விவசாயம் ஒண்ணும் லாபம் சம்பாதிக்கிற தொழில் இல்லையே? அப்போ உன் தாத்தா தான் அவனைக் கட்சியில் சேர்த்து விட்டதே. அதுக்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமா அவங்க முன்னேறி வந்தாங்க. இமயன் சின்ன வயசில் நம்ம வீட்டுக்கு அவன் தாத்தாவோடு வருவான். உன்னைத் தூக்கி வச்சு விளையாடுவான். உனக்கு பட்டாம்பூச்சியெல்லாம் பிடிச்சு கொடுத்திருக்கானே.. ஞாபகம் இல்லையா?!” என அபிராமி கேட்க அவள் மூளைக்குள் மின்னல் வெட்டியது.

தன் நினைவடுக்குகளில், தொலைந்து மறைந்து போனதை மீண்டும் கண்டெடுக்க முற்பட்டாள். பதிமூன்று வயது சிறுமியான அவளுக்கு பட்டாம்பூச்சி பிடித்துத் தரும் மீசை வைத்த ஆண்மகனின் தோற்றம் அவள் விழிகளுக்குள் வந்து போக, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்திருந்தாள். தன் மூளைக்குள் மின்னலாய் அடிக்கடி வந்து போகும் இந்தக் காட்சி, தன் கற்பனை என அவள் நினைத்திருக்க, நடந்ததெல்லாம் உண்மை என அவள் உணர்ந்த அதே நேரம், இருபத்து மூன்று வயதான இமயனின் முகம் அவளுக்குத் தெளிவாக நினைவிற்கு வர,

“மாயன்..!” என அவள் இதழ்கள் மென்மையாய் உச்சரித்தது.

“நேசிப்பவர்களின் மீதான
கோபத்தை..

மௌனத்தால் நிரப்பிடுங்கள்..!

கோபத்தில்
வரும் வார்த்தைகளுக்கு..

சாபத்தின் சாயல்..!”

  (படித்ததில் பிடித்தது)

******

“தேங்க்ஸ் அர்ஜுன்..!” எதிரே அமர்ந்திருந்த அர்ஜுனைப் பார்த்துச் சொன்னான் இமயவரம்பன்.

“நமக்குள்ளே எதுக்குடா தேங்க்ஸ்? எனக்கு உன்னைத் தெரியாதா இமயன்?” என பதில் கேள்வி வந்தது அர்ஜுனிடமிருந்து.

“தெரியும் மச்சி.. இருந்தாலும், உங்க அப்பாவுக்கே எதிரா வந்து பேசியிருக்க.. உன் அப்பாவே உனக்கு எதிரா திரும்புவார்ன்னு தெரிஞ்சும் எப்படி டா? நானே உங்க ரெண்டு பேரையும் எதிரே நிப்பாட்டிட்டேனே?!” வருத்தம் தேங்கிய குரலில் சொன்னான் இமயன்.

“டேய் மச்சான்! ஐ அம் நாட் அ கிட்! நான் ஒண்ணும் குழந்தை இல்லை டா. நான் என்னோட பிஸ்னஸை சக்ஸஸ்ஃபுல்லா ரன் பண்ணிட்டு இருக்க பிஸ்னஸ் மேன் டா. நீ சொல்றதைக் கேட்டுத்தான் இதை செய்யணும்ன்னு எனக்கு அவசியம் இல்லை டா.! நம்மளைப் பெத்தவங்க அப்படிங்கிற ஒரே காரணத்திற்காக அவங்க தப்பு பண்ணுறதை ஆதரிக்க முடியுமா என்ன? அதைத் தானே நானும் செஞ்சேன்?” நிதானமாகப் பேசினான் அர்ஜுன்.

“இருந்தாலும்.. நான் சொன்னவுடனே, எனக்காக வந்ததுக்கு தேங்க்ஸ் டா! என்னதான் நீ என் நண்பனாக இருந்தாலும், நான் உனக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கேன் டா. நிறைய சூழ்நிலைகளில், நீ என்னை நம்பியிருக்க.. எனக்காக என் கூட நின்னுருக்க.. இதுக்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியலை.!” யாரிடமும் வெளிப்படுத்தாத தன் உணர்வுகளை தன் நண்பனிடம் வெளிப்படுத்தினான் இமயவரம்பன்.

