
“ஷக்தி” என்ற சிவாவின் குரலில் திரும்பினர் அனைவரும்.
“ஆரா” என்று அவளிடம் விரைந்தான், ப்ரமோத்.
“புகழ் எங்க ப்ரமோத்’ண்ணா” என்றாள் எந்தவித சலனமும் இன்றி.
அவளைக் கணிக்க முடியவில்லை. என்ன நினைக்கிறாள் என்றும் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவள் எல்லாம் கேட்டிருப்பாள் என்பது மட்டும் திண்ணம்!
“பைத்தியமாடீ உனக்கு? இத்தன நடந்தும் இன்னும் அவனேங்கன்னு கேட்கற?” என்று கத்திய லாவண்யாவை மேகா சமாளிக்க முயல,
ஜான்வி, “மேகா இங்க வந்தபோதே எழுந்துட்டா ப்ரமோ.” என்றதே அங்கு அவர்களுக்கான பதில் கிடைத்திருந்தது.
“மண்டபத்துக்கு வந்துட்டு இருக்கார்” என்றான்.
“எதுக்கு வரான் இங்க? வாசல்ல வெச்சே அவன போடறேன்” என்ற ஆராவமுதன் கிளம்ப, அவனைத் தடுக்க யாரும் முற்படவில்லை.
மணி மூன்றைத் தொட இருக்க, புகழின் வீட்டினர் நீலவேணியை மணப்பெண்ணாக அறிவித்து அந்த மண்டபத்திலேயே புகழுக்கும் அவளுக்கும் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
அதை வெளியே வந்த ஆராவமுதன் கேட்டுவிட, “யார் வீட்டு காசுல யாருக்குடா கல்யாணம் பண்ணுறீங்க? லட்சமா கொட்டி என் தங்கச்சிக்கு நாங்க கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணா, ஓசில வந்த நாய் நீ உன் மகளுக்கு எங்க காசுலையே பண்ணுவியோ? ஒரு பைய, ஒத்த பைய இங்க இருக்கக் கூடாது. அவுட்” என்றவன் இரைய, மண்டபமே ஸ்தம்பித்தது.
அதிகாலை முகூர்த்தம் என்பதால்
சமையல் ஆட்கள், புகைப்படக்காரர்கள், மணவறை டெகரேஷனுக்கான ஆட்கள், மேக்அஃப் ஆர்டிஸ்ட் என்று அப்போதே எல்லாரும் வந்திருக்கக் குழம்பிப்போய் ஆராவமுதனின் பேச்சில் அதிர்ந்துவிட்டனர்.
‘இனி ஊரே பார்க்க மறுபடியும் சண்டையா’ என்று நினைக்காது இருக்க முடியவில்லை கருணாநிதிக்கு.
அங்கிருந்த போலீசாரைப் பார்த்து, “ஸர், இன்னும் இவங்கள வெக்கேட் பண்ணச் சொல்லலையா நீங்க” என்ற ப்ரமோத்தின் பேச்சில் பாரதிக்குச் செருப்பால் அடித்தது போல் இருந்தது.
பாரதி, “மாமா கிளம்பச் சொல்லுங்க எல்லாரையும். இந்த அசிங்கத்துக்கு மீற நாம இங்கிருக்கனுமிட்டு இல்ல”
“அப்போ நீலா கண்ணாலம்” என்று கற்பகம் நெஞ்சில் கை வைக்கவும் நம்மாழ்வார் வரவும் சரியாய் இருந்தது.
ஆழ்வார், “என்ன பாரதி?”
“அந்த குணங்கெட்டவ..” என்று திரும்பவும் ஆரம்பிக்கப் பொறுமையிழந்த கருணா பாரதியை அரைந்துவிட, செய்தி ஆழ்வாருக்குப் புரிந்தது.
“ஆக பெத்தவன் என்னைய கலந்துக்காம அம்மையும் அக்காளும் கண்ணாலத்த உறுதி படுத்தியாச்சு. சரிதான், அப்போ என்னோட முடிவையும் கேட்டுக்கிடுங்க. குறிச்ச நேரத்துல சிவாவுக்கும் சக்திக்கும் இங்கன, இன்னிக்குக் கண்ணாலம் நடக்கும், நடந்தே ஆகோனும். குறுக்கக் கட்டய போடாலாமிட்டு பொட்டச்சிக நினச்சீங்க, கழுத்த திருகிப்புடவேன்” என்றவர் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்துவிட்டார்.
