Loading

“மேஜர்‌ ஜெனரல். காளிதாஸ் முத்துராமன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராணுவத்தில் முக்கிய பொறுப்பு அவருக்குக் கொடுத்திருக்க, அதையெல்லாம் தற்போது வேண்டாம் என்று சொல்லி நிரந்தர ஓய்வை அறிவித்தார்” 

தொலைக்காட்சியில் ஓடிய செய்தியைக் கேட்டு அத்தனை கோபத்துடனும் அதிர்ச்சியுடனும் அமர்ந்திருந்தான், ப்ரமோத்.

“டேய் ப்ரமோ விடேன்டா. அவர் விருப்பம் ரிசைன் பண்ணிட்டார்” என்று யமுனா சொன்னது தான். அப்போது ஆரம்பித்தவன் பேச்சு இன்னும் ஓய்ந்திருக்கவில்லை.

விஜயவாடாவில் இருந்த அவனின் அரசு பங்களாவில் தான் அனைவரும் இப்போது இருந்தனர்.

அனைவரும் என்றால், லாவண்யா, யமுனா, மேக வர்ஷினி, ஜான்வி மற்றும் ப்ரமோத்தின் இரண்டு வயது மகள், ப்ரத்வி.

ஆராவமுதன் குன்னூரில் இருக்க, பணியின் பொருட்டு ஷக்தி கோவையில் இருந்தால்.

ஷக்தியின் குடும்பம் ஒருவரின் இழப்பில் திக்குக்கு ஒன்றாய் சிதறியிருந்தது.

“எத்தன பெரிய பதவி, சாதாரணமா ஒன்னும் தூக்கிக் கொடுத்துற மாட்டாங்க ம்மா. இவர் எதையும் யோசிக்காம செய்ய மாட்டார் தான். ஆனா இதோட விளைவு நிச்சயம் பெரிசாதான் இருக்கும். இத்தன வருஷ சர்வீஸ்ல அப்பா நல்லது மட்டும் தான் பண்ணியிருப்பார்னு நீங்க நினச்சா, அது தப்பு. பாடர்ல இரண்டு வார் இவர் பார்வையில் நடந்துருக்கு, அதுபோக இன்னும் நமக்கு தெரியாம ஏராளமா இருக்கலாம். பகை வெச்சுட்டு எவனாவது வந்தா தெரியும்.”

என்றவன் ஏகத்திற்குக் கத்தினான்.

நிச்சயம் அவனுக்குத் தெரியும் காளிதாஸ் இப்படிச் சட்டென்று பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்று.

ஒன்று யாராவது செல்லியிருக்க வேண்டும் அல்ல தங்களின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனது. அதுவும் போக இப்படிச் சட்டென்று முடிவெடுக்கும் இடத்திலும் கூட அவர் இல்லை!

இத்தனை வருட அனுபவமும் அதனால் விளைந்த அறிவும் இருக்காத காளிதாஸிற்கு?

எல்லாம் இருந்தும் அவரின் இமயன் இல்லையே. அவரின் கடைசி நேரத்தில் உடன் இல்லாது, அவரின் பிரேதத்தைக் கூடப் பார்க்க முடியாது இறுதியாய் அவரின் அஸ்தியைக் கையில் வாங்கிய போது மொத்தமாய் உடைந்த போயிருந்தார், காளிதாஸ்.

மூன்றாம் வகுப்பில் அவர்கள் ஊரின் ஆரம்பப்பள்ளியில் ஏற்பட்ட நட்பு இப்படி ஐம்பத்து எட்டு வயதில் அறுந்தால் தாங்குமா?

தவித்தவர் மனது முழுவதும் அவரின் இமயனின் சிரிப்பும் ‘தாஸா’ என்ற அழைப்புமாய் இருந்தது.

நண்பனை இறுதியாய் பார்க்க முடியாத வேதனை, இனியும் இந்த வேலை தேவையா என்ற எண்ணமும் எல்லாம் சேர யோசித்தபடி தனது ராஜினாமா கடிதத்தை எழுதி, அதை வாங்கியும் விட்டார், காளிதாஸ்.

ப்ரமோத் “அப்பா.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க”

காளிதாஸ் “ப்ரமோ, வீட்டுக்கு வந்து பேசுறேன். ஆரா, அமுதாகிட்ட பேசுனியா” என்றவர் குரலில் எப்போதும் இருந்த கம்பீரம்.

