Loading

‘வருவாய் கோட்டாட்சியர்’ என்ற பெயர் பலகை பொதிந்த காரில் வந்து இறங்கிய மகளை அத்தனை பூரிப்பாய் பார்த்து நின்றிருந்தார், இமயவரம்பன்.

“வாசலையே வந்து நிக்கலேனா என்ன அப்பா? நா தான் வருவேன்ல உள்ள” கடிந்தபடி இமயவரம்பன் அருகே வந்து நின்றாள் ஷக்தி.

“உனக்கு வழி தெரியும் தான். ஆனா கார்ல இருந்து ஒரு கெத்தோட இறங்கின பாரு, அத அப்பா மிஸ் பண்ணியிருப்பேனே” என்றார் சிரித்துக்கொண்டு.

“தெய்வமே” என்றபடி அவருடன் ‘லாவண்யம் பட்டி செண்டர்’ உள்ளே சென்றாள் அவள்.

அன்று ஆராவமுதன் – மேக வர்ஷினியின் திருமணத்திற்காக திருமண புடவை எடுக்கும் நிகழ்வு. வருடம் இரண்டு உருண்டேட இதோ பிள்ளைகளுக்குத் தகுந்த வயது வந்துவிட்டதென கருதி இமயவரம்பன் – காளிதாஸ் இருவரும் அவர்களின் திருமணத்தை நடத்தி வைக்க முடிவெடுத்து இதோ புடவை எடுக்கும் நிகழ்வில் வந்து நிற்கிறது.

இன்னும் இருவது நாட்களில் அவர்களின் திருமணம். மகள் கோவையிலேயே பணியில் இருக்க, மகன் ஜவுளியும் தேயிலை தோட்டத்தையும் பார்த்துக்கொள்ள 

இமயவரம்பன் தன் முதுமையை இனி நிம்மதியாய் களிக்கும் எண்ணத்துடன் இருந்தார்.

“மாமா” என்று காளிதாஸின் அருகே அவள் செல்ல, “நீ உனக்கு மொதல்ல புடவைய எடுத்துட்டு, மேகா செலக்சன் பாரு ஆரா” என்றார் அவர்.

சரியென அவளுக்கு பார்த்தவள், அடுத்து அடுத்து நேரம் கடக்க ஜவுளி எடுத்த கையோடு அனைவரும் நகை எடுக்க செல்ல என்று நேரம் பறந்தது.

இடையே சிவாவிடம் பேசியவள் அவனிற்கும் ஒரு சிறிய வெள்ளியால் செய்த கடாவை வாங்கிக்கொண்டாள்.

அவளின் முதல் மாத சம்பளத்தில் அனைவருக்கும் ஏதாவது சிறிய அளவில் பரிசை வாங்க எண்ணியிருந்தவளின் முன்னர் நகைக்கடையில் இருந்த கடா சிக்க, அதில் தனித்து ‘ஷக்தி’ என்று பதிந்து வாங்கிக்கொண்டாள், அதற்கான காரணம் தெரியாது.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்ற சமயத்தில் காளிதாஸின் வீட்டில் பெண்களுக்கான மெஹந்தி வைபவம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து ஹல்தி, சங்கீத் என்று வரிசையாக நிகழ்வுகள் நடக்க பூஜை செய்து இறைவனை வணங்கியபின் அனைவரும் மண்டபம் நோக்கி சென்றனர்.

இரவு விண்மீன்களின் ஒளியோடு சேர்ந்து வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் பிரகாசித்து நின்றது அந்த திருமண மண்டபம்.

நகருக்கு ஒதுக்குபுறமாய் நல்ல விஸ்தாரமான அந்த திருமண மண்டபம் முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பிலும் கேமராவின் கண்காணிப்பிலும் இருந்தது.

நாளை, தொழில் முனைவர் இமயவரம்பன் மகன் ஆராவமுதனுக்கும் மற்றும் மேஜர் ஜெனரல் காளிதாஸின் மகளும், விஜயவாடா ஆட்சியர் பிரமோதின் தங்கையுமான மேக வர்ஷினியுடன் திருமண நாள்.

வாயில் துவங்கி மேடை வரை அத்தனை தோரண அலங்காரங்கள். பிரத்தியேக வடிவிலான மலர்களின் தொகுப்புகளுடன் இன்ன பிற அரண்மனை போன்ற தோற்றம் தரும் செட் அமைக்கப்பட்டிருந்தது.

