Loading

சிவா, ஷக்தியைவிடச் சற்று தான் உயரம். இருவரும் தோளோடு அணைத்து நின்றிருந்ததை மேகா புகைப்படம் எடுத்திருக்க, அந்த சமயத்தில் தான் புகழ் இருவரையும் பார்த்தது.

வீட்டில் அணியும் ஒரு இலகு ஆடையில் பெண்ணவள் இருக்க, அவள் அந்த உடையிலேயே அவனை அணைத்து நின்றிருந்தது பிடிக்கவில்லை புகழிற்கு.

லாவண்யா அவனைப் பார்த்துவிட, “உள்ள வாங்கத் தம்பி” என்றார்.

சிவா திரும்பிப் பார்க்க, புகழின் பார்வையை உணர்ந்தவன் முகத்தில் சுழிப்பு.

ஷக்தி, “வாங்க மிஸ்டர் புகழ். என்ன திடீர் விஜயம்” என்றபடி அவனை வரவேற்க வாசல் வந்தால்.

சிவாவின் முகத்தைப் பார்த்த ஆராவமுதன், “என்னடா?” என்க,

“ஒன்னுல்ல, இப்போ வீட்டுப் பக்கம் காத்து பலமா அடிக்குது போல?” என்றான் அவனை ஆழ்ந்து பார்த்தபடி.

“ம்ம்.. கொஞ்ச நாளா” என்றான் அவனும்.

சிவாவின் கையில் கட்டிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபடி உள்ளே வந்த புகழோ, “வீட்டுக்கு போகல?” என்றபடி வந்தான்.

அவன் பேச்சைச் சுத்தமாய் ரசிக்கவில்லை ஆராவமுதன். அவன் மீதும் அவனிற்குப் பெரிய பிடித்தமும் இல்லை.

ஆராவமுதன், “டைம் ஆனா இங்கையே தூங்கிப்பான்” என்று சற்றுக் கடுத்துப் பேசியவன், “ஸார்” என்று அழுத்தமாய் முடித்திருந்தான்.

“ம்ம்” என்றபடி புகழ் நிற்க, “உட்காருங்க” என்று எழுந்து சமையலறை சென்றுவிட்டாள், மேகா.

“உட்காருங்க, சொல்லுங்க மிஸ்டர். புகழ். என்னாச்சு?”

“நத்திங் மேம், அந்த பில்டிங் சீல் வெச்சாச்சு. விஷயம் பெரிசு, இதில காலேல பிடிச்சவனுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்குமான்ற ஆங்கிள்ல விசாரணை போகுது” என்றான்.

“ஓஓ.. ஆனா எனக்கு அப்படி தோனல. பாலக்காட் ஹைவேஸ் தாண்டி மூனு வாரம் முன்ன ஒரு பிளாஸ்டிக் குடோன் சீஸ் பண்ணினோம், அதோட ஓனர் தான் தரணி.

அன்னிக்குக் கூட உயரம் பார்த்து பயந்த என்னைய மாடியில இருந்து கீழ விழாம தடுத்து பிடிச்சார்! பட் அந்த விஷயத்தல அப்சட் ஆகி என்னை அட்டாக் பண்ண வந்திருக்கலாம். மத்தபடி இந்த வெப்பன்ஸ், ஐ டென்ட் திங்க் சோ” என்றாள்.

“இருக்கலாம். ஆனா யாரையும் எப்படியும் நினைக்க முடியாதே” என்றவன் சிவாவைப் பார்த்தான்.

புகழ், “கை எப்படியிருக்குடா”

“ரொம்பத்தான்” என்று முணுமுணுத்தான் ஆராவமுதன்.

சிவா, “மேல இருக்கற தோல் தான் கீறி இருக்குண்ணா. ரெண்டு டிரஸிங் வரசொல்லியிருக்காங்க” என்றான்.

அதற்குள் மேகா, “சிவா, உள்ள வாயேன்” என்க, “இருங்க” என்று‌ பொதுவாய் சொல்லி இயல்பாக அவன் செல்ல, புகழுக்கு இடறியது எதுவோ.