“ம்ம்..‌ ஆனா ஏன்’ப்பா?” என்றவனால் இன்னமும் அவரின் ராஜினாமாவை ஏற்க முடியவில்லை.

ஒரு நீண்ட மௌனத்திற்குப் பின், “என்னோட இமயன்டா” என்றார் அத்தனை மென்மையாய்.

மகனாய் ஒரு ஆட்சியராய் அத்தனை நேரம் ஆத்திரப்பட்டு ஆடியவன் அவர் ‘இமயன்’ என்ற சொன்ன போது அவனின் டாக்டர் மூளை காளிதாஸைப் புரிந்துகொண்டது.

அவன் ஆட்சியர் ஆகும் முன்பே ஒரு இளங்கலை மருத்துவன் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றோடு மாதம் இரண்டை கடந்திருந்தது இமயவரம்பன் இயற்கையோடு ஒரு அங்கமாய் மாறி.

அவர் இழப்பில் இருந்து ஒரு துளி அளவுதான் மீண்டிருந்தனர் குடும்பத்தினர். அதில் ஷக்தியும் ஆராவமுதன் தங்கள் வேலையின் பொருட்டு சற்று தெம்பாக இருந்தாலும் லாவண்யா தான் முற்றும் உடைந்திருந்தார். 

கணவனல்லவா? உயிரே போயிருந்தது அவருக்கு. இன்னும் அவர் இருக்கக் காரணம் இமயனின் விழுதுகள் இருக்கிறதே!

ஆனாலும் பித்தாய் போன நிலையில் தான் இருந்தார், லாவண்யா.

அவரின் அந்த நிலையைப் புரிந்து கொண்ட ப்ரமோத் தன்னோடு அவரை ஆந்திரா அழைத்துச் செல்ல காரணமாக இருந்தது.

‘ஏன்ப்பா விட்டுப் போன?’ தனிமையில் இக்கேள்வியைக் கேட்காது இருக்காது ஷக்தியின் மனது.

அத்தனை தேடினாள் இமயவரம்பனை. அவள் தனித்திருந்தது வேற அவரின் நினைவுகளை அவள் மனதில் கீறிவிட்டிருக்க அப்பாவைக் காணாது, பார்க்க முடியாது ஏங்கித் தவித்தாள் அவரின் செல்ல சீமாட்டி.

“அப்பா” என்று நடுயிரவில் அவரின் நினைவாள் அவள் எழுந்து கதறிய நாட்களுடன் தான் சென்றிருந்தது கடந்த இரண்டு மாதமும்.

மகளையோ மகனையோ பார்க்கும் திராணியற்றவராய் இருந்தார் லாவண்யா. 

ஷக்தியிடம் உண்டாயா என்று கேட்க அத்தனை பேர் இருந்தும், “அப்பா ஊட்டி விடவா ஷக்தி ம்மா” என்று சாப்பாட்டுத் தட்டோடு வந்து நிற்கும் இமயவரம்பன் இல்லையே.

“அப்பா, கால் அம்தி விடறியா, வலிக்கிது” என்று அந்த மூன்று நாட்களில் அவள் இமயவரம்பனிடம் தானே தஞ்சம் கொள்வாள், கடந்த இரு மாதமும் அவள் அந்த நாட்களைக் கடக்க எண்ணி அழுகையில் கரைந்ததெல்லாம் சொல்லில் வடிக்கவியலாத கொடுமைகள்.

அவளே அவளை மீட்கப் பார்த்தால். அவள் மீண்டால் மட்டுமே அமுதனும் லாவண்யாவும் சற்று விடுதலை பெறுவார்கள் என்ற எண்ணத்தின் ஸ்தீரத்தில் இருந்தாள் பெண்ணவள்.

முயன்றால், முயன்றால் ஆனால் இறுதியில் துவண்டுவிடுவாள். 

ஆதரவிற்கு ஒரு தோள் கிடைக்காதா என்று ஏங்கியவளுக்கு வரமாய் இருந்தான் அவளின்‌ ஷிவ்!

அன்று அலுவலகத்தில் அவ்வளவாக வேலையில்லை அவளுக்கு. மனதும் பாரத்துடன் இருக்கச் சிவாவிற்கு அழைத்தாள்.