இதை நிச்சயம் ஷண்முகம் எதிர்பார்க்கவில்லை. அவர் கணக்குப் போய்த்துப் போவது போல் தோன்றியது.
அதை அப்படியே விடாது, “என்ன மச்சான் திரும்பவும் அவள..” என்று ஆரம்பிக்க, “இந்தாருங்க அம்புட்டுத்தான். அங்கன ஒருத்தி இப்போதென் என் கையில வாங்கி உங்காந்திருக்க. மறுக்கா பேச வைக்காதீரும்” என்று சினந்தான் கருணா.
“என்னைய பேசாதேன்னுட்டு நீ சொல்லாதடா. எம் தங்கச்சி வூட்டு வெவகாரம்”
“வாப்பெட்டிய சாத்துங்க, நா அந்தூட்டு மாப்புள. என்னைய மீறித்தென் உம்ம தங்கச்சியே” என்றான்.
“அதுக்கு? எம் புள்ள வாழ்க்க?”
“ஓ, செத்த மின்னுக்க முடிவான உம்ம மக வாழ்க்க முக்கியம். ஆனா ஆராதனா எக்கேடு கேட்டா என்னுட்டு இருக்குதீய. என்ன ஞாயம் சித்தப்பா இது?”
“எவ வாழ்க்க எப்படி போன எனக்கென்னங்கிதென். அவளே ஆண்பள”
“அரஞ்சு பல்லக் கழட்டிடுவேண்டா பன்னாட. நானும் விட்டா ஓவராத்தான் போற, முழுசா ஊர் போய் சேரமாட்ட” என்று ஆராவமுதன் வந்துவிட, ஷண்முகம் ஊராரின் துணை நாடினார்.
“கம்மினிருங்கய்யா. எம்ம வார்த்தமேல மதிப்பிருந்தா, எங்குடும்பத்து மேல மருவாதியிருந்தா என் சின்னவன் கண்ணாலத்துல கலந்துக்கனும்னு நினைக்கற மனுச மக்க மட்டும் இருங்க. மத்தவிங்க தயவு செஞ்சு ஊருக்குப் போங்க, கருணா போறப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சு தருவியான்” என்று தலைக்கு மேல் கைக்கூப்பி நின்றுவிட்டார்.
தேனாட்ச்சி ஒருபுறம் ஒடுங்கிப்போய் அமர்ந்திருக்க, அவரின் அருகே அழுத தடங்களுடன் கணவனைப் பொரிந்தபடி பாரதியும் நம்மாழ்வாரையே கண்சிமிட்டாது பார்த்தவண்ணம் உண்ணாமலையும் இருந்தனர்.
அதை மீறி யார் என்ன பேசுவார்கள். முக்கால்வாசி பேர் கருணாவின் ஏற்பாடு மூலம் சென்றிருக்க, மீதம் இருந்தது ஒரு இருபது பேருக்குள்ளாகத்தான்.
நேரம் ஐந்தைத் தொட இருக்க, ஐயர் அதற்குள் சடங்குகளை ஆரம்பித்திருந்தார்.
”பொண்ணு மாப்பிள்ளைய வரச்சொல்லுங்கோ” என்றார்.
ப்ரமோத்தின் அறையில், “அவனுக்கு வாங்கின சட்டைய நான் போடமாட்டேன். உன்னோடது இருந்தா தா அமுதா” என்று முறுக்கிக்கொண்டான் சிவா.
துருவைத் தூக்கிக்கொண்டு வந்த யமுனா, “ப்ரமோவோட ஷர்ட் சரியா இருக்கும் தானே தம்பி? அவனோடது புதுசு ரெண்டு ஷர்ட் அந்த கபோர்ட்ல இருக்கும் பாரு அமுதா, எடுத்துக்கொடு” என்றுவிட்டுப் பிள்ளையை பெட்டில் போட்டார்.
அதற்குள் ஷக்தியை அழகு நிலைய பெண்கள் மணப்பெண் அலங்காரத்தில் தயாராக்கினர்.
மேகா அவளுக்கு ஏற்கனவே ‘டெஸ்ட் மேக் அஃப்’ போட்டதைச் செய்யவேண்டாம் என்றுவிட, சஃட்டில் மேக் ஓவர் செய்ய சொல்ல, அவர்களும் அதற்குத் தக்கச் செய்தனர்.