“ம்கும்” என்று தொண்டையை செருமியவன், “மேம் வீட்டுக்கு ரெண்டு காட்ஸ் அடிஷ்னலா போட்டிருக்கோம். மண்டேல இருந்து ஒரு ஷீல்ட் உங்களுக்கு வருவார், ஆபிஸ் டைம் முடிஞ்சும் அவர கண்டினியூ பண்ணுறதுனாலும் ப்ராப்ளம் இல்ல. ஒரு வேர்ட் சொல்லிருங்க” 

“எதுக்கு?” என்றால் புரியாது.

“ப்ரமோத் அண்ணா சொல்லியிருப்பார்” என்று சரியாகக் கணித்திருந்தான், ஆராவமுதன்.

“எஸ்.பி ஆர்டர்” என்று புகழும் சொல்ல,

“எனக்கு எதுக்கு?” என்றாள் அப்போதும்.

“செஃப்டி தான் ஆரா. உனக்காக இந்த பையக் காயம் படாம இருப்பான்ல” என்ற லாவண்யா புகழுக்கான பழச்சாற்றுடன் வந்தார்.

“எடுத்துக்கோங்க தம்பி” என்றவர்,

“சிவா, பருத்தி பால் அடுப்புல இருக்கு பார். மேகாவிட்டு எடுத்துத் தர சொல்லு” என்று குரல் கொடுக்க, புகழுக்கு அங்கு இருப்புக்கொள்ளவில்லை.

“ம்ம்ப்ச், என்ன செஃப்டியோ போங்க” என்ற ஷக்தி, ஆராவமுதனைப் பார்க்க, அவன் முகத்தில் கடுகடுப்பு.

“நல்லது தான். இருக்கட்டும் விடுங்க மேம்” என்றவன் பழச்சாற்றைப் பாதி பருகிவிட்டு எழுந்துகொண்டான்.

அங்கு ஆராவமுதனின் பேச்சு, சிவாவிற்கான முக்கியதும் கொஞ்சமும் அவனுக்கு ரசிக்கவில்லை.

“ஓகே, மேம். பாருங்க. நான் கிளம்பரேன்” என்று ஒரு நிமிடம் அவன் நிற்க,

ஷக்தி, “ஷிவ், மிஸ்டர். புகழ் கிளம்பறார்” என்றால்.

பாலைக் குடித்தவன் அவசர கதியில் வெளியேவர, “வாயத் துடைக்க மாட்டியாடா நீ” என்று அவனை நெருங்கித் துடைத்துவிட்டான், ஆராவமுதன்.

அந்த ஒரு சைகையே அவர்களின் நட்பு எத்தகையது என்பது புகழுக்குப் புரிந்திருந்தது.

“வரியா சிவா” என்று கடமைக்காகப் புகழ் கேட்க, 

“நான் வண்டில தான்’ண்ணா வந்தேன். போயிக்கறேன்” என்றவனுக்குத் தலையசைத்து ஷக்தி வீட்டாட்களிடமிருந்து விடைபெற்றான், புகழேந்திரன்.

ஷக்தி அவள் அறைக்குள் சென்றுவிட்டாள்.

“உங்கண்ணனும் அவன் மண்டையும் மூஞ்சியும்” என்று ஆராவமுதன் ஆரம்பிக்கவும், “ஈசா” என்று அதட்டல் போட்டார், லாவண்யா.

“ஒருத்தர பிடிக்கலேனா பேசாத இரு. இப்படி கண்டபடி பேசக்கூடாது”

சிவா, “விடுடா” என்க,

“கர்டசிக்கு கேட்கறான் ம்மா என்னாச்சுன்னு. கூடப்பிறந்த தம்பின்னு பாசமிருக்கா” 

“சரிடா, விடு” என்று சிவாதான் அவனைச் சமாதானம் செய்யும்படி ஆனது.