“சாப்பிட்டையா ஷக்தி” என்றான் எடுத்தவுடன்.

“பார்க்கனும் ஷிவ் உன்ன” என்றாள் அவளும்.

“ஆஃபிஸ்’லையா இருக்க? வரவா அங்க?”

”இல்ல, வேற வெளியப் போகலாமா?”

“உன்ன வந்து கூப்பிட்டுக்கறேன். அப்புறம் போலாம். இன்னிக்கு எனக்கு ஆஃப் தான்” என்றவன் அவளை அழைத்துக்கொண்டான்.

நீண்ட தூர கார் பயணம். கோவையைத் தாண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரமே வந்துவிட்டது. 

அந்த குளுமையும் காலநிலையும் அத்தனை நன்றாக இருக்க, சிவபெருமானை தரிசித்து அமர்ந்தனர் ஒரு இடத்தில்.

“ஷிவ் ஒரு ஹக் கிடைக்குமா” என்று கலங்கிய கண்ணோடுக் கேட்ட ஷக்தி அவனை மனதளவில் உலுக்கியிருந்தாள்.‌

தைரியம் அதைவிட அவளின் ஆளுமை பேசும் ஷக்தி யார் என்று.

கல்லூரி காலங்களில், “தப்புன்னா தப்பு தான். அது மேனேஜ்மென்ட் பண்ணாலும் சரி இல்ல ஸ்டாப் பண்ணுனாலும் சரி. கேள்வி கேட்டா எத்தன அலச்சியமா பதில் சொல்லுறீங்க, பணம் கொஞ்சமா வாங்குறீங்க? லட்சமா வந்து கொட்டறோம் தானே, அப்புறம் எதுக்கு இத்தன மட்டமானா சாப்பாடு? குடுக்கற காசுக்கு ஏத்த தரத்த தரமுடியலேனா எதுக்கு எக்ஸ்ட்ரா வாங்கறீங்க” என்று பத்தாயிரம் மாணாக்கரின் குரலாக ஒற்றை மாணவியாய் தைரியமாய் இருபது வயதில் அவள் கொடுத்த குரல் இன்னும் அவன் மனதில் பசுமையாய் நினைவிருந்தது. 

நிச்சயம் தந்தையை இழந்தவளின் நிலை புரிந்தது தான். ஆனாலும் இப்படியா முற்றும் உடைந்திடுவாள் என்ற எண்ணத்திலேயே தோளோடு அணைத்துக்கொண்டான், அவன் ஷக்தி பெண்ணை.

அவன் அணைத்தது தான். “ஷிவ்” உதடு பிதுங்கி அத்தனை அழுகை.

அவனே எதிர் பார்க்காத வண்ணம் அத்தனை அழுகை. ஒருகட்டத்தில் அவன்‌ மார்போடு அவள் ஒன்றிக்கொண்டுவிட, அவளின் நண்பனாய் இருந்தவன் காவலனாய் மாறிவிட்டான்.

“ஷக்தி, நீ இப்படி அழமாட்டியே. என்னச்சு” என்று அவளை அவன் பிரிக்கப் பார்க்க, சற்றும் பிடி கொடுக்கவில்லை பெண்ணவள்.

அவன் இறுகிய மார்பில் மேலும் மேலும் அவள் தஞ்சம் கொண்ட விதமும் அவளின் அழுகையும் அவனை வேறு விதமாய் சந்தேகம் கொள்ள வைக்க, “என்ன ஷக்தி, என்னடி” என்று விடாது அவன் கேட்டவண்ணம் இருக்க,

“எங்கூடவே இருப்ப தான ஷிவ்” என்றாள். அவள் குரல் கரகரத்தது. அழுதது அவள் தொண்டையில் ஏதோ செய்திருக்க, எச்சிலை விழுங்கியபடி இருந்தாள்.

“ஷக்தி, இங்க பாரு. நான் உங்கூடவே தான்டீ இருப்பேன். உங்கள விட்டு எங்க போறேன் நான்”

“கல்யாணம் பண்ணினா போயிடுவதான நீ” என்றாள் சிறுபிள்ளை போல்.

அதில் சன்னமாய் சிரித்தவன், “அப்புறம் என் ஷக்தி பொண்ண விட்டோ அமுதாவ விட்டோ நான் இருந்துடுவேணாக்கும்” என்றவன் அவள் காரில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்துக் குடிக்கச் செய்தான்.

