
கதை இனிதாய் நிறைந்தது 😍
சிவா – ஷக்தியோடு பயணித்த அனைத்து வாசகர்களுக்கும் என் நன்றியும் வணக்கமும்.
இந்த கதை முடிந்து இரண்டரை வருடங்கள் சென்றும் இந்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. என் எழுத்தையும் கதாபாத்திரங்களையும் நன்முறையில் விமர்சனம் செய்து, பாராட்டியவர்களுக்கு என் அன்பும் நன்றியும் ❤️
விரைவில் வேறொரு கதையில் சந்திப்போம். நிச்சயம், அவளே என் அந்தாதி கதைக்கான தொடர் நீடிக்கும், வெவ்வேறு பாகங்களோடு 🤩
ப்ரியங்களுடன்,
சாம்பவி திருநீலகண்டன் 👑
❤️❤️❤️❤️❤️❤️❤️
அடுத்த நான்கு நாட்களில் ஆடி மாதம் முடிந்த கையோடு, கருணா பாரதியோடு உண்ணாமலை மட்டும் குஜராத் வந்திருக்க, லாவண்யாவை முன் வைத்து ஷக்தியின் வளைகாப்பை வீட்டளவில் செய்து முடித்திருந்தான், ஆராவமுதன்.
அண்ணங்காரனின் பிடிவாதம் வென்றிருந்தது. அதற்கு தங்கையின் ஒத்துழைப்பும் அபாரமாய் இருந்தது.
இதில், சிவா ஒதுங்கி நின்றிருந்தான் என்றால் ப்ரமோத் வரவே இல்லை.
“என் மேல கோபம் தான ப்ரமோத்தண்ணா” என்று ஷக்தி ஆரம்பிக்கும் முன்பே,
“ஆரா, எனக்கு லீவ் இல்லைன்னு தெரியும் தான” என்றுவிட, அவன் கடுமையில் அமைதியானாள்.
ஜான்வி, “நா இருக்கறது எல்லாம் கண்ணு தெரியாது. மாவாட்டர கலெக்டர் மட்டும் வேணும், ம்ம்?” என்க,
ப்ரத்வி, “ஆமா தான்’ம்மா. என்ன இருந்தாலும் நீங்க சித்தியோட ப்ரமோத்தண்ணா ஆகமாட்டீங்க தான?” என்க, ஷக்தி ஒரு ஹே-பை அடித்துக்கொண்டாள் அவளுடன்.
உண்ணாமலை கூட, “சக்திக்கு நீயி தானடா எல்லாம் செய்யனும்ப. இப்போ என்ன வந்து ஏறுச்சாம் உம்மேல?” என்று கேட்கும் அளவிற்கு இருந்தான் சிவனேஷ்.
அவனின் அந்த செயல் ஷக்தியை உசுப்ப, அண்ணனிடமே இழைந்துக்கொண்டிருந்தாள்.
அதிலும், “பூக்குட்டி, மாமாவுக்கு இந்த ஷர்ட் கொடுடா”
“ஈஷூ, மாமா சாப்டாரா கேளுங்க. இல்லேனா பாட்டிய எடுத்து வைக்க சொல்லுங்க”
திரும்ப, “பூ’ம்மா..” என்று மீண்டும் ஆரம்பித்தவளை,
“இனி என் பொண்ணுக்கிட்ட வேல சொன்ன, பிச்சிடுவேன்டீ உன்ன” என்று சினந்துவிட்டான் சிவா. அதுதானே அவளுக்கு தேவை.
ஒரு சீண்டும் புன்னகையுடன் அவள் அவன் முகத்தை நோக்க, சிவாவின் பூவம்மாவோ, “அம்மா, மாமா சாப்டார். நா கொடுத்த ஷர்ட் போட்டுட்டார். நீங்களும் சாப்பிட்டு, சாரீய நல்லா பிடிச்சிட்டு நடந்து வருவீங்களாம். ம்ம்” என்க, மேலும் சிவந்துவிட்டான் சிவா.
ஆராவமுதனின் ஆசையை நிறைக்க செய்து அவளின் மூன்றாவது மகவின் வரவை மகிழ்வுடன் எதிர்பார்த்தாள், ஷக்தி ஆராதனா.
அன்றிரவே சிவாவின் குடும்பத்தார் தமிழகத்திற்கு பயணமாகியிருந்தனர்.