திருமணப் புடவையைத் தவிர்த்துவிட்டு மேகாவின் புத்தம்புது பட்டுப்புடவையும் ப்ளவுஸும் ஷக்தியை அணிந்துகொள்ளச் செய்தனர்.
புகழுடனான திருமணத்திற்கு என்று வாங்கிய நகைகளை ஜான்வி அணிய வேண்டாம் என்றிருக்க, பெண்களின் நகைகள் சில ஷக்திக்கு அணிவித்தனர்.
இதில் யமுனாவின் ஆரம் திடீர் ஓட்டியானம் ஆனாது. ப்ரத்வியின் பென்டன்ட் செயின் நெற்றிச் சுட்டியாகவும் மேகா, ஜான்வி, லாவண்யாவின் இதரங்கள் அவளை அலங்கரித்தது.
மொத்தத்தில் அவசரமாக பழையன கழித்து இருக்கிறதை வைத்து தயாரானாள், ஷக்தி ஆராதனா.
இருவரும் தங்களின் சம்மதத்தை பகிராமல் ஒரு பந்தத்திற்குத் தயாராகியிருந்தனர்!
சிவா வந்துவிட கருணா தாய் மாமன் மாலையிட்டு அவனை மணவறையில் அமர வைத்தான்.
சிவா அமர்ந்து மந்திரங்களை ஜபித்தவண்ணம் இருக்க, “யாரக்கேட்டு கல்யாணத்த நிறுத்துனீங்க?” என்று ஆக்ரோஷமாகக் கத்திய புகழைச் சீண்டிட அங்கு ஆளில்லை.
அதற்குள் மணப்பெண் அலங்காரத்துடன் ஷக்தி வந்துவிட, புகழின் மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது.
“ஆராதனா” என்று அவளிடம் அவன் விரைந்தான்.
“என்னடீ நடக்குது இங்க? யார கேட்டு இதெல்லாம் பண்ணுறாங்க”
ஒரு நிமிடம் கண்களை மூடித்திறந்தவள் அவனை நேர்கொண்டு பார்த்தபடி,
“என் சைன் வாங்கத் தான் இத்தன நாள் கத்திருந்தீங்களா மிஸ்டர். புகழேந்திரன்” என்று நிமிர்ந்த குரலில் கேட்டவளின் தோரணை அவனுக்குச் சரியாகப் படவில்லை.
“ஆராதனா”
“கேட்ட கேள்விக்குப் பதில் வரனும்”
“ஏய், என்னடீ?”
“சைன் வாங்கத் தான் இத்தன நாள் கத்திருந்தீங்களா?”
நா வளன்றுவிட்டது புகழுக்கு. “யாரோ உனக்குத் தப்பா..” என்றவன் சொல்லக் கொண்டிருக்க, “பார்கவ், ப்ளே இட்” என்றான் ப்ரமோத் உரக்க.
மண்டபத்தில் இருந்த மொத்த எல்.ஈ.டி திரையிலும் சற்று முன்னர் மூர்த்தியுடன் பேசிய புகழேந்திரனின் வீடியோ படமாக ஓடியது.
அச்சரம் பிசகாது அவன் பேசிய வார்த்தைகளின் உச்சரிப்பு கூட மிகத் தெளிவாகக் கேட்டிட, ஆடிப்போய் நின்றிருந்தான் புகழேந்திரன்.
இனி?
விதியிட்ட வழி!
“உங்க இப்போதைய எஸ்.பி, என் பேச்ட் மேட். மிஸ்டர். அச்சுதன் பிள்ளை ஐ.பி.எஸ்” என்றவன் புகழின் அருகே வந்து,
“என் தோஸ்த் கிட்டச் சொன்னேன், மூர்த்தியோட ஆதாரத்தையும் வாங்கி, உங்களோட வாக்குமூலத்தையும் சொல்ல வெச்சுட்டான்” என்றான் ஆட்சியரின் மிடுக்குடன்.
வெளுத்த முகத்துடன் புகழ் நிற்க, “எங்ககிட்ட யாராவது வந்தாவே உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன். இதுல எங்க ஆராகிட்டவே இத்தன ஆட்டம் ஆடுன உன்ன சும்மா விட்டா நாலாம் என்னடா அவளுக்கு அண்ணன்” என்றவன் விட்ட அரையில் புகழின் ஆணவம் அடிவாங்கியது.
