
உச்சி வெயில் தன் உக்கிரத்தை அத்தனை அடர்த்தியாய் பூமியில் செலுத்தித் தன் அதிருப்தியைப் பதிவு செய்த நடுமதிய வேளை.
சுற்றிலும் தென்னைமரங்கள் சூழ, ஊடு பயிராக வாழையும் எலுமிச்சையும் நட்டிருந்தனர். அதில் கமழ்ந்து வந்த நறுமணம் அந்த வெயிலிலும் மனதை நிறைத்தது.
வெயிலும் ஈரப்பதமும் லேசான குளுமையும் இருந்தாலும் அந்த கலவையான நிலையை இரசித்தபடி நின்றிருந்தாள், ஷக்தி ஆராதனா.
அது கருணாநிதியின் தென்னந்தோப்பு
புகழுடன் அவள் நேராக அவன் வீட்டுக்குச் செல்வதாக நினைத்திருக்க, அவனோ கருணாவின் தென்னந்தோப்பிற்கு அழைத்து வந்திருந்தான்.
“எளநி குடிச்சியா ஆராதனா” என்று வந்த கருணாவிடம்,
“ஆச்சுங்க’ண்ணா.” என்றாள் சிரித்த முகமாக.
‘போகும் போதும் இந்த புள்ள இப்படியே சிரிச்சாப்படி போகட்டும் சாமி’ என்ற வேண்டுதலுடன் நின்றிருந்தான் அவன்.
“தென்னைக்கு இடையில வண்டி ஓட இடம் இருக்கனும்னு சொல்லுவாங்க. நீங்க இடமே இல்லாம வாழமரம், லெமன் எல்லாம் வெச்சிருக்கிங்க?”
“அது மரத்துக்கு மரம் ஓரசாம இருக்க, மரம் நல்ல வளரவும் சொன்னதுத்தா. ஒன்னே ஒன்ன (தென்னையை மட்டும்) வெச்சிட்டு நான் என்னத்தா செய்ய? எடமும் காலியா கிடக்குமே. அதான் மரத்த பாதிக்காத ஊடுபயிர் போடுவிட்டிருக்கேன். வருமானமும் வருமில்ல”
“கரெக்ட் தான். வாழமரம் கூட ஓகே, ஏன் லெமன்?”
“ஏன் உங்கூர்ல யாரும் எலும்பிச்ச பழம் சாப்பிட மாட்டீங்களோ?”
“அண்ணா”
“தேங்கா மாதிரி அதுவும் நல்ல வெலைக்குப் போகும்’த்தா. தவிர, தண்ணி இருப்பு அதிகமா இருக்கற எடத்துக்குத் தக்க பயிர் பண்ணுமே. அதென் அப்படி போட்டிருக்கேன்” என்றான் தேர்ந்த விவசாயியாக.
“பரவாயில்ல. அப்போ தண்ணி பஞ்சம் வந்தா என்ன செய்வீங்க?”
“அது அவர் பிரச்சனை. நீ வந்த வேலை என்கூட வந்து பாரு” என்றபடி அங்கு வந்தான் புகழ்.
ஷக்தி, “இது பிரச்சனை இல்ல, ஜெனரல் நாலேஜ். தெரியாததைத் தெரிஞ்சுக்க கேட்டேன்” என்றாள் கிட்டத்தட்டப் புகழின் மூக்கை அறுத்து.
அதில் சிரித்த கருணா, “தண்ணி பஞ்சம் வராம இல்லத்தா, வரும். அப்போ இந்த தென்னமரமே நமக்கு உதவும். கோக்கோபீட் தெரியும்ல? அத மூனு மரத்துக்கும் கீழ கொட்டிவிடுவோம், தண்ணிய உள்வாங்கிக்கும் திறன் அதுக்கிருக்கே. மூனு நாள் இல்லேனா ஒருவாரம் கூட தாக்குப் பிடிக்கும். மூடாக்கா ஓலையவும் போட்டுவிட்டா, பிரச்சனை தவிர்க்கலாம்” என்றான்.
அவளோ ஆச்சர்ய பாவத்துடன், “நீங்க அக்ரி படிச்சிருக்கலாம் ப்ரோ” என்க, புகழின் முகம் சிறுத்துவிட்டது.