இரவு உணவிற்குப் பின், சிவாவிற்கு ப்ரமோத் அழைத்திருந்தான்.

எடுத்தவுடன் எந்தவித முகாந்திரமும் இல்லாது, “சிவா, உங்க அண்ணா மேல ஒரு கண்ண வை. ஆரா அந்த அக்யூஸ்ட்ட ஷூட் பண்ணா, அவள அட்டாக் பண்ணினான் என்ற அடிப்படையில. தேவையில்லாம உங்க அண்ணா எதுக்கு அவன சுடனும்? அதுவும் ஷோல்டர்ல?” 

“நானும் அதான்’ண்ணா யோசிச்சேன். பட் ஷக்திய..” என்றவன் இழுக்க,

“டேன்ட் பி சில்லி, சிவா. அவள காப்பாத்த முயற்சி பண்ணாலும் ஒன்னு அவன் ஆரா முன்ன நின்னு அட்டாக் பண்ண பார்த்திருக்கனும் இல்லையா ஒரு திரட்ல வெச்சிருக்கனும் இரண்டும் இல்லாம தப்பி ஓடுறவன உங்க அண்ணா எதுக்கு மேன் சுடனும்? மோட்டிவ் என்னாவது இருக்கனும் தான?”

சிவா ப்ரமோத்தின் பேச்சில் யோசனையானான். ப்ரமோத்தின் பார்வை என்னமோ அவனுக்குச் சரியாகப் பட்டது. 

ஷக்தி, தரணியைச் சுட்டது, அவளையும் சிவாவையும் தாக்கிவிட்டு அவன் தப்பி விடுவான் என்ற அடிப்படையில். அதுவும் கூட, அவள் அளவில் தேவையில்லாதது என்று இப்போது தோன்றுகிறது.

ஆனால், புகழ் அவனைச் சுடவேண்டிய அவசியம் எங்கு வந்தது? 

அதுவும் போக, தரணிக்கும் அந்த கட்டிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எதுவும் தெரியவில்லை. அப்படி இருந்தால் ஷக்தி முன் அவன் தானே அதை முதலில் அவளுக்கு எதிராக எடுத்திருப்பான்.

ஆனால் இப்போது செய்திகளில் வருவது என்னமோ, தரணி ஒரு தீவிரவாத அமைப்பின் கையாள் என்பதே!

அதுவும் அவனைச் சுட்டுப் பிடித்தது டி.எஸ்.பி புகழேந்திரன் என்றும் வர, யோசனையானான்.

“சரி தாங்க’ண்ணா. நான் அவன வாட்ச் பண்ணுறேன்.”

“ம்ம்.. ஆரா சூட் பண்ணியும் அவ பெயர வெளியவிடாம பண்ணது, சம்திங் சரியா இல்லை. என் காதுக்கு வந்த வரை, இது முழுக்க முழுக்க புகழோட மிஷன் மாதிரி மாத்தியிருக்கார்” என்றவன்,

“எனிவேஸ், பத்திரமா இருங்க. ஆராவ பார்த்துக்கோடா. நான் கால் எடுக்கலேனாலும் மெசேஜ் பண்ணி விடு. குட் நைட்” என்றவனை வைத்துவிடச் சிவாவின் மூளை விழித்துக்கொண்டது புகழின் நடவடிக்கையில்.

ஒரு வாரம் கடந்த நிலையில் பிரச்சனை சிறிது ஓய்ந்தது போல் இருக்க, ஷக்தியின் மனது தான் ஓய்ந்திருந்த பாடில்லை.

“ஓகே ஷக்தி, இட்ஸ் பைன்! உனக்குப் புகழ பிடிச்சிருந்தா, கோ அஹேட். ஷிவ்கிட்ட அவர் நடந்துகொண்ட விதம் மட்டுமே வெச்சு நீ அவர ஒதுக்க முடியுமா? இல்ல தான. அவரோட இந்த அஞ்சு மாசமா பழகற, சில தப்பு அவர்கிட்ட இருந்தாலும் மொத்தத்தில ஒழுக்கமான ஆசாமி தான!” என்று தன் அறையிலிருந்த கண்ணாடியில் தன்னிடமே வாதாடிக்கொண்டிருந்தாள், ஷக்தி ஆராதனா.

