
அவளின் அந்த ‘என்ன’வில் அவனின் ‘தான்’ என்ற அகம்பாவம் முழித்துக்கொண்டது.
“யூ பிளடி..” என்றவன் அடுத்துப் பேசும் முன்,
கருணா, “புகழ், அது சிவாவோட ஃப்ரண்ட்”
சிவா, “அது ஷக்தி’ண்ணா”
என்று முந்திக்கொண்டு சொன்னதால் அவனால் அவளைத் திட்ட விளைந்த வார்த்தை அவனோடு விழுங்கப் பெற்றது.
இருந்தும் அவனின் பிளடியில் பொங்கிவிட்டால் லேடி அவள்.
“மைண்ட் யூவர் தங்க் (நாக்கு தான்!) மிஸ்டர். நீங்க இவ்வளவு ரூடா பேசுற அளவுக்கு நான் என்ன பண்ணேன்?அண்ட் என்கிட்ட இனி இந்த attitude காட்டாதீங்க” என்று சொல்லியவள்,
“நா வெளிய நிக்கறேன்” என்று பொதுவாகச் சொல்லி வெளியே சென்றாள், ஷக்தி.
அவள் பேச்சில் புகழேந்திரனின் ஆத்திரம் மீண்டும் வெளியேறத் துடித்தது. ‘நான் யார்’ என்ற அவனின் ஆணவமும் ஆண் திமிரும் மீண்டும் கிளர்ந்தெழப் பார்க்க,
கருணா, “என்னாச்சுய்யா உனக்கு? எதுக்கு இத்தன கோவம்?”
புகழ், “திமிரெடுத்தவ, என்னையவே பேசுதா” என்று கருணாவிடம் சொல்லியவன், சிவாவை நோக்கி,
“உன் ஃப்ரண்ட்’னா அவளோட லிமிட்ல இருக்க சொல்லு. இப்படிதான் நடுவீட்டுல சிரிப்பாளா? அறிவு வேண்டாம்? ராப்பகலா கேஸ் பத்தி யோசிச்சுட்டு மண்ட காஞ்சு போய் இருக்கேன், இதுல பேய் மாதிரி சிரிக்கறா மூள இல்லாதவ” என்று ஏகத்திற்குக் கத்தினான், புகழேந்திரன்.
அவனின் சுபாவமே அதுதான். அவன் எங்கிருந்தாலும் அங்கு அவனே ராஜாவாக இருக்க வேண்டும், அவனுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணம் அவனது.
அதற்குத் தக்க நடக்கவும் செய்வான் தான். என்ன எதிர் இருப்பவரின் மனநிலையைத் துளியும் கவனம்கொள்ளாது தன்னிச்சை பேச்சால் சுட்டுப் பொசுக்குவான்!
“இன்னிக்கு தானே புள்ள வந்திருக்கா, ஆச்சி சொல்லி வைக்குதென் ராசா” என்ற தேனாட்ச்சியின் பேச்சைக் கேட்டுச் சென்றுவிட்டான்.
அறைக்கு வந்தும், அவன் உள்ளூர அவளின் சிரிப்பு அணையாது அவனைத் தொடர்ந்தபடியே இருந்தது.
அது ஒருவிதமாய் அவனை எரிக்கவும் செய்தது. கவனம் இம்மியும் சிதறாமல் இருப்பவன் மனதை அவளின் சிரிப்பு சில்லிட வைத்திருந்தது.
“ம்ம்ப்ச்” என்று சலித்தபடி, கேஸ் ஷீட்டைப் பத்திரப்படுத்தியவன் வெளியேக் கிளம்பிச் சென்றான்.
“இவன் பாட்டுக்கு போறான் வாறான்.. ஒரு நிதானமே இன்னும் வரமாட்டிங்கே இவனுக்கு” என்று கருணா சலித்துக்கொள்ள,
“அவனுக்கு இருக்கற சோலி கழுதைக்கும், மண்டச் சூட்டுக்கும் நிதானத்த எங்க நாம எதிர்பார்க்க” என்று தேனாட்ச்சி புகழுக்குக் கொடி பிடித்தார்.
கருணா, “அதான, ஆத்தா எங்க இன்னுமுட்டு காணோமுனு பார்தேன்” என்றவன்,
“மாப்புள, ஆராதனா கிட்டக் கொஞ்சம் சொல்லிவையா. புள்ள பாட்டுக்குத் துடுக்கா புகழுக்கிட்ட பேசிடப்போறா. ரெண்டுக்கும் வாய்க்கு மட்டும் கொறவில்ல” என்று சொல்லிச் சென்றான்.
