Loading

அந்தாதி – 20

“பொட்டக் கழுத, என்னடீ பேசுற” என்று ஒருவன் அவளை நெருங்கி அடிக்க வர, “ம்ம், ஒரு அடி முன்ன வந்த, வெடிச்சிடும்” என்று பேனாவைக் காட்டினாள்.

அதில் அவர்களின் புருவம் சுருங்க, “என் கார்ல பாம் இருக்குடா வெண்ணமவனே, ஒரு அழுத்து என்னோடச் சேர்ந்தே நீங்களும் பரலோகம் தான்” என்றாள் அலட்டாது.

“மேம், என்ன சொல்லுறீங்க” என்று சம்பத் அலற, “ஆமா சம்பத், வர வழியிலே நாம சீஸ் பண்ணப் பொருள் அதுதான்” என்க,

“மேடம் நான் புள்ளக்குட்டிகார, விட்டுங்க என்ன” என்று ஓட்டுநர் அழுகவே செய்தார்.

அதையெல்லாம் பார்த்திருந்த அந்த நபர்கள் உண்மை என்று நம்பி, “டேய் இவ வந்த கார பாருங்கடா” என்று ஆட்களை அனுப்ப, அதில் காரை பார்ப்பதைவிட உயிரைப் பார்க்க வென்று அனேகர் வெளியேறியிருந்தனர்.

மீதம் அந்த அறையிலிருந்த ஐவர் மட்டும். இது போதாதா அவளுக்கு, “அப்புறம், நீங்களும் போய் பார்க்கறது” என்றபடி அந்த ‘தலைவனாக’ பேசியவனிடம் அவள் செல்ல, அவன் அசந்த ஒரு விநாடியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியவள் அவன் மூக்கிலும் மார்பின் மத்தியிலும் குத்துவிட, சுருண்டான் அவன்.

“வருண் டேக் ஓவர்” என்றவள் கத்த, ஷக்தியுடன் வந்த அவளின் ஷீல்ட் (பாதுகாவலர்) களத்தில் இறங்கியிருந்தான்.

ஓட்டுநரும் சம்பத்தும் ஒருவனைப் பிடித்துக்கொள்ள, மீதம் இருந்த நால்வரை ஷக்தியும் வருணும் கவனித்தனர்.

வித்தைகள் கற்றுத் தேர்ந்த வருணுக்கு மூவரை ஒரே சமயம் அடித்து ஒடுக்கும் திறன் இருந்தது. 

அதே சமயம், ஷக்தியைத் தாக்க முயன்றவனின் மணிக்கட்டைத் திருகி, அவனை முன்னிழுத்து முழங்கையோடு சேர்த்து அவனை பிரட்டி திருப்பிப் போட்டவள், வலது காலை மடித்து அவன் பின்னங்கழுத்து வைத்து இறுக்க, மயங்கிச் சரிந்திருந்தான்.

“மேடம்” என்று ஓட்டுநர் ஷக்தியின் அவதாரத்தில் வாயைப் பிளக்க,

வருணோ, இருவரின் கையை முதுகோடு ஒடித்திருக்க, மற்றொருவனின் வாயை உடைத்திருந்தான்.

சப்தம் கேட்டு மேலும் நால்வர் வந்துவிடு, “வருண், டேக் டூ” என்று விட்டு முன்னே அவளை அடிக்க பாய்ந்து வந்தவனின் கை மணிக்கட்டை அவனின் இடதுகால் பக்கமாகத் திருப்பி, கழுத்தோடு சேர்ந்து ஒரு அரைவிட, சுருண்டுவிட்டான்.

அடுத்து வந்தவன் சற்று சுதாரித்து ஒரு பிளாஸ்டிக் சேரை ஷக்தியை நோக்கி வீச, அவள் கீழே மடிந்தபடி காலால் அவனை எத்த, குப்புறடித்து விழுந்தான்.

முன்னர் அடித்தவன் திரும்பவும் எழுந்து ஷக்தியைத் தாக்கப் பார்க்க, அவனைப் பின்னியிருந்து பிடித்திருந்தான் வருண்.

ஒன்பது பேர், அதில் வருண் உண்மைக்கு வழுவாக அடித்திருக்க ஒருவனாலும் எழ முடியவில்லை. 