“தான் மட்டும் தான் பெரிசுன்னு அவர் நினைக்காரு, ஓகே. அது திருத்தம் கொண்டு வரவும் முடியாது, சரிதான். எல்லாமே ஒருத்தர் கிட்ட பாசிடிவ்வாவே இருக்குமா சொல்லு, நெகட்டிவ் ஷேட் இல்லாமையா ஒரு மனுஷன் இருப்பான். இவரோட நெகட்டிவ் முழுக்க ஷிவ் மேல ஏறி உட்காந்திருக்குப் போல, கண்டிப்பா ஒரு ரிலேஷன்ஷிப் வந்தா அத கொஞ்சமாவது தீர்க்கப் பார்க்கலாம்.. ம்ம்” என்று தனக்கு சதகமான பதில்களை மட்டுமே எடுத்து விவாதித்தாள் நங்கை.

இதில் அவள் சொல்லிய அனைத்தும் மிகச்சரியாக இருந்தாலும், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பதை அக்கணத்தில் மறந்திருந்தாள்.

அவளின் ஷிவ் பற்றி அவள் எண்ணத்தில் கொண்டிருந்தாலும் அது அத்தனை ஆழமாய் இருக்கவில்லை.

காதல், நட்பைச் சற்று கீழே தள்ளிவிட்டிருந்தது!

“சரி.. எல்லாம் ஓகே. சொல்லிடு அவர்கிட்ட. அப்புறம் என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்” என்று நினைத்துவிட்டு வேலைக்குச் செல்ல தயாரானாள்.

இருபத்து நான்கு வயதில் ஏதோ டீனேஜ் காதலி போல உள்ளூர ஒரு ஆர்ப்பரிப்பு, ஆனந்த சாரல்களின் தெளிப்பு உள்ளத்தில்.

“என்ன மொகத்துல குண்டு பல்ப் எரியுது” என்று கீழே வந்தவளை மேகா மடக்க, 

“அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது’ண்ணி”

“பின்ன? என்ன சங்கதி?”

“அது இருக்கு நிறையா. இப்போதைக்கு சொல்லனும்னா…” என்றவள் இழுத்து மேகாவின் இடையில் கையிட்டு அவளுடன் நடுவீட்டில் ஒரு கஃபில் டான்ஸ் ஆடினாள் சந்தோஷத்தில்.

“அடியேய்.. அடியேய்.. விடேன்டி. அமுதுக் கூட இப்படி பண்ண மாட்டானே, இவள.. ஆரா விடுடீ” என்றவள் போட்ட சப்தத்தில் ஆராவமுதனும் லாவண்யாவும் ஷக்தியை ஆச்சரியமாகப் பார்த்து நின்றனர்.

“உன் மகளுக்குப் பைத்தியம் முத்திடுச்சு லாவண்யா” என்றபடி அவர்களிடம் அவன் நெருங்கி, மேகாவை தன் புறம் சுண்டி இழுக்க, “நீயும் ஏன் அமுது” என்று தலை கிறுகிறுக்க அவனை ஒண்டினாள் மேகா.

“என்ன ஆரா”

கண்களைச் சிமிட்டி முகம் முழுக்க விகசித்தபடி இருந்த ஷக்தியைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவர்களுக்கு.

அவளின் உயிர்ப்பு இமயவரம்பனுடனே சென்றிருக்க, இத்தனை நாட்கள் மெல்லிய புன்னகையுடன் இருந்தவள் முகத்தில் இத்தனை சந்தோஷ சாரலை அதிசயத்துப் பார்த்தனர் லாவண்யாவும் ஆராவமுதனும்.