“ம்ம் சொல்லு.. வாட்ஸ் ஈட்டிங் யூ. அப்பா போன சோகத்தவிட இந்த அழுக ரொம்பப் பயங்கரமா தெரியுதே” என்றான் அவள் எதிரே நின்று கூர் பார்வையுடன்.

அவள் முகம் கசங்கியது. அவன் கேட்டான் என்று‌ பட்டென்றும் சொல்ல முடியாது பாவையின் மனதை ஏதோ பிசைய, அவள் விழிகளில் கலக்கமும் வருத்தமும் போட்டியிட்டது.

புடவையின் முந்தானையை அவள் கசக்கிக் கொண்டும், விடுவித்தபடியும் இருக்க அவளின் நிலையில்லாத் தன்மை (restlessness) புரிந்தது சிவாவிற்கு.

ஏதோ தோன்ற, “யாராவது தப்பா..” என்றவன் கேட்கும் முன்பே அவன் முகத்தில் அத்தனை அழுத்தம். 

உதடுகள் துடிக்க, நிலத்தை வெறித்தபடி “ஆம்” என்று தலையாட்டி விட்டாள்.

கண்ணீர் வழிந்தது அவளுக்கு. “ஷிட்” என்று சொல்லி தன் தொடையில் குற்றியவனின் ஆத்திரத்தை அடக்கத் தான் வழியில்லாது இருந்தது.

“எவன்?” என்று கோபம் முற்றுப் பெறாது அவன் கேட்டிட, அவனை நோக்கி கை நீட்டித் தலையசைத்து அழைத்தாள்.

“அப்படியே சொல்லு.. உன் பக்கத்துல வந்தா கண்டிப்பா அரை விழும் உனக்கு” என்றான்.

ஒரு மௌனம். அவள் தயங்குகிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

அவன் கோபத்துடன் இருக்கிறான் என்று தெரிந்தும் தயங்கித் தவித்தாள் அணங்கு.

அசையாத குளத்தில் கல்லைப் போட்டது போல் மௌனத்தைக் கலைத்தவள், “அப்பா இறந்தன்னைக்கு..” என்று ஆரம்பிக்கவுமே, “ஷக்தி” என்று அதிர்ந்து கத்திவிட்டான்.

அதிர்ந்த அவன் முகத்தைப் பார்த்தபடி, “நான் சொல்லிடுறேன் ஷிவ்.. திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் பாரு. லெட் மீ” என்றவள் ஆழ்ந்த ஒரு மூச்சை எடுத்தால். 

தன்னைத் தானே சமன்படுத்த அவள் எடுத்த முயற்சி ஓரளவிற்குப் பதிலளித்தது.

ஷக்தி, இமயவரம்பன் சென்ற தினம் அத்தனை அழுத்தமாய் உணர்வு பிழம்பாக இருந்தவள் அவரைத் தகனம் செய்ய எடுத்துச் சென்ற நிமிடம், உடைந்து அழுதவளைச் சமாளிக்க யாராலும் முடியவில்லை.

ப்ரமோத்தும் ஜானவியும் தாங்கினாலும் ஒரு பெண் பிள்ளை தன் தந்தையை இழந்திருப்பது எத்தனை பெரிய அடியையும் இழப்பையும் கொடுத்திருக்கும்.

தாங்கினாள், ஆனால் ஒரு கட்டத்தில் அணையுடைத்த அழுகையும் இனி மீண்டும் தன் தந்தையைப் பார்க்கவே முடியாது என்ற உண்மையும் அவளை வெகுவாய் உலுக்கி உடைத்திருந்து மொத்தமாய்.

“ப்பா” என்றவள் அழுகை ஓலத்தில் அவர்கள் வீடும் ஆடியது.

மயங்கிச் சரிந்திருந்த லாவண்யா, இறுதி இருபதுகளில் இருந்த ஆராவமுதனின் சிறு பிள்ளையை ஒத்திருந்த அழுகை எல்லாம் அவளை விரைவில் மீட்டெடுத்து அவர்களை மடி தாங்கவென விரைவில் உணர்வுகளை அடக்கிக்கொண்டாள். ஆனால் மீளவில்லை அதிலிருந்தது

“நீங்கலாம் அப்பா கூட ஹாஸ்பிடல்’ல இருந்தீங்க. நானும் சாந்தி’க்காவும் (வீட்டுப் பணிப்பெண்) தானே வீட்டுல இருந்தோம்?” என்று நிறுத்தி அவன் முகம் பார்த்தாள்.