ரிஷப்ஷன் முடிந்திருக்க, மேடையலங்காரத்தைக் கலைத்து காலையில் கொடுக்கப்பட்ட ‘தீம்’ ஏற்றபடி அதை மாற்றி அமைத்துக்கொண்டிருந்தனர் அவற்றிற்காக கலைஞர்கள்.

மணி இரவு ஒன்று! 

அனேகர் உறங்க சென்றிருக்க, ஷக்தி, சிவா, பிரமோத் அவனின் மனைவி ஜான்வி, ஆராவமுதன் ஆகியோர் ஹாலில் அமர்ந்து கொட்டம் அடித்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் ஏதோ மும்முரமாக பேசிக்கொண்டிருக்க, “கலெக்டரே” என்றார் ஜான்வி குறும்பாக.

“அக்கா” என்று ஷக்தி சட்டென்று திரும்ப,

“இரு ம்மா, நீயில்ல.. நான் மிஸ்டர் மாவாட்டும் கலெக்டர‌ கூப்பிட்டேன்” என்றாள்.

“எதே, மாவாட்டற கலெக்டரா” என்று அதிர்ந்துவிட்டான் சிவனேஷ்.

விஜயவாடாவின் சிம்ம சொப்பனமாக கருதும் அம்மாவட்டத்தின் ஆட்சியரை மாவாட்டும் கலெக்டர் என்றால் அதிராமலா இருக்க முடியும்?

ப்ரமோத், “ஜானு”

ஜான்வி, “இருங்க இருங்க.. இத்தன நேரம் கல்யாணத்துக்கு பின்ன எப்படி இருக்கனும்னு அட்வைஸ் பண்ணீங்க. என்னோட சைட்ல நானும் அமுதனுக்கு கொஞ்சம் சொல்லனும். அதான் உங்ககிட்ட பர்மிஷன் கேட்க கூப்பிட்டேன்” என்றாள்.

“சிவா, நீயேன் ஷாக் ஆகுற? நீ நினைக்கற மாதிரி உங்க ப்ரமோத் அண்ணா ஒன்னும் வீட்டுல மாவாட்ட மாட்டார். அவர் யாரு ஒரு பெரியா மாவட்டத்தோட கலெக்டர் ஆச்சே” என்றவள் பேச்சே உண்மை அதுதான் என்று சொல்லிவிட்டது.

புரிந்த உடன் வந்த சிரிப்பை அடக்க இளையவர்கள் முனைய எங்கே விட்டாள் ஜான்வி.

“இப்போ சொன்னார் பாரு, ஷாப்பிங் போனா அரை நாள் ஆகும், நகை எடுக்கனும்னா கடையே திருப்பிப் போடுவாங்க, காய்கறி சொத்தைப் பார்த்து வாங்களேனா கத்துவாங்க, சண்ட போட்டா நைட் சர்வன்ஸ் போனவுடனே பாத்திரம் நாம தான் கழுவனும்.. எக்ஸட்ரா எக்ஸட்ரா.. ஒரு மாவாட்டற கலெக்டர்” என்றுவள் சொல்லி பொய்யாய் நாக்கைக் கடித்து, “ஸாரி அத்து.. அதுவா வருது” என்றுவிட்டு,

“இதெல்லாம் எப்படி பண்ண முடியும்? அவரோட மரியாத என்ன, கெத்து என்ன, கவுரவம் என்ன இந்த வேலையெல்லாம் எப்படி நான் இவராண்ட சொல்ல முடியும்.. சொல்லு”

“கரெக்ட் கரெக்ட் க்கா” என்று அமுதன் சொல்ல,

அதில் கடுப்பாகி விட்டான் ப்ரமோத். “என்னடா கரெக்ட். அவ என்னை அத்தன டேமேஜ் பண்ணுறா, நீ ஒத்தூதரையா? நாளைக்கு நீயும் அவ சொன்ன எல்லாத்தையும் தான் மேகாவுக்கு பண்ண போற. எல்லாம் லேடிஸ் உம் அப்படி தான். மண்டையில வெச்சுக்கோ” என்க,

“ஆனா அண்ணா, ஈசாக்கு அக்கா சொன்னத்தில இருந்த ஒரு பிரச்சனை கம்மியாகும்” என்று ஷக்தி சிரிக்க,

“புடவ கட ஓனர் பதறாம பொண்டாட்டிக்கு செலக்ட் பண்ணி கொடுப்பான்” என்றான் சிவா.

