
“ஆரா’ம்மா என்ன இப்படி உட்கார்ந்திருக்க? சாப்பிடவும் இல்ல, வேலைக்கு மட்டும் வந்தா போதுமா?” என்று சற்று அதட்டல் குரலுடனே அவள் அலுவலக அறைக்குள் நுழைந்தார், காளிதாஸ்.
“மாமா, எப்போ வந்தீங்க” என்றவள் அவளுக்குண்டான அறையில் நிச்சயம் காளிதாஸை எதிர்பார்க்கவில்லை.
நாற்காலியிலிருந்து எழுந்து அவர் அருகே அவள் வர, “பர்மிஷன் சொல்லிட்டு வா ஆராம்மா.. கொஞ்சம் வெளிய போகனும்” என்றவர் முகம் கடுமையாய் இருந்தது.
“இருங்க” என்றவள் சம்பத்திடம் வேலைகள் சொல்லிவிட்டு காளிதாஸுடன் வெளியேறினாள்.
பீபிள்ஸ் பார்க் அன்னபூர்ணா, அந்த நடுமதிய நேரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தனர் இருவரும்.
ஒரு மினி மீல்ஸை ஆர்டர் செய்த கையுடன் காளிதாஸ், “சாப்பிடாம இருந்தா எல்லாம் சரியாச்சா ஆரா?”
“சரியாகாதுதான் மாமா, ஆனா எதுவும் பிடிக்கல” என்றாள் முகத்தைப் பக்கவாட்டாகத் திருப்பிக் கொண்டு.
“ம்ம்ப்ச், என்ன ஆரா நீ என்ன குழந்தையா? சாப்பிடமா இருந்து என்ன ப்ரூவ் பண்ண போற? லவ்வையா?” என்றார் கடிந்த குரலில்.
அதற்கு, “லவ்வுக்காக சாப்பிடாம இல்ல மாமா, அவங்க நடந்துக்கற விதத்துனால சாப்பிட பிடிக்கல”
“என்ன பண்ணாங்க” என்றார் என்ன நடந்தது என்று தெரிந்தும் அவளின் வாயால் அதைத் திரும்பவும் கேட்க எண்ணி.
“புகழப் பத்தி சொல்லாதது என் தப்பு தான் மாமா, ஒத்துக்கறேன். ஆனா, ஈசா ஏன் இப்படி பிஹேவ் பண்ணுறான்? அவனுக்குப் பிடிக்காத ஆள் தான் இருந்தாலும்.. ஐ லக் ஹீம் மாமா” என்றவள் முகத்தில் அத்தனை பரிதவிப்பு.
“என்ன பண்ணலாம், நீயே சொல்லு?” என்று பந்தை அவளிடம் அவர் நகர்த்த, முழித்தாள் ஷக்தி.
“என்ன பண்ணலாம்’னா?”
“சொல்லு ஆராம்மா.. உனக்கு ஒருத்தர பிடிச்சிருக்கு, சந்தோஷம். அவரப் பத்தி விசாரிக்க வேண்டாமா? மேற்கொண்டு பேசனும்னா ஆள் யாரு, எப்படி எல்லாமே பார்க்கனும் தான நாங்க” அவரின் நயமான பேச்சில் அவள் தலை தன்னால் அசைந்தது.
“அப்பா, எனக்கு புகழேந்திரன் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் எனக்கு அவர் ஆராக்கு சூட் ஆவார்ன்னு தோனலை. அவர் நம்ம ஆராக்கான மாப்பிள்ள இல்ல, இது சொன்னா அவ கேட்கமாட்டா நீங்களே புரியவைங்க உங்க மருமகளுக்கு” என்று காளிதாஸ் தமிழகம் வரும் முன்னவே ப்ரமோத் புகழேந்திரனைப் பற்றிச் சொல்லியே தான் அனுப்பி வைத்திருந்தான்.
காளிதாஸும் விசாரித்த வரை புகழ் அவன் அளவில் நல்லவனாக இருந்தாலும் ஷக்தியின் வாழ்க்கைக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் அவன் பொருந்தமாட்டான்.