ஷக்தி முதலில் அடித்தவனின் கழுத்தெலும்பு உடைந்திருக்கும். இப்போது ஒரு தற்காப்பு சண்டை மட்டும் தான் அவள் மேற்கொண்டது. அதிலேயே நிச்சயம் எழும்பு உடைந்திருக்கும் அவள் திருப்பியத் திருப்பில்.

அத்தனை பேரையும் ஒடுக்கி,

அவள் திரும்பி மூச்சு வாங்க நிற்க, “ஆராதனா” என்ற புகழின் அழைப்பு அத்தனை ஆசுவாசம் கொடுத்தது அவளுக்கு.

“மிஸ்டர். புகழ், இத்தன நேரமா வர” என்றால் முறைத்தவண்ணம்.

அதில் தெறித்த உரிமையைக் கண்டுகொண்டான் அவன்.

“வரனும்ல, நான் வந்தாலும் ஒன்னு ஆகியிருக்காது போல” என்றவன் சிரித்தபடி நின்றான்.

“எப்போ வந்தீங்க?” 

“அந்த பச்ச சட்டைய ஏர்ல திரும்பிப் போட்டியே அப்போவே” என்றவன் பேச்சில் ஒருவித ஆச்சர்ய பாவம்.

புகழ், “என்ன அந்த அடி அடிக்கறீங்க.. ட்ரைன்டா நீங்க?” என்க,

“ஹாப்கிட்டோ (Hapkido)” என்று சொல்லியபடி வருண் வந்தான்.

“சூப்பர் மேம். நல்ல டிபண்ட் பண்ணி அட்டாக் பண்ணிங்க. வெல்டன்” என்றான்.

“தேங்க்ஸ் வருண்” என்றாள் சன்ன புன்னகையை உதிர்த்து.

“அப்படினா” என்று புகழ் கேட்க,

“ஹாப்கிட்டோ, தற்காப்பு கலையில ஒன்னு ஸார். கராத்தே, டேக்வான்டோ மாதிரி இதுவும் ஒரு Martial Arts”

“மார்சியலார்ட்ஸ் தெரியுமா ஷக்தி” என்றவன் தன் பதவியை மறந்து கேட்டுவிட, வருண் ஒரு புன்னகையுடன் கடந்துவிட்டான்.

புகழ் தன்னை மீறி, ஒரு ஆர்வத்தில் தான் இப்படிக் கேட்கிறான் என்று உணர்ந்த ஷக்தி, “அது சின்ன வயசுல கத்துக்கிட்டது. தாஸ் மாமா சும்மா இருக்க விடமாட்டார் எங்கள. அப்படி கத்துக்கிட்டது இப்போ உதவுது” என்றாள்.

சில நிமிடங்கள் அங்கு இருந்தவர்கள் சில ஆதாரங்களையும் இடத்தைப் புகைப்படமும் எடுத்தனர்.

“லோக்கல் ஸ்டேஷன்க்கு சொல்லியும் யாரும் வரல புகழ், அத செக் பண்ணுங்க. அண்ட் ரேஷன் அரிசி மட்டும் இல்ல வேரேதோ விஷயம் நடக்குது இங்க” என்றபடி ஏதோ நினைவு வந்தவளாக,

“ஒரு பேச்சுக்கு அவங்கள டைவர்ட் பண்ண பாம்ன்னு சொன்னா இப்படியா பயந்து சாவாங்க? இதுல புள்ளக்குட்டி காரராம் இவர்! யோசிக்கமாட்டிங்களா கொஞ்சம் கூட” என்றபடி ஓட்டுநரையும் சம்பத்தையும் கடிந்தவள், புகழுடன் வெளியேறிவிட்டாள்.

“கலெக்டர் பிஏகிட்ட சொல்லிட்டேன். அவர் இங்க வந்துட்டு இருக்கார். இடம் முழுக்க லாக் பண்ணியாச்சு, ஸ்டேஷன் இன்பெக்டர், லிமிட் ஏசிபி ரெண்டு பேரும் கலெக்டர் இங்க வர சொல்லிட்டார்” என்றபடி புகழ், ஷக்தியுடன் நடந்தபடி சொன்னான்.