அயர்ந்து போய் சாய்வாக படுத்திருந்தாள், ஷக்தி. அவள் உடலில் இருந்த சக்தி எல்லாம் வடிந்திருக்க, இளஞ்சூடான பாலை மட்டும் மெது மெதுவாய் பருகிக்கொண்டிருந்தான். உடன், அவள் வயிற்றின் மீது கைப்போட்டபடி உறங்கிக்கொண்டிருந்தாள், ஈஷா.
மகளின் தலை வருடி, அவள் கையில் முத்தமிட்ட பின்
ஷக்தியிடம் வந்தவன், “முக்கியமான கேஸ் இருக்கு, என் ரூம்ல தான் இருப்பேன்” என்றவன் என்ன நினைத்தானோ அவள் நுதலில் ஆழ்ந்து ஒரு மென்முத்தத்தைப் பதித்தான் அவள் ஷிவ்.
கண்ணில் மெல்ல நீர் இறங்கியது அவளுக்கு. “இதுக்கு, ஏழு மாசமாச்சுல உனக்கு” என்க, அவன் பார்வையில் சலனமில்லை.
இருந்தும், அந்த ஷணத்தின் இனிமையை துளித் துளியாய் அவள் அனுபவிக்கிறாள் என்பதை உணர்ந்தவன், “பட்றீ” என்றபடி சென்றுவிட்டான்.
அவளுக்குத் தான் அது ஏழு மாதங்களுக்கு பின்பான முத்தம். அவனுக்கு அது ஏழு மணிநேரம் சென்ற பின் அவன் கொடுக்கும் முத்தமது!
காலை விழித்தவளுக்கு, “சிவா மிட் நைட்டே கிளம்பிட்டான் ஆரா. முக்கியமான கேஸ், போயே ஆகனும்னு சொன்னான்” என்று அறிவித்தாள் மேகா.
“ரைட்” என்றவள் உண்டு, உறங்கி தெளிய, மெல்ல வலியெடுக்க ஆரம்பித்தது.
“ஓ பாய்! வீட்டுல யாரும் இல்லாத நேரமாதான் நீங்க வெளிய வரனுமாடா?” என்றவள் மேகாவிடம் விஷயத்தை சொல்ல,
“இரு எல்லாரும் இங்க பக்கத்தில தான போயிருக்காங்க. சொல்லிடுறேன்” என்றவள் பரபரத்தாள்.
“ஷிவ், உன் மகன் அன்லோட் ஆக போறார். சீக்கிரமா வந்துடு மேன், வீ வில் பீ வெயிட்டிங்” என்று மெசேஜை தட்டிவிட்டு ஆராவமுதனுக்கு அழைத்துவிட்டாள்.
“ஈசா, எங்க இருக்க?”
“ரூம்’ல தான் ஆரா. ஏன்?”
“சரி, சீக்கிரம் வா. உன் மருமக பிள்ள துள்ளீட்டு வெளிய வர பாக்குது” என்க, “ஏய் ஷக்தி” என்று பதறிக்கொண்டு கிளம்பி வந்தான், ஆராவமுதன்.
அதற்குள் அவள் ஹாஸ்பிடல் பேக், பைல், பேப்பர்ஸ், தண்ணீர் போட்டல் முதற்கொண்டு தயாராக வைத்திருந்தாள் மேகா.
பெரியவர்களுக்கு தகவல் கொடுத்தும் இன்னும் வந்தபாடில்லை.
ஆராவமுதன் வந்தவுடன் படபடத்து பரபரப்பாகிவிட, “வா, மொத. இங்கிருந்து எத்தன தூரம் ஹாஸ்பிடல்? டாக்டருக்கு சொல்லிட்டியா? எல்லாம் ரெடியா தான இருக்கும்? உன் புருஷன் எங்க போய் தொலஞ்சான்?” அத்தனை கேள்விகளுக்கு நடுவில் ஷக்தியை பத்திரமாய் காரில் அமர வைத்து சீட் பெல்ட்’டை போட்டுவிட்டான்.
“அண்ணீ, முருக்ஸ்’க்கு பை சொல்லிட்டேன். நீங்க தின்னூரு இன்னும் வைக்கல” என்க, ஓடி போய் அதை எடுத்து வந்து வைத்துவிட்டாள் மேகா.