அதில் அவள் பேசியதும் புகழின் செய்கையும் எண்ணியபடி இருந்தவனுக்கு, அவளின் மாற்றம் புரிந்தது.
“ஆட்சி, நான் ஷக்திய கூட்டிவாரேன்” என்றவன் கையுடன்,
“ஷக்தி பேக் டூ ஃபார்ம்” என்று ஆராவமுதனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான் சிவனேஷ்.
அனுப்பிவிட்டவனுக்கு அப்படி ஒரு நிறைந்த புன்னகை!
புகழேந்திரனிடம் அவள் பேசியது, நடந்துகொண்ட விதம் என்று மேம்போக்காகப் பார்த்தால் சற்று திமிர் தனமாகத் தான் தெரியும். ஆனால் அது முழுக்க முழுக்க ஷக்தியின் குணாதிசயம்!
அவளின் சுயமரியாதைக்கு இழுக்கு நேரிடத் துளியும் இடம் கொடுக்கமாட்டாள். அதற்குக் கடுமையாகத் தான் பேச வேண்டும் எனில் அவளின் முகமும் பேச்சும் வேறாகத் தான் பிரதிபலிக்கும்.
அது சரியாக இப்போது வெளிவந்திருந்தது நீண்ட மாதங்கள் சென்ற பின்.
அதில் சிவாவின் முகம் புன்னகை சிந்த, அதை வாடவிடாது அவளைப் பார்க்கப் பின்கட்டுத் தோட்டத்திற்குச் சென்றான் அவன்.
சிறிய மோட்டார் அறை போன்ற இருந்த இடத்தின் வாசலில் அமர்ந்திருந்தவள் கையில் விளையாடியது ஒரு குட்டி அணில்.
அவள் கோபமாக இருப்பாள் என்றிவன் எண்ணத்திற்கு எதிராய்
அதன் துருதுருப்பில் லயித்திருந்தவள் முகத்தையும் நிறைத்திருந்தது புன்னகை.
அவள் கழுத்து, தோள், மடி, தலை என்று அவளிடம் அத்தனை விளையாட்டு அந்த குட்டி அணிலுக்கு.
அதனைப் பார்த்தபடி வந்தவன் அவர்களை நெருங்கும் நேரம் அவனைக் கவனித்தது போல், விருட்டென்று மரத்திற்குத் தாவி விட்டது அந்த குட்டி.
“ச்சோவ்வ்” என்று இதழ் சுழித்தவள், கண்கள் சுருங்கி சிவாவைப் பார்க்க, சிரித்துவிட்டான் அவன்.
“ஃப்ரெண்ட் பிடிச்சிட்ட போல அத”
“ஆமா.. இங்க சுத்திட்டு இருந்துச்சா, அதான் அந்த பப்பாளி மரத்துல அணில் கடிச்ச பழத்தை எடுத்துப் போட்டேன். இந்த அணிலாரும் சாப்பிட்டு என்னோட விளையாட்டு” சொல்லியபடி அந்த அணில் சென்ற மரத்தைப் பார்த்தால் முகத்தில் வாடா புன்னகையுடன்.
அவள் அவளை மறந்து இயற்கையோடு ஒன்றிவிட்டாள் என்று தெரிந்தது. அதான் சமயம் என்றும் அவனுக்கும் புரிந்தது.
“ஷக்தி, புகழ்கிட்ட கொஞ்சம் கவனமாவே இரு” என்றான் அவள் முகத்தைப் பார்த்தபடி.
அவனைத் திரும்பிப் பார்த்தவள் முகத்தில் யோசனைக் கோடு.
“அதான் உன் ப்ரோவா?”
“ம்ம்.. புகழேந்திரன்.”
அவள் புகழை இப்போது தான் முதல்முறை பார்க்கிறாள்!
ஆராவமுதனின் திருமணத்தில் கூட அவனைப் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனபோதும் அவனைப் பற்றி அவள் அறிந்த செய்திகள் அனைத்தும் அவனைப் பார்க்கவிடாது தடை செய்தது.
“உன் கனவை கலச்ச மகராசன் தான” என்றாள் இடக்காக.