“ம்ம்” என்றவள் முகத்தில் ஒருவித சோர்வு.

“என்ன ஆராதனா, ஓகே தான?” 

“இல்லையே, பசிக்குது” என்றாள் ஒருவித தாழ்ந்த குரலில்.

“வா, பக்கத்துல பேக்கரி ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம்” என்று அவனுடன் சென்றாள்.

அவனின் ஒருமை பேச்சு முதலில் அவள் கவனிக்கவில்லை. காரணம், அவனின் ஆராதனா என்ற அழைப்பு!

ஆராதனா, அன்புக்குச் சாயும் ஆதாரமாய் இருக்கும் ஷக்தியின் மற்றைய பக்கத்தின் உரு.

சம்பத்திடம் சொல்லிச் சென்றவள் மனது முழுக்க புகழேந்திரனே நிறைந்திருந்தான். ஏதோ ஒருவித குரல் உள்ளூர அவனிடம் இப்போதே சொல்லிவிடு என்று உந்தித்தள்ளியது.

மெயின் ரோட்டில் ஒரு நடுத்தரமான பேக்கரி இருக்க, “இங்க சாப்பிடுவ தான” என்றான்.

“ஹலோ, என்ன? வாங்க பசிக்குது” என்று முன்னேறி விட்டாள். அவள் பசி அவளுக்கு.

“ஒரு காஃபி, மஸ்ரூம் பஃப்” என்றவள் புகழிடம், “நீங்க சொல்லிக்கோங்க” என்றால்.

அவன் தனக்கு டீயைச் சொல்லவும், “டீக்கடையில காஃபிதான் நல்லாயிருக்கும்.” என்றாள்.

“ஜோசியமா?”

“அனுபவம்”

“அப்போ காஃபி கடையில”

“டீ சுமாரா இருக்கும்” என்க, பக்கென்று சிரித்துவிட்டான், புகழேந்திரன்.

சில நிமிட மௌனங்கள். சொல்லிவிட முனைந்த மனதை அடக்க முடியாது தவித்து அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.

உதட்டை அழுத்த மடித்தவள் தன் உணர்வை வெளிப்படுத்த முயன்றால். எங்கு முடிந்தது. ஒருவித பதட்டம், ‘வாஸ்ரூம் போகனும் போல இருக்கே’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் மனது படபடத்தது.

“ஆராதனா?” என்று புகழ் அவள் அவஸ்தையைப் பார்த்துக் கூப்பிட,

அதுவரை இருந்த பொறுமை பறந்தது அவளிடம்.

“புகழேய்” என்றுவிட்டாள் பட்டென்று அவன் முகம் பார்த்து ஒருவித பதட்டத்துடன்.

அவள் நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்து அப்படிச் சொன்ன நொடி, புகழின் உலகம் நின்று சுழன்றது அவளை மட்டும் ஏந்திக்கொண்டு.

அவனின் அதிர்வு அப்பட்டமாக முகத்தில் தெரிய, அதைக் கண்டுகொண்டவள், “ஓகே, எனக்கு இதுக்கு மேலையும் பொறுமச் சுத்தமா இல்லை.” என்று இடவலமாய் தலையாட்டியவள்,

“உங்கள பிடிச்சிருக்கு புகழ். இந்த பிடித்தம் இப்போ இல்ல, கொஞ்ச நாளா இருக்கு. சொல்ல ட்ரை பண்ணுறேன் பட் இப்போ இங்க ப்ளான் பண்ணாம தான் சொல்லனும்னு இருந்துருக்கு போல” 

ஆழ்ந்து ஒரு மூச்சை எடுத்துவிட்டாள், “வில் யூ ..” என்று முடிக்கும் முன்னர், “சார், காஃபி” என்று வந்து நின்றான் கடைப் பையன்.

அதில் கடுப்பானவள் ஒரு முறைப்பை அவனுக்குத் தர, காஃபியை வைத்த கையுடன் ஓடிவிட்டான்‌ அவன்.

வைத்த கண் எடுக்காது அவளையேப் பார்த்திருந்தான் புகழ். அவன் மனதில் கல்லெறிந்தவளே இப்போது காதலையும் சொல்லுவாள் என்று அவன் என்ன ஜோசியமா கேட்டிருந்தான்?