அப்போது கூட கணவன் மனைவி நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவனும் அவர்களுடன் வர சொல்லவில்லை, மேகாவும் ஷக்தியுடன் செல்லவில்லை.
இருந்த பரபரப்பில் ஷக்தியும் அதை கவனிக்கவில்லை!
கூகுளின் உபயத்தால் கார் வேகமெடுத்திருந்தது.
வலி விட்டுவிட்டு வர ஆரம்பித்திருக்க, அமுதனின் சட்டையை பிடித்து கொண்டு அண்ணனின் தோள் சாய்ந்தாள், ஷக்தி.
“டேய் ஆரா, ரொம்ப வலிக்கிதா?” ஆராவமுதன் விடாது கேட்க, அவளிடம் பதிலில்லை.
பயத்தோடு அமர்ந்திருந்தவன் மனம் காரணமின்றி மேகாவின் இரண்டாவது பிரசவத்தை நினைத்து கூறுபோட்டது.
“நோ.. நோ.. என் ஆராவுக்கு ஒன்னுமில்லை” என்றவன் தங்கையை தோளோடு அணைத்துக்கொள்ள, மருத்துவமனை வந்திருந்தது.
சிவாவிற்கு தகவல் இன்னும் சென்றிருக்கவில்லை. நிச்சயம், அவன் களத்தில் நின்றிருப்பான் என்பது தின்னம்.
அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கையுடன் சிவாவின் கீழ் இயங்கும் அதிகாரிக்கு தகவல் கொடுத்திருந்தாள், மேகவர்ஷினி.
அதற்குள் முற்றும் துவண்டுவிட்டிருந்தாள் ஷக்தி. அவள் உடலின் தெம்பு மொத்தமாய் காணாது போயிருக்க, வியர்த்து வடிந்தாள்.
அமுதனின் தோளில் இன்னும் சாய்ந்தபடி மெல்லிய குரலில், “முடில ஈசா.. இந்த சின்னது ரொம்ப என்னை படுத்தறான்” என்றவள் கை வயிற்றை தாங்கியிருக்க, லேசாய் தள்ளாட்டாம் கண்டது அவள் உடல்.
“அவ்வளவு தான், உள்ள போயிடலாம் ஆரா. ஸ்ராங் கேர்ள் தான நீ, எங்க ஆரா ஸ்ராங் கேர்ள். கொஞ்சம் சமாளிடா. சிவா வந்துடுவான். நீ இப்போ ஸ்ராட்ங்கா இல்லேனா உன் புருசேன் என்னைய கொன்னா கூட ஆச்சர்யமில்ல, பாத்துக்கோ ஆரா” என்று சமாதானம் அவனுக்கும் சேர்த்து தான் சொல்லிக்கொண்டான்.
யாரும் இல்லா நேரத்தில் ஷக்தியை அந்த நிலையில் பார்த்தவன் மனது துடிக்க மறந்துதான் இருந்து. எளிதில் தன் உறவுகளுக்கு ஏதேனும் நேர்ந்தால் தாங்காது தவித்து உதிர்பவனுக்கு காலம் சில பாடங்களை கற்று கொடுத்து தேற்றியிருந்தது.
அதான் வெளிப்பாடு தான் ஷக்தியை மீட்டு, தைரியமூட்டிக்கொண்டு மருத்துவமனை வந்திருப்பது.
“ஈசா.. ஈசா.. நா வுமன்டா டேய்” என்று அப்போதும் அவன் துடிப்பறிந்து அவள் சிரிப்புதிர்த்து சொல்ல, பல்லைக் கடித்து வலியை அடக்கிய அவள் சிவந்த முகம் அமுதன் கண்ணில் கண்ணீரை வழிய வைத்தது.
இரண்டு பிரசவங்களை அவளுடன் அண்ணனாய் துணையிருந்த பார்த்தவன் தான். மனைவியின் பிரசவத்தின் போது மேகாவுடனேயே இருந்தவன் தான்.
இருந்தும், இந்தமுறை ஷக்தியின் வயதும் அவள் உடல்நிலையும் அவனை கலங்க வைத்து பந்தாடுகிறது.