அவனிடம் பதிலில்லை. ஆனால் அவன் பார்வை அவளை ஊடுருவியது. ‘மேற்கொண்டு சொல்’ என்பது போன்ற ஒருவித தூண்டுதல் இருந்தது அதில்.

அன்று இமயவரம்பன் சரியாகிவிடுவார் என்ற நம்பிக்கையில் மூன்று நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்ததால் வீட்டிற்கு வந்திருந்தால் ஷக்தி. சற்று தூங்கி, குளியல் போட்டுவிட்டு மருத்துவமனை செல்வதே அவள் எண்ணம். ஆனால் அவள் வந்த ஒருமணி நேரத்திலேயே இமயவரம்பனின் உயிர் பிரிந்திருந்தது.

ஆராவமுதன் அந்த செய்தியை அவள் தாங்க மாட்டால் என்று எண்ணி அவளிடம் உடனே சொல்லவில்லை. வீட்டில் யாராவது சென்று அவளுடன் இருந்த பின்னர் சொல்லிக்கொள்ள அவன் எண்ண, லாவண்யா உடனே மகளுக்கு அழைத்து அழுதிருந்தார்.

என்ன இருந்தாலும் இமயவரம்பனின் உயிர்ப்பே ஷக்தி தானே!

மீண்டும் வந்துவிடுவார் என்று நினைத்தவர் இப்படி அவளைத் தவிக்கவிட்டு வராமலே போய்விடுவார் என்றவள் எண்ணினாளா என்ன? 

உறைந்து நின்றுவிட்டாள்.‌ அடுத்து யோசிக்க அவள் மூளை ஒத்துழைக்கவில்லை.

அவளுக்கு அது உறைத்த நொடி அவள் அழைத்தது என்னவோ சிவனேஷ் தான்.

அவன் எடுத்தவுடன், “ஷிவ்.. அப்பா என்னை விட்டு போய்ட்டார்டா” என்று தொண்டை கிழியக் கத்திவிட்டாள்.

வீட்டில் அதற்குள் சாமியாண, சேர்கள், ஃப்ரீசர் பாக்ஸ் வைக்க என ஆட்கள் வந்துவிட்டனர் அவர்களின் கடையாட்களுடன்.

“எனக்கு நல்லா நியாயம் இருக்கு, நம்ம ப்ரூக் பாண்ட் ரோட் மேனேஜ் மருதாசலம் ஸார் தான் முதல்ல வந்தார். அவர பார்க்கக் கூட என்னால முடியல. அவர் தான் முன்ன நின்னிருந்தார். அடுத்து அடுத்து ஆட்கள் வந்துட்டே இருந்தாங்க, ஆனா ஃப்ரீசர் பாக்ஸ் எங்க வைக்கன்னு தெரியலை அவங்களுக்கு.

நம்ம வீட்டுக்கு ஒரு முறை இருக்குமே, என்கிட்ட வந்து செல்வி அக்கா கேட்கவும், எனக்கு தெரியலைன்னு சொல்லி வெளிய வந்துட்டேன். அப்போதான்..” என்றவள் சொல்லாது கண்களை மூடிக்கொண்டு தன் உணர்வுகளை அடக்கப் பார்த்தாள்.

எப்போதும் இரவில் அவள் இமயவரம்பனைக் கேட்கும் அதே கேள்வி இப்போதும் மனதில் எழுந்தது. 

‘ஏன்பா விட்டுட்டுப் போன’ என்பதை இன்று கத்திச் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது.

சில உணர்வுகளை என்னதான் நாம் அடக்கப் பார்த்தாலும் அது முடியாது வெடித்துவிடும், அத்தகு பழுத்த நிலையிலிருந்தால் பெண்ணவள்.

சிவா அவளின் மாற்றத்தைப் பார்த்தவனால் முடியாது ஷக்தியின் தோளைப் பற்ற, வெடித்துவிட்டது பெண் சிலை.

“ப்ரீசர் பாக்ஸ் வைக்க வந்தவன் என் பக்கத்துல யாரும் இல்லேனுட்டு ஆறுதல் சொல்லுறேன்னு என்னை.. என்னை.. ஷிவ்” என்று நின்றிருந்தவன் இடையோடு அணைத்து அழுதவள் அடுத்து முடியாத தவித்துவிட்டாள்.

