
வணக்கம்,
அந்தாதி – இந்த அத்தியாயத்தோட நிறைவுறுது. ஆனா இன்னும் ஒரு மூன்று எபி வரும். Exclusive Extended Epiloge – அடுத்த பாகத்திற்கான ஆரம்பம். எப்போ வரும கேட்காதீங்க, நானும் எழுத நினைக்கிறேன். முடியலை. ஆனாலும் முயற்சி பண்ணிட்டே இருக்கேன், யார் வருவாங்கன்னு தெரியலை.
ரசிங்க, வாசிங்க. மறக்காம – உங்கள் விமர்சனத்தைப் பகிருங்க 🖇️
லவ் ஃப்ரம் ஷிவ் & ஷக்தி ♥️
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
‘ஆண்டாள் நன்மதி‘ சிவாவையும் ஷக்தியையும் பரிபூரணமாக்க அவர்களின் காதலில் ஜனனமான பூமகள்.
பூரண நிலவாய் அவர்களை ஆளப் பிறந்தவளுக்கு அவள் தாய்மாமனும் தகப்பனும் ஆசையாய் வைத்த பெயர்.
இதோ ஆறு முடிந்து ஏழாம் மாத துவக்கத்தில் அவள் மாமன் மகன் துருவன் மடியில் எச்சில் ஒழுக ஒற்றை விரலை வாயில் அதக்கிக் கெண்டு தகப்பனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள் சிவாவின் பூவம்மா.
ஹைதராபாத் Sardar Vallabhbhai Patel National Police Academy பயிற்சி முடிந்து தமிழகத்தில் ஆறு மாதம் அவனின் பணிகளை மேற்கொள்ள வருகிறான் அவள் தகப்பன்.
அவனின் சொந்த ஊரில் தான் இனி ஆறு மாதம் டிஸ்ட்டிக் பிராக்டிகல் ட்ரைனிங். பின்னர் ஒரு மாதம் அவற்றிற்கான மற்றொரு பயிற்சியுடன் மீண்டும் முழு நேரக் காவலனாகிவிடுவான், சிவனேஷ் வீரபத்திரன்.
மகள் பிறந்த போது பார்க்க வந்தவன் தான். அதன் பிறகு அவளை உச்சி முகர முடியா தவிப்பு, ஸ்பரிசிக்க இயலா நிலை என்று அத்தனையும் அவனைச் சூழ்ந்தாலும் அவனின் குலாப்பைத் தாய்மையின் பூரிப்போடுப் பார்க்க அத்தனை ஆவலோடு ஈரோடு வந்து சேர்ந்தான்.
கோட்டாட்சியர் மக்களுக்காக தன்னின் வழக்கமான பணிகளை முடித்து மகளுக்கான தாயாக வீடு வந்து சேராது நேரே சென்றது என்னவோ அவளின் ஆஸ்தான முருகனிடமே.
அவளின் தகப்பனுக்கு அடுத்த தகப்பன் அவன், ஆறுமுகன். அவள் துவளும் சமயம் தாங்கி பிடித்ததும் இந்த வேலவனே. கஷ்டங்களும் துக்கமும் போட்டியிட மயில் மேல் ஏறிவந்து அவளைக் காத்தவனும் அவனே, இனி வேலோடும் பன்னிரு கரத்தோடும் ஆறு தலையோடும் சிவாவையும் ஷக்தியையும் காப்பதும் அவனே.
அவனை அன்றி அவளுக்கு வேறாறு துணை!
குடும்பத்தார் பெயருக்குப் பூஜை செய்தவள், ப்ரசாதம் வாங்கி வீட்டிற்கு வந்திருக்கச் சிவா இன்னும் வந்திருக்கவில்லை.
முன்னர் அவர்கள் இருந்த அதே வீடு. சிவா இல்லாது கடந்த ஒன்றரை வருடத்தைத் தனிமையில் தவித்து, அழுது, மருகி கரைந்ததெல்லாம் நினைத்து அமர்ந்திருந்தவளின் காதை நிறைத்தது, “ஆரூம்மா” என்ற அவள் கணவனின் அழைப்பு.