“ஒன்னும் இல்லடா பேபி. இன்னும் ப்ஃயூ மினிட்ஸ்’ல குட்டி வந்துடுவார், நீயும் நார்மல் தான். பயப்படாத, என்ன?” என்றபடி ஸ்ரெச்சரில் அவளைப் படுக்க வைத்தவன், முயன்று தைரியம் சொல்லிக்கொண்டிருந்தான்.
வியர்த்து குளிர்ந்த முகத்துடன், “ஈசா” என்றவள் வலியை பல்லைக் கடித்து முழுங்க பார்க்க, முடியாது போனது. விடாத வலியில் மயக்கம் வருது போன்றும் கண்கள் மங்குவதுமாய் இருக்க,
“பசங்க பத்ரம், உன் மொத பொண்டாட்டி வந்தான்’னா சமாளி ஈசா” மூச்சு வாங்க சொன்னவள், மருத்துவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்டாள்.
எமர்ஜென்சி சி-செக்ஷன்
தரப்பட்ட தாள்களில் எல்லாம் ஆராவமுதனின் கண்ணீர் துளி பட்டுப் பட்டு அவன் கையெழுத்துடன் இணைந்து வழிந்தது.
சிவனேஷ், ஷக்தி மற்றும் மேகாவின் குறுஞ்செய்தியைப் பார்த்த பின்னரும் நகர முடியாத சூழ்நிலை.
ஆண்டாள் பிறந்த போதுகூட மொத்த குடும்பம் ஷக்தியோடு இருந்த தைரியத்தில் இருந்தான். ஏன், ஈஷாவின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தவனை பொய்க்காமல் அவன் கையிலேயே வந்து பிறந்திருந்தாள் அவன் செல்வ மகள், ஈஷா இமயவள்ளி.
ஆனால், இந்த சின்னது? உருவானது முதல் தகப்பனை வைத்து செய்கிறது.
ஷக்தியோடு அது வயிற்றில் போடும் ஆட்டங்களை, ஃபுட் பால் உதைகளை அவள் ரசிப்பாளோ இல்லையோ இவன் தான் பயந்து உறைவான்.
“அதுங்க ரெண்டும் சைலண்ட் பார்டிங்க ஷிவ். இத பாரேன், ஹைப்பர் ஆக்டிவ்வா இருக்கான். என்னா உத” அவள் சிலாகிக்க, அவளை முறைப்பான்.
பக்கத்தில் படுத்திருப்பவன், “அடங்கவே மாட்டீயா நீ” என்றால், அவசரமாக அவன் கையை எடுத்து வயிற்றில் வைப்பவள்,
“பேபி, அப்பா மம்மாவ திட்டுறார் பாருங்க” என்றாள் சரியாய் சிவாவின் கை இருக்கும் இடத்தில் ஒரு உதை விழும்!
அதை உணர்பவன் கண்ணை விரித்தாலும், ஷக்தியின் நலனுக்காய் வெடுக்கென்று கையை எடுத்துவிடுவான்.
“ரெண்டும் சேர்ந்து என்னைய தான் ஆட்டி வைக்கறீங்க” என்பவன் வெளியே ஓடிவிடுவான்.
அங்கு, “அப்பு” என்று உருகும் மகளுக்கு ஈடாக அவன் இழைந்தாலும், எட்டி நின்று முறைக்கும் மனைவியின் நலன் அவனை கதிகலங்க வைத்தது.
இப்போதும் அதை நினைத்து களத்தில் கலங்கி நிற்கிறான்.
நெஞ்சம் வேகமாக துடித்தாலும், மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமன் செய்தவன், “ஆரூம்மா” என்றான் எச்சிலை விழுங்கி.
“பீ ப்ரேவ் மை கேர்ள்” என்று வாய்விட்டு சொன்னவன், அடுத்தடுத்து வேலைகளுக்கான ஆணைகளை பிறப்பித்து நகர்ந்திருந்தான், எஸ்.பி. சிவனேஷ் வீரபத்திரன்.
இதோ, தகப்பன் தன்னை பார்க்க வரமாட்டான் என்று நினைத்தான் போல, அடுத்த கால் மணிநேரத்தில் தாய்மாமனின் கையில் வந்து நெளிந்து சிணுங்கினான், சிவாவின் சின்னது.
மொத்த உருவமும் அப்படியே தகப்பன் தான். மினியேச்சர் சிவனேஷ் வீரபத்திரன்.