காரணம், அவன் வேலை சார்ந்த எண்ணங்களும் அவனின் நிலைப்பாடும்!
ஷக்தி ஆராதனா என்ற பெண்ணிற்கான மாப்பிள்ளையாகும் தகுதி புகழேந்திரனிடம் இல்லை என்பதுதான் மிகச்சரியானது.
நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா, அந்த நேர்மையைக் காக்க நேர் வழி இருக்க வேண்டும் அல்லவா?
உணவும் வந்துவிட ஐந்து நிமிடங்கள் கடந்தும் அவளின் முகம் யோசனையாகவே இருந்தது.
“நான் புகழை உங்ககிட்ட பேச சொல்லுறேன் மாமா. அவர்கிட்டவே நீங்க நேரடியா பேசுங்க, கேட்க வேண்டியதைக் கேளுங்க” என்றவளை சலமில்லாது பார்த்தார் அவர்.
அவருக்குப் புகழிடம் பேசி என்னவாகப் போகிறது? ஷக்தியின் மனநிலையைக் கணிக்க வேண்டியல்லவா அவர் பேச்சை ஆரம்பித்தார்.
“சரிம்மா, கேட்டு சொல்லு. நான் பொள்ளாச்சி வீட்டுல தான் இருப்பேன், முடிஞ்சா வரச்சொல்லு, இல்லையா நானே அவர் சொல்லுற இடத்துக்கு போறேன்” என்றவர் சாப்பிட்டு ஷக்தியிடம் பொதுவாக பேசியபின்னர் சென்றார்.
அவர் சென்றபின்னர் இன்னும் அவளை அழுத்தங்கள் சூழ்ந்தது போல் தோன்றியது.
சிவா இன்றோடு அவளிடம் பேசியே இரண்டு வாரங்கள் சென்றிருந்தது. உள்ளூர கனமாய் மேகங்கள் சூழ்ந்து, அழுத்துவது போன்று இருந்தது.
“ஷிவ்” என்றவள் கண்களை மூடிக்கொண்டு அவனை நினைத்தால்.
ஒரு ஆயாச உணர்வு. அவளை அவன் புரிந்துகொள்ளவில்லை என்ற அயர்வு. அதிலும், எங்கு அவன் அவளைத் தவறாக நினைத்துக்கொண்டானோ என்ற எண்ணம்.
இந்த எண்ணத்திற்கெல்லாம் மூலமாய் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வை அசைபோட்டது அவள் மூளை.
அன்று புகழ், ஷக்தியிடமிருந்து தள்ளி நிற்கச் சொல்லிய போது சிவாவின் மனது துடித்தது.
“புகழை லவ் பண்ணுறியா ஷக்தி” என்று வெளியே வந்தவன் நேரிடையாக அவளுக்கு அழைத்துக் கேட்க,
“ஷிவ்” என்று அதிர்ந்தவள் பின், “ஆமா” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“ஏன் செல்லல” உள்ளூர ஏதோ அடைத்த உணர்வு அவனுக்கு.
“இன்னிக்குச் சொல்லத் தான் வந்தேன் ஆனா அதுக்குள்ள உன் டிரான்ஸ்பர்..”
“ம்ம்.. சந்தோஷம். வாழ்த்துக்கள்” என்றவன் வைத்துவிட்டான்.
கோபம். அத்தனை கோபம் அவன் மனதில். ஏன் எதற்கு என்று கல்மண் தெரியாத அளவிற்குக் கோபத்தில் இருந்தவன்,
“உன் அரும தங்கச்சி லவ் பண்ணுறா! அதுவும் யாரத் தெரியுமா” என்றவன் நிறுத்தி தன் ஆதங்கத்தையும் பீறிடும் ஆத்திரம் மீதுற, “என் வாழ்க்கைய கெடுத்தவனோட” என்று பல்லைக் கடித்து முடித்திருந்தான்.