புகழை, அவன் உணர்வை, அவன் காதலை அங்கு யாரும் நினைக்கவில்லை. பொருட்படுத்தவில்லை.
அவன் ஆணவம் அதைத் தூக்கிச் சாப்பிட்டிருந்தது. அவனின் ‘தான்’, ஆண் அகம்பாவம் அதை மற்றவர் சீண்டிட இடமளிக்கவில்லை.
இருந்தாலும் அவன் காதல் நிஜம்!
ஆராதனா என்றவன் வார்த்தைகளுக்கு நிச்சயம் உயிர் இருந்தது. ஆனால் அது இப்போது அவனாலேயே மறிந்தும் போயிருந்தது.
நம்மாழ்வாருக்கு அவன் அடிவாங்கியது பொறுக்கவில்லை தான். இருந்தாலும் அவன் செய்த செயலுக்கான எதிர்வினையை அனுபவித்துத் தானே ஆகவேண்டும்?
ஓம குண்டத்தில் திகுதிகுத்த தீயாய் அவன் உள்ளமும் எரிந்தது.
சிவா இறுக்கமாய் அமர்ந்தவண்ணம் மந்திரங்களை ஜபித்தபடி நெய் விட்டுக்கொண்டே இருக்க, “போதுமா ஆரா. இல்ல வேற ஆதாரம் வேணுமா?” என்ற ப்ரமோத்தைப் பார்த்தவளால் எதையும் சொல்ல முடியாது போனது.
ப்ரமோத், “ஜான்வி” என்க,
“வா ஆரா” என்று ஷக்தியை மணமேடைக்கு அழைத்துச் சென்றாள்.
மணவறையில் உட்காரும் முன்பு, புகழ் அவளுக்கு அணிவித்த மோதிரத்தைக் கழற்றி ஓம குண்டத்தில் போட்ட பின்னர் தான் சிவாவின் அருகே அமர்ந்தால் ஷக்தி.
புகழின் கண்களில் வலி அப்பட்டமாய் தெரிந்தது. இனி பேசினாலும் உள்ளதும் கெடும் என்ற வேதனை. அவன் ஆராதனா, அவன் காதலித்த காதல் பெண்ணை தம்பியின் மனைவியாய் பார்க்க முடியாது, “ஆராதனா” என்று கத்தி அழைத்தான் குரலில் ஒட்டுமொத்த உயிரையும் தேக்கி.
கல்லாய் சமைந்திருந்த பெண்ணவளுக்கு எந்தவித சலனமும் அதில் ஏற்படவில்லை.
அவளைக் கொன்றுவிட்டான். ஒரு கையெழுத்து அதைக் கேட்டிருந்தால் நிச்சயம் அவனுக்கான பதிலை, அவனைக் காக்கும் முயல்வைச் செய்திருப்பாள்.
இருந்தபோதும் மறைத்து, அவளைக் கொன்று, அவள் உணர்வுகளோடு விளையாடி, பொய்யான ஒரு சூழலில் அவளை நிறுத்தி என்று எத்தனை?
வெறுத்துவிட்டாள் அனைத்தையும்.
காளிதாஸ், “ப்ரமோ, அவன வெளிய அனுப்பு” என்றுவிட, அவனின் பாதுகாப்பு காவலர்களிடம் கண்ணைக் கட்டிவிட்டான்.
முழு நிம்மதியுடன் நிறைவுடன் திருமணச் சடங்குகளைப் பார்க்க ஆரம்பித்தனர் ஷக்தியின் வீட்டார்.
எந்த சடங்கும் விட்டுப்போகாது அனைத்தையும் செய்யச் சொல்லிவிட்டான், ஆராவமுதன்.
மகளின், தங்கையின் திருமணத்தைக் கண்கொட்டாது பார்த்து நின்றிருந்தனர் லாவண்யாவும் ஆராவமுதனும்.
ஷக்தியின் பெற்றோர் சார்பாக மாமா ஸ்தானத்தில் காளிதாஸ் – யமுனா இருக்க, சிவாவின் பக்கத்தில் அவன் அண்ணன் அண்ணியாய், ப்ரமோத் ஜான்வி நின்றனர்.
அங்கு, நம்மாழ்வாரும் கருணாவும் பார்வையாளர்கள் மட்டுமே!
முறையாய் ஷக்தியைக் கன்னிகா தனம் செய்யும் தருணத்தில் தேனாட்ச்சியை மேடையேற்றி அவர் கைகளுடன் சிவாவிடம் ஒப்படைத்தனர் அவளை.
மாங்கல்ய தாரணத்தின் போது மண்டபமே சூழ எழுந்து மங்கள நாதஸ்வரமும் மேளமும் கொட்ட, அச்சதையின் மழையில் பூ இதழ்கள் சூழ்ந்தவண்ணம் புகழ் வாங்கியிருந்த மஞ்சள் கயிற்றில் கோர்த்திருந்தத் திருமாங்கல்யத்தை ஷக்திக்கு அணிவித்து அவளை மனைவியாய் ஏற்றான், சிவனேஷ் வீரபத்திரன்.
துருவின் பிஞ்சு கைகளால் மலர்களை அவர்கள் மீது தூவினார், யமுனா. அது என்னவோ இமயவரம்பனே மகளுக்கு ஆசி வழங்கியது போல் தோன்றியது ஷக்திக்கு.
இருவரின் முகமும் நிர்மலமாக இருந்தது. எந்தவித உணர்வு பெருக்கும் அதில் இல்லை. ஆனபோதும், நீர்த் துளிகள் சிந்தியது ஷக்தியின் விழியில்.
முதல் முடிச்சைப் போட்டவன் அடுத்ததை மேகாவிடம் போடக் கொடுத்துவிட்டான். அடுத்து, ஷக்தியின் தோளைச் சுற்றி அவளைக் கிட்டத்தட்ட அணைத்தபடி நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமமிட, அவள் உடல் சிலிர்த்தது.
அதை உணர்ந்தாலும் அவன் விலகவில்லை. அவள் தலையில் பூ வைத்தவன், அவன் அணிவித்த மாங்கல்யத்திலும் பூவை வைத்துவிட்டான்.
அக்னியை வலம்வரும் போது சிவாவின் மனது இமயவரம்பனிடம் தான் சென்றது. அவர் ஆசை அவனைக் கொண்டே நிறைவேறும் என்று இம்மி எண்ணாதவனின் எண்ணங்களில் அவரே அப்போது வியாபித்திருந்தார்.
“அப்பா, உங்க ஷக்தி என் கைக்குள்ள தான் இருக்க. உங்க புள்ள கூடவே என் ஆயுசுக்கும் இருப்பேன்” என்றவன் கைகளில் கொடுத்த அழுத்தத்தில் ஷக்தியின் பிடியும் வழுவானது!
அம்மி மிதித்து, மெட்டியிட்டு, அருந்திப் பார்க்கும் வைபவம் முடிந்து, சில தவிர்க்க முடியாத திருமண விளையாட்டுகள் நடைபெற்று, விருந்தும் மொய்யும்
வரவேற்பும் முடியத் திருமணம் இனியதாய் நடந்தேறியது.
இதைப் புகழ் பார்க்க அவன் இருதயம் வலியில் அழ, சிவா ஷக்தியின் திருமணம் அவர்களின் நலம் விரும்பிகளின் ஆசியுடன் நிறைவாக நடைபெற்றது.
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அமுதனின் பேச்சு அருமை.
இவர்கள் ஏற்பாடு செய்த மண்டபத்தில் இவர்கள் வீட்டு பெண்ணை கேவலமாக பேசி ஒதுக்கிவிட்டு, தங்கள் மகளுக்கு நோகாமல் திருமணம் செய்வார்களாம்.
பழையன கழிந்து புதியன சேர்ந்தன. ✨
இருவரின் சம்மதப் பரிமாற்றம் நடைபெறாமலேயே திருமணம் இனிதே நடந்தேறிவிட்டது.
அவர் ஆசை அவனை கொண்டே நிறைவேறும் என்று அவன் நினைக்கவில்லை. ✨
உங்க புள்ள கூடவே ஆயுசுக்கும் இருப்பேன். 😍
பிறந்ததில் இருந்து தம்பியிடமிருந்து பறித்தவற்றிற்கு ஈடாக தனது பெரும் காதலை அவனுக்கு தாரை வார்க்கசெய்துவிட்டது விதி.