“ஷக்தி” என்று அதட்டியவன்,
“அது சூழ்நிலை அப்படி..” என்றான் கண்களில் தெரிந்த விரக்தியுடன்.
“நீயும் அவர் சொன்னார்னு விட்டுக்கொடுத்துட்ட, அப்படித் தான?”
“ம்ம்ப்ச்” என்று சலித்தவன், “விடு, இப்போ நான் என்ன நல்லா இல்லையா? இல்ல யூனிபார்ம் தான் போடலையா?” என்றான் அவனையே அவன் சமாதானம் செய்ய முயலும் குரலில்.
“நீயா உன்ன ஏமாத்திக்கற ஷிவ்” என்றவள், “என் வழியில குறுக்க வராம இருக்கற வரை உன் அண்ணா சேஃப்..” என்று நிறுத்தி அவன் முகம் பார்த்தாள்.
“ஊப்ஸ்.. சரி விடு” என்றவன் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது ஷக்தி நினைவு படுத்தியதை எண்ணி.
இருந்தும் ஷக்தி, “உனக்கு இப்படி ஒரு அண்ணனாடா ஷிவ்?” என்றாள் பொறுக்கமாட்டாது.
“அவரப் பார்த்தவுடனேயே ஈசா சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது” என்று முகத்தை அவள் சுளிக்க,
“ஷக்தி” என்றான் வார்த்தைகளில் அழுத்தத்தைக் கொடுத்து.
“புகழ் பத்தி ஈசா சொன்ன கண்ணோட்டத்தில பார்க்காத. புகழ்ன்னு இல்ல, யாரா இருந்தாலும் உன் பார்வையில அவங்கள பார்! மத்தவங்களோட பார்வையும் கண்ணோட்டமும் வேறயாதான் இருக்கும். டேன்ட் ஃபிக்ஸ் யூவர் வியூ இன் தட். அது எப்பவும் தப்பா தான் முடியும்” என்றவனுக்குத் தெரியவில்லை ஷக்தியின் முன்பிருந்த கண்ணோட்டமே சரியாக இருந்திருக்கும் என்று!
காலம் சிறந்த ஆசான். அது சொல்லித் தரும் பாடம் வேப்பங்காயாக இருந்தாலும் உடலிற்கு மிகவும் சிறந்தது.
அதேதான் இனி ஷக்தியின் வாழ்க்கையில் பாடமாய் நிகழப்போகும் நிகழ்வுகள் எல்லாம்.. விதியின் சதியால் மதிகொண்டு அவள் வென்றால் தான் உண்டு!
இரவு தேனாட்ச்சியின் அறையில் அவருடனே உறங்கிக்கொண்டாள், ஷக்தி. அவளின் பேச்சும் துடிப்பும் அத்தனை பிடித்தது அந்த வயோதிக பெண்மணிக்கு.
காலையில் புது விடியலில் ஆழ்வார்திருநகரி அத்தனை அழகோவியமாய் காட்சி தந்தது.
“நல்லா தூங்கினியா ஆத்தா” என்று நான்கு மணிக்கே எழுந்துவிட்ட ஷக்தியிடம் வினவினார் தேனாட்ச்சி.
“தூக்கம் எல்லாம் நல்லா வந்துச்சு பாட்டி.. நீங்க என்ன இப்போவே எழுந்துட்டீங்க?” என்றபடி அவள்
ஓய்வறை சென்று திரும்பினாள்.
“சுருக்கா தூங்கினா போதும்த்தா.. உடம்பு அசதியா இருக்கு எனக்கு? இங்கன தான பொழுதுக்கும் கிடக்கேன்” என்றவர் எழுந்து கண்களுக்கு சில பயிற்சிகள் செய்து, கையை மேல்நோக்கி தூக்கி உடம்பை இப்படியும் அப்படியும் அசைத்து, குனிந்து நிமிர அவரையே தான் பார்த்தால் ஷக்தி.
அந்த வயதிலும் அவரின் சில உடற்பயிற்சி அத்தனை ஆச்சரியம் கொள்ள வைத்தது அவளை!