அதைக் கருணாவும் கவனிக்க, “விடும்மா. போய் உட்கார், வெயில்ல நிக்காத” என்றபடி சென்றுவிட்டான்.
“புகழ்” என்று ஏதோ சொல்ல வந்தவளை,
“என்ன?” என்று கத்திக் கடுத்தான்.
”ஒன்னுல்ல” என்றுவிட்டுச் சென்றவள் மனதில் ஒரு இடறல்!
“எப்பப் பார் எரிஞ்சு விழுறது யாரையாவது பாராட்டினா” என்று முணுமுணுத்தபடி அங்கிருந்த பம்புசெட் ரூம்மில் அமர்ந்து கொண்டாள்.
வீட்டில் யாருக்கும் இன்னும் தகவல் சொல்லியிருக்கவில்லை. சொல்லலாம் என்று நினைத்து அலைபேசியை எடுக்க மேகாவிடமிருந்து அழைப்பு.
“எங்க இருக்க ஆரா?”
“ம்ம் தூத்துக்குடில.. புகழோட வந்தேன் அண்ணி” என்க, எதிர்புறம் மௌனம்.
“எப்போ வருவ இங்க? இல்ல..” என்றவள் இழுக்கப் பின்புறமிருந்து, “மேகா” என்று ஆராவமுதன் கத்தினான்.
“ஈவினிங் ஃப்ளைட்’ல வந்துடுவேன் அண்ணி. இங்க மக்ரூன்ஸ் நல்லா இருக்கும், வாங்கிட்டு வரேன்” என்றாள் இயல்பான குரலில்.
“ம்ம்” என்று வைத்துவிட்டாள்.
“ஏன் மேகா?” என்று லாவண்யா கிட்டத்தட்ட அழுகும் குரலில் கேட்டார் மனவலி தாங்காது.
“என்ன மேகா, மேகான்னுட்டு? எனக்கு அவ அந்தாள கல்யாணம் பண்ணுறதே பிடிக்கல, இதுல சொல்லாம வேற அங்க போயிருக்கா. வீட்டுல நாம எதுக்கு இருக்கோம்? சொல்லனுமா வேண்டாமா? அவ நல்லபடியா கல்யாணம் ஆகி போற வரைக்கும் திக்கு திக்குன்னுத் தான் அடிச்சுக்குது எனக்கு” என்று மூச்சு வாங்கி பேசினாள்.
”அமைதியா இரு கண்ணு. பாப்பா வயித்துல இருக்குல” என்று அப்போதும் லாவண்யா அவளை அமைதிப்படுத்தவேப் பார்க்க, ஒரு முறைப்பு அவளிடம்.
மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறாள், மேகவர்ஷினி. அதைக் கொண்டாடும் நிலையில் கூட அவள் இல்லை. காரணம், ஷக்தி ஆராதனா!
“இனி இப்படி டென்ஷன் ஆகாத மேகா, நான் பார்த்துக்கறேன்” என்று அவள் அருகே வந்தமர்ந்த ஆராவமுதனை எரிப்பது போல் பார்த்தாள் பெண்ணவள்.
“இத்தன பேர் இருந்தும் என்னத்த கிழிச்சீங்க? எனக்கு மட்டும் இல்ல யாருக்கும் அந்த புல்லுவாயனை பிடிக்கல. கல்யாணத்துக்குச் சரி சொல்லியும் இந்த எரும அவனோட அங்க சொல்லாம போயிருக்கு பாரு.. இதுல என்னத்த பார்த்த நீ?”
“சரி, விடு”
“அவ பிஏ கால் பண்ணி சொல்லுறான், இவ சொன்னாளா, சொன்னாளா?”
“விடேன்டீ” என்றவன் மனதிலும் தங்கை மீது அத்தனை கோபம்.
இப்போது அவனும் பேசமுடியாத நிலையில் இருக்கிறான். லாவண்யாவோ, எல்லாம் ஷக்தியின் விருப்பம் என்றிருக்க, அடுத்து நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தனர்.
யார் சொல்லியும் கேட்காத நிலையில் இல்லை ஷக்தி. மாறாக அவள் காதல் மேல் அவள் கொண்ட நம்பிக்கையில் இருந்தால்.
நம்பிக்கை சுக்கலாகும் காலமும் வெகுதூரத்தில் இல்லை.
“அக்கா, புகழண்ணே கூப்புடுதாரு” என்று வந்தாள் ஒரு பெண்.