தன்னால் அவள் உதடுகள் சிரிப்பில் வளைந்து. பெற்ற மகளைக் கூட அழைக்காது, அவளை அழைக்கிறானே என்ற காதலோடும் சிறு தூவலான கோபமும் முளைக்க அவள் கண்களில் பளபளப்பு.
அதைப் பொறுக்காத அவன் மகளோ, “ஆஆ” என்று அறையே அதிர பயங்கர சப்தம்.
மூன்றரை வயது துருவனின் பிடி நன்மதியை இன்னும் அழுத்தப் பிடிக்க, திமிறி நழுவப் பார்த்தாள் பிள்ளை.
“பூவம்மா” என்று சிவாவின் அழைப்பிற்கு அப்படி ஒரு சிரிப்பு.
கொழு கொழு என்று பொம்மையாய் இருந்த மகளைப் பார்க்கப் பார்க்க உருகியே விட்டான் தகப்பன்.
“தங்கம்மா” என்று பிள்ளையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் கண்ணில் தான் அணையுடைப்பு.
அத்தனை ஏக்கம். கொட்டிக்கிடந்த பாசம்.
பவுடர் மணம் அவனை நிறைக்க, பட்டு முடியைத் தடவித் தடவி ஏக்கத்தை ஈடு செய்தானோ?
அவள் பிஞ்சுக் குட்டிக் கையால் அவன் முகம் முழுக்க அவள் தடவியபடி அவன் கன்னத்தை எச்சில் செய்ய, “ஈஈ” என்ற சிரிப்பு வேறு அவளுக்கு.
அவன் முகத்தை உத்து உத்து பார்க்கவும் அவள் கண்ணைச் சுருக்கவும் சிரிக்கவும் என்று இருக்க அவர்கள் இருவரையும் யாரும் கலைக்கவில்லை.
“அய்யா சிவா, பிள்ளையப் போய் சக்திகிட்ட கொடுத்துட்டுவா. பசியாரட்டும்” என்று தேனாட்ச்சி சொல்லுவும் தான் அவரை நிமிர்ந்தே பார்த்தான்.
நம்மாழ்வார் துவக்கம் ஆதினி வரை அனைவரும் அங்கிருந்தனர்.
“அய்யா” என்றவன் பிள்ளையோடு எழுந்துகொள்ள, “அட உள்ளார போய் சக்திய பாத்துட்டு வாய்யா” என்றார் அவர்.
அடுத்த அறையில், யமுனா லாவண்யா இருக்க, “சிவா” என்று சிரித்த முகமாய் வரவேற்றார் லாவண்யா.
“இந்த சின்னது தெனோம் உன் ஃபோட்டோவ பார்க்காம சாப்டாது. பார்த்தவுடனேயே பாரு பசையா ஒட்டிக்கிச்சு” என்று பிள்ளைக்கு அவர் கிச்சு கிச்சு மூட்ட, கிளுங்குச் சிரித்தாள் பிள்ளை.
“பருத்தி பால் செஞ்சேன், நீ போய் ஆராவ பாரு. எதுட்டு வரேன்” என்றவர் நகர,
“ப்ரமோத்தண்ணா, ஸர் எல்லாம் நல்லா இருக்காளா ஆன்ட்டி” என்றான் யமுனாவிடம்.
“நல்லாயிருக்காங்க தம்பி. அவர் நைட் வந்துடுவார். ப்ரமோ உங்கள லீவ்ல ஊருக்கு வர சொல்லியிருக்கான் தம்பி” என்றார் அவர்.
துருவ் அதற்குள் அவரிடம் தூங்கியிருக்க, அவர்கள் அறைக்குள் ஷக்தியைப் பார்க்கச் சென்றான் அவன்.
“ஷக்தி” என்று உள்ளே நுழைந்தவனைப் பெட்டில் அமர்ந்தவள் இரு கை விரித்து அழைக்க, “ஆரும்மா” என்று நின்றபடி அணைத்துக்கொண்டான்.