அதுவும் முதலில் அவளைப் போலவே, அவனுக்கும் அவளைப் பிடிக்காது பின்னர் ஏதோ ஒரு உணர்வின் பிடிப்பில் அவளைப் பார்த்து, புரிந்துகொண்டு என்று ஆமை வேகத்தில் அவன் இருக்க, இவளோ சுழன்றடிக்கும் சூறாவளி வேகத்தில் அவனை உள்ளிழுக்கப் பார்க்கிறாளே?

சட்டென்று, “எக்ஸ்கியூஸ்” என்றபடி புகழ் வெளியேறிவிட, முகம் விழுந்துவிட்டது ஷக்திக்கு. 

ஒருவித அவமான அவஸ்தை. இரண்டு நிமிடங்கள் சென்றது. காஃபியும் பஃப்பும் ஆற, அவள் சுயமரியாதை விழித்துக்கொண்டது.

உணவை அப்படியே வைத்துவிட்டு அவள் எழும்பிப் பார்க்கச் சரியாக வந்து நின்றான், புகழ்.

“எங்க எழும்பீட்ட ஆராதனா”

“இல்ல..” என்றவள் அவனைப் பார்க்காதுத் தவிர்க்க,

“உட்கார்” என்றான் மென்மையாய்.

“இல்ல மிஸ்டர். புகழ்” என்றவள் மறுக்க,

“உட்காருன்னு சொன்னேன்” 

வார்த்தைக் கொடுத்த கடுமையில் அமர்ந்தவள் மனதே இல்லாது உண்டால். தொண்டையில் உணவு இறங்கவில்லை. அவன் என்ன நினைக்கிறான் என்றும் தெரியவில்லை.

உணவிற்கானக் காசை கொடுக்கும் சமயம் அவள் உண்டதற்கானப் பணத்தை நீட்ட, “என் பார்ட்னர் சாப்பிட்டதுக்கு காசு கொடுக்கற அளவு எனக்கு தெம்பிருக்கு” என்று வெடுக்கென்று சொல்லிச் சென்றவன் பேச்சு அவளை ஆட்டிவிட்டது.

அந்த பார்ட்னரின் அர்த்தம் என்னவென்று புரியவும், தன்னையறியாது அவள் விழிகள் கலங்கியது. 

அதுவரை அவளை ஆட்டிப்படைத்த உணர்வுகள் வெளியேறத் துடிக்க, “ஆராதனா, வா” என்றான்.

கண்மணிகளில் தேங்கியிருந்த நீர் முத்துக்களுடன் அவன் அருகே வந்தவளை, முகம் முழுக்க சிரிப்போடுப் பார்த்து ஒரு சாக்லேட் பாரை நீட்டினான்.

“இனிப்பான விஷயத்தைச் சொல்லும்போது, இனிப்பு வேணும் இல்லையா?” என்றான் தலை சாய்ந்து அவள் உணர்வுகளைப் படிக்க முயன்றபடி.

அவனின் அந்த அணுகுமுறையில் வீழ்ந்தவள் தோளுரசி அந்த மாலையில் துவங்கிய அவர்களின் நடை, எங்கு எப்போது அவன் கையுடன் தன் கைகோர்த்தாள் என்று தெரியாது அவன் தோள் சாய்ந்தாள் கோதையவள்.

இதோ வாரங்களைக் கடந்திருந்தது அவர்களின் காதல்.

இன்னும் அவள் சிவாவிடம் சொல்லவில்லை. சொல்லவில்லை என்றால் சமயம் அமையவில்லை.

வேலைகளை மலையளவு சூழ்ந்திருக்க, அதைப் பற்றி அவள் எண்ணவும் இல்லை.

அன்று சனிக்கிழமை. பெரும்பாலான வேலைகள் முடிந்திருக்க, வீட்டிற்குச் செல்ல கிளம்பியவளின் அலைபேசி சப்தமிட்டது.

“ஷக்தி, ஃப்ரீனா வி.ஓ.சி வா. மண்ட காயுது” என்று மெசேஜ் வந்தது.

“அட, பாரேன்” என்று நினைத்தபடி அவனுக்கு அழைத்துவிட்டாள்.