“ம்ம்.. நீங்க யாரு” என்றபடி அவள் அந்த பெண்ணுடன் நடைபோட,
“நானு கொம்பு செல்வி, இங்கனதென் தேங்கா உரிக்க வருவேன்” என்றாள்.
இருபது வயது கூட இருக்காது. ஆனால் திருமணம் முடிந்த அடையாளம் இருந்தது. மனதில் ஒரு கசப்பு தோன்றியது ஷக்திக்கு.
இன்னும் மக்கள் பழமையில் ஊறித்தான் இருக்கின்றனர் என்ற நினைப்போடு புகழிடம் சென்றாள் அவள்.
அங்கு தென்னைமரத்தின் கீழே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தார் நம்மாழ்வார், உடன் கருணாவும் புகழும்.
ஷக்தியை அவர் மகனோடு நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வேலை சம்பந்தமாக ஏதாவது இருக்கும் என்ற நினைப்பில் அவர் இருக்க, அதனைக் கலைக்க இருந்தான் அவர் மூத்தமகன்.
“வா சக்தி. வூட்டுல எல்லாரும் சுகமாத்தா?” என்றார்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க அங்கிள்” என்றவளுக்கு புதியதாய் ஒருவித தயக்கம் வந்திருந்தது. மனிதரும் அதை கவனித்திருந்தார்.
புகழிடம், “அதான் சக்தி வந்துடுச்சே, சொல்லுய்யா” என்க,
சுற்றி வளைக்காது, “அய்யா.. அது ஆராதனாவ எனக்குப் பிடிச்சிருக்கு, அதான் உங்ககிட்ட சொல்லி கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்” என்றான் பட்டென்று.
அவன் இப்படி பட்டென்று சொல்லிவிடுவான் என்று ஷக்தி எதிர்பார்க்கவில்லை. ஒருவித அதிர்வு அவள் முகத்தில்.
நம்மாழ்வார் அவள் முகத்தைப் பார்க்க, “அங்கிள்” என்றாள் அவரின் பார்வைக் கூர்ப்பைத் தாங்காது.
“ஆராதனா” என்று புகழ் அவளைப் பேசச் சொல்ல,
“நான் தான் முதல்ல அவர பிடிச்சிருக்குன்னு சொன்னேன் அங்கிள். அவர் கூடவே இருந்தனால அவர நல்லா புருச்சு(!) தெரிச்சுக்கிட்டேன். அதான் அவர் வாழ்க்க முழுக்க கூட இருந்தா நல்லாயிருக்கும்னு தோனி..” என்று நடுவில் திக்கி நிறுத்தினாள்.
“உம்ம வீட்டுல தெரியுமா சக்தி?”
“ம்ம்.. இவர் வந்து பேசினார்” என்க, சட்டென்று நம்மாழ்வாரின் பார்வை புகழை ஈட்டியாய் குத்தியது.
“அவங்க மாமா பேச வரச்சொன்னார் அய்யா, அதான் போய் பேசிட்டு வந்தேன்”
பின்னால் நின்றிருந்த கருணா, தலையில் அடித்துக்கொண்டான் இருவரின் பேச்சைக் கவனித்துக்கொண்டு.
“ஆக எல்லாம் முடிஞ்ச கையோடத்தென் என்கிட்ட வந்திருக்கோ பஞ்சாயம்” என்று தோளிலிருந்த துண்டை உதறி எழுந்தார்.
“நீ வீட்டுக்குக் கிளம்பு சக்தி. இனி இப்படி வரவேண்டாம். எங்களுக்குச் சரியா பட்டா, நாங்க சொல்லுதோம்” என்று முகத்தில் அடித்தக் குறையாகப் பேசிவிட்டார், நம்மாழ்வார்.
அதற்கு, “அய்யா” என்று புகழ் ஆட்சேபிக்கும் குரலில் அவரை அழைக்க,
“பொட்டப்புள்ளைய இப்படி இனி கூட்டி வராதீங்க, நாளபின்ன எவனாவது நாக்கு மேல பல்லப்போட்டு பேசிட்டானா, ஐயோனாலும் அம்மானாலும் போன மான மருவாதி திரும்பாது” என்று கிளம்பிவிட்டார் அவர்.
இறுகிப்போய் நின்றிருந்தாள் ஷக்தி.