“செம்ம பாட்டி. இப்போ தானே தெரியுது நீங்க ஏன் இன்னும் இத்தன சுறுசுறுப்பா இருக்கீங்கனு” என்றவள்,
“வயசானா நீங்க தனியாதான் இருக்கனும்மா பாட்டி? சும்மா நீங்களே உங்கள தனியா நினைக்காதீங்க, அப்புறம் மேல இருந்து தாத்தா வருத்தப்படுவார். அப்படியே உங்களோட இந்த ஊர சுத்திவாங்க, குட்டியா வாக்கிங் போங்க, பின்னாடி தோட்டத்த பாருங்க” என்று வீட்டோடு முடங்கியிருந்தவரை வற்புறுத்தி வெளியே அழைத்தவளின் எண்ணம் புரிந்து அவர் மனது நிறைந்தது.
காலை உணவு வேளையின் போது அனைவரும் சேர்ந்து உண்ண, ஷக்தியின் எதிரே அமர்ந்திருந்தான் புகழ்.
அவன் தவிர்க்க நினைத்து எழ, ஆழ்வார் வந்துவிட்டார் அவனுடன் உணவு உண்ண.
“எங்கைய்யா, உங்காந்த சுருக்கா எழும்பீட்ட” என்றவருக்கு,
“அது வேல ஒன்னு இருக்குங்கய்யா.. மறந்துட்டேன்.” என்க,
“சாப்பாட்டக் காக்க வைக்காம சாப்பிட்டு போய் செய்யு புகழூ” என்றவர் அவன் உண்ண ஆரம்பித்த பின்னர் தான் தனக்கு பரிமாறியதில் கை வைத்தார்.
வாழையிலையில் சூடனா இட்லி, நாட்டுக்கோழி குழம்பு, புளி மிளகாய் துவையல் என்று பரிமாற உணவு அனைவரின் வாயிலும் வழுக்கிக்கொண்டு சென்றது.
ஒரு அழுத்தமான பார்வையுடனே ஷக்தியைப் பார்த்திருந்தான் புகழ்.
இவ்வாறு அவன் வீட்டில் உறவுக்கார பெண்கள் கூட இத்தனை இயல்பாய் உறவாட மாட்டார்கள். ஆனால் ஒரு பெண், அதுவும் சிவாவின் தோழி இத்தனை இயல்பாய் இருப்பது அவனை ஏதோ செய்தது.
முற்றிலும் அவளைத் தவிர்க்க நினைத்தான். அதில் வெற்றியும் கொண்டான். ஆனபோதிலும், அவள் அறியாது அவளையே பின் தொடர்ந்தது அவன் புலன்கள்.
அவள் இருக்கும் இடங்களில் அவன் இருப்பு இல்லாது பார்த்துக்கொண்டான். அவளைப் பற்றி பேச்சு வரும் இடங்களில் முயன்று அதைக் கவனிக்க ஆரம்பித்தான்!
ஷக்தி, ஆழ்வார்திருநகரி வந்து அன்றுடன் மூன்று நாட்கள் கடந்திருந்தது. தினமும் புகழிற்கும் அவளிற்கும் புகைச்சல் இருந்தாலும் அது வெளியே தெரியாதபடி நடந்துகொண்டனர்.
அவள் வந்த அன்றே, பாரதி பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட, ஆதினியும் அஞ்சலியும் ஷக்தியின் பொறுப்பாகிப் போனர்.
“த்த.. த்த..” என்று கிள்ளை மொழியில் பேசிய ஆதினியைத் தூக்கிக் கொண்டாடும் ஷக்தியைப் பின் தொடர்ந்தது புகழின் விழிகள்.
பிள்ளைகளை அவள் ஆசையாகப் பார்த்துக்கொள்வதை அத்தனை வாஞ்சையுடன் பார்ப்பார் உண்ணாமலை.
“சக்தி இங்க செத்த உட்காருத்தா, பிள்ளய தூக்கிட்டே கால புடுச்சு (காலையில் இருந்து) சுத்திட்டு இருக்கறவ” என்றவர் அவளிற்கு அவர்கள் ஊரின் பிரபலமான தின்பண்டங்களை வாங்கி தருவார்.
கடம்பூர் போலி, ஏணிப்படி மிட்டாய், மஸ்கோத் அல்வா, கடலைமிட்டாய் என்று ஏதாவது ஒன்றைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
மாலை அனைவரும் பின்கட்டு தாழ்வாரத்தில் தான் தங்களின் நேரத்தைச் செலவழிப்பர். அதுவும் பூஜை நாட்கள் வேறாகப் போக, அதனை முடிந்த கையுடன் இளைப்பாற உணவுடன் அமர்ந்துவிட்டுவர் அந்த வீட்டு மக்கள்.