அவன் வயிற்றில் முகம் புதைத்தவள், “ஒல்லியாகிட்ட ஷிவ்” என்றாள்.
“நீ குண்டாகிட்டடீ குலாப்” என்றான் அவனும்.
நன்மதி சிரிக்க, “கொழுப்புடீ உனக்கு” என்று மகளின் வயிற்றில் மென்மையாய் குத்தினால் ஷக்தி.
“ஷிவ், பல்லு வந்துடுச்சு இவளுக்கு. எலி மாதிரி கடிக்கறா என்னை” என்று தகப்பனிடம் மகளைப் பற்றி புகார் வாசிக்க,
நன்மதியோ ஏதோ அவசர அவசரமாகக் கத்தினாள்.
அந்த அழகில் விழுந்துவிட்டான் சிவனேஷ். இந்த சொர்க்கத்தைத் தேடித் தானே இத்தனை நாட்கள் அவன் தவித்தது.
“பூக்குட்டி” என்று அழுந்தப் பிள்ளைக்கு ஒரு முத்தத்தை அவன் கொடுக்க, அவன் மீசை குத்தலில் சிணுங்கி அழ ஆரம்பித்திருந்தாள்.
“எல்லாரும் ஷக்தி ஆகிட முடியுமா என்ன? உன் பொண்ணு ரொம்ப சாஃப்ட், அதுக்குத் தக்க கிஸ் பண்ணு ஷிவ்” என்றவள் மகளை வாங்கிக்கொள்ள, அவள் கன்னங்கள் சிவந்துவிட்டது.
”அப்பாவாடா.. அப்பாக்கு டிஸ்யூம் கொடுத்தடலாமா” என்று சிவாவின் நெஞ்சில் மகளை அடிக்க வைக்க, அவளும் ஓரளவிற்குச் சமாதானம் ஆனால்.
“ஆரும்மா” என்று அவள் கைகளைப் பிடித்து அமர்ந்துவிட்டான்.
அவன் வார்த்தைகள் அற்ற மௌனம் ஓராயிரம் அர்த்தங்களைச் சொன்னது அவளுக்கு.
சிவனேஷ் ஆசைப்பட்ட அவனது கனவு, அவன் ஷக்தியின் வற்புறுத்தலால் நிறைவேறியுள்ளது.
அவன் இன்ஸ்பெக்டராகவே இருக்க நினைக்க, அவன் மேல் கொண்ட காதலால், நம்பிக்கையால் அவனை உயர்த்திப் பார்க்க நினைத்தவளின் நினைப்பை நிஜமாக்கிச் சாதித்து இதோ அதற்கான ஆணையுடன் வந்திருக்கிறான் ஷக்தியின் கணவன்.
“ஹேப்பி?”
“என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கற நீ?”
“சொல்ல வேண்டாம். செய்யலாமே”
“என்னது?”
“காஞ்சுப்போய் வந்துருக்கேன்டீ”
“அதுக்கு?”
“பூவம்மா, அப்பாவோட தங்கத்துக்குத் தம்பி பாப்பா வேணும்லடா” என்று மகளிடம் அவன் பந்தைத் திருப்ப, அது தூங்கியே இருந்தது.
“அவ தூங்கிட்டா” என்று முறைப்புடன் வெளியேறிய மனைவியைச் சிரிப்புடன் பார்த்து இருந்தான் சிவா.
இரவு காளிதாஸ், ஆராவமுதன் வந்துவிட, பேச்சும் சிரிப்பும் சிவாவிற்கான வாழ்த்துமாக நேரம் சென்றது.
ஈரோட்டில் இருந்த அந்த உயர்ரக உணவகத்தில் இரு குடும்பத்தாருக்கும் சிவாவின் பதவிக்காக ஒரு குட்டி ட்ரீட் ஏற்பாடு செய்திருந்தாள், ஷக்தி.
புகழும் நீலாவும் வரவில்லை, வேலை என்ற காரணம்.