கருணா, “ரெண்டு பேர் மண்டையிலும் என்ன இருக்கு? ஆராதனா வீட்டுல பேசியிருந்தாலும் இங்கன வந்து இவர்கிட்டதென் மொத சொல்லுத மாதிரி இருக்க வேண்டாமா? பெரிய மனுஷேனுட்டு இருக்க ஆள, கடைசியா உங்கிட்டதென் வாரோமுட்டு காட்டுவிங்களா நீங்க?” என்று ஒருபாடு வாங்கியிருந்தான்.
இருவருக்கும் புரிந்தாலும் என்ன செய்ய முடியும்?
“மாமு, வீட்டுல அக்கா அம்மாகிட்ட பேசீட்டா, அய்யாவ சமாளிப்பாங்கல?”
“என்னத்த, ஆளு சூடா போயிருக்காருய்யா”
“எப்படியும் அய்யாவா போய் சொல்லுறதுக்குள்ள நாங்க.. இல்ல நான் போய் சொல்லிடுதென்” என்றான் புகழ்.
சரியாக பாரதியிடமிருந்து அழைப்பு வந்தது கருணாவிற்கு.
அவன் பேசுவதற்கு முதல் அதைப் பறித்த ஷக்தி, “அக்கா, உங்க தம்பி புகழ எனக்குப் பிடிச்சிருக்கு. நாங்க லவ் பண்ணுறோம். அங்கிள்கிட்ட இப்போதான் சொன்னோம், அவர் பிடிகொடுக்க மாட்டேங்கறார். உங்ககிட்ட சொல்லிட்டேன், பார்த்துக்கோங்க” என்றவள் இருவரையும் முறைத்தவண்ணம் அங்கிருந்து செல்லலானாள்.
அவள் கொடுத்த அதிர்விலிருந்து மீளாத புகழை, முதுகில் ஒரு அடியைப் போட்டு அவளோடு சொல்லச் சொன்னான், கருணா.
“எனக்குன்னு வந்து சேருதுங்க பாரு முருகா” என்று வீட்டுக்குச் செல்ல, அங்கு ஒரு போர்க்கள சூழல்.
விசயம் தெரிந்துவிட்டது என்று யூகிப்பதற்குள், விவாதங்கள் பல பறந்தனர். சல்லடையாக ஷக்தியைப் பற்றி பேச்சும் அலசலும் நிகழ,
கருணா, “நீரு ஆரையும் பார்க்காதீரு மாமா.. தேவையில்லாத சடவு தான் மிஞ்சும்”
”சாதி சனமெல்லாம் பார்க்காம இருக்க முடியாது மாப்புள்ள. என்னதான் புகழூ ஆசைப்பட்டாலும் நாள பின்ன நாம ஒன்னுமண்ணா வாழப் போற எடோம் இத்தான? அப்புறம் நம்ம சனத்துக்கிட்ட கலந்துக்காம ஏன்பாட்டுக்குப் பதில் சொல்ல முடியாதுய்யா” என்றிருந்தார் நம்மாழ்வார்.
பாரதி, “அய்யா, நீரு கேளும். நாங்க தடுக்கல, ஆனாபாட்டுக்கு புகழோட மனசையும் நாம பாக்கத்தான ஆவோணும்? மத்தவிங்க வேணுமுனாலும், நம்ம புள்ளய ரோசன பண்ணிக்கிடுங்க. அவனா புடிச்சிருக்குக் கட்டி வைங்ககிறான், தெரியாத புள்ளையா ஆராதனாவும்? நம்மூட்டுக்கு வந்த புள்ள தானே, கொணமும் தங்கோம், பிறகென்ன”
தேனாட்ச்சியிடம், “ஆத்தா, நீ என்ன சொல்லுற?” என்றார் நம்மாழ்வார்.
“புகழூ ஆசப்பட்டுடாய்யா, புள்ளையும் சோடபோகாதவ தான? அவுங்க வூட்டு மக்களுக்கு சரினுட்டா, நல்ல வார்த்த பேசிடுய்யா ஆழ்வாரு” என்றுவிட்டார் நிறைந்த மனதுடன்.