“எப்! (Yup)”

அங்கு அதற்குள் காளிதாஸின் தலை தெரியவும், குழு கலைய‌த் துவங்கியது.

அவன் அறைக்கு செல்லும் முன் ஆராவமுதன், “ஆரா நாளைக்கு சிவாவோட ப்ரதர் வருவார். அவரை கொஞ்சம் பிரகாஷ் கிட்ட சொல்லி ஃபாலோ பண்ணிக்க சொல்லிடு” என்றான்.

“ஏன் வழி தெரியாதா என்ன?”

“அப்படி இல்லடீ.. அவர் மதுரை டி.எஸ்.பி! உன்ன மாதிரி தான்.‌ உனக்கும் தெரியும்னு நினைக்கறேன். சிவாவுக்காக தான் இன்வைட் பண்ணியிருக்கேன். சிவாவோட அண்ணா என்ற அடைப்படியில நாம நல்லா கவனிக்கனும் இல்லையா?” என்றான்.

அவன் சொன்ன வார்த்தைகளை சரிவர கவனிக்காது போனாள் பெண்ணவள்.

அவள் மனதில் பதிந்தது என்னவோ, சிவாவின் அண்ணன் ஒரு காவலன் அதுவும் அவளைப் போல தேர்வு எழுதி வென்றவன் என்பதே!

பொழுது புலரும் முன்பே அத்தனை பரபரப்போடுக் காணப்பட்டது மண்டபம். அதிகாலை முகூர்த்தம் ஆதலால் பரபரப்பிற்கும் சப்தத்திற்கும் உற்சாகத்திற்கும் பஞ்சமில்லாத இருந்தது.

பூக்கள், சந்தன குங்குமம், காலை ஆகாரத்தின் மணம், மூக்கை நிமிண்டும் வாசனை திரவியங்கள் என்று கலவையான மணங்கள் நிறைந்து வழிந்தது.

ஐந்தரை மணிக்கே தயாராகி வாயிலில் அமைந்திருந்த பூ வேலைப்பாடு கொண்ட வரவேற்பு பலகையையும் மணமக்களின் பெயர் பொதிந்த பலகையையும் ரசித்து பார்த்தபடி நின்றிருந்தான், சிவனேஷ்.

அவன் அமுதாவிற்கு இன்னும் சற்று நேரத்தில் அவர்களின் குள்ள வாத்துடன் திருமணம்! 

அவன் அமுதா, இனி முற்றிலும் மேகாவின் அமுது! 

பதினோராம் வகுப்பில் ஏற்பட்ட பிணைப்பு இப்போது வரை மாற்றம் கொள்ளாது பத்து வருடத்தை தாண்டி அத்தனை ஆழ்ந்த பந்ததினை கொடுத்துள்ளது.

அதை நினைத்து நினைத்து புரிப்பதை தவிர அந்த உன்னத நண்பனுக்கு அந்த நொடி வேறு மகிழ்வில்லை போல்.

“என்னோட சிவா” என்று பெருமையாய் அவனை தோளணைக்கும் ஆராவமுதன் சிவனேஷின் மற்றொரு உயிரானவன்!

ஆராவமுதனும் மேகாவும் சிறு வயது நண்பர்கள் ஆனாலும் இருவரின் ஆறு வருட காதலில் அடுத்த பரிணாமத்தை அவர்களுடன் இவனும் ஆர்வமாய் ஆனந்தமாய் எதிர்நோக்கி காத்திருந்தான்.

உள்ளே இருந்து அவனை பார்த்த ஷக்தியோ, இரவில் இருந்து மனதைக் குடைந்த செய்தியை சிவாவிடம் கேட்டுவிட எண்ணி அவனிடம் சென்றாள்.

“டேய் ஷிவ், உங்க அண்ணாவும் போலீஸ்ஸாம். ஈசா நேத்து தான் சொன்னான்” சட்டென்று கேட்ட பெண்ணவளின் குரலில் ரசனை களைந்தவன் அவளைப் பார்க்க, அவளோ மணபெண் அலங்காரத்தில் ஜொலித்தாள்.