ஷக்திக்கு உதிரப் போக்கு அதிகரிக்கவே, அவளை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர்.
கையில் குழந்தையிருக்க, அதை கேட்ட அண்ணனவன் பயந்து வெளிறிவிட்டனர்.
மேகாவின் செய்தியை அடுத்து, ஜான்வி அங்கு விரைந்திருக்க, அவள் வந்தவுடன் தான் ஆசுவாசம் கொண்டான், ஆராவமுதன்.
“ஷக்தி எங்க அமுதா” என்று வந்தவள் பிள்ளையை பார்த்தவுடன், “டீ’யா இல்ல டா’வா?” என்றபடி அவனிடமிருந்து வாங்க, “மருமகன் தான்” என்று பெருமையுடன்.
உடன், “ஆராவுக்கு ப்ளீடிங் நிக்கலைன்னு ஐசியூ மாத்திட்டாங்க’க்கா. போய் என்னனு கேளுங்க” என்க, “வேற என்ன சொன்னாங்க? டாக்டர் யாரு?” என்றவள் டாக்டர் மூளை விழித்துக்கொண்டு மேற்கொண்டு நடந்ததை கேட்டறிய தூண்டியது.
லாவண்யா, காளிதாஸ் வந்துவிட அவர்கள் குழந்தையை பார்த்தவுடன் செவிலியர்கள் எடுத்து சென்றுவிட்டனர்.
♪
ஷக்திக்கு உடல்நிலை சற்று சீராகவும் அறைக்கு மாற்ற ஏற்பாடு செய்துவிட்டனர். பிள்ளைகளோடு மேகாவும் யமுனாவும் வீட்டில் இருந்துவிட, அங்கு மேகா வராததை யாரும் பெரிதாக நினைக்கவில்லை.
அறைக்கு மாற்றியவுடன், “24×7 சிவா நெனச்சே பெத்திருக்கா பாரு” என்று ஜானவி கிண்டலடிக்க, சின்னது கண்ணை மூடிக்கொண்டு செப்பு வாய் திறந்து ஒரு பெரும் கொட்டாவி!
“அட, சடவப் பாரு” என்று மெதுவாய் பிள்ளையை கையில் வைத்து ஆட்டியவள்,
“உங்க அப்பா வரவாது தூங்காம இருடா குட்டித் தங்கம்” என்க, “இனி இவன் அவங்கப்பன தூங்க விடுவான்னு நெனக்கற?” என்ற காளிதாஸ் யமுனாவுடன் வந்தார்.
“அத்த, மூனாவது பேரன்” என்றபடி யமுனாவின் கையில் குழந்தையைக் கொடுத்தாள், ஜான்வி.
பேரனை வாங்கிய கையுடன், “சிவா மாதிரியே இருக்கான் லாவி” என்றவர் குரலில் தான் முழித்தாள் ஷக்தி.
ஒரு நாள் முழுவதுமாய் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவளை சற்று முன்னர் தான் தனியறைக்கு மாற்றியிருந்தனர்.
கண் முழித்தவள் கேட்ட முதல் கேள்வி, “ஷிவ் என்ன சொன்னான்?” என்பது தான்.
“என்ன சொல்லனும் உனக்கு?”
அதிலேயே அயர்ந்தவள் மேற்கொண்டு பேசும் முன்னர், “எழுந்து பிள்ளைய பத்தி கேக்கல. வீட்டுல ரெண்டு சின்னதுங்க இருக்கு, அதுங்க என்ன பண்ணுதுன்னு கேக்கல. இதுல புருஷன் என்ன சொன்னான்னு கேக்கறா பாரு” என்றபடி கட்டிலை உயரப்படுத்தி மகனை அவள் கையில் தந்தார், யமுனா.
“பசியாத்திட்டு தூங்குடீ” என்று அவள் மேல் கையில் கிள்ளி வைக்க, “அண்ணி” என்று பரிதாபமாக அழைத்தார் லாவண்யா.
“நீ சும்மா இரு. ஆப்ரேஷன் பண்ண உடம்பா இருந்தாலும் சீக்காளியட்டம் இருந்தா ஆச்சா? மெல்ல எழுந்து அவ வேலையெல்லாம் செய்யட்டும். ஆளாளுக்கு இனி இவள தூக்கி சுமப்பானுங்க வேற” என்று பொரிந்தவரை ஏகத்திற்கு முறைத்து பார்த்தாள், ஷக்தி.