“வாழ்க்கைல ஒரு பெரிய விஷயத்தைப் பண்ண போறேன். காரியம் சக்ஸஸ்’னா வந்து சொல்லுறேன், இல்லேனா..” என்று அவள் நிறுத்த, 

“என் ஆரா பண்ணுற எல்லாம் சக்ஸஸ் ஆகும். என்ன பண்ணுறதா இருந்தாலும் அப்பாவ நினைச்சுட்டு பண்ணு கண்ணு” என்று அவளை வாழ்த்தினார், லாவண்யா.

“மீ, லவ் யூ” என்று அவரை அணைத்துக்கொண்டவள் அப்படியே ஆராவமுதனையும் மற்றொரு கையால் அணைத்துக்கொண்டாள்.

அலுவலகம், நண்பர்கள், வேலை, விடுமுறைகளில் பட்டு செண்டர், வீட்டில் மேகாவோடு அலப்பறை என்று ஷக்தியின் நாட்கள் சென்றன. 

இருந்தும் புகழிடம் தன் மனதை உரைக்க வாய்ப்பு மட்டும் அமைந்திருக்கவில்லை.

அவனிடம் உள்ள குறை முதலில் பிரதானமாய் தெரிந்தாலும் இப்போது அருகே அவனைப் பார்க்க அது சிறுத்துவிட்ட உணர்வு. அதுகொடுத்த தெம்பு, அவள் மனதின் சலனத்தைக் காதலாய் உருவகம் செய்திருந்தது!

அன்று மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வார வாரம் வரும் திங்கள் அன்று நடைபெறும் குறை தீர்ப்பு நாளில் (Grievance Day) மக்களின் கோரிக்கைகள் எல்லாம் ஆட்சியரின் அலுவலகத்தில் இருக்கும் அந்தந்த துறை சார் அதிகாரிகளிடம் மனுவாக அளிக்கலாம்.

ஷக்திக்கான இலாக்காவில் பட்டா தொடர்பான பத்திரங்கள், ஆதரவற்ற விதவை சான்றிதழ், வரி நிலுவைகள் என்று வரிசையாக விண்ணப்பித்தும், அப்ரூவலுக்காகவும் காத்திருக்க அவளுக்கு அன்று நிற்க நேரமில்லாது போனது.

மதியம் தாண்டியும் வேலைகள் இழுக்க, சரியாக ஆட்சியர் அழைத்து ஒரு குறிப்பிட்ட ஆலையில் செக்கிங் போக சொன்னார்.

அதுவும் அவளுக்கு ஒரு வேலை தான். ஆட்சியரின் நேரடி உத்தரவின் பெயரில் கோட்டாட்சியர்/ தாசில்தார் இம்மாதிரி செல்வது வழக்கம்.

கோவை என்றால மில்கள் தான் அதிகம் இருக்கும். ஆனபோதும் இப்போது அவற்றைக் காண்பதே அரிதாகிப் போனது. நகரின் ஒதுக்குப்புறங்களில் காணக்கிடைக்கும் மில்களில் அந்த அரிசி ஆலை(மில்) இருந்தது.

குறைந்தது நாற்பது பேர் வேலையில் இருந்துருப்பர். இரண்டு லாரிகளில் மூட்டை மூட்டைகளாக அரிசி ஏற்றப்பட்ட, ‘தமிழ்நாடு அரசு’ என்று சீறி வந்து நின்ற பொலிரோவை அங்கிருந்தோர் அந்த சமயத்தில் எதிர்பார்க்கவில்லை.

ஷக்தி, சம்பத் (அவளின் பிஏ) மற்றும் ஒருவர் மட்டுமே வந்திருக்க, லோடு ஏற்றிக்கொண்டிருந்த ஆட்கள் பயந்துவிட, அதில் மூவர் ஓட துவங்கினர்.

“சம்பத், லோக்கல் ஸ்டேஷன்க்கு இன்பார்ம் பண்ணிட்டீங்களா” என்று கேட்டுக்கொண்டே வேக எட்டு வைத்து அந்த லாரியை அவள் நெருங்கும் நேரம்,

அவளை நோக்கி லாரியின் மேலிருந்து அரிசி மூட்டைகள் விழ ஆரம்பித்தது.