புருவம் உயர்த்தியவன், “மேகா தான கல்யாணப் பொண்ணு. நீ என்னடி இப்படி வந்து நிக்கற” என்று சிரித்தபடி அவள் தலையில் கொட்டியவன், “அவ கதற போறா பாரு” என்றான்.

“அய்ய.. எங்க அண்ணன் கல்யாணத்துக்கு நான் இப்படி ரெடி ஆகலேனா தான் தப்பு சப் இன்ஸ்பெக்டர்” 

“சரிதான்”

“சரி சொல்லு. உங்கண்ணா போலீஸா? ஏன் சொல்லல நீ? அதுவும் குரூப் எக்ஸாம்ஸ் எழுதினவராம்?”

“ம்ம்.. சொல்லத் தோனல. போன வருஷம் தான் போஸ்டிங் ஆயிருக்காங்க” என்றான் சன்ன சிரிப்புடன்.

“மிஸ் பண்ணுறையா நீ?” 

“லைட்டா” என்றான் கண்கள் சுருங்க.

“அவங்களுக்குத் தானே உன்ன பிடிக்காதுன்னு சொன்னே” 

“பிடிக்காதுன்னு இல்ல, அவனுக்கு என்மேல ஒரு.. ம்ம்ப்ச் விடு” என்றவன் அப்பேச்சை ரசிக்கவில்லை என்பதை முகத்தில் காட்டினான்.

புகழேந்திரன், சென்ற வருடம் தான் ஷக்தியைப் போல் குரூப் 1 தேர்வு எழுதி டி.எஸ்.பி ஆகியிருந்தான். அதைத் தான் இப்போது ஆராவமுதன் செல்லக் கேட்டவள், சிவாவிடம் வினவினால்.

“ஷிவ், ஸாரி” என்றாள் அவன் முக மாற்றத்தை கண்டு.

குடும்பத்தை பிரிந்த ஏக்கம், 

நினைத்தது கிடைக்காத வலி,

கிடைத்ததை நிறைவாய் செய்ய முடியாத குற்றவுணர்வு என்று எல்லாம் அவனை அச்சமயம் தாக்கியது, மிக ஆழமாய்.

அவனின் அந்த ஆழமான வலிக்கு மூலக்காரணம் புகழேந்திரன் என்பது அவனுக்குல் தெரியும். இருந்தும் அண்ணன் மீதான ஒருவித பாச பிணைப்பு அவனை புகழுக்கு எதிராய் சந்திக்க விடவில்லை.

ஆனால், வருங்காலத்தில்?

“டேய் இங்க என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும். அங்க மேடையில உன்ன காணோம்னு காட்டுக் கத்து கத்தறாங்க.. சீக்கிரம் வா ஆரா” என்று பிரமோத் வந்துவிட, இருவரும் மணமேடை நோக்கி சென்றனர்.

சடங்குகள் ஆரம்பமாக, ஷக்தி தன்னை அதில் புகுத்திக்கொண்டாள் ஆராவமுதனின் தங்கையாக.

ஆராவமுதன் நண்பனாய், இமயவரம்பனுக்குத் துணையாய் மாப்பிள்ளை வீட்டுச் சார்ப்பில் இருந்த அத்தனை செயலிலும் அவர்கள் பக்க உறவோடு ஒன்றியபடி அத்தனை வேலையிலும் முன்னின்று செய்தான் சிவா.

கெட்டி மேளாம் முழங்க, இனிதாய் நிறைவுற்றது ஆராவமுதன் – மேக வர்ஷினியின் திருமணம்.

இருபக்க உறவினர்கள், இமயவரம்பனின் தொழில் முறை நண்பர்கள், காளிதாஸின் மிலிட்டரி நண்பர்கள், பிரமோத்தின் நண்பர்கள், அவனின் ஐஏஎஸ் ஃபேச்மேட்ஸ், ஆராவமுதன் மற்றும் ஷக்தியின் நண்பர்கள், கடை ஊழியர்கள் என்று அத்தனை கூட்டம்.

பாதுகாப்பு வசதிகள் அத்தனை செய்தும் ஒருகட்டத்தில் சிவாவும் இணைந்துகொண்டான் அதில்.