“டேய்.. நீ எனக்கு வெறும் நண்பன் மட்டும் இல்லை டா! என் மச்சான். என் தங்கச்சியை கல்யாணம் பண்ணும் முன்னவே நீ எனக்கு நண்பன் டா. என் தங்கச்சி வாழ்க்கையோட சேர்த்து உன் வாழ்க்கையையும் அந்த ஆளு அழிச்சுட்டாருன்னு நினைக்கும் போது, கோபம் தான் வருது. ஒருவேளை கவிநயாவுக்கு உன்னைப் பிடிச்சிருந்து, நீயும் அவளும் சேர்ந்திருந்தால், சந்தோஷப்படுற முதல் ஆள் நானாகத் தான் இருந்திருப்பேன். ஆனால் அவளோட சாய்ஸ் நீ இல்லையே?” கடைசி வரிகளைக் கொஞ்சம் வருத்தமாய் சொன்னான் அர்ஜுன்.

தன் நண்பனைப் போன்ற ஒருவன், தன் தங்கைக்கு கணவனாக அமைவதில் முதலில் சந்தோஷப்பட்டவன் அர்ஜுன் தான். ஆனால் இருவருக்கும் நடுவே, மயில்ராவணன் தன் சதுரங்க விளையாட்டை ஆடியிருக்கிறார் என்பது தெரிந்ததும், முதலில் கோபப்பட்டவனும் அவன். இது ஒன்றும் அரசியல் விளையாட்டில்லையே..?

இருவரின் வாழ்க்கை. ஒரு பக்கம், அவனின் உடன் பிறந்த தங்கை கவிநயா. இன்னொருபுறம் தன் ஆருயிர் நண்பன். யாருக்காக நிற்பது? யாரிடம் சமாதானம் சொல்வது? ரொம்பவே தவித்து தான் போனான் அர்ஜுன். ஆனால், அந்த நேரத்தில் இமயன் எடுத்த தெளிவான முடிவினால் மட்டுமே இன்று கவிநயா நிம்மதியாய் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையை சீர்படுத்தியதில், இமயனுக்கு நிரம்பவே கடமைப்பட்டிருக்கிறான் அர்ஜுன்.

“என்னோட சாய்ஸும் கவிநயா இல்லை அர்ஜுன்.!” கொஞ்சம் நிமிர்வாய் அழுத்தமாகவே சொன்னான் இமயன்.

“எனக்குத் தெரியும் டா. ஆனால், இப்படி ஒண்ணு நிகழாமல் தடுத்திருக்கலாம் இல்லையா? இப்போ உன் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்குதே?!” நிஜமான வருத்தத்துடன் சொன்னான் அர்ஜுன்.

“சில விதிகளை நாம மீற முடியாது அர்ஜுன். அப்படித்தான் கவிநயாவுடனான இந்தக் கல்யாணமும். அது நடக்கணும்ன்னு விதி இருந்திருக்கு.. நடந்துடுச்சு அவ்வளவு தான்.! இனிமே அதைப் பேசுறதில் அர்த்தம் இல்லை அர்ஜுன்.!” என அந்தப் பேச்சு அதற்குமேல் தொடரவிடாமல், நிறுத்தினான் இமயன். அவனைப் பொருத்தவரை, கவிநயா அவனின் கடந்தக் காலம். அவனின் நிகழ்காலமாகவும், எதிர்காலமாகவும் இருக்கப் போகிறவள், அவனின் ஆரா மட்டுமே.. அப்படியிருக்கையில், இந்தப் பேச்சுக்ள் அநாவசியமானது தானே?

“அப்பறம் தங்கச்சி என்ன சொல்றாங்க? பேசணும்ன்னு சொன்னியே மச்சான்.. என்ன ஆச்சு? எல்லாத்தையும் சொல்லிட்டியா?” எனப் பேச்சை இலகுவாக்க முயன்றான் அர்ஜுன்.

“உன் தங்கச்சி தானே? நான் சொல்ல வர்ரதை  பொறுமையாய் அவள் கேட்டால் தானே.? எனக்குத் தெரிஞ்சு, இவள் குறை மாதத்தில் பிறந்திருப்பா போல.. எல்லாத்திலும் அவசரம். நான் சொல்றதைக் கேட்கிற பொறுமை கூட அவளிடம் இல்லை.! ஆனாலும் அவள் கோபம் நியாயமானது தான் மச்சி!” என ஆராவைப் பற்றி பேசியதுமே அவன் முகம் மென்மையாவதை இரசனையுடன் பார்த்திருந்தான் அர்ஜுன்.