கருணா, “மாமா, சிவாகிட்ட ஒரு வார்த்த சொல்லிடுங்க”
பாரதி, “அவனுக்கென்னா தெரியாமையா இருக்கபோவுது? இல்ல புகழோ ஆராதனாவோ தான் சொல்லமாட்டாவளா? சும்மா கிடங்க”
“சேரி, மலையம்மா உம்ம அண்ணேன் எங்கிடுங்கான்னு கேட்டு சொல்லு, தாய் மாமேன் கிட்ட ஒத்த வார்த்த பேசிட்டு முடிவ சொல்லுதேன்” என்றார் நம்மாழ்வார். அதிலேயே அவரின் மறைமுக சம்மதம் கிடைத்துவிட, வீடு திருமணத்திற்காக மகிழ்ச்சியை பூசிக்கொண்டது.
சரியாய் ஒருமாதம் சென்று,
ஹோட்டல் ரேடிஷன் ப்ளு.
அந்த பங்க்வேட் ஹாலில் (Banquet Hall) கூட்டம் நிரம்பி வழிந்தது.
வாயில் துவங்கி மேடை வரை இளஞ்சிவப்பு ரோஜாவும் வெண்ணிற கார்நேஷன் மலர்கள் ஒன்றோடு ஒன்று பின்னியவாறு அமைந்திருந்த அலங்காரம் கண்களைப் பறித்தது.
மேடையில் எளிமையாய் வெண்மை நிறத்தில் கண்களை உறுத்தாதபடி இளஞ்சிவப்பு தாமரை மலர்கள் சூழ வடிவமைத்திருக்க அதன் நடுவே, AP என்ற தங்க நிறத்தில் பின்னிப் பிணைந்திருந்தது ஆராதனா புகழின் முதல் எழுத்து!
என்ன குறைத்தும் இரு தரப்பிலும் முன்னூறு பேர் வந்திருக்க, விருந்தினருக்குத் தனித் தனி டேபிள்கள், அதில் வீற்றிருந்த அலங்காரம் என்ற பகட்டாக பட்டுத் தெளித்தது டாம்பீகம்.
வெல்கம் ட்ரிங்காக சில்ட் மில்லட் மில்க் மற்றும் ஜாமூன் லெமனேட் பரிமாறினர்.
(அது வேறொன்றுமில்லைங்க, ராகிப் பாலும், நாவல் எலுமிச்சை பழ ஜூஸ் தான்)
ஒருபுறம் மும்முரமாய் பஃப்பெட் உணவுகள் நடைபெற மேடையில் ஷக்தி ஆராதனா – புகழேந்திரனின் நிச்சய சடங்குகள் நடந்தேறியது.
சந்தன நிற காஞ்சிப்பட்டில், மரகதக் கற்களால் ஆன நகைகள் பூட்டி மிதமான ஒப்பனையில் மயிலாக நின்றிருந்தாள், ஷக்தி.
அவள் முகத்தை அடைத்திருந்த புன்னகை சொல்லியது அவளின் பேரானந்தத்தை!
புகழோ, பட்டுச் சட்டையும் இங்க் நிற காற்சராயுடன் சன்ன புன்னகையில் கண்கள் ஒளிர நிற்க அவன் அருகே மாப்பிள்ளை தோழனாய், சிவனேஷ் வீரபத்திரன்!
மேடையில் நின்றிருந்தவனின் முகத்தைப் பார்த்து, “எல்லாம் அவன் நேரம்” என்று அத்தோடு முப்பது முறைக்கு மேல் ப்ரகாஷிடம் சொல்லியிருந்தான் ஆராவமுதன்.
ப்ரகாஷ், ஆராவமுதன் பள்ளித் தோழன்.
ப்ரகாஷ், “விடுவிடு, அவங்கண்ணே பக்கத்துல அவன் நிற்கறான்” என்க,
ஆராவமுதன், “எங்க போய் அவன்கிட்ட இத சொல்லுப் பார்ப்போம்” என்றிட,
“சாப்பிடற இடத்துல கூப்பிடறாங்க மச்சான்.. இரு வரேன்” என்று ஓடியிருந்தான் அவன்.
மூன்று மாதங்களுக்குப் பின்னர் சிவாவைச் சந்திக்கிறாள் ஷக்தி. “அழகா இருக்க ஷிவ்” என்று புகழ் அருகே இருந்ததால் மென்மையாய் அவள் கூற, அதுவே சிவாவிற்கு உணர்த்தியிருந்தது அவளின் மாற்றத்தினை.