நேரம் சற்று கடந்திருக்க, ஒரு பச்சிளங்குழந்தையின் அழு குரல் அவன் காதை எட்டியது. மண்டபத்தில் இருந்த சப்தத்திலும் இரைச்சலிலும் அக்குழந்தையின் அழுகையொளி அவனைத் தாக்க, குரல் வந்த திசையை ஆராய்ந்தான்.

குழந்தையை பார்த்தவனின் முகத்தில் அத்தனை ஆனந்த களிப்பு!

“அஞ்சு” என்றவன் குரலில் அத்தனை மகிழ்ச்சியின் சாரல்.

அங்கு கருணாநிதி அஞ்சலியை ஏந்தியபடி பாரதி ஆதினியோடு நின்றிருக்க, அவருக்கு பின்புறத்தில் உண்ணாமலையும் நம்மாழ்வாரும் வந்திருந்தனர் திருமணத்திற்கு.

பெற்றோரைப் பார்த்தவன் மனதில் அத்தனை உவகை . 

“அய்யா வரேன்னுட்டு சொல்லவே இல்லையே நீங்க” என்று பொறுப்பை அங்கிருந்தவர்களிடம் கொடுத்தவன் நம்மாழ்வாரிடம் விரைந்திருந்தான்.

“புகழு தான்ய்யா சொல்லாம போங்க, சிவா சந்தோஷப்படுவேன்னுட்டான்” 

அதற்கு புன்னகையைப் பதிலாய் தந்தவன் மனது குதூகலத்தில் கூத்தாடியது.

“மாமு” என்று கருணாவை அவன் அணைக்க, “ப்பஹ்ஹ்” என்று சிணுங்கினாள் சின்னவள்.

பாரதி, “நாங்க மேடைக்கு போறோம் சிவா. பரிச கொடுத்துட்டு வரேன். நேரமாச்சு பாரு” என்றபடி தாய் தந்தையோடு அவள் மேடை நோக்கி சென்றாள்.

“அறுப்பு நேரத்துல நீங்க வருவீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்ல மாமு” என்றவன் நெகிழ்ந்திருந்தான்.

“அதெப்படி, குடும்பமே வந்து பத்திரிகை வெச்சிட்டு போயிக்காக.. வராம இருக்க முடியுமாடா” என்றார்.

“இருந்தாலும் எப்படி எல்லாரும்.. எனக்கு எவ்வளவு பெரிய சப்ரைஸ் தெரியுமா” என்றவன் அஞ்சலியைத் தூக்கிக்கொண்டான்.

மூன்று வயது அஞ்சலி அப்போதான் பிளே ஸ்கூல் விளைவால் நன்கு பேச வந்திருக்க, மாமானுடன் பேசிப் பேசியே அவனை வசீகரித்தால்.

ஷக்திக்‌குடும்பத்துடன் பரஸ்பர சந்திப்பு, அறிமுகம் என்று எல்லாம் முடிந்து சிவாவின் வீட்டில் தான் அனைவரும் சென்றனர்.

திருமணம் நல்ல முறையில் முடிந்திருக்க, இமயவரம்பன் மற்றும் காளிதாஸிற்கு ஒரு பெரிய ஆசுவாசம்.

தாம்பூலம், மொய், பொருட்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா, மண்டபத்தை காலி செய்வது, பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்வது என்று அடுத்தடுத்த நிகழ்வுகளில் நடைபெற்று முடிவுற, ஆராவமுதன் மேகாவின் இல்லறமும் நல்லறமாக இருந்தது.

நாட்கள் மாதங்களாக செல்ல இமயவரம்பன் சிவாவை தன் பட்டு செண்டருக்கு அழைத்திருந்தார்.

“சிவா, நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு தோனுதுடா” என்றார் இமயவரம்பன்.

“அப்பா என்ன? சும்மா அட்சாணியமா பேசாதீங்க” என்று அதட்டினான்.

“இருடா, சப்போஸ் எனக்கு என்னாவது ஆச்சுனா..” என்றவர் நிறுத்தி அவன் முகம் பாய்த்திருந்தார். அதில் அதீத டென்ஷன் வெளிப்பட்டது அவனுக்கு.