“ஏய்.. இதில் நீ கில்ட் ஆகறதுக்கு ஒண்ணுமே இல்லை டா! இதெல்லாம் நடக்கணும்ன்னு விதி இருந்திருக்குன்னு நீ தானே சொன்ன? விடு மச்சான் பார்த்துக்கலாம்!”

“அவள் கேட்கிறதும் நியாயம் தானே டா? பொதுவாவே பொண்ணுங்களுக்கு, அவங்க செக்கெண்ட் சாய்ஸா இருக்கிறது பிடிக்காது டா. அதிலேயும் எனக்கும் அவளுக்கும் பத்து வயசு வித்தியாசம். எப்படி அவளுக்குப் பிடிக்கும் சொல்லு? நான் இன்னொரு பொண்ணோட வாழ்ந்தவன்ங்கிற அவளோட நெனைப்பையும் தப்பு சொல்ல முடியாது தானே?”

“நீ தான் கவி கூட வாழவே இல்லையே டா?”அதிர்ச்சியாய் சொன்னான் அர்ஜுன்.

“அது அவளுக்குத் தெரியாதே டா. நான் சொன்னாலும், பொய் சொல்றதாகத் தானே அவள் நினைப்பா. என்னை அவளுக்குப் புரிய வைக்க கொஞ்ச காலம் தேவைப்படும்ன்னு நினைக்கிறேன் டா!” என இமயன் சொல்ல,

“எல்லாத்துக்கும் என் அப்பா தானே டா காரணம்.? அந்தாள் செஞ்ச தப்பை நான் தானே சரி செய்யணும்? நான் வேணும்ன்னா ஆருத்ரா கிட்டே பேசவா?!” என தன் நண்பனுக்காய் யோசித்தான் அர்ஜுன்.

“சில விஷயங்களில் மீடியேட்டர்ஸ் தேவைப்பட மாட்டாங்க அர்ஜுன். காதலும் அப்படித்தான்.!”

“நல்லா டையலாக்கெல்லாம் பேசுற மச்சான். காதல் உன்னை கவிதை எழுத வச்சுடும் போல..!” சிரித்துக் கொண்டே கேட்டான் அர்ஜுன்.

“காதல் எல்லாத்தையும் சாத்தியப்படுத்தும். நான் அவள் மேல் வச்சிருக்கிற அன்பு அதீதமானது. என்னை விட நான் அவளை அதிகமாக நேசிக்கிறேன் டா. ஆனால், அவளுக்கு என் காதலை தெரியப்படுத்தாமல் விட்டது தான் நான் செஞ்ச தப்பு. சின்ன பொண்ணுன்னு நினைச்சேன் டா. ஆனால், அதுவே என் வாழ்க்கையை மாத்திடும்ன்னு நினைக்கல! ஆனால், பழசையே நினைச்சுட்டு நான் அப்படியே நின்னுட மாட்டேன் டா. இத்தனை நாள் வாழாத வாழ்க்கையையும் சேர்த்து அவளோட வாழணும்!” கண்களில் கனவுடன் சொன்ன இமயவரம்பனைப் பார்த்து, அர்ஜுனின் கண்களில் நீர் துளிர்த்தது. நண்பன் அறியாமல் அதை மறைத்துக் கொண்டவன், இமயனை இறுக அணைத்திருந்தான்.

“நீ இதுவரை வாழாததற்கும் சேர்த்து வாழணும் டா! இதைத் தடுக்க யார் வர்ராங்கன்னு பார்க்கலாம்!” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் கதவு தட்டப்பட்டது.

“எஸ் கம் இன்..!” என அர்ஜுன் சொல்ல, அவனுக்கு மரியாதை செய்யும் விதமாய் சல்யூட் அடித்தபடி வந்து நின்றார் அந்தக் காவலர்.

“ஸார்! ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. அதை விசாரிக்க கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுக்கணும்.!” எனத் தயங்கி தயங்கி சொன்னார் அவர்.

“என்ன கம்ப்ளைண்ட்? யார் கொடுத்தா?!” என அதிர்வுடன் அர்ஜுன் கேட்க,

“ஸா..ர்! அது வந்து..!” என அவர் இழுக்க,

“என்ன ஸார்.. இழுக்குறீங்க? யார் கம்ப்ளைண்ட் கொடுத்தா? என் மேலேயா? இல்லை அர்ஜுன் மேலேயா?” என இமயன் இடையிட்டு கேட்க, அந்தக் காவலரோ பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்தார்.