நான்கு பேராகவே இருந்து, இப்போ அந்த நான்கின் மூல ஆதாரத்தை இழந்த ஷக்திக்கு அவர்களின் இந்த பிணைப்பும் அன்பும் மனதை நிறைத்தது.
பாரதி, “ஆராதனா எப்படி நீயும் சின்னவனும் இப்படி க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆனீங்க? உன் அண்ணாவோட தான அவன் படிச்சது?” என்று அவளின் நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்டிட, வீடே அவளின் பதிலிற்குக் காத்திருந்தது.
சன்ன சிரிப்புடன் சிவாவைப் பார்த்தவள், “ஸ்கூல்ல, அமுதா அப்புறம் என்னைப் பத்திரமா பார்த்துக்கற ஆள் ஸர் தான். அதுனால ஃப்ரண்ட் ஆகியாச்சு.” என்றவள் நிறுத்தி,
“எங்க வீடு தாண்டி சிவாகிட்ட தான் பாதுகாப்பா இருக்கற ஃபீல் எனக்கு” என்றாள் உள்ளார்ந்து.
அதில் தேனாட்ச்சியின் முகம் கனிந்தது என்றால் ஆழ்வாருக்கும் உண்ணாமலைக்கும் சற்று பெருமிதம்.
அதைச் சுத்தமாய் ரசிக்காத ஒரே ஆள், புகழேந்திரன் மட்டுமே!
“உங்க சிவா கூட இருந்தா, அத்தன தைரியமா இருக்கும் ஆன்ட்டி. என்னைன்னு இல்ல எந்த பொண்ணா இருக்கட்டும் ஷிவ்கிட்ட இருந்தா அத்தன பாதுகாப்பா உணர்வாங்க! இவன் வைஃப் ரொம்பப் புண்ணியம் பண்ண பொண்ணு தான்” என்று உண்ணாமலையிடம் சொன்னவள் முகத்தில் அத்தனை பிரகாஷம்.
அதைக் கேட்டபடி விருட்டென்று உள்ளே சென்றுவிட்டான் புகழ்.
அவனைப் பற்றித் தெரிந்த கருணாவோ சலிப்போடு சிவாவைப் பார்த்தான்.
Sibling rivalry, புகழுக்கும் சிவாவிற்கும் ஆரம்பம் தொட்டு இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் சிவா, புகழுக்காய் விட்டுக்கொடுக்கும் அளவிற்குப் பக்குவப்பட்டிருந்தான். ஆனால் புகழிடம் இப்போது வரை, சிவாவிடம் விட்டுக்கொடுத்துப் போகும் தன்மை இல்லவே இல்லை!
கடைக்குட்டி பிள்ளைகள் சற்று பாசமாக இருப்பார்கள் பெற்றவரிடத்தில். ஆனால் சிவனேஷ் வீரபத்திரனுக்கு எந்த சலுகையும் இல்லை.
சிவனேஷ் என்பதைவிட மூவருக்கும் அது இல்லை. மூவரும் சமமாக இருந்தாலும், புகழிடம் பெற்றவர்களுக்கு இழையோடும் பாசம் தனித்திருக்கும்.
பாரதியிடமோ சிவாவிடமோ சற்று பாசத்தை அதிகம் அவர்கள் வெளிப்படுத்தினால், அதை உடனடியாக தட்டிப் பறித்துவிடுவான் புகழேந்திரன்.
சிவனேஷ் புகழைக் காட்டிலும் அந்த வீட்டில் சாதாரணமாகத் தான் இருக்க வேண்டும். போட்டியில் முதலில் வந்துவிடக் கூடாது, படிப்பில் புகழைத் தாழ்த்திவிடக் கூடாது, புகழின் முன்னிலையில் அடுத்தவர் அவனைப் பாராட்டிவிடக் கூடாது, அவ்வளவு ஏன் புகழின் கனவைக் காட்டிலும் சிவாவின் கனவு பெரியதாய் இருந்தால் அதை நிச்சயம் அவன் மறந்துவிடத் தான் வேண்டும்!
அந்த நிகழ்வும் நடந்து அவனின் கனவும் சிதைந்து போயிருந்தது. சிவா அப்படி தான் நினைத்தும் இருந்தான், அவனுக்காகக் காலம் வரும் வரை.