சுதாரித்து அவள் நகரவும், அவளைச் சூழ்ந்துகொண்டனர் ஆட்கள். நிலைமை கைமீறிப் போக இருந்தது.

சம்பத், “தள்ளிப் போங்க மொத, என்ன பண்ணுறீங்க” என்று அவர்களை விலக்கப் பார்க்க, முடியாது கை கலப்பு ஆனது.

சம்பத், உடன் வந்த நபர், ஓட்டுநர், ஷக்தி என்று நான்கு பேரையும் சூழ்ந்துகொண்டு கிட்டத்தட்டக் கடத்தி வைக்கப் பார்த்தனர் அந்த ஆலையிலிருந்தவர்கள்.

பதினைந்து பேருக்கும் மேல் அவர்களை சூழ்ந்திருக்க, ஷக்தியின் மூளை விழித்தே இருந்தது. அவள் அணிந்திருந்த ஷாலில் ஃபோனை மறைத்தபடி ஸ்பீட் டையலில் புகழுக்கு அழைத்திருந்தாள்.

அத்தனை பேரை வைத்துக்கொண்டு செயலியை இயக்கப் பார்ப்பது இப்போது ஆகாத காரியம். அதிலும் யாரேனும் பார்த்துவிட்டால்?

“என்ன ரேஷன் அரிசி கடத்தலா? உள்ள புடுச்சு போட்டா தெரியும் சங்கதி என்னன்னு” என்று அவள் பல்லைக் கடிக்க,

“சும்மா துள்ளாத, போடுறத கவ்வீட்டு போறேனா சொல்லு அவுத்து விடறோம். இல்ல உன்ன தான்..” என்றவன் அவளைக் கோணலாய் பார்த்து இழுக்க,

“என்னடா பண்ணுவ” என்ற கேட்டவள் தோரணையே வேறாக இருந்தது.

வெறும் வெற்று துணிவு மட்டும் இல்லை அவளிடம். சூழ்நிலைக்குத் தக்க என்ன செய்ய வேண்டும் என்ற சமயோசிதமும் இருந்தது.

இன்னும் அவர்களைக் கட்டிப்போடவோ அடைக்கவோ இல்லை. அதற்கு முன் அவளுக்கு சில தகவல்கள் தேவையாய் இருந்தது.

“எந்த *** பயலோடது இந்த மில். கோழ மாதிரி ஓரத்துல உட்காந்து கடந்துறான், துப்பு கேட்டவன். தொட நடுங்கி” கைகளை பின்னே கட்டியபடி சொன்னவள், அந்த இடத்தை கண்களால் ஆராய்ந்தாள்.

‘இவங்க என்ன இத்தன பேசுறாங்க’ என்று சம்பத் உள்ளூர மிரண்டு எச்சில் விழுங்கினான் ஷக்தியின் பேச்சைக் கேட்டு.

***

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஷக்தி வீட்டின் அடுக்களை முதல் படுக்கையறை வரை உரிமையாய் இயல்பாய் சிவா சென்று வருவதை கண்டு குமைகின்றான் புகழ்.

    வீட்டினரின் அன்பான செய்கைகள் மற்றும் அவனுக்கான முக்கியத்துவம் கண்டு எரிச்சலில் இருக்கின்றான் போல.

    தெளிவான நபர்களும் குழம்பி விடுகின்றனர் காதலில்.

    அவன் உடன் பிறந்தவனை நடத்தும் விதம் அறிந்தும், நாளைய பின் தங்கள் நட்பிற்கு இடையில் அவனது நிலைபாடு என்னவாக இருக்கும் என்று அனுமானிக்க முடிந்தும் கூட வாழ்க்கை துணை என்ற கோணத்தில் மட்டும் அவனை வைத்து சிந்தித்து முடிவெடுத்துவிட்டால் சக்தி.