“வந்து தொல, வேல முடிஞ்சது. சார்கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு டுவென்டி மினிட்ஸ்ல வந்துடறேன்” என்க,

“பொறுமையாவே வா. நான் நேரு ஸ்டேடியம்’ல தான் இருக்கேன். வந்துட்டு கால் பண்ணு” என்றான்.

வேலைகளை முடித்தவள் அங்குச் சென்றால். இருவருக்கும் குடிக்கப் பாதாம் பாலை பார்சல் செய்யச் சொல்லி அதை எடுத்துக்கொண்டு ஸ்டேடியம் சென்றாள்.

அங்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி முடிக்கொண்டிருந்தவன் அவளைப் பார்த்ததும் டிராக்கின் நடுவே நடந்து, கேலரிக்கு வந்தான்.

துவட்டியபடி, “உன்ன கால் பண்ணச் சொன்னேன் தான” என்க, அவன் முன்பு இளஞ்சூடான பாலை நீட்டினால்.

சிவாவிற்கு இதமான சூட்டில் பாலை பருகுவது அத்தனை பிடிக்கும். அதைத் தெரிந்தது முதல், அவனுக்கென்று தனியாக எடுத்துச் செல்லாது இருக்கமாட்டாள், ஷக்தி.

“ம்ம்ப்ச்” என்று சிலிர்த்தபடி பருகிவன் அவள் அருகே உட்கார்ந்தான்.

“என்னவாம்”

“டிரான்ஸ்பர்” என்றான்.

“எட்டு மாசம் தானடா ஆச்சு இங்க மாத்தி? திரும்பவும் ஏன்?” என்றாள்.

‘புகழ்’ என்ற பதிலையா அவன் சொல்ல முடியும்?

“தெரியல” என்றான் பொத்தம் பொதுவாக.

“சரிவிடு. நம்ம வேலையில இதெல்லாம் ஜகஜம் தானே” என்றவள் அவளின் விஷயத்தைச் சொல்லாது அப்படியே விட்டுவிட்டாள்.

சற்று நேரம் பேசியவர்கள் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் அதையும் பார்த்தபடி வெளியேறினர்.

சிவாவின் முகம் தெளிவில்லாது இருக்க, “ஷிவ்வ்வ்.. சியரப் மேன். இங்க இருக்கற திருப்பூருக்குப் போக தான் இத்தன ஃபீலிங்ஸ் ஆப் இந்தியாவாடா” என்று அவனை அணைத்துக்கொண்டாள்.

ஒரு தோளோடு சேர்ந்த நட்பின் பிணைப்பான அணைப்பு. ஒரு மூன்று விநாடிகள் கூட நீடித்திருக்காது அதைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டான், புகழேந்திரன்.

“ஓகே, எல்லாமே உனக்குச் சரியா கரெக்டா தான் நடக்கும் ஷிவ். டோன்ட் ஸ்டிரஸ் யூவர் செல்ஃப்” என்று அவனுடன் ஒரு உணவகத்திற்குச் சென்று சாப்பிட்ட பின்னரே இருவரும் சரியாகினர்.

இங்கு இரண்டு மணிநேரம் கடந்து, புகழேந்திரன் அப்போது தான் ரவுண்ட்ஸ் முடித்து வந்திருந்தான். வேலையில் எப்போதும் ஆள் புலி தான். யாரும் அவனை ஏமாற்ற முடியாது, தப்பிக்க நினைக்கவும் முடியாது.

அத்தனை கெடுபிடி இருக்கும் அவனிடம். அதேபோல், கை சுத்தம்!

இஷ்டப்பட்ட வேலையைக் கஷ்டப்பட்டுச் சாதித்திருக்கிறான். அதில் மற்றவற்றை நினைக்காது தன்னின் பணியினை மட்டும் கவனிப்பவன் தான் இவன்.

தன் அறைக்குள் நுழைந்தவன் முதலில் செய்தது சிவனேஷ்ஷை அவனிடம் ரிப்போர்ட் செய்ய வரச் சொன்னது தான்.

மனதில் அவர்கள் இருவரின் நெருக்கம் நெருடியது. தவறாக இருக்காது என்று நினைத்தாலும் சிவாவுடன் அவளை அத்தனை அருகில் இரண்டாவது முறையாகப் பார்க்கிறான்.