“நானும், அர்ஜுனும் ஆள் வச்சு உங்க முதலமைச்சரைக் கொல்லப் பார்த்தோம்! நாங்க அனுப்பின ஆள் உங்கக் கிட்டே மாட்டிக்கிட்டான். அதனால், நீங்க எங்களை  விசாரிக்க வந்திருக்கீங்க சரியா?!” என இமயன் கேட்க, தலையை மேலும் கீழுமாய் ஆட்டினார் அந்தக் காவலர்.

“கம்ப்ளைண்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடி உங்க தலைவருக்கு மூளை இருக்கான்னு கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க! பழைய சினிமாவெல்லாம் பார்த்து கெட்டுப் போய்ட்டார் போல.. இப்போவும் நீங்க எங்களை அரெஸ்ட் பண்ணணும்ன்னு நினைச்சால், இதோ இருக்கு முன் ஜாமீன். அதனால் நீங்க எங்களை அரெஸ்ட் பண்ண முடியாது. அதோட அந்த சம்பவம் நடந்தப்போ நாங்க எங்கே இருந்தோம்ங்கிறதுக்காண சான்று.. அதாவது அலிபி (Alibi). அலிபி அப்படின்னா என்னன்னு தெரியுமா?! அடுத்தது உங்கக் கிட்டே மாட்டினவனுக்கும், எங்களுக்கும், எந்தச் சம்மந்தமும் இல்லைங்கிறதுக்கான ப்ரூஃப். இது மட்டும் போதுமா? இல்லை வேறு எதாவது வேணுமா?” என நக்கலாய் இமயன் கேட்க,

“ஸார்.. ஸாரி சார்! என்னை விசாரிக்க உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க! அதைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது ஸார்!” எனப் பணிவாய் அந்தக் காவலர் சொல்ல,

“உங்களுக்குத் தேவையான பேப்பர்ஸ் இங்கே இருக்கு. உங்களை அனுப்பினவங்கக் கிட்டே கொண்டு போய் கொடுங்க!” எனச் சொல்லிவிட்டு அந்தக் காவலரை அனுப்பிய இமயன்,

“மச்சி! உங்க அப்பா அடுத்த காயை நகர்த்திட்டாரு! டிவியைப் போடு பார்ப்போம்.!” தலைக்குப் பின்னால் கரத்தை மடக்கியபடி மெத்திருக்கையில் சாய்ந்தான் இமயவரம்பன்.

“என்னைக் கொல்வதற்கு சதி நடந்திருக்கிறது. இது எதிர்க்கட்சியின் சதியா? இல்லை கூட இருந்துக் கொண்டே குழிப்பறிக்கும் குள்ளநரிகளின் சதியா? என்னை அழிக்கத் துணிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களால் தப்பவே முடியாது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.!” என மயில்ராவணன் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்க,

“உங்க அப்பாவுக்கு டையலாக் எழுதிக் கொடுக்கிறது யாரு டா? கொலை முயற்சி நடந்துருக்குன்னு சொல்றார். சின்ன காயம் கூட, இல்லாமல் நிற்கிறாரே? மக்களுக்கு சந்தேகம் வராது? உன் அப்பாவோட இமேஜை டேமேஜ் பண்ண வேற யாருமே வெளியிலிருந்து வர வேணாம். அவர் மட்டுமே போதும்!” என இமயன் சொல்ல,

“டையலாக் எழுதவே அரசவைக் கவிஞர் மாதிரி ஒருத்தரை கூட வச்சிருக்காரு டா! அதை விடு, என் அப்பா இப்படித்தான் செய்வாருன்னு உனக்கு எப்படி தெரியும்?!” என ஆர்வமாய் கேட்டான் அர்ஜுன்.

“ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுங்கிற மாதிரி, சின்ன கால்குலேஷன் தான். என்னை வேறு வழியில்லாமல் வேட்பாளராய் அறிவிச்சுட்டாரு. இனி நான் தேர்தலில் நிற்பதைத் தடுக்கணும்ன்னா என் மேல் கேஸ் வர்ர மாதிரி சூழ்நிலையை உருவாக்கணும். அதைத் தான் இப்போ பண்ணிட்டு இருக்காரு உங்க அப்பா!” என சிரித்தபடியே அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவனை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

“மிதமிஞ்சிய நேர்மை ஆபத்தானது..

நேரான மரங்களே முதலில் வெட்டப்படும்:

நேர்மையான மனிதர்களே..
முதலில் குறிவைக்கப்படுவார்கள்!”
                                                     (சாணக்கிய நீதி)

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்