“எனக்கு பேச முடியலை. இல்லேனா..”
“இல்லேனா? என்னடீ பண்ணுவ? எழுந்து வா, நா தான் உனக்கு பத்தியம் பாக்கனும். சிணுங்குன, குமட்டுலையே குத்துவிடுவேன். மூனு பிள்ள பெத்தவ, பொறுப்பா இருக்க வேணாம்?” என்க,
“பொறுப்பு வர பிள்ள தான் பெத்துக்கனுமா? முருகா” என்று அப்போதும் வாய் தான் ஷக்தி.
பிள்ளை பிறந்த இரண்டாம் நாள் அதிகாலையில் தான் அரக்கப் பறக்க மருத்துவமனைக்கு ஓடிவந்தான், சிவா.
“டேய் ஆரூம்மா” என்று வந்தவனிடம் அத்தனை பதற்றம்.
ஜான்வி, “ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க சிவா. எதுக்கு இத்தன டென்சன்” என்க, “இப்டி வந்து நிக்கலேனா தான் அதிசயம் ஜானுக்கா. பூக்குட்டி பொறந்த போவும் இப்படிதான். என்ன அப்போ ட்ரையினி ஆனா இப்போ சீனியர் ஆபிசர் ஆகியும் பயம் போகல” என்ற ஷக்தியை இம்மியும் அவன் கண்டுகொள்ளவில்லை.
ஜான்வி, “சரி, நா வெளிய இருக்கேன்” என்ற சென்றவுடன், அவன் ஆரூம்மாவிடம் தாவிவிட்டான் ஷிவ்.
“தேவையா உனக்கு இது” என்றவன் கரகர பேச்சு, அவள் கழுத்து வளைவில் மேலும் மெளிந்தது.
நார்மல் டெலிவரியை அவன் எதிர்பார்த்திருக்க, சி-செக்ஷனை அவன் துளியும் எண்ணியிருக்கவில்லை.
“டேய்” என்று பக்கவாட்டா அவன் முகத்தோடு முகம் இடிக்க,
“ரொம்ப வலிக்குதுடீ உனக்கு. உன் முகமே காட்டிக்கொடுக்குது. அதான் மொதவே வேண்டா வேண்டானு சொன்னே” என்றான் திரும்பவும்.
“பிள்ளைய பாக்காம, என்னை வந்து கொஞ்சு. எழுந்துரு ஷிவ் மொத” என்றவள் அவனை அதட்டி உருட்டி பிள்ளையைத் தூக்க வைத்திருந்தாள்.
தூக்கியவன் விழிகள் அத்தனை ஆச்சர்யம், மெல்லிய ஆனந்த பளபளப்பு. பரிபூரண நிறைவு!
“உன்ன மாதிரி தான இருக்கான்” என்க, மகனின் பட்டுக் கன்னத்தில் தந்தையின் வெம்நீர் பட்டு படர்ந்தது.
“உன் பூவம்மாவுக்கு தம்பி வந்துட்டார். போதும் தானே?” என்று மீண்டு அவள் வம்பில் இறங்க,
“மோர் தென் இனாஃப்” என்றானே, “அடபாவி சண்டாளா” என்று அவன் புஜத்தில் மெல்ல குத்தினாள், அவன் ஷக்திப் பெண்.
மூன்றாவது பிள்ளை என்ற போதே மருத்துவர்களின் அறிவுரை ஷக்தியால் இது முடியாது என்பதே.
சிவாவும் ஓரளவிற்கு மனதை கல்லாக்கிக்கொண்டு பிள்ளையை வேண்டாம் என்றிருக்க, பெரியவர்களும் அதையே சொல்ல, முடியவே முடியாது என்ற பிடிவாதத்துடன் பிள்ளையை சுமர்ந்தாள், இதோ அவனை பெற்றும் விட்டாள், ஷக்தி ஆராதனா.
அநேக நேரங்கள் பயத்தில் சென்றாலும், அவள் நலமாகத் தான் இருந்தாள். ம்ம், காட்டிக்கொள்வாள்.
இப்போதும் அவள் முகத்தில் படிந்திருந்த வேதனையை பார்த்தான்.
யாருக்காக, அவன் மகனிற்காகவா?