அதிர்ந்தெழுந்துவிட்டான் ஆராவமுதன். “என்னடா சொல்லுற? ஆராவா? அவனையா? இருக்காதே!” என்க,
“ம்ம்.. மெச்சிக்கோ உன் தங்கச்சிய உனக்கு நல்லா தெரியும்னு இனி. போடா ஃப்பூல், அவங்க லவ் பண்ணுறாங்களாம். இனி நான் ஷக்திகிட்ட டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணனும்னு எனக்கு என் சுப்பீரியர் ஆடர் போட்டிருக்கார்” என்றான் ஆத்திரமாய்.
“இரு, ஆராகிட்ட கேட்கறேன்” என்றவன் அந்த இரவு நேரத்தில் தங்கையை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டான். அதன்பின், ஆராவமுதனாகட்டும் மேகாவாகட்டும் அவளிடம் பிடிகொடுத்துப் பேசவில்லை.
காரணம், அவர்களுக்குப் புகழின் மீதான எண்ணம், அபிப்பிராயம்!!
ஆக, ஷக்தியின் வீட்டினர் யாருக்கும் புகழை ஷக்திக்கானவனாகப் பார்க்க உவப்பானதாக இல்லை.
சிவாவை இத்தனை வருடங்களாகப் பார்த்தவர்களுக்கு அவன் வாயிலாக ஆராவமுதனின் மூலம் தெரிந்த புகழும் இப்போது ஷக்தியின் கணவனாக(?) வரப்போகும் புகழும் எத்தனை வேறுபாடுகள்.
“அவ ஆசைப்பட்டுடா. பையனும் நல்ல குணவானா தான இருக்கான். என்ன முன்கோபி, உங்கப்பாவைவிட உன்னால ஒரு கோபக்காரர காட்டிட முடியுமா சொல்லு ப்ரமோ?” என்று யமுனா பேச,
“அத்த, என்னதான் நீங்க அவனுக்கு ஏந்திட்டு பேசினாலும் சிவாவோட பத்து வருஷமா இருக்கறவன் நான். அவன் மனசளவில எத்தன ஏங்கிபோய் இருக்கான்னு எனக்குத் தான் தெரியும். சகமனுஷனோட பாசத்த, கனவ கொன்னு அவனுக்கான சந்தோஷத்தையும் கெடுக்கிறவன் என் தங்கச்சிக்கு வேண்டாம்” என்று அத்தனை ஸ்தீர மறுப்பு ஆராவமுதனிடம்.
அவன் வாதம் தான் ப்ரமோத்திடம். என்ன அவன் உணர்ச்சிப் பூர்வமாய் இதைப் பார்க்காது, நிதர்சனமாகப் பார்த்தபோதும் புகழை அவனால் ஷக்தியுடன் பொருத்த முடியவில்லை.
“கண்ணா, உங்க பக்கம் புகழைப் பாத்தி ஆதி முதல் அந்தமா நல்லா விசாரிங்க. எந்த பிசிரும் இல்லைன்னு உனக்கும் ஈசாவுக்கும் தோனினா சொல்லு, ஆராகிட்ட சொல்லி மேற்கொண்டு அந்த பையன் வீட்டுல வந்து பேச சொல்லலாம்.”
“ம்மா” என்று ஆராவமுதன் உரக்கக் கத்தினான்.
லாவண்யா, “இல்ல தம்பி, அவ ஆசப்பட்டுடா. அதுக்கா எதையும் பார்க்காம கட்டிக்கொடுக்க மாட்டோம் தான் இருந்தும் விசாரிச்சுப் பார்த்து, நமக்கு திருப்தினா எல்லார் சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணி வைப்போம். உங்க அப்பா இருந்திருந்தாலும் இதத்தான் பண்ணியிருப்பார். ஆரா மனசுல ‘அப்பா இருந்தா இப்படி ஆகியிருக்குமான்னு’ ஒரு நினைப்பு வந்துடக் கூடாது. உனக்குப் புரியும்னு நினைக்கேன்” என்றவர் சென்றுவிட்டார் உள்ளே.