பின் முயன்று, “நான் நெஞ்சுக்குக் குறுக்க கை கட்டிட்டேன். ஆனா அந்த ராஸ்கல் என்ன ஹ.. ஹக் பண்ணி பின்.. பின்னாடி.. முன்னன்னு.. த.. தடவி அழுத்தி.. ஷிவ்” என்று அவனை அத்தனை இறுக்கிக்கொண்டாள்.

சிவாவால் அவள் சொன்னதைக் கேட்டுக் கோபத்தையோ ஆத்திரத்தையோ கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

அவன் ஷக்தி என்பவளைத் தாண்டி அவள் ஒரு பெண்! அதுவும் அவனின் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவளை எந்த ஒரு சூழலில் மான பங்க படுத்தியிருக்கிறான் என்று நினைக்க நினைக்க அவனை அடித்து நொறுக்கும் ஆத்திரம். மூர்க்கம். 

“அப்போ என்னால ஒரு அளவுக்குத் தான் என்னைய டிபெண்ட் (DEFEND) பண்ண முடிஞ்சுது. யாருக்காக நான் அழறது சொல்லு? எங்க அப்பா செத்து முழுசா ஒருமணி நேரம் கூட ஆகல, ஒருத்தன் அவரோட ஃப்ரீசர் பாக்ஸ் கொண்டு வந்து வெச்சு என்னை ஹராஸ் பண்ணுறான். ஆம்பள இல்லேனா இங்க பொண்ணுகளுக்குப் பாதுகாப்பு இல்லையா?

ஈசாகிட்ட சொல்லுற நிலமையிலா நான் அன்னிக்கு இருந்தேன்? என்‌ அப்பாடா, என்‌ இமயன்! மொத்தமா அவர் ஷக்திம்மாவ ஏமாத்திட்டு போயிட்டார். அவருக்காக நான் அழுவேனா இல்ல என்னை ஒருத்தன் அசிங்கமா தொடறானேன்னு அழுவனா? எத்தன கேடுகெட்ட உலகம்டா இது” என்று அது இப்போது நடந்ததைப் போல் தலையில் அடித்துக்கொண்டாள் பாவை.

“இதுல அவன் போகும் போது ஈசாகிட்ட ஒன்னு சொன்னான் பாரு? ‘அந்த பொண்ணுக்காக வாடகைப் பணம் எத்தன ஆயிரத்த வேணாலும் விட்டுத் தரலாம்னு’. என்ன வார்த்தைட அது?” என்றவள் விரக்தியாய் சிரிக்க, சிதறிவிட்டது அவன் கோப உணர்வுகள்.

“ஷிட், ஷிட், ஷிட்” என்று பல்லைக் கடித்து ஆத்திரத்தை அடக்க முடியாது தவித்தவன், ”எவன்னு மட்டும் காட்டுவா.. அந்த *** நாய உருச்சேடுக்காம விடமாட்டேன். *** பைய யார் மேல கை வெச்சுட்டு” என்று இன்னும் இன்னும் அவன் வசைபாட, அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை ஷக்தி.

அவள் மனதில் அவள் கடைசியாக உதிர்த்த ‘அந்த பொண்ணுக்காக எத்தன ஆயிரத்த வேணாலும் விட்டுத் தரலாம்னு’ என்பது மட்டும் ஓடியது. 

அதை அவன் எந்த அர்த்தத்தில் ஆராவமுதனிடம் சொல்லியிருப்பான் என்பது அவளுக்குத் தெரியாமலும் இல்லை.

ஒரு துணை ஆட்சியர்! அவளுக்கு அவளின்‌ தந்தை போன பின் பாதுகாப்பு இல்லை என்றால், இங்கு சாதாரணமாக எத்தனை பெண்கள், குழந்தைகள் ஆதரவற்று இருப்பார்கள்.‌ அவர்களின் நிலை? என்று எண்ணியவள்,

“அவன் என்னைத் தொட்டதுக்காகவா ஷிவ் அப்படிச் சொல்லியிருப்பான்” என்றவள் சொல்லியபின் சிவா அரைந்த அரையில் மயங்கி விட்டாள், ஷக்தி ஆராதனா.

•••

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்