அதுவும் ஷக்தி அவனிடம் காதலைச் சொல்லிய பின்னர் இப்படி அவர்கள் இருப்பது அவனிற்கு உறுத்தியது.

அவன் மனதில் காதல் இருக்கிறதா என்றால் நிச்சயம் அவனிடம் பதில் இல்லை தான். 

ஆனால் அவள் பால் ஒருவித ஈர்ப்பும் சலனமும் இருந்தது.

அவனின் பதவிக்கு நிகரான பதவியில், அறிவும் ஒழுக்கமும் நிறைந்து, ஆளுமையில் மேலோங்கி, தங்களைவிடப் பல படிகள் மேலே இருக்கும் குடும்பத்துப் பெண் தன்னிடம் காதலைச் சொல்லியது அவனை அசைத்துத் தான் பார்த்தது.

‘இந்த உறவு நிச்சயம் வெற்றி பெறும்’ என்று அவன் மனதில் எங்கோ சொல்லியது. 

அதன் தாக்கம் தான் இப்போது 

சிவாவை அவன் அழைத்திருப்பது.

“என்ன ஆனாலும் சரி, பேசி விட்டாதான் இனி சரியா வரும். தட்சண்யம் பார்த்தா நம்ம தான் இளிச்சவாயாகனும்” என்றபடி அவன் முணுமுணுக்க, கதவு தட்டப்பட்டது.

சிவா தான் வந்திருந்தான். உள்ளே அனுமதித்தவன் அவனை ஆழ்ந்து பார்க்க,

விறைப்பாய் ஒரு சல்யூட்டை வைத்தவன், “ஸார்” என்றான்.

அவன் முடிக்கும் முன்பு, “ஷக்தி கிட்ட இனி டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணு சிவா” என்றான் அழுத்தமாய் அவன் முகத்தைப் பார்த்தபடி.

அதில் சிவாவின் உடலில் ஒரு விறைப்பு தன்னால் தோன்ற, “ஏன்” என்றான் அண்ணனைக் கூர்ந்தபடி.

“ஏன்னா?” என்றான் புகழ் புருவத்தைத் தூக்கி. அதில் தெரிந்த அவனின் ஆணவத்தில் எதிரே இருந்த ஆணவன் ஆத்திரம் கொண்டான் உள்ளூர மூர்க்கமாய்.

“அதான் கேட்கறேன். நான் எதுக்கு ஷக்திகிட்ட இருந்து விலகி நிற்கனும்?” என்றான் வார்த்தையில் அத்தனை அழுத்தத்தைக் கொடுத்து.

அதில் தன்னைப் போல் ஒரு நக்கல் சிரிப்பு அவன் முகத்தில் வந்து போனது. அது அவன் முகம் முழுவதிலும் வியாபித்திருக்க அவன் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியில் பக்கமாகச் சுழன்றபடி, “வெல், வீ ஆர் இன் லவ்” என்றான் அலட்டாது.

அதிர்ந்து உறைந்துவிட்டான் சிவனேஷ். அவன் ஷக்தி அவனிடம் சொல்லாது எப்படி தன் அண்ணனைக் காதல் செய்கிறாள் என்ற கேள்வி வண்டாய் குடைந்தது அவனை.

அதைவிட இனி அவள் அவனின் ஷக்தியா என்ற கேள்வியின் கொக்கியில் சிக்கித் தவித்தான், சிவனேஷ் வீரபத்திரன்!

 

 

•••

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
18
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அன்புக்கு அடிபணியும் சக்தியின் ஒரு உருவமாய் ஆராதனா.

    அவனது அன்பான கண்ணியமான செய்கைகளால் கவரப்பட்டு ஈர்ப்பு கொண்டுள்ளால் சக்தி.

    புகழிற்கோ அவளது ஆளுமையால் விளைந்த ஈர்ப்பு காதலாக உருமாறாமல் கர்வமாக உருமாறியுள்ளது.

    ஆணவன் ஆணவத்தில் எதிரில் இருந்த ஆணவன் ஆத்திரம் கொண்டான். 👏🏼

    தன் சக்தி தன்னை விலக்கி வைத்திருப்பதை அறிந்து வருத்தம் கொள்கின்றான் ஷிவ்.