“ம்ம்ப்ச்.. என்ன ப்ரமோத்தண்ணா. புரியாதா இவங்களுக்கு?”
“பார்த்துக்கலாம் இருடா” என்ற ப்ரமோத் தனக்குத் தெரிந்த டிடெக்டிவ் மூலம் புகழேந்திரனை ஷேடோ செய்யச் சொல்லிவிட்டு மேற்கொண்டு காளிதாஸிடம் பேசலானான்.
யாருக்கும் புகழைப் பிடிக்கவில்லை என்பது ஷக்தியின் மனதில் பதிந்து போனது. ஏன்? என்ற கேள்விக்கான பதில் அவளுக்குத் தெரியும். ஆனாலும் மனது கேட்கவில்லை.
புகழிடம் வீட்டினர் பழகினால் நிச்சயம் அவனின் நற்குணங்களையும் ஒழுக்கத்தையும் புரிந்துகொள்வர் என்ற அதீத நம்பிக்கையுடன் இருந்தால்.
ஒருவனிடம் நன்மை மட்டுமா இருக்கும்?
புகழோடான காளிதாஸின் சந்திப்பு, ஆராவமுதன் ப்ரமோத்தின் மறைமுக விசாரணைகள் என்று எல்லாம் ஒருபுறம் நடந்தேறியது.
இருந்தும், சிவா என்ற மனிதன் அப்போது அவர்கள் அனைவரின் எண்ணத்திலிருந்தாலும் நிஜத்தில் அவனை மறந்திருந்தனர்.
அது அவனிடத்தில், “என்னை எனக்காக நேசிக்கிற மனுஷங்கள இப்படி என்னைவிட்டு தூரமா தள்ளி விடுறதுல என்ன கிடைக்க போகுது உனக்கு (புகழ்)” என்று உள்ளூர தினமும் மறுகியவனின் குரலைக் கேட்க யாருமில்லை.
நாட்கள் சென்ற பின் ஷக்தியின் வீட்டாட்களின் பதிலாக அவளுக்குக் கிடைத்ததென்னவோ, “புகழை வரச்சொல்லு, மேற்கொண்டு பேசலாம்” என்பதே.
ஷக்தி வென்றாலா அல்ல புகழ் வென்றானா என்பதை விட, அங்கு விதி வென்று!
இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது.
தினமும் அல்லாது வேலைகள் சற்று குறைவான நேரத்திலே ஃப்ரீ டைமில் அலைபேசி அழைப்புகளும் மெசேஜ் வழியும் ஷக்தியிடம் பேசவிடுவான், புகழ்.
காதல் சொட்டும் வார்த்தைகள் இருக்காது, அவர்களின் வயதுக்கும் பதவிக்கும் ஏற்ற பக்குவம் இருக்க, அதற்குத் தக்கவே பேசினர்.
தவிர, இந்த வழிசல் பேச்செல்லாம் ஷக்திக்கு அலர்ஜி என்று தெரிந்தும் வைத்திருந்தான் புகழேந்திரன்.
“புகழேய்” என்று அத்தனை உரிமையாய் ஆர்ப்பாட்டமாய் தான் ஷக்தியின் ஒவ்வொரு செய்தியும் அழைப்பும் அவனை நிறைக்கும்.
“சாப்பிட்டீங்களா? ஒரு கேஸ் பத்தி சொல்லனும்” என்பனவில் துவங்கி,
“ஆராதனா, மதியம் ஒரு இன்சிடென்ட். சின்ன பொண்ணு லவ் பிரபளம், சைபர் க்ரைம்ல கொஞ்சம் வேலை” என்று அவனும் அவர்களின் வேலையை ஒட்டியே பேச்சுகளையும் தங்களின் காதலையும் வளர்த்தனர்.
காதல் வளர்ந்ததோ இல்லையோ ஒருவரைப் பற்றி மற்றொருவர் தெரிந்தனர், புரிந்துகொண்டனர்.