முன்பிருந்த ஷக்தியாக இருந்தால் நின்ற இடத்திலேயே மைக் செட் கணக்கில் கத்தி கூறியிருப்பாள். ஆனால் இப்போது நிற்பது புகழின் வருங்கால மனைவி, அவனின் அண்ணி, ஆராதனாவாக.
புகழுக்கு இடையே தொடர்ந்து அழைப்புகள் வர, அதைத் தவிர்த்தபடி இருந்தான்.
முயன்று விழாவில் அவன் ஒன்றிவிட, அலைப்பேசியை சிவாவிடம் கொடுத்துவிட்டான்.
”அண்ணி, இந்த ஆரா என்ன இம்புட்டு ஜொலிக்கறா? வீட்டுக்குப் போய் சுத்திப்போடனும்” என்றாள் ஜான்வியிடம் மேகா.
ஐந்தாம் மாதம் துவக்கத்தில் முன்பிருந்த குறும்புகள் அனைத்தையும் மூட்டை கட்டிவிட்டு மூன்று வயதைத் தொடவிருந்த ப்ரத்வியுடன் அமர்ந்திருந்தால்.
உண்மைக்கும் ஷக்தியின் முகத்தில் அத்தனை வாத்ஸல்யம்.
“ஏய் நீயே கண்ணு வைக்காத மேகா. உன் புருஷனும் என் புருஷனும் சண்டைக்கு வந்துருவாங்க” என்க,
”கரெக்ட் கரெக்ட்.. பட் இருந்தாலும் இந்த புல்லுவாயன போய்” என்றவள் முகத்தைச் சுழிக்க, “மேகா” என்று கத்தியபடி வந்தான், ப்ரமோத்.
“எங்க வந்து என்ன பேசுற நீ? அமைதியா இருக்க மாட்டியா?”
ப்ரத்வி, “ப்பா.. டேன்ட் சவுட் அத்த. பேபி டம்மி உள்ள இக்கு, இச் பேட்” என்று தகப்பனுக்கு மகள் பாடமெடுத்தால்.
“என் தங்கப்புள்ள” என்று மேகா மருமகளை அணைக்க, “பார்த்துக்கோ ஜான்வி” என்று வேலையைக் கவனிக்கச் சென்ற ப்ரமோத்தின் முகத்தில் புன்னகை.
“தட்ட மாத்திக்கோங்க” என்றவுடன்
ஷக்தியின் வீட்டின் சார்பாக காளிதாஸ் யமுனாவும் புகழின் பெற்றோர், நம்மாழ்வார் உண்ணாமலையும் தட்டை மாற்றி, அவளுக்கு பூ வைத்து திருமணத்தை முடிவு செய்தனர்.
தாய் மாமாக்கள் மாலை அணிவித்து, நலுங்கிட்டு, மோதிரம் மாற்றி, இளசுகளின் கிண்டலுக்கிடையே நன்றாகவே முடிவடைந்தது அவர்களின் நிச்சய தாம்பூலம்.
புகைப்படங்கள் சரமாரியாக எடுக்கப்பட அதில், “ஸர், மேம் மேல கைபோட்டு ஒரு போஸ்” என்றான் அந்த புகைப்பட கலைஞன்.
“சூர்” என்று சிரித்தபடி ஷக்தியைத் தோளோடு அணைத்தபடி நின்றவன் பிடியின் அழுத்தத்தில் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் முகம் அத்தனை விகசித்திருக்க, ஷக்தியின் விழிகளைப் பார்த்தபடி நின்றிருந்தான் புகழேந்திரன்.
அது அழகாய் புகைப்படமானது!
சிவாவின் மனதில் ஜுவாலையின் தகிப்பையும் கொடுத்தது.
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
18
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


காதல் என்று எண்ணியிருந்த ஒன்றின் மீதான மயக்கத்தினில் குடும்பத்தினரின் உணர்வுகள், நண்பனின் உணர்வுகள் தான் தெரியவில்லை என்றால் தனது சுயத்தை விட்டு விலகுகிறோம் என்பதனையும் அறியாமல் விட்டுவிட்டால் சக்தி.
சில்க் மில்லட் மில்க், ஜாமுன் lemonade 😍😍
அவனது சக்தியாக இல்லாமல் அண்ணி ஆராதனவாக அவளது மாற்றம்.