“ப்பா” என்று அவர் கையை பிடித்தவன்,

“ஷக்தியும் லாவண்யாவும் உன் பொறுப்புடா” என்றுவிட்டார்.

“ப்பா” என்று அதிர்ந்துவிட்டான் அவன்.

“நீ ஷக்தியை ஒரு நல்ல ஃப்ரண்டா தான் பார்க்கற, அது எங்களுக்குத் தெரியும்.‌ ஆனா எம்புள்ள நான் இல்லேனா தன்னிச்சு நின்னுடுவாளோன்னு இருக்குடா. நான் இருந்து பார்க்கற மாதிரி ஆராவமுதனோ லாவண்யாவோ அவள பார்க்க மாட்டாங்க. அவங்களே என்னை டிப்பேன்ட் பண்ணி தான் இருக்கறவங்க, அதுல எம் பொண்ணு? ம்ஹூம்.. அவளே அவள தேத்தி தான் இவங்கள சரி பண்ணுவா. நீ வேணா பாரேன்” என்றவர் மெல்ல சிரிக்க,

“என்ன ப்பா.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. ரொம்ப யோசிக்காதீங்க” என்றான்.

“அவளுக்கு ஒரு நல்ல நண்பனா இருந்து, அவ ஆசை படுறவன கல்யாணம் பண்ணி வெச்சு, அவ வாழ்க்க முழுசும் எம் புள்ள கூடவே இருடா சிவா” என்றவர் கண்களும் கலங்கிவிட்டது.

அவனுக்கோ பேச வார்த்தை வரவில்லை. என்ன சொல்லுவான்? தொண்டையில் ஏதோ அடைத்த உணர்வு. 

சட்டென்று பேச முடியவில்லை அவனால். இரண்டு நிமிடம் பிடித்தது இமயவரம்பன் பேச்சை

ஜீரணிக்க. 

இமயவரம்பன் இன்னும் அவனையே பார்த்திருக்க,

“நான் பார்த்துக்கறேன் ப்பா” என்றவன் குரலோடு சேர்ந்து கண்ணும் கலங்கிவிட்டது.

“காளியும் கண்ணாவும் எப்பவும் அமுதன் கூடவே இருப்பாங்க தான் சிவா. அமுதன் அவன் அம்மாவ விட்டு இருக்க மாட்டான். இந்த ஷக்திப் புள்ள தான், மீனா கெடந்து துள்ளவா” என்றவர்,

“அமுதன் கிட்ட எல்லா பொறுப்பையும் கொடுத்த பின்ன எம் புள்ளக்கு ஒன்னுமில்லையேன்னு தோனுச்சு. ஆனா அவளே படிச்சு இப்படி பெரிய பதவில இருக்கறது, நெறைஞ்சு போச்சுடா என் மனசு” என்றவர் முகத்தில் பெருமிதம்.

அவன் முகத்தைப் பார்த்தவர், “பெரிய பொறுப்ப கொடுக்கறேனாடா” என்றார்.

“ஷக்தி என் பொறுப்பு இல்லப்பா, என் ஃப்ரண்ட். கடைசி வர, என் அமுதா கூடவும் ஷக்தி கூடவும் நான் இருப்பேன் ப்பா” என்று அவர் கையில் அழுத்தம் கொடுத்தான்.

அதுதான் இமயவரம்பனிடம் அவன் பேசிய கடைசி வார்த்தைகள்.

அதன் பின் அவன் அவரை பார்த்தது என்னவோ மாரடைப்பு ஏற்பட்டு சுவாசிக்கும் குழாய்களின் நெடுவே ஐசியூவில் இருந்ததைத் தான்.

மூன்று நாள் போராடியவர் நினைவு திரும்பியிருக்க, லாவண்யாவைப் பார்க்க விரும்பினார்.

தான் கொண்டவளைப் பார்த்தபடி, லாவண்யாவின் ஸ்பரிசத்தை உணர்ந்த நொடி, கண்ணீர் சிந்தியபடி, அவரின் கைகளை அழுத்த பற்றியபடி இறைவனடி சேர்ந்தார், இமயவரம்பன்!

ஷக்தியை விட்டு சென்றவருடனே அவளின் உயிர்ப்பும் சென்றுவிட்டது..

மன தைரியமும் பறந்துவிட்டது!

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்