“ஷிவ்’க்கு என்கிட்ட ஒரு டிஸ்டன்ஸ் வந்துடுச்சு புகழ். அவன் பேச்சுலையே நல்லா தெரியுது, முன்ன இருந்தது போல இல்லை” என்று ஒருநாள் அவள் சொல்லியிருக்க, அவனிடம் பதிலில்லை.
“ஒன்னு கேட்கவா? ஏன் நீங்க அவனப் படிக்க வேண்டாம்னு சொன்னீங்க? தப்பில்ல” என்று நீண்ட நாள் மனதை அரித்த அந்த கேள்வியைக் கேட்டுவிட்டாள். ஆனால் பதில் சொல்லும் நிலையில் அவனில்லை.
“ஆராதனா, அது முடிஞ்சுபோனது. தவிர அது அவனுக்கானது இல்லை! அண்ணனா அவனுக்கு அது சரியா வரும்னு எனக்கு தோனல, அதான். இனி இந்த பேச்சு வேண்டாம்” என்று புள்ளியிட்டுவிட்டான்.
அதன்பின், அவன் அதுவரை பார்க்காத ஒரு ஆராதனாவைப் பார்த்தான். அவள் பேச்சில் செய்கையிலும் இயல்பாக ஒரு தாய்மை உணர்வு வெளிப்படுவதைக் கண்ணுற்றான் அவன்.
எப்போது அழைத்தாலும் அவள் கேட்கும் முதல் கேள்வியே, “சாப்டீங்களா புகழ்” என்பதே!
மெல்ல மெல்ல அவன் மனது அவள் பால் சாய்ந்து, சாய வைத்தாள் அவள் அன்பால்.
இதற்கிடையே சிவாவை அவள் மறக்கவில்லை. அழைத்தாலோ குறுஞ்செய்தி அனுப்பினாலோ ஓரிரு வார்த்தை பதில் தான். இருந்தும், அவள் அவனை விட்டபாடில்லை.
ஒரு வாரம் கடந்திருந்தது, ஷக்தியின் வீட்டினர் பதில் சொல்லியும் மாதங்கள் சென்றிருந்தது.
தலைமையகத்தில் நடந்த மீட்டிங் முடிந்த கையுடன் புகழ், “வேலையிருக்கா இனி? எப்போ கிளம்பர ஆராதனா?”
“ஓவர் புகழ். ஸர் தான் இருக்கனும். ஈவினிங் தான் பிளைட்” என்க,
“ரைட், கம் வித் மீ” என்றவன் அவள் கைப்பிடித்து வாகனம் வரை அழைத்து வந்திருந்தான்.
அதை அவர்களைத் தெரிந்த அனைவரும் பார்த்திருந்தனர்.
விமானநிலையம் வந்தடைந்தது அவர்களின் வாகனம். உள்ளே சென்று அவளை ஓரிடத்தில் நிறுத்தியவன் கேள்வியாய் பார்த்தவளிடம், “வெயிட் பண்ணு, வந்திடறேன்” என்றவன் சென்றுவிட்டான்.
ஒரு தோள் குலுக்கலுடன் காத்திருந்தவள் கண்கள் அங்கிருந்த கடைகளில் பதிய, நேரத்தைத் தள்ளப் பார்வையிடச் சென்றாள்.
பத்து நிமிடங்கள் கடந்து, “ஆராதனா” என்று காக்கியைக் கலைந்துவிட்டு டிசர்ட் – சினோ ஃபேண்டில் வந்து நின்றான், புகழ்.
“இருங்க, வரேன்” என்றவள் மேலும் பத்து நிமிடம் கடந்தே வந்தால்.
“உன் லக்கேஜ் சம்பத்கிட்ட கொண்டு வர சொல்லிட்டேன்.” என்றபடி வேக நடை நடந்தவனுடன் நடந்தவள் விமானத்தின் அறிவிப்பைக் கேட்டதும் சட்டென்று நின்றுவிட்டாள்.
அதைக் கவனித்தவனும், “என்ன வரலியா?” என்று புருவமுயர்த்தி கேட்க, அவள் அவனையே தான் பார்த்து நின்றிருந்தாள்.