ஷக்திக்கு நன்றாக இந்த மூன்று வருடங்களில் புரிந்த ஒன்று, நீலா அப்பட்டமாக தங்களைத் தவிர்ப்பது. அவளும் விட்டுவிட்டாள்.
சிலர் இருக்க வேண்டிய தொலைவில் இருந்தால் தான் நமக்கும் அவருக்கும் நல்லது என்று.
அதைப் பற்றி அவள் நினைத்திருக்க சிவா அவள் கையில் ஒரு தங்கக் காசை திணித்திருந்தான்.
“என்னதுங்க?”
அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவண்ணம், “ஒருத்தரோட காப்பு. நீ என்னோட சேர்ந்த பின்ன அது அவங்ககிட்ட இருக்கறது சரியில்லைன்னுட்டு என்கிட்ட கொடுத்தாங்க, நான் அது இனி தேவையில்லைன்னு அழுச்சுட்டேன்” என்றான் அழுத்தமாய்.
புரிந்தது அவளுக்கு. ஒரு பெருமூச்சுடன், “கோவில் உண்டியல்ல போட்டுடு ஷிவ்” என்று நகர்ந்துவிட்டாள்.
மறுநாள் அனைவரும் கிளம்பியிருக்க, ஷக்தி, சிவா, நன்மதி மட்டும் இனி.
இன்னும் மூன்று மாதங்களில் அவளின் வேலையை ஷக்தி ராஜினாமா செய்ய உள்ளாள்.
அவளின் ஆசை படிப்பு தான் இருந்தும் கணவன் மகளுடன் இனி திகட்டத் திகட்ட வாழ அவளின் ஆசையை தியாகம் செய்வதில் தவறில்லை தானே.
நிச்சயம் சிவாவிற்கு முதல் போஸ்டிங் குஜராத் அல்லது ராஜஸ்தானாகத் தான் இருக்கும் என்று ப்ரமோத் சொல்லியிருந்தான் சிவா தேர்ந்தெடுத்த cadreயின் படி.
இப்போதே அதற்குத் தக்க தன்னை தயார் செய்யும் முனைப்பில் இருந்தாள் ஷக்தி.
ஜான்வி, “புதுசா ஒரு லைஃப் உள்ள என்டர் ஆகற ஆரா, இவங்களோட வைஃப் அப்டிங்கறத தாண்டி நம்மோட பொறுமைய ரொம்பவே சோதிப்பாங்க. அதுதான் நமக்கான பெரிய டாஸ்க்! ட்ரான்ஸ்பர் வரும், இனி ஊரூரா ஸ்டேட் ஸ்டேட்டா சுத்தனும் பார்த்துக்க” என்றவள் ரகசியமாக,
“பிள்ளைங்க ரொம்ப அழைய வேண்டாம் ஒன்னோட நிப்பாட்டுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க, விடாத. இன்னும் ரெண்டு பெத்து ஒட்டுக்கா வளத்தீடு. பார்த்துக்க தான் அம்மாவும் அத்தையும் இருக்காங்க” என்றவளின் பேச்சிற்கு நமட்டுச் சிரிப்புடன் தலையசைத்தாள் ஷக்தி.
ஒருமாதம் சென்றிருக்க, அன்று அரசு சார்பில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவ ஆலோசனை முகாமின் துவக்க விழாவிற்கு அவளை அழைத்திருந்தனர்.
பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு முகாமில் அரசு மருத்துவர்களும் சில தனியார் மருத்துவர்களும் இருக்க மக்களுக்கான இலவச மருத்துவ சேவையைச் செய்துகொண்டிருந்தனர்.
எதேச்சையாக அந்த மருத்துவரின் பெயர் கண்ணில் சிக்க, அவர் இருக்கும் அறை நோக்கிச் சென்றாள் பெண்ணவள்.
“மேம்” என்று அறையினுள் எட்டிப்பார்த்தவளைக் கண்டுகொண்டார் அந்த மருத்துவர்.
“வாங்கோ வாங்கோ, டெஃப்டி கலெக்டர் மேடம்” என்று புன்னகை முகமாய் வரவேற்றவரை முகத்தில் உரைந்த சிரிப்புடன் எதிர்கொண்டாள், ஷக்தி ஆராதனா.
“கரெக்ட்டா சொல்லிட்டிங்க” என்று ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டு வந்தவளைப் பார்த்து மென்னகை புரிந்தார் அவர்.
“எப்படியிருக்கீங்க மேம்? இங்க கேம்ப்ல உங்க நேம் பார்த்தவுடனே உங்கள பார்க்கனும்னு தோனுச்சு. அதான் விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்” என்றவளுக்கு,
“ஐ’ம் ஆல்வெஸ் குட். எப்படியிருக்கார் போலீஸ்காரர்” என்றார்.
“ரொம்ப நல்லா இருக்கார். இப்போ ஐபிஎஸ் ஆபிசர் அவர்” என்றாள் பெருமை பொங்க.
அவர், “தெரியுமே எனக்கு” என்க,
ஆச்சரியமாக, “ந்யூஸ் பார்த்தீங்களா?” என்றாள்.
“அவரே வந்தார். இன்ஃபேக்ட் ஹீ வில் ஸ்பீக் டூ மீ ஆஃப்பன் (என்னிடம் அடிக்கடி பேசுவார்)” என்றவர் சொல்ல, அவரையே பார்த்திருந்தாள் ஷக்தி.
“என்கிட்ட கவுன்சிலிங் வந்தார் ஷக்தி” என்று அதே புன்னகை முகமாக அவர் சொல்ல, அதிர்ந்து விட்டாள் பாவை.
“மேம்?”
“அவரோட வைஃப்க்கா, தன்னோட மனநிலைச் சரியா இருக்கான்னு செக் பண்ண உங்களுக்கு முன்னவே வந்தார். தென், உங்ககூட லைஃப் ஸ்டார் பண்ணு முன்ன ஒரு சைக்காலஜிக்கல் செக்ஷன் அட்டன் பண்ணார்.
உங்கமேல அத்தன லவ். எப்போ வந்தாலும் ‘என் ஷக்தி’ தான் அவர் சொல்லுற மொதல் வார்த்தை.
உங்களுக்காக அவரோட மனநிலையச் சீக்கிரம் மாத்தினார். உங்களுக்காக அவரோடக் காதலை சீக்கிரம் உணர்ந்து, உங்களுக்காகவே அத்தன ஸ்ரெஸ் எடுத்து படிச்சு இப்போ உங்க வார்த்தையை காப்பாத்திட்டார்.
ஐ அட்மையர் ஹிஸ் லவ் ஃபார் யூ” என்றவர் முடிக்கும் முதலே அழுகை கொட்டியது ஷக்திக்கு.
“நோ க்ரையிங், ஷக்தி. யூ நீட் டூ பீ ப்ரவுட் டூ ஹாவ் ஹிம்” என்க,
(அவர் கிடைக்க நீங்க பெருமை படனும்)
“ஐ’ம் ப்ரவுட் இனாஃப் அண்ட் ப்ளஸ்ட் மேம்” என்றாள் கண்ணீர் சிந்திச் சிரித்தவண்ணம்.
(மிகுந்த பெருமையோடு நான் ஆசிர்வதிக்கப் பட்டவள்)
“உங்க ரெக்கவரி டைம் அவ்வளவு பயந்தார். எனக்குத் தெரிஞ்சு அவரோட லவ்காகவே தான் நீங்கச் சீக்கிரம் சரியான மாதிரி இருந்துச்சு” என்றவர்,
“அப்புறம், ஹவ் இஸ் யூவர் லைஃப்?”
“நான் ஆசப்பட்ட லைஃப் மேம், கனவா போயிடுச்சுன்னு இருந்தேன். என் ஷிவ் என்கிட்ட மீட்டு கொடுத்துட்டான், அவன கொடுத்து” என்றவள்,
“வி ஆர் ப்ரவுட் பேரன்ஸ் நௌவ்” என்றாள் நெகிழ்ந்து.
“வாழ்த்துக்கள். என்ன பண்ணுறாங்க குட்டி?”
“பேபி கேர்ள், அவங்க அப்பா கூட லூட்டி அடிக்கறா” என்றவள் பேச, அவர்களின் பேச்சு நீண்டது.
அவரிடம் விடைபெற்று வீடு வந்தவளுக்கு அத்தனை நிறைவு.
அவளின் ஷிவ், அவன் ஒருவன் தானே இப்போது இந்த ஷக்திக்கு மொத்த ஷக்தியும்!
சிவமின்றி ஏது இந்த ஷக்தி?
அறையில் இருந்து நன்மதி கத்தும் சப்தம் கேட்க, அங்குச் சென்றாள் பிள்ளைக்குப் போட்டலில் அழகாக பாலைப் பருக வைத்துக்கொண்டிருந்தான், சிவா.
“இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட ஆரும்மா? நான் லேட் ஆகும்ல நினச்சேன்” என்றவன் மகளைத் தூக்கிக்கொண்டு ஷக்தியிடம் வர, குழந்தையோ புதிதாய் முளைத்த பச்சரிசி பல்லைக் காட்டி சிரித்தாள்.
“பூவம்மா, அம்மா வேணாமா” என்ற மகளை வாங்கியவள், கணவனைப் பார்க்க எப்போதும் இருக்கும் சிரிப்பு மட்டும் மாறாது வசீகரித்தான் சிவனேஷ்.
“காஃபி தரியா ஷிவ், ஐ வாண்ட் இட்” என்றவள் முகப் பிரகாசத்தைப் பார்த்தவன், “அஞ்சு நிமிஷம்டா” என்று அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றான்.
மாலை நேரக் கூதல் காற்று மேனியைத் தழுவி மகிழ்வுற, மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நின்றிருந்தாள், ஷக்தி ஆராதனா.
இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அமையும் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.
முதலில் திருமணம் நடக்குமா என்றிருந்து, அது நடந்த முறையை நினைத்து மருகி, அதிலிருந்து மீண்டு, காதல் என்ற உணர்வை மீண்டும் உணர்ந்து, நண்பனாய் பார்த்தவனை கணவனாய் அவளின் பரிபூரணமாய் மாறிக்கொண்டு இதோ அவர்களின் காதல் பொக்கிஷத்தைக் கையில் ஏந்தி நிற்கிறாள்.
நினைக்க நினைக்க உவர்நீர் பெருகியது.
“ப்பா, உங்க பேத்திய பார்க்கறீங்க தான? உங்க ஷக்தி கூடதான இருக்கீங்க” என்று வாய்விட்டு அவள் அழ, அம்மாவை அணைத்துக்கொண்டு அமைதியானாள் நன்மதி.
தென்றல் காற்று அவளை அணைத்துக்கொள்ள அத்தோடு சேர்ந்து மகளோடு மனைவியையும் அணைத்துக்கொண்டான், சிவனேஷ்.
“அப்பா, ஷிவ்” அவள் விசும்ப, “உன் கூடவே, ஒரு நண்பனா இருக்கேன்னு அவருக்கு ப்ராமிஸ் பண்ணேன் ஷக்தி. ஆனா பாரு அவரு உன்னை என் உயிரா மாத்திட்டார், உன் கூடவே காலத்துக்கும் இருக்கற மாதிரி” என்றவனைப் பிள்ளையோடு அணைத்துக்கொண்டாள் அவள்.
“போதும், இனி அழாத பாப்பா பயந்துடுவா. காஃபி ஆறது பாரு” என்றவன் கடிய,
“இரு குடிக்கறேன்” அழுத முகத்தை அவன் டிசர்டில் துடைத்துக்கொண்டு திண்டில் அமர்ந்து குளம்பியைப் பருகினாள்.
“இன்னிக்கு டாக்டர் மேம் பார்த்தேன்”
“ம்ம்.. என்ன சொன்னாங்க?”
“நீ அவங்ககிட்ட கவுன்சில் போன அழகை சொன்னாங்க” என்க, திரும்பிப் பார்த்தான் அவளை.
கலங்கிய விழிகளுடன், “நான் உனக்கு என்னடா பண்ணேன்? எதுக்கு இத்தன லவ் என் மேல? முழுசா கூட உன்ன நான் காதலிக்காம இருந்திருக்கேன், அப்போவே எனக்காக இத்தன காதல வெச்சுட்டு இருந்துருக்க, ஏன்டா? அவ்வளவு பிடிக்குமா என்ன? இதுக்கெல்லாம் எனக்குத் தகுதி இருக்கானே தெரியலையே?” அவள் மீண்டும் ஆரம்பிக்க,
“என் ஷக்தி. அது போதாதா?” என்றவன் புருவமுயர்த்த, “சோனு” என்று அணைத்துக்கொண்டாள் அவனை.
“என் வாழ்க்கையோட அந்தாதிடீ நீ, என் ஷக்தி” என்று அவள் உச்சியில் முத்தமிட்டான், சிவனேஷ் வீரபத்திரன்.
அங்கு மருத்துவர் ரமணி ராஜம் ஷக்தியிடம் பேசிய பின் அவளின் கேஸ் ஷீட்டை எடுத்தவர் கடைசி பக்கத்தில் இருந்த தன்னின் முடிவை (summary) படித்தார்.
ஒரு சிறு புன்னகையுடன், “Altruistic Love” என்று படிக்க,
அவரின் ஜூனியர், “அப்படினா டாக்டர்”
“எதிர்பார்ப்பு இல்லாத, தன்னலமற்ற காதல்” என்றார் சிவாவை நினைத்துக்கொண்டு.
இரவு கவிழ்ந்துவிட, வானத்தை நிறைத்த நட்சத்திரங்களைப் பார்த்தபடி மகளுக்கு நிலாவையும் விண்மீன்களையும் காட்டிக்கொண்டிருந்தவனைக் காதல் பெருகப் பார்த்திருந்தாள், ஷக்தி ஆராதனா.
“உங்க அம்மா, இந்த நட்சத்திரத்த அப்பாகிட்ட எண்ணி எண்ணி தான்டா பூவம்மாவே வந்தீங்க” என்று நன்மதியி
டம் சொல்லிக்கொண்டிருக்க,
“லவ் யூ, ஷிவ்” என்று உளமார சொன்னவள் கணவனின் இதழ்களில் புதைந்து மீள, அவளை ஒற்றைக் கையில் அணைத்தவனும், “லவ் யூ டூ, குலாப்” என்க, பெற்றவர் இருவரையும் “ஊஊ..ஆஆ” என்று பிஞ்சு கைகளால் பிடித்துக்கொண்டாள், ஆண்டாள் நன்மதி.
♥️♥️♥️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

அழகான நிறைவு.. கதை நிறைவுற்றது மனம் தவிக்குது.. epilogue விரைவில் எதிர்பார்க்கிறேன்.. அடுத்த பாகமும் இதை விட சிறப்பாக எங்கள் மனதை மயக்கும் அளவு எழுத வாழ்த்துகள்..💐💐💐💐💐❤️❤️
இந்த அத்தியாயம் கொள்ளை அழகு.
குழந்தை மீதான தந்தையின் பாசம் மிக அழகான சொற்களால் வடிக்கப்பட்டுள்ளது.
பூவம்மா சோனு குலாப் ✨
விடாப்பிடியாக நின்று அவனது கனவை அவன் சாதிக்க செய்துள்ளால்.
சொந்தமில்லாததை அழிக்க மட்டும் வேண்டாம் அப்புறப்படுத்தவும் கூறி விட்டாள்.
“Altruistic love”
“என் வாழ்வின் அந்தாதி நீயடி”
ஆண்டாள் நன்மதி – அழகான பெயர்.