நிச்சயம் இல்லை. ஷக்தியின் ஷிவ்விற்கானது அது!
அவனல்லவா மகனை எதிர்பார்த்தான். அவன் எதிர்ப்பார்ப்பு நிறைவேறாமால் போவதா?
அதையுணர்ந்த இயலாமையுடனான கோபம் தான் சிவாவிற்கு.
ஆயின், இந்த ஒன்பது மாதங்கள் அவன் பயந்த நிகழ்வு இதோ அவன் கண்முன்பு.
ஷக்தியின் வலியென்பது அவன் பார்க்க முடியாத ஒன்று. முதலிரண்டு பிரசவங்கள் கூட அசிஸ்டட் வஜைனல் டெலிவரி தான்.
இங்கு நிலையே வேறு. அதில் அவள் வயதும் பெரிய காரணம்.
உதிரப் போக்கு அதிகத்திற்கும் ஏற்பட்டிருக்க, அதில் இனி அவள் தேறி வர மாதங்கள் ஆகும். அதுவரை, சிவாவின் தூக்கமும் நிம்மதியும் துளியும் அவனிடம் இருக்காது.
அவள் வலியில் முகத்தைச் சுழித்தாள், முனங்கினாள், துவண்டாள், சாப்பிட மறுத்தாள் கோபம் மொத்தமும் அவன் மீதே திருப்பிக்கொண்டு கடினப்பாடுவான்.
அந்த கடினங்களின் இலக்கங்கள் எல்லாம் ஷக்தியின் கையில் தான் இனி. அவளை பிள்ளை(கள்!)யோடு பதமாய் இதமாய் கையாள்வது கூட இனி அவனிடம் தான்.
♥
சின்னது பிறந்து மூன்று மாதங்கள் ஓடியிருக்க, பிள்ளை நன்கு ஊறி அம்மாவுடன் தேறியும் இருந்தான்.
ஷக்தியை பிள்ளைகளை பார்க்கவென்று யமுனா, லாவண்யா மட்டும் குஜராத்தில் இருக்க, மேகா மகன்களோடு பொள்ளாச்சி சென்றுவிட்டாள் தகப்பனுடன்.
இப்போது மொத்த கூட்டமும் ஆழ்வார்திருநகரியில் தான். சின்னவருக்கான பெயர் சூட்டு விழாவை சிவனேஷின் பூர்வீக வீட்டில் வைத்து ஏற்பாடு செய்திருந்தார், நம்மாழ்வார்.
தேனாட்சி அவளுக்கு முதன்முதலாக கொடுத்த ராமர் பச்சை நிற புடவை அணிந்திருந்தாள் ஷக்தி.
முகத்தில் அத்தனை பூரிப்பும் சிரிப்பும் சிந்த, மகனை கையில் ஏந்தியிருந்தவள் மகள்களோடும் கணவனோடும் புகுந்த இல்லம் நுழைந்தாள்.
அவர்களை ஆலம் சுற்றி வரவேற்றாள், நீலவேணி!
வந்தவுடன், “பாட்டி, இந்தா புடிங்க உங்க கொள்ளுபேரன” என்று அவர் ஒன்பது வருடங்களுக்கு முன்பு கொடுத்த நவரத்தின வளையலை அணிந்துக்கொண்டு அவர் கையில் கொடுக்க, நடுங்கிய கரத்தோடு அவர் சந்ததியை வாங்கி கொஞ்சினார் பொக்கை வாய் கிழவி, தேனாட்சி.
சிவாவிடம், “ஓ தாத்தேன் பேர தானய்யா புள்ளைக்கு வெக்க போற” என்க,
“ம்ஹூம், இன்னுமுட்டு உம்ம புருசன் பேர வெச்சா இவேன் நாளக்கி வளந்து நெஞ்ச நிமித்திட்டு சொல்ல முடியுமா? காலத்துக்கு தக்கன தான ஆச்சி பேர வெப்பாங்க” அஞ்சலி வாய் பேச,
ஈஷா, “பாட்டி, உனக்கும் புச்சர் இர்ந்தாரா” என்றாளே மழலையில், அத்தனை சிரிப்பும் ரசிப்பும் பொங்கியது.
“இல்லாமத்தேன் இத்தினி பேரு வந்தீங்களோ” என்று கையில் இருந்த பிள்ளையை இறுக்கிக்கொண்டார்.