புகழின் இந்த குணம் வீடறிந்தது என்றபோதும் இங்கு ஒருவரின் வாழ்க்கையை அவன் நசுக்குகிறான் என்ற பிரஞ்ஞை பெற்றவர்களுக்கு இல்லாது போனதே சிவனேஷ் தன் பதினோராம் வகுப்பில் போடிங் ஸ்கூல் செல்ல காரணமாய் போனது.
அதை இப்போது வரை ஆழ்வாரும் உண்ணமலையும் சரியான நூலில் பிடிபடாது புகழின் பக்கமே மறைமுகமாக நடப்பது இன்னும் சிவாவை வருத்திக் கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் முடிவு கட்டவே வந்தவள் போலானாள், ஷக்தி ஆராதனா.
இன்று ஷக்தி மீண்டும் கோவைக்குத் திரும்பும் நாள். ஐந்து நாட்கள் அத்தனை அழகாய் ஆழ்வார்திருநகரியில் இதமாய், நெஞ்சுக்கு நெருக்கமாய் சென்றிருந்தது அவளுக்கு.
ஆழ்வாருடன் பண்ணையும் தோப்பும்;
உண்ணாமலையுடன் சமையலும்;
தேனாட்ச்சியிடம் பழங்கதைகளும்;
பாரதியுடன் ஸாரி ஃபேஷன் பற்றிய குறிப்புகளும்;
கருணாவுடன் ஆழ்வார்திருநகரியைச் சுற்றியதும்;
ஆதினியின் குறும்புகளும்;
அஞ்சலியின் விஷமங்களும்;
புகழுடன் முறைப்பும்;
அவளின் ஷிவ்வுடன் மறக்க முடியா நினைவுகளுடன் விடைபெற இருந்தால்.
கிளம்பும் சமயம், பாரதி அவளுக்கென்றே ஒரு புடவையும் அதற்குத் தோதான சில்க் திரட் நெக்லஸ் மற்றும் வளையலுடன் சில பலகார வகைகள், ஒரு குட்டி பவளமல்லி நாற்று கொடுக்க ஆனந்தமாய் வாங்கிக்கொண்டாள் அவள்.
உண்ணாமலையும் அவர்கள் சார்பாக ஒரு பட்டுப் புடவையும் வெள்ளி குங்குமச் சிமிழ் கொடுத்தவர், “அப்போ அப்போ வந்து போ சக்தி. அம்மாவ கேட்டேன்னு சொல்லு” என்றார் நிறைந்த மனதுடன்.
கடைசியாய் திருநீறு பூசிவிட்ட தேனாட்ச்சியின் சுருக்கம் விழுந்த கன்னத்தில் முத்தமொன்றை வைத்து, பற்கள் தெரியச் சிரித்த ஷக்தியைக் கடைசியாய் ஆனந்ததுத்தோடுப் பார்த்தது அந்த வீடு!
அனைவரிடமும் ஆசிகள் வாங்கிய கையுடன், சிவாவின் கை கோர்த்துச் சென்றவளை உணர்வற்று பார்த்திருந்தான் புகழ்!
சில நாட்கள் கடந்து..
அன்று செக்ரடெரியேட்’டில் (தலைமைச் செயலகம்) மாவட்ட நிர்வாகிகளுக்கான அவசர கூட்டம் நடைபெற இருந்தது.
மாவட்ட ஆட்சியர்களும் அவர்களுக்குக் கீழ் அரசு சார்பில் இயங்கும் கோட்டாட்சியர்களும் சில காவல் அதிகாரிகளும் கலந்து கொண்ட நிகழ்வில் ஷக்தி, புகழைப் பார்க்க நேர்ந்தது.
முதல்முறை அவனைக் காக்கி உடையில் பார்க்கிறாள். ஒரு ஆராயும் பார்வை மட்டும் அதைத் தாண்டி வேறேதும் இல்லை. ஆனாலும் அவனைக் காரணமே இன்றி மனது புறம் தள்ளியது.
”பெரிய அப்பாடக்கர் இவன். இவன் யூனிபார்ம் போட்டு பெரியாளாக ஷிவ் அவனோட கனவ விட்டுக்கொடுக்கனுமா? எத்தன டாமினன்ஸ்” என்று உள்ளூர புகைந்தபடி அவனைக் கடந்துவிட்டாள் பெண்ணவள்.
ஆனால் காலக்கொடுமை அவளை அவனுடன் இணைந்து பணியாற்றும் படி ஆணை வந்தது தான்.