அதிர்ந்த நகராத பார்வை. அதில் அவனுக்கு இதழோரம் புன்னகை துடிக்க, அந்த ஐந்தரை அடி சுடிதார் அணிந்த பெண்ணை அத்தனை மனநிறைவாய் பார்த்திருந்தான்.
“சீக்கிரமா கல்யாணம் பண்ண வேண்டாமா ஆராதனா?” என்றவன் கேட்டு நிற்க, இடம் சூழல் மறந்தவளாய், “புகழேய்” என்று கத்தியிருந்தாள்.
கண்ணீர் வந்துவிடும் போல, அவள் வீட்டில் சொன்னபோது கூட இத்தனை உவகை வரவில்லை அவளிடம். ஆனால் இப்போது, அடுத்த நிலைக்குத் தாவும் அவர்கள் உறவுநிலையை எண்ணி ஆனந்தக் களிப்பு அவளுள்.
“வா ஆராதனா” என்றான் அவனும் நிறைந்த புன்னகையுடன்.
தூத்துக்குடி செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தனர் இருவரும். ஷக்தி இதை எண்ணிப் பார்க்கவே இல்லை.
அதிலும் அவளையும் உடன் அழைத்துச் சென்று அவன் பெற்றோரிடம் சொல்லுவான் என்பது கனவிலும் அவள் நினையாத ஒன்று.
ஒன்றரை மணிநேர பயணம். நடுவானில் விமானம் பறக்க, அவளும் உடன் பறந்தாள்(!).
அருகே அமர்ந்திருந்த புகழோ அவளின் பூரித்த முகத்தைச் சன்ன புன்னகை சிந்திப் பார்த்திருந்தான்.
நினைவு வந்தது போல், “கை கொடுங்க” என்றாள்.
நீட்டியவனிடம், “இத போட்டிருக்கும் போது நானும் உங்க கூடவே இருக்கற உணர்வும், உங்களுக்காக ஒருத்தி காத்திருக்கற நெனப்பும் இருக்கனும்.. ம்ம்” என்றபடி விமானநிலையத்தில் அவனுக்காக வாங்கிய தங்கக் காப்பை அணிவித்தாள் பெண்ணவள்.
அவன் புன்னகையின் அளவு விரிந்தது. அவள் தலையை மெல்ல ஆட்டியவன், “இத போட்டிருந்தாதான் நீ என் கூட இருக்கற ஃபீல் வருமா என்ன?”
“ம்ம்.. ஏதோ தோனுச்சா, ஆனாலும் என்ன நினைச்சிருப்பீங்க தானே?” என்க,
“மறக்கும் முகமாடீ இது, செல்லம்மா” என்றிருந்தான் அவனை அறியாது.
அதில் சிரித்தவள் முகம், ஆழமாய் மிக ஆழமாய் பதிந்திருந்தது அவன் இருதயத்தில்!
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
18
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவளுக்கான வரையில் நல்லவன், பொதுவாக காணவும் நல்லவன், ஆனால் அவள் உயிர் நண்பனின் வாழ்வை வீணாக்கியவன் என்ற கோணத்தை மட்டும் இலகுவாக மறந்து போய்விட்டாள் சக்தி.
தான் நினைத்தது நடக்க வேண்டும், தனக்கு சௌகரியம் வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் பற்றி கவலைக் கொள்ளாமல் நடப்பவன் எங்கனம் நல்லவன் ஆவான்?
தன்னை நேசிப்பவர்களை இன்னும் எத்தனை காலத்திற்கு தான் தன்னிடமிருந்து பறித்து வீசுவானோ என்ற சுய கழிவிரக்கத்தினில் ஷிவ்.
அடுத்தவருக்கு எது சரி வரும்? எது சரி வராது என்று முடிவு செய்ய நாம் யார்?
சொந்த சகோதரனுக்கு அவன் இழைத்ததையும், அவன் தன் உயிர் நண்பன் என்பதையும் அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் வசதியாக மறக்கடித்து விட்டது காதல்.