உண்ணாமலை, “சக்தி, போய் சாமி ரூம்புல வெளக்க ஏத்திட்டு வா” என்க, அதை மகிழ்வோடு செய்தாள் ஷக்தி ஆராதனா. வருடங்கள் பல சென்றிருந்தாலும் அவள் வைராக்கியம் வென்றிருந்தது.
மொத்த குடும்பமும் அவளை சந்தோஷமாய் இப்போது வரவேற்ற பின்னர் இனி அவள் உண்ணாமலை சொன்னதை செய்யாமலா இருக்கப் போகிறாள்!?
தேனாச்சியிடம், “உங்க கொள்ளு பேரன கொடுத்துட்டேன். விளக்கும் ஏத்திட்டேன். போதுமா?” என்க, கலங்கிய விழிகளோடு நிறைந்து சிரித்தார் பெரியவர்.
கருணா, “போதும்டா, இனி விட்டா எல்லாருக்கும் பசியாகிடும். சீக்கிரம் ஏ மருமகனுக்கு பேர வை. எத்தினி நாளுக்கு தான் பாவம் அவரும் புஜ்ஜூ குட்டிக்கும் தங்க கட்டிக்கும் திரும்பிப் பாப்பார். பேர வெச்ச சட்டு புட்டுன்னு அதுக்கு பழகுவார். என்ன நாஞ்சொல்லுறது?” என்க,
சிவா, “மாமு சொன்னா, மறுபேச்சில்லை” என்று கையை தூக்கிவிட்டான்.
ஆதினி, “என்ன சிவா மாமா, ‘படுத்தே விட்டானாடா இவன்’ மாதிரி ஆகிட்டீங்க” என்க, சிரிப்பலை விரிந்து சுருட்டிக்கொண்டது அந்த வீட்டு மாந்தரை.
நெஞ்சம் நிறைய மகிழ்வோடு, அவன் ஷக்தி பெண்ணின் கைப் பிடித்து, மகள்களின் கையில் இருந்த மகனின் காதில் அவன் பெயரை உச்சரித்து உச்சி முகர்ந்தான், சிவனேஷ் வீரபத்திரன்.
மூன்று முறை பெயரை மகனின் காதில் சொல்லி முகங்கொள்ளா புன்னகையுடன் சிரித்து நின்ற கணவனை தான் இன்பம் முகிழ்க்க பார்த்திருந்தாள், ஷக்தி ஆராதனா.
ஆருத்ராவுடன் நன்மதியும் ஈஷாவும் தம்பிக்கு பெயர் வைக்க தயாராக, “சின்னப்பா, வாங்க இங்க” என்று துருவை அழைத்துக் கொண்ட ஷக்தி, சின்ன மருமகனைத் தூக்கிக்கொண்டு மகனின் காதில் பெயரை சொன்னாள்.
அக்காக்களையும் மாமன்களையும் அலரவிட பிறந்தவனுக்கும் ஏற்ப பெயரை வைத்து அவன் ஆட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தாள், அவனைப் பெற்றவள்.
அவன்,
மித்ர சாஹரன் வீரபத்திரன்
சுபம்!
விரைவில் பாகம் 2ல் சந்திப்போம்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

❤️❤️💕..ஷிவஷக்திக்குள் என்ன ஊடல்… ரொமான்ஸ் குறைந்த மாதிரி இருக்கு… வரும் பாகத்தில் அதற்கு விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்..ஆவலும் ஆர்வமுமாய் இரண்டாம் பாகத்தை எதிர் பார்க்கிறேன்.. வாழ்த்துகள் 💐💐💐💐💐
எத்தனை நாளைக்கு தான் புஜ்ஜி குட்டி, கண்ணு குட்டிக்கு திரும்புவாரு பெயர வெச்சிட்டா அதுக்கு பழகுவாருல. 🤣🤣 ROFL
வயதையும் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு முன்னேற்பாடாக இல்லாமல் போய்விட்ட குற்ற உணர்வில் ஷிவ்.
வீம்பாக அவனது மகன் வேண்டும் என்ற கனவையும் நினைவாக்கி செய்துவிட்டாள் சக்தி.
அத்தை மாமாவின் பூசலை சரி செய்யவே சக்தியின் மகனாய் பிறந்துவிட்டாரா மித்ர சாகரன்