”இது கொஞ்சம் பெரிய டிஸ்ட்டிக்ட் ஷக்தி. ரெவன்யூ இன்னும் நம்ம எதிர்பார்த்த படி கலெக்ட் ஆகல. டெக்ஸ் டிப்பார்ட்மெண்ட் ஆளுங்க என்னதான் முயன்றாலும் இன்னும் மக்கள் சரிவர வரி கட்டுறது இல்லை. மேஜர் இன்கம் இங்க இருந்து தான் வருது, இனி நீங்க பார்த்துக்கோங்க. தென் நிலப் பிரச்சனைகள் வர வாய்ப்பு அதிகம், கூட மிஸ்டர் புகழ் அண்ட் டீம்ம கூடவே வெச்சுக்கோங்க. அப்டேட்ஸ் எனக்கு நௌவ் அண்ட் தென் மெயில் பண்ணிடுங்க வித் ரெக்கார்ட்ஸ்” என்ற ஆட்சியரின் பேச்சை தட்டாது அவர் சொல்லியதை செயலாக்க ஆரம்பித்தாள், வருவாய்க் கோட்டாட்சியர் ஷக்தி ஆராதனா இமயவரம்பன்.
அவனுடன் கிட்டத்தட்ட இரண்டும் மாதங்கள் இணைந்து பணியினை மேற்கொண்டிருந்தாள். அதில் அவள் பார்த்தவரை ஆழ்வார்திருநகரியில் பார்த்த புகழும் இப்போது இருப்பவனும் அத்தனை மாற்றாகத் தெரிந்தான்!
அவன் பேச்சு, கண்ணியம், பெண்களைப் பார்க்கும் பார்வை அதில் இருக்கும் ஒரு தோரணை, ஆளுமை என்று எல்லாம் ஷக்தியை ஈர்த்தது.
அவன் புறத்தோற்றம் ஒன்றும் அப்படி ஹீரோ போல் அவளை வாய்பிளக்க வைக்கவில்லை மாறாக அவன் அகம் அவளைக் கவர்ந்தது.
நற்குணங்கள் இருந்தது, அது அவளைக் கவர்ந்தது. இருந்தபோதும் சிவாவின் வாழ்க்கையில் அவன் ஆடும் ஆட்டம் தான் அவளை யோசிக்க வைத்தது.
அவள் கண் கொண்டு பார்த்த அவன் அகப்புறம் வசீகரித்தது. ஆனாலும் சிவாவை ஏன் இவனுக்குப் பிடிக்கவில்லை என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
நாள் போக்கில் அந்த கேள்வியும் மறந்தது, மறைத்தது அவன் பால் சாய்ந்த அவள் மனது!
“ஷிவ், உன் அண்ணா இஸ் டிஃப்ரண்ட்” என்கிறாள் இப்போது அடிக்கடி.
அது படிப்படியாக மாறியது விதியின் விளையாட்டால்.
அவர்களுக்குக் கொடுத்த வேலையில் திறம்படச் செய்ததை பாராட்டி அவர்கள் இருவரையும் ஒன்றாய் ஒரு திட்டத்தில் நியமனம் செய்தனர் செயலகத்தில்.
மாற்றலோடு வந்த அந்த திட்டத்தில் புகழ், ஷக்தியோடு இணைந்து பணியாற்றினான் கோவையில். அது தற்செயலா அல்லது இறைவன் செயலா என்ற கணிப்பிற்கு அப்பாற்ப்பட்ட ஒன்றாக இருந்தது.
•••
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
15
+1
3
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தான் மட்டுமே கொண்டாடப்பட வேண்மென்ற எண்ணத்தினில் மற்றவர்களை உதாசீனப்படுத்தும் புகழ்.
தன் சுய கௌரவத்தை காப்பாற்ற மற்றவர்களை சுட்டெரிக்கவும் தயங்காத சக்தி.
மற்றவர்களது கண்ணோட்டதை கருத்தில் கொள்ளாமல் நமது கண் கொண்டு பார்க்க வேண்டும். ✨
குடும்பத்திற்க்குள் குடிகொள்ளும் இது போன்ற போட்டியுணர்வு மிகவும் ஆபத்தானது. அதனை ஆரம்பத்திலேயே பெரியவர்கள் கண்டறிந்து களைய வேண்டும்.
அவள் கண்கொண்டு பார்க்கவும் அகமும் புறமும் அவன் புறம் சாய்ந